கொரொனாவைரஸ் தொற்றுநோய் ஐரோப்பா எங்கிலும் பரவுகிறது

Johannes Stern and Alex Lantier
13 March 2020

மொழிபெர்ப்பின் மூலக் கட்டுரையை இங்கே காணலாம்

ஐரோப்பா கண்டம் முழுவதிலுமாக கொரொனாவைரஸ் தொற்றுநோய் தொடர்ந்து பரவி வரும் நிலையில், நேற்று வரை அக்கண்டத்தில் ஆயிரக்கணக்கானோர் இதனால் பாதிக்கப்பட்டு, நூற்றுக்கணக்கானோர் பலியாகியுள்ளனர். ஐரோப்பாவில் இந்த தொற்றுநோய் பரவலுக்கான மையப் பகுதியாகவுள்ள இத்தாலி, இந்நோய் பரவுவதைத் தடுக்கும் நோக்கத்தில் தேசியளவிலான அடைத்துவைக்கும் நடவடிக்கையை மேற்கொள்ள முற்பட்டது, மேலும், ஸ்பெயின், கிரீஸ், பிரான்ஸ் மற்றும் ஜேர்மனியில் பிராந்திய தனிமைப்படுத்தல்கள் செயல்படுத்தப்பட்டுள்ளன, என்றாலும் இந்த கிருமி ஸ்காண்டிநேவியா ஊடாக பால்கன் பகுதிக்குள் நுழைந்துள்ளது.

இத்தாலி, 977 புதிய கொரொனாவைரஸ் நோயாளிகள் கண்டறியப்பட்டதையும், அவர்களில் 168 பேர் பலியானதையும் பதிவு செய்தது, இந்த தொற்றுநோய் பெருவாரியாக பரவி வரும் இந்த காலகட்டத்தில் ஒவ்வொரு 24 மணிநேரத்திற்கும் பதிவான எண்ணிக்கையில் இது மிகப்பெரிய எண்ணிக்கையாக இருந்தது என்பதால், இத்தாலியின் சுகாதாரப் பாதுகாப்பு அமைப்புமுறை வீழ்ச்சியின் விளிம்பிற்குத் தள்ளப்பட்டுள்ளது. இத்தாலியில் பதிவாகியுள்ள 6.2 சதவிகித இறப்பு விகிதத்தில் 631 இறப்புக்கள் நிகழ்ந்தது உட்பட, 10,149 கொரொனாவைரஸ் நோயாளிகள் அங்கு உள்ளனர். பிரிட்டிஷ் ஏர்வேய்ஸ், ரையன் எயார் மற்றும் எயர் பிரான்ஸ் உட்பட பல விமான நிறுவனங்கள் இத்தாலிக்கான விமானப் போக்குவரத்தை நிறுத்தி வைத்துள்ளன, அதே நேரத்தில் ஆஸ்திரியா மற்றும் சுலோவேனியா நாடுகள் இத்தாலியுடனான தங்களது எல்லைகளை மூடியுள்ளன.

இந்த நோயால் மருத்துவமனைகள் குறிப்பாக வடக்கு இத்தாலியில் உள்ள மருத்துவமனைகள் நோயாளிகளால் நிரம்பி வழிவதால் இறப்பு விகிதம் அதிரடியாக அதிகரித்து வருகிறது. மருத்துவ பணியாளர்கள் 14 மணி நேர மாற்றுப் பணிகளில் ஈடுபடுத்தப்பட்டிருந்தாலும், மிக நெருக்கடியான நிலைமைகளுக்கு இடையில் கொரொனாவைரஸ் நோயாளிகளுக்காக நூற்றுக்கணக்கான படுக்கைகள் தயார்நிலையில் வைக்கப்பட்டிருந்தாலும், இந்நோயாளிகள் உயிர்பிழைக்க செயற்கை காற்றோட்டமும் தேவைப்படுகின்ற நிலையில், மோசமான நிலையிலுள்ள நோயாளிகளை மருத்துவமனைகள் வேறுவழியின்றி திருப்பிவிட நேரிடுகிறது. “மிகக் கடுமையான சுவாச பிரச்சினைகள் உள்ள நோயாளிகளை உள் நோயாளிகளாக எங்களால் இன்னும் அனுமதிக்க முடியும், என்றாலும் இருபக்க சுவாசப்பை தொற்று உள்ளவர்களை அவர்களது குடும்ப மருத்துவர் பரிசோதிப்பதற்காக நாங்கள் வீட்டிற்கு அனுப்பியாக வேண்டும்,” என Der Spiegel செய்தியிதழுக்கு பெர்காமோ மருத்துவ சங்கத்தின் (Medical Association of Bergamo) உறுப்பினரான கைடோ மரினோனி (Guido Marinoni) தெரிவித்தார்.

