ஈக்வடோரிய அரசாங்கத்திற்கு எதிரான தேசிய வேலைநிறுத்தம் அசான்ஜின் விடுதலையைக் கோருகிறது

Andrea Lobo
17 July 2019

மொழிபெயர்ப்பின் மூலக் கட்டுரையை இங்கே காணலாம்

வாஷிங்டனோடும் அதன் இராணுவ-உளவுத்துறை எந்திரத்தோடும் தனது உறவுகளை பலப்படுத்த முனைந்து வரும் லெனின் மொரேனோ நிர்வாகத்தின் கடுமையான கொள்கைகளுக்கு எதிராக ஈக்வடோரிய தொழிலாளர்கள், விவசாயிகள் மற்றும் இளைஞர்களும், திங்களன்று ஒரு ஐந்து-நாள் வேலைநிறுத்தத்தை தொடங்கியுள்ளனர்.

இந்த வேலைநிறுத்தம், ஜூலியன் அசான்ஜை விடுதலை செய்யக் கோரும் உலகின் முதலாவது மிகப்பெரிய தொழில்துறை நடவடிக்கையாக உருவெடுத்துள்ளது. மொரேனோ நிர்வாகத்தின் அமெரிக்க ஏகாதிபத்தியத்திற்கு முற்றிலும் அடிபணிந்த கொள்கையுடன் தொடர்புபட்ட சமூக மற்றும் ஜனநாயக உரிமைகளுக்கு எதிரான தாக்குதல்களுக்கு எதிராக வளர்ந்து வரும் எதிர்ப்பின் சூழலில் இந்த கோரிக்கை முன்வைக்கப்பட்டுள்ளது.

பெருநிறுவன ஊடக வெளியீட்டாளர்களும் மற்றும் அமைப்பாளர்களும் வேலைநிறுத்தத்தின்போதே இந்த பிரச்சினையை புதைக்க முயன்றனர். எவ்வாறாயினும், “விக்கிலீக்ஸ் நிறுவனர் ஜூலியன் அசான்ஜ் அமெரிக்காவிடம் கையளிக்கப்படுவது அவரது உயிருக்கு ஆபத்தை ஏற்படுத்தும்” என்பது வேலைநிறுத்தத்திற்கான உத்தியோகபூர்வ அழைப்பாக இருப்பது அத்தகைய குறிப்பிட்ட சில பிரச்சினைகளில் ஒன்றாகும்.

இது, இலண்டனில் ஈக்வடோர் தூதரகத்திலிருந்து அசான்ஜின் புகலிடம் இரத்து செய்யப்பட்டதை குறிக்கிறது, நூறாயிரக்கணக்கான இராஜதந்திர இரகசிய செய்திகளையும், அமெரிக்க மற்றும் நேட்டோ போர்க்குற்றங்களையும், உலகெங்கிலுமான வெகுஜனங்கள் மீதான உளவுபார்ப்பு மற்றும் இராஜதந்திர சூழ்ச்சிகளை அம்பலப்படுத்தும் பிற கோப்புகளையும் வெளியிட்டதற்காக, மரணதண்டனை விதிப்பதற்கு கூட சாத்தியமுள்ள உளவுத்துறைக் குற்றச்சாட்டுக்களின் கீழ் அசான்ஜை கைது செய்து அவருக்கு தண்டனை வழங்குவதற்கான அமெரிக்க முயற்சிகளிலிருந்து தப்பிக்க இங்குதான் அவர் அடைக்கலம் புகுந்திருந்தார்.

மோசமான சமூக சிக்கன நடவடிக்கைகள், வாழ்க்கைத் தரங்கள் மீதான தாக்குதல்கள், ஏகாதிபத்தியப் போர்கள் மற்றும் சர்வாதிகாரத்தை நோக்கிய நகர்வு ஆகியவற்றிற்கு எதிரான உலகளாவிய வர்க்கப் போராட்டத்திற்குள் மில்லியன் கணக்கான தொழிலாளர்கள் நுழைகின்ற நிலையில், துன்புறுத்தப்பட்ட ஊடகவியலாளரின் விடுதலைக்காக ஈக்வடோர் தொழிலாளர்கள் எழுப்பியுள்ள பதாகையையும் முன்மாதிரியையும் சமூக சமத்துவத்திற்கான மற்றும் ஏகாதிபத்தியத்திற்கு எதிரான ஒவ்வொரு போராட்டத்திலும் ஈடுபட்டிருக்கும் தொழிலாளர்கள் ஏற்றுக்கொள்ள வேண்டும்.

ஈக்வடோரிய ஆளும் வர்க்கத்தின் உடனடி துரோகத்திற்கு அப்பால், உலகளாவிய முதலாளித்துவத்தின் ஆழ்ந்த நெருக்கடிக்கு ஏகாதிபத்தியத்தின் ஒரே பதிலாக, ஒவ்வொரு கண்டத்திலும் நிலவும் போர்க்குற்றங்கள், வெகுஜன அடக்குமுறை மற்றும் சர்வாதிகாரம் ஆகியவற்றிற்கு எதிரான அனைத்து எதிர்ப்புக்களையும் மற்றும் எதிர்கால வெளிப்பாடுகளையும் மவுனமாக்குவதற்கான ஒரே தாக்குமுகப்பாக, வாஷிங்டனும் அதன் கூட்டாளிகளும் தங்கள் பழிவாங்கும் பிரச்சாரத்தைப் பயன்படுத்தும் நிலையில், அசான்ஜ் மற்றும் இரகசிய ஆவண வெளியீட்டாளர் செல்சியா மானிங் மீதான துன்புறுத்தல் என்பது, தொழிலாளர்களுக்கான ஒரு முக்கியமான போராக உள்ளது.

வேலைநிறுத்த ஒழுங்கமைப்பாளர்களில், விவசாயிகள் தேசிய இயக்கம் (FECAOL), முக்கிய தொழிலாளர்கள் சங்க கூட்டமைப்பு (FUT), தேசிய குடிமக்கள் சட்டமன்றத்தில் (ANC) குழுவாக உள்ள டசின் கணக்கான ஆர்வலர் அமைப்புக்கள் மற்றும் முன்னாள் ஜனாதிபதி ரபேல் கொரியாவின் புதிய கட்சியான சமூக சமரசம் (Social Compromise) ஆகிய அமைப்புக்கள் அடங்கும். கடைசி 14 ஆண்டுகளில் இது ஒரு மிகப்பரந்த வேலைநிறுத்தம் என்று அவர்கள் கூறுகின்றனர்.

திட்டமிட்ட ஆர்ப்பாட்டங்களின் முக்கிய நாளான செவ்வாயன்று, ஆர்ப்பாட்டக்காரர்கள் டசின் கணக்கான சாலை தடைகளை —மனாபே, குவாயாஸ் மற்றும் எல்-ஓரோ ஆகிய கடலோர நெடுஞ்சாலைகள் தொடங்கி, குவாயாகுயில் துறைமுக நகரத்தைச் சுற்றி, குயிட்டோவின் தலைநகர் வரையிலும், கிழக்கே பான்அமெரிக்க நெடுஞ்சாலை முதல் கொலம்பியா வரையிலும், தெற்கே மொரோனா சாண்டியாகோ மாகாணம் வரையிலும் மற்றும் ஆண்டியன் வரம்புடன் சேர்ந்து பெரு வரையிலுமாக— ஏற்பாடு செய்திருந்தமை உண்மையிலேயே நாட்டை ஸ்தம்பித்து போகச் செய்தது.

ஆர்ப்பாட்டக்காரர்களின் பெரும்பாலான அட்டைகள் கையால் செய்யப்பட்டவையாக இருந்தன, பணிநீக்கங்கள், சமூக வெட்டுக்கள் மற்றும் "சர்வதேச துன்ப நிதியத்தின்" (International Misery Fund) (சர்வதேச நாணய நிதியம் (International Monetary Fund) என நகரங்களில் அழைக்கப்படுவது) கிராமப்புறங்களில் நிலம் மற்றும் நீர் பயன்பாட்டு உரிமைகள் மற்றும் சுரங்கங்களுக்கான சலுகைகள் ஆகியவற்றின் பங்கைக் கண்டித்தன.

மொரெனோவின் பதவிக் காலத்தின் முதல் ஆண்டில், பொதுத்துறையில், குறிப்பாக சுகாதாரப் பணிகளில் சுமார் 11,800 தொழிலாளர்கள் பணிநீக்கம் செய்யப்பட்டனர். இந்த பணிநீக்கங்கள் 4.2 பில்லியன் டாலர் கடனுக்கு ஈடாக, மார்ச் மாதத்தில் சர்வதேச நாணய நிதியம் ஆணையிட்ட சிக்கன நடவடிக்கைகளின் ஒரு பகுதியாகும்.

வேலைநிறுத்த அழைப்பில் எழுப்பப்பட்ட மற்றொரு பிரச்சினை "வட அமெரிக்க ஏகாதிபத்தியத்தின் நலன்களுக்காக கலாபாகோஸ் தீவுகளை ஒப்படைக்க மறுப்பது." இது ஈக்வடார் தீவுக்கூட்டத்தை ஒரு விமானத் தளமாக பயன்படுத்தும் பென்டகனுடனான சமீபத்திய ஒப்பந்தத்தை குறிக்கிறது. இந்த தீவுகள் ஐ.நாவால் ஒரு உயிர்க்கோள இருப்பு மற்றும் உலக பாரம்பரிய தளமாக வகைப்படுத்தப்பட்டுள்ளது.

ஆர்ப்பாட்டங்களின் தலைவர்களான குட்டி முதலாளித்துவ மற்றும் முதலாளித்துவ தேசியவாத சக்திகள், முக்கியமாக கொர்ரியாவும் அவரது ஆதரவாளர்களும் அசான்ஜ் பற்றிய குறிப்புக்களை அதிகரித்தளவில் கைவிட்டுவிட்டனர். ஒரு பாரிய சமூக வெடிப்பு அவர்களை அதிகாரத்திற்கு கொண்டு வரக்கூடும் என்பதையும் அமெரிக்க ஏகாதிபத்தியத்துடன் ஒரு "சமூக சமரசத்தை" கண்டுபிடிக்க அவர்களை கட்டாயப்படுத்தக்கூடும் என்பதையும் அவர்கள் அங்கீகரிக்கத் தொடங்குகிறார்கள்.

எவ்வாறாயினும், ஆர்ப்பாட்டங்களில் அசான்ஜின் பாதுகாப்பு இன்னும் கொண்டுள்ள முக்கியத்துவம், ஈக்வடோர் மற்றும் இலத்தீன் அமெரிக்கா முழுவதும் ஏகாதிபத்திய ஆதிக்கத்தின் வரலாற்று திருப்புமுனையின் மீதான ஆழ்ந்த சமூக கோபத்தின் வெளிப்பாடாகும்.

ஈக்வடோர் அரசியலமைப்பில் உள்ள சர்வதேச புகலிட சட்டங்களையும் மற்றும் பாதுகாப்புகளையும் மீறும் செயல்முறையாக, ஏப்ரல் மாதம் மொரேனோ நிர்வாகம் அசான்ஜை கைது செய்வதற்கு தனது தூதரகத்தின் கதவுகளை ஒரு பிரிட்டிஷ் கைப்பற்றுதல் குழுவிற்கு திறந்துவிட்டபோது, விக்கிலீக்ஸ் நிறுவனரை விடுவிக்கக் கோருவதற்காக “உலக அவமானம்” என முழக்கமிடும் பதாகைகளை கையிலேந்தியவாறு 20,000 எதிர்ப்பாளர்கள் குயிட்டோ வழியாக அணிவகுத்துச் சென்றனர். இந்த போராட்டம், கலகப் பிரிவு பொலிஸார் பிரயோகித்த தடியடி, தாக்குதல் நாய்கள் மற்றும் கண்ணீர்புகை குண்டு வீச்சு போன்றவற்றை எதிர்கொண்டது.

அசான்ஜை ஏகாதிபத்தியத்திடம் ஒப்படைப்பது குறித்த பொதுமக்கள் சீற்றத்திற்கு, விக்கிலீக்ஸை தொடர்ந்து குற்றவாளியாக்குவது, ஜனநாயக உரிமைகளை தாக்குவது மற்றும் அவரது அரசாங்கத்தின் ஊழல்களை மூடி மறைப்பது ஆகியவற்றை தொடர்வதன் மூலம் ஆரம்பத்தில் இருந்தே மொரேனோ பதிலிறுத்து வந்துள்ளார்.

தனிமைப்படுத்தப்பட்ட ஆட்சிக்கு அவர் உட்படுத்தப்பட்டு வந்தார் என்றாலும், ஈக்வடோரிய ஜனாதிபதியின் தகவல்தொடர்பு விபரங்களை திருடியதாகவும், மில்லியன் கணக்கான இலஞ்ச ஊழல் நடவடிக்கைகள் மூலம் மோசடி செய்ததில் அவரது குடும்பத்தின் ஈடுபாடு பற்றியும், மேலும் அவரது ஆடம்பரமிக்க தனிப்பட்ட வாழ்க்கை முறை பற்றியும் அம்பலப்படுத்தும் ஆவணங்களை கசியவிட்டதாகவும் ஏப்ரலில் அசான்ஜ் மீது மொரேனோ அபத்தமாக குற்றம்சாட்டினார். மேலும், எந்தவொரு முறையான குற்றச்சாட்டுக்களோ அல்லது ஆதாரங்களோ இல்லாமல், மொரேனோ நிர்வாகம் அசான்ஜின் நண்பரான குயிட்டோவில் 70 நாட்களாக வாழ்ந்து வரும் ஒரு சுவீடன் புரோகிராமர் ஓலா பினியை ஊழலில் தொடர்புடையவர் என்ற தெளிவற்ற குற்றச்சாட்டுக்களின் அடிப்படையில் கைது செய்தது.

தற்போது, திங்களன்று, மொரேனோ அரசாங்கம் மூலம் வழங்கப்பட்ட மற்றும் இலண்டனில் ஈக்வடோரிய தூதரகம் வாடகைக்கு அமர்த்திய ஒரு ஸ்பானிய நிறுவனம் மூலம் சேகரிக்கப்பட்ட ஆவணங்களை அடிப்படையாகக் கொண்டு தயார் செய்த ஒரு அவதூறான அறிக்கையை CNN வெளியிட்டது. 2016 தேர்தல்களின் போது ஜனநாயகக் கட்சியின் மின்னஞ்சல்களை கசிய விட்டதில் அசான்ஜ், ரஷ்ய அரசாங்கத்துடன் ஒத்துழைத்ததாக அது குற்றம் சாட்டுகிறது. விக்கிலீக்ஸ் எப்போதும் மறுத்துள்ள இந்த குற்றச்சாட்டுக்கு, உறுதியான ஆதாரங்கள் எதுவும் முன்வைக்கப்படவில்லை.

சென்ற மாதம், நான்காம் அகிலத்தின் அனைத்துலகக் குழுவும் மற்றும் உலக சோசலிச வலைத் தளமும், “ஜூலியன் அசான்ஜை பாதுகாப்பதற்கு, உண்மையில் அனைத்து தொழிலாளர்களின் ஜனநாயக மற்றும் சமூக உரிமைகளை பாதுகாப்பதற்கு, மக்களில் பெரும்பான்மையினராகவும் மற்றும் கிரகத்தின் மிக சக்திவாய்ந்த சமூக சக்தியாகவும் உள்ள சர்வதேச தொழிலாள வர்க்கத்தை அரசியல்ரீதியாக தூண்டுவதற்கும் அணிதிரட்டுவதற்கும்” என ஒரு உலகளாவிய பிரச்சாரத்தை தொடங்கியுள்ளன.

ஈக்வடோரில் நடந்த போராட்டங்களும் மற்றும் சமீபத்திய வேலைநிறுத்தங்களும் நிரூபித்தது போல, அசான்ஜையும், பேச்சு சுதந்திரத்தையும் மற்றும் அனைத்து ஜனநாயக உரிமைகளையும் பாதுகாக்கக்கூடிய ஒரே சமூக சக்தியாக சர்வதேச தொழிலாள வர்க்கம் தான் உள்ளது. உலகளாவிய பாதுகாப்புக் குழுவை உருவாக்குவதில் ஆதரவாளர்களாக பதிவு செய்யுமாறு நாங்கள் அழைக்கிறோம்.

.இந்த போராட்டத்தில் தீவிரமாக உள்ள அனைவரையும் உலகளாவிய பாதுகாப்புக் குழுவை உருவாக்குவதில் ஆதரவாளர்களாக பதிவு செய்யுமாறு அழைக்கிறோம்.