சிரியாவிற்கு எதிரான இராணுவ நடவடிக்கைக்கு துருக்கி அறிவித்த நிலையில் இட்லிப் இல் போர் தீவிரமடைகிறது

Ulas Atesci
5 March 2020

மொழிபெர்ப்பின் மூலக் கட்டுரையை இங்கே காணலாம்

சென்ற வார இறுதியில், சிரியாவின் இட்லிப் மாகாணத்தில் சிரிய அரசாங்க படைகளுடனான தனது மோதலை துருக்கி தீவிரப்படுத்தி, இராணுவத் தாக்குதலுக்கு அறிவிப்பு விடுத்ததுடன் இரண்டு சிரிய ஜெட் விமானங்களை சுட்டு வீழ்த்தியது. ஒன்பது ஆண்டுகால, அமெரிக்கத் தலைமையிலான சிரிய போர், துருக்கிய மற்றும் சிரிய நாடுகளுக்கிடையிலான போராக தீவிரமடைந்து வருவதானது, ஒட்டுமொத்த நேட்டோ கூட்டணிக்கும் மற்றும் சிரியாவின் கூட்டணி நாடான ரஷ்யாவிற்கும் இடையேயான ஒரு போரை தொடங்குவதற்கு அச்சுறுத்துகிறது.

ஞாயிறன்று, துருக்கி பாதுகாப்பு அமைச்சர் ஹுலுசி அகார் (Hulusi Akar), சிரியாவிற்குள் வியாழனன்று நடத்தப்பட்ட சிரிய தாக்குதலில் குறைந்தது 34 துருக்கிய சிப்பாய்கள் கொல்லப்பட்டதையடுத்து, சிரிய ஜனாதிபதி பஷார் அல்-அசாத் இன் ஆட்சிக்கு எதிராக “Operation Spring Shield” என்ற அறிவிக்கப்படாத போரை துருக்கி ஆயுதப் படை தொடங்கியிருப்பதாக கூறினார். துருக்கிய படைகள் வியாழக்கிழமை முதல் தொடர்ந்து போராடி “ஒரு ஆளில்லா விமானம் (ட்ரோன்), எட்டு ஹெலிஹாஃப்டர்கள், 103 பீரங்கி வண்டிகள், 70 ஏவுகணை வீசிகள், மூன்று வான் பாதுகாப்பு அமைப்புக்கள் மற்றும் 2,212 சிரிய அரசாங்க துருப்புக்களை செயலிழக்கச் செய்துள்ளன” என்று அகார் அறிவித்தார்.

அதன் பின்னர் உடனடியாக, பாதுகாப்பு அமைச்சகம், “எங்கள் ஜெட் விமானங்கள் தாக்கப்பட்ட பின்னர் இரண்டு SU-24 ரக ஜெட் விமானங்களை நாங்கள் சுட்டு வீழ்த்தினோம்” என்று தெரிவித்தது. இது, சிரிய வான் பாதுகாப்பு அமைப்புக்கள் மீது குண்டு வீசி தாக்கியதாக கூறியதுடன், துருக்கி அரசுக்கு சொந்தமான அனடோலு ஏஜென்சி (Anadolu Agency), அலெப்போவில் உள்ள அல்-நைராப் இராணுவ விமான நிலையத்தில் ஞாயிறன்று துருக்கிய இராணுவம் ஆயுதங்கள் தாங்கிய ஆளில்லா விமானங்கள் மூலம் குண்டு வீசியதாக செய்தி வெளியிட்டது.

இது, அங்காராவில் பல நாட்கள் நடந்த பேச்சுவார்த்தைகளுக்குப் பின்னர், “பயங்கரவாதிகளுக்கு எதிரான போராட்டத்தைத் தொடரும் அதேவேளை, ‘அடிப்படையில்’ பதட்டங்களை குறைப்பதே தங்களது இலட்சியமென இரண்டு தரப்பும் உறுதிப்படுத்தின,” என்று ரஷ்ய வெளியுறவு அமைச்சகம் தெரிவித்து ஒரு நாளுக்குப் பின்னர் நிகழ்ந்தது. எவ்வாறாயினும், துருக்கியும் ரஷ்யாவும் எதிரெதிரான நோக்கங்களைப் பின்பற்றுவதுடன் போருக்குத் தயாராகி வருகின்றன என்பது வெளிப்படையானது.

