முனீச்சில் அமெரிக்க-ஐரோப்பிய மோதல் எழுகிறது

Andre Damon
19 February 2020

மொழிபெர்ப்பின் மூலக் கட்டுரையை இங்கே காணலாம்

“வல்லரசுகளுக்கு இடையிலான மோதலுக்கான" தயாரிப்புகளின் மீளெழுச்சி மற்றும் உலகின் மறுகாலனித்துவமயமாக்கலுக்கான ஏகாதிபத்திய சக்திகளின் ஒரு புதிய வேட்கைக்கு மத்தியில், 56 ஆவது முனீச் பாதுகாப்பு மாநாட்டில் நேட்டோ கூட்டணியின் முறிவு மேலாதிக்கம் செலுத்தியது.

ஓர் அப்பட்டமான அறிக்கையில், “நாடுகளுக்கு இடையிலான பிரதான போர், கடந்த காலத்திற்கான விடயமாக மட்டுமே இருக்காது,” என்பதை அம்மாநாட்டு ஆரம்ப அறிக்கை தெளிவுபடுத்தியது. அதற்கு பதிலாக, “வல்லரசுகளுக்கு இடையிலான இன்னும் அதிக தீவிரமான போட்டிக்கு திரும்புவது அனேகமாக மீண்டும் போரை உருவாக்கக்கூடும்,” என்றது.

Nancy Pelosi attends a news conference with with members of the U.S. delegation during the Munich Security Conference, Sunday, February 16, 2020 [Credit: AP Photo/Jens Meyer]

அமெரிக்க பாதுகாப்பு செயலர் மார்க் எஸ்பெர் பிரதிநிதிகளிடையே உரையாற்றுகையில், “நாம் இப்போது வல்லரசு போட்டி சகாப்தத்தில் உள்ளோம்,” இதன் அர்த்தம், “நாம் தீவிரம் குறைந்த மோதலில் இருந்து மீண்டுமொருமுறை அதிதீவிர போர்முறைக்கு தயாராக வேண்டும்,” என்று எச்சரித்தார்.

போர்களில் போராடுவதற்கு தயாரிப்பு செய்ய வேண்டியிருப்பதன் மீது ஏகாதிபத்திய சக்திகளுக்கு இடையே ஒருமித்த உடன்பாடு இருந்தது என்றாலும், அதேயளவுக்கு யார் இலக்காக இருக்கவேண்டும் என்பதில் மலைப்பூட்டும் அளவுக்குப் பிளவுகளும் இருந்தன.

இந்த அழுத்தம் மிகுந்த சூழலில், அமெரிக்கா மற்றும் ஐரோப்பாவுக்கு இடையே நீண்டகாலமாக கொதித்துக் கொண்டிருக்கும் பதட்டங்களும் பிரச்சினைகளும் வெடித்து மேற்புறத்துக்கு வந்தன. அவை போருக்குப் பிந்தைய வரலாற்றில் வாஷிங்டன் மற்றும் அதன் நேட்டோ கூட்டாளிகளுக்கு இடையிலான பரந்த பிளவுகளை வெளிப்படுத்துகின்றன.

பிரான்ஸ், ஜேர்மன் மற்றும் மிக சமீபத்தில் பிரிட்டனும் அதனதன் நாடுகளின் கைத்தொலைபேசி வலைப்பின்னலை கட்டமைப்பதில் சீனத் தொலைதொடர்பு நிறுவனம் ஹூவாய் க்குத் தடைவிதிக்க வேண்டுமென்ற அமெரிக்க கோரிக்கைகளை நிராரிப்பதென, அவை எடுத்த முடிவே அம்மாநாட்டின் உடனடி உள்ளடக்கமாக இருந்தது.

அமெரிக்க அதிகாரிகள் அவர்களின் தொடர்ச்சியான உரைகளில், அமெரிக்காவின் சீன-விரோத அச்சில் இணையுமாறு அவர்களின் நேட்டோ கூட்டாளிகளை மிரட்டவும் தாஜா செய்யவும் முயன்றனர். பாதுகாப்பு செயலர் எஸ்பெரின் அச்சுறுத்தல்கள், சபாநாயகர் நான்சி பெலோசியின் தார்மீக நெறிப்படுத்தலுடனும் மற்றும் "மேற்கு ஜெயித்து வருகிறது,” என்று அறிவித்த வெளியுறவுத்துறை செயலர் மைக் பொம்பியோவின் வெற்று வெற்றி பிரவாகத்துடனும் சேர்ந்து வந்தன.

