கொரொனாவைரஸ் நோய்தொற்று அதிரடியாக பரவுகையில் ஐரோப்பாவில் 12,000 க்கும் மேற்பட்டவர்கள் பலியாகினர்

Thomas Scripps
28 March 2020

மொழிபெயர்ப்பின் மூலக் கட்டுரையை இங்கே காணலாம்

ஐரோப்பிய கண்டம் இந்த தொற்றுநோய்க்கான மையப்பகுதியாக இருப்பதால், பூகோள அளவில் அதை “முடுக்கி” வருகிறது என்று உலக சுகாதார அமைப்பு (WHO) எச்சரிக்கிறது. கோவிட்-19 பாதிப்புக்குள்ளான முதல் தொற்றுநோயாளி குறித்து பதிவு செய்யப்பட்டு பூகோள அளவில் தொற்றுநோயாளிகளின் எண்ணிக்கை 100,000 என்ற மைல்கல்லை எட்டுவதற்கு 67 நாட்களை இது எடுத்துக் கொண்டது, பின்னர் 200,000 ஆக அது அதிகரிப்பதற்கு 11 நாட்களானது, மேலும் 300,000 ஐ எட்டுவதற்கு நான்கு நாட்களும், 400,000 ஐ எட்டுவதற்கு மூன்று நாட்களும் அதற்கு தேவைப்பட்டன.

நேற்று மாலை நிலவரப்படி கண்டம் முழுவதிலுமாக கோவிட்-19 தொற்று பாதிப்பினால் 12,077 பேர் இறந்துள்ளனர்; அதிலும் அதற்கு முந்தைய 24 மணி நேரத்திற்குள் மட்டும் மற்றொரு 1,742 பேர் உயிரிழந்துள்ளது குறிப்பிடத்தக்கது. மேலும், புதிதாக கண்டறியப்பட்ட 22,715 நோயாளிகள் உட்பட, ஐரோப்பாவில் மொத்த நோயாளிகளின் எண்ணிக்கை 218,015 ஆக உயர்ந்தது. ஐரோப்பிய ஒன்றியத்தின் 27 நாடுகளுக்கு இடையிலான, மொத்த இறப்பு எண்ணிக்கை 11,479 ஐ எட்டியுள்ளது.

இத்தாலியில், கடைசி 24 மணி நேரத்திற்குள் 743 பேர் உயிரிழந்த நிலையில், மொத்த இறப்பு எண்ணிக்கையை 6,820 ஆக அது அதிகரிக்கச் செய்தது. அதே நேரத்தில் புதிய நோயாளிகளின் எண்ணிக்கை 5,249 ஆக அதிகரித்து, மொத்த நோயாளிகளின் எண்ணிக்கை கிட்டத்தட்ட 70,000 ஆக அங்கு உயர்ந்துள்ளது.

இத்தாலியில், ரோம் நகரில் நோயாளி ஒருவர் தூக்கு படுக்கையில் வைத்து கொண்டு செல்லப்பட்டார் (Photo: Alessandra Tarantino/AP)

ஸ்பெயினில் தற்போதைய 514 இறப்புக்களும் சேர்ந்து மொத்த இறப்புக்களின் எண்ணிக்கை 2,696 ஆக உயர்ந்துள்ளது. இந்த நாட்டின் நோய்தொற்று விகிதம் முதல் முறையாக இத்தாலியை காட்டிலும் அதிகரித்து, கடைசி நாளின் படி 6,584 புதிய நோயாளிகள் அங்கு இருப்பது தெரியவருகிறது. இந்த கொடூரமான நிகழ்வுகள் அந்நாட்டை மாட்ரிட்டில் உள்ள செயற்கைப் பனிச்சறுக்கும் மண்டபத்தை பிணங்களை வைக்கும் இடமாக மாற்றும் நிலைக்குத் தள்ளியுள்ளது என்பதுடன், 5,500 படுக்கை வசதிகள் கொண்ட கள மருத்துவமனையாக Ifema மாநாட்டு மையம் மாற்றப்பட்டுள்ளது.

