சிரியாவில் துருக்கிய துருப்புகள் மீதான தாக்குதலை அடுத்து போர் பதட்டங்கள் அதிகரிக்கின்றன

Bill Van Auken
3 March 2020

மொழிபெர்ப்பின் மூலக் கட்டுரையை இங்கே காணலாம்

சிரியாவின் வடக்கு மாகாணமான இட்லிப்பில் படிப்படியாக அதிகரித்து வரும் பதட்டங்களைக் குறைக்குமாறு உலக அரசாங்கங்களும், ஐக்கிய நாடுகள் மற்றும் நேட்டோ கூட்டணியும் அழைப்பு விடுத்திருப்பதற்கு மத்தியில், பேரழிவுகரமான ஓர் உலக போரைத் தூண்டக்கூடிய விதத்தில் துருக்கி மற்றும் ரஷ்யாவுக்கு இடையே ஒரு முற்றுமுதலான இராணுவ மோதலின் அச்சுறுத்தல் அதிகரித்து வருகிறது.

சுமார் மூன்று டஜன் சிப்பாய்கள் கொல்லப்பட்ட (உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை ஏறத்தாழ 50 ஆக இருக்கலாமென ஒரு தகவல் கூறுகிறது) துருக்கிய இராணுவத் தளம் மீதான செவ்வாய்கிழமை தாக்குதல் மற்றும் சிரிய அரபு இராணுவ படைப்பிரிவுகளுக்கு எதிரான பதிலடி தாக்குதல்களை அடுத்து, சிரியாவில் துருக்கியும் ரஷ்யாவும் நேரெதிராக எதிரெதிர் நோக்கங்களைப் பின்தொடர்ந்து வருகையில், அந்த வன்முறை குறித்து அங்காரா மற்றும் மாஸ்கோ வழங்கும் விளக்கங்கள் ஒன்றுக்கொன்று முற்றிலும் முரண்பாடாக உள்ளன.

துருக்கியின் பாதுகாப்பு அமைச்சர் Hulusi Akar, வலதுபுறம் மூன்றாவது நபர், பெப்ரவரி 28, 2020, துருக்கி, ஓஸ்மானியெ, பாஹ்சியில், சிரியாவில் கொல்லப்பட்ட ஒரு துருக்கிய சிப்பாய் ஹலீல் இப்ராஹிம் அக்காயாவின் இறுதிச் சடங்கில் கலந்து கொள்கிறார் [படம்: அசோசியேடெட் பிரஸ்]

துருக்கியின் பாதுகாப்பு அமைச்சர் Hulusi Akar, வலதுபுறம் மூன்றாவது நபர், பெப்ரவரி 28, 2020, துருக்கி, ஓஸ்மானியெ, பாஹ்சியில், சிரியாவில் கொல்லப்பட்ட ஒரு துருக்கிய சிப்பாய் ஹலீல் இப்ராஹிம் அக்காயாவின் இறுதிச் சடங்கில் கலந்து கொள்கிறார் [படம்: அசோசியேடெட் பிரஸ்]

போர் அச்சுறுத்தல் தொடர்ந்து கொண்டிருக்கிறது என்பதற்கான தவறுக்கிடமற்ற ஓர் அறிகுறியாக, ரஷ்யக் கடற்படை கருங்கடலில் இருந்து மத்திய தரைக்கடல் வரையில் ஏற்கனவே அங்கே அனுப்பப்பட்டுள்ள ஆயுதமேந்திய சிறிய போர்க்கப்பல்களுடன் இணைய, கலிப்ர் போர்க்கப்பல் ஏவுகணைகள் ஏந்திய அதேபோன்ற இரண்டு போர்க்கப்பல்களை மறுநிலைநிறுத்தம் செய்திருப்பதாக அறிவித்தது. இம்மூன்று போர்க்கப்பல்களும் சிரிய கடற்கரையை ஒட்டி செயல்படுத்தப்படும், இவை ஜனாதிபதி ரெசெப் தயிப் எர்டோகன் அரசாங்கம் இட்லிப்பில் நிலைநிறுத்தி உள்ள சுமார் 10,000 துருக்கிய துருப்புகளுக்கு ஒரு நேரடி அச்சுறுத்தலை முன்னிறுத்துகின்றன.

