அமெரிக்கா இரகசியமாக உடமையாக கொண்டிருந்த சுவிஸ் மறைகுறியீட்டு நிறுவனத்தின் மூலமாக தசாப்தங்களாக அரசுகள் மீது உளவு பார்த்துள்ளது

Kevin Reed
13 February 2020

அமெரிக்க மத்திய உளவுத்துறை முகமையும் (CIA) தேசிய பாதுகாப்பு முகமையும் (NSA), சிஐஏ இரகசியமாக சொந்தமாக கொண்டிருந்த சுவிட்சர்லாந்தை மையமாக கொண்ட ஓர் உலகளாவிய பாதுகாப்பு நிறுவனத்தின் மூலமாக கடந்த ஐந்து தசாப்தங்களாக உலகெங்கிலுமான அரசாங்கங்களின் மறைகுறியீடு செய்யப்பட்ட தகவல் தொடர்புகளை (encrypted communications) உளவு பார்த்துள்ளது.

செவ்வாயன்று வாஷிங்டன்போஸ்டில் வெளியான ஒரு நீண்ட செய்தியின்படி, Crypto AG என்றறியப்படும் சிஐஏ க்கு சொந்தமான அந்நிறுவனம் கடந்த அரை நூற்றாண்டாக உலகெங்கிலுமான நாடுகளில் பாதிக்கும் மேற்பட்டவைகளுக்கு இராஜாங்க மறைகுறியீட்டு தொழில்நுட்பங்களை விற்று வந்த அதேவேளையில், அமெரிக்க உளவுத்துறை அவற்றின் தகவல் தொடர்புகளை வேவு பார்த்தும் வந்திருந்தது.

இரண்டாம் உலக போர் சகாப்தத்தின் இயந்திரவியல் மறைகுறியீட்டு தொழில்நுட்ப நிறுவனமான Crypto, 1970 இல் சிஐஏ மற்றும் ஜேர்மன் வெளியுறவு உளவுத்துறைக்கு (BND) இடையே ஒரு பங்காண்மை ஒப்பந்தத்தின் மூலம் அவர்களால் கையகப்படுத்தப்பட்டது. வளர்ந்து வரும் அதிநவீன மறைக்குறியீட்டு முறைகளுக்கு பெயர் பெற்ற இந்நிறுவனம், பின்னர் அமெரிக்கா மற்றும் ஜேர்மன் உளவுத்துறை முகமைகள் வைத்திருந்த பின்புல அணுகு முறைகள் உள்ளடங்கிய அந்த அரசாங்கங்களின் செயல்முறைகளுக்காக விற்கத் தொடங்கியது.

போஸ்ட்அறிக்கை விவரிப்பதைப் போல, “அந்த சுவிஸ் நிறுவனம் 21 ஆம் நூற்றாண்டில் 120 க்கும் அதிகமான நாடுகளுக்கு சாதனங்களை விற்பனை செய்து மில்லியன் கணக்கிலான டாலர்களை ஈட்டியது. ஈரான், இலத்தீன் அமெரிக்காவின் இராணுவ ஆட்சிக் குழுக்கள், இந்தியா மற்றும் பாகிஸ்தான் அணுஆயுத போட்டியாளர்கள், வத்திக்கானுமே கூட அதன் வாடிக்கையாளர்களில் உள்ளடங்கி உள்ளன.” ஜப்பான், மெக்சிகோ, எகிப்து, தென் கொரியா, ஈரான், சவூதி அரேபியா, இத்தாலி, ஆர்ஜென்டினா, இந்தோனேஷியா மற்றும் லிபியா ஆகிய நாடுகள் அதிமுக்கியமான தகவல் தொடர்புகளுக்காக Crypto நிறுவன தொழில்நுட்பங்களைப் பயன்படுத்தும் நாடுகளில் உள்ளடங்கி உள்ளன.