இங்கிலாந்தில் மற்றொரு 87 பேர் இறந்துள்ள நிலையில், 26 சதவிகித அதிகரிப்பு ஏற்பட்டதுடன் அதிகபட்ச தினசரி அதிகரிப்பை ஏற்படுத்தி, இறப்பு எண்ணிக்கையை 422 ஆக உயர்த்தியுள்ளது. கடைசி நாளில் இறந்தவர்களில், 21 பேர் வடமேற்கு இலண்டனில் உள்ள ஒரே அறக்கட்டளை மருத்துவமனை இறந்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது. பொதுவாக கண்காட்சிகள் மற்றும் பெரும் நிகழ்ச்சிகளை நடத்த பயன்படுத்தப்பட்டு வரும் தலைநகரின் ExCeL மையம், திட்டமிடப்பட்ட 4,000 படுக்கை வசதிகள் கொண்ட ஒரு கள மருத்துவமனையாக தற்போது மாற்றப்பட்டு வருகிறது. திங்களன்று, பிரதமர் போரிஸ் ஜோன்சன் மூன்று வாரங்களில் தேசியளவிலான முழு அடைப்பை செயல்படுத்த மீளாய்வு செய்யப்படும் என்று தெரிவித்தார்.

பிரான்சில், இறப்பு விகிதம் பெரியளவாக 28 சதவிகிதம் அதிகரித்து பாதிக்கப்பட்ட நிலையில், 1,000 இறப்புக்கள் என்ற கடுமையான மைல்கல்லை எட்டிய சமீபத்திய நாடாக இது மாறியுள்ளது. அதாவது மொத்த இறப்பு எண்ணிக்கை 866 இல் இருந்து 1,100 ஆக அதிரடியாக உயர்ந்துள்ளது. மேலும், கூடுதலாக 2,516 பேர் செயற்கை சுவாச வழங்கவேண்டிய நிலையில் உள்ளனர்.

உலக சுகாதார அமைப்பின் இயக்குநரான Dr. Tedros Adhanom, “போக்கின் பாதையை மாற்றுவது” இன்னும் கூட சாத்தியம் என்று வலியுறுத்தினார், என்றாலும் நெருக்கடிக்கு தேவையான உதவிஆதாரங்களை ஒதுக்க அரசாங்கங்கள் தவறிவிட்டன என்று திங்களன்று எச்சரித்தார். ஐரோப்பா முழுவதிலும் உள்ள அரசாங்கங்களால் குற்றவியல்தனமாக தாமதமாக அறிமுகப்படுத்தப்பட்ட தனிமைப்படுத்தல் மற்றும் சரீர ரீதியாக இடைவெளி ஏற்படுத்தல் போன்ற நடவடிக்கைகள் நுண்கிருமி பரவுவதை மெதுவாக்க உதவும், என்றாலும் “வெற்றி பெறுவதற்கு தற்காப்பு நடவடிக்கைகள் மட்டும் உதவாது. அதை வெற்றி கொள்வதற்கு, தீவிர மற்றும் இலக்குடன் இயங்கும் தந்திரோபாயங்களை நாம் கையாண்டு நுண்கிருமிகளை தாக்க வேண்டும், அதாவது, சந்தேகிக்கப்படும் ஒவ்வொரு நோயாளியையும் பரிசோதனைக்கு உட்படுத்துவது, நோய் உறுதிப்படுத்தப்பட்ட நபர்களை தனிமைப்படுத்தி தொடர்ந்து மருத்துவ கண்காணிப்பில் வைப்பது, மற்றும் அவர்களுடன் நெருங்கிய தொடர்பில் இருந்த அனைவரையும் தேடி கண்டறிந்து அவர்களையும் தனிமைப்படுத்துவது என்பதாகும்.

முன்னணியில் இயங்கும் மருத்துவ ஊழியர்களை பாதுகாக்கும் வகையில் எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் போதுமானதாக இல்லை என்று Dr. Tedros எச்சரித்தார்: “சுகாதார ஊழியர்கள் தங்களது வேலைகளை பாதுகாப்பாக செய்ய முடிந்தால் மட்டுமே அவர்களால் திறம்பட செயல்பட முடியும். நாம் அனைத்தையும் சரியாக செய்தாலும், நோயாளிகளை காப்பாற்றக்கூடிய சுகாதார ஊழியர்களையே நோய்தொற்று பாதித்துவிடக்கூடும் என்பதால், அவர்களை பாதுகாப்பதற்கு நாம் முன்னுரிமை கொடுக்கவில்லை என்றால், பலரும் அதனால் உயிரிழப்பர்.”

ஒரு பொது சுகாதார பேரழிவை எதிர்கொண்டு, சீனாவில் ஏற்பட்ட உண்மையான தொற்றுநோய் வெடிப்பு உலகளாவிய அச்சுறுத்தலாக உருவெடுப்பதற்கு சில வாரங்களுக்கு முன்னரே அறிவிப்பு வழங்கப்பட்டிருந்தாலும், ஐரோப்பிய அரசாங்கங்கள் அதற்கான நடவடிக்கைகளை மேற்கொள்ள தயாராகவில்லை.

