பெருந்திரளானவர்கள் லிபியா அருகே கடலில் மூழ்கி உயிரிழந்த சம்பவமும், அகதிகள் பாதுகாப்புக்கான போராட்டமும்

27 July 2019

மொழிபெயர்ப்பின் மூலக் கட்டுரையை இங்கே காணலாம்

முதலாளித்துவ அமைப்புமுறைக்கு எதிராக ஒரு பாரிய சர்வதேச இயக்கம் இல்லாமல் புலம்பெயர்ந்தோரைப் பாதுகாப்பது சாத்தியமில்லை என்பதைத் தொடர்ந்து நடந்துவரும் அகதிகளுக்கு எதிரான அட்டூழியங்களின் அலை எடுத்துக்காட்டுகிறது. உலகின் செல்வவளமான அரசுகள் அகதிகளுக்கு எதிராக நடத்தும் குற்றங்கள் மீது சீற்றம் அதிகரித்து வருகின்ற போதும், பத்தாயிரக் கணக்கான அப்பாவி மக்களை மரணத்தில் தள்ளுவதற்காக இந்த அரசாங்கங்கள் புலம்பெயர்ந்தோர்-விரோத கொள்கைகளைத் தொடர்வதற்குத் தீர்மானகரமாக உள்ளன.

லிபியாவிலிருந்து தப்பியோடி வந்த 270 இல் இருந்து 300 அகதிகளை ஏற்றி வந்த ஒரு கப்பல், வியாழனன்று, இத்தாலிக்கு வரும் வழியில் மத்தியத் தரைக்கடலில் மூழ்கியது. அப்படகைக் கண்ட மீனவர்கள் லிபிய ரோந்து படையினருக்குத் தகவல் அளித்ததும், அவர்கள் அந்த கடல் அலைகளில் இருந்து சுமார் 140 அகதிகளைக் காப்பாற்றினர். எஞ்சிய நபர்கள் காணவில்லை என்பதோடு, மூழ்கி இறந்திருக்கலாமென கருதப்படுகின்றனர்.

2014 இல் மத்தியத் தரைக்கடலில் காப்பாற்றப்பட்ட அகதிகள் © இத்தாலிய கடற்படை/M. செஸ்தினி

கப்பல் கவிழ்வு சம்பவம் ஒன்றில் உயிர்பிழைத்த சபாஹ் யூசெஃப் கூறுகையில், இவரின் ஏழு வயது குழந்தை அந்த சம்பவத்தில் நீரில் மூழ்கி உயிரிழந்தது, “நான் என் நாடான சூடானுக்குத் திரும்பிச் சென்று அங்கேயே சாக வேண்டும் என்பதைத் தவிர இப்போது எனக்கு வேறெந்த ஆசையும் இல்லை,” என்றார்.

உயிர்பிழைத்த எரித்தியர் ஒருவர் உதவி கோரி சர்வதேச முறையீடு செய்தார்: “எங்களை நாங்களே காப்பாற்றிக் கொண்டோம். எங்களுக்கு யாரும் உதவவில்லை, எங்களைக் காப்பாற்ற யாரும் முன்வரவில்லை, இங்கே நாங்கள் மிகப்பெரிய பிரச்சினையில் உள்ளோம், ஆகவே எங்களுக்கு உங்களின் உதவி தேவை,” என்றார்.

அந்த கப்பல் கவிழ்வு சம்பவத்தில் உயிர்பிழைத்த அகதிகள் இன்னமும் மரண அபாயத்தில் உள்ளனர். லிபியாவுக்கு எதிரான 2011 நேட்டோ போர் அந்நாட்டு அரசாங்கத்தையும் ஆயுதப்படைகளையும் அழித்த பின்னர் ஐரோப்பிய ஒன்றியத்தால் கட்டமைக்கப்பட்டு அதன் நிதியுதவி பெறும் ஒரு படையான லிபிய ரோந்து படையினரிடம் ஒப்படைக்கப்பட்ட எல்லா அகதிகளையும் போலவே, இவர்களும் ஐரோப்பிய ஒன்றிய நிதியுதவி பெறும் கொடூர சித்திரவதை முகாம்களில் அடைக்கப்படும் அபாயத்தில் உள்ளனர். அங்கே, அவர்கள் வன்தாக்குதலையும், பலாத்காரத்தையும் முகங்கொடுப்பதுடன், அடிமையாக விற்கப்படுவதையும், அல்லது படுகொலையையும் முகங்கொடுக்கின்றனர், இவற்றை ஐக்கிய நாடுகள் சபை, மனித உரிமைகள் குழுக்கள் மற்றும் பிரதான ஊடகங்கள் தொடர்ந்து ஆவணப்படுத்தி உள்ளன.