எர்டோகனும் ரஷ்ய ஜனாதிபதி விளாடிமீர் புட்டினும் வெள்ளிக்கிழமை தொலைபேசியில் உரையாடினர். அந்த உரையாடல் குறித்து கிரெம்ளினின் எழுத்து வடிவத்தின்படி, இட்லிப்பில் தீவிரமடைந்து வரும் மோதல் குறித்து இருவரும் "தீவிர கவலையை வெளிப்படுத்தி" இருந்ததுடன் "ரஷ்யா மற்றும் துருக்கிய பாதுகாப்பு அமைச்சர்களுக்கு இடையே மிகவும் துல்லியமான ஒத்துழைப்பின் முக்கியத்துவம்" மீது உடன்பட்டனர்.

அவ்விரு ஜனாதிபதிகளும் நெருக்கடியைத் தணிக்கும் ஒரு முயற்சியில் அடுத்த வாரம் மாஸ்கோவில் சந்திக்க இருப்பதாகவும் கிரெம்ளின் செய்தி தொடர்பாளர் ஒருவர் தெரிவித்தார்.

ஆனால் துருக்கிய துருப்புகள் மீதான வியாழக்கிழமை தாக்குதலுக்கான காரணமாக அவரவர்களின் பாதுகாப்பு அமைச்சகங்கள் வழங்கியுள்ள விபரங்களோ ஒன்றுக்கொன்று முற்றிலும் முரண்பாடாக இருந்தன. ரஷ்ய படைகள் என்பதற்கு பதிலாக, அந்த தாக்குதல் சிரியர்களால் நடத்தப்பட்டது என்பதில் இருதரப்பும் உடன்பட்டன என்றாலும், (இட்லிப்பில் பெரும்பாலான வான்வழி குண்டுவீச்சுகளுக்கு ரஷ்யாவே பொறுப்பாக உள்ள நிலையில், அப்பகுதியில் அதன் போர் விமானங்கள் பறக்கவே இல்லை என்று மாஸ்கோ வலியுறுத்துகின்ற நிலையில்) துருக்கி அதுவொரு வான்வழி தாக்குதலில் நடந்ததாக பழிசுமத்தியது, அதேவேளையில் ரஷ்யாவோ அந்த துருப்புகள் சிரியாவின் சரமாரியான பீரங்கி தாக்குதலில் கொல்லப்பட்டதாக தெரிவித்தது. அந்த உயிரிழப்புகளுக்கு சிரியா மீது குற்றம் சாட்டியது, இரு தரப்பினரும் ரஷ்ய-துருக்கிய நேரடி மோதலைத் தவிர்ப்பதற்கான அவர்களின் விருப்பத்தை சுட்டிக்காட்டுகிறது.

அதன் துருப்புகளது இருப்பிடம் குறித்து ரஷ்ய இராணுவத்திற்கு தகவல் தெரிவித்திருந்ததாகவும், அந்த தகவலை சிரிய அரசுப் படைகளுக்குக் கொடுத்ததற்கு மாஸ்கோ தான் பொறுப்பு என்றும் துருக்கி வலியுறுத்தியது. “இந்த தாக்குதலின் போது, எங்கள் இராணுவப் படைப்பிரிவைச் சுற்றி அங்கே ஆயுதமேந்திய குழுக்களே இல்லை என்பதை நான் குறிப்பிட விரும்புகிறேன்,” என்று வெள்ளியன்று துருக்கிய பாதுகாப்பு அமைச்சர் ஹூலுசி அகார் தெரிவித்தார்.

ஆனால், துருக்கிய துருப்புகள் "பயங்கரவாத குழுக்களின் போர்க்கள அமைப்புகளுடன் இணைந்திருந்தன" என்றும், ரஷ்ய இராணுவத்திற்கு எந்த எச்சரிக்கையும் வழங்காமல் “அவர்கள் இருந்திருக்கக் கூடாத" பகுதிக்குள் அனுப்பப்பட்டிருந்ததாகவும் குற்றஞ்சாட்டி ரஷ்ய பாதுகாப்பு அமைச்சகம் ஓர் அறிக்கை வெளியிட்டது.

