பொலிவியாவில் அமெரிக்க ஆதரவிலான ஆட்சிக்கவிழ்ப்பு சதி

13 November 2019

மொழிபெயர்ப்பின் மூலக் கட்டுரையை இங்கே காணலாம்

தென் அமெரிக்காவின் மிக வறிய நாடான பொலிவியாவில் ஞாயிறன்று ஜனாதிபதி இவோ மோராலெஸ் (Evo Morales), துணை ஜானதிபதி அல்வாரோ கார்சியா லினெரா (Álvaro García Linera) மற்றும் பல அமைச்சர்களும், அரசு ஆளுநர்களும் மற்றும் அரசு அதிகாரிகளும் இராஜினாமா செய்ய இட்டுச் சென்றுள்ள அமெரிக்க-ஆதரவிலான ஆட்சிக்கவிழ்ப்பு சதியை அடுத்து, அந்நாடு ஓர் உள்நாட்டு போரின் விளிம்பிற்குச் சென்று கொண்டிருக்கிறது.

மோராலெஸ், கார்சியா லினெரா மற்றும் ஏனையவர்களும் மெக்சிகோவில் தஞ்சம் கோருவதற்காக அந்நாட்டை விட்டு தப்பியோடி உள்ள நிலையில், பொலிவிய தொழிலாளர்களும், விவசாயிகளும் மற்றும் அவர்கள் பிரதிநிதித்துவம் செய்வதாக காட்டிக்கொள்ளும் பழங்குடி பெரும்பான்மையினரும் தான் வீதிகளில் இறங்கி உள்ள கனரக ஆயுதமேந்திய துருப்புகள் மற்றும் பாசிசவாத குழுக்களை எதிர்கொள்ள விடப்பட்டுள்ளனர்.

இலத்தீன் அமெரிக்க தொழிலாள வர்க்கம் “இடது" முதலாளித்துவ தேசியவாத ஆட்சிகளின் வழிவகைகள் மூலமாக அல்ல, மாறாக அதன் சொந்த சுயாதீனமான புரட்சிகரப் போராட்டத்தின் மூலமாக மட்டுமே அதன் நலன்களை முன்னெடுக்க முடியும் என்ற கசப்பான படிப்பினை மீண்டுமொருமுறை இரத்தத்தால் எழுதப்பட்டு வருகிறது.

ஆயிரக் கணக்கான தொழிலாளர்களும் இளைஞர்களும் La Paz மற்றும் தொழிலாள வர்க்க அண்டைபகுதி மாவட்டமான எல் அல்டொவின் வீதிகளில் இறங்கி அந்த ஆட்சிக்கவிழ்ப்பு சதிக்கு தைரியமான எதிர்ப்பைக் காட்டியுள்ளனர், எல் அல்டொ மாவட்டத்தில் அவர்கள் பொலிஸ் நிலையங்களைத் தீயிட்டு கொளுத்தி, பாதுகாப்புப் படைகளை எதிர்த்தனர். ஏனைய இடங்களில், சுரங்க தொழிலாளர்களும் விவசாயிகளும் நெடுஞ்சாலைகளை முடக்கி உள்ளனர், ஆட்சிக்கவிழ்ப்பை எதிர்க்கும் போராட்டக்காரர்கள் நிஜமான குண்டுகளால் சுட்ட மற்றும் கண்ணீர் புகை கையெறி குண்டுகளை வீசிய கனரக ஆயுதமேந்திய துருப்புகளை எதிர்த்தனர். கோசாபாம்பாவில், கூட்டத்தின் மீது சுடுவதற்காக இராணுவம் ஒரு ஹெலிகாப்டரை கொண்டு வந்தது. உயிரிழந்தவர்கள் மற்றும் காயமடைந்தவர்களின் எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்து உள்ளது.

