“ஐரோப்பிய வாழ்க்கை முறையை பாதுகாக்கவும்” மற்றும் “உலகில் வலிமை வாய்ந்த ஐரோப்பாவை உருவாக்கவும்”

இராணுவவாதம் மற்றும் அகதிகள் மீதான தாக்குதல்களை புதிய ஐரோப்பிய ஒன்றிய ஆணையம் தீவிரப்படுத்தவுள்ளது

Will Morrow
16 September 2019

மொழிபெயர்ப்பின் மூலக் கட்டுரையை இங்கே காணலாம்

ஜேர்மனியின் முன்னாள் பாதுகாப்பு அமைச்சரும், ஐரோப்பிய ஆணையத்தின் (European Commission - EC) பதவியேற்கவிருக்கும் தலைவியுமான ஊர்சுலா வொன் டெர் லெயன், கடந்த செவ்வாயன்று நடந்த ஒரு செய்தியாளர் கூட்டத்தில், தான் முன்மொழிந்த ஆணையாளர் குழு பற்றிய விபரங்களை வெளியிட்டார். ஐரோப்பிய ஆளும் வர்க்கம் அசாதாரண வேகத்துடன் வலதை நோக்கி நகர்வதற்கான மற்றொரு அடையாளமாக இந்த புதிய பதவிகளின் பரிந்துரைகளும் தலைப்புகளும் இருந்தன. இந்த பதவியேற்கவிருக்கும் ஐரோப்பிய ஆணைக்குழு ஐரோப்பிய ஒன்றியம் முழுவதுமான இராணுவவாத விரிவாக்கம், அகதிகள் மீதான மிருகத்தனமான தாக்குதல்கள், மற்றும் தொழிலாள வர்க்கத்திற்கு எதிராக பாசிச மற்றும் அதி-வலது சக்திகளை ஊக்குவித்தல் ஆகியவற்றை மேற்பார்வையிடும்.

புலம்பெயர்வு மற்றும் அகதிகளை உள்ளடக்கிய அமைச்சரவை இலாகா மாற்றம் குறித்து மிகவும் பரவலாக கருத்து தெரிவிக்கப்பட்டது. முன்னர் இதற்கு “புலம்பெயர்வு, உள்துறை விவகாரங்கள் மற்றும் குடியுரிமை” என்று தலைப்பிடப்பட்டிருந்தது. இனிமேல் இப்பதவிக்கு “ஐரோப்பிய வாழ்க்கை முறையைப் பாதுகாப்பதற்கான துணைத் தலைவர்” (“Vice-president for protecting the European way of life.”) என்று பெயரிடப்படும். இது புலம்பெயர்வு மட்டுமல்லாமல், ஐரோப்பாவின் வெளிப்புற எல்லை மற்றும் உள்நாட்டு பாதுகாப்புக்கான சட்ட ஒழுங்கு, அத்துடன் கல்வி மற்றும் வேலைவாய்ப்புக் கொள்கைகள் ஆகியவை குறித்த பொறுப்புக்களையும் கொண்டிருக்கும்.

ஐரோப்பிய “வாழ்க்கை முறை,” என்றழைக்கப்படுவதை பாதுகாக்க புலம்பெயர்வுகளை கட்டுப்படுத்துவதுடன் தொடர்புபட்ட இந்த தலைப்பு, நவீனகால பாசிச வலதுசாரிகளின் பகுதியினருக்கான நேரடியான பதிலாக உள்ளது என்பதுடன், ஜோசப் கோயபல்ஸின் நாஜி பிரச்சாரகாரகர்களையும் மகிழ்ச்சியடையச் செய்யும்.

உதாரணமாக, பிரெஞ்சு பாசிச சித்தாந்தவாதியான ரெனோ கமூ (Renaud Camus) தனது பாரிய இடப்பெயர்வு (The Great Replacement) கோட்பாட்டில் முன்வைத்த ஒரு முக்கிய ஆய்வுக் கருத்து, ஐரோப்பாவினுள் குடிபெயர்தல் என்பது மாற்றத்திற்கு அச்சுறுத்துகிறது — அதாவது ஐரோப்பிய “அடையாளம்” மற்றும் கலாச்சாரத்தை அழிக்கிறது. மார்ச் 15 அன்று, நியூசிலாந்தின் கிறிஸ்ட்சேர்ச் பகுதியில் உள்ள இரண்டு தேவாலயங்களில் 50 முஸ்லீம் வழிபாட்டாளர்களை சுட்டுக் கொன்ற பாசிச பயங்கரவாதி ப்ரெண்டன் டாரன்ட், அத்தாக்குதலுக்கு சற்று முன்னர் வெளியிட்ட அவரது அறிக்கையில் கமூஸின் “கோட்பாடு” பற்றி மேற்கோளிட்டுக் காட்டப்பட்டது. டாரண்டின் அறிக்கை, மேற்கை நோக்கிய புலம்பெயர்வு “படையெடுப்பு” என்று அவர் அழைக்கப்படுவதை எதிர்த்தது.

