இந்தியா: வேலைநிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட்ட நூற்றுக்கணக்கான மதர்சன் வாகனத் தொழிலாளர்கள் காவல்துறையினரால் கைது செய்யப்பட்டனர்

Moses Rajkumar and Sasi Kumar
28 September 2019

மொழிபெயர்ப்பின் மூலக் கட்டுரையை இங்கே காணலாம்

சென்னையிலிருந்து 40 கிலோ மீட்டர் தொலைவிலுள்ள ஸ்ரீபெரும்புதூரில் இருக்கும் மதர்சன் தானியங்கி தொழில்நுட்பம் மற்றும் பொறியியல் (Motherson Automotive Technologies & Engineering-MATE) நிறுவனத்தில் வேலைநிறுத்தப் போராட்டத்தில் ஈடுபடும் நூற்றுக்குமதிகமான தொழிலாளர்கள் செப்டம்பர் 24 அன்று இருங்காட்டுக்கோட்டையில் இருக்கும் துணை தொழிலாளர் ஆணையர் அலுவலகத்துக்கு முன்னால் எதிர்ப்பு பேரணியை நடத்திக்கொண்டிருந்தபோது காவல்துறையினரால் கைதுசெய்யப்பட்டனர்.

இப்போது ஒரு மாதத்திற்கும் மேலாக மதர்சன் வாகனத் தொழிலாளர்களில் சுமார் 500 நிரந்தரத் தொழிலாளர்கள் வேலைநிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட்டுக்கொண்டிருக்கிறார்கள். அவர்களது புதிய தொழிற்சங்கமான செங்கை அண்ணா மாவட்ட ஜனநாயக தொழிலாளர் சங்கம் அங்கீகரிக்கப்படவேண்டும் என்றும் அத்துடன் ஊதிய உயர்வு மற்றும் கடுமையான வேலை நிலைமைகளை முடிவுக்கு கொண்டுவரவேண்டும் என்றும் கோரிவருகிறார்கள்.

கைதுசெய்யப்பட்ட மதர்சன் தொழிலார்கள் ஸ்ரீபெரும்புதூரில் உள்ள ஒரு திருமண மண்டபத்திற்கு ஒரு பேருந்துமூலம் கொண்டுவரப்பட்டு தடுப்புக்காவலில் வைக்கப்பட்டிருந்தனர் பின்னர் அதேநாள் மாலை அவர்கள் விடுவிக்கப்பட்டனர். பேருந்திலிருந்து தடுப்புக்காவல் வைக்கப்படும் மண்டபத்திற்கு நடந்துசெல்லும்பொழுது கைதுசெய்யப்பட்ட தொழிலாளர்கள் மதர்சன் நிர்வாகத்தையும், தொழிற்சங்க தலைவர்களையும், கெட்ட வார்த்தைகளில் திட்டிய காவல்துறையினரையும் கண்டித்து கோஷங்கள் எழுப்பினர். தொழிலாளர்கள் ஒரு ஊதிய உயர்வுக்காக கோரிக்கையை வைத்தனர், மேலும் அவர்கள் நிறுவனத்தின் அடக்குமுறைக்கு எதிரான அவர்களது சவாலை வெளிப்படுத்தினர். அத்துடன் அவர்களின் போராட்டம் வெற்றியை நோக்கிச் செல்ல வேண்டும் என்று விரும்பினர்.