இன்னமும், கோவிட்-19 நோய்தொற்று தொடர்பான பரிசோதனை நடவடிக்கைகள் ஐரோப்பா முழுவதும் குறைவாகவே உள்ளது. இத்தாலிக்கு வெளியே, ஜேர்மனி இதுவரை அதிகளவிலான பரிசோதனைகளை மேற்கொண்டுள்ளது (அதாவது மார்ச் 15 நிலவரப்படி 167,000 என்ற அளவில்), என்றாலும் நுண்கிருமி பரவுவதை ஓரளவு கட்டுப்பாட்டிற்குள் கொண்டு வர தென் கொரியாவில் மேற்கொள்ளப்பட்ட 316,000 பரிசோதனைகளைக் காட்டிலும் கணிசமான அளவில் அது குறைவாகவே உள்ளது. இவ்வாறாக, மார்ச் 24 நிலவரப்படி இங்கிலாந்தில் 90,436 பரிசோதனைகளும் மற்றும் நோர்வேயில் 70,608 பரிசோதனைகளும் செய்து முடிக்கப்பட்டுள்ளன, மார்ச் 15 நிலவரப்படி பிரான்சில் 36,747 பரிசோதனைகளும், மேலும் மார்ச் 18 நிலவரப்படி ஸ்பெயினில் 30,000 மற்றும் பெல்ஜியத்தில் 18,360 பரிசோதனைகளும் செய்து முடிக்கப்பட்டுள்ளன. Our World in Data இணையதள பிரசுரத்தின் படி, ஆஸ்திரியா, சுவீடன், போலந்து மற்றும் டென்மார்க் ஆகிய நாடுகளில் 10,730 முதல் 15,613 வரையிலுமாக அடுத்தடுத்த எண்ணிக்கைகளில் பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. தென் கொரியாவைப் போல ஒவ்வொரு மில்லியனில் மூன்றில் ஒரு பங்கு விகித மக்களை பரிசோதனை செய்த நோர்வேயை காட்டிலும் அதிகமாக எந்தவொரு பெரிய ஐரோப்பிய நாடும் பரிசோதனை நடவடிக்கைகளை அந்தளவிற்கு மேற்கொள்ளவில்லை.

அடிப்படை பாதுகாப்பு ஏற்பாடுகள் கூட இல்லாமல் வேலை செய்யும் நிலைக்கு ஆளாக்கப்பட்ட முக்கிய மருத்துவப் பணியாளர்களுக்கே தரமான பரிசோதனைகள் கிடைக்கவில்லை.

இத்தாலியில், நேற்று காலை 4,824 சுகாதாரப் பணியாளர்கள் பாதிக்கப்படவுள்ளார்கள் என்பது அறியப்பட்டது, இது அந்நாட்டின் தற்போதைய நோயாளிகளில் 9 சதவிகிதத்தைக் குறிக்கிறது. பெர்காமோ நகரத்தில், குடும்ப மருத்துவர்களில் 22 சதவிகிதத்தினருக்கு நோய்தொற்று ஏற்பட்டுள்ளது, அல்லது தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர். அதாவது 5,805 சுகாதாரப் பணியாளர்களில் 1,464 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். வடக்கு இத்தாலியில் உள்ள Olgio Po மருத்துவமனையில் 90 மருத்துவர்களில் 25 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்; அதாவது மருத்துவமனையின் பணியாளர்களில் ஐந்தில் ஒரு பங்கினருக்கு நோய்தொற்று இருப்பது உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.

ஸ்பெயினில், நேற்று மாலை நிலவரப்படி, 5,400 சுகாதாரப் பணியாளர்களுக்கு நோய்தொற்று இருப்பது உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. இது நாட்டின் உறுதிப்படுத்தப்பட்ட நோயாளிகளில் 14 சதவிகிதமாகும். பல மருத்துவமனைகள், நுண்கிருமி எளிதில் தாக்கக்கூடிய “ஆபத்தான” வகையினரான, 65 வயது முதல் 69 வயதிற்குட்பட்ட ஓய்வுபெற்ற மருத்துவ பணியாளர்களின் பட்டியலை தயாரித்து, அவர்களது மருத்துவ பிரிவுகளில் பணியாளர்களின் பற்றாக்குறை இருந்தால் அவர்களை பணிக்கு திரும்பச் செய்வதற்கான நடவடிக்கைகளை மேற்கொள்கிறது. சில மருத்துவமனைகளில், மருத்துவர்கள் மற்றும் செவிலியர்களுக்கான ஒருமுறை பயன்படுத்தப்படும் மேல் உடுப்புக்கள் இல்லாமலேயே அவர்கள் பணிபுரிகின்றனர், அதற்கு மாற்றாக அவர்களது கைகளில் குப்பைசேகரிக்கும் பைகளை அணிந்து கொள்கின்றனர்.