சிரிய அரசு செய்தி நிறுவனமான SANA, “இட்லிப் பகுதியில் ஆயுதமேந்திய பயங்கரவாத அமைப்புக்களுக்கு எதிராக இரண்டு விமானங்கள் ஒரு பணியில் ஈடுபட்டுக் கொண்டிருந்த சமயத்தில்” அவ்விரண்டு சிரிய விமானங்களை துருக்கி சுட்டு வீழ்த்தியதை உறுதிப்படுத்தியது. அப்போது, அதிலிருந்த விமானிகள் வான்குடை மிதவை மூலம் பாதுகாப்பாக தரையிறங்கியதாகக் கூறப்படுகிறது.

இட்லிப் மாகாணத்தில் வான்பரப்பை டமாஸ்கஸ் மூடியதன் பின்னர், வடக்கு சிரியாவில் துருக்கிய விமானங்களின் பாதுகாப்பிற்கு தன்னால் உத்தரவாதம் வழங்க முடியாது என்று ரஷ்ய பாதுகாப்பு அமைச்சகம் பதிலளித்தது. துருக்கி தலைமையிலான படைகள் ஆக்கிரமிப்புத் தாக்குதலை அதிகரித்தளவில் தீவிமடையச் செய்வதற்கு மத்தியில், வாஷிங்டன் மற்றும் நேட்டோ இரண்டிலிருந்தும் “ஆதரவிற்கான” அறிக்கைகள் பெறப்படும் நிலையில், துருக்கிய துருப்புக்களின் மீதான ஒரு புதிய பதிலடிக்கான சிரிய அல்லது ரஷ்ய வான்வழித் தாக்குதல் நிகழும் அபாயம் உள்ளது.

பெப்ரவரி தொடக்கத்தில் இருந்து, துருக்கி அதன் இராணுவ காவல்நிலைகளை பாதுகாப்பதற்காகவும், மற்றும் ரஷ்ய மற்றும் ஈரானிய ஆதரவு பெற்ற சிரிய அரசாங்க துருப்புக்களுக்கு எதிராக இட்லிப் மாகாணத்தில் அல் கொய்தாவுடன் இணைந்த பினாமிப் படைகளுடனும் போராடுகையில், சிரியாவில் 50 க்கும் மேற்பட்ட அதன் சிப்பாய்களை துருக்கி இழந்துள்ளது.

இட்லிப்பை அங்குள்ள துருக்கிய இராணுவ நிலைகள் உட்பட அதனை மீட்பதற்கு போராடுவதன் மூலம் 2018 சோச்சி ஒப்பந்தத்தை டமாஸ்கஸூம் மாஸ்கோவும் மீறுவதாக அங்காரா குற்றம்சாட்டும் அதேவேளை, “தீவிர” இஸ்லாமிய போராளிகளை “மிதவாதிகள்” இடமிருந்து பிரிப்பதற்கு தான் உறுதிபூண்டிருந்ததை நிறைவேற்ற துருக்கி தவறிவிட்டது என மாஸ்கோ குற்றம்சாட்டியுள்ளது.

கண்மூடித்தனமான சிரிய தாக்குதல்களுக்கு எதிராக “மிதவாதிகள்” மற்றும் பொதுமக்களை மட்டும் பாதுகாக்கவே இந்த போராட்டம் என்ற துருக்கிய அரசாங்கத்தின் கூற்றுக்கள் அப்பட்டமான பொய்களாகும். இட்லிப்பின் உள்ள மிக சக்திவாய்ந்த “கிளர்ச்சி” குழு ஹயாத் தஹ்ரிர் அல்-ஷாம் (Hayat Tahrir al-Sham) என்பதாகும். அதை ஐக்கிய நாடுகள் சபை மற்றும் துருக்கி இரண்டும் ஒரு பயங்கரவாதக் குழு என வரையறுத்துள்ளன. மேலும் இந்த குழுவானது, சிரிய போரில் நேட்டோ சக்திகள் பல ஆண்டுகளாக நம்பியிருந்த சிரியாவுடன் இணைந்த முன்னாள் அல் கொய்தா இயக்கத்தின் தலைமையில் இயங்குகிறது.