நிறுவனத்தின் அடக்குமுறை நிலைமைகளை எதிர்த்து மதர்சன் தொழிலாளர்கள் ஒரு மாதத்திற்கு மேலாக நடத்திவரும் வேலைநிறுத்தப் போராட்டத்தை உடைப்பதற்கு மாநிலத்தில் ஆட்சி செய்யும் அனைத்து இந்திய அண்ணா திராவிட முன்னேற்ற கழகம் (அஇஅதிமுக) எடுத்த ஒரு முடிவாக காவல்துறையின் நடவடிக்கை இருந்தது. வேலைநிறுத்தப் போராட்டம் ஆரம்பிக்கப்பட்டதிலிருந்து 22 பயிற்சியாளர்கள் மற்றும் 33 தொழில் வல்லுநர்கள் வேலைநீக்கம் செய்யப்பட்டுள்ளனர் மேலும் 15 நிரந்தர தொழிலாளர்கள் இடைநீக்கம் செய்யப்பட்டுள்ளனர். கூடுதலாக அது, வேலைநிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட்ட 200 தொழிலாளர்களுக்கு “குற்றப்பத்திரிகையுடன் காரணம் காட்டும் அறிவிப்பினையும்” (“Charge sheet cum Show cause Notice”) அனுப்பியிருக்கிறது.

நிறுவனத்தின் மற்றும் அரசாங்கத்தின் அடக்குமுறையை முகம்கொடுக்கும் மதர்சன் தொழிலாளர்களின் வேலைநிறுத்தப் போராட்டமானது ஆபத்தில் உள்ளது. இதை எதிர் கொள்ள வேண்டுமாயின், தொழிலாளர்கள் போராட்டத்தை விரிவுபடுத்த ஸ்ரீபெரும்புதூரிலும், இந்தியா முழுவதும் மற்றும் சர்வதேச அளவிலும் மற்ற வாகன தொழிற்சாலைகளிலுள்ள அவர்களது வர்க்க சகோதர சகோதரிகளின் ஆதரவினை அணிதிரட்ட வேண்டும். இருந்தபோதிலும், புதிய தொழிற்சங்கம் இணைந்த, அகில இந்திய மத்திய தொழிற்சங்கங்களின் கவுன்சில் (AICCTU), வேலைநிறுத்தப் போராட்டத்தின்போது நிறுவனத்தின் உற்பத்தியை பராமரிப்பதில் பயன்படுத்தப்படும் ஒப்பந்த மற்றும் தற்காலிக தொழிலாளர்களை அணிதிரட்டுவதற்கு மறுத்துவிட்டது. அதுமட்டுமல்லாமல் வேலைநிறுத்தப் போராட்டத்தில் இருக்கும் தொழிலாளர்களுக்கு ஆதரவு தருவதில் மற்ற இடங்களிலிருக்கும் மதர்சன் தொழிற்சாலைகளின் தொழிலாளர்களையும் அணிதிரட்டவில்லை. அதற்குப்பதிலாக வேலைநிறுத்தத்தை உடைப்பதற்கு அவர்களைப் பயன்படுத்தவேண்டாம் என்று நிறுவனத்திடம் பரிதாபமாக கோரியுள்ளது.

AICCTU தலைவர்களின் நோக்குநிலை தொழிலாள வர்க்கத்தின் பக்கம் இல்லை, மாறாக தொழிலாள வர்க்கத்திற்கு எதிரான மோசமான பதிவுகளை கொண்டுள்ள மேலும் மதர்சனில் வேலைநிறுத்தத்தில் ஈடுபட்டுள்ள தொழிலாளர்களை தாக்குதவற்காக காவல்துறையை ஏவியிருக்கும் அஇஅதிமுக அரசாங்கத்தின் தொழிலாளர் துறையை சார்ந்திருக்கிறது. செப்டம்பர் 24 அன்று அவர்களுடைய கோரிக்கைகளை நிறைவேற்றுவதற்கு துணை தொழிலாளர் ஆணையர் தலையீடு செய்யுமாறு வேண்டுகோள் விடுக்க, வேலைநிறுத்தம் செய்யும் தொழிலாளர்களை AICCTU வழிகாட்டியிருக்கிறது.

