அமெரிக்க வாகனத்துறை தொழிலாளர்கள் ஜெனரல் மோட்டார்ஸை முடக்கினர்

16 September 2019

மொழிபெயர்ப்பின் மூலக் கட்டுரையை இங்கே காணலாம்

ஞாயிறன்று நள்ளிரவு நாற்பத்தி ஆறாயிரம் ஜெனரல் மோட்டார்ஸ் தொழிலாளர்கள் வெளிநடப்பு செய்தனர். மிச்சிகன், ஓகியோ, இன்டியானா, கென்டக்கி, மிசோரி, டென்னெஸ்சி மற்றும் நியூ யோர்க்கின் 35 உற்பத்தி ஆலைகள் மூடப்பட்டதால் இது ஜெனரல் மோட்டார்ஸிற்கு நாளொன்றுக்கு ஏறத்தாழ 400 மில்லியன் டாலர் உற்பத்தி இழப்பை ஏற்படுத்தும்.

வேலைநிறுத்தத்தைத் தடுப்பதற்கான ஐக்கிய வாகனத்துறை தொழிலாளர்கள் (UAW) சங்கத்தின் வெறித்தனமான முயற்சிக்கு மத்தியில், அதன் தலைவர்கள் —இவர்கள் ஏற்கனவே வாகனத்துறை நிறுவனங்களின் குற்றகரமான ஊழல் குற்றவாளிகளாக அம்பலமாகி உள்ள நிலையில்— ஒரு பாரிய வெளிநடப்பைத் தடுக்க முடியாதென தீர்மானித்தனர்.

UAW துணை தலைவர் டெர்ரி டீட்டெஸ் (Terry Dittes) ஒரு பத்திரிகையாளர் சந்திப்பில் இந்த வேலைநிறுத்த அறிவிப்பை அறிவித்தார். தளர்வுடன் உதறலோடும், டீட்டெஸ், ஒரு ஈமச்சடங்கு நிகழ்வில் கலந்து கொண்டவரைப் போல உரையாற்றினார்.

வெறும் ஒரு நாளுக்கு முன்னர் தான், UAW, அதே தொழிற்சங்கத்தைச் சேர்ந்த கட்டிட துப்பரவு தொழிலாளர்களின் மறியல் எல்லையை கடந்து செல்லுமாறு அதன் உறுப்பினர்களுக்கு அறிவுறுத்தி இருந்தது. வாகனத்துறை தொழிலாளர்களின் முழு பலத்தையும் அணித்திரட்டுவதைத் தவிர்க்க தங்களால் சிறப்பாக செய்ய முடிந்தவற்றைச் செய்யும் முயற்சியில், ஃபோர்ட் மற்றும் பியட்-கிறிஸ்லர் தொழிலாளர்களுக்கு அழைப்புவிடுக்க UAW மறுத்துவிட்டது.

ஜெனரல் மோட்டார்ஸ் நிறுத்தம், அமெரிக்காவிலும் சர்வதேச அளவிலும் வர்க்க போராட்டத்தின் ஒரு மிகப்பெரிய தீவிரப்படலாகும். கடந்தாண்டு ஆசிரியர்களிடம் இருந்து தொடங்கிய சக்தி வாய்ந்த சமூக இயக்கம் தொழில்துறை தொழிலாள வர்க்கத்திற்குள் விரிவடைந்து வருகிறது. தொழிற்சங்கங்கள், பெருநிறுவனங்கள் மற்றும் அரசின் ஒரு கூட்டணியில், தசாப்த காலமாக நீடிக்கப்பட்டு ஈவிரக்கமின்றி அமலாக்கப்பட்ட வர்க்கப் போராட்டம் மீதான ஒடுக்குமுறை சரிந்து வருகிறது.

தொழிலாளர்கள் இந்த போராட்டத்தைத் தொடங்குகையில், அவர்கள் தங்களின் போர் களத்தை ஆய்வுக்குட்படுத்தி, யார் அவர்களின் கூட்டாளிகள் யார் அவர்களின் எதிரிகள் என்பதைப் புரிந்து கொள்வதன் அடிப்படையில் ஒரு மூலோபாயத்தை அபிவிருத்தி செய்ய வேண்டும்.

