காட்டிக் கொடுக்கப்பட்ட புரட்சி

ஆசிரியரின் முன்னுரை

Leon Trotsky
4 August 2000

மொழிபெயர்ப்பின் மூலக் கட்டுரையை இங்கே காணலாம்

இந்தப் பணியின் நோக்கம்

சோவியத் ஆட்சியின் பொருளாதார வெற்றிகளை, அதாவது சோசலிச வழிமுறைகளின் நடைமுறைச் சாத்தியம் மீதான பரிசோதனை ரீதியான ஆதாரத்தை, கண்டுகொள்ளாததைப் போல நாடகமாட முதலில் முதலாளித்துவ உலகம் முயற்சித்தது. கற்றறிந்த மூலதனப் பொருளாதாரவியல் அறிஞர்கள் இன்னமும் பெரும்பாலும் ரஷ்யாவின் தொழிற்துறை வளர்ச்சியின் முன்கண்டிராத உத்வேகம் குறித்து ஆழ்ந்த தீர்மானத்துடனான ஒரு மௌனத்தையே பராமரிக்க முயல்கின்றனர், அல்லது "விவசாயிகளின் மீதான அதீத சுரண்டல்" குறித்த கருத்துகளுடன் தங்களை மட்டுப்படுத்திக் கொள்கின்றனர். உதாரணத்திற்கு, சீனா, அல்லது ஜப்பான், அல்லது இந்தியாவில் விவசாயிகள் மீதான கொடூரமான சுரண்டல், சோவியத் ஒன்றியத்தை தூரத்தில் கண்ணால் காணக் கூடிய அளவுக்கேனும் நெருக்கமாய் வரக்கூடிய ஒரு தொழிற்துறை உத்வேகத்தை ஏன் ஒருபோதும் உருவாக்கவில்லை என்பதை விளக்குவதற்கு கிடைத்த ஒரு அரிய வாய்ப்பை அவர்கள் தவற விட்டுக் கொண்டிருக்கிறார்கள்.

இருப்பினும், முடிவில் உண்மைகளே வெல்கின்றன. அனைத்து நாகரிக நாடுகளின் புத்தகக் கடைகளும் சோவியத் ஒன்றியம் குறித்த புத்தகங்களால் இப்போது நிரம்பி வழிகின்றன. இதில் ஆச்சரியம் எதுவும் இல்லை; இத்தகைய அற்புதங்கள் எப்போதாவது தான் நிகழ்கின்றன. குருட்டுத்தனமான பிற்போக்குவாத துவேஷத்தால் கட்டளையிடப்பட்ட இலக்கியம் துரிதமாக தேய்ந்து வருகிறது. சோவியத் ஒன்றியத்தின் மீதான புதிய படைப்புகளில் ஒரு குறிப்பிடத்தகுந்த பகுதி, பரவசத் தொனியை கொண்டிருக்கவில்லை என்றாலும் கூட, சாதகமான ஒரு தொனியை கைக்கொண்டிருக்கின்றன. ஒரு புதிய அரசின் சர்வதேச மரியாதை மேம்படுவதன் ஒரு அடையாளம் என்ற வகையில், சோவியத்-ஆதரவு இலக்கியங்கள் மிகுந்திருப்பது வரவேற்கத்தக்க ஒன்றாகவே இருக்க முடியும். மேலும் பாசிச இத்தாலியை காட்டிலும் சோவியத் ஒன்றியத்தை இலட்சிய இலக்காய் சித்தரிப்பது ஒப்பிடமுடியாத அளவு சிறந்ததே. இருந்தாலும், அக்டோபர் புரட்சி நடந்த மண்ணில் உண்மையில் என்ன நடந்து கொண்டிருக்கிறது என்பது குறித்த ஒரு விஞ்ஞானபூர்வமான மதிப்பீட்டை இந்த இலக்கியங்களின் பக்கங்களில் தேடும் வாசகர் எவரும் ஏமாற்றத்தையே அடையமுடியும்.

"சோவியத் ஒன்றிய நண்பர்களின்" எழுத்துக்கள் மூன்று முதன்மையான வகைகளில் பிரிகின்றன:

- பத்திரிகைத்துறை ஆர்வக்கோளாறுகள். சற்றேறக்குறைய "இடது" சாய்வுடன் செய்திகளைச் சேகரித்து வழங்குவது தான் இவர்களின் கட்டுரைகள் மற்றும் புத்தகங்களின் பிரதானமான பெரும்பகுதியை உருவாக்குகின்றன.

