பிரெஞ்சு தொழிற்சங்கங்கள் மக்ரோனுடன் ஓய்வூதிய வெட்டுக்களைப் பேரம்பேசுகின்ற நிலையில், போராட்டங்கள் தொடர்கின்றன

Alex Lantier
30 January 2020

மொழிபெர்ப்பின் மூலக் கட்டுரையை இங்கே காணலாம்

பரந்தளவில் எதிர்க்கப்படும் ஜனாதிபதி இமானுவல் மக்ரோனின் ஓய்வூதிய வெட்டுக்களுக்கு எதிராக மற்றொரு "தேசிய நடவடிக்கை நாளில்", புதன்கிழமை, பிரான்ஸ் எங்கிலுமான போராட்டங்களில் நூறாயிரக் கணக்கான தொழிலாளர்களும் இளைஞர்களும் அணிவகுத்தனர். தொழிற்சங்க அதிகாரத்துவங்களின் வேலைநிறுத்த சம்பளத்தால் பட்டினிக் கிடக்க விடப்பட்ட இரயில்வே மற்றும் போக்குவரத்துத்துறை தொழிலாளர்கள் அவர்களின் ஆறு வாரகால வேலைநிறுத்தத்தை முடித்துக் கொண்டு கடந்த வாரம் வேலைக்குத் திரும்ப நிர்பந்திக்கப்பட்ட பின்னரும் கூட, மக்ரோனுக்கு எதிராக இன்னமும் கோபம் கட்டமைந்து வருகிறது.

பொலிஸ் மற்றும் தொழிற்சங்கங்கள் இரண்டினாலும் வெளியிடப்பட்ட புள்ளிவிபரங்கள், முந்தைய ஜனவரி 24 போராட்டத்தை விட பங்களிப்பு சற்று குறைந்திருப்பதாக சுட்டிக் காட்டிய போதினும், ஆர்பாட்டங்கள் மிகப் பெரியளவில் இருந்தன. தொழிற்சங்கங்களின் புள்ளிவிபரங்களின்படி, துலூஸில் 35,000 போராட்டக்காரர்கள், போர்தோவில் 10,000 பேர் மற்றும் லு ஹாவ்ரில் 7,000 பேர் அணிவகுத்தனர். லியோனில் 3,500 பேர் மற்றும் மார்சைய்யில் 4,500 பேர் இருந்ததாக பொலிஸ் தெரிவித்தது.

தொழிற்சங்க மதிப்பீட்டின்படி பாரீசில் 180,000 பேர் கலந்து கொண்ட ஓர் அணிவகுப்பில் மோதல் வெடித்த போது, பொலிஸ் 13 ஆர்ப்பாட்டக்காரர்களைக் கைது செய்தது.

ஈராக், அல்ஜீரியா மற்றும் இலத்தீன் அமெரிக்கா எங்கிலும் பாரிய வெகுஜன போராட்டங்களும், அமெரிக்காவில் ஆசிரியர்கள் மற்றும் தாமிரச் சுரங்க தொழிலாளர்களின் வேலைநிறுத்தங்களும், இந்தியாவில் பத்து மில்லியன் கணக்கான தொழிலாளர்களின் பாரிய வேலைநிறுத்தங்களும் உட்பட தொழிலாள வர்க்க போராட்டங்களின் ஓர் உலகளாவிய மேலெழுச்சிக்கு மத்தியில், பிரான்சில் தொடர்ந்து வேலைநிறுத்தங்கள் வெடித்து வருகின்றன. பாரீஸ் கழிவுகள் சுத்திகரிப்பு சேவை தொழிலாளர்கள், மார்ச்சைய்யில் இருந்து கோர்சிகாவுக்குப் பயணப்படகுகள் செயல்படுத்தும் பணியாளர்கள், பிரான்ஸ் எங்கிலும் கழிவுநீர் சுத்திகரிப்பு தொழிலாளர்களும் நேற்று மக்ரோனின் வெட்டுக்களுக்கு எதிராக வேலைநிறுத்த நடவடிக்கையில் இறங்கினர்.