இதற்கிடையில், தொழிலாளர்கள் பாதிக்கப்படக்கூடாது எனும் துணை தொழிலாளர் ஆணையரின் ”அறிவுரையை” ஏற்க மதர்சன் மறுத்துவிட்டது. செப்டம்பர் 24 அன்று பேச்சுவார்த்தை தோல்வி அடைந்த பின்னர், அக்டோபர் 1 அன்று துணை தொழிலாளர் ஆணையருக்கு முன்னால் பேசுவதற்கு திட்டமிடப்பட்டுள்ளது. யூன் மாதத்தில், வாகன உதிரிப்பாகங்கள் தயாரிப்பை ஒரு “பொதுப் பயன்பாட்டு சேவை” என அஇஅதிமுக அரசு அறிவித்துள்ளதுடன் அந்த துறையில் வேலைநிறுத்தப் போராட்டங்களை திறம்பட தடைசெய்துள்ளது. ஆகஸ்ட் 1 அன்று, சென்னை உயர் நீதிமன்றம் அரசாங்கத்தின் முடிவிற்கு இடைக்கால தடையினை வழங்கி தற்காலிகமாக அதன் செயற்பாட்டை நிறுத்திவைத்துள்ளது. இருந்தபோதிலும், வாகன தொழில்துறையில் வேலைநிறுத்தங்களுக்கு எதிரான அச்சுறுத்தல் இருக்கவே செய்கிறது.

மதர்சன் வேலைநிறுத்தப் போராட்டத்திலிருக்கும் AICCTU வின் கொள்கைகள் அது இணைந்திருக்கும் அரசியல் கட்சியிலிருந்து வருகிறது. அதாவது, இந்திய மாவோயிச கம்யூனிஸ்ட் கட்சி (மார்க்சிஸ்ட் லெனினிஸ்ட்) — விடுதலை [சிபிஐ (எம்எல்) - விடுதலை]. இந்த சிபிஐ (எம்எல்) — விடுதலை ஸ்ராலினிச இந்திய கம்யூனிஸ்ட் கட்சி (மார்க்சிஸ்ட்) அல்லது சிபிஎம் மற்றும் இந்திய கம்யூனிஸ்ட் கட்சி (சிபிஐ) ஆகிய பாராளுமன்றை கட்சிகளுடன் கூட்டணி வைத்திருக்கிறது. தொழிலாள வர்க்கத்தை அரசியல் ரீதியாக இந்திய முதலாளித்துவ வர்க்கத்தின் பாரம்பரிய கட்சியான காங்கிரஸ் மற்றும் பல்வேறு பிராந்தியவாத முதலாளித்துவக் கட்சிகளுக்கு பின்னால் அடிபணியச் செய்வதில் சிபிஎம் மற்றும் சிபிஐ நீண்டகாலமாக துரோகப் பாத்திரத்தை ஆற்றியுள்ளது.

ஸ்ராலினிஸ்டுகள் 1991 முதல் பாஜக (ஆளும் இந்து மேலாதிக்க பாரதிய ஜனதா கட்சி) அல்லாத பெரும்பாலும் சமூக ரீதியாக தீங்கு விளைவிக்கும் நவ-தாராளவாத பொருளாதாரக் கொள்கைகளைக் கொண்டிருந்த காங்கிரஸ் தலைமையிலான அனைத்து அரசாங்கங்களையும் ஆதரித்துள்ளனர். அவர்களின் ஸ்ராலினிச எஜமானர்களுக்கு ஏற்ப சிபிஐ (எம்எல்)—விடுதலை ஏப்ரல்-மே 2019 இல் நடந்த பொதுத் தேர்தலில் காங்கிரஸ் கட்சியை ஆதரித்திருந்தது. “எதிர் கட்சியின் ஒவ்வொரு வாக்குகளும் ஒருங்கிணைத்து பலப்படுத்தப்படவேண்டும் மேலும் பிஜேபிக்கு (ஆளும் இந்துமேலாதிக்க பாரதிய ஜனதாக் கட்சி) வரவிருக்கும் தேர்தல்களில் மிகப்பெரும் தோல்வியை கொடுக்கவேண்டும்” என்று வாதிட்டு சிபிஐ (எம்எல்)—விடுதலை காங்கிரஸுக்கு அதன் ஆதரவை நியாயப்படுத்த முயன்றது.

