Defender 2020: 25 ஆண்டுகளில் ரஷ்யாவுக்கு எதிராக நேட்டோ துருப்புகளின் மிகப்பெரிய அணித்திரட்டல்

Markus Salzmann
7 March 2020

மொழிபெர்ப்பின் மூலக் கட்டுரையை இங்கே காணலாம்

25 ஆண்டுகளில் அட்லாண்டிக் எங்கிலுமான மிகப் பெரிய நிலைநிறுத்தல், கடந்த வாரயிறுதியில் Defender Europe 2020 போர் பயிற்சி என்ற கட்டமைப்பிற்குள் அதன் முக்கிய கட்டத்தை எட்டியது. நேட்டோவின் ஆத்திரமூட்டும் இந்த இராணுவப் பயிற்சியின் அளவே, இரண்டாம் உலக போர் முடிந்து 75 ஆண்டுகளில் போருக்கான தயாரிப்புகள் எந்தளவுக்கு முன்னேறி உள்ளன என்பதை எடுத்துக்காட்டுகிறது.

அமெரிக்காவும் ஏனைய 18 நாடுகளும் குறுகிய காலத்தில் அமெரிக்கா மற்றும் மேற்கு ஐரோப்பாவில் இருந்து ரஷ்ய எல்லை வரையில் துருப்புகளின் மிகப்பெரும் இராணுவப் படைப்பிரிவுகளை நிலைநிறுத்தி உள்ளன. மொத்தத்தில், சுமார் 37,000 சிப்பாய்கள், ஜூன் வரையில் தொடர்ந்து நடக்க உள்ள இப்பயிற்சியில் பங்கெடுத்து வருகின்றனர். போலாந்தும் பால்டிக் அரசுகளுமே அவர்களின் நோக்கத்தில் உள்ளது.

அமெரிக்க டாங்கிகள் மற்றும் ஏனைய கனரக இராணுவத் தளவாடங்களையும் ஏந்திய ஏனைய நான்கு வாகனங்களுடன் சேர்ந்து சரக்குக் கப்பல் Endurance உம் கடந்த வாரம் Bremerhaven இல் நிறுத்தப்பட்டது. அமெரிக்கா மட்டுமே ஐரோப்பாவில் 20,000 துருப்புகளையும் அவற்றுக்கான படைத்தளவாடங்களையும் நிலைநிறுத்துகிறது.

ஜோர்டானில் நடந்த நிஜமான தோட்டாக்களது பயிற்சியின் போது, அமெரிக்க கடற்படை சிப்பாய்கள் துப்பாக்கிச் சூடு நடத்துவதற்கான நிலைகளுக்கு ஓடுகின்றனர் [படம்: கடற்படை பிரிவு, படை சார்ஜென்ட் டென்ஜ்ரீர் எம். பேய்ஜ்]

ஜோர்டானில் நடந்த நிஜமான தோட்டாக்களது பயிற்சியின் போது, அமெரிக்க கடற்படை சிப்பாய்கள் துப்பாக்கிச் சூடு நடத்துவதற்கான நிலைகளுக்கு ஓடுகின்றனர் [படம்: கடற்படை பிரிவு, படை சார்ஜென்ட் டென்ஜ்ரீர் எம். பேய்ஜ்]

துருப்புகளின் நகர்வுகளுக்கு உதவியாக தனித்தனி உள்கட்டமைப்பு உருவாக்கப்பட்டு வருகிறது. ஜேர்மன் ஆயுதப்படை ஒரு மத்திய போக்குவரத்து கட்டுப்பாட்டு மையத்தை நிறுவி உள்ளது, இராணுவப் பயிற்சி தளங்களில் கூடாரங்களை அமைத்துள்ளதுடன், இடம் விட்டு இடம் நகர்ந்து எரிபொருள் நிரப்பும் நிலையங்களை நிலைநிறுத்தி உள்ளது. கிலோமீட்டர் கணக்கில் நீண்டு நிற்கும் படைப்பிரிவுகள் பொதுவாக இரவு நேரங்களின் போது நகர்கின்றன என்றாலும், அவை குறிப்பிடத்தக்க அளவில் போக்குவரத்துக்கு இடையூறாக உள்ளன.

அந்த பயிற்சிக்கான செலவுகள் குறித்து ஜேர்மன் ஆயுதப்படை வாய் திறக்கவில்லை. இராணுவ ஆதாரநபர்களை மேற்கோளிட்டு Tagesspiegel பத்திரிகை மதிப்பிடுகையில், ஜேர்மனிக்கு மட்டும் 2.5 மில்லியன் யூரோ செலவாகுமென குறிப்பிட்டது. “தளவாடங்கள் மற்றும் சிப்பாய்களின் நிலைநிறுத்தம், தங்குமிட ஏற்பாடுகள், உள்கட்டமைப்பு ஏற்பாடு ஆகியவை சம்பந்தமாக ஆயுதப்படைகளின் பாகத்தில் இதற்கு பகுப்பாய்வு அவசியப்படுகிறது. இவை தவிர, கூடுதல் செலவுகளும் ஏற்படும்,” என்று Tagesspiegel எழுதியது.

