பிரெஞ்சு அரசாங்கம், “மஞ்சள் சீருடை” போராட்டத்தில் கலகப் பிரிவு பொலிஸைத் தாக்கிய முன்னாள் குத்துச்சண்டை வீரரை வேட்டையாடுகின்றது

Will Moreau
11 January 2019

மொழிபெயர்ப்பின் மூலக் கட்டுரையை இங்கே காணலாம்

பிரெஞ்சு ஜனாதிபதி இமானுவல் மக்ரோனின் அரசாங்கம், முன்னாள் தொழில்முறை குத்துச்சண்டை வீரர் கிறிஸ்தோப் டெற்ரிங்கரை (Christophe Dettinger) பொதுமக்கள் ஆதரிப்பதை எதிர்த்து ஒரு கடுமையான பிரச்சாரத்தை ஆரம்பித்துள்ளது. சென்ற சனியன்று பாரிஸில் நடந்த “மஞ்சள் சீருடை” ஆர்ப்பாட்டங்களின் போது ஆர்ப்பாட்டக்காரர்களை இரண்டு கலகப் பிரிவு பொலிசார் தாக்கிய பின்னரே டெட்டிங்கர் அவர்களை தாக்கினார்.

2007 இல் பிரான்சின் இடைநிலை மற்றும் கன எடை பட்டத்தை வென்றவரும், 37 வயதானவருமான அவர், திங்களன்று தன்னை மாற்றிக் கொண்டார். கலகப் பிரிவு பொலிஸ் குழுவுடன் அவர் மோதிக் கொண்டிருப்பதையும், மற்றும் பொலிஸ் கவசம் மற்றும் முகமூடியை கடந்து தாக்குவதையும் காட்டும் ஒரு காணொளி சமூக ஊடகங்களில் வைரலானதற்குப் பின்னர் அவரை ஒரு குற்றவாளி எனவும் டெற்ரிங்கரின் வீட்டில் சோதனை செய்யவும் அரசாங்கம் அறிவித்தது. அதற்கு சற்று முன்பு, பொலிசாரால் நிராயுதபாணியான ஆர்ப்பாட்டக்காரர்கள் தாக்கப்படுவதையும் கண்ணீர்புகை வீசி துன்புறுத்தப்படுவதையும் காண முடியும். அதே நாளில் நடந்த மற்றொரு தனிப்பட்ட நிகழ்வின் காணொளி, டெற்ரிங்கரைப் போலவே ஆடைகளை அணிந்த ஒருவர் கலகப் பிரிவு பொலிஸின் குழுவிற்கும் ஆர்ப்பாட்டக்காரர்களுக்கும் இடையில் நடந்த மோதலில் ஈடுபடுவதைக் காட்டுகிறது.

நவம்பர் 17 இல், முதல் “மஞ்சள் சீருடை” ஆர்ப்பாட்டம் தொடங்கப்பட்டதில் இருந்து சமூக சமத்துவமின்மை மற்றும் மக்ரோன் அரசாங்கத்தின் பெருவணிக கொள்கைகளுக்கு எதிரான ஆர்ப்பாட்டங்கள் மீதான பொலிசாரின் முடிவற்ற தாக்குதல்களை எதிர்கொண்ட பிரெஞ்சு தொழிலாளர்கள் மற்றும் இளைஞர்களிடம் இருந்து பரந்தளவிலான ஆதரவை டெற்ரிங்கர் பெற்றிருந்தார். ஞாயிறன்று, மக்களிடம் இருந்து நிதி திரட்டும் வலைத் தளமான Leetchi இன் மூலமாக டெட்டிங்கருக்கு உதவ ஒரு உறவினர் நிதி திரட்டினார். 24 மணி நேரத்திற்குள், 8,000 க்கும் மேற்பட்ட தனி நன்கொடையாளர்கள் 115, 000 யூரோக்களுக்கு மேலாக பங்களித்தனர்.

அத்துடன் நன்கொடையாளர்கள், அவருக்கு ஆதரவான மற்றும் மக்ரோனின் பொலிஸ் ஒடுக்குமுறைக்கு எதிரான அவர்களது நூற்றுக்கணக்கான கருத்துக்களையும் தெரிவித்தனர். அதில் ஒரு கருத்து தெரிவிப்பவர் இவ்வாறு குறிப்பிட்டிருந்தார்: “கிறிஸ்தோப்புக்கு பெரும் ஆதரவு தேவை, ஏனென்றால் அரசியல் வர்க்கமும் தன்னலக்குழுக்களும் அவரை ஒரு முன்னுதாரணமாக்குவதற்கு முடிவு செய்துள்ளன. அமைதியான ஆர்ப்பாட்டக்காரர்களை அடக்குவதற்கு பொலிஸூக்கு உரிமை கிடையாது, என்றாலும் ஈவிரக்கமின்றி தாக்குவதற்கு அவர்களுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது. அத்தகைய கொடூரமான பொலிஸ் அடக்குமுறையை நீங்கள் எதிர்கொள்ளும் சூழ்நிலையில் நிகழ்ந்ததான கிறிஸ்தோப்பின் பிரதிபலிப்பை என்னால் புரிந்துகொள்ள முடியும்….”