வட இந்திய மாநிலமான ஹரியானாவில் உள்ள மானேசர் கார் அசெம்பிளி ஆலையில் மாருதி சுசுகி தொழிலாளர்களின் வீரப் போராட்டத்திலிருந்து மதர்சன் தொழிலாளர்கள் கற்றுக்கொள்ள வேண்டும். தொழிலாளர்கள் 2011ல் வேலைநிறுத்தங்கள் மற்றும் ஆலை ஆக்கிரமிப்புகள் உட்பட தொடர்ச்சியான போர்க்குணமிக்க போராட்டங்களை மேற்கொண்டனர், அதிக ஊதியங்கள் மற்றும் சிறந்த நிலைமைகளைக் கோரி, மிக முக்கியமாக ஒப்பந்த தொழிலாளர் முறைக்கு எதிராக போரிட்டனர்.

இதற்கு பதிலளிக்கும் விதமாக அவர்கள் 2012 நடுப்பகுதியில் இருந்து ஒரு மோசமான நிறுவன-அரசாங்க கூட்டு பழிவாங்கலை எதிர்கொண்டனர். அது ஜூலை 2012 இல் தொழிற்சாலையில் நிறுவனத்தால் தூண்டப்பட்ட கைகலப்பு, தீ விபத்து மற்றும் நிறுவனத்தின் மனிதவள மேலாளரின் மரணத்திற்கு வழிவகுத்தது, இந்த சம்பவத்தை பயன்படுத்தி மானேசர் தொழிலாளர்களுக்கு எதிராக ஒரு பெரிய சூனிய வேட்டை கட்டவிழ்த்து விடப்பட்டது.

நிறுவனம் வழங்கிய பட்டியல்களின் அடிப்படையில் சுமார் 2,400 தொழிலாளர்கள் பணிநீக்கம் செய்யப்பட்டனர், மேலும் 150 தொழிலாளர்கள் காவல்துறையினரால் கைது செய்யப்பட்டனர். ஒரு நிறுவன-அரசாங்க கூட்டு கட்டமைப்பின் செயல்பாட்டில், 13 தொழிலாளர்களுக்கு போலி கொலைக் குற்றச்சாட்டில் 2017 மார்ச் மாதம் ஆயுள் தண்டனை விதிக்கப்பட்டது.

13 பேரில் 12 பேர் மாருதி சுசுகி தொழிலாளர் சங்கத்தின் (MSWU) நிர்வாகக் குழுவில் உறுப்பினர்களாக இருந்தனர், இது கம்பெனி-பொம்மை தொழிற்சங்கத்தை மீறி மானேசர் தொழிலாளர்களால் உருவாக்கப்பட்ட சுயாதீன தொழிற்சங்கம்.

மாருதி சுசுகி தொழிலாளர்களின் அனுபவம் முதலாளித்துவ அரசின் அனைத்து பிரிவுகளின் —அரசாங்கங்கள், காவல்துறை, நீதிமன்றங்கள்— ஒற்றுமையை நிரூபித்தது, தொழிலாளர்களுக்கு எதிராக நிறுவனத்துடன் ஒத்துழைத்து தொழிலாளர்களின் போராட்டத்தை உடைக்க உதவியது. அந்த தொழிலாளர்களின் போராட்டம் இந்திய மற்றும் உலக மூலதனத்தின் மலிவு கூலி உழைப்பு சுரண்டலை சவால் செய்தது.

