பிரான்ஸ்: டுலுவா அறிக்கை ஓய்வூதியங்களை மக்ரோன் வெட்டுவதற்கு தயாரிப்பு செய்கிறது

Anthony Torres
18 July 2019

மொழிபெயர்ப்பின் மூலக் கட்டுரையை இங்கே காணலாம்

18 மாதங்களாக கலந்தாலோசிக்கப்பட்ட பின்னர், இலையுதிர் காலத்தில் நடைமுறைப்படுத்தப்பட இருக்கின்ற ஓய்வூதியங்கள் மீதான தாக்குதலுக்கு, ஓய்வூதிய சீர்திருத்தத்திற்கான உயர் ஆணையர் ஜோன் போல் டுலுவா (Jean Paul Delevoye) அவரின் பரிந்துரைகளை இன்று பிரெஞ்சு ஜனாதிபதி இமானுவல் மக்ரோனுக்கு வழங்குவார். இந்த அறிக்கை, பெரும் சமூக மற்றும் அரசியல் முக்கியத்துவத்தைக் கொண்டிருக்கும். பாரிய "மஞ்சள் சீருடை" போராட்டங்களால் வெளிப்படுத்தப்பட்ட ஆளும் உயரடுக்கின் மீதான பரந்த சமூக கோபம் மற்றும் அது தனிமைப்படுத்தப்பட்டிருப்பதற்கு மத்தியிலும், மக்ரோன் அரசாங்கம் எந்த விட்டுக்கொடுப்புகளையும் வழங்குவதாக இல்லை. இரண்டாம் உலக போர் மற்றும் பாசிசத்தின் வீழ்ச்சிக்குப் பின்னர் ஸ்தாபிக்கப்பட்ட சமூக உரிமைகளை அழிக்கும் நடவடிக்கைகளை அது தீவிரப்படுத்தி வருகிறது.

பிரதம மந்திரி எட்வார்ட் பிலிப்புக்கு இந்த அறிக்கை சமர்பிக்கப்படுவதற்கு முன்னதாக, இந்த காலை, டெலுவா, சுகாதார மற்றும் ஐக்கியத்திற்கான அமைச்சர் அனியேஸ் புஸான் (Agnès Buzyn) உடன் சேர்ந்து, ஓராண்டுக்கும் மேலாக கலந்தாலோசனைகளில் சம்பந்தப்பட்டுள்ள முதலாளிமார்கள் மற்றும் தொழிற்சங்கங்களை வரவேற்பர். இலையுதிர்காலத்தில் இந்த ஓய்வூதிய சீர்திருத்தம் அறிமுகப்படுத்தப்படும். ஆனால் 2020 வரையில் இது நாடாளுமன்றத்தில் விவாதிக்கப்படாது. அது வெளிப்படையாக மக்கள் மதிப்பிழந்திருப்பதால், நகரசபை தேர்தல்களுக்குப் பின்னர் 2025 இல் நடைமுறைக்கு வரும்.

“அனைவருக்குமான" புள்ளிகள்-அடிப்படையிலான புதிய ஓய்வூதிய திட்டம் தற்போதைய 42 ஓய்வூதிய திட்டங்களைப் பிரதியீடு செய்யும். ஒரு தொழிலாளி அவர் வேலை செய்துள்ள காலாண்டுகளினது எண்ணிக்கையின் அடிப்படையில் ஓய்வூதியங்கள் கணக்கிடப்படும். அவை தனியார்துறை தொழிலாளர்களின் சிறந்த 25 ஆண்டுகளைப் பயன்படுத்தியோ மற்றும் அரசு ஊழியர்கள் விடயத்தில் கடைசி ஆறு மாத வேலைகளைப் பொறுத்தோ இனி கணக்கிடப்படமாட்டாது. இது ஓய்வூதிய கொடுப்பனவு தொகைகளில், அதுவும் குறிப்பாக தொழிலாளர்களுக்கு கூறப்படும் "புள்ளிகளுக்கு" எந்த நிலையான மதிப்பு ஏதும் இல்லை என்கின்ற நிலையில், பாரியளவில் குறைப்புகளை சரிசெய்யும் என்பதுடன், ஓய்வூதியத்தின் பண மதிப்பு அரசாங்கத்தால் எந்நேரமும் குறைக்கப்படலாம்.