தொழிற்சங்க அதிகாரத்துவங்கள், அவற்றுடன் அணி சேர்ந்த ஜோன்-லூக் மெலோன்சோனின் அடிபணியா பிரான்ஸ் கட்சி (LFI) மற்றும் ஏனைய குட்டி-முதலாளித்துவ கட்சிகளில் இருந்து தொழிலாளர்களைப் பிரித்திருக்கும் வர்க்கப் பிளவே இத்தகைய போராட்டங்களின் பிரதான அம்சமாக உள்ளது. மக்ரோனுடன் பேரம்பேசுவதற்கும் அங்கே ஒன்றும் இல்லை என்பதும், மக்ரோன் அரசாங்கத்தைக் கீழிறக்குவதற்கான போராட்டம் மட்டுமே முன்னிருக்கும் பாதை என்பதும் தொழிலாளர்கள் மத்தியில் பரந்தளவில் உணரப்படுகிறது.

ஆனால் தொழிற்சங்கங்களோ மக்ரோனுடன் வெட்டுக்களைப் பேரம்பேசி வருகின்றன. வேலைநிறுத்தம் செய்து வரும் தொழிலாளர்களுக்கு அவை குறைவான நிதி வழங்கியும், தொழிலாளர்களைப் பிளவுபடுத்தியும் மற்றும் வேலைநிறுத்தங்களை முறித்தும் வருகின்ற அதேவேளையில், அவை பிரான்சின் ஓய்வூதிய முறையை ஒழிப்பது குறித்து மக்ரோனுடனும் கூட அமர்ந்து கலந்துரையாடி வருகின்றன.

ஸ்ராலினிச தொழிற் சங்கமான CGT இன் தலைவர் பிலிப் மார்ட்டினேஸ் நேற்று கூறுகையில், பகிரங்கமாக மக்ரோனை ஆதரிக்கும் மற்றும் ஓய்வூதிய வெட்டுக்களை ஆதரிக்கும் CFDT தொழிற் சங்கத்துடன் ஆரம்பத்தில் ஒப்புக் கொண்டவாறு திட்டமிடப்பட்டுள்ள இந்த வெட்டுக்கள் மீது நடக்கும் நான்கு மாதகால பேரம்பேசும் அமர்வில் அவரும் சேர்ந்திருக்க இருப்பதாக தெரிவித்தார்.

அரசு மற்றும் வணிக குழுக்களுடன் தொழிற்சங்கங்கள் இணைந்து சமூக கொள்கையை தீர்மானிக்கும் பொருளாதார, சமூக மற்றும் சுற்றுச்சூழல் கவுன்சில் (CESE) இல் பிரதம மந்திரி எட்வார்ட் பிலிப் மற்றும் CFDT உடன் அந்த மாநாட்டில் பேசுகையில் மார்ட்டினேஸ் எரிச்சலூட்டும் விதமாக, “என்ன நடக்கும் என்பதை தெரிந்து கொள்வது மிகவும் கடினம்,” என்று அறிவித்தார். “நாங்கள் CESE இல் சந்திப்பதற்கு மட்டுமே உடன்பட்டுள்ளோம். என்ன நடக்கும், அங்கே யார் இருப்பார்கள்? என்பது எங்களுக்குத் தெரியாது,” என்றார்.

“தற்போதைய முறையை எவ்வாறு மேம்படுத்துவது என்று விவரிக்கவே" பேச்சுவார்த்தைகளில் CGT பங்கெடுக்கும் என்று தெரிவித்த மார்ட்டினேஸ், CGT “கூலி உயர்வுகளுக்கும்" மற்றும் "அதிக ஓய்வூதிய செலவுகளுக்கும்" அழைப்பு விடுக்கும் என்பதையும் சேர்த்துக் கொண்டார்.