55 பில்லியன் டாலர் சந்தை மூலதனத்துடன் அமெரிக்க முதலாளித்துவ பலத்தின் அடையாளமாக விளங்கும் ஜெனரல் மோட்டார்ஸைத் தொழிலாளர்கள் எதிர்த்து நிற்கிறார்கள். ஆனால் ஜெனரல் மோட்டார்ஸ் நிறுவனம் உலகெங்கிலும் மில்லியன் கணக்கான தொழிலாளர்கள் சம்பந்தப்பட்டுள்ள, பூகோளரீதியில் ஒருங்கிணைக்கப்பட்ட வாகனத் தொழில்துறையின் பாகமாக உள்ளது.

தொழிலாளர்களின் ஒவ்வொரு போராட்டத்திற்கும் ஓர் அரசியல் பரிமாணம் உள்ளது என்றாலும், குறிப்பாக இந்த விடயத்தில் அரசியல் மிகத் தெளிவாக உள்ளது. நாற்பதாண்டுகளாக, தொழிலாள வர்க்கத்தை விலையாக கொடுத்து, பெருநிறுவன இலாபங்களை அதிகரிப்பதற்கான ஜனநாயகக் கட்சி மற்றும் குடியரசுக் கட்சி நிர்வாகங்களினது முயற்சிகளில் இலக்காக வாகனத் தொழில்துறை இருந்துள்ளது.

நாற்பதாண்டுகளுக்கு முன்னர், 1979 இல், ஜிம்மி கார்ட்டரின் ஜனநாயகக் கட்சி நிர்வாகமும் மற்றும் ஜனநாயகக் கட்சி கட்டுப்பாட்டிலான காங்கிரஸ் சபையும், கிறைஸ்லர் பிணையெடுப்பு என்றழைக்கப்பட்டதற்கு தொழிலாளர்களின் பாரியளவிலான விட்டுக்கொடுப்புகளும் மற்றும் ஆலைமூடல்களும் அவசியப்படுவதாக வலியுறுத்தின. இதைத் தொடர்ந்து, குடியரசுக் கட்சி ரீகன் நிர்வாகம் PATCO விமான போக்குவரத்து கட்டுப்பாட்டாளர்களை நீக்கியது, அது ஒட்டுமொத்த தொழிலாள வர்க்கத்தின் மீதும் ஒரு மிகப்பாரிய தாக்குதலைத் தொடங்கியது.

2008 இல், ஒபாமா நிர்வாகம் அதன் வாகனத் தொழில்துறை சீர்திருத்தத்தின் பாகமாக புதிய ஆட்களுக்கான கூலிகளைப் பாதியாக குறைக்க வலியுறுத்தியது. ஒபாமாவின் கீழ் பாரிய வேலைநீக்கங்களும், ஆலைமூடல்கள் மற்றும் சம்பள வெட்டுக்களும் வாகன உற்பத்தியாளர்களுக்கு சாதனையளவிலான இலாபங்களுக்கு இட்டுச் சென்றது.

சமூக எதிர் புரட்சியின் நான்கு தசாப்தங்களில், ஜி.எம்., ஃபோர்ட் மற்றும் கிறைஸ்லர் வாகனத் துறையில் 600,000 வேலைகளை நீக்கியுள்ளனர், 158,000 வேலைகள் மட்டுமே எஞ்சியுள்ளன. புதிதாக பணியமர்த்தப்பட்ட வாகனத்துறை தொழிலாளியின் சம்பளம் பாதியாக குறைக்கப்பட்டுள்ளது.

தொழிலாளர்களை வறுமைக்குட்படுத்துவதன் மூலமாக பெருநிறுவன இலாபங்களை விரிவாக்குவதே முதலாளித்துவ அமைப்புமுறையின் அடிப்படை விதியாகும். இலாபங்கள் தேவலோக அமுதம் போல வானில் இருந்து விழுவதில்லை: அது தொழிலாள வர்க்கத்திடமிருந்து உற்பத்தி கட்டத்தில் பிழிந்தெடுக்கப்படுகிறது. உழைப்பு நிகழ்ச்சிப்போக்கின் மூலமாக தொழிலாளர்கள் உருவாக்கிய மதிப்பு அவர்களைச் சுரண்டும் முதலாளிகளுக்கு விநியோகிக்கப்படுகிறது.