ஓய்வூதிய வயது உத்தியோகபூர்வமாக 62 என்று இருந்தாலும், நடைமுறையில் அது சமநிலைப்படுத்தல் என்றழைக்கப்படுவதைக் கொண்டு 64 வயதாக தீர்மானிக்கப்படும். தொழிலாளர்கள் தற்போது ஓய்வூதிய வயதுக்கு முன்னரே வெளியேறுகின்ற நிலையில், 64 வயதுக்கு முன்னர் ஓய்வூ பெறுபவர்களுக்கு அவர்களின் பணபலன்களில் வெட்டுக்கள் இருக்கும். வேறு வார்த்தைகளில் கூறுவதானால், முழுமையான ஓய்வூதியம் பெறுவதற்கான ஓய்வூ வயது நடைமுறையளவில் இரண்டு ஆண்டுகள் உயர்த்தப்பட்டுள்ளது.

நிதியப் பிரபுத்துவம், தொழிலாள வர்க்கத்திற்கு எதிராக அணிதிரட்டுவதற்காக அரசின் ஒடுக்குமுறை எந்திரத்தைக் கட்டமைத்து வருவதால், அந்த தொழில்களுக்கு ஓய்வூதிய வெட்டுக்களால் எந்த பாதிப்பும் இருக்காது. தொழிலாளர்களையும் இளைஞர்களையும் சரீரரீதியில் ஒடுக்கும் பொலிஸ், அத்துடன் சுங்க அதிகாரிகள் மற்றும் சிறைச்சாலை காவலர்களுக்கு, முந்தைய ஓய்வூ பெறும் வயதான 57 அல்லது 52 ஆக கூட தக்க வைக்கப்படும்.

இதற்கு முரண்பட்ட விதத்தில், போதிய ஆதாரவளமின்மை மற்றும் கடினமான வேலை நிலைமைகளுக்கு எதிராக போராடி உள்ள பொது மருத்துவமனை அமைப்பின் அவசரகால கவனிப்பு தொழிலாளர்கள், அவர்களின் தனியார்துறை சக தொழிலாளர்களுக்குரிய அதே விதிமுறைகளின் கீழ்தான் ஓய்வூ பெற வேண்டியிருக்கும். அவர்கள் வேலையினது கடின உடல் உழைப்பின் இயல்பைக் கணக்கில் கொண்ட ஓர் அம்சம் அதில் இடம் பெற்றிருந்தாலும் கூட, அவர்கள் ஆகக்குறைவாக 60 வயதில் ஓய்வூ பெற்றால் தான் முழு ஓய்வூதியம் பெற முடியும்.

2025 க்குள் ஓய்வூதிய திட்டத்தை சமப்படுத்தும் பெயரில், ஓய்வூதியங்களுக்கு போதுமான பங்களிப்பு செய்யாதவர்கள் என்று குறிப்பிடப்படும் தொழிலாளர்களுக்கு வழங்கப்படும் மானியத்தில் இன்னும் கூடுதலான குறைப்பு திட்டமிடப்பட்டுள்ளது. ஆனால் முன்பே அறிவிக்கப்பட்டிருந்தவாறு, அரசாங்கம் இதை தற்போதைய வரவு செலவு திட்டக்கணக்கில் நடைமுறைப்படுத்துவதில்லை என்று முடிவெடுத்துள்ளது. இது ஏனென்றால் ஓய்வூதிய சீர்திருத்தத்தை ஒட்டுமொத்தமாக நடைமுறைப்படுத்துவதை உறுதிப்படுத்தவும், தொழிற்சங்கங்களின் கட்டுப்பாட்டுக்கு வெளியே தொழிலாள வர்க்கத்தினது பாரிய எதிர்ப்பின் அச்சுறுத்தலைக் குறைப்பதற்காகவும் ஆகும்—தொழிற்சங்கங்கள் ஏற்கனவே "மஞ்சள் சீருடை" போராட்டங்களால் பலவீனப்பட்டுள்ளன. இந்நடவடிக்கை 2020 நகரசபை தேர்தல்கள் அல்லது 2021 சமூக பாதுகாப்பு நிதி ஒதுக்கீட்டு மசோதா வரையில் கிடப்பில் வைக்கப்பட்டிருக்கும்.

டுலுவா அறிக்கை தாக்கல் செய்யப்பட்டதைக் குறித்து வினவிய போது, தொழிற்சங்கங்கள் அத்தாக்குதலைப் பேரம்பேசுவதில் அரசாங்கத்துடனான அவற்றின் நீண்டகால கூட்டு ஒத்துழைப்பை பாசாங்குத்தனமாக மூடிமறைக்க முயன்றன. CFDT சங்கத்தின் Frédéric Sève வியாழனன்று கூறுகையில், “ஒரு மூர்க்கமான தரமுறைப்படுத்தலைத் தவிர்க்க, வேலையின் யதார்த்தத்தையும் குறிப்பிட்ட நடைமுறைகளின் சிக்கல்களையும் கணக்கில் எடுக்கும் ஒரு நம்பகமான, ஆக்கபூர்வமான அணுகுமுறை இருக்குமென நாங்கள் நம்புகிறோம்,” என்றார்.