இதுவொரு மோசடியாகும். CGT அதிகாரத்துவத்தின் துரோகம் மற்றும் மக்ரோனுடன் அது ஒத்துழைப்பதை மறைப்பதே இதன் நோக்கமாகும். CESE இல் என்ன நடக்கும் என்று காண்பது ஒன்றும் கடினமானதல்ல.

“மக்ரோன்-CFDT மாநாட்டை புறக்கணி, அதுவொரு பொறிக்கிடங்கு. வெட்டுக்களை முடிவுக்கு கொண்டுவர ஒரு பொது வேலைநிறுத்தத்திற்கு அழைப்பு விடுவோம்"

பிலிப் கடந்த மாத வேலைநிறுத்தங்களின் உத்வேகத்தை முறிக்கவே அம்மாநாட்டிற்கு அழைப்பு விடுத்தார். பிரான்சின் ஏமாற்றி பறித்த பில்லியனர்களது செல்வ வளத்திற்கு வரிவிதிப்பதற்கான எந்தவொரு நகர்வையும் நிராகரிக்கும் அடிப்படையில், மக்ரோனின் LRM கட்சியும் CFDT உம் அரசு வரவு-செலவு திட்டக்கணக்கு பற்றாக்குறைகளை விவாதித்து, பணமில்லை என்று வாதிட்டு, பொருளாதார தேவையின் காரணமாக வெட்டுக்கள் செய்யப்படுகின்றன என்று கோரும்.

கூலிகள் மற்றும் ஓய்வூதியங்களை அதிகரிக்குமாறு மார்ட்டினேஸ் மக்ரோனுக்கு அழைப்புவிடுக்கின்ற நிலையில், அவை அரசியல்ரீதியில் அர்த்தமற்றவை. வேலைநிறுத்தக்காரர்கள் அனைவருக்கும் இலவசமாக ஷாம்பெயினும் காவியர் சிற்றுணவும் போன்ற எலும்புத்துண்டை வழங்க வேண்டுமென கூட அவர் முன்மொழியக்கூடும். மக்ரோனும் பிலிப்பும் இதுபோன்ற முன்மொழிவுகளைக் கைகழுவி விடுவார்கள், CESE இன் மூடிய கதவுக்குப் பின்னால் அவற்றை போதுமானளவுக்கு தீவிரமாக எழுப்பக்கூடாது என்பது ஐயத்திற்கிடமின்றி மார்ட்டினேஸிற்கு நன்றாக தெரியும்.

நேற்றைய போராட்டத்தில் தொழிலாளர்கள் மெலோன்சோனை எதிர்கொண்ட போது, தொழிற்சங்கங்கள் மற்றும் போலி-இடதின் பிற்போக்குத்தனமான செயல்கள் மீது தொழிலாளர்களிடையே விரக்தி வெடித்தது. மெலோன்சோன் வெளியே வந்து வேலைநிறுத்தக்காரர்களை அதிகமாக ஆதரிக்க வேண்டுமென ஒருவர் அவரிடம் கூறிய போது, அதற்கு LFI அரசியல்வாதி Eric Coquerel, மெலோன்சோன் "எங்கும்" இருக்கிறார் என்று பதிலளித்தார். அந்த வேலைநிறுத்தக்காரர் மெலோன்சோனை "தொலைக்காட்சி நிகழ்ச்சிகளில்" மட்டுமே பார்ப்பதாக கூறிய போது, மெலோன்சோன் "போ, போய் உன் அம்மாவை பார்" என்று ஏளனமாக கூறி நகர்ந்தார்.