துருக்கிய மற்றும் சர்வதேச ஊடகங்கள் இந்த குழுவை மூடிமறைக்க தொடர்ந்து முனைந்து கொண்டிருக்கின்றன. கடந்த வாரத்தில், துருக்கிய அரசுக்கு சொந்தமான TRT World செய்தி ஊடகம், “ஹயாத் தஹ்ரிர் அல் ஷாம் சர்வதேச அளவிலான சட்டபூர்வ தன்மையைப் பெற முடியுமா?” என்று தலைப்பிடப்பட்ட கட்டுரையை வெளியிட்டது. சர்வதேச நெருக்கடி குழு (International Crisis Group) உடனான இதன் தலைவர் அபு முகமத் அல் ஜோலானியின் நேர்காணலை மேற்கோள் காட்டி, இது பின்வருமாறு தெரிவிக்கிறது: “ஜூலை 2016 இல் இந்தக்குழு துண்டிக்கப்பட்ட பின்னர் அல்கொய்தாவின் சித்தாந்தங்களின் பெரும்பகுதிக்கு உடன்படாமல் இந்த குழு இப்போது விலகுகிறது.”

சிரிய ஆட்சிக்கு எதிராக இந்த சக்திகளைப் பயன்படுத்தும் போது, ரஷ்யாவிற்கு எதிரான அதன் நேட்டோ நட்பு நாடுகளின் நேரடி ஆதரவை அங்காராவும் கோருவதானது, ஆணு ஆயுத சக்திகளுக்கு இடையிலான மோதலுக்கான அபாயத்தை உருவாக்குகிறது. சனிக்கிழமையன்று, கட்டாரில் தனது அமெரிக்க சக பதவியாளர் மைக் பொம்பியோவை சந்தித்ததன் பின்னர், துருக்கியின் வெளியுறவு அமைச்சரான Mevlüt Çavuşoğlu, சிரிய வான்வெளி மீதான ரஷ்ய கட்டுப்பாட்டிற்கு சவால் விடுக்க அங்காரா வாஷிங்டனிடம் Patriot ஏவுகணைகளை கோருகிறது என்று செய்தியாளர்களிடம் கூறினார்.

விமான எதிர்ப்பு ஏவுகணைகளுக்கான அங்காராவின் கோரிக்கை குறித்து சனிக்கிழமை கேட்டதற்கு, “ஜனாதிபதி எர்டோகனுடன் இந்த விவகாரம் குறித்து நாங்கள் விவாதித்துக் கொண்டிருக்கிறோம்” என்று ட்ரம்ப் பதிலளித்தார். துருக்கிக்கு Patriot ஏவுகணைகளை விற்பதற்கு வாஷிங்டன் மறுத்ததால், ரஷ்ய S-400 ரக விமான எதிர்ப்பு ஏவுகணைகளை பயன்படுத்த துருக்கி முடிவு செய்தபோது F-35 போர் திட்டத்திலிருந்து அதனை நீக்கப்பட்ட நிலையில், இது மற்றொரு திருப்புமுனையாக அமைந்துள்ளது.

நேற்று, பிரெஞ்சு ஜனாதிபதி இமானுவல் மக்ரோனிடம் “நேட்டோவின் உறுதியான மற்றும் தெளிவான ஆதரவுக்கு” எர்டோகன் கோரிக்கை விடுத்ததாகவும் கூறப்படுகிறது.

ஐரோப்பிய ஏகாதிபத்திய முதலாளித்துவ தலைமையிலான அகதிகளுக்கு எதிரான கொடூரமான கொள்கையும் ஒரு பிரச்சினையாக உள்ளது. தனது கொள்கைகளை ஆதரிக்க ஐரோப்பிய சக்திகளை கட்டாயப்படுத்த முடியும் என நம்பிக்கை வைத்து, 4 மில்லியனுக்கும் மேற்பட்ட அகதிகள் ஐரோப்பாவிற்கு பயணிக்க செய்யவைக்கமுடியும் வகையில் துருக்கியின் மேற்கு எல்லைகளை எர்டோகன் திறந்து வைத்துள்ளார். அதன் பின்னர் அவர் மீண்டும் அந்த எல்லைகளை மூடுவார். சிரியாவில் துருக்கிய போர் நோக்கங்களுக்காக மட்டுமல்லாமல், சிரியாவின் பெரும்பான்மையான குர்திஷ் பிராந்தியங்களில் சிரிய அரபு அகதிகளை மீளக்குடியமர்த்தும் திட்டங்களுக்காக நேட்டோவின் ஆதரவை வெல்வதும் எர்டோகனின் நோக்கமாக உள்ளது. இது, இந்த பிராந்தியத்தில் குர்திஷ் சார்பு அரசை அமைப்பதற்கான குர்திஷ் போராளிகளின் முயற்சிகளை கீழறுக்கும்.