முகாம் பாதுகாவலர்கள் நடத்தும் துஷ்பிரயோகத்திலிருந்து தப்பிப் பிழைத்திருப்பவர்கள் நேட்டோ போருக்குப் பின்னர் இருந்து லிபியாவைச் சீரழித்துள்ள உள்நாட்டு போருக்குப் பலியாகும் அபாயத்தில் உள்ளனர். இம்மாத தொடக்கத்தில், பிரெஞ்சு ஜனாதிபதி இமானுவல் மக்ரோன் மற்றும் எகிப்திய சர்வாதிகாரி அப்தெல் பதாஹ் அல்-சிசி ஆதரவிலான ஓர் இராணுவ பலசாலியான கலிஃபா ஹஃப்தருக்கு விசுவாசமான விமானம், இத்தாலிய ஆதரவிலான உத்தியோகபூர்வ லிபிய அரசாங்கத்தை திரிப்போலிக்கு அருகே தாக்கிய போது, Tajoura அகதிகள் முகாம் மீது குண்டுவீசியதில் டஜன் கணக்கானவர்கள் கொல்லப்பட்டனர்.

நேற்று ஆபிரிக்காவுக்கான ஐ.நா. உயர் ஆணையத்தின் அகதிகளுக்கான செய்தி தொடர்பாளர் சார்லி யாக்ஸ்லெ அந்த கப்பல் கவிழ்வில் உயிர்பிழைத்தவர்களைக் குறித்து ஓர் அதிர்ச்சிகரமான செய்தியை ட்வீட் செய்தார், “Tajoura தடுப்புக்காவல் முகாமுக்கு 84 பேர் கொண்டு செல்லப்பட்டனர், அங்கே இரண்டு வாரங்களுக்கு முன்னர் ஒரு விமானத் தாக்குதலில் சிக்கி 50 க்கும் அதிகமானவர்கள் உயிரிழந்தனர். ... அவர்கள் விடுவிக்கப்பட வேண்டும், யாரும் இனி திரும்ப தடுப்புக்காவல் மையங்களுக்குக் கொண்டு வரப்படக்கூடாது என்ற விதத்தில் நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும்,” என்று குறிப்பிட்டார்.

2016 இல் இருந்து மத்திய தரைக்கடலில் 14,000 அகதிகள் உயிரிழந்துள்ள கடலில் மூழ்கி இறக்கும் சம்பவங்களுக்கான பொறுப்பு ஐரோப்பிய ஒன்றியம் மற்றும் முதலாளித்துவ அமைப்புமுறையையே சாரும். போர்த்தோ ரிக்கோவில் பாரிய போராட்டங்கள், அமெரிக்காவில் ஆசிரியர்கள் வேலைநிறுத்தங்கள், பிரான்சின் "மஞ்சள் சீருடை" போராட்டங்கள், மற்றும் போர்ச்சுக்கல், ஜேர்மனி மற்றும் போலாந்தில் ஐரோப்பிய ஒன்றிய சிக்கன நடவடிக்கைகளுக்கு எதிரான வேலைநிறுத்தங்கள் என வர்க்க போராட்டத்தின் ஓர் உலகளாவிய மேலெழுச்சியை முகங்கொடுத்துள்ள முதலாளித்துவ வர்க்கம் தொழிலாளர்களைப் பிளவுபடுத்துவதற்காக வக்கிரமாக அகதிகள்-விரோத பேரினவாதத்தைத் தூண்டிவிட்டு வருகின்ற அதேநேரத்தில், அது ஒட்டுமொத்த தொழிலாள வர்க்கத்தையும் பாரியளவில் ஒடுக்குவதற்குப் பொலிஸ் அரசையும் கட்டமைத்து வருகிறது.