- இதனையடுத்து, கூடுதல் வேடத்துடன் தான் என்றாலும், மனிதாபிமான, கவித்துவ மற்றும் அமைதிப்படுத்தும் "கம்யூனிசம்" நிற்கிறது.

- மூன்றாவதாக வருவது பழைய ஜேர்மன் பிரசங்க சோசலிசத்தின்* நோக்கத்திலான பொருளாதாரத் திட்டவரைபடமாக்கல்.

லூயிஸ் பிஷ்சரும் துராந்தியும் முதல் வகையின் போதுமான அளவு நன்கு அறியப்பட்ட பிரதிநிதிகளாக இருக்கின்றனர். மறைந்த பார்பஸ் மற்றும் ரோமேன் ரோலண்ட் ஆகியோர் "மனிதாபிமான" நண்பர்கள் வகையின் பிரதிநிதிகளாய் உள்ளனர். ஸ்ராலினின் வரலாற்றை எழுதும் முன்னதாக பார்பஸ் கிறிஸ்துவின் வாழ்க்கையை எழுதினார் என்பதும் ரோமேன் ரோலண்ட் காந்தியின் சுயசரிதையை எழுதினார் என்பதும் தற்செயலான ஒன்றல்ல. இறுதியாக, பழமைவாத, புத்தகவழி-மாறாத சோசலிசம் பீட்ரைஸ் வெப் மற்றும் சிட்னி வெப் என்னும் தளர்ச்சி காட்டாத ஃபாபியன் தம்பதிகளிடம் தனது மிகவும் வலிமைப்பட்ட பிரதிநிதித்துவத்தை கண்டிருக்கிறது.

நிரூபணமான உண்மைக்கு முன் மண்டியிட்டு வணங்குவதும் சாந்தப்படுத்தும் பொதுமைப்படுத்தல்களை நோக்கிய பாரபட்சமும் தான் இந்த மூன்று வகையினரையும் அவர்களின் வேறுபாடுகளையும் கடந்து ஒன்றுபடுத்துகிறது. இந்த எழுத்தாளர்களுக்கு தங்களது சொந்த முதலாளித்துவத்திற்கு எதிரான கிளர்ச்சி என்பது சிந்தனைக்கு அப்பாற்பட்டது. எனவே, ஏற்கனவே வடியத் தொடங்கி விட்ட ஒரு அந்நிய நாட்டுப் புரட்சியில் தங்களது நிலைப்பாட்டினை எடுக்க, இவர்களெல்லாம் மிகவும் தயாராய் இருக்கிறார்கள். அக்டோபர் புரட்சிக்கு முன்னதாகவும், அதற்குப் பின் பல வருட காலத்திற்கும், இந்த நபர்களில் ஒருவரும், அல்லது இவர்களது ஆத்மார்த்த முன்னோடிகளில் எவரும், உலகில் சோசலிசம் எவ்வாறு வந்து சேரும் என்ற கேள்விக்கு எண்ணம் கொடுத்தவர்களல்லர். சோவியத் ஒன்றியத்தில் இப்போது நாம் கொண்டிருப்பது தான் சோசலிசம் என்பதாக அடையாளம் காண்பதற்கு அவர்களுக்கு இது எளிதாக்குகிறது. இது அவர்களுக்கு சகாப்தத்துடன் அடியொற்றிச் செல்லும் முற்போக்கான மனிதர்களின் அம்சத்தை மட்டுமன்றி, ஒரு குறிப்பிட்ட அறநிலை மனஸ்திரத்தையும் கூட வழங்குகிறது. அதே சமயத்தில் அவர்கள் கொஞ்சம் கூட எதற்கும் பொறுப்பு கொண்டிருக்கவும் வேண்டியதில்லை. நன்கு யோசித்து நம்பிக்கை ஜொலிக்க எழுதப்படுகின்ற, அழிவுகரமான இலக்கியம் அன்றி வேறொன்றும் இல்லை எனக் கூறத்தக்கதான இலக்கிய வகை -இது கடந்த காலத்தில் அத்தனை உவப்பற்றதன்மைகளையும் காண்கிறது- படிப்பவரின் நாளங்களில் மிகவும் சாந்தப்படுத்தும் ஒரு விளைவை ஏற்படுத்துகிறது, எனவே உளப்பூர்வமான வரவேற்பையும் பெறுகிறது. இவ்வாறாக, மறுமலர்ச்சிக்கால முதலாளித்துவ வர்க்கத்தினருக்கான போல்ஷிவிசம், அல்லது இன்னும் சுருக்கமாக, தீவிரமயமான சுற்றுலாப் பயணிகளுக்கான சோசலிசம் என்று விவரிக்கப்படத்தக்க ஒரு சர்வதேசப் பள்ளி சத்தமில்லாமல் உயிர்பெற்று வருகிறது.