ஹூவாய் டிஜிட்டல் "எதேச்சதிகாரவாதத்தை" ஏற்றுமதி செய்கிறது என்ற அமெரிக்க சபாநாயகர் நான்சி பெலோசியின் வாதத்தைச் சவால்விடுத்து சீன இராஜாங்க அதிகாரி ஒருவர் ஒரு கேள்வி எழுப்பியதும், அந்த அறை முழுவதும் எழுந்த கரவொலியானது, அமெரிக்காவுக்கும் அதன் நேட்டோ கூட்டாளிகளுக்கும் இடையிலான பிளவுகளின் மிகவும் ஆழமாக தன்மையை காட்டியது.

ரஷ்யாவுக்கு எதிராக ட்ரம்ப் போதுமான ஆக்ரோஷத்துடன் இல்லை என்ற அடித்தளத்தில் அவரை பதவிநீக்குவதற்கான ஒரு தோல்வியடைந்த முயற்சியை சமீபத்தில் தான் நிறைவு செய்திருந்த பிரதிநிதிகள் சபையின் உளவுத்துறை குழு தலைவர் ஆடம் ஸ்கிஃப் இனதும் மற்றும் பெலோசியினதும் பிரசன்னம், எஸ்பெர் எதை "பென்டகனின் உயர்மட்ட கவலையே, சீன மக்கள் குடியரசு தான்,” என்று குறிப்பிட்டதற்கு எதிரான ஓர் ஐக்கிய முன்னணியை முன்நிறுத்தி இருந்தது.

“ஜனாதிபதி ட்ரம்பின் சீனக் கொள்கையுடன்" அவர் உடன்படுகிறாரா என்று பெலோசியிடம் கேட்கப்பட்ட போது, “அவ்விடயத்தில் நாங்கள் உடன்பட்டுள்ளோம்,” என்றவர் பதிலளித்தார்.

வெடிப்பார்ந்த பிளவுகளுக்கு அப்பாற்பட்டு, அந்த ஒட்டுமொத்த நிகழ்வும் ஓர் ஆழ்ந்த பதட்டம் மற்றும் நெருக்கடி சூழலால் நிரம்பி இருந்தது. அம்மாநாட்டு தலைவர் வொல்ஃப்காங் இஷிங்கரின் ஆரம்ப அறிக்கை, “உண்மையில் மேற்கு தீவிர பிரச்சினைக்குள் உள்ளது,” என்று அறிவித்தார்.

“மேற்கு இன்மை,” (Westlessness) என்பதே அம்மாநாட்டின் கருப்பொருளாக இருந்தது. அமெரிக்க மேலாதிக்கத்தின் வீழ்ச்சி, அமெரிக்கா மற்றும் ஐரோப்பாவுக்கு இடையிலான மோதல்களின் அதிகரிப்பு, பாசிசவாத வலதின் வளர்ச்சி மற்றும் சர்வதேச விதிமுறைகளின் முறிவு என பல்வேறு நெருக்கடிகளையும் ஒட்டுமொத்தமாக உள்ளடக்குவதற்கு அந்த ஆரம்ப அறிக்கை, "மேற்கை" ஸ்பென்க்லிரிய (Spenglerian) தடுப்பு சாதனமாக பயன்படுத்தி இருந்தது.

“ஈரான் உடன்படிக்கை அல்லது குழாய்வழி திட்டமான Nord Stream 2 இன் எதிர்காலத்தில் இருந்து நேட்டோவின் பாதுகாப்பு செலவினங்கள் மற்றும் அட்லாண்டிக் கடந்த நாடுகளுக்கு இடையிலான வர்த்தக சமநிலையின்மை வரையில்,” ஒட்டுமொத்தமாக பல்வேறு பிரச்சினைகளையும் மையப்படுத்தி, அந்த அறிக்கை, “மேற்கிற்குள் நிலவும் கருத்து பேதங்கள்" மற்றும் "விரிசல்களை" குறித்து பேசியது.