அட்லாண்டிக்கின் இருதரப்பிலும் ஏகாதிபத்திய அரசாங்கங்கள் அவற்றின் இராணுவ இயந்திரங்களுக்குள் நூறு பில்லியன் கணக்கான டாலர்களைப் பாய்ச்சுகின்ற அதேவேளையில் தொழிலாளர்களின் செலவில் அமசன் தலைமை செயலதிகாரி ஜெஃப் பெசோஸ் (நிகர சொத்து மதிப்பு 165.6 பில்லியன் டாலர்) மற்றும் LVMH உரிமையாளர் பேர்னார்ட் அர்னோல்ட் (104.2 பில்லியன் டாலர்) போன்ற பில்லியனர்களைச் செல்வ செழிப்பாக்க சிக்கன நடவடிக்கைகளைத் திணிக்கின்றன. இவ்வாறிருக்கையில், 20 ஆம் நூற்றாண்டின் பாசிசவாத ஆட்சிகளை எதிரொலிக்கும் வகையில், அரசாங்கங்களும் அரசியல் சாயங்கள் பூசிய அனைத்து முதலாளித்துவ கட்சிகளும், ஒவ்வொருவரும் அவர்களின் கஷ்டங்களுக்கு புலம்பெயர்ந்தோர் மீது பழிசுமத்த வேண்டுமென வலியுறுத்துகின்றன.

அமெரிக்காவின் பாசிசவாத ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் அமெரிக்க சிறையடைப்பு முகாம்களின் ஒரு வலையமைப்பில் நூறாயிரக் கணக்கான புலம்பெயர்ந்தோரைச் சிறையில் அடைத்துள்ளதுடன், மில்லியன் கணக்கான ஆவணமற்ற புலம்பெயர்ந்தோரை நாட்டை விட்டு வெளியேற்ற அமெரிக்க நகரங்களில் பொலிஸ் தேடல்கள் நடத்தப்படுமென அச்சுறுத்தி வருகிறார். அமெரிக்கா எங்கிலும் புலம்பெயர்ந்தோருக்கு எதிரான தேடல்களுக்கு எதிரான போராட்டங்கள் நடக்கின்ற போதினும் அமெரிக்க சிறையடைப்பு முகாம் அமைப்புமுறைக்கு 4.6 பில்லியன் டாலர் நிதி வழங்க ஜனநாயகக் கட்சி அமெரிக்க பிரதிநிதிகள் சபையில் வாக்களித்து, ட்ரம்பின் அதிவலது கொள்கையை ஆதரிப்பதில் ஒரு முக்கிய பாத்திரம் வகிக்கிறது.

லிபியா அருகே கப்பல் கவிழ்ந்த சம்பவம், பாசிசவாத சர்வாதிகாரி பெனிடோ முசோலினியைப் புகழ்ந்துரைத்த இத்தாலியின் அதிவலது உள்துறை அமைச்சர் மத்தேயோ சல்வீனி மீது ஐரோப்பாவில் சீற்றத்தைத் தூண்டிவிட்டுள்ளது.

சட்டவிரோத புலம்பெயர்ந்தோர் மற்றும் ரோமா மக்களை நாடு கடத்துவதற்கு பாரிய தேடல்களை நடத்த அச்சுறுத்தி உள்ள சல்வீனி இத்தாலிக்கு அகதிகளை ஏற்றி வரும் அனைத்து கப்பல்களையும் தடுத்து நிறுத்தி உள்ளார். அகதிகளின் பாதுகாப்புக்காக இந்த இளவேனிற்காலத்தில் மிலானில் 200,000 பேர் நடத்திய போராட்டங்களை அவர் புறக்கணித்துள்ளார். இத்தாலியில் அகதிகளைத் தரையிறக்கியதற்காக Sea Watch 3 கப்பலின் ஜேர்மன் தளபதி Carola Rackete ஐ கைது செய்து, பின்னர் ஜேர்மனியில் போராட்டங்களின் ஓர் அலைக்கு மத்தியில் அவரை விடுவித்த அவர், இப்போது அகதிகளை ஏற்றி வந்துள்ள இத்தாலிய ரோந்துப்படை கப்பலின் புலம்பெயர்ந்தவர்கள் அனைவரையும் ஏனைய ஐரோப்பிய ஒன்றிய நாடுகள் ஏற்றுக்கொள்ள உடன்படும் வரையில் அதை கரை சேர அனுமதிக்க மறுக்கிறார்.