முகமூடிமற்றும்கையுறைகள்அணிந்தஒருஊழியர், டசெல்டோர்ஃப்நகரில்உள்ளகொரொனாவைரஸ்கண்டறியும்மையத்தின்கதவின்பின்னால்அடுத்தநோயாளிக்காககாத்திருக்கிறார் (ஏ.பி. ஃபோட்டோ/மார்டின்மெய்ஸெனர்)

“பல ஆண்டுகளாகவே இத்தாலிய சுகாதாரப் பாதுகாப்பு அமைப்புமுறை பின்னடைவை கண்டு வந்ததுடன், மருத்துவமனைகளில் படுக்கைகள் குறைக்கப்பட்டு, செவிலியர்களுக்கும் குறைவூதியம் வழங்கப்பட்டது,” என்பதை ஒரு செய்தியிதழ் குறிப்பிட்டு, தற்போது நச்சுயிரியியல் நிபுணர்கள் (virologists), பொதுமருத்துவர்கள் (internists) மற்றும் நுரையீரல் நிபுணர்கள் (pulmonologists) ஆகியோரது “அவரச தேவை” உள்ளது என்று மிலன்ஸ் லூய்கி சாக்கோ மருத்துவமனையின் (Milan’s Luigi Sacco Hospital) தலைமை மருத்துவர் மாசிமோ கல்லி (Massimo Galli) கூறியதை சுட்டிக்காட்டியது. மேலும் அவர், “கொரொனாவைரஸ் விடயம் பெரிதுபடுத்தப்படுகின்றது என்று நினைக்கும் எவரும், தயவுசெய்து எங்கள் பிரிவிற்கு வந்து பாருங்கள்” என்று கூறினார்.

லோம்பார்டியின் (Lombardy) பிராந்திய சுகாதார ஆணையர் கியுலியோ கல்லேரா (Giulio Gallera), “இன்று காலை ஒரு நோயாளிக்கு செயற்கை சுவாச கருவியை நான் பொருத்துகையில் அவரது கண்கள், என்னை பார்த்ததை நான் ஒருபோதும் மறக்க மாட்டேன்” என்று ஒரு மருத்துவர் அவரது சரீர ரீதியான மற்றும் உளவியல் ரீதியான அழுத்தத்தை பற்றி அவரிடம் பேசியதை மேற்கோள் காட்டி, “அவசர பிரிவுகள் மற்றும் தீவிர சிகிச்சைப் பிரிவுகளில் உள்ளவர்களின் எண்ணிக்கை இவ்வாறாக வெறித்தனமாக அதிகரிக்கும் நிலையில் இன்னும் இரண்டு அல்லது மூன்று வாரங்கள் கூட எங்களால் சமாளிக்க முடியாது,” என்று எச்சரித்தார்.