மேலும், “மேலும் பல அகதிகளை கவனித்துக் கொள்ள நாங்கள் கடமைப்பட்டவர்கள் அல்ல,” என்று எர்டோகன் அறிவித்ததன் பின்னர், இந்த வார இறுதியில் துருக்கியின் தெற்கு மாகாணமான கஹ்ரமன்மாராஸில் (Kahramanmaras), எல்பிஸ்தான் (Elbistan) பகுதியிலுள்ள சிரிய வீடுகளையும் பணியிடங்களையும் குறிவைக்கும் பாசிசவாதத் தாக்குதல் நடத்தப்பட்டது.

சிரியாவில் அங்காராவின் போருக்கு இருக்கும் பரவலான மக்கள் எதிர்ப்பிற்கு மத்தியில், சிரியாவில் வியாழக்கிழமை ஏற்பட்ட பேரழிவுகர இழப்புக்களைத் தொடர்ந்து சனியன்று ஜனாதிபதி எர்டோகன் தனது முதலாவது பகிரங்க கருத்துக்களை வெளியிட்டார். அவரது உரை, வளர்ந்து வரும் சமூக சமத்துவமின்மை, வாழ்க்கைத் தரம் குறைந்து வருவது மற்றும், துருக்கிக்குள்ளும் மற்றும் சர்வதேச அளவிலும் நிலவும் மோசமான பொருளாதார நெருக்கடி ஆகியவற்றிற்கு மத்தியில், முக்கியமாக போருக்கு எதிராக எந்தவித சமூக எதிர்ப்பு எழுச்சியடைவதையும் தடுப்பதை நோக்கமாகக் கொண்டிருந்தது.

“முக்கியமான இலக்கு துருக்கியே தவிர, சிரியா அல்ல” என்று எர்டோகன் அறிவித்தார். இட்லிப்பில் தனது இராணுவ பிரசன்னத்துடன் அமெரிக்க ஆதரவு குர்திஷ் போராளிகளை இலக்காகக் கொண்ட துருக்கியின் வடக்கு சிரிய ஆக்கிரமிப்பை பெரிதுபடுத்தி, அவர் இவ்வாறு கூறினார்: “பயங்கரவாதிகளிடமிருந்து எங்கள் எல்லைகளை நாங்கள் இப்போது தெளிவுபடுத்திக் கொள்ளவில்லை என்றால், பின்னர் துருக்கிக்குள்ளேயே நாங்கள் பெரும் போர்களை நடத்த வேண்டியிருக்கும்.”

எர்டோகனும் ட்ரம்ப் உடனான தனது உரையாடலை சிரித்தபடியே பகிர்ந்து கொண்டமை, சமூக ஊடகங்களில் கோபமான கருத்துக்களுக்கு எரியூட்டுகிறது. ட்விட்டரில், போர் குறித்த தங்கள் எதிர்ப்பை வெளிப்படுத்த 200,000 க்கும் மேற்பட்ட மக்கள் உடனடியாக ஒரு hash tag ஐ பயன்படுத்தி “நீங்கள் ஏன் சிரிக்கிறீர்கள் எர்டோகன்?” என்று கேட்டனர்.

சமூக கோபத்தின் இலக்குகள், எர்டோகன் அரசாங்கத்தை மட்டும் உள்ளடக்கவில்லை, மாறாக குடியரசு மக்கள் கட்சி (Republican People’s Party (CHP) மீதான எதிர்ப்பையும் உள்ளடக்கியது. இட்லிப்பில் துருக்கிய இராணுவ நடவடிக்கைகளை CHP தந்திரோபாயமாக விமர்சித்த அதேவேளை, இது பல ஆண்டுகளாக பாராளுமன்றத்தில் போர் ஆணைகளை ஆதரித்தது என்பதுடன், சிரியாவில் துருக்கிய அரசாங்கத்தின் போருக்கு நேரடி பொறுப்பை ஏற்றது. இது மேலும் பேரினவாத, சிரிய எதிர்ப்பு பிரச்சாரத்தையும் ஊக்குவிக்கிறது.

CHP அதன் அதிவலது கூட்டணி கட்சிகளான Good Party, ஆளும் நீதி மற்றும் மேம்பாட்டுக் கட்சி (Justice and Development Party-AKP), மற்றும் அதன் அரசாங்க கூட்டணி கட்சியான தேசியவாத இயக்கக் கட்சி (Nationalist Movement Party-MHP) ஆகியவற்றுடன் வியாழனன்று ஒரு கூட்டு அறிக்கையில் கையெழுத்திட்டது. இது, “எங்கள் படையினர் மீதான தாக்குதல்களுக்கு” எதிராக “பழிவாங்கும் உரிமையை” வலியுறுத்தியது.