இந்தப் பள்ளியில் உற்பத்தியானவர்களுடன் நாம் எந்த விதமான கருத்துவிவாதங்களுக்குள்ளும் நுழையப் போவதில்லை, ஏனென்றால் உண்மையில் கருத்துவிவாதங்களுக்கான எந்த தீவிர களங்களையும் இவர்கள் வழங்குவதில்லை. உண்மையாக கேள்விகள் தொடங்கும் இடத்தில் அவர்களுக்கு அவை முடிந்து போகின்றன. என்ன வர இருக்கிறது என்பதை சிறப்பாகப் புரிந்து கொள்ளும் பொருட்டு என்ன இருக்கிறது என்பதை சரியாக மதிப்பீடு செய்வது தான் இந்த நடப்பு ஆய்வு விசாரணையின் நோக்கமாகும். வருங்காலத்தை காண நமக்கு உதவுகின்ற மட்டத்திற்கே நாம் கடந்த காலத்தில் தங்கியிருக்கப் போகிறோம். நமது புத்தகம் விமர்சனரீதியானதாய் இருக்கும். சாதிக்கப்பட்ட உண்மையை தொழுவோர் யாராயினும் அவர் வருங்காலத்திற்கான தயாரிப்பை செய்யும் திறனற்றவராகிறார்.

சோவியத் ஒன்றியத்தில் பொருளாதார மற்றும் கலாச்சார அபிவிருத்தியின் நிகழ்ச்சிப்போக்கு ஏற்கனவே பல்வேறு கட்டங்களைக் கடந்து வந்திருக்கிறது, ஆயினும் எந்த வகையிலும் ஒரு உள்முகமான சமநிலைக்கு வந்துவிட்டிருக்கவில்லை. ஒற்றுமை மற்றும் அனைத்து தேவைகளையும் ஒத்திசைவுடன் பூர்த்தி செய்தல் ஆகியவற்றின் அடிப்படையிலமையும் ஒரு வர்க்கமற்ற சமுதாயத்தை உருவாக்குவது தான் சோசலிசத்தின் பணி என்பதை நினைவில் நிறுத்தி நீங்கள் பார்த்தால், இந்த அடிப்படையான அர்த்தத்தில், சோசலிசத்தின் ஒரு அறிகுறி கூட சோவியத் ஒன்றியத்தில் இன்னும் காணப் பெறவில்லை. நிச்சயமாக சோவியத் சமூகத்தின் முரண்பாடுகள் முதலாளித்துவத்தின் முரண்பாடுகளில் இருந்து ஆழமாக வேறுபட்டவை தான். இருப்பினும் அவை மிகுந்த பதட்டமானவையே. அவை தங்களது வெளிப்பாட்டை பொருள்ரீதியான மற்றும் கலாச்சாரரீதியான ஏற்றத்தாழ்வுகளிலும், அரசாங்க அடக்குமுறைகளிலும், அரசியல் குழுவாக்கங்களிலும், மற்றும் கன்னைகளின் போராட்டத்திலும் காண்கின்றன. போலிஸ் அடக்குமுறை ஒரு அரசியல் போராட்டத்தை மூச்சுத் திணறடிக்கலாம் சிதறடிக்கலாமே தவிர, அதனை இல்லாமல் செய்து விடுவதில்லை. தடை செய்யப்படும் சிந்தனைகள் அரசாங்க கொள்கையின் ஒவ்வொரு படியிலும் அதற்கு உரமளிப்பதாகவோ அல்லது அதனைத் தடை செய்வதாகவோ அதன் மீது ஒரு பாதிப்பை செலுத்துகிறது. இந்த சூழ்நிலைகளில், நாடு முழுவதும் மூச்சுத்திணறச் செய்யப்பட்ட ஆனால் உணர்வுமயமானதொரு அரசியல் போராட்டம் எந்த சிந்தனைகளின் அல்லது முழக்கங்களின் கீழ் நடத்தப் பெறுகின்றதோ அந்த சிந்தனைகளையும் முழக்கங்களையும் சோவியத் ஒன்றிய அபிவிருத்தி குறித்த ஒரு பகுப்பாய்வு ஒரு நிமிடமும் அலட்சியப்படுத்தலாகாது. வரலாறானது இங்கு நேரடியாக உயிர்வாழும் அரசியலுடன் கலக்கிறது.