திங்களன்று, லுக்செம்பேர்க்கைச் சார்ந்த RTL வெளியீடு பிரசுரித்த ஒரு அறிக்கை, பாரிசில் இளம் பெண் ஒருவரை பொலிஸ் அதிகாரி தாக்கிய போது அவரை காப்பாற்றுவதற்காகவே டெற்ரிங்கர் தலையீடு செய்ததாக அவர் தெரவிப்பதைச் சுட்டிக்காட்டுகிறது. “நான் ஏற்கனவே களத்தில் இருந்தேன்,” என்றும், “அப்போது [கலகப் பிரிவு பொலிஸ்] அதிகாரி தொடர்ந்து என்னை தாக்கிக் கொண்டிருந்த போது கிறிஸ்தோப் டெற்ரிங்கர் அங்கு வந்து அவரை விலக்கினார்” என்றும் அவர் தெரிவித்தார். மேலும் அவர், டெற்ரிங்கர் “என் உயிரைக் காப்பாற்றி” உள்ளார் என்றும் தெரிவித்தார். பாரிஸ் பொலிஸின் உள்நோக்கம் கொண்ட அந்த வன்முறைக்கு எதிராக அந்தப் பெண்மணி குற்றச்சாட்டுக்களை பதிவு செய்துள்ளதாகவும் RTL தெரிவித்தது. டெற்ரிங்கரின் முன்னாள் குத்துச்சண்டை பயிற்சியாளரும் கூட, ஒரு பெண் தாக்கப்பட்ட பின்னரே டெட்டிங்கர் தலையீடு செய்ததாக சாட்சியமளித்தார்.

டெற்ரிங்கருக்கான மக்களின் பெரும் ஆதரவும் பொலிசுக்கு எதிரான அவர்களது விரோதமும், செல்வந்தர்களுக்கு வரி வெட்டுக்களை பொழியும் அதே நேரத்தில் தொழிலாள வர்க்கத்தின் மீது கொடூரமான சிக்கன நடவடிக்கைகளை திணிக்கும் அதன் கொள்கைகள் மீதான அனைத்து தடைகளையும் குற்றப்படுத்த முனையும் பிரெஞ்சு ஆளும் வர்க்கத்தில் ஒரு நரம்பு புடைக்கும் வெறித்தனமான பிரச்சாரத்தை முடுக்கிவிட்டுள்ளது.

இலத்திரனியல் விவகாரங்களுக்கான (Digital Affairs) இளநிலை அமைச்சரான முனிர் மஹுயூபி (Mounir Mahjoubi), திங்களன்று காலையில், “ஒரு பொலிஸ்காரரை தாக்குவதற்கு வெளிப்படையாக இது நிதியளிக்கிறது” என்று டவீட் செய்தார். மேலும், டெற்ரிங்கருக்கு ஆதரவாக நிதியளிப்பதை கண்டித்து, “இந்த வெட்ககேடான நிதியளிப்பு குறித்து அனைவரும் பொறுப்பேற்க வேண்டும்:” என்றும் தெரிவித்தார்.

உள்துறை அமைச்சர் கிறிஸ்தோப் காஸ்டனேரும் கூட, டெற்ரிங்கரின் “கோழைத்தனமான சகித்துக்கொள்ள முடியாத” நடவடிக்கைகளுக்கு எதிராக ஒத்தூதினார்.

இருப்பினும், ஆண்கள் மற்றும் பெண்களுக்கு இடையிலான சமத்துவத்திற்கான செயலர், மார்லின் ஷியாப்பா (Marlene Schiappa) விடம் இருந்து மிகவும் அசாதாரணமான அறிக்கைகள் வெளிவந்தன. செவ்வாயன்று, அப்பெண்மணி, டெற்ரிங்கருக்கு நிதியளிப்பதை Leetchi நிறுத்த வேண்டும் என்று கோரினார். நேற்று, நிதியளிப்பு செய்த ஒவ்வொருவரையும் பகிரங்கமாக அடையாளம் காண்பதற்கு அவர் அழைப்பு விடுத்தார். “இதற்கு நன்கொடையளித்தது யாரென்று தெரிந்து கொள்வது நன்மையளிக்கும், குற்றத்திற்கு இது உடந்தையாக இருப்பதாக நான் நினைக்கிறேன்” என்று அவர் Franceinfo வானொலிக்கு தெரிவித்தார். “தனது வேலையை செய்து கொண்டிருந்த, பொது ஒழுங்குமுறையை பாதுகாத்துக் கொண்டிருந்த ஒரு பொலிஸை தாக்கியதான கடுமையான நடவடிக்கைகளில் ஈடுபட்ட ஒரு நபரை நாம் விட்டு வைத்திருக்கிறோம் – இது அருவருப்பானது. இந்த நடவடிக்கைக்கு உடந்தையாக இருப்பதுடன் அதை ஊக்குவிப்பதற்கும் இது உதவும்” என்றும் தெரிவித்தார்.