இங்கிலாந்தில் உள்ள மருத்துவ பணியாளர்கள் தங்களது தற்காலிக பாதுகாப்பு உபகரணங்களை தாங்களே வடிவமைக்க வேண்டிய கட்டாயத்தில் உள்ளனர். மருத்துவர்களும் செவிலியர்களும் தங்களை “பீரங்கிகளுக்கு தீனியாகவும் ” மற்றும் “பலிக்கடாக்களாகவும்” போல கருதுவதாக கூறியுள்ளனர். நேற்று, சில மருத்துவமனைகளுக்கு அவர்கள் வழக்கமாக பயன்படுத்தும் வகையில் இல்லாத வேறுபட்ட முகக் கவசங்கள் அனுப்பப்பட்டன, அதனால் நேரத்தை வீணடிக்கும் வகையிலான அந்த முகக் கவசங்களை பொருத்தும் பரிசோதனைகளை மீண்டும் மேற்கொள்ளும் படி ஊழியர்கள் கட்டாயப்படுத்தப்பட்டனர்.

ஆளும் வர்க்கத்தின் ஒரு குணாம்சமான அவர்களது வெளிப்படையான முட்டாள்தனம் மிருகத்தனமான வணிக கணக்கீடுகளில் அதன் வேர்களைக் கொண்டுள்ளது. அதாவது பல உயிர்களை விலைகொடுத்தேனும், முக்கிய பெருநிறுவனங்களின் இலாபங்களை இக்கட்டிலிருந்து மீட்பதாகவே அனைத்து நடவடிக்கைகளும் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

பரிசோதனை வசதிகளும், தனிப்பட்ட பாதுகாப்பு உபகரணங்களும் (personal protective equipment-PPE) பெரும்பாலும் இன்னும் கிடைக்கவில்லை என்றாலும், பெருவணிகங்களுக்கு பில்லியன்களில் நிதி வழங்கப்படுகின்றன. ஜேர்மனியில் திங்களன்று, சான்சிலர் அங்கேலா மேர்க்கெலின் அமைச்சரவை 750 பில்லியன் யூரோவுக்கு மேற்பட்ட மதிப்பு கொண்ட நிதி வழங்கலுக்கு ஒப்புக்கொண்டது. இதில், வணிகங்களுக்கு கடன்கள் வழங்குவதற்கான மற்றும் நிறுவனங்களின் நேரடி பங்குகளை வாங்குவதற்குமான 600 பில்லியன் யூரோ அடங்கும்.

தெளிவான பாதுகாப்பற்ற நிலைமைகளின் கீழ் பணியாளர்களை எப்படி மீண்டும் பணியில் அமர்த்துவது, இந்த நிதியளிப்புகளுக்கு எப்படி நிதி ஒதுக்கீடு செய்வது மற்றும் இலாபங்களை எப்படி பாதுகாப்பது ஆகியவை குறித்து ஏற்கனவே தலைமை நிர்வாக அதிகாரிகளும், அரசாங்க அதிகாரிகளும் திட்டமிட்டுள்ளனர்.

இங்கிலாந்தில் தேசிய அளவிலான முழு அடைப்பு அமல்படுத்தப்பட்டிருந்தாலும், கட்டிடத் தளங்களில் நடக்கும் வேலைகளை தொடர்ந்து செயல்படுத்த அரசாங்கம் அனுமதித்துள்ளது. முதலாளிகள் “அரசாங்க வழிகாட்டுதல்களைப் பின்பற்றுவதையும், பணித் தளத்தில் பாதுகாப்பான சமூக இடைவெளி கடைபிடிக்கப்படுவதையும்” உறுதிப்படுத்துமாறு அமைச்சர்கள் கேட்டுக் கொள்ளப்பட்டனர். ஆனால், கட்டிடத் தொழிலாளர்கள் கூட்ட நெரிசல் மிக்க பொது போக்குவரத்து மூலம் பயணிக்கவும், நெருக்கடியான சூழல்களில் பணிபுரியவுமே நிர்பந்திக்கப்படுகின்றனர். கேம்பிரிட்ஜில் உள்ள ஒரு தொழிலாளி 300 பேருக்கு அருகாமையில் அவர் பணிபுரிவதாக BBC க்கு தெரிவித்து பின்வருமாறு கூறினார்: “பணிப் பகுதி ஒரு சிறிய புகைபிடிக்கும் பகுதியையும், கைப்பிடிகளுடன் கூடிய கைரேகை பதிவு செய்யும் சுழற்சி இயந்திர நுழைவையும் மற்றும் சமூக இடைவெளியை பராமரிப்பதற்கான தரத்தைக் கொண்டிராத சிற்றுண்டி உணவகங்களையும் கொண்டுள்ளது. பொருளாதார தாக்கம் குறித்த பயத்தில் தான் நாங்கள் இவ்வாறு வேலை செய்வதைத் தொடர்கிறோம்”.