சோவியத் ஒன்றியத்தை விமர்சிக்கும்போது நாம் அதீத கவனமாய் இருக்கவேண்டும் இல்லாவிட்டால் சோசலிசக் கட்டுமான நிகழ்ச்சிப்போக்கை நாம் சேதப்படுத்தி விடுவோம் என்று நமக்குச் சொல்வதில் எச்சரிக்கையும் நிதானமும் மிகுந்த "இடதுசாரி" பிலிஸ்டைன்கள் மிகவும் விருப்பமுடையவர்களாக இருக்கிறார்கள். நம்மைப் பொறுத்தவரை, சோவியத் கட்டுமானத்தை மிகவும் ஆட்டம் கண்டிருப்பதான ஒன்றாகக் கருதுவதற்கு வெகு அப்பால் நாம் இருக்கிறோம். சோவியத் ஒன்றியத்தின் எதிரிகள் அதன் உண்மையான தோழர்களான அனைத்து நாடுகளின் தொழிலாளர்களை விட அதிகம் விவரமறிந்தவர்களாய் இருக்கிறார்கள். ஏகாதிபத்திய அரசாங்கங்களின் உயர்அதிகாரிகள் மட்டத்தில், சோவியத் ஒன்றியத்தின் வலிமைகள் மற்றும் பலவீனங்கள் குறித்து ஒரு துல்லியமான கணக்குவழக்கு பராமரிக்கப்படுகிறது, இது பொதுவில் வழக்கத்திலிருக்கும் செய்திகளின் அடிப்படையில் மட்டும் ஆனவையல்ல. துரதிர்ஷ்டவசமாக, எதிரிகள் தொழிலாளர்’ அரசின் பலவீனமான பகுதியைத் தான் அனுகூலமாக எடுத்துக்கொள்ள முடியுமே தவிர, அதன் சாதகமான அம்சங்களை நோக்கும் போக்குகளின் விமர்சனத்தில் இருந்து ஒருபோதும் அவ்வாறு எடுத்துக்கொள்ள முடியாது. உத்தியோகபூர்வ "நண்பர்களின்" பெரும்பகுதியினர் கொண்டிருக்கும் இந்த விமர்சன விரோதம் உண்மையில் மறைப்பது சோவியத் ஒன்றியத்தின் உறுதியற்ற தன்மை குறித்த ஒரு அச்சத்தை அல்ல, மாறாக அதன் மீது இவர்கள் காட்டுகின்ற சொந்த அனுதாபத்தின் உறுதியற்ற தன்மை குறித்த அச்சத்தைத் தான். இந்த வகையான அனைத்து அச்சங்கள் மற்றும் எச்சரிக்கைகளையும் நாம் அமைதியாகக் கடந்து செல்வோம். தீர்மானிப்பவை உண்மைகளே அன்றி நப்பாசைகள் அல்ல. நாம் காட்டுவதற்கு நோக்கம் கொண்டிருப்பது முகத்தையே அன்றி, முகமூடியை அல்ல.

ட்ரொட்ஸ்கி
ஆகஸ்ட் 4, 1936

பிற்சேர்க்கை

மாஸ்கோவின் "பயங்கரவாத" சதி விசாரணை அறிவிக்கப்படும் முன்னதாக இந்த புத்தகம் முடிக்கப்பட்டு வெளியீட்டாளர்களுக்கு அனுப்பப்பட்டு விட்டது. எனவே, இயல்பாகவே, இந்த விசாரணை நிகழ்வுகள் பற்றி இதன் பக்கங்களில் மதிப்பீடு செய்யப்பட முடியாது. இந்தப் "பயங்கரவாத" விசாரணைக்கான வரலாற்று தர்க்கவியலின் மீதான இப்புத்தகத்தின் சுட்டிக்காட்டலும், மற்றும் அதன் புரியாத்தன்மை என்பது திட்டமிட்டுச் செய்யப்பட்ட நம்பவைத்து ஏமாற்றுதலே என்ற உண்மையை அது முற்கூட்டியே அம்பலப்படுத்தியதும் மிகவும் முக்கியத்துவம் வாய்ந்தவை.

செப்டம்பர் 1936.

* Kathedersozialismus- சமூக சீர்திருத்தவாதிகளின் சோசலிசம். இவர்கள் ஜேர்மனியில் 19ஆம் நூற்றாண்டின் ஆரம்பத்தில் பிஸ்மார்க்கின் அரசசோசலிசத்தின் ஆதரவாளர்கள் என ஏங்கெல்ஸ் ஆல் விமர்சிக்கப்பட்டவர்கள்.