கிரேக்க கன்சர்வேட்டிவ் கட்சியான புதிய ஜனநாயகத்தின் ஐரோப்பிய பாராளுமன்ற முன்னாள் உறுப்பினரான மார்கரிடிஸ் ஷினாஸூக்கு வொன் டெர் லெயன் எழுதிய அறிமுகக் கடிதம், தீவிர வலதுசாரிகளின் வெளியீடுகளிலிருந்து நேரடியாக எடுக்கப்படக்கூடிய பத்திகளை உள்ளடக்கியது. “ஐரோப்பிய வாழ்க்கை முறை”யை பாதுகாக்க, “நல்ல நிர்வகிப்பிலான சட்ட ரீதியான புலம்பெயர்வு, ஒருமைப்பாடு குறித்த வலுவான கவனம், மேலும் நமது சமூகங்கள் ஒத்திசைவாகவும் நெருங்கிய பிணைப்புடனும் இருப்பதை உறுதி செய்வது ஆகிய தேவைகள் இருப்பதை முன்னிலைப்படுத்துங்கள்” என்று வொன் டெர் லெயன் தெரிவிக்கிறார்.

“பொருளாதாரம் மற்றும் சமூகத்தின் மீதான ஒழுங்கற்ற புலம்பெயர்வின் தாக்கம் குறித்த நியாயமான அச்சங்களையும் கவலைகளையும் பற்றி நாம் பேசவும் அவற்றைத் தீர்க்கவும் வேண்டும்,” என்று அவர் குறிப்பிடுகிறார். தீவிர வலதுசாரிகளின் “நியாயமான அச்சங்கள்” குறித்து வொன் டெர் லெயன் தெளிவாக கருத்தில் கொண்டிருந்தார் என்பதால், அவர்களுடன் ஐரோப்பிய ஆணையம் ஒத்துழைக்கும் என்பதை அவர் தெளிவுபடுத்துகிறார்: எனவே, “புலம்பெயர்வு குறித்த புதிய தொடக்கத்திற்கான ஒருமித்த கருத்தை உருவாக்குவதற்கு எல்லை, ஆலோசனை மற்றும் நெருக்கமான ஒத்துழைப்பு ஆகியவை தேவைப்படும்” என்கிறார். ஷினாஸ், “இதில் மிகவும் வேரூன்றி போனவர்களுக்கிடையில் தொடர்புகளை கட்டமைப்பது குறித்து கவனம் செலுத்துவதன் மூலம் இந்த வேலையை முன்னெடுத்துச் செல்ல வேண்டும்,” என்றவர் குறிப்பிடுகிறார். வொன் டெர் லெயனின் பிரஸ்தாபங்கள், கண்டம் முழுவதும் தீவிர வலதுசாரி சக்திகளை ஊக்குவித்துள்ள ஐரோப்பிய ஒன்றியத்தின் தற்போதைய கொள்கைகளுக்கும் மற்றும் அவர் அங்கம் வகித்த ஜேர்மன் பெரும் கூட்டணிக்கும் (German Grand Coalition) முற்றிலும் பொருந்தக்கூடியவையாகும். இந்த பெரும் கூட்டணி பாராளுமன்றத்திற்கான உத்தியோகபூர்வ எதிர்ப்பிற்கு பாசிசவாத ஜேர்மனிக்கான மாற்றீட்டை (AfD) முன்னிறுத்தியுள்ளது, மேலும், நாஜிக்களின் குற்றங்களை குறைத்துக்காட்டுவதன் ஊடாக ஜேர்மன் இராணுவவாதத்தின் மறுமலர்ச்சியை நியாயப்படுத்த முனையும் வலதுசாரி தீவிரவாதியான ஹம்போல்ட் பல்கலைக்கழக பேராசிரியர் ஜோர்க் பாபெரோவ்ஸ்கியின் முயற்சிகளை எதிர்த்த மாணவர்களின் விமர்சனங்களில் இருந்து அவரை பாதுகாத்தது — இவர் “ஹிட்லர் தீயவர் அல்லர்” என்று இழிவான வகையில் குறிப்பிட்டவராவார். இந்த கூட்டணியின் புலனாய்வு அரசியலமைப்பு பாதுகாப்பு அமைப்பான Verfassungsschutz, முதலாளித்துவம், இராணுவவாதம், பாசிசம் ஆகியவற்றை எதிர்ப்பதுடன், தொழிலாள வர்க்கத்தின் ஒரு சோசலிச இயக்கத்தை உருவாக்க முற்படுவதால் ஜேர்மன் சோசலிச சமத்துவக் கட்சியை இடதுசாரி தீவிரவாதிகளின் பட்டியலில் வைத்துள்ளது.