போஸ்டின் இந்த அறிக்கை ஜேர்மன் அரச ஒளிபரப்பு நிறுவனமான ZDF (Zweites Deutsches Fernsehen) உடன் சேர்ந்து கூட்டாக வெளியிடப்பட்டதுடன், இது இரண்டு செய்தி அமைப்புகளுக்கு கசியவிடப்பட்ட, “Thesaurus” மற்றும் பின்னர் “Rubicon,” என்றழைக்கப்படும் சிஐஏ இன் இரகசிய திட்டத்தின் விரிவார்ந்த இரகசிய வரலாறில் உள்ளடங்கிய தகவல்களின் அடிப்படையில் அமைந்துள்ளது. Post உம் ZDF உம் தற்போதைய மற்றும் முன்னாள் உளவுத்துறை அதிகாரிகள் மற்றும் Crypto பணியாளர்களையும் நேர்காணல் செய்தது, அவர்களில் பெரும்பாலானவர்கள் தங்கள் அடையாளத்தை வெளிப்படுத்தாமல் கருத்துரைத்திருந்தனர்.

அமெரிக்க உளவு அமைப்புக்காக Crypto உளவுபார்த்த சம்பவங்கள் குறித்து போஸ்டால்விவரவாக வெளியிடப்பட்ட சான்றுகளில், 1978 கேம்ப் டேவிட் பேச்சுவார்த்தைகளின் போது கெய்ரோ உடனான எகிப்திய ஜனாதிபதி அன்வர் சதாத்தின் தகவல் தொடர்புகளும், 1979-80 இல் அமெரிக்க பிணைக்கைதி நெருக்கடியின் போது அயெத்துல்லா காமெனியின் ஈரானிய ஆட்சிக்கும் அல்ஜீரியாவுக்கும் இடையிலான இரகசிய இராஜாங்க ஆவணங்களும், 1982 இல் மால்வினாஸ் போரின் போது ஆர்ஜென்டினாவில் இருந்து பிரிட்டன் உடனான மறைகுறியீடு நீக்கப்பட்ட தகவல்தொடர்புகளின் பகிர்வுகளும் இருந்தன.

கசியவிடப்பட்ட அறிக்கையில் இருந்து எடுத்த முடிவினை போஸ்ட் நேரடியாக பின்வருமாறு மேற்கோளிடுகிறது: “அது உளவுவேலை ஆட்சிக்கவிழ்ப்பு சதியின் நூற்றாண்டாக இருந்தது. குறைந்தபட்சம் இரண்டு வெளிநாடுகளால் (ஏறத்தாழ ஐந்து அல்லது ஆறாக கூட இருந்திருக்கலாம்) வாசிக்கப்பட்ட மிகவும் இரகசிய தகவல்தொடர்புகளை பெறுவதற்கான தனிச்சலுகைக்காக வெளிநாட்டு அரசாங்கங்கள், அமெரிக்கா மற்றும் மேற்கு ஜேர்மனிக்கு நிறைய பணம் அளித்து வந்தன.”

மறைகுறியீடு நீக்கப்பட்ட தகவல் தொடர்புகளை அணுகிய "ஐந்து அல்லது ஆறு" நாடுகள், அனேகமாக ஆஸ்திரேலியா, கனடா, நியூசிலாந்து, பிரிட்டன் மற்றும் அமெரிக்கா உள்ளடங்கலாக ஐந்து கண் உளவுத்துறை பங்காண்மையாக (Five Eyes intelligence partnership) இருந்திருக்கலாம். ஆனால் சிஐஏ ஆவணங்கள் "குறைந்தபட்சம் இஸ்ரேல், சுவீடன், சுவிட்சர்லாந்து மற்றும் பிரிட்டன் ஆகிய நான்கு நாடுகள் அந்த நடவடிக்கை குறித்து அறிந்திருந்தன அல்லது அமெரிக்கா அல்லது மேற்கு ஜேர்மனியால் அதற்கு உளவுத்தகவல்கள் வழங்கப்பட்டன என்பதைக் காட்டுகிறது" என்பதையும் போஸ்ட்அறிக்கை சேர்த்துக் கொள்கிறது.

1980 களில் Crypto உளவுபார்ப்பு நடவடிக்கைகள் உச்சத்தில் இருந்த போது, உலகின் இரகசிய இராஜாங்க ஆவணங்களில் 40 சதவீதத்திற்கு அந்நிறுவனத்தின் திட்ட அமைப்புகளே பொறுப்பாக இருந்தன, அதேவேளையில் அவற்றைப் பயன்படுத்திய அரசாங்கங்கள் அவற்றின் தகவல் தொடர்புகள் உளவுவேலைகளில் இருந்தும், ஒவ்வொரு விதத்தில் சேகரிக்கப்படுவதில் இருந்தும், மறைகுறியீடு நீக்கப்படுவதில் இருந்தும் பாதுகாக்கப்பட்டிருந்ததாக நம்பிக் கொண்டிருந்தன.