இந்த அமைப்புமுறையின் நியாயமற்ற மற்றும் வெடிப்பார்ந்த தன்மை வாகனத்துறை செயலதிகாரிகளின் சம்பளங்களிலும், இலாபத்தின் வடிவில் முதலீட்டாளர்களுக்கு வினியோகிக்கப்படும் பில்லியன் கணக்கான டாலர்களிலும் எடுத்துக்காட்டப்படுகிறது.

அவரின் 21.87 மில்லியன் டாலர் வருடாந்தர சம்பளத்துடன் ஜிஎம் நிறுவன தலைமை நிறைவேற்று செயலதிகாரி மேரி பார்ரா, வாகனத்துறையின் ஒரு புதிய தொழிலாளி ஒரு வருடத்தில் என்ன சம்பாதிக்கிறாரோ, அதை, ஒரே நாளில் இரண்டு மடங்கு அதிகம் சம்பாதிக்கிறார். கடந்தாண்டு ஜிஎம் நிறுவனம் 11.8 பில்லியன் டாலர் இலாபத்தைப் பதிவு செய்தது. அது 2015 க்குப் பின்னர் இருந்து பங்கு வாங்கிவிற்றல்களில் 10 பில்லியன் டாலருக்கும் அதிகமாக செலவிட்டுள்ளது.

தொழிலாளர்களின் சம்பளம் மற்றும் சலுகைகளை மீண்டும் நிலைநிறுத்துவதற்கான தொழிலாளர்களின் கோரிக்கைகளைப் பூர்த்தி செய்ய ஜிஎம் நிறுவனத்திடம் பணம் இல்லை என்ற கூற்றுக்களை அவமதிப்புடன் வெறுத்து ஒதுக்க வேண்டும்.

பெறுநிறுவனங்கள், அரசு மற்றும் ஒட்டுமொத்தமாக முதலாளித்து அமைப்புமுறைக்கு எதிராக தொழிலாளர்கள் போராடிக்கொண்டிருக்கும் தருணத்தில், அவர்களின் மிகவும் தீர்க்கமான எதிரி அவர்களைப் பிரதிநிதித்துவம் செய்வதாக கூறிக் கொள்ளும் அமைப்பாகும் — கையூட்டு பெற்ற ஊழல்பீடித்த ஐக்கிய வாகனத்துறை தொழிலாளர்கள் சங்கம் (UAW).

தொழிலாளர்களின் நலன்களுக்கு UAW இனது முடிவில்லா காட்டிக்கொடுப்புகள், நிர்வாகத்திடமிருந்து மில்லியன் கணக்கான டாலர்கள் கையூட்டு பெற்ற ஒட்டுமொத்த தலைமையையும் சூழ்ந்துள்ள ஊழல் குளத்தில் உச்சத்தை அடைந்துள்ளன.

ஆலைமூடல்களில் இருந்து அற்பக்கூலிகள் மற்றும் பல அடுக்கு கூலிமுறை மற்றும் சலுகை முறைகள் வரையில் தொழிலாளர்கள் சண்டையிட்டு வரும் ஒவ்வொன்றும் UAW அமலாக்கிய விட்டுக்கொடுப்புகளின் விளைவாகும். இப்போது இது மாறிவிடும் என்று நம்புவது, மிகவும் அபாயகரமான பிரமைகளில் திருப்தி அடைவதாக இருக்கும்.

UAW நிர்வாகிகள் மில்லியன் கணக்கான டாலர் தொழிலாளர்களின் பணத்தை கொல்ஃப் பந்தாட்டம், சுருட்டுகள், மதுபானங்கள் மற்றும் விபச்சாரத்தில் செலவிட்டிருப்பதாக எடுத்துக்காட்டப்பட்டுள்ள அதேவேளையில், தொழிலாளர்களுக்கு வேலைநிறுத்த சம்பளமாக —இதுவும் முதல் வாரம் முழுவதும் வேலைநிறுத்தம் நடந்தால் மட்டுமே— வாரத்திற்கு அற்பமான 250 டாலர் கிடைக்கும் என்று UAW அறிவித்துள்ளது.

