ஜேர்மன் அரசாங்கத்தின் கொரோனா வைரஸ் பிணை எடுப்பு: பணக்காரர்களுக்கு பில்லியன்கள், ஏழைகளுக்கு மானியம்

Peter Schwarz
27 March 2020

மொழிபெயர்ப்பின் மூலக் கட்டுரையை இங்கே காணலாம்

"போர் என்பது வேறு வழிகளில் அரசியலின் தொடர்ச்சியாகும்." கொரோனா வைரஸ் நெருக்கடிக்கு எதிரான "போரை" நடத்துவதற்கு ஜேர்மன் அரசாங்கத்தின் 756 பில்லியன் யூரோ பிணை எடுப்புப் பொதியை விவரிப்பதற்கு இராணுவ கோட்பாட்டாளர் கார்ல் வொன் கிளாவுஸ்விட்ஸ் இன் புகழ்பெற்ற இந்த விபரிப்பு மிகவும் பொருத்தமானது. இது பெரும் கூட்டணி அரசாங்கம், பல ஆண்டுகளாக கடைப்பிடித்து வரும் ஏழைகளின் இழப்பில் செல்வந்தர்களை மேலும் செல்வமுள்ளவர்களாக்கும் கொள்கையின் தொடர்ச்சியாகும்.

புள்ளிவிவரங்கள் இதனை தெளிவாக தாமாகவே எடுத்துக்காட்டுகின்றன: சிறு வணிகங்களுக்கும் சுயதொழில் செய்பவர்களுக்கும் வெறும் 50 பில்லியன் யூரோ உடன் ஒப்பிடும்போது, 600 பில்லியன் யூரோ உடன் பெரிய நிறுவனங்களை ஆதரிக்க திட்டமிடப்பட்டுள்ளது. 500 க்கும் குறைவான ஊழியர்களைக் கொண்ட சிறிய மற்றும் நடுத்தர வணிகங்கள் ஜேர்மனியில் உள்ள அனைத்து சமூக காப்பீடுள்ள ஊதிய வேலைகளில் 58 சதவிகிதம் அல்லது சுமார் 18 மில்லியன் மக்களைக் கொண்டுள்ளன.

சிறு தொழில்கள் மற்றும் குறிப்பாக சுயதொழில் செய்பவர்கள் கொரோனா வைரஸ் நெருக்கடியால் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளனர். COVID-19 காரணமாக முற்றிலுமாக மூடப்பட வேண்டிய உணவு, பொழுதுபோக்கு மற்றும் பல சேவைத் துறைகளில் அவை ஆதிக்கம் செலுத்துகின்றன. மேலும் வழக்கமாக இவற்றிலிருந்து ஈடுசெய்துகொள்வதற்கு அவற்றிடம் மிகக் குறைந்த நிதி இருப்புக்களே உள்ளன.

உதாரணமாக, லைப்சிக் நகரில் 260,000 சமூக காப்பீட்டு ஊதியம் பெறும் வேலைகளில் கால் பகுதியும், எண்ணற்ற ஊதியம்குறைந்த வேலை மற்றும் சுயதொழில் செய்பவர்களும் வணிக கண்காட்சிகள் மற்றும் மாநாடுகளை நடத்துவதிலேயே தங்கியிருக்கின்றனர். அவை முற்றிலுமாக மூடப்பட்டுள்ளன. பெரிய சுற்றுலா மற்றும் சேவைத் துறைகளைக் கொண்ட பிற நகரங்களின் நிலைமை இதுபோன்றே உள்ளது.

சுமார் 3 மில்லியன் சிறு தொழில்கள் மற்றும் சுயதொழில் செய்பவர்கள் 50 பில்லியன் யூரோ நிதியிலிருந்து ஆதரவுக்கு விண்ணப்பிப்பார்கள் என்று அரசாங்கம் எதிர்பார்க்கிறது, அதாவது ஒரு விண்ணப்பதாரருக்கு அதிகபட்சம் 15,000€ ஆகும். ஐந்துக்கும் குறைவான ஊழியர்களைக் கொண்ட நிறுவனங்கள் மூன்று மாதங்களுக்கு, 9,000 € பெறவுள்ளன. அதே நேரத்தில் 10 க்கும் குறைவான ஊழியர்களைக் கொண்ட வணிகங்கள் அதே மூன்று மாத காலத்திற்கு 15,000€ வரை பணம் பெறும். இது ஒரு ஊழியருக்கு மாதத்திற்கு 500€ முதல் 600€ வரை சமமானதும், வாழ்வதற்கே மிகக் குறைவான தொகையுமாகும்.

மேலும், இந்த நிதிகள் எப்போதாவது விண்ணப்பதாரர்களை சென்றடையுமா என்பது கேள்விக்குறியாக உள்ளது. வழமையான அதிகாரத்துவ முறைகளில் இருந்து விடுபட்டு உதவி வழங்குவதாக அரசாங்கம் உறுதியளித்துள்ளது. ஆனால் கொரோனா வைரஸ் நெருக்கடியால் தாங்களே பாதிக்கப்பட்டுள்ள அதிகாரிகளின் அதிகப்படியான சுமைகளையும், ஜேர்மனியில் உள்ள சிக்கலான நிர்வாக அமைப்புமுறைகளையும் கருத்தில் கொண்டு பார்க்கையில், இது வெற்று வாக்குறுதியைத் தவிர வேறொன்றுமில்லை.