சோவியத் ஒன்றியமும் சீனாவும் Crypto அமைப்புமுறைகளை விலைக்கு வாங்காத சில அரசுகளில் உள்ளடங்கி இருந்தன, ஏனென்றால், போஸ்ட்தகவல்படி, "மாஸ்கோ மற்றும் பெய்ஜிங் உடன் மற்ற நாடுகளின் தொடர்புகளைக் கண்காணித்ததன் மூலமாக அமெரிக்க உளவாளிகள் நிறைய தெரிந்து கொண்டார்கள் என்று சிஐஏ வரலாறு அறிவுறுத்துகிறது என்றாலும், மேற்குடன் அந்நிறுவனத்தின் தொடர்புகள் குறித்து அவை ஆழமாக சந்தேகங்களைக் கொண்டிருந்ததால் இரகசியங்கள் வெளியாவதில் இருந்து அவை பாதுகாக்கப்பட்டிருந்தன.”

அமெரிக்க உளவுத்துறை அதன் ஏகாதிபத்திய பங்காளிகளுடன் சேர்ந்து, கடந்த அரை நூற்றாண்டாக உலகெங்கிலுமான அரசுகளின் இராஜாங்க தகவல் தொடர்புகளை உளவுபார்த்து வந்தது என்பது ஒரு முக்கிய அம்பலப்படுத்தலாகும். இதில் ஆச்சரியப்படுவதற்கு ஒன்றுமில்லை என்றாலும், மிகவும் உறுதியான விதத்தில் அமெரிக்க ஏகாதிபத்தியத்தின் அப்பட்டமான குற்றகரத்தன்மை மற்றும் அடாவடித்தனத்தை இது எடுத்துக்காட்டுகிறது.

வெள்ளை மாளிகையில் ஒரு ஜனநாயகக் கட்சியாளர் இருந்திருந்தாலும் சரி அல்லது குடியரசுக் கட்சியாளர் இருந்திருந்தாலும் சரி, வாஷிங்டன் டி.சி அரசாங்கம் முற்றிலுமாக சர்வதேச சட்டத்தை மீறி ஐந்து தசாப்தங்களாக ஏனைய நாடுகளின் விவகாரங்களில் “குறுக்கீடு” செய்ததில் முதலிடத்தில் இருந்துள்ளது என்பதையும் இந்த வெளிப்படுத்தல்கள் நிரூபிக்கின்றன.

இந்த Crypto பற்றிய வெளிப்படுத்தல்கள் அமெரிக்க அரசாங்கம் அதன் கூட்டாளிகள் மற்றும் எதிரிகள் இருவரினது உலக விவகாரங்களை வேவு பார்த்துள்ள நீண்ட வரலாறுடன் இணைகின்றன. மிக சமீபத்திய அம்பலப்படுத்தல்களில் பலவும் விக்கிலீக்ஸால் பிரசுரிக்கப்பட்டுள்ளன அல்லது முன்னாள் NSA ஒப்பந்ததாரர் எட்வார்ட் ஸ்னோவ்டன் கசியவிட்டவைகளில் உள்ளடங்கி இருந்தன, இவர் 2013 இல் கார்டியன்மற்றும் போஸ்டின் செய்தியாளர்களுக்கு இரகசிய உளவுத்துறை ஆவணங்களின் மதிப்பார்ந்த ஒரு தொகையை வழங்கி இருந்தார்.

2015 இல், பராக் ஒபாமாவினது ஜனாதிபதி நிர்வாகத்தின் போது, NSA ஜேர்மன் சான்சிலர் அங்கேலா மேர்க்கெலின் தொலைபேசி அழைப்புகளை அது 2009 இல் இருந்தே ஒட்டுக்கேட்டு வந்தது என்பதை விக்கிலீக்ஸ் அம்பலப்படுத்தியது. உண்மையில் ஹெல்மூட் கோல் நிர்வாகம் (1982-1998) தொடங்கி, தசாப்தங்களாக அமெரிக்கா ஜேர்மன் சார்சிலர் பதவியை உளவுபார்த்து வந்திருந்ததை விக்கிலீக்ஸ் தரவுகள் எடுத்துக்காட்டின.