காங்கிரஸ் கட்சி தலைமையிலான மாநில அரசின் கீழ் தான் மாருதி சுசுகி தொழிலாளர்கள் மீது ஆரம்ப தாக்குதல் நடத்தப்பட்டது. ஆயினும்கூட, சிபிஐ (எம்எல்) கடந்த பொதுத் தேர்தலில் காங்கிரஸை ஆதரித்தது.

உலக சோசலிச வலைத் தளம் மதர்சன் தொழிலாளர்கள் வேலைநிறுத்தம் குறித்த முந்தைய இரண்டு கட்டுரைகளை வெளியிட்டு, ஊடகங்களின் இருட்டடிப்பை உடைத்தது மற்றும் தொழிலாளர்களுக்கு எதிரான நிறுவனத்தின் அடக்குமுறை நடவடிக்கைகளை அம்பலப்படுத்தியது.

இது AICCTU மற்றும் CPI (ML) – இன் துரோகப் பாத்திரத்தையும் அம்பலப்படுத்தியது, தொழிலாளர்கள் அந்த துரோகக் கட்சிகள் மற்றும் இணைந்த தொழிற்சங்கங்களிலிருந்து விலகி, போராட்டத்தை தங்கள் கைகளில் எடுத்துக்கொள்ள தங்கள் சொந்த சுயாதீன நடவடிக்கைக் குழுக்களை அமைக்குமாறு அழைப்பு விடுத்தது.

அமெரிக்க ஜெனரல் மோட்டார்ஸ் தொழிலாளர்களின் வேலைநிறுத்தத்தால் நிரூபிக்கப்பட்டபடி, மதர்சன் வேலைநிறுத்தம் வர்க்கப் போராட்டத்தின் வளர்ந்து வரும் சர்வதேச எழுச்சியின் ஒரு பகுதியாகும் என்றும், உலக வாகன நிறுவனங்களுக்கு எதிராக தொழிலாளர்களின் ஒருங்கிணைந்த போராட்டத்தின் அவசியத்தை வலியுறுத்தியதாகவும் WSWS விளக்கியது.

இந்தியாவில் WSWS ஆதரவாளர்கள் வேலைநிறுத்தம் செய்யும் மதர்சன் தொழிலாளர்கள் மத்தியில் தொடர்ந்து தலையிட்டு, வேலைநிறுத்தம் குறித்த WSWS கட்டுரைகளின் நகல்களை விநியோகித்து, அவர்களின் போராட்டத்தை எதிர்கொள்ளும் அரசியல் பிரச்சினைகள் குறித்து விவாதிக்கின்றனர். WSWS க்கு மதர்சன் தொழிலாளர்களின் வளர்ந்து வரும் ஆதரவு மற்றும் உற்சாக வரவேற்பு நிலைமைகளின் கீழ், AICCTU தலைவர்கள் பதட்டமடைந்துள்ளனர்.

WSWS கட்டுரைகளைப் படிப்பதைத் தடுக்க ஒரு சில தொழிற்சங்க அதிகாரிகளால் பயனற்ற முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. செப்டம்பர் 24 அன்று திருமண மண்டபத்தில் தடுப்புக்காவலில் இருந்து விடுவிக்கப்பட்ட மதர்சன் தொழிலாளர்களுக்கு WSWS ஆதரவாளர்கள் துண்டு பிரசுரங்களை விநியோகித்தனர், அப்போது, சில தொழிற்சங்க நிர்வாகிகள் WSWS பிரசுரங்களை வாங்க வேண்டாம் என்றும் அதில் "நிறைய பொய்களை" கூறியிருக்கிறார்கள் என்றும் கூறினர்.