மோராலெஸ் க்கு எதிராக பாசிசவாத எதிர்ப்பாளர்களின் பயங்கரவாத அட்டூழியங்களும் இராணுவ-பொலிஸ் வன்முறையுடன் சேர்ந்துள்ளது, அவர்கள் அரசாங்கத்துடன் தொடர்புடையவர்களின் வீடுகளைத் தீயிட்டு கொளுத்தியதுடன், அதிகாரிகளின் குடும்ப உறுப்பினர்களைக் கடத்தி சென்றனர் மற்றும் சோசலிச கட்சியைச் (MAS) சார்ந்த மோராலெஸ் இயக்கத்துடன் தொடர்புபட்டவர்களுக்கு எதிராக வன்முறையான தாக்குதலை நடத்தினர், அத்துடன் தாக்குவதில் பழங்குடி மக்களையும், முக்கியமாக பெண்களையும், இலக்கில் வைத்திருந்தனர். சமூக அமைப்புகளின் தலைமையகங்கள் தாக்கப்பட்டுள்ளன, வானொலி நிலையங்கள் ஆக்கிரமிக்கப்பட்டு, ஒலிபரப்பு நிறுத்தப்பட்டுள்ளது.

சர்ச்சைக்குரிய அக்டோபர் 20 ஆம் தேதி ஜனாதிபதி தேர்தல் சம்பந்தமாக மூன்று வாரகால போராட்டங்களுக்குப் பின்னர், ஒட்டுமொத்த இராணுவ தளபதிகளும் சூழ்ந்திருக்க, ஆயுதப்படையின் தலைமை தளபதி வில்லியம்ஸ் கலிமனின் ஞாயிற்றுக்கிழமை தொலைக்காட்சி உரையுடன் அந்த ஆட்சிக்கவிழ்ப்பு சதி முழுமைப்படுத்தப்பட்டது, அதில் அவர்கள் "அறிவுறுத்துகையில்", “ஜனாதிபதி அவரின் அதிகாரத்தை இராஜினாமா செய்துள்ளார், பொலிவியாவின் நன்மைக்காக அமைதியையும் ஸ்திரப்பாட்டை மீளஸ்தாபிக்கவும் அனுமதியுங்கள்,” என்றனர்.

மோராலெஸ் மற்றும் கார்சியா லினெராவும், "இரத்தக்களரியை தவிர்ப்பதற்கும்" மற்றும் "அமைதிக்கு உத்தரவாதம் அளிக்கவுமே" அவர்கள் அவ்வாறு செய்வதாக கூறி, அந்த "ஆலோசனையை" ஏற்றுக் கொண்டனர். இராணுவத்திடம் அவர்கள் சரணாகதி அடைவது தான் அவர்களின் நோக்கமாக இருந்ததென்றால், பொலிவிய உரிமை மோசமாக தோல்வி அடைந்துள்ளது.

மொராலெஸ் பதவியிலிந்து வெளியேற்றப்பட்டதை "மேற்கு அரைக்கோளத்தில் ஜனநாயகத்திற்குரிய முக்கிய தருணம்" என்பதாக அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் புகழ்ந்துரைத்தார், இது வெனிசுவேலாவுக்கும் நிக்கரகுவாவுக்கும் அடுத்த எச்சரிக்கையாகும்.

ஆனால் இது விடயத்தில் ட்ரம்ப் மட்டுமல்ல. நியூ யோர்க் டைம்ஸ் மற்றும் வாஷிங்டன் போஸ்ட் இரண்டுமே அந்த ஆட்சிக்கவிழ்ப்பு சதியை ஆதரித்தும், அது "ஜனநாயகத்திற்கு" ஒரு அடி என்றும், மொராலெஸை வெளியேற்றுவதில் இராணுவம் வகித்த பாத்திரம் வெறுமனே தற்செயலானது என்றும் செவ்வாய்கிழமை தலையங்கங்கள் பிரசுரித்தன.

ஜோர்ஜ் டபிள்யூ. புஷ்ஷின் கீழ் வெனிசுவேலாவில் ஹூகோ சாவேஸுக்கு எதிராக இடையிலேயே கருக்கலைக்கப்பட்ட 2002 ஆட்சிக்கவிழ்ப்பு சதியிலிருந்து (இதை டைம்ஸ் காலத்திற்கு முந்தியே புகழ்ந்து கொண்டாடியது) 2009 இல் பராக் ஒபாமாவின் கீழ் ஹோண்டுராஸில் அமெரிக்காவின் ஆதரவில் ஜனாதிபதி மானுவல் ஜெலாயா (Manuel Zelaya) தூக்கியெறியட்டது வரையில், ட்ரம்பின் கீழ் மொராலெஸ் இன்று வெளியேற்றப்பட்டது வரையில், ஜனநாயக கட்சி மற்றும் குடியரசு கட்சியின் கீழ் ஒரே மாதிரியாக, இலத்தீன் அமெரிக்காவில் அடிப்படையில் வாஷிங்டனின் ஏகாதிபத்திய கொள்கை தொடரப்பட்டு வருவதையே இது பிரதிபலிக்கிறது.