அனைத்து பெரிய பொது நிகழ்வுகளும் நிறுத்தப்பட்டது, பள்ளிகள் மற்றும் பல்கலைக்கழகங்கள் மூடப்பட்டுள்ளது, நகர மையங்கள் வெறிச்சோடிக் கிடக்கின்றன, பல தொழிலாளர்கள் தொலைத்தொடர்பூடாக பணிபுரிகின்ற நிலைமைகளில், இத்தாலியின் பொருளாதாரம் முடங்கிக் கிடக்கிறது. மக்கள் வியாபார மையங்களில் உணவுப்பொருட்களை வாங்கிச் சேர்ப்பதால் தட்டுக்கள் வெறுமையாகியுள்ளன. இத்தாலிய கருவூலத்தின் முன்னாள் தலைமை பொருளாதார நிபுணரான, லோரென்சோ கோடொக்னோ (Lorenzo Codogno), இத்தாலியின் சராசரி தினசரி மொத்த உள்நாட்டு உற்பத்தி (GDP) சாதாரண மட்டங்களுக்கும் குறைவாக 10 முதல் 15 சதவிகித அளவில் உள்ளது என்ற நிலையில், இந்த வைரஸ் பரவுவதைத் தடுக்க நீண்டகால தனிமைப்படுத்தல் தேவைப்பட்டால் இத்தாலிய பொருளாதாரம் ஆழ்ந்த மந்தநிலைக்குச் சென்றுவிடும். இதற்கிடையில் நிச்சயமற்ற தன்மை இலட்சக்கணக்கான தொழிலாளர்களின் வாழ்க்கையை இக்கட்டான நிலைக்கு தள்ளுகிறது” என்று ராய்ட்டர்ஸ் செய்தி ஊடகத்திற்கு தெரிவித்தார்.

இந்நிலையில் பொருளாதார அபிவிருத்தி அமைச்சர் ஸ்டீஃபனோ படுவானெல்லி (Stefano Patuanelli) 10 மில்லியன் யூரோ பிணையெடுப்புக்கு அழைப்பு விடுத்துள்ளார், மேலும், பொது பிணையெடுப்பு நிதிகளுக்கு அணுகுவதற்கான வெளிப்படையான முயற்சியாக, கொரொனாவைரஸ் நெருக்கடியால் பாதிக்கப்பட்டுள்ள குடும்பங்கள் மற்றும் வணிகங்களுக்கான அடமானக் கொடுப்பனவுகளை நிறுத்தி வைக்கலாம் என்று வங்கிகளின் நலன்களின் பேரில் இயங்கும் ABI கூறியது. என்றாலும், படுவானெல்லியால் முன்மொழியப்பட்ட தொகை முற்றிலும் போதுமானது அல்ல. பல தசாப்தங்களாக சுமத்தப்பட்ட ஐரோப்பிய ஒன்றிய சுகாதாரப் பாதுகாப்பு நிதி வெட்டுக்களால் கிடைத்த இலட்சக்கணக்கான யூரோக்கள் பற்றி பேசுவதற்கு இது தவறியதோடு மட்டுமல்லாமல், பள்ளி மூடல்கள், பொருளாதார மந்தநிலை மற்றும் பாரிய பணிநீக்கங்களை எதிர்கொள்ளும் தொழிலாளர்களுக்கு குழந்தை பராமரிப்பு, ஊதியங்களின் இழப்பு மற்றும் மருத்துவ செலவினங்கள் ஆகியவற்றிற்கு என எதையும் வழங்கவில்லை.

ஐரோப்பா எங்கிலும் பாரிய தனிமைப்படுத்தல்கள் செயல்படுத்தப்பட்டு வருகின்றன அல்லது அதற்கான ஏற்பாடுகள் செய்யப்பட்டு வருகின்றன, என்றாலும், இந்த நோய் வேகமாக பரவி வரும் நிலையில் கண்டம் முழுவதிலுமான மருத்துவமனைகள் கட்டுக்கடங்காமல் நோயாளிகளால் நிரம்பி வழியும் நிலைக்கு அச்சுறுத்துகிறது. நோய் பரவாமல் தடுப்பதற்கான முயற்சியாக, பகல் நேர பராமரிப்பு மையங்கள், பள்ளிகள் மற்றும் பல்கலைக்கழகங்கள் போன்றவற்றை ஒட்டுமொத்தமாக இரண்டு வார காலத்திற்கு மூடுவதற்கு கிரீஸ் அறிவித்துள்ளது. லெஸ்போஸ் தீவில், மத்திய கிழக்கு நாடுகளுக்குச் சென்ற 40 வயதான ஒரு கொரொனாவைரஸ் நோயாளி மார்ச் 9 அன்று கண்டறியப்பட்டது குறிப்பாக கவலைக்குரியதாக இருந்தது.