இந்த தாக்குதல், சிரியாவின் தலைநகர் டமாஸ்கஸையும் அதன் இரண்டாவது நகரமான அலெப்போவையும் இணைக்கும் பிரதான நெடுஞ்சாலையின் இருபக்கமும் பரவியுள்ள மூலோபாய நகரமான சாராகிப் மீது கட்டுப்பாட்டை பெறுவதற்காக சிரிய அரபு ஆயுதப்படைக்கும் துருக்கிய ஆதரவிலான போராளிகள் குழுவுக்கும் இடையிலான ஒரு கடுமையான மோதல் சூழலில் நடந்தது. இவ்வார தொடக்கத்தில் சிரிய அரசுப் படைகள் அந்நகரைக் கைப்பற்றிய நிலையில், “கிளர்ச்சியாளர்கள்" என்றழைக்கப்படுபவர்களால் மீண்டும் அது கைப்பற்றப்பட்டது.

இட்லிப்பில் போர்-நிறுத்தம் கொண்ட "இராணுவமயப்படுத்தப்படாத பகுதியை" நடைமுறைப்படுத்தவும் மற்றும் அதிலிருந்து அனைத்து கனரக ஆயுதங்கள், ராக்கெட் அமைப்புகள் மற்றும் சிறிய ரக பீரங்கிகளுடன் சேர்ந்து —"மிதவாதிகளுக்கு" எதிரான— "தீவிர கொள்கையுடைய" கிளர்ச்சியாளர்களும் இல்லாத ஒரு பகுதியை ஏற்படுத்துவதற்காக 2018 இல் எட்டப்பட்ட ரஷ்ய-துருக்கிய சோச்சி உடன்படிக்கையை மீறியிருப்பதாக அங்காராவும் மாஸ்கோவும் ஒன்றையொன்று குற்றஞ்சாட்டி கொண்டன.

இட்லிப்பின் பெரும் பகுதிகள் மீது மீண்டும் கட்டுப்பாட்டை எடுப்பதற்கான ஒரு தாக்குதலைத் தொடங்கியதன் மூலமாக அந்த உடன்படிக்கையை மீறிவிட்டதாக, துருக்கி, சிரிய அரசையும், அதன் பிரதான கூட்டாளிகளையும், ரஷ்யா மற்றும் ஈரானையும், குற்றஞ்சாட்டி உள்ளது. “தீவிரக் கொள்கையுடையவர்களை" “மிதவாதிகளில்" இருந்து துருக்கி பிரிக்க தவறியதாகவும், அதேவேளையில் அது ஆயுதமயப்பட்ட டிரோன்கள் மற்றும் மத்தியரக பீரங்கி தாக்குதல்களைப் பயன்படுத்துவது உட்பட "கிளர்ச்சியாளர்களுக்கு" இராணுவ ஆதரவு வழங்குவதாகவும் ரஷ்யா குற்றஞ்சாட்டுகிறது.

ஐக்கிய நாடுகள் சபை பயங்கரவாத அமைப்பு என்று பட்டியலிட்ட பயங்கரவாத முன்னணியான, அல் கொய்தாவுடன் இணைப்பு கொண்ட முன்னாள் சிரிய துணை அமைப்பின் தலைமையில் செயல்படும் ஹயாத் தஹ்ரீர் அல்-ஷம் என்பதே இட்லிப்பில் சண்டையிடும் பிரதான "கிளர்ச்சி" படையாக உள்ளது. முன்னாள் ISIS (ஈராக் மற்றும் சிரியாவின் இஸ்லாமிக் அரசு) நடவடிக்கைக்கு பொறுப்பேற்றிருந்த முன்னாள் உயர்மட்ட அமெரிக்க தூதர் Brett McGurk, இட்லிப் மாகாணத்தை "9/11 க்குப் பின்னர் மிகப்பெரிய அல் கொய்தா பாதுகாப்பு இடம்" என்றும், “ஒரு மிகப்பெரும் பிரச்சினை" என்றும் விவரித்தார். அதன் பங்கிற்கு, ரஷ்யா, இட்லிப்பில் திரண்டுள்ள அல் கொய்தா தொடர்புபட்ட படைகள், பயங்கரவாதத்தை விதைக்கும் முயற்சியில் அதன் பகுதிகளைத் துண்டாடுவதற்காக காகசஸிற்கு மீளநிலைநிறுத்தப்படலாம் என்று அஞ்சுகிறது.