இந்த தொடர்ச்சியின் அடியிலிருப்பது, குறிப்பாக அதன் "சொந்த கொல்லைப்புறமாக" அது நீண்டகாலமாக கருதி வந்துள்ள அப்பிராந்தியத்தில், அமெரிக்க ஏகாதிபத்தியத்தின் உலகளாவிய பொருளாதார மேலாதிக்கத்தின் வீழ்ச்சியை இராணுவ பலம் மற்றும் வன்முறை வழிவகைகள் மூலமாக தலைகீழாக்குவதற்கான அதன் முனைவாகும். உலகின் லித்தியத்தில் 70 சதவீதத்தை உள்ளடக்கி உள்ள, குறைந்தபட்சம் பொலிவியாவின் பரந்த எரிசக்தி மற்றும் கனிம ஆதாரவளங்கள் மட்டுமின்றி, இலத்தீன் அமெரிக்காவின் ஆதாரவளங்கள் மற்றும் சந்தைகள் மீது கட்டுப்பாடின்றி உரிமைகோரலை நிறுத்துவதற்கான அமெரிக்காவின் எல்லை கடந்த பன்னாட்டு நிறுவனங்களின் பேராசைகளாலும், அப்பிராந்தியத்தில் கடந்தாண்டு 306 பில்லியன் டாலருக்கு வர்த்தகம் மேற்கொண்டுள்ள சீனாவுக்கும் அமெரிக்க ஏகாதிபத்தியத்திற்கும் இடையிலான மூலோபாய மோதல் மூலமாகவும் இது இரண்டு விதத்திலும் முன்நகர்ந்து கொண்டிருக்கிறது.

மொராலெஸின் அரசாங்கம், 1998 இல் ஹூகோ சாவேஜில் இருந்து தொடங்கி, இலத்தீன் அமெரிக்காவில் அதிகாரத்திற்கு வந்த இடது-தோரணை கொண்ட முதலாளித்துவ தேசியவாத அரசாங்கங்களின் "ரோஜா வண்ண பேரலை" என்றழைக்கப்பட்டதன் பாகமாக இருந்தது.

சாவேஸ் போலவே, மொராலெஸூம் "பொலிவிய புரட்சி" மற்றும் சோசலிசத்தின் ஆதரவாளராக தன்னை அறிவித்துக் கொண்டார். 2000 மற்றும் 2005 க்கு இடையே குடிநீர் தனியார்மயமாக்கலுக்கு எதிராக மற்றும் எரிவாயுவைத் தேசியமாக்குவதற்காக குடிநீர் மற்றும் எரிவாயு "போர்கள்" என்றழைக்கப்பட்ட "போர்களின்" போது பொலிவியாவை உலுக்கிய மற்றும் அடுத்தடுத்து வெற்றி பெற்று வந்த அரசாங்கங்களைப் பதவியிலிருந்து கீழிறக்கிய புரட்சிகர எழுச்சிகளின் அலை மீது தான் மொராலெஸூம் MAS உம் பதவிக்கு வந்தனர்.

கோக்கா உற்பத்தியாளர்களின் சங்கத்தின் தலைவரும் அந்நாட்டில் நீண்டகாலமாக ஒடுக்கப்பட்டு வந்த பழங்குடி மக்களில் இருந்து வந்த முதல் பொலிவிய ஜனாதிபதியுமான மொராலெஸ், ஓர் அரசாங்கம் அமைக்க பரந்த மக்களின் ஆதரவை வென்றார், அந்த அரசாங்கமோ பொலிவிய மக்களின் புரட்சிகர போராட்டங்களைக் கட்டுப்படுத்துவதற்கான வாகனமாக சேவையாற்றியது.