துருக்கிக்கு நெருக்கமான ஏஜியன் கடலிலுள்ள தீவான லெஸ்போஸ், மோசமான மோரியா தடுப்புக் காவல் முகாம் உள்ள இடமாகும், அங்கு மத்திய கிழக்குப் போர்களிலிருந்தும் வறுமையிலிருந்தும் உயிர்தப்பி வந்து சேர்ந்த பல்லாயிரக்கணக்கான அகதிகள் கொடூரமான நிலையில் தடுத்து வைக்கப்பட்டுள்ளனர். வறுமையிலும் மற்றும் ஐரோப்பிய ஒன்றிய உத்தரவின் பேரிலான சுகாதாரமற்ற சூழ்நிலைகளுக்கு மத்தியிலும் வாழக்கூடிய பல்லாயிரக்கணக்கான அகதிகளுக்கு இந்த தொற்று மற்றும் கொடிய நோய் பரவக்கூடிய உடனடி அபாயம் இப்போது அங்கு நிலவுகிறது. இச்சூழ்நிலையில், அந்த முகாமில் மட்டுமே இறப்பு எண்ணிக்கை ஆயிரக்கணக்கில் எளிதாக உயரக்கூடும்.

பிரான்சின் கொரொனாவைரஸ் நோயாளிகள் எண்ணிக்கை 372 இல் இருந்து 1,784 ஆக உயர்ந்த அதேவேளை, ஸ்பெயினில் இந் நோயாளிகளின் எண்ணிக்கை 443 இல் இருந்து 1,674 ஆக உயர்ந்த நிலையில், ஸ்பெயின் நேற்று அனைத்து கல்வி நிறுவனங்களையும் மூடியதுடன், மாட்ரிட் (Madrid), லா ரியோஹா (La Rioja) மற்றும் விட்டோரியாவில் (Vitoria) உள்ள பாஸ்க் (Basque) நகரங்கள் மற்றும் லாபாஸ்டிடாவில் (Labastida) 1,000 க்கு மேற்பட்ட நபர்கள் கூடும் மூடிய கதவு நிகழ்ச்சிகளை நிறுத்தி வைத்தது. 2008-2009 நெருக்கடிக்குப் பின்னர் ஐரோப்பிய ஒன்றிய செலவின வெட்டுக்களால் உருவான 15 மற்றும் 21 பில்லியன் யூரோக்கள் வரையிலான இழப்பினால் பாதிப்படைந்த நிலையில், கொரொனாவைரஸ் ஸ்பெயினின் சுகாதாரப் பாதுகாப்பு அமைப்புமுறையை பாதிப்பதற்கான அபாயம் அதிகரித்து வருகிறது.

பிரிட்டனில், தேசிய சுகாதார சேவையின் சுகாதாரப் பணியாளர்கள் மற்றும் வளங்களின் பற்றாக்குறை குறித்து பெருகிவரும் கவலைக்கு மத்தியில் அங்கு 6 பேர் பலியாகியுள்ளனர் என்பதோடு, 54 புதிய நபர்களுக்கு கொரொனாவைரஸ் பாதிப்புள்ளது கண்டறியப்பட்டுள்ளது. இங்கிலாந்து, 1,000 உள்நோயாளிகளுக்கு 2.5 என்ற விகிதத்தில் படுக்கை வசதிகளைக் கொண்டுள்ளது, இது ஐரோப்பாவின் இரண்டாவது மிகக் குறைந்த விகிதமாகும், மேலும் நோயாளிகளின் எண்ணிக்கை விரைந்து அதிகரித்து வரும் நிலையில் மருத்துவமனைகள் நோயாளிகளின் பெருக்கத்தால் நிறைந்து மிகுந்த பாதிப்பிற்குள்ளாகும் நிலை ஏற்படக்கூடும்.

ஜேர்மனி முழுவதுமாக கொரொனாவைரஸ் நோய்தொற்று விரைந்து அதிகரிப்பதற்கு மத்தியில், திங்களன்று இந்த நுண்கிருமி தொற்றின் காரணமாக நிகழ்ந்த இரண்டு இறப்புக்களின் பதிவிற்குப் பின்னர், ஜேர்மன் அதிகாரிகள் இன்னும் கடுமையான மற்றும் துணிச்சலான நடவடிக்கைகளை எடுக்கத் தொடங்கியுள்ளனர்.