இதுபோன்ற சம்பவங்கள், மக்ரோனைப் பதவியிலிருந்து கீழிறக்குவதற்கு தொழிற்சங்கங்களில் இருந்து சுயாதீனமாக சாமானிய தொழிலாளர்களின் நடவடிக்கை குழுக்களைக் கட்டமைக்குமாறு, பிரெஞ்சுசோசலிசசமத்துவக்கட்சியும்(Parti de l’égalité socialiste) WSWS உம் தொழிலாளர்களுக்கு விடுத்த அழைப்பின் இன்றியமையா முக்கியத்துவத்தையே அடிக்கோடிடுகின்றன. தொழிற்சங்கங்கள் மக்ரோனுக்கு எதிரான வேலைநிறுத்த இயக்கத்தை நாசப்படுத்தி காட்டிக்கொடுக்கவே நகர்ந்து வருகின்றன என்று தொழிலாளர்களுக்கு எச்சரிக்க வேண்டும். அவர்கள் இந்த போராட்டத்தை, தொழிற்சங்க அதிகாரத்துவம் மற்றும் அதன் அரசியல் கூட்டாளிகளின் கரங்களில் இருந்து வெளியே எடுத்து, பிரான்சிலும் சர்வதேச அளவிலும் தொழிலாளர்களின் பரந்த அடுக்குகளை இப்போராட்டத்திற்குள் ஈர்ப்பதற்காக போராட வேண்டும்.

பாரீசில் நேற்றைய போராட்டத்தில் கலந்து கொண்ட ஓய்வு பெற்ற பேருந்து ஓட்டுனரும் ஒரு "மஞ்சள் சீருடை" போராட்டக்காரருமான அலன் உலகசோசலிசவலைத்தளத்திற்குகூறுகையில், மக்ரோனின் சீர்திருத்தம் மாதத்திற்கு நூறாயிரக் கணக்கான யூரோக்களுக்கு, அல்லது அதற்கும் அதிகமான தொகைக்கு நிகரான ஓய்வூதிய வெட்டுக்களுடன், "மக்களை கொள்ளை" அடிக்கிறது என்றார். அவர் தொடர்ந்து கூறுகையில், “இப்போது சங்கத்தில் உள்ள தொழிலாளர்கள் தொழிற்சங்கங்கள் எவ்வாறு செயல்படுகின்றன என்பதை புரிந்து கொள்ள தொடங்கி இருக்கிறார்கள். அதுவொன்றும் பெரிய விடயமல்ல. அவை அரசாங்கத்துடன் கூட்டு சேர்ந்து செயல்படுகின்றன மற்றும் அதே நீண்ட தொட்டியில் உண்கின்றன. அதுவொரு பேராபத்து, CFDT படுமோசம் என்றால் CGT அதிலும் பார்க்க சிறப்பானதல்ல” என்றார்.

அலன் தொடர்ந்து கூறினார், இதன் விளைவாக, “ஒரு புதிய வகையான உலக ஒழுங்கிற்கு எதிராக ஒவ்வொரு நாட்டிலும் மக்கள் எழுச்சி அடைந்து வருகிறார்கள்" என்றாலும் கூட, பிரான்சில் "பலரும் போராட்டத்தில் இறங்கி உள்ளனர்.” “இதனால் இந்த அரசாங்கம் நீண்ட காலத்திற்கு தாக்குப் பிடிக்காது என்றே நான் நினைக்கிறேன்,” என்பதையும் அவர் சேர்த்துக் கொண்டார்.

பாரீசின் வெகுஜன போக்குவரத்து RATP இன் ஒரு தொழிலாளி சலீம் WSWS க்கு கூறுகையில், அவரின் கூலிகளும் சேமிப்புகளும் தீர்ந்து போனதால், அவர் பொருளாதார தேவைக்காக மீண்டும் வேலைக்குத் திரும்பியதாக தெரிவித்தார். அவர் மத்திய கிழக்கிலும் உலகெங்கிலுமான தொழிலாளர்களின் பாரிய போராட்டங்களை தொடர்ந்து அவதானித்து வருவதாக கூறினார். “நாம் அவர்களுடனான ஒற்றுமையுணர்வை உணர வேண்டும்,” என்று கூறிய அவர், “ஏனென்றால் ஒவ்வொரு இடத்திலும் தொழிலாளர்கள் உருவாக்கும் செல்வவளம் முதலாளிமார்களாலும் மிகப்பெரும் மூலதனங்களாலும் அறுவடை செய்யப்பட்டு வருகின்றன,” என்றார்.