பாசாங்குத்தனத்திற்கான விருது தொழிலாளர் பொதுக் கூட்டமைப்பு (CGT) தலைவர் பிலிப் மார்ட்டினேஸ் க்கு சென்றது. “பாதுகாப்பற்ற, தற்காலிக தொழிலாளர்கள் தான் இந்த சீர்திருத்தத்தால் முக்கியமாக பாதிக்கப்படுவார்கள், இவர்களுக்கு ஒரு முழுமையான தொழில்வாழ்வே இருக்காது,” என்றார். ஓய்வூதிய வயதை 62 ஆக வைப்பது "உண்மையிலேயே எங்களை முட்டாளாக பாவிப்பதாகும்,” என்ற வாதத்தையும் அவர் சேர்த்துக் கொண்டார். ஆனால், இதையெல்லாம் கூறிவிட்டு, மார்ட்டினேஸ் சர்வசாதாரணமாக ஓய்வூதியங்களுக்கு நிதி வழங்க "ஏதாவது செய்தாக வேண்டும்" என்பதையும் சேர்த்துக் கொண்டார்.

மக்ரோன் மற்றும் அவருக்கு முன்பிருந்தவர்களின் பிற சீர்திருத்தங்களின் போது நடந்து கொண்டதைப் போலவே, தொழிற்சங்கங்கள் தொழிலாளர் விதிமுறைகளை (Code du travail) அழிக்கவும், தேசிய இரயில்வே வலையமைப்பை (SNCF) தனியார்மயப்படுத்தவும் மற்றும் வேலைவாய்ப்பு நலன்களைக் குறைக்கவும் செயலாற்ற சமூக பேச்சுவார்த்தை என்றழைக்கப்படுவதில் பங்கெடுத்திருந்தன. தொழிற்சங்கங்கள் இப்போது நாடகபாணியில் கூறும் விமர்சனங்கள் ஏற்கனவே 18 மாதங்களாக முதலாளிமார்கள் மற்றும் அரசாங்கத்துடன் சேர்ந்து திரைக்குப் பின்னால் செய்து முடிக்கப்பட்டு விட்டன. அரசாங்கத்தால் என்ன நடத்தப்பட்டு வருகிறது என்பது தொழிற்சங்கங்களுக்கு நன்றாகவே தெரியும் என்பதோடு அவை அதை ஆதரிக்கின்றன.

அங்கே பணமில்லை அதனால் தான் இந்த வெட்டுக்கள் அவசியமாகின்றன என்பது ஒரு பொய்யாகும். பிரான்சின் பில்லியனர்கள் 2008 நிதிய பொறிவுக்குப் பின்னர் இருந்து அவர்களின் சொத்திருப்புக்களை மும்மடங்காக்கி உள்ளனர். ஆடம்பர அலங்கார குழுமம் LVMH இன் தலைவர் பேர்னார்ட் ஆர்னோல்ட் சமீபத்தில் உலகின் இரண்டாவது மிகப் பெரிய பணக்காரரான பில் கேட்ஸை முந்தி, 100 பில்லியன் டாலர் உச்சவரம்பைக் கடந்தார். ஐரோப்பிய மத்திய வங்கி கடந்த தசாப்தத்தில் நிதி நிறுவனங்கள் மற்றும் வங்கிகளுக்குப் பொதுப் பணத்திலிருந்து பில்லியன்களை வாரியிறைத்துள்ளது. ஆனால் பெருநிறுவனங்கள் மற்றும் அரசாங்கங்களும் இலாபம் மற்றும் போட்டித்தன்மையை ஊக்குவிக்க முயன்று வருகின்ற அதேவேளையில், இராணுவ வரவு-செலவு திட்டக்கணக்கில் பாரியளவிலான அதிகரிப்புகள் மற்றும் போருக்கான தயாரிப்புகளுக்கு ஆதாரவளங்களை விடுவிக்க சமூக செலவினங்களை வெட்டி வருகின்றன.