அதன் தலைநகரமான பேர்லினில், கலாச்சார வாழ்க்கை உண்மையில் ஸ்தம்பித்துப் போகும் நிலைக்கு வருகிறது. பேர்லினின் கலாச்சார செனட்டர் கிளாஸ் லெடரர் (Klaus Lederer) செவ்வாயன்று மாலை, இயக்குநர்களுடனான ஒப்பந்தத்தின் பேரில், ஈஸ்டர் விடுமுறைகள் முடியும் வரை, அதாவது ஏப்ரல் 19 வரை, அரசு அரங்கங்கள், ஓப்பேராக்கள் மற்றும் கச்சேரி அரங்குகள் போன்ற பெரிய அரங்குகளில் நடைபெறும் அனைத்து நிகழ்ச்சிகளையும் இரத்து செய்ய முடிவு செய்தார். மேலும் பெரிய தனியார் திரையரங்குகளும் இதை பின்பற்றும்படி அவர் பரிந்துரைத்தார்.

ஐரோப்பாவில் கொலோன் (Cologne) நகரில், 12 நாட்களில் 200 க்கும் மேற்பட்ட நிகழ்ச்சிகள் மற்றும் 100,000 க்கும் மேற்பட்ட பார்வையாளர்களுடன் நடப்பதான Lit. Cologne என்ற மிகப்பெரிய இலக்கிய விழா நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது. இந்த விழா ஆரம்பிக்க திட்டமிடப்பட்டிருந்த நாளில், நகர மேயர் ஹென்ரியேற்ற ரெக்கர் (Henriette Reker) அதனை இரத்து செய்தார். “தற்போதைய சூழ்நிலையில், நோய்தொற்றுக்கான சங்கிலிகளை தகர்க்க முடிந்த அனைத்தையும் நாம் செய்ய வேண்டும்,” என்று அவர் கூறியதாக மேற்கோள் காட்டப்பட்டது. “ஆகவே, மத்திய சுகாதார அமைச்சரின் பரிந்துரைகளின் பின்னணியில் இந்த நேரத்தில் Lit. Cologne விழாவை நடத்துவதற்கு எதிராக நான் அறிவுறுத்தியுள்ளேன்,” என்றும் அவர் தெரிவித்தார்.

சாக்சோனி-அன்ஹால்ட் (Saxony-Anhalt) மாநிலத்தில் கண்டறியப்பட்ட புதிய நான்கு நோயாளிகள் உட்பட, ஜேர்மனியில் உள்ள அனைத்து கூட்டாட்சி மாநிலங்களிலும் கொரொனாவைரஸ் பாதிப்பு தற்போது ஏற்பட்டுள்ளது. ஜேர்மனி முழுவதும் தற்போது 1,296 ஆய்வக உறுதிப்படுத்தப்பட்ட நோயாளிகள் உள்ளனர்.

நுண்கிருமி பரவலின் காரணமாக, ஆறு கூட்டாட்சி மாநிலங்கள் 1,000 க்கும் மேற்பட்டோர் கலந்து கொள்ளும் நிகழ்ச்சிகளுக்கு தற்போது தடை விதித்துள்ளன: அதில், பவேரியா (Bavaria) (ஏப்ரல் 10 வரை), வடக்கு ரைன்-வெஸ்ட்பாலியா (North Rhine-Westphalia) (காலவரையறையின்றி), ஹெஸ்ஸ (Hesse), துருங்கியா (Thuringia), லோயர் சாக்சோனி (Lower Saxony), பிரேமன் (Bremen) மற்றும் ஷிலேஸ்விக்-ஹோல்ஸ்டீன் (Schleswig-Holstein) ஆகிய மாநிலங்களில் நடைபெறும் நிகழ்ச்சிகள் அடங்கும். துருங்கியாவில், 500 க்கு மேற்பட்ட நபர்கள் கலந்துகொள்ளும் நிகழ்ச்சிகளுக்குக் கூட சிறப்பு அங்கீகாரம் பெறப்பட வேண்டும். ரைன்லேண்ட்-பாலட்டினேட் (Rhineland-Palatinate), ஹெஸ்ஸ (Hesse) மற்றும் ஸார்லேண்ட் (Saarland) ஆகிய மாநிலங்களில் பெரியளவிலான நிகழ்ச்சிகளை மட்டுமே இரத்து செய்வதற்கு பரிந்துரைக்கப்பட்டுள்ளது.