நேற்று காலை போராட்டங்கள் தொடங்கிய போது, அரசாங்கத்தின் குடியரசு பாதுகாப்பு நிறுவனங்களுக்கான கலகம் ஒடுக்கும் பொலிஸிற்கும் (CRS) மக்ரோனின் வெட்டுக்களுக்கு எதிராக போராடி வரும் தீயணைப்பு வீரர்களுக்கும் இடையே செவ்வாய்கிழமை வெடித்த வன்முறையான மோதல்கள் குறித்து செய்திகள் பரவின. கடந்த இலையுதிர் காலத்தில் ஒரு போராட்டத்தின் போது பதட்டங்களின் உச்சத்தில் CRS காவலர் ஒருவரால் இரப்பர் தோட்டா கொண்டு தீயணைப்பு வீரர் ஒருவரின் கண்ணில் சுட்டிருந்தார், இதனால் போராட்டங்களுக்கு பாதுகாப்பு உடைகள் அணியக்கூடாது என்பதை நிராகரித்து, ஆயிரக் கணக்கான தீயணைப்பு வீரர்கள் முழுவதும் அவசரகால தீயணைப்பு உடையில் வந்திருந்தனர்.

தீயணைப்பு வீரர்களின் கனமான உடைகளும் புகை தடுப்பு முகமூடிகளும் கண்ணீர் புகைக் குண்டுகளில் இருந்து அவர்களுக்கு நல்ல பாதுகாப்பை வழங்கிய நிலையில், தீயணைப்பு வீரர்கள் போக்குவரத்தை தடைசெய்ய நகரைச் சுற்றிய சுற்றுவட்ட நெடுஞ்சாலையை அடைய முயன்ற போது அவர்களைப் பின்தொடர்ந்து சென்ற CRS பிரிவுகளுக்கும் அவர்களுக்கும் இடையே பாரீசில் விரட்டிப் பிடிக்கும் சண்டை நடந்தது.

CRS இன் ஆரம்ப இலத்தியடி தாக்குதலைத் தீயணைப்பு வீரர்கள் எவ்வாறு முறியடித்தார்கள், CRS அணிவரிசையை எவ்வாறு உடைத்தார்கள் மற்றும் அவர்களின் கலகம் தடுக்கும் கண்ணாடி தடுப்புகளை எவ்வாறு கைப்பற்றினார்கள் என்பதைகாணொளிகள்எடுத்துக்காட்டின. இரப்பர் தோட்டாக்கள் மற்றும் உணர்விழக்க செய்யும் கையெறி குண்டுகளை அவர்கள் பிரயோகிப்பதற்கான திறனைக் குறைக்க, CRS பொலிஸிற்கு நெருக்கமாகவே சென்ற அவர்கள், பிரான்சின் தேசிய கீதமானMarseillaise இல் இருந்து ஆயுதபாணியாவதற்கான அழைப்பை அவர்கள் கோஷமிட்டனர். தீயணைப்பு வீரர்களின் அணிவகுப்பை நிறுத்துவதற்காக CRS வண்டியில் நிலைநிறுத்தப்பட்ட உலோக தடுப்பரண்களை நிலைநிறுதியது, உணர்விழக்கச் செய்யும் கையெறி குண்டுகளை வீசியது மற்றும் தடுப்பரண்களைப் பாதுகாக்க நீர்பீய்ச்சிகளைப் பயன்படுத்தியது, பின்னர் தீச்சுடரை அசைத்துக் காட்ட நீர்பீய்ச்சி பீரங்கி மீது ஏறிய ஒரு தீயணைப்பு வீரரின் தலையை நோக்கி சட்டவிரோதமாக உயிருக்கு ஆபத்தான முறையில் இரப்பர் தோட்டாவைக் கொண்டு சுட்டது.