ஒட்டுமொத்த உலக மக்களின் மின்னணு தகவல் தொடர்புகளை NSA சேகரித்து சேமித்து வந்திருந்தது என்பதை உறுதிப்படுத்திய ஸ்னோவ்டென் வெளியீடுகள், உலக நாடுகளை ஒன்றிணைத்த சர்வதேச கடலடி கம்பிவட அமைப்புகளின் பின்புல ஒளியிழை வடங்களை ஊடுருவி திருடுவது உட்பட அமெரிக்க உளவுத்துறை நடவடிக்கைகளை அம்பலப்படுத்திக் காட்டியது. அமெரிக்கா இதே விதத்தில் மெக்சிகோ மற்றும் பிரேசில் ஜனாதிபதிகளின் தொலைபேசி அழைப்புகளையும் ஊடுருவி இருந்தது என்று உண்மையும் ஸ்னோவ்டனின் வெளிப்படுத்தல்களில் ஒன்றாக இருந்தது.

வர்த்தகரீதியில் கிடைத்த குறியீட்டு சாதனங்களுக்குள் கட்டமைக்கப்பட்டிருந்த இரகசிய பின்புல முறைகள் மூலமாக அமெரிக்க ஏகாதிபத்தியம் தசாப்தங்களாக கட்டுப்பாடின்றி தகவல்களை அணுகியது என்பது ஸ்மார்ட்போன்களிலும் சேதி பரிவர்த்தனை பயன்பாடுகளிலும் (apps) முனைக்குமுனை குறியீடு செய்வதை நீக்குமாறு தொழில்நுட்ப நிறுவனங்களை நிர்பந்திக்கும் ட்ரம்ப் நிர்வாகத்தின் இப்போதைய முனைவுக்கு பின்னால் உள்ள நோக்கங்களை அம்பலப்படுத்துகிறது. ஆப்பிள், கூகுள் மற்றும் பேஸ்புக் நிறுவனங்கள் அவற்றின் சேவைகளை அமெரிக்க சட்ட அமுலாக்க பிரிவு பின்கதவினூடாக அணுக அனுமதிக்க வேண்டும் என்ற கோரிக்கை, பகுதியாக, போட்டி அரசுகள் மற்றும் பெருநிறுவனங்களின் தனியார் தகவல் தொடர்புகள் மீதான அரசின் கண்காணிப்பை மீட்டமைப்பதை நோக்கமாக கொண்டதாகும்.

பொதுமக்கள் மீதான அரசு உளவுபார்ப்புக்கு எதிரான போராட்டமும் உலக நாடுகளுக்கு எதிராக அமெரிக்க இராணுவ-உளவுத்துறை அரசின் சட்டவிரோத நடவடிக்கைகளுக்கு எதிரான போராட்டமும் அடிப்படையில் அடிப்படை ஜனநாயக உரிமைகளைப் பாதுகாக்கும் பிரச்சினையாகும். ஜனநாயகக் கட்சியின் அனைத்து வேட்பாளர்களும் 2016 தேர்தல்களில் "ரஷ்ய தலையீடு" சம்பந்தமாக நிரூபிக்கப்படாத குற்றச்சாட்டுக்களை ஏற்றுக் கொள்கின்ற நிலையில், அமெரிக்க பெருநிறுவனங்கள் மற்றும் பெரிய வங்கிகளின் சார்பாக வேவுபார்ப்பு தலையீடுகள் மற்றும் அமெரிக்க உளவுவேலைகள் குறித்த வாஷிங்டன்போஸ்டின் சமீபத்திய இந்த வெளியீடுகள் குறித்து அவர்களில் ஒருவருமே கருத்துரைக்கவில்லை.

2020 அமெரிக்க தேர்தல்களில் சோசலிச சமத்துவக் கட்சியின் வேட்பாளர்கள் —ஜனாதிபதிக்கு ஜோசப் கிஷோர் மற்றும் துணை ஜனாதிபதிக்கு நோரிஸ்சா சான்டா குரூஸ்— மட்டுமே, உலக சோசலிச புரட்சிக்கான வேலைத்திட்டத்தின் அடிப்படையில், உலக நாடுகள் மீதான அமெரிக்க தலையீடு மற்றும் உளவுபார்ப்பை உடனடியாக நிறுத்த வேண்டுமென கோரி வருகிறார்கள். SEP தேர்தல் பிரச்சாரம் குறித்த கூடுதல் தகவல்களுக்கும், பதிவு செய்வதற்கும் socialism2020.org தளத்தைப் பார்வையிடவும்.