1,000 க்கும் மேற்பட்ட விருந்தினர் பங்கேற்கும் நிகழ்ச்சிகளுக்கு தடை விதிக்க பவேரிய மாநில அரசாங்கம் திங்களன்று தீர்மானித்தது. இந்த நடவடிக்கை ஆரம்பத்தில் புனித வெள்ளி வரை நடைமுறையில் இருக்கும் என்றாலும் இது மேலும் நீட்டிக்கப்படலாம். ஏராளமான கால்பந்து போட்டிகள் பாதிக்கப்படுவதோடல்லாமல், வசந்தகால பண்டிகைகளும், டாகோ (Dachau) சித்திரவதை முகாமின் 75 வது ஆண்டு விடுதலை தினக் கொண்டாட்டங்களும் கூட பாதிக்கப்படும்.

குறிப்பாக மில்லியன் கணக்கான வயதானவர்களுக்கு உடனடி கொடிய ஆபத்து ஏற்படும் வாய்ப்பு உள்ளது. பேர்லினில் உள்ள பிரபலமான Charite மருத்துவமனையில் உள்ள நுண்ணுயிரியல் நிறுவனத் தலைவரான கிறிஸ்டியன் ட்ரோஸ்டென் (Christian Drosten) அவரது தினசரி வலையொளி (podcost) குறிப்பில், மூத்த குடிமக்களைப் பாதுகாக்குமாறு மக்களை வலியுறுத்தினார், இல்லையெனில் வயதானவர்களில் பாதிக்கப்பட்டோரில் கால் பகுதியினர் வரை இதற்கு பலியாக நேரிடும் என்று கூறுகிறார்.

அதனால்தான், ஒருவர் தனது சொந்த பேரக்குழந்தைகளுடன் கூட தொடர்பு வைத்திருக்காமல் இருப்பது மற்றும் சமூக வாழ்க்கையை கட்டுப்படுத்துவது போன்ற கடுமையான நடவடிக்கைகள் எடுக்கப்படுவது பொருத்தமானது என்று அவர் விளக்கமளித்ததுடன், இளைய தலைமுறையினருக்கு நிலைமையை எடுத்துக்கூறும்படி பெற்றோருக்கு அழைப்பு விடுத்தார்: “நாங்கள் அவர்களுடன் பேசி, ‘இது மிக தீவிரமானது’ என்று அவர்களுக்கு எடுத்துக் கூறுகிறோம்,” என்று ட்ரோஸ்டென் (Drosten) தெரிவித்தார். மேலும் அவர், “இதை நீங்கள் தீவிரமாக எடுத்துக் கொள்ளாவிட்டால், தற்போது 20 சதவிகித வரம்பில் உள்ளது, அவர்களில் 25 சதவிகிதம் பேரை பலி கொள்ளும் என்பதை நீங்கள் ஏற்றுக்கொள்ள வேண்டும்,” என்றும் எச்சரித்தார்.

சுகாதார ஊழியர்கள் முன்வைக்கும் உறுதியான எச்சரிக்கைகள், ஆளும் வர்க்கத்தால் காட்சிப்படுத்தப்பட்ட மனித வாழ்வில் காணப்படும் பொறுப்பற்றத் தன்மை மற்றும் அதிர்ச்சியூட்டும் அலட்சியத்திற்கு முற்றிலும் மாறுபட்டவையாக உள்ளன. “ஜேர்மனியில் 60 முதல் 70 சதவிகித மக்கள் கொரொனாவைரஸால் பாதிக்கப்படுவார்கள்,” என்று சான்சிலர் அங்கேலா மேர்க்கெல் (CDU) செவ்வாயன்று பாராளுமன்ற குழு கூட்டத்தில் தெரிவித்தார். பங்கேற்பாளர்களின் கூற்றுப்படி, மேர்க்கெலின் கருத்து பாராளுமன்ற குழுவுக்குள் திகைத்துப்போன மவுனத்தை ஏற்படுத்தியது.