தீயணைப்பு வீரர்கள் வண்டியில் இணைக்கப்பட்டிருந்த தடுப்பரண் சுவர்களைப் பலமாக அசைத்து, அதை உடைத்து வழிஏற்படுத்தினர், மற்றும் கலகம் ஒடுக்கும் பொலிஸை நோக்கி கூச்சலிட்டதுடன், ஆர்ப்பாட்டக்காரர்களைத் தாக்குவதற்கான மக்ரோனின் உத்தரவுகளை மீறாததற்காக அவர்களை "பிரெஞ்சு தேசத்தின் துரோகிகள்" என்றும், “நாஜி ஒத்துழைப்பாளர்கள்" என்றும் அழைத்தனர்.

இரண்டாம் உலக போரில் நாஜி-ஒத்துழைப்புவாத விச்சி ஆட்சியின் வீழ்ச்சிக்குப் பின்னர், டிசம்பர் 1944 இல் உருவாக்கப்பட்ட CRS, விச்சியின் இடம் விட்டு இடம் பெயரும் பின்புல படைப்பிரிவுக்கு (Mobile Reserve Group – GMR) ஆரம்பத்தில் தளபதி சார்ல்ஸ் டு கோல் அரசாங்கம் வழங்கிய ஒரு புதிய பெயராக இருந்தது. அந்த பெயர் மாற்றம், எதிர்ப்பு பிரிவுகளுக்கு (Resistance units) எதிராக நாஜி SS துருப்புகளுடன் சேர்ந்து சண்டையிட்ட பாசிசவாத GMR இன் முன்வரலாறை மறைக்கும் நோக்கம் கொண்டதாக இருந்தது. இது, முதலில் இரத்தக்களரியில் மூழ்கடிக்கப்பட்ட 1947 சுரங்க தொழிலாளர்களின் வேலைநிறுத்தத்திலும் பின்னர் மே 1968 பிரெஞ்சு பொது வேலைநிறுத்தத்திலும் பயன்படுத்தப்பட்ட CRS-SS என்ற பிரபல கோஷத்திற்கு இட்டுச் சென்றது.

தீயணைப்பு வீரர்கள் குற்றகரமாக நடத்தியதாக கூறப்படும் "நடவடிக்கைகளை" கண்டித்து பாரீஸ் பொலிஸ் உயரதிகாரி ஓர் அறிக்கை வெளியிட்டார். தீயணைப்பு வீரர்களுடன் செவ்வாய்கிழமை நடந்த மோதல்களில் 160 CRS காயமடைந்ததாகவும், இதில் வெடிமருந்துகளால் சிலரின் கால்கள் காயமடைந்ததாகவும் பொலிஸ் அதிகாரிகள் குறிப்பிட்டனர்—அனேகமாக CRS அணிவரிசைகளை நோக்கி அவர்கள் எறிந்த உணர்விழக்கச் செய்யும் கையெறி குண்டுகளை திரும்ப உதைத்து விட்டதால் இது ஏற்பட்டிருக்கலாம்.

தொழிலாள வர்க்கத்தின் அணித்திரள்வைத் தொழிற்சங்கங்கள் மீண்டுமொருமுறை பிளவுபடுத்தவும் குரல்வளையை நெரிக்கவும் நகர்ந்தன. ஓய்வூதிய வெட்டுக்கள் தொழிலாள வர்க்கத்தின் ஏனைய பிரிவினை இலக்கில் வைக்கும், தீயணைப்பு வீரர்களுக்கு பாதிப்பு இருக்காது என்ற உத்தரவாதங்களை வழங்கி, தீயணைப்பு வீரர்களுக்கு அது விட்டுக்கொடுப்புகளை வழங்கும் என்று அரசாங்கம் அறிவித்ததும், தீயணைப்புத்துறை தொழிற்சங்கங்கள் வேலைநிறுத்தங்களை நிறுத்தப்போவதாக அறிவித்தன.