இட்லிப்பில் அதன் துருப்புகள் மீதான தாக்குதலுக்கு துருக்கியின் பதிலடி, 300 க்கும் அதிகமான சிரிய சிப்பாய்களைச் "செயலிழக்க" செய்திருந்த நிலையில், டஜன் கணக்கான சிரிய ஹெலிகாப்டர்கள், டாங்கிகள் மற்றும் ஹோவிட்சர்களை (மத்திய ரகப் பீரங்கிகள்) அழித்ததாக துருக்கிய பாதுகாப்பு அமைச்சர் அகார் வெள்ளிக்கிழமை தெரிவித்தார்.

துருக்கிய கூற்றுக்கள் மிகைப்படுத்தப்பட்டவை என்றும், "பயங்கரவாதிகளின் வீழ்ச்சியடைந்த மன உறுதியை உயர்த்துவதற்கான முயற்சி" என்றும் சிரிய அரசாங்க செய்தி தொடர்பாளர் ஒருவர் வெள்ளிக்கிழமை ஓர் அறிக்கை வெளியிட்டார்.

இட்லிப் மோதல் குறித்து விவாதிக்க நேட்டோவும் மற்றும் ஐக்கிய நாடுகள் பாதுகாப்பு அவையும் வெள்ளிக்கிழமை ஒன்றுகூடின. அந்த நேட்டோ கூட்டம் துருக்கியின் கோரிக்கைக்கு இணங்க கூட்டப்பட்டிருந்தது.

நேட்டோவின் விடையிறுப்பு, வருத்தம் மற்றும் நல்லிணக்கத்திற்கான அறிவிப்புகளில் ஒன்றாக இருந்தது, ஆனால் சிரியாவில் துருக்கியின் நடவடிக்கைக்கு எந்த பிரத்யேக ஆதாரவையும் வெளிப்படுத்தவில்லை. சிரிய ஆட்சியினதும் மற்றும் ரஷ்ய படைகளினதும் "கண்மூடித்தனமான" வான்வழித் தாக்குதல்களைக் கண்டனம் செய்தும், அதேவேளையில் "இந்த அபாயகரமான நிலைமையில்" அனைத்து தரப்புகளும் தீவிரப்பாட்டைக் குறைக்க வேண்டுமென வலியுறுத்தியும் நேட்டோ பொதுச் செயலாளர் ஜென்ஸ் ஸ்டொல்டென்பேர்க் ஓர் அறிக்கை வெளியிட்டார்.

நேட்டோவுக்கான அமெரிக்க தூதர் கே பேய்லி ஹட்சின்சன், சிரியா சம்பந்தமாக "அனைத்தும் மேஜையில் இருப்பதாக" அறிவித்த அதேவேளையில், “நாங்கள் அவர்களின் கடந்த கால மற்றும் எதிர்கால கூட்டாளி என்பதை ஜனாதிபதி எர்டோகன் காண்பாரென நம்புகிறேன். அவர்கள் எஸ்-400 ஐ கைவிட வேண்டும்,” என்றும் திட்டவட்டமாக குறிப்பிட்டார். இது அங்காரா 2.5 பில்லியன் டாலர் மதிப்பில் ரஷ்யாவின் எஸ்-400 வான்வழி பாதுகாப்பு அமைப்பை வாங்குவதற்கான உடன்படிக்கையைக் குறித்த குறிப்பாகும். துருக்கி நேட்டோ கூட்டணியின் சுற்றுவட்டத்திலிருந்து மாஸ்கோவின் வட்டப்பாதைக்குள் தாவுவதாக, அந்த உடன்படிக்கை மீது அமெரிக்காவும் ஏனைய நேட்டோ உறுப்பு நாடுகளும் குற்றஞ்சாட்டி இருந்தன.