உக்ரைனில், உலகின் மிகப்பெரிய எஃகு உற்பத்தியாளரும், நாட்டின் மிகப்பெரிய முதலீட்டாளருமான, ArcelorMittal நிறுவனம், “கட்டுப்பாட்டு நடவடிக்கைகளை கடுமையாக்குவது பற்றி கவலை கொண்டுள்ளதாக” தெரிவித்து, தேசிய அவசரகால நிலையை அறிவிப்பதை நிறுத்துமாறு அரசாங்கத்திடம் கூறியது.

கண்டம் முழுவதிலும், நிர்வாகிகள் மற்றும் பங்குதாரர்களுக்காக தங்களது மிகக்குறைந்த பாதுகாப்பைக்கூட விலையாக கொடுக்கும் இந்த முயற்சிகளுக்கு எதிராக தொழிலாள வர்க்கதிற்கு மத்தியில் எதிர்ப்பு வளர்ந்து வருகிறது.

Sports Direct என்ற விளையாட்டு ஆடைகள் விற்பனை கடையின் கோடீஸ்வர முதலாளி மைக் ஆஸ்லே நேற்று, தனது கடைகள் திறந்து வைக்கப்பட்டிருப்பதை நியாயப்படுத்த “அத்தியாவசிய சேவைகளையே” அவரது வணிகம் வழங்கியதாக கூற முயற்சித்தார். என்றாலும், இங்கிலாந்தில் செவ்வாயன்று காலை #boycottSportsDirect என்று ட்விட்டரில் பதிவிடப்பட்ட மிகுந்த பிரபலமான சிறு குறிப்புச் செய்தியைத் தொடர்ந்து தனது தொழிலாளர்களின் ஆர்ப்பாட்டங்கள் மற்றும் பாரிய மக்கள் அழுத்தத்தால் அவர் பின்வாங்கும் நிலைக்குத் தள்ளப்பட்டார்.

பிரான்ஸ் மற்றும் இத்தாலியில் உள்ள அமேசன் தொழிலாளர்கள் விநியோகக் கிடங்குகளில் பாதுகாப்பற்ற மற்றும் தேவையற்ற வேலைகளைச் செய்ய தாங்கள் நிர்ப்பந்திக்கப்படுவதை எதிர்த்தனர். பாரிஸிற்கு தெற்கே, ஓர்லியென்ஸூக்கு அருகேயுள்ள ஒரு கப்பல் மையத்தில், 300 தொழிலாளர்கள் அதை மூடுமாறு கோரி வேலைநிறுத்தம் செய்தனர். இத்தாலியில் Castel San Giovanni நகரில் உள்ள ஒரு தளவாட மையத்தைச் சேர்ந்த தொழிலாளர்கள் வேலைகளை குறைக்க அமேசன் மறுத்ததை எதிர்த்து வேலைநிறுத்தத்திற்கு அழைப்பு விடுத்தனர்.

இன்று, மூன்று முக்கிய இத்தாலிய உலோகத் தொழிலாளர்கள் சங்கங்களின் லோம்பார்டி கிளைகளின் உறுப்பினர்களும் மற்றும், சுகாதாரத்துறையுடன் நேரடி தொடர்பில் இல்லாத, பிராந்தியத்தின் இரசாயனத் தொழிலாளர்களும் அவர்களது தொழிற்சாலைகளில் ஒரு நாள் வேலைநிறுத்தம் செய்யவுள்ளார்கள். தேசிய முழு அடைப்பில் இருந்து விலக்கு பெற விண்ணப்பிக்க நிறுவனங்களுக்கு “அதிகப்படியான வாய்ப்பை” அரசாங்