குறைந்த ஊதியம் பெறுபவர்களுக்கும், ஹார்ட்ஸ் IV சமூக நலனுக்கான உரிமைகோருபவர்களுக்கும் நிலைமை இன்னும் மோசமானது. குறிப்பாக அவர்கள் நெருக்கடியால் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளனர். மலிவு விலையில் மளிகை சாமான்களை வழங்கிய பெரும்பாலான உணவு வங்கிகள், தொற்றுநோய் காரணமாக மூடப்பட்டுள்ளன. மேலும் பல்பொருள் அங்காடிகளில் உள்ள பொருட்கள் குறைவாக இருக்கின்றன அல்லது விலை உயர்ந்தவையாக உள்ளன. அவர்களுக்காக எந்தவொரு நிதி உதவியும் அரசாங்கத்தால் திட்டமிடப்படவில்லை. அரச செலவினங்களை 7.5 பில்லியன் யூரோ அதிகரிக்க அவர்கள் திட்டமிட்டுள்ளனர், ஏனெனில் ஹார்ட்ஸ் IV உரிமைகோருபவர்களின் எண்ணிக்கை அதிகரிக்கும் என்பதாலாகும்.

மாறாக, பெரிய நிறுவனங்களும் வங்கிகளில் உள்ள அவற்றின் ஆதரவாளர்களும் பணத்தால் மூழ்கடிக்கப்படுகிறார்கள். திட்டமிடப்பட்டுள்ள "பொருளாதார ஸ்திரப்படுத்தல் நிதி" (WSF) 2008-2009 ஆம் ஆண்டின் வங்கி பிணை எடுப்பு நிதியை விடவும் பெரியது. அந்த நேரத்தில், பிணை எடுப்பு 480 பில்லியன் யூரோவாகும். WSF ஆகக்குறைந்தது 2,000 ஊழியர்களையும், ஆண்டுக்கு 320 மில்லியன் யூரோ வருவாயையும் கொண்ட நிறுவனங்களுக்கு கிடைக்கிறது.

சுகாதாரப் பாதுகாப்பு முறை மற்றும் சமூக நலன்புரி கொடுப்பனவுகளில் கடுமையான சிக்கன நடவடிக்கைகளை சுமத்தும் வரை விவாதிக்கப்படக்கூடாது என கருதப்பட்ட கடன் தடை பற்றிய விவாதம், பிணை எடுப்புக்கு உதவுவதற்காக இடைநிறுத்தப்பட்டுள்ளது. இதை நிறைவேற்ற மத்திய நாடாளுமன்றத்தின் கீழ் மற்றும் மேல் சபைகளான பாராளுமன்றமும் அதன் மேல் சபையும் (Bundestag, Bundesrat) இன்றும் நாளையும் சந்திக்கும்.

400 பில்லியன் யூரோ மூலம், இந்த நிதி உதவி கோரும் நிறுவனங்களின் பெருநிறுவன கடன் மற்றும் பிற கடமைப்பாடுகளையும் வாங்க முடியும். மேலும் 100 பில்லியன் யூரோ கடன்களை வழங்க அரசுக்கு சொந்தமான புனரமைப்புக்கான வங்கிக்கு (KfW) கிடைக்கும். அரசாங்கத்தால் நிறுவனங்களை கையேற்றுக்கொள்ள கூடுதல் 100 பில்லியன் யூரோ இன்னும் கிடைக்கும்.

தேவைப்பட்டால் கொரோனா வைரஸ் நெருக்கடியின் போது நிறுவனங்களை ஓரளவு அல்லது முழுமையாக அரசு கையேற்றுக்கொள்ளும் என்று பொருளாதார விவகார அமைச்சர் பீட்டர் ஆல்ட்மையர் (கிறிஸ்தவ ஜனநாயக கட்சி) தெளிவுபடுத்தினார். சோசலிஸ்டுகளால் கூறப்படும் தனியார் நிறுவனங்களை தேசியமயமாக்குவதற்கும் இந்த வகையான அரசு கையேற்றுக்கொள்ளலுக்கும் எவ்வித தொடர்புமில்லை. மாறாக, இந்த நிறுவனங்கள் பொதுப் பணத்தின் உட்செலுத்தலைப் பெறும், பின்னர் அவை இலாபத்திற்கு திரும்பியதும், அரசாங்கம் அவற்றை மீண்டும் தங்கள் உரிமையாளர்களிடம் ஒப்படைக்கும்.