சிரிய வான்வெளியில் ரஷ்யாவின் கட்டுப்பாட்டை எதிர்கொள்ள பாட்ரியாட் ஏவுகணை குண்டுகளை அனுப்புவதற்கான எர்டோகன் அரசாங்கத்தினது கோரிக்கையை, வாஷிங்டன் மறுத்து விட்டதைக் குறித்து எர்டோகன் அரசாங்கம் ஒப்புக் கொண்டுள்ளது. துருக்கிய துருப்புகள் மீதான தாக்குதலுக்கு இரண்டு நாட்களுக்கு முன்னர், அமெரிக்க பாதுகாப்பு செயலர் மார்க் எஸ்பெர் மற்றும் அமெரிக்காவின் முப்படைகளின் தலைமை தளபதி ஜெனரல் மார்க் மில்லெ இருவரும் சிரியா "உள்நாட்டு போரில் மீண்டும் ஈடுபடும்" உத்தேசம் வாஷிங்டனுக்கு இல்லை என்று காங்கிரஸ் குழுக்களுக்கு முன்னால் விளக்கம் அளித்தனர். கடந்தாண்டு சிரிய-துருக்கிய எல்லையிலிருந்து படைகளைத் திரும்ப பெற்றதற்குப் பின்னரும், அந்நாட்டின் எண்ணைய் வயல்களின் மீது கட்டுப்பாட்டைப் பாதுகாப்பதற்காகவும் மற்றும் அவர்களின் மூலோபாய ஆதாரவளங்களை டமாஸ்கஸ் அணுகுவதைத் தடுப்பதற்காகவும் என்ற சாக்குபோக்கின் கீழ், அமெரிக்க இராணுவம் வடகிழக்கு சிரிய மாகாணமான Deir Ezzor இல் 500 துருப்புகளை நிறுத்தி இருந்தது.

சிரியாவில் அங்காராவின் நோக்கங்களை ஆதரிக்க செய்ய ஐரோப்பிய நேட்டோ சக்திகளை அச்சுறுத்தும் ஓர் அப்பட்டமான முயற்சியில், அங்காரா அந்நாட்டிலிருந்து ஐரோப்பாவுக்கு செல்லும் சுமார் 3.5 மில்லியன் அகதிகளை இனி தடுத்து நிறுத்தாது என்று துருக்கிய அரசு அதிகாரிகள் சுட்டிக்காட்டினர். ஏகியன் கடலின் படகுகளுக்கும், கிரீஸ் மற்றும் பல்கேரியாவை ஒட்டிய எல்லைகளை நோக்கியும் அகதிகள் அழைத்துச் செல்லப்படும் காணொளிகளை அரசு ஊடகங்கள் ஒளிபரப்பின. வெள்ளிக்கிழமை கிரீஸிற்கும் துருக்கிக்கும் இடையே வரையறுக்கப்பட்ட மண்டலத்திற்குள் நுழைந்த நூற்றுக் கணக்கான அகதிகளை நோக்கி கிரேக்க பொலிஸ் "அதைரியப்படுத்தி தடுப்பதற்காக" கண்ணீர் புகைக்குண்டு வீசியது, அதேவேளையில் பல்கேரியா எல்லைக்கு 1,000 துருப்புகளை அனுப்புவதாக அறிவித்தது.

துருக்கியுடன் ஒற்றுமையுணர்வை அறிவித்து சிரியா மற்றும் ரஷ்யாவைக் கண்டிக்கும் நோக்கில் பிரிட்டனும் ஏனைய நேட்டோ சக்திகளும் விடுத்த கோரிக்கையால் கூட்டப்பட்ட ஐக்கிய நாடுகள் பாதுகாப்பு அவை அமர்வில், ஐக்கிய நாடுகள் சபை பொதுச் செயலாளர் António Guterres இட்லிப்பில் இன்னும் அதிக நேரடியான இராணுவ மோதல்களால் ஏற்படக்கூடிய "கடுமையான பாதிப்புகளை" குறித்து எச்சரித்தார். அனைத்து தரப்பும் “கூடுதல் தீவிரபாட்டின் விளிம்பில் இருந்து பின்வாங்குமாறு" அவர் அழைப்பு விடுத்தார். “இட்லிப்பில் உள்ள படைகளின் அளவைக் கணக்கில் கொண்டு பார்க்கையில்,” சண்டைக் கட்டுப்பாட்டை மீறி செல்லும் அபாயத்தை மிருதுவாக எடுத்துக் கொள்ள முடியாது என்றவர் அவைக்குத் தெரிவித்தார்.

அந்நாளின் ஆரம்பத்தில், ஐரோப்பிய ஒன்றியத்தின் வெளியுறவுக் கொள்கை தலைவர் ஜோசெப் போரெல் கூறுகையில், சிரியாவில் நடக்கும் மோதல்கள் ஒரு "மிகப்பெரிய பகிரங்கமான சர்வதேச இராணுவ மோதலாக" விரைவிலேயே தீவிரமடையக் கூடும் என்று அதேபோன்று ஓர் எச்சரிக்கை விடுத்தார்.