குர்திஷ் தேசியவாத மக்கள் ஜனநாயகக் கட்சிக்கு (People’s Democratic Party-HDP), பாராளுமன்றத்தில் போர் ஆணைகள் மீது வாக்குகள் “கிடைக்கவில்லை” என்பது, சிரியாவில் முக்கிய அமெரிக்க பினாமி படையாகவுள்ள மக்கள் பாதுகாப்பு பிரிவுகளை (People’s Protection Units-YPG) குறிவைக்கும் இராணுவ நடவடிக்கைகளுக்கு எதிரான எதிர்ப்பின் அடிப்படையிலானதே தவிர, கொள்கை ரீதியான, ஏகாதிபத்திய எதிர்ப்பு அல்லது போர் எதிர்ப்பு நிலைப்பாட்டை அடிப்படையாகக் கொண்டவை அல்ல.

துருக்கிக்கும் ரஷ்யாவுக்கும் இடையிலான இந்த அபாயகர போர் விரிவாக்கம் ஊடக சுதந்திரத்தின் மீதான தீவிரமான தாக்குதல்களுக்கு இட்டுச் செல்கின்ற நிலையில், ஒரு வலதுசாரி தேசியவாத கும்பல் சனிக்கிழமை அங்காராவில் மூன்று ஸ்புட்னிக்-துருக்கி செய்தி ஊடக ஊழியர்களின் வீடுகளை சோதனை செய்ய முயன்றதையடுத்து, இஸ்தான்புல்லில் ஊடகவியலாளர்களும் மற்றும் ஸ்புட்னிக்-துருக்கியின் தலைமை பதிப்பாசிரியரும் தடுத்து வைக்கப்பட்டு, அவர்களிடம் கேள்வி கேட்கபட்டது, பின்னர் சில மணி நேரம் கழித்து அவர்கள் விடுவிக்கப்பட்டனர்.

விடுவிக்கப்பட்ட ஊடகவியலாளர் ஒருவர், சிரியா அங்கீகரிக்க மறுத்த வாக்கெடுப்பின் பின்னர் 1939 இல் துருக்கியுடன் இணைந்த, தெற்கு எல்லை மாகாணமான ஹடாய் குறித்த ‘திருடப்பட்ட மாகாணம்,’ என்ற கட்டுரையை “நாங்கள் எழுதாத மற்றும் அதனுடன் எந்த தொடர்பும் எங்களுக்கு இல்லாத அது குறித்து முற்றிலும் அபத்தமாக நாங்கள் குற்றம்சாட்டப்பட்டோம்,” என்றார்.

கடந்த மாதம், TRT World போன்ற துருக்கிய அரசு ஊடகங்கள், சுதந்திரப் போரின் போது துருக்கிய தேசியவாத சக்திகளால் அறிவிக்கப்பட்ட “தேசிய ஒப்பந்தத்தின்” அடிப்படையில் “ஒட்டோமான் பேரரசினால் உருவாக்கப்பட்ட அலெப்போ விலாயெட்டின்” வரைபடத்தை காண்பித்து, துருக்கிய-சிரிய எல்லைகளை கேள்விக்குட்படுத்திய அறிக்கைகளை வெளியிட்டன. இது, “இன்றைய வடக்கு ஈராக் உடன் தொடர்புடைய ஒட்டோமான் அலெப்போ விலாயெட் மற்றும் ஒட்டோமான் மொசூல் விலாயெட் போன்ற தற்போதைய துருக்கிய பிராந்தியங்களை உள்ளடக்கியது.” நேற்று அரசாங்க சார்பு Daily Sabah செய்தி ஊடகமும் “கிரிமியா: இரண்டு முறை திருடப்பட்ட தீபகற்பத்தின் கதை” என்ற தலைப்பில் ஒரு கட்டுரையை வெளியிட்டது.

ஏகாதிபத்திய போரை எதிர்ப்பதும் அகதிகளை பாதுகாப்பதும் சர்வதேச தொழிலாள வர்க்கத்தின் பணிகளாகவுள்ளன. அணு ஆயுத சக்திகளுக்கு இடையிலானது உட்பட, வளர்ந்து வரும் போர் அபாயத்திலிருந்து மீள்வதற்கான ஒரே வழி என்பது, ஒரு சர்வதேச சோசலிச வேலைத்திட்டத்தின் அடிப்படையில், மத்திய கிழக்கு மற்றும் சர்வதேச அளவில் தொழிலாள வர்க்கத்தின் ஒரு சர்வதேச போர் எதிர்ப்பு இயக்கத்தை உருவாக்குவதாகும்.