உண்மையில், அந்த நிகழ்வு நடந்து கொண்டிருக்கும் போதே கூட, அமெரிக்கா ஐரோப்பிய விமானங்கள் மீது புதிய இறக்குமதி வரிகளை அறிவித்தது, அதேவேளையில் அமெரிக்க எரிசக்தித்துறை செயலர் Dan Brouillette ரஷ்யாவுடன் இயற்கை எரிவாயு குழாய்வழி அமைப்பதற்கான ஜேர்மனியின் திட்டங்களை கைவிடுமாறு அதை நிர்பந்திப்பதில் அமெரிக்க தடையாணைகளின் வெற்றியைக் குறித்து சுயபெருமை பீற்றினார்.

ஹூவாய் சம்பந்தமான மோதல், அதனளவில் முக்கியமானதே என்றாலும், பல விதங்களில் அது இன்னும் அதிக அடிப்படையான பிளவுகளுக்கான ஒரு போலிக்காரணமாக உள்ளது. முதலாம் உலக போருக்கு முந்தைய காலக்கட்டத்தில், பிரதான சக்திகள் உலகை மறுபங்கீடு செய்வதற்காக, “செல்வாக்கு மண்டலங்கள்" என்ற காலனித்துவ மொழியைப் பயன்படுத்தியவாறு, போட்டிப் போட்டுக் கொண்டிருந்தன.

சமீபத்தில் Foreign Affairs இன் ஒரு கட்டுரை சுட்டிக்காட்டியதைப் போல, “ஒருமுனை துருவமுனைப்படல் முடிந்துவிட்டது, அதனுடன் சேர்ந்து அமெரிக்க தலைமையிலான சர்வதேச ஒழுங்கமைப்பில் மற்ற நாடுகளுக்கு ஒதுக்கப்பட்ட இடத்தை முறையாக அவை ஏற்றுக் கொள்ளும் என்ற பிரமையும் முடிந்து விட்டது. அமெரிக்காவைப் பொறுத்த வரையில், இன்றைய உலகில் செல்வாக்கு மண்டலங்கள் உள்ளன—அவை அனைத்துமே அமெரிக்க செல்வாக்கு மண்டலங்கள் கிடையாது என்ற யதார்த்தத்தை அது ஏற்றுக் கொள்ள வேண்டியிருக்கும்,” என்று குறிப்பிட்டது.

ஐரோப்பிய தலைவர்கள், ஒவ்வொருவரும் அவர்களின் பங்களிப்புகளில், கெய்சர் வில்ஹெம் எதை "சூரியனில் இடம்" என்று குறிப்பிட்டரோ அதை அடைவதற்கான அவர்களின் பேரார்வத்தைத் தெளிவுபடுத்தினர்.

“ஐரோப்பா எதிர்காலத்தின் அதன் பலத்தைக் காட்ட வேண்டியிருக்கும்,” என்று ஜேர்மன் வெளியுறவுத்துறை அமைச்சர் ஹெய்கோ மாஸ் தெரிவித்தார். “ஈராக், சிரியா, லிபியா, உக்ரேன் மற்றும் சாஹெல்" போன்ற நெருக்கடிகளைத் தீர்க்க, “ஜேர்மனி, இராணுவரீதியாகவும் கூட, இன்னும் அதிகமாக ஈடுபாடு காட்ட தயாராக உள்ளது,” என்று கூறி நிறைவு செய்தார்.

1991 இல் சோவியத் ஒன்றியம் கலைக்கப்பட்டதைத் தொடர்ந்து, முதலாம் வளைகுடா போர் தொடங்கி, அமெரிக்கா அப்பட்டமான இராணுவ பலத்தின் மூலமாக உலகை மறுஒழுங்கு செய்ய தொடங்கியது. அந்நேரத்தில் நான்காம் அகிலத்தின் அனைத்துலக குழு எழுதியதைப் போல, வளைகுடா போர் எதை குறித்தது என்றால்:

உலகின் ஒரு புதிய ஏகாதிபத்திய மறுபங்கீட்டின் தொடக்கமாகும். போருக்குப் பிந்தைய சகாப்தம் முடிந்தது என்பது காலனித்துவ சகாப்தத்திற்குப் பிந்தைய காலம் முடிந்தது என்பதை அர்த்தப்படுத்துகிறது. ஏகாதிபத்திய முதலாளித்துவம், “சோசலிசத்தின் தோல்வி" என்று அது பிரகடனப்படுத்துகையில், வார்த்தைகளில் இல்லையென்றாலும் நடவடிக்கைகளில், அது சுதந்திரம் தோற்றுவிட்டதைப் பிரகடனப்படுத்துகிறது. அனைத்து பிரதான ஏகாதிபத்திய சக்திகளும் எதிர்கொண்டு வரும் ஆழமடைந்து வரும் நெருக்கடி மூலோபாய ஆதாரவளங்கள் மற்றும் சந்தைகள் மீது கட்டுப்பாட்டைப் பாதுகாத்து வைக்க அவற்றை நிர்பந்திக்கிறது. ஓரளவுக்கு அரசியல் சுதந்திரம் பெற்றிருந்த முன்னாள் காலனித்துவ நாடுகள், மீண்டும் கீழ்படிய செய்யப்படும். ஏகாதிபத்தியம் இரண்டாம் உலக போருக்குப் பின்னர் இருக்கும் பின்தங்கிய நாடுகள் மீது ஏதோவொரு விதத்தில் கட்டுப்பாடின்றி மேலாதிக்கத்தை மீட்டமைக்க உத்தேசிக்கிறது என்பதை, ஈராக்கிற்கு எதிரான அதன் மூர்க்கமான தாக்குதலில், முன்னறிவிக்கிறது.

உலகை மீளக்கைப்பற்றவதற்கான அமெரிக்க ஏகாதிபத்தியத்தின் முயற்சி ஓர் அளப்பரிய மனிதகுல பேரழிவை மட்டும் உருவாக்கி இருக்கவில்லை, அது அமெரிக்காவுக்கும் ஒரு பேரழிவாக முடிந்துள்ளது. Foreign Affairs இன் மிக சமீபத்திய பிரசுரம் தெளிவுபடுத்துவதாவது:

வாஷிங்டனின் அதிகாரத்திற்குச் சவால் விடுப்பதில் இருந்து கூட்டாளிகளுக்கும் போட்டியாளர்களுக்கும் ஒன்றாக புத்தி புகட்டும் அளவுக்கு அமெரிக்கா அதன் மிகப்பலம்வாய்ந்த இராணுவ மேலாதிக்கத்தைப் பேண வேண்டும் என்று பென்டகன் திட்ட வகுப்பாளர்கள் 1992 இல் வரையறுத்த கருதுகோளைச் சுற்றியே, அண்மித்து மூன்று தசாப்தங்களாக அமெரிக்க கொள்கை வகுப்பாளர்கள் ஒருங்கிணைந்திருந்தார்கள். அந்த மேலாதிக்கமானது விரைவிலேயே அதனது சுயதேவைக்கானதாக மாறியது. மேலாதிக்கம் செலுத்த முயல்வதற்கு மாறாக வெறுமனே சுயபாதுகாப்பினை நோக்கி சென்றதன் மூலமாக, மேலாதிக்க மூலோபாயம் அமெரிக்காவை ஒரு கீழ்நோக்கிய சுழலில் மூழ்கடித்தது: அதாவது அமெரிக்க நடவடிக்கைகள் எதிர்விரோதங்களையும் எதிரிகளையும் உருவாக்கின, இது மேலாதிக்கத்தைப் பின்தொடர்வதை இன்னும் அபாயகரமானதாக ஆக்கிவிட்டது.

அமெரிக்காவின் தொடர்ச்சியான பல இரத்தக்களரியான போர்கள் ஒன்று மாற்றி ஒன்றாக பேரழிவை உண்டாக்கி உள்ளன என்றாலும் கூட, அமெரிக்க ஏகாதிபத்தியம், குறிப்பிடும்படியான ஆணவத்துடன், இந்த நெருக்கடியிலிருந்து தன்னை விடுவித்துக் கொள்வதற்கு புதிய போர்கள் மற்றும் புதிய அச்சுறுத்தல்களையே வழிவகையாக காண்கிறது. ஆனால் இது புதிய பேரழிவுகளுக்கு மட்டுமே உறுதியளிக்கின்றது.

உலக போருக்கு அவர்கள் தயாரிப்பு செய்து வருவதை ஏகாதிபத்திய சக்திகளின் பிரதிநிதிகள் பட்டவர்த்தனமாக பேசுவது மனிதகுலம் எதிர்கொண்டிருக்கும் அளப்பரிய அபாயங்களையும், சர்வதேச தொழிலாள வர்க்கத்தின் அடிப்படையில் ஒரு புதிய பாரிய போர்-எதிர்ப்பு இயக்கத்தைக் கட்டமைக்க வேண்டிய அவசியத்தையும் எடுத்துக்காட்டுகிறது.