சிரியாவில் எர்டோகன் அரசாங்கத்தின் இராணுவத் தலையீடு துருக்கிய தொழிலாள வர்க்கத்தில் ஆழமாக மதிப்பிழந்துள்ளது. போர்-எதிர்ப்புணர்வுகள் பகிர்ந்து கொள்ளப்பட்டு வருவதைத் தடுக்கும் ஒரு முயற்சியில் வியாழக்கிழமை மாலை அது சமூக ஊடகங்களைத் தற்காலிகமாக நிறுத்தியது.

ரஷ்யாவுடன் தீவிரமடையக் கூடிய ஒரு மோதல் துருக்கிய சந்தைகளையும் புரட்டிப்போட்டது, போர்சா இஸ்தான்புல் 100 குறியீடு வெள்ளிக்கிழமை தொடங்கிய போதே 10 சதவீதம் சரிந்தது, அதேவேளையில் துருக்கிய லிரா மதிப்பு தொடர்ந்து ஐந்தாவது நாளாக வீழ்ச்சி அடைந்தது. ஒரு பின்னடைவில் இருந்து துருக்கியின் பொருளாதாரம் சமீபத்தில் மீண்டு வந்தமை, துருக்கி மற்றும் ஐரோப்பாவுக்கு ரஷ்ய எரிவாயுவைக் கொண்டு வருவதற்கான TurkStream குழாய்வழி திட்டத்தை கடந்த மாதம் தொடங்கியது உள்ளடங்கலாக பகுதியாக ரஷ்யாவுடனான உடன்படிக்கைகளுடன் பிணைந்திருந்தது.

சிரிய மோதல் ஓர் உலக பேரழிவு போராக வெடிப்பதற்கான சாத்தியக்கூறு, அரசாங்கங்களும் பெருநிறுவன ஊடகங்களும் அக்கறை கொண்டு ஒப்புக் கொள்வதை காட்டிலும் மிகப் பெரியளவில் உள்ளது. கடந்த வாரம், ரஷ்ய செய்தி வலைத்தளம் gazeta.ru அதன் முக்கிய இராணுவப் பகுப்பாய்வாளர் ஓய்வு பெற்ற கர்னல் Mikhail Khodarenok இன் ஒரு கட்டுரையைப் பதிவிட்டது, அவர் அதில் குறிப்பிடுகையில், துருக்கிக்கு ரஷ்யா ஆதரவளிப்பது ஓர் "அரசியல்-இராணுவ தோல்வியாக" ஆகிவிடும் அதேவேளையில், துருக்கி இட்லிப்பின் மண்ணில் "சிப்பாய்கள் மற்றும் இராணுவ தளவாடங்களில் அதிகரித்தளவில் செல்வாக்கு" கொண்டிருப்பதாக குறிப்பிட்டார். அச்சுறுத்தல் அல்லது சிறிய ரக தந்திரோபாய அணு ஆயுதங்களைப் பயன்படுத்துவதே வெல்வதற்கு ரஷ்யாவின் ஒரே வழியாக இருக்கும் என்பதே அவர் தீர்மானமாக இருந்தது.

இட்லிப்பில் திரண்டுள்ள அளப்பரிய பதட்டங்கள் உலகளவில் தீவிரமடைந்து வரும் போர் முனைவின் விளைவாகும், இது உலக முதலாளித்துவத்தின் தீர்க்கவியலாத நெருக்கடியிலும், குறிப்பாக, இராணுவ பலத்தைக் கொண்டு தனது வீழ்ச்சி அடைந்து வரும் மேலாதிக்கத்தை மாற்றிவிடுவதற்கான அமெரிக்க ஏகாதிபத்தியத்தின் முயற்சிகளிலும் வேரூன்றி உள்ளது. அணுஆயுத சக்திகளுக்கு இடையே ஓர் உலக போராக வெடிப்பதற்கான இந்த மோதல் அச்சுறுத்தலை, மத்திய கிழக்கு மற்றும் உலகெங்கிலும் தொழிலாள வர்க்கத்தை அடிப்படையாக கொண்ட ஒரு சர்வதேச போர்-எதிர்ப்பு இயக்கத்தைக் கட்டமைப்பதன் மூலமாக மட்டுமே எதிர்க்க முடியும்.