ஜிஎம் தொழிலாளர்கள் பல எதிரிகளை முகங்கொடுக்கிறார்கள் என்றாலும், அவர்களுக்கு மிகவும் சக்தி வாய்ந்த கூட்டாளிகளும் இருக்கிறார்கள்.

வாகனத்துறை தொழிலாளர்களுக்கு அமெரிக்க உழைக்கும் மக்களிடையே மிக அதிகளவில் ஆதரவும் அனுதாபமும் உள்ளது. வாகனத்துறை தொழிலாளர்கள் எவற்றுக்கு எதிராக போராடிக் கொண்டிருக்கிறார்களோ, நாடெங்கிலும் மில்லியன் கணக்கான தொழிலாளர்களும், அதே சுரண்டல் நிலைமைகளையே உணர்கிறார்கள், இவர்களின் சம்பளம் வெட்டப்பட்டுள்ளது சலுகைகள் அழிக்கப்பட்டுள்ளன, இவர்கள் கையாளும் எந்திரங்களை விட படுமோசமாக இவர்கள் கையாளப்படுகிறார்கள்.

ஜிஎம் தொழிலாளர்கள் ஒட்டுமொத்த அமெரிக்க வாகனத் தொழில்துறையை முடக்குவதற்கும் மற்றும் வாகனத்துறை முதலாளிமார்கள் மீது அதிகபட்ச பொருளாதார மற்றும் அரசியல் அழுத்தத்தைக் கொண்டு வருவதற்கும், அவர்களின் வேலைநிறுத்தத்தில் இணைய ஃபோர்ட் மற்றும் பியட் கிறைஸ்லரில் உள்ள அவர்களின் சகோதர சகோதரிகளுக்கு அழைப்பு விடுக்க வேண்டும்.

அதேயளவுக்கு முக்கியமாக, தொழிலாளர்கள் நாடெங்கிலும் மற்றும் உலகெங்கிலுமான தொழிலாளர்கள் மற்றும் இளைஞர்களின் ஆதரவுக்கு முறையீடு செய்ய வேண்டும்—இந்த ஆதரவு அவர்களுக்குத் தயாராக கிடைக்கக்கூடியதாகும்.

இந்த ஜிஎம் வெளிநடப்பானது ஓர் உலகளாவிய வேலைநிறுத்த அலையில் சமீபத்திய கட்டமாகும். அமெரிக்க வாகனத்துறை தொழிலாளர்களின் வேலைநிறுத்தம் தொழிலாள வர்க்கத்தின் ஒரு சர்வதேச இயக்கத்தின் பின்னணியில் கட்டவிழ்ந்து வருகிறது. கடந்த வாரம் தான், கொரியாவில் 8,000 ஜிஎம் தொழிலாளர்கள் வேலைநிறுத்தத்தில் இறங்கினார்கள், பிரெஞ்சு போக்குவரத்துறை தொழிலாளர்கள் பாரீஸ் சுரங்கப்பாதை போக்குவரத்தை முடக்கினர். கடந்தாண்டில், இந்தியா மற்றும் மெக்சிகோ வாகனத்துறை தொழிலாளர்கள் பலமான வேலைநிறுத்தங்களைத் தொடுத்திருந்தனர். பிரான்ஸ், போர்த்தோ ரிக்கோ மற்றும் ஹாங்காங்கில் தொழிலாளர்களும் இளைஞர்களும் அவர்களின் சமூக மற்றும் ஜனநாயக உரிமைகளைப் பாதுகாப்பதற்காக பாரிய ஆர்ப்பாட்டங்களில் இறங்கி உள்ளனர்.

இந்த போராட்டம், UAW துரோகிகளின் கட்டுப்பாட்டில் இருந்து வெளியில் எடுக்கப்பட்டால் மட்டுமே வெற்றி அடைய முடியும். தொழிலாளர்கள் அவர்களின் வேலைநிறுத்தத்தை ஒழுங்கமைக்கவும் விரிவாக்கவும் சாமானிய தொழிலாளர் குழுக்களைத் தேர்ந்தெடுக்க வேண்டும்.

இத்தகைய குழுக்கள் பின்வருவனவற்றைக் கோர வேண்டும்:

● ஊழல்பீடித்த UAW மற்றும் அவர்களுக்குக் கையூட்டு வழங்கிய பெருநிறுவனங்களின் சட்டவிரோத விட்டுக்கொடுப்புகளால் தசாப்தங்களாக இழந்த கூலிகளை மீட்டெடுக்க தொடங்குவதற்கு, சம்பளத்தில் 40 சதவீத உயர்வு.