ஆயினும்கூட, இருநூறுக்கும் மேற்பட்ட WSWS பிரசுரங்கள் விநியோகிக்கப்பட்டன, அவற்றுக்கு மதர்சன் தொழிலாளர்களிடமிருந்து நல்ல வரவேற்பு கிடைத்தது. அவர்களை அச்சுறுத்துவதற்கான தொழிற்சங்க நிர்வாகிகளின் முயற்சிகளை சவால் செய்த WSWS நிருபர்கள், வேலைநிறுத்தம் செய்யும் தொழிலாளர்கள் ஏன் தனிமைப்படுத்தப்பட்டனர், ‘மதர்சன்’ தொடர்ந்து உற்பத்தி செய்வதைத் தடுக்க வேலைநிறுத்த நடவடிக்கையில் எஞ்சிய தொழிலாளர்கள் ஏன் அணிதிரட்டப்படவில்லை என்று கேட்டனர். WSWS ஆதரவாளர்களிடமிருந்து துண்டுப்பிரசுரங்களை தொழிலாளர்கள் வாங்குவதை தடுக்கும் முயற்சிகளுக்கு பதிலளித்தனர், "பாசிச ஆர்எஸ்எஸ் / பிஜேபியைப் பின்பற்ற முயற்சிப்பதை நிறுத்துங்கள்." என்று உரக்க கூறினர்.

வேலைநிறுத்தத்தில் AICCTU இன் பங்கு பற்றிய விமர்சனங்களை குழுவாக திரண்ட தொழிலாளர்களுக்கு WSWS ஆதரவாளர்கள் விளக்கினர். இதற்கிடையில், தொழிற்சங்க நிர்வாகிகள் தங்கள் சொந்த வெளியீடுகளில் WSWS விமர்சனங்களுக்கு பதிலளிக்க சவால் விட்டனர்.

அதே நேரத்தில், முதலாளித்துவ ஊடகங்கள், மதர்சன் தொழிலாளர்களின் ஒரு மாதத்திற்கும் மேலான வேலைநிறுத்தத்தைப் பற்றிய எந்தவொரு தகவலையும் கிட்டத்தட்ட முற்றிலுமாக இருட்டடிப்பு செய்துள்ளன, சிபிஐ (எம்.எல்) - விடுதலை மற்றும் ஏ.ஐ.சி.சி.டி.யு உள்ளிட்ட ஸ்ராலினிச மற்றும் மாவோயிச வலைத் தளங்களும் இதுவரை செய்திகளை வெளியிடவில்லை.

WSWS க்கு தொழிலாளர்கள் அளித்த ஆதரவை கண்டு முகம் சிவந்து போன தொழிற்சங்க நிர்வாகிகள், "நாங்கள் கருத்து வேறுபாடுகளை விவாதிக்கலாம், உங்களுக்கு கருத்து சுதந்திரம் உண்டு" என்று கூறி பின்வாங்கினர்.

மதர்சன் தொழிலாளர்கள் தங்களது கோரிக்கைகளுக்காக போராடுவதில் முக்கிய பங்கு வகித்த ஒரு தொழிலாளி, WSWS நிருபர்களிடம் பேசியபின் WSWS நிலைப்பாட்டிற்கு சாதகமாகப் பேசினார்: “இப்போது உங்கள் நோக்குநிலையை நான் புரிந்து கொண்டேன். தொழிலாள வர்க்கத்தின் பங்கைப் பற்றி நீங்கள் பேசும் விதம் எனக்கு பிடித்திருக்கிறது. எங்கள் வேலைநிறுத்தம் குறித்த செய்திகளை அவர்கள் ஏன் அவர்களது சொந்த வலைத் தளத்திலும் அச்சு ஊடகங்களிலும் வெளியிடவில்லை என்று எங்கள் தொழிற்சங்கத்திடம் நான் கேட்பேன்.” என்றார் .

தொழிலாளர்களின் கோரிக்கைகளை வென்றெடுப்பதற்காக இறுதிவரை போராடுவதில் தான் உறுதியாக இருப்பதாக அந்த இளம் தொழிலாளி கூறினார்: “எங்கள் போராட்டம் முக்கியமானது; வருங்கால தலைமுறையின் முன்னேற்றத்திற்கான போராட்டமாக இதை நான் பார்க்கிறேன்"