ஐரோப்பிய முதலாளித்துவம், முன்னர் அதன் வலதுசாரி கொள்கைகளுக்கு வழங்கிய பாசாங்குத்தனமான மனிதாபிமான தலைப்புக்களைக்கூட கைவிட்டுவிட்டு வலதை நோக்கி நகர்ந்து கொண்டிருக்கிறது. இது, ஊடகங்கள் மற்றும் அரசியல் ஸ்தாபகத்தில் உள்ள முதலாளித்துவ பிரமுகர்களின் மத்தியிலும் கலக்கத்தைத் தூண்டியுள்ளது.

ஐரோப்பிய ஆணையத்தின் வெளியேறும் தலைவர் ஜோன்-குளோட் ஜூங்கர் கூட புலம்பெயர்வு பதவியின் பெயர் மாற்றம் குறித்து தனது கவலையை வெளிப்படுத்தினார். ஐரோப்பிய பாராளுமன்றத்தின் தனிப்பட்ட உறுப்பினர்களிடமிருந்து எதிர்ப்பு அறிக்கைகள் வந்துள்ளன, மேலும் புதனன்று, இந்த அறிவிப்பை எதிர்க்கும் விதமாக ஐரோப்பிய பாராளுமன்றம், பிரெஞ்சு பசுமைக் கட்சி உறுப்பினர் கரிமா டெல்லி (ஐரோப்பிய ஒன்றிய அங்கத்தவர்) முன்வைத்த பிரேரணைக்கு ஆதரவாக வாக்களித்தது.

இந்த எதிர்ப்புக்கள் முற்றிலும் இழிவானவை மற்றும் மோசடியானவை. ஏனென்றால், பிற தஞ்சம் கோரும் நபர்களுக்கு தடையாக கண்டத்தின் தெற்கு கடலில் ஆயிரக்கணக்கான அகதிகளை மூழ்கடிக்க மத்தியதரைக் கடலில் மீட்புக் கப்பல்களை வேண்டுமென்றே இரத்து செய்வது உட்பட, பல ஆண்டுகளாக, அகதிகளை படுகொலை செய்யும் கொள்கையை ஐரோப்பிய ஒன்றியம் கண்காணித்து வருகிறது. சமீபத்திய பெயர் மாற்றத்தை எதிர்க்கும் அனைத்து கட்சிகளும் புலம்பெயர்ந்தோர் மீதான தாக்குதலை ஆதரிக்கின்றன, ஆனால் தங்களது சொந்த மாறுபாட்டிற்கு குறைந்த துல்லியமான தலைப்பைக் கொடுக்க அவை விரும்புகின்றன. அவர்களது கொள்கைகள் மக்கள் மத்தியில் செல்வாக்கற்றவை என்பதை அவர்கள் நன்கறிவார்கள் என்பதுடன், கீழ் மட்டத்திலிருந்து எதிர்ப்புகள் வெடிப்பது குறித்து அஞ்சுகிறார்கள்.

வொன் டெர் லெயன், வெளிநாட்டு உறவுகள் இலாகா “உலகில் ஒரு வலுவான ஐரோப்பிய” (“A Stronger Europe in the World”) ஆணையமாக மறு பெயரிடப்படும் என்றும் அறிவித்தார். இதற்கு ஸ்பெயினின் சோசலிச தொழிலாளர்கள் கட்சி அரசாங்கத்தின் தற்போதைய வெளியுறவு அமைச்சர் ஜோசப் பொரேல் தலைமை தாங்குவார்.