பல அடுக்கு சம்பள முறையை நிறுத்துதல்! வேலையிடத்தில் சமத்துவம்! பகுதி நேர மற்றும் ஒப்பந்த தொழிலாளர்கள் உட்பட அனைத்து தொழிலாளர்களும் உடனடியாக உயர்மட்ட சம்பளம் மற்றும் சலுகைகளுக்குக் கொண்டு வரப்பட வேண்டும்.

வேலைகளை மீட்டமை! லார்ட்ஸ்டவுன் மற்றும் இதர மூடப்பட்ட ஆலைகளை மீண்டும் திறந்து, வேலையிலிருந்து நீக்கப்பட்ட மற்றும் பாதிக்கப்பட்ட தொழிலாளர்களை மீண்டும் வேலையில் நியமி. அனைத்து ஆலைமூடல்கள் மற்றும் வேலைநீக்கங்களை நிறுத்து!

ஓய்வூதியர்களை மதிக்க வேண்டும்! ஓய்வூதியர் மருத்துவ கவனிப்பு மற்றும் ஓய்வூதியங்களில் செய்யப்பட்ட அனைத்து வெட்டுக்களையும் திரும்பப் பெறு.

ஆலைகளில் ஜனநாயகம் வேண்டும்! உற்பத்தி, வேலையிட வேகம் மற்றும் பாதுகாப்பில் தொழிலாளர்களின் கட்டுப்பாடு வேண்டும்.

வேலைநிறுத்த சம்பளம் வாரத்திற்கு 750 டாலர்! AFL-CIO உடன் சேர்ந்து UAW பில்லியன் கணக்கான டாலர் சொத்துக்களைக் கட்டுப்பாட்டில் கொண்டுள்ளது, இவற்றை அவை கொண்டாட்டங்களுக்கு நிதி வழங்கவும் மற்றும் நிர்வாகிகளுக்கு ஆயிரக் கணக்கில் ஆறு இலக்க சம்பளங்கள் வழங்கவும் பயன்படுத்துகின்றன. சந்தாக்கள் மற்றும் ஓய்வூதிய திட்டங்களில் இருந்து சூறையாடிய இந்த ஆதாரவளங்கள் இப்போது பகிர்ந்தளிக்கப்பட வேண்டும்!

வாகனத்துறை தொழிலாளர் சிற்றிதழை வெளியிட்டு உலக சோசலிச வலைத் தளப் பிரசுரத்திற்கு உதவி வருகின்ற சோசலிச சமத்துவக் கட்சி (SEP), இந்த போராட்டத்தில் தொழிலாளர்களுக்கு முழு ஒத்துழைப்பு வழங்க உறுதியாக உள்ளது.

தொழிலாள வர்க்கத்தில் ஒரு புதிய போர்குணமிக்க சோசலிச தலைமையைக் கட்டமைக்க சோசலிச சமத்துவக் கட்சி அதனால் ஆன அனைத்தையும் செய்யும். தொழிலாளர்கள் அவர்களின் போராட்டத்தை ஒழுங்கமைப்பதிலும், நாடெங்கிலும் மற்றும் சர்வதேச அளவிலும் ஆதரவை அணித்திரட்டுவதில் உதவவும் அவர்களுக்கு அவசியமான தகவல்களை அது தொழிலாளர்களுக்கு வழங்கும்.

வாகனத்துறை தொழிலாளர்கள் இந்த மாபெரும் மற்றும் முக்கிய போராட்டத்தை நடத்தும் போது அவர்கள் முகங்கொடுக்கும் மூலோபாய பிரச்சினைகளை விவாதிக்க, சென்ற வாரம் 300 க்கும் அதிகமான தொழிலாளர்களை ஒருங்கிணைத்திருந்த, நமது வரவிருக்கும் இணையவழி கலந்தாலோசனை கூட்டத்தில் கலந்து கொள்ளுமாறு தொழிலாளர்களுக்கு நாம் அழைப்பு விடுக்கிறோம்.

WSWS Editorial Board