600 பில்லியன் யூரோ பிணை எடுப்பு, பணிநீக்கம் செய்யப்பட்ட தொழிலாளர்களுக்கு ஊதியம் வழங்குவதற்கான நிதியைக் கொண்டிருக்கவில்லை. அவர்கள் முந்தைய ஊதியத்தில் 60 சதவிகிதத்திற்கும் 67 சதவிகிதத்திற்கும் இடையில் பெற முடியும். இது வேலையற்றோருக்கான காப்பீட்டு நிதியிலிருந்து செலுத்தப்படுகிறது மற்றும் கூடுதல் செலவுகள் இல்லமலே பட்டினி ஊதியத்துடன் தொழிலாளர்களை வீட்டிற்கு அனுப்ப நிறுவனங்களுக்கு உதவுகிறது.

WSF இல் உள்ள 600 பில்லியன் யூரோ என்பது முக்கிய நிறுவனங்களின் பணப்புழக்கத்தை பாதுகாப்பதற்கும் அவர்களின் எதிர்கால இலாபத்தை உறுதி செய்வதற்கும் மட்டுமேயாகும். இது ஒரு திறந்த கேள்வியாகவே உள்ளது என்று Sdeddeutsche Zeitung பத்திரிகை கருத்து தெரிவித்தது, “நிறுவனங்களுக்கான கட்டுப்பாடற்ற கடன் திட்டம் உண்மையில் வணிகத்திற்கு உதவுகிறதா, அல்லது வங்கிகளுக்கு மட்டுமா. எல்லாவற்றிற்கும் மேலாக, அரசாங்கத்தின் கடன் உத்தரவாதங்கள் வங்கிகளுடன் செய்யப்படுகின்றன. அதே நேரத்தில் எதையும் உற்பத்தி செய்யாத நிறுவனங்கள் தொடர்ந்து இவற்றிற்கு பொறுப்பேற்கின்றன.”

ஜேர்மன் அரசின் WSF திட்டத்தின் கீழ் கிடைக்கும் 600 பில்லியன் யூரோ உதவியுடன் பங்குகளை வாங்க ஐரோப்பிய மத்திய வங்கி வெளியிட்ட 750 பில்லியன் யூரோவும் மேலதிகமாக கிடைக்கவுள்ளது. இந்த நடவடிக்கை 2008-2009 இலிருந்து தனியார் முதலீட்டு நிதிகள், வங்கிகள் மற்றும் கோடீஸ்வரர்களுக்கு பெரும் இலாபத்தை ஈட்டிய சூதாட்டத்தை நடத்துவதை தொடர்வதையே நோக்கமாகக் கொண்டுள்ளது.

குறுகியகால பங்கு விற்பனையை தடை செய்வதைகூட ஐரோப்பிய அரசாங்கங்களால் ஒப்புக்கொள்ள முடியவில்லை. இது ஊக வணிகர்கள் விலை வீழ்ச்சியடையும் போது பங்கு விலையில் இலாபம் ஈட்ட உதவுகிறது. 2008 நெருக்கடியின் போது பெரும் இலாபம் ஈட்டிய பெரிய உலகளாவிய தனியார் முதலீட்டு நிதியான பிரிட்ஜ்வாட்டர் (Bridgewater) ஏற்கனவே ஐரோப்பிய நிறுவனங்களின் பங்கு விலைகள் வீழ்ச்சியடைவதிலிருந்து சுமார் 14 பில்லியன் டாலர்களை இலாபம்பெற பந்தயம் கட்டியுள்ளது.

ஜேர்மன் சான்ஸ்லர் அங்கேலா மேர்க்கெல் மற்றும் பிற அரசாங்க அதிகாரிகளும் தொடர்ந்து மக்களுக்கு ஒற்றுமையின் செய்திகளை அறிவிக்கின்றனர். மேலும் பாராளுமன்றத்தை பிரதிநிதித்துவப்படுத்தும் அனைத்துக் கட்சிகளும் இதை ஆதரிக்கின்றன. இடது கட்சி நாடாளுமன்றக் குழுத் தலைவர் டீட்மார் பார்ட்ஸ் ஞாயிற்றுக்கிழமை மாலை மேர்க்கெலின் கருத்துக்களைத் தொடர்ந்து ட்விட்டரில் பின்வருமாறு எழுதினார், “அதிபரின் தெளிவான வார்த்தைகளுக்கு நன்றி.” ஒற்றுமையை ஊக்குவிக்கும் அனைத்து நடவடிக்கைகளுக்கும் இடது கட்சி நாடாளுமன்றக் குழு ஆதரவளிக்கும், மேலும் நாடு, மக்கள் மற்றும் பொருளாதாரத்திற்கு சேதம் ஏற்படுவதைத் தவிர்க்கும். ஒற்றுமைக்கான இந்த அழைப்பானது ஒரு அரசாங்கத்தின் கடமையும் கூட” என்றார்.

உண்மை என்னவென்றால், சமீபத்திய ஆண்டுகளில் பெரும் கூட்டணி பின்பற்றிய கொள்கைகளான சமூக செலவினங்கள் மீதான தாக்குதலை திட்டமிட்டு ஆழப்படுத்தவும், செல்வந்தர்களை வளப்படுத்தவும், பொலிஸ்-அரசு எந்திரத்தையும் இராணுவத்தையும் வலுப்படுத்தவும் அவர்கள் நெருக்கடியை சுரண்டிக்கொள்கிறார்கள் என்பதுதான்.