ஜேர்மன் அல்லது ஐரோப்பிய மக்கள்தொகையில் மூன்றில் இரண்டு பங்கினரை இந்த நோய் தாக்கும் என்பதை ஏற்றுக்கொள்ள எந்தவித காரணமும் இல்லை. கொரொனாவைரஸ் நோயாளிகளுக்கு மருத்துவ சிகிச்சையளிப்பதற்கு பாரிய நிதியையும் சுகாதார வளங்களையும் பயன்படுத்துவதோடு தனிமைப்படுத்தல் நடவடிக்கையும் மேற்கொள்ளப்பட்டால் கொரொனாவைரஸ் தொற்று பரவுவதை தடுத்து நிறுத்தலாம். சீனாவில் தற்போது, புதிய தினசரி நோயாளிகளின் எண்ணிக்கை ஒருசில டசின் கணக்கில் அதிகரிக்கும் நிலையில், அங்கு 80,000 பேருக்கு இந்த நோய் உள்ளது, அவற்றில் பல இப்போது ஐரோப்பாவிலிருந்து அங்கு பரவுகின்றது. இந்நிலையில், இந்த நோயைத் தடுக்க, நிதி, தொழில்துறை மற்றும் விஞ்ஞான வளங்கள் ஆகியவற்றின் ஒருங்கிணைந்த, பூகோள அளவிலான அணிதிரட்டலின் அவசியத்தை இது குறிக்கிறது.

இதற்கு மாறாக, இதற்கான தடுப்பு மருந்து கண்டுபிடிக்கப்படுவதற்கு முன்னர் 50 முதல் 60 மில்லியன் வரையிலான ஜேர்மனியர்கள் இந்த தொற்று நோய் பாதிப்பிற்குள்ளானால், அண்ணளவாக 20 சதவிகிதம் அல்லது 10 முதல் 12 மில்லியன் பேருக்கு மோசமான உடல்நலக்குறைவு ஏற்பட்டு, சுகாதார அமைப்புமுறையின் சமாளிப்புத் திறனை விஞ்சக்கூடிய அளவிற்கு நோயாளிகளின் பெருக்கம் ஏற்படுமானால் அது மில்லியன் கணக்கானவர்களின் இறப்பிற்கு இட்டுச்செல்லும். மேலும் சர்வதேச அளவில், மனித வாழ்க்கையில் ஏற்படும் இழப்புக்கள் கணக்கிட முடியாததாக இருக்கும்.

அத்தகைய முன்கணிப்பை மேர்க்கெல் பகிரங்கமாக முன்வைக்க முடிவதானது, ஐரோப்பிய முதலாளித்துவத்தின் திவால்நிலைக்கும் மற்றும் அதன் சிக்கன திட்டநிரலுக்கும் சாட்சியமளிக்கிறது. மருத்துவ பராமரிப்பு உரிமைக்காகவும், தொற்றுநோயால் பாதிக்கப்பட்டுள்ள தொழிலாளர்கள் மற்றும் சிறு வணிகங்களை காப்பாற்ற தேவைப்படும் முழு நிதி மற்றும் சமூக ஆதரவிற்காகவும், மற்றும் ஐரோப்பிய ஒன்றியத்தின் அழிவுகரமான சிக்கன நடவடிக்கைகளுக்கு முற்றுப்புள்ளி வைப்பதற்காகவும் போராட தொழிலாள வர்க்கத்தை இப்போது அணிதிரட்டுவது மிக முக்கியமானதாகும். முதலாளித்துவம் மனிதகுலத்தை பேரழிவிற்கு இட்டுச் செல்கிறது, அது சோசலிசத்தால் பதிலீடு செய்யப்பட வேண்டும்: மனித தேவையை பூர்த்தி செய்வதற்கு, உலகளாவிய பொருளாதார வளங்களை இலாபத்திற்காக அல்லாமல், திட்டமிடப்பட்ட, பகுத்தறிவு வாய்ந்த மற்றும் ஜனநாயக ரீதியான வகையில் பயன்படுத்த வேண்டும்.Top of Form