அமெரிக்க இராணுவத்தின் செய்தி தொடர்பாளர் குறிப்பிடுகையில், இதில் ஈடுபட்டுள்ள நாடுகள் இராணுவ உள்கட்டமைப்பில் முதலீடு செய்யும் என்றார். ஓர் எடுத்துக்காட்டாக, அவர் லித்துவேனியாவைக் குறிப்பிட்டார், அந்நாடு ஜேர்மனியைப் போலவே கனரக சரக்கு கையாளுகைக்காக அதன் இரயில்வே வலையமைப்பை விரிவாக்குவதில் முதலீடு செய்து வருகிறது.

இந்த பயிற்சியில் ஈடுபட்டுள்ள 19 நாடுகளின் 37,000 சிப்பாய்களில், பாதிக்கும் அதிகமாக 20,000 பேர் அமெரிக்காவிலிருந்து வந்துள்ளனர். 4,000 ஜேர்மன் சிப்பாய்கள் பங்கெடுக்கின்றனர். இதற்கு கூடுதலாக, பொலிஸ் படைப்பிரிவுகள் தளவாடங்களின் போக்குவரத்தைப் பாதுகாத்து வருகின்றன. சுமார் 33,000 வாகனங்கள் மற்றும் சரக்கு கொள்கலன்களுடன் சேர்ந்து, சுமார் 450 டாங்கிகளும் ரஷ்யா எல்லையை ஒட்டி நிலைநிறுத்தப்படும். 100 க்கும் அதிகமான இரயில்வே போக்குவரத்து பயணங்கள் நிகழும். மொத்தத்தில், துருப்புகள் ஏழு நாடுகளினூடாக நகர்வார்கள்; 14 விமான நிலையங்கள் மற்றும் துறைமுகங்களைப் பயன்படுத்துவார்கள்.

ஜேர்மனி இந்த பயிற்சியின் பிரதான மையமாக உள்ளது. ஏப்ரல் வரையில் நடைபெறும் முதல் கட்டத்தில், அமெரிக்க ஆயுத தளவாடங்கள் மற்றும் இராணுவச் சாதனங்கள் ஜேர்மனி, பெல்ஜியம் மற்றும் போலாந்தில் நிலைநிறுத்தப்படும். இத்துடன் பகுதியளவில் இணைந்து, மே மாதம் வரையில் நடத்தப்படும் இரண்டாவது கட்டத்தில், துருப்புகள் ஜேர்மனியிலிருந்து போலாந்து வரையில் நிலைநிறுத்தப்படும். பிரதான பயிற்சிக்கு முன்னதாக இறுதிக் கட்டத்தில் எஞ்சிய அனைத்து துருப்புகளும் ஜேர்மனியிலிருந்து போலந்து மற்றும் பால்டிக் நாடுகள் வரையில் நிலைநிறுத்தப்படும். இறுதி பயிற்சி, ஜூலை முடிவில் அனைத்து படைகளும் திரும்பப் பெறப்படுவதற்கு முன்னதாக, மே இறுதியில், ஜேர்மனியின் Lüneburger moors இல் பேர்கெனில் நடத்தப்படும்.

இந்த இராணுவ நடவடிக்கைகள் 1990 களில் மேற்கு ஐரோப்பாவில் பிரமாண்டமாக நடத்தப்பட்ட இராணுவப் பயிற்சிகள் மீது கட்டமைக்கப்பட்டுள்ளன, அதில் 130,000 துருப்புகள் ஈடுபடுத்தப்பட்டிருந்தனர். அதுபோன்றவொரு மிகப் பெரியளவிலான பயிற்சி இப்போது தான் முதல் முறையாக ரஷ்ய எல்லையிலும் முன்னாள் சோவியத் எல்லையிலும் நடத்தப்படுகிறது.

ஜேர்மன் மற்றும் அமெரிக்க இராணுவங்களைப் பொறுத்தமட்டில், இந்த இராணுவ நடவடிக்கைகள் தற்காப்பு குறித்த ஒரு சேதியை அனுப்புவதற்காக வடிவமைக்கப்பட்டுள்ளதாம். லெப்டினென்ட் Martin Schelleis இது குறித்து கருத்துரைக்கையில், “யதார்த்தம் என்னவென்றால், 2014 இல் சட்டவிரோதமாக கிரிமியாவை இணைத்துக் கொண்ட ரஷ்யா தான் இந்த அபிவிருத்தியை தூண்டிவிட்டது. ஆனால் இந்த பயிற்சிக்கு ரஷ்யா ஒரு சாக்குப்போக்கு இல்லை; ஒரு நீடித்த காலகட்டத்தில் இராணுவ ஆற்றலை மீளக்கட்டமைப்பதன் மூலமாக மட்டுமே அதை பேணி பாதுகாக்க வைக்க முடியும்,” என்றார்.