இருப்பினும் இதற்கான பொறுப்பு ஒட்டுமொத்த ஐரோப்பிய ஒன்றியத்தின் மீதும் விழுகிறது. 2015 இல் தொடங்கப்பட்ட “ட்ரீடான் நடவடிக்கை” (Operation Triton) என்பது மீட்பு நடவடிக்கைகளை நிறுத்தியதுடன் மத்திய தரைக்கடலில் போர்க்கப்பல்களின் நிலைநிறுத்தலை அதிகரித்தது மற்றும் சிறையடைப்பு முகாம்களின் ஒரு பரந்த வலையமைப்பின் கட்டமைப்பைத் தீவிரப்படுத்தியது. மில்லியன் கணக்கான மத்திய கிழக்கு மற்றும் ஆபிரிக்க அகதிகள் இத்தாலி மற்றும் கிரீஸில் இருந்து துருக்கி, லிபியா மற்றும் நைஜர் வரையில் நீண்டுள்ள ஐரோப்பிய ஒன்றிய முகாம்களில் கொடூரமான நிலைமைகளில் சிறை வைக்கப்பட்டுள்ளனர்.

சல்வீனியின் பாசிசவாத வெளிப்பாட்டை விமர்சிக்கும் பேர்லின் மற்றும் பாரீசின் அறிக்கைகளில் பாசாங்குத்தனத்தின் துர்நாற்றம் வீசுகிறது. மக்ரோன் அரசாங்கம் சல்வீனியை "வெறுப்பூட்டுவதாக" குறிப்பிடுகின்ற அதேவேளையில், அவர் பாசிசவாத சர்வாதிகாரி பிலிப் பெத்தனைப் புகழ்ந்துரைத்துள்ளார் மற்றும் அவரின் அதிகாரிகள் பாதுகாப்பு படைகளில் பாசிசவாத அடித்தளத்தை ஊக்குவித்து வருகின்றனர் மற்றும் நிதியியல் உயரடுக்கோ அகதிகள் பிரான்சுக்குள் நுழைவதிலிருந்து தடுக்க புலம்பெயர்ந்தோர் மீட்பு கப்பலான அக்வாரியஸை மார்சைய்யில் நிறுத்தி உள்ளது. அதன் பொலிஸ், சமூக சமத்துவமின்மைக்கு எதிராக போராடி வரும் "மஞ்சள் சீருடையாளர்களை" காட்டுமிராண்டித்தனமாக தாக்கியதைப் போலவே, பிரெஞ்சு புரட்சியின் நினைவுதினத்தில், ஜூலை 14 இல், பாரீசில் ஆபிரிக்க அகதிகளின் ஒரு போராட்டத்தைக் மூர்க்கமாக உடைத்தது.

2015 இல் சிரியப் போரில் இருந்து தப்பி பால்கன்கள் வழியாக ஜேர்மனிக்குத் தப்பி வந்த புலம்பெயர்ந்தோருக்குச் சிறிது காலத்திற்கு கதவுகளைத் திறந்து விட்ட பேர்லினும் புலம்பெயர்ந்தோர்-விரோத கொள்கையை ஏற்றுள்ளது. அது மீள்ஆயுதமயமாகி வருகின்ற நிலையில், மற்றும் வலதுசாரி தீவிரவாத ஜேர்மன் பேராசிரியர்கள் ஹிட்லர் மற்றும் ஜேர்மன் இராணுவவாதத்திற்குப் புத்துயிரூட்ட அழைப்பு விடுத்து வருகின்ற நிலையில், வன்முறையான நவ-நாஜி குழுக்கள் பொலிஸ் எந்திரத்தினுள் வளர்ந்து வருகின்றன. அகதிகளைப் பகிரங்கமாக பாதுகாத்த பின்னர் நவ-நாஜிக்களிடம் இருந்து பல்வேறு மரண அச்சுறுத்தல்களை முகங்கொடுத்த அரசியல்வாதி வால்டர் லூப்க்க இன் தீர்வு காணப்படாத படுகொலை, ஜேர்மனியில் யாரொருவர் அகதிகளை ஆதரித்தாலும் அவர்களுக்கு எதிரானது வெறும் பாசாங்குத்தனமான அச்சுறுத்தல் இல்லை என்பதற்கு நிகராக உள்ளது.