ஐரோப்பிய ஒன்றியத்தின் பிரதான புவிசார் அரசியல் போட்டியாளர்களைப் பொறுத்தவரை மிகவும் ஆக்கிரோஷமான இராணுவக் கொள்கையை மேற்பார்வையிடுவதற்கு அவர் பொறுப்பாவார். முக்கிய இலக்குகள்: ரஷ்யா, சீனா மற்றும் அமெரிக்கா. இறுதியாக, ஐரோப்பிய ஏகாதிபத்தியவாதிகள் சந்தைகளுக்கும் வளங்களுக்கும் அணுகலை உறுதி செய்வதற்காக கொள்ளையடிக்கும் நடவடிக்கைகளை தீவிரப்படுத்துவதற்கு இவர் பொறுப்பு வகிப்பார்.

“அமெரிக்காவுடன் நமக்கு பிரச்சினைகள் இருப்பினும், அவர்கள் நமது நெருங்கிய கூட்டாளிகள் என்பதால் அவர்களுடன் நமது கூட்டாண்மையை நாம் கட்டமைக்க வேண்டும்; அதிக சுய-உறுதி கொண்ட சீனா உடனான நமது உறவை நாம் வரையறுக்க வேண்டும்; உதாரணத்திற்கு ஆபிரிக்காவிற்கு நாம் மிகவும் நம்பகமான அண்டை நாடாக இருக்க வேண்டும்” என்று வொன் டெர் லெயன் தெரிவித்தார். வெளிநாட்டு உறவுகள் தொடர்பான அமைச்சக இலாகா, “புவிசார் அரசியல் ஆணையம்” (“geopolitical commission”) ஆக மாறும். மேலும், “உலகிற்கு இன்னும் திறன்மிக்க ஐரோப்பா தேவை, உலகம் மேலும் திறன்மிக்க ஐரோப்பாவிற்கு அழைப்பு விடுத்துள்ளது” என்று பிரகடனம் செய்து அவர் நிறைவு செய்தார்.

ஆபிரிக்காவிற்கான ஒரு மிகுந்த “பொறுப்புள்ள அண்டை நாடாக,” ஜேர்மனி உடனான கூட்டணியில் பிரெஞ்சு ஏகாதிபத்தியத்தின் தலைமையிலான, மூலவளங்கள் நிறைந்த மாலி மற்றும் சாஹேல் ஆகியவற்றின் மீதான ஏழு ஆண்டுகால ஆக்கிரமிப்பின் விரிவாக்கம்; எகிப்தின் அப்தெல் எல்-சிசி போன்ற ஆபிரிக்க சர்வாதிகாரிகளின் ஆதரவு; 2011 இல் லிபியாவில் நடந்தது போன்ற ஆட்சி மாற்றத்திற்கான போர்கள்; மேலும் புகலிடம் நாடி வருபவர்களை தடுத்து வைக்க கண்டம் எங்கிலும் அதிகளவு சித்திரவதை முகாம்களை நிறுவுதல் ஆகியவற்றை வொன் டெர் லெயன் கருத்தில் கொண்டுள்ளார்.

ஐரோப்பிய ஏகாதிபத்தியத்தின் புவிசார் அரசியல் போட்டியாளர்களுடன் அணுவாயுதப் போரை தொடுப்பதே இந்த கொள்கைகளின் தர்க்கரீதியான விளைவாகும் என்பதால், தொழிலாள வர்க்கத்தின் மத்தியில் அவற்றிற்கு எந்தவித ஆதரவும் இல்லை. தொழிலாள வர்க்கத்தின் சமூக உரிமைகள் மற்றும் வாழ்க்கைத் தரங்களுக்கு எதிராக சிக்கன நடவடிக்கைகளை திணிப்பதன் மூலம் ஆளும் உயரடுக்கின் இராணுவமயமாக்கலுக்கு பணம் செலுத்த தொழிலாளர்கள் நிர்ப்பந்திக்கப்படுவார்கள். அதனால் தான், 1930 களில் இருந்ததைப் போல, ஆளும் வர்க்கம் மீண்டும் தீவிர வலதுசாரி மற்றும் பாசிச சக்திகளை முன்கொண்டுவருவதை நோக்கி திரும்பியுள்ளது.

ஐரோப்பிய ஆணையத்திற்கான பிற பரிந்துரைகள் கூட, பிரதான ஐரோப்பிய ஒன்றிய சக்திகளின் ஒரு மிகவும் ஆக்கிரோஷமான கொள்கையைச் சுட்டிக்காட்டுகிறது.