எவ்வாறிருப்பினும் அந்த அரசாங்கத்தின் நோக்கம் உண்மையிலேயே சோசலிசம் கிடையாது என்பதையும், மாறாக பொலிவியாவின் எரிவாயு மற்றும் ஏனைய இயற்கை வளங்களைச் சுரண்டுவதற்கு முன்பினும் அதிக அணுகுதலுக்கு உத்தரவாதங்களைப் பெற்றிருந்த எல்லைக் கடந்த பன்னாட்டு பெருநிறுவனங்கள் மீது புதிய வரிகளைத் திணித்த "தேசியமயமாக்கல்களை" உள்ளடக்கிய "அண்டியன்-அமசோனியன் முதலாளித்துவம்,” (Andean-Amazonian capitalism) என்பதாகும் என்பதை அது விரைவிலேயே வெளிப்படுத்தியது.

எல்லை கடந்த பன்னாட்டு மூலதனத்துடனான அதன் கூட்டணிக்குக் கூடுதலாக, மொராலெஸ் அரசாங்கம் விவசாய செல்வந்த தட்டுடனும் ஓர் உடன்படிக்கை செய்திருந்தது. அவ்விரண்டுக்குமே, முன்னர் பழங்குடியின மக்களைப் பாதுகாப்பதற்காக தேசிய பூங்காக்கள் என்று அறிவிக்கப்பட்டிருந்த நிலங்களை சுவீகரிப்பதற்கான உரிமைகள் வழங்கப்பட்டன.

அரசாங்கம், “இராணுவ-விவசாய கூட்டணி" என்று எதை விவரித்ததோ அதையும் சார்ந்திருந்தது, அதன் மூலமாக தான் அது இராணுவக் கட்டளையகத்தின் ஆதரவைத் இறுக்க முனைந்தது, இதற்காக அது பொருளாதாரத்தின் சில பிரிவுகள் மீது அதற்கு கட்டுப்பாட்டை வழங்கியதுடன், அதன் சொந்த வியாபாரங்கள் மற்றும் தாராள ஆதாயங்களை உருவாக்குவதற்காக ஆதாரவளங்களையும் வழங்கியது. அது "ஏகாதிபத்திய-எதிர்ப்பு இராணுவ பள்ளியை" உருவாக்கியதுடன், சிப்பாய்கள் “Hasta la victoria siempre” என்ற குவாராயிச கோஷத்துடன் அவர்களின் அதிகாரிகளுக்கு வீரவணக்கம் செய்வித்தது. இறுதியில், மொராலெஸ் ஒருபோதும் கலைத்து விட்டிராத முதலாளித்துவ ஆயுதப்படை, பென்டகனின் அமெரிக்காக்களின் பயிலகத்தின் தேசிய பாதுகாப்பு அரசு கோட்பாடு மீதும், தளபதிகள் ஹூகோ பான்செர் (Hugo Banzer) மற்றும் லூயிஸ் கார்சியா மெசாவின் பாசிசவாத-இராணுவ சர்வாதிகாரங்கள் மீதும் இருந்த அதன் வேர்களுக்கு விசுவாசத்தை நிரூபித்தது.

மொராலெஸ் அரசாங்கத்தின் வலதுசாரி கொள்கைகள் தொழிலாள வர்க்கம் மற்றும் விவசாயிகளுடன் தொடர்ந்து மோதல்களுக்கு இட்டுச் சென்றதுடன், அதன் ஆதரவையும் அரித்தது. அதன் எதிர்புரட்சிகர நோக்கங்களுக்காக மக்கள் அடித்தளத்தை வெல்வதற்கு — அரசியலமைப்பை மீறியும் மற்றும் 2016 வெகுஜன வாக்கெடுப்பின் வாக்குகளையும் மீறியும் — மொராலெஸ் ஜனாதிபதியாக இன்னுமொரு பதவி காலத்தைத் தனதாக்கிக் கொள்ள முயன்ற முயற்சிகளை, பொலிவியாவின் பாரம்பரிய ஆளும் செல்வந்த தட்டுக்களில் இருந்த அதன் வலதுசாரி எதிர்ப்பாளர்களால், சாதகமாக்கிக் கொள்ள முடிந்தது.