நேட்டோவின் ஐரோப்பிய உயர்மட்ட தளபதி ஜெனரல் Tod. D. Wolters விவரிக்கையில் இந்த பயிற்சியை "கூட்டு படைகளின் தயார்நிலையை மற்றும் ஒன்றிணைந்து இயங்கும் தன்மையைப் பலப்படுத்துவதற்கான தளம்" என்று விவரித்தார்.

2017 இல் லித்துவேனியாவில் நடந்த Sabre Strike பயற்சி மற்றும் 2018 இல் நடந்த Trident Juncture போலவே, தற்போதைய இந்த இராணுவ நடவடிக்கையும், தொடர்ச்சியான பல போர்கள முன் ஒத்திகைகளில் "கூட்டணி அம்சம்" சோதனைக்கு உட்படுத்தப்படுவதற்கு முன்னதாக, போருக்குத் தயாரான துருப்புகளை வேகமாக நிலைநிறுத்துவதற்கான ஆற்றலைப் பரிசோதிக்கவும் மற்றும் ரஷ்ய எல்லையில் தளவாடங்களை நிலைநிறுத்துவதையும் நோக்கமாக கொண்டுள்ளது.

ரஷ்யாவுடனான போர் தயாரிப்புகளின் முன்னேறிய இத்தன்மை, கடந்த வாரம் அமெரிக்க பாதுகாப்புத்துறை செயலர் மார்க் எஸ்பெர் நெப்ரஸ்காவின் ஒமாஹாவில் அமெரிக்க மூலோபாய கட்டளையகத்தில் ஒரு போர் ஒத்திகையில் பங்கெடுத்த போது எடுத்துக்காட்டப்பட்டது, அப்போது ரஷ்யாவுக்கு எதிராக அணுஆயுதங்கள் பயன்படுத்துவதைப் போல ஒத்திகை பார்க்கப்பட்டது.

ரஷ்யா மீது ஒரு போர் நடத்தப்படும் போது ஐரோப்பாவில் ஏற்படும் ஓர் எதிர்பாரா சம்பவமும் மற்றும் நேட்டோ பிராந்தியத்திற்குள் ஓரிடத்தில் ஒரு சிறியளவிலான அணுஆயுதத்தைப் பிரயோகிக்க ரஷ்யா முடிவெடுப்பது போன்ற சம்பவமும் அந்த போர் ஒத்திகைகளில் உள்ளடங்கி இருந்ததாக அமெரிக்க இராணுவம் குறிப்பிட்டிருந்தது.

இந்தாண்டின் முதல் பாகத்தில் ரஷ்யாவை ஒட்டிய லாட்வியா எல்லையில் இரண்டு பயிற்சிகள் நடத்தப்படும். லாட்விய மற்றும் சர்வதேச துருப்புகள் உள்ளடங்கிய ஓர் அதிரடி விடையிறுப்பு பயிற்சி ஏப்ரல் மற்றும் மே க்கு இடையே நடத்தப்படும். அமெரிக்கா, பிரிட்டன், இத்தாலி, மற்றும் ஸ்பெயினின் இராணுவப் படைப்பிரிவுகள், ஓர் திடீர் அச்சுறுத்தல் சம்பவம் ஏற்பட்டால் நடத்தப்படும் வான்வழி இராணுவ நடவடிக்கைகளைப் போல பயிற்சி மேற்கொள்ளும்.

ஆனால் போர் மொழியைப் பேசுவது ட்ரம்ப் நிர்வாகம் மட்டுமல்ல. ஜேர்மனி மற்றும் ஐரோப்பிய சக்திகளும் அமெரிக்காவின் நிழலில் இருந்து இராணுவரீதியில் மேலெழுவதற்கு முயன்று வருகின்றன.

இது அனைத்திற்கும் மேலாக ஜேர்மனிக்குப் பொருந்தும். சமீபத்திய முனீச் பாதுகாப்பு மாநாட்டில் ஜேர்மன் ஜனாதிபதி பிராங்க்-வால்டர் ஸ்ரைன்மையர் அவரின் HYPERLINK "https://www.wsws.org/en/articles/2020/02/17/stei-f17.html" உரையில், ரஷ்யா சர்வதேச சட்டத்தை மதிக்காமல் கிரிமியாவை இணைத்துக் கொண்டது என்றும், மாஸ்கோ "சட்டப்பூர்வ கொள்கை வழிவகையாக ஐரோப்பிய கண்டத்தின் எல்லைகளை வன்முறையாக மறுவரையறை செய்ய இராணுவ பலத்தைப் பயன்படுத்தியது" என்றும் குறை கூறினார்.