“இலத்திரனியல் யுகத்திற்கு ஐரோப்பா பொருத்தமானது” (“Europe fit for the digital age”) என்று விரிவுபடுத்தப்பட்ட அமைச்சக இலாகாவின் துணைத் தலைவராக மார்க்ரெத் வெஸ்டாஜெர் இருப்பார். தொழில்நுட்பத் துறையின் ஒழுங்குமுறைகளை மேற்பார்வையிடுவதோடு கூடுதலாக, போட்டி இலாகாவையும் அவர் தக்கவைத்துக் கொள்வார். இது, முகநூல், கூகுள் மற்றும் ட்விட்டர் உட்பட, ஐரோப்பாவிற்குள் உள்ள அமெரிக்காவை தளமாகக் கொண்ட முக்கிய தொழில்நுட்ப நிறுவனங்களின் சக்தியைக் கட்டுப்படுத்துவதை நோக்கமாகக் கொண்டு ஐரோப்பிய ஒன்றியம் அதன் நடவடிக்கைகளை தீவிரப்படுத்தும் என்பதைச் சுட்டிக்காட்டுகிறது.

கூகுள் நிறுவனத்திற்கு 8 பில்லியன் யூரோ உட்பட, அமெரிக்க தொழில்நுட்ப நிறுவனங்களுக்கு அபராதங்களை வெஸ்டாஜெர் செலுத்திய பின்னர், அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் அவரை “வரிப்பெண்” என்று முத்திரை குத்தினார். நேற்று, பிரெஞ்சு நிதி மந்திரி புருனோ லு மேர், முகநூல் அதன் புதிய டிஜிட்டல் நாணயமான லிப்ராவை கண்டத்திற்குள் பயன்படுத்துவதை பிரான்ஸ் தடுக்கும் என்று அறிவித்தார்.

அமெரிக்காவை தளமாகக் கொண்ட தொழில்நுட்ப நிறுவனங்கள் மீதான ஐரோப்பிய ஒன்றியத்தின் கட்டுப்பாடுகள் என்பவை, வாஷிங்டனை மட்டும் நோக்கியது என்றல்லாமல், இணையத்தை தணிக்கை செய்வதற்கும் தொழிலாள வர்க்கத்திற்குள் வளர்ந்து வரும் எதிர்ப்பை ஒடுக்குவதற்கும் ஐரோப்பிய ஒன்றிய அங்கத்துவ நாடுகளின் அதிகாரங்களை வலுப்படுத்துவதையும் நோக்கமாகக் கொண்டுள்ளன. சர்வாதிகாரத்தை நோக்கிய திருப்பத்திற்கான மற்றும் பொலிஸ் அரசை கட்டியெழுப்புவதற்கான மற்றொரு அடையாளமாக, ஐரோப்பிய ஒன்றியத்தில் புதிய உறுப்பு நாடுகள் அறிமுகப்படுத்தப்படுவதை மேற்பார்வையிடுவதற்கான விரிவாக்க ஆணையம் லாஸ்லோ ட்ரோக்ஸானியால் இயக்கப்படும், இவர், நீதித்துறையை நிர்வாக கட்டுப்பாட்டின் கீழ் கொண்டு வந்து ஓர்பானின் சீர்திருத்தங்களை வடிவமைக்க உதவிய தீவிர வலதுசாரி ஹங்கேரிய பிரதமர் விக்டர் ஓர்பானின் கூட்டாளியாவார்.

ஐரோப்பிய ஒன்றிய ஆணையர்களின் இந்த புதிய அறிவிப்பு, ஐரோப்பிய முதலாளித்துவ அரசியல் ஸ்தாபகத்தினுள் முற்போக்கான கன்னை எதுவும் இல்லை என்பதற்கான மற்றொரு உறுதிப்படுத்துதல் ஆகும். கூர்மையாக வலதை நோக்கி நகரும், போருக்கு தயாராகி வரும், மேலும் தொழிலாள வர்க்கத்தின் வளர்ந்து வரும் சர்வதேச இயக்கத்திற்கு பதிலளிக்கும் வகையில் சர்வாதிகார சக்திகளை ஸ்தாபித்துக் கொண்டிருக்கும் ஆளும் உயரடுக்கை கண்டம் முழுவதும் உள்ள தொழிலாள வர்க்கம் எதிர்கொள்கிறது.