மொராலெஸூம் MAS தலைமையும் எதை கண்டிக்கிறார்களோ அதற்கு அவர்களே குற்றகரமாக பொறுப்பாகிறார்கள். இதிலிருந்து பிரதானமாக பாதிக்கப்பட இருப்பவர்கள் மொராலெஸ் மற்றும் அவரின் சக அரசியல்வாதிகள் இல்லை, மாறாக பெருந்திரளான பொலிவிய தொழிலாளர்களும், விவசாயிகளும் மற்றும் ஒடுக்கப்படும் மக்களும் தான்.

பொலிவியாவில் பெருந்திரளான தொழிலாளர்களும் ஒடுக்கப்படும் மக்களும் இப்போது எதிர்கொண்டிருக்கும் கூர்மையான அபாயத்திற்கான பழியைப் பல்வேறு போலி-இடது குழுக்களும் பகிர்ந்து கொள்கின்றன, அவை மொராலெஸ் அரசாங்கத்தின் பொலிவிய புரட்சிகர பாசாங்குத்தனங்களை ஊக்குவித்தன என்பதோடு தொழிலாள வர்க்கம் தன்னை முதலாளித்துவ தேசியவாதிகளினது தலைமைக்கு அடிபணிய செய்து கொள்ள வேண்டும் என்று கோரியது. அவற்றில் முக்கியமானவை நான்காம் அகிலத்தின் அனைத்துலகக் குழுவிலிருந்து (ICFI) உடைத்துக் கொண்ட பல்வேறு திருத்தல்வாத போக்குகளாகும், இவை தங்களை ஸ்ராலினிசத்துடனும் முதலாளித்துவ தேசியவாதத்தின் பல்வேறு வடிவங்களுடனும், அவற்றில் முக்கியமாக, காஸ்ட்ரோயிசத்துடனும் தங்களை இணக்கமாக வைத்து கொள்வதற்காக, ஒரு புரட்சிகர சோசலிச வேலைத்திட்டத்தின் அடிப்படையில் தொழிலாள வர்க்கத்தின் சர்வதேச ஐக்கியம் மற்றும் அரசியல் சுயாதீனத்திற்கான ICFI இன் போராட்டத்தை நிராகரித்தன.

இத்தகைய கட்சிகள் வர்க்கப் போராட்டத்தை ஒடுக்க உதவ முடிந்த காலகட்டம், இலத்தீன் அமெரிக்காவில் மட்டுமல்ல, மாறாக சர்வதேச அளவில் முடிவுக்கு வந்து கொண்டிருக்கின்றன. இலத்தீன் அமெரிக்க கண்டத்தில் சிலியிலும் மற்றும் ஏனைய இடங்களிலும் தொழிலாளர்கள் மற்றும் இளைஞர்களின் பாரிய எழுச்சிகளுடன் சேர்ந்து, பொலிவியா சம்பவங்களும், ஆளும் வர்க்கத்தால் இனி பழைய வழியில் ஆட்சி செய்ய முடியாது என்பதையும், புரட்சிகர மேலெழுச்சிகளின் ஒரு புதிய காலகட்டத்திற்கான நிலைமைகள் உருவாகி இருப்பதால், தொழிலாள வர்க்கமும் பழைய வழியில் வாழ்வது சாத்தியமில்லை என்பதையும் எடுத்துக் காட்டுகின்றன.

திருத்தல்வாதத்திற்கு எதிராக ட்ரொட்ஸ்கிசத்தின் நீண்ட போராட்டத்தை உள்ளீர்த்துக் கொள்வதன் அடிப்படையில் தொழிலாள வர்க்கத்தில் ஒரு புதிய புரட்சிகர தலைமையை உருவாக்குவதே மிக அவசர அரசியல் பணியாகும். இதன் அர்த்தம், இலத்தீன் அமெரிக்கா எங்கிலும் நான்காம் அகிலத்தின் அனைத்துலகக் குழுவின் பிரிவுகளைக் கட்டமைப்பதாகும்.

Bill Van Auken