ஐரோப்பிய பாசிசம், யூதர்கள் மீதான இனப்படுகொலையைத் தொடங்குவதற்கு இரண்டு ஆண்டுகளுக்கு முன்னர், 1940 இல், தலைசிறந்த மாக்சிச புரட்சியாளர் லியோன் ட்ரொட்ஸ்கி எழுதினார்: “இன்று சீரழிந்து வரும் முதலாளித்துவ சமூகம் அதன் அனைத்து துவாரங்களிலும் யூதர்களை நசுக்கி பிழிய முயற்சித்து வருகிறது; உலகின் இரண்டு பில்லியன் மக்கள்தொகையில் பதினேழு மில்லியன் பேர், அதாவது, 1 சதவீதனருக்கும் குறைவானவர்கள் நம் பூமியில் இடம் காண முடியாது உள்ளனர்! பரந்து விரிந்துள்ள நிலமும், விண்ணைத் தொடும் அளவுக்கு மனிதரையும் புவியையும் வெற்றி கொண்டுள்ள தொழில்நுட்ப அதிசயங்களும் இருக்கின்ற போதினும், முதலாளித்துவ வர்க்கம் நமது புவியை ஒரு வெறுக்கத்தக்க சிறைச்சாலையாக மாற்றி உள்ளது,” என்றார்.

எண்பது ஆண்டுகளுக்குப் பின்னர், ட்ரொட்ஸ்கியின் வார்த்தைகள் ஓர் எச்சரிக்கையாக ஒலிக்கின்றன. சோவியத் ஒன்றியம் கலைக்கப்பட்டதற்குப் பின்னர் மத்திய கிழக்கு மற்றும் ஆபிரிக்காவில் மூன்று தசாப்தகால ஏகாதிபத்திய போர், மற்றும் 2008 வோல் ஸ்ட்ரீட் பொறிவுக்குப் பிந்தைய ஒரு தசாப்த கால பொருளாதார நெருக்கடி ஆகியவற்றுக்குப் பின்னர், பத்து மில்லியன் கணக்கானவர்கள் இப்புவி எங்கிலும் இரத்தச்சேற்றில் இருந்தும் வறுமையிலிருந்தும் தப்பிக்க நாட்டை விட்டு வெளியேறி வந்துள்ளனர். இரண்டாம் உலக போருக்குப் பின்னர் மிக அதிகமாக, கடந்தாண்டு, உலகெங்கிலும் 70.8 மில்லியன் பேர் இடம் பெயர்ந்துள்ளனர்.

விட்டுக்கொடுப்பற்ற அரசு ஒடுக்குமுறையும் பொலிஸ்-அரசு கட்டமைப்பும் ஆளும் வர்க்கம் ஒரு பாசிசவாத போக்கில் உறுதியாக இருக்கிறது என்பதற்கான அறிகுறிகளாகும்.

அபிவிருத்தி அடைந்து வரும் போராட்டங்களில் சர்வதேச தொழிலாள வர்க்கத்தின் இன்னும் பரந்த அடுக்குகளை அணிதிரட்டி போராடுவதும், ஒரு சோசலிச சர்வதேசியவாத வேலைத்திட்டத்தைக் கொண்டு இந்த போராட்டங்களை ஆயுதபாணியாக்குவதுமே முன்னோக்கிய பாதையாகும். முதலாளித்துவம் உருவாக்கிய சமூக நெருக்கடிக்கு புலம்பெயர்ந்தவர்கள் மீது பழிசுமத்துவதற்கான முயற்சிகளை நிராகரிப்பது மற்றும் அவர்கள் தேர்ந்தெடுக்கும் எந்தவொரு நாட்டிற்கும் பயணிக்க, வாழ, வேலை செய்வதற்கான அவர்களின் உரிமையைப் பாதுகாப்பது என்பதை இது அர்த்தப்படுத்துகிறது. அனைத்திற்கும் மேலாக, ஆளும் ஸ்தாபகத்தின் ஏதேனும் ஒரு பிரிவுடன் கூட்டணி அமைத்து பாசிசவாத புலம்பெயர்ந்தோர்-விரோத கொள்கைகளை எதிர்க்கலாம் என்ற பிரமைகளை நிராகரிப்பதையும் இது அர்த்தப்படுத்துகிறது.

சமூகத்தின் சோசலிச மாற்றத்திற்காக சர்வதேசரீதியில் தொழிலாள வர்க்கத்தை அணிதிரட்டுவதற்கான ஒரு முன்னோக்கு மட்டுமே, பெருநிறுவன செல்வந்த தட்டுக்களின் கட்டளைகளில் இருந்து மனிதகுலத்தை சுதந்திரப்படுத்தும், ஜனநாயக உரிமைகளைப் பாதுகாக்கும் மற்றும் அனைவருக்குமான உயர்ந்த வாழ்க்கை தரங்களை உத்தரவாதப்படுத்தும்.

Alex Lantier