ஜேர்மனியின் பாதுகாப்பு அமைச்சர் அன்னகிரேட் கிரம்ப்-காரன்பவர் “மேற்கைப் பாதுகாத்தல்" என்ற தலைப்பில் முனீச்சில் உரையாற்றுகையில், “வெறுமனே பார்த்துக் கொண்டிருப்பது போதாது,” என்று HYPERLINK "https://www.wsws.org/en/articles/2020/02/18/kram-f18.html" அறிவித்தார். இந்த பிரச்சினையில் அவர், முனீச் பாதுகாப்பு மாநாட்டில் இன்னும் சுதந்திரமான ஐரோப்பிய இராணுவக் கொள்கைக்காக குரல் கொடுத்த பிரெஞ்சு ஜனாதிபதி இமானுவல் மக்ரோனுடன் அவரது "முழு உடன்பாட்டை" எடுத்துரைத்தார். ஐரோப்பியர்கள் வெறுமனே "அவர்களின் பலவீனத்தை விவரித்துக் கொண்டோ, மற்றர்களின் நடவடிக்கைகள் மீது கருத்துரைத்து கொண்டோ அல்லது அவர்களை குறை கூறிக் கொண்டோ,” இருக்கக் கூடாது, “மாறாக ஐரோப்பாவில் இன்னும் நிறைய மூலோபாய பேச்சுவார்த்தைகளையும் நடத்த வேண்டும், நமது பாதுகாப்பை உறுதிப்படுத்த ஏதேனும் செய்தாக" வேண்டும் என்றார். குறிப்பாக ஜேர்மனி "நடவடிக்கையில் இறங்குவதற்கான மிகப்பெரும் ஆற்றலை அபிவிருத்தி செய்யவும் மற்றும் நடவடிக்கை எடுப்பதற்கான விருப்பத்தை காட்டவும் கடமைப்பட்டுள்ளது" என்றார்.

ஜேர்மனியில் அனைத்து அரசியல் கட்சிகளும் இந்த போர் முனைவை ஆதரிக்கின்றன. முன்னர் அமைதிவாதிகளாக இருந்த பசுமை கட்சியினரும் இதில் விதிவிலக்கல்ல. முன்னுதாரணமான அவர்களின் வீராவேச பேச்சுக்களுடன், சம்பவங்களைத் தலைகீழாக காட்ட முனைந்துள்ள அவர்கள், தற்போதைய இந்த நேட்டோ பயிற்சியை ஆயுதமயப்படுத்தல் குறைப்புக்கு ஓர் பங்களிப்பாக சித்தரிக்கின்றனர். பசுமை கட்சியின் பாதுகாப்புத்துறை செய்தி தொடர்பாளர் Tobias Lindner குறிப்பிடுகையில், ஜேர்மனி மற்றும் ஐரோப்பாவில் அதிக அமெரிக்க துருப்புகளை நிரந்தரமாக நிலைநிறுத்த வேண்டிய அவசியமிருக்காது என்பதே இந்த பயிற்சியின் ஒரு வெற்றிகரமான விளைவாக இருக்கும் என்றார்.

ஜேர்மனி மறுஐக்கியப்பட்ட போது 30 ஆண்டுகளுக்கு முன்னர் நேட்டோ கிழக்கு ஐரோப்பாவில் விரிவாக்கம் செய்யப்படாது என்றும், அதுவும் நிச்சயமாக முன்னாள் சோவியத் எல்லைக்குள் செய்யப்படாது என்றும் ரஷ்யாவுக்கு உத்தரவாதம் அளிக்கப்பட்டிருந்த நிலையில், ரஷ்யா சமீபத்திய ஆத்திரமூட்டலுக்கு எச்சரிக்கையுடன் விடையிறுத்துள்ளது. வெளியுறவுத்துறை அமைச்சர் செர்ஜி லாவ்ரோவ் குறிப்பிடுகையில், “நிச்சயமாக நாங்கள் விடையிறுப்போம். எங்களுக்கு கவலை உண்டாக்கக் கூடிய அபிவிருத்திகளை நாங்கள் அலட்சியப்படுத்த முடியாது. ஆனால் எந்தவொரு அனாவசியமான அபாயத்தையும் உருவாக்காத விதத்தில் நாங்கள் விடையிறுப்போம்,” என்றார்.

கட்டுரையாளர் பரிந்துரைக்கும் ஏனைய கட்டுரைகள்:

US defense secretary launches simulated nuclear attack against Russia in Pentagon war game
[24 February 2020]

“Defender 2020”: NATO powers threaten war against Russia
[8 October 2019]

சோசலிசமும் போருக்கு எதிரான போராட்டமும்

[18 February 2016]