France Inter வானொலியில் நேற்று பேசுகையில், அவர், “இந்த வன்முறைக்கும் கலகக்காரர்களுக்கும் யார் நிதியளிக்கிறார்கள்?” என்று கேள்வி எழுப்பி பின்னர் அச்சுறுத்தும் வகையில் இதையும் அறிவித்தார்: “கலகக்காரர்களுக்கு நிதி வழங்கும் வெளிநாட்டு சக்திகள் ஏதும் இருப்பின் அவற்றையும் நாம் கண்டறிய வேண்டும்.”

ஷியாப்பாவின் கருத்துக்கள், டெற்ரிங்கருக்கு எதிரான அரசாங்கத்தின் வெறித்தனம் யதார்த்தத்தில் ஒட்டுமொத்த தொழிலாள வர்க்கத்திற்கு எதிராக இயக்கப்பட்டுள்ளது என்ற உண்மையை அடிக்கோடிட்டுக் காட்டுகிறது. பிரான்ஸிலும், ஐரோப்பா மற்றும் சர்வதேச அளவிலும், தொழிலாள வர்க்கத்திற்குள் வளர்ந்து வரும் போர்க்குணம் மற்றும் எதிர்ப்பை எதிர்கொள்கையில், ஆளும் வர்க்கம், தொழிலாள வர்க்கத்திற்குள் அதன் கொள்கைகளுக்கு இருக்கும் அனைத்து எதிர்ப்புக்களையும் விரைந்து குற்றப்படுத்த முனைந்து வருவதுடன், மேலதிக பொலிஸ்-அரசு நடவடிக்கைகளை எடுக்கவும் தயாராகி வருகிறது.

செவ்வாயன்று Leetchi, டெட்டிங்கருக்கான அனைத்து நன்கொடைகளையும் ஏற்றுக்கொள்வதை நிறுத்திக்கொண்டது. டெற்ரிங்கர் எந்தவித நன்கொடையையும் பெறுவாரா என்பது தற்போது தெளிவாக இல்லை. இந்நிலையில், Leetchi க்கு சொந்தமான பிரெஞ்சு வங்கி Credit Mutuel, டெற்ரிங்கருக்கான நிதியை முடக்கிவிட்டதாகவும், நிதியளிப்பின் சட்டபூர்வதன்மை பற்றி ஒரு உள்விசாரணையை தொடங்கியுள்ளதாகவும் Le Parisien பத்திரிகைக்கு அறிவித்தது. மேலும், “நன்கொடைக்கான இந்த அழைப்பு விடுத்தல் குறித்த சட்டபூர்வதன்மை குறித்தும், மற்றும் நமது விதிமுறைகளுக்கும் உள்நாட்டு மதிப்புக்களுக்கும் அவை அனுசரனையானவையா என்பது குறித்தும் கட்டாயம் நாம் சரிபார்க்க வேண்டும்” என்று இராட்சத வங்கி அறிவித்தது.

அரசால் குற்றம்சாட்டப்பட்ட ஒருவருக்கான சட்டபூர்வ பாதுகாப்பு கட்டணத்தை ஆதரிக்கும் ஒரு நிதி குறித்த தெளிவான சட்டபூர்வதன்மையை சுட்டிக்காட்டியதான, முன்பு Leetchi வெளியிட்டிருந்த பதில், “பொருத்தமற்ற முற்றிலும் போதாத ஒரு வழக்கறிஞரின் பதிலாக” இருந்தது என்றும் வங்கியின் அறிக்கை சேர்த்துக் கூறியது.

அரசாங்கம், அவரை ஒரு முன்னுதாரணமாக்குவதற்கு ஏதுவாக மிகக் கடுமையான சாத்தியமான தண்டனையை வழங்க முனையும் என்பதை ஏற்கனவே தெளிவுபடுத்தியுள்ளது. புதனன்று டெற்ரிங்கர் ஒரு விசாரணையில் கலந்துகொண்டார், அப்போது அவரது அடுத்த விசாரணை நாளான பிப்ரவரி 13 வரையிலும் தொடர்ந்து அவரை தடுப்புக் காவலில் வைக்க உத்தரவு பிறப்பிக்கப்பட்டது.

டெற்ரிங்கரின் நடவடிக்கைகள் “கொலை முயற்சிக்கான வரம்புகளை தொட்டுள்ளன” என்று வழக்கறிஞர் அறிவித்ததோடு, “ஒரு சிவப்பு கோடு அங்கு இருப்பதை நீதிபதி தெளிவுபடுத்த வேண்டும்” என்றும் கோரினார். இந்த வழக்குடன் எந்தவித தொடர்பையும் கொண்டிராத கேள்வியாக இருந்தாலும், டெற்ரிங்கரின் வீட்டில் துப்பாக்கி இருந்ததை கண்டறிந்துள்ளதாகவும், அதற்கு அவரிடம் உரிமம் உள்ளதா என்று விசாரணை செய்யவிருப்பதாகவும் ஏற்கனவே பொலிசார் அறிவித்துள்ளனர்.

கடந்த ஆறு வாரங்களாக, அமைதியான போராட்டக்காரர்களை கவசம் மற்றும் சிறு தடிகளைக் கொண்டு பொலிஸ் தாக்குவதையும், மூத்த குடிமக்களின் மண்டைகளை பிளப்பதையும், தொழிலாளர்களின் கைகளை மின்வெட்டொளி எறிகுண்டுகளை வீசி தாக்குவதையும், மற்றும் அவரை விதை பொதிகள் கொண்ட தோட்டாக்களை மக்களின் கண்களை நோக்கி பாய்ச்சுவதையும் காட்டும் பிரான்ஸ் காணொளிகளில் இருக்கும் திகில் காட்சிகளை உலக மக்கள் கண்டிருப்பார்கள்.

ஆளும் வர்க்கம் அதன் கொள்கைகள் மீது எழும் சமூக எதிர்ப்பின் முதல் அறிகுறிகளுக்கு எப்படி பதிலடி கொடுக்கிறது என்பதை இது காட்டுகிறது. ஆனால் ஒரு பொலிஸ்காரர் தாக்கப்பட்டவுடன், அரசாங்கம், ஊடகங்கள் மற்றும் வங்கிகள் என அனைத்தும் அதிர்ச்சியுடனும் பீதியுடனும் பதிலிறுத்தன.

டெற்ரிங்கருக்கு ஆதரவளித்த ஒவ்வொருவரையும் பதிவு செய்வதற்கான ஷியாப்பாவின் அழைப்பு ஒரு சுற்றுக்கு விடபட்டதான வெறும் கருத்தாக எடுத்துக்கொள்ளப்படக் கூடாது. 2015 முதல் 2017 வரை அடிப்படை ஜனநாயக உரிமைகளுக்கு தற்காலிக தடை விதித்திருந்த அவசரகால நிலைமையின் கீழ் இரண்டு ஆண்டுகளை பிரான்ஸ் கழித்த பின்னர், பெரும் மின்னணு கண்காணிப்புக்கும், பொது ஒழுங்குமுறைக்கு ஒரு அச்சுறுத்தலாக பொலிஸ் அறிவித்த எவரையும் தடுப்புக் காவல் அல்லது வீட்டுக் காவலில் வைக்கவும் என அளவுகடந்த அதிகாரங்களை பொலிஸுக்கு அரசு வழங்கியுள்ளது. இச்சூழ்நிலையில், ஒரு பொலிஸ் அரசு உருவெடுத்துள்ளதுடன், பிரான்சில் அதன் அதிகாரங்களை கொடூரமாக பலப்படுத்தியும் வருகிறது.

திங்களன்று, பிரதமர் எட்வார்ட் பிலிப், தேசிய தொலைக்காட்சி TF1 இல் தோன்றி, “மஞ்சள் சீருடை” போராட்டக்காரர்களின் பதிவிற்கு அழைப்பு விடுத்தார், அத்துடன் எதிர்ப்பு ஆர்ப்பாட்டங்களை அணிதிரட்டியவர்கள் மட்டுமல்லாமல், பொலிஸூக்கு முன்னரே அறிவிக்கப்படாத ஒரு ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொண்டவர்கள் மீதும் உரிய நடவடிக்கைகளை எடுக்கவும் அறிவுறுத்தினார்.

மேலும் அரசாங்கம், அடுத்தகட்ட “மஞ்சள் சீருடை” ஆர்ப்பாட்டங்கள் மீதான மேலதிக ஒடுக்குமுறைக்கு தயாரிப்பு செய்வதற்கு அதன் பொலிஸ் அணிதிரள்வை முடுக்கிவிடப் போவதாக அறிவித்துள்ளது.