தொழிற்சங்க வருவாய்களில் பெரும்பான்மையை நேரடியாக ஆளும் வர்க்கம் தான் வழங்குகிறது, இதனால் தான் இந்த பெருநிறுவன எந்திரங்களும் அவற்றின் அரசியல் கூட்டாளிகளும் "மஞ்சள் சீருடை" போராட்டங்களுக்கு ஆதரவாகவோ அல்லது மக்ரோனின் சமூக-விரோத கொள்கைகளுக்கான எதிர்ப்புக்கு ஆதரவாகவோ எந்தவொரு போராட்டத்தையும் அணித்திரட்ட மறுத்தனர். அதற்கு பதிலாக, மார்ட்டினேஸ் முன்னிலையில் நிற்க, தொழிற்சங்கங்கள், “மஞ்சள் சீருடையாளர்களை" அவமதித்து தூற்றியதுடன் அவர்கள் முதலாளிமார்கள் மற்றும் அதிவலதின் சம்பளத்தில் இருப்பதாக அறிவித்தனர்.

இராணுவவாதம் மற்றும் சிக்கன நடவடிக்கைகளுக்கு ஐரோப்பா எங்கிலும் சமூக எதிர்ப்பு அதிகரித்து வருகிறது. இது இந்தாண்டு போலாந்தில் ஆசிரியர்களின் தேசிய வேலைநிறுத்தம் மற்றும் பணவீக்கத்திற்கு ஏற்ப முறைபடுத்தப்படும் கூலி உயர்வுகளில் தேக்கத்திற்கு எதிராக போர்ச்சுக்கல், பெல்ஜியம் மற்றும் ஜேர்மனியின் வேலைநிறுத்தங்களில் வெளிப்பட்டன. ஆனால் ஆளும் வர்க்கம் எந்த சமூக விட்டுக்கொடுப்பும் வழங்குவதாக இல்லை. வங்கிகள் பாரிய பெரும்பான்மை மக்களின் கண்ணோட்டங்கள் மீது மிதித்தேறி, ஓர் எதேச்சதிகார கொள்கையை திணித்து வருகின்றன.

அதிகரித்து வரும் தொழிலாளர்கள் மற்றும் இளைஞர்களின் எதிர்ப்பை முகங்கொடுத்துள்ள மக்ரோன், முந்தைய சோசலிஸ்ட் கட்சி அரசாங்கத்தினது அவசரகால சட்டத்தில் கொண்டு வரப்பட்ட பொலிஸ்-அரசு நடவடிக்கைகளில் தன்னை நிலைநிறுத்திக் கொண்டிருப்பதுடன், அவற்றை விரிவாக்கி வருகிறார். தொழிலாள வர்க்கத்திற்கு எதிராக நடத்தப்பட்டு வரும் இப்போதைய தாக்குதல்களை ஓர் எதேச்சதிகார ஆட்சியைக் கட்டமைப்பதன் மூலமாக மட்டுமே நடத்த முடியும். இதற்காக தான், மக்ரோன் விச்சி ஒத்துழைப்புவாத ஆட்சியின் தலைவர் பெத்தனைப் புகழ்கிறார் மற்றும் பாஸ்டி தினத்தன்று அவரது அரசாங்கத்தை எதிர்த்து போராடிய நூற்றுக் கணக்கான "மஞ்சள் சீருடையாளர்களை" கைது செய்து, சுற்றி முள்வேலிகள் அமைக்கப்பட்ட ஆள்அரவமற்ற இடங்களுக்கு அவர்களைக் கொண்டு சென்றார்.

மக்ரோனுக்கு எதிரான எந்தவொரு இயக்கத்திற்கும் விரோதமாக உள்ள தொழிற்சங்கங்கள் "மஞ்சள் சீருடையாளர்களின்" சமூக சமத்துவத்திற்கான சட்டபூர்வ கோரிக்கைகளை அதிவலதின் நடவடிக்கைகள் என்று சித்தரித்துள்ளன. இது இன்னொரு பொய்யாகும். தொழிற்சங்கங்கள் முதலாளிமார்களுக்கும் மற்றும் அரசாங்கம் திணித்து வருகின்ற சிக்கன நடவடிக்கைகளுக்கும் உடந்தையாய் இருக்கின்றன என்பதோடு, ஓர் எதேச்சதிகார ஆட்சிக்கான தயாரிப்புகளை மூடிமறைக்கின்றன என்பதையும் மக்ரோனின் ஓய்வூதிய வெட்டுக்கள் எடுத்துக்காட்டுகின்றன.

முதலாளித்துவத்தை தூக்கியெறிந்து தொழிலாளர்களுக்கு அதிகாரத்தைக் மாற்றுவதற்கான ஓர் இயக்கத்தில், தொழிலாள வர்க்கத்தின் ஒரு சர்வதேச போராட்டத்தை, தொழிற்சங்க எந்திரங்களில் இருந்து சுயாதீனமாக, தயார் செய்வதே முன்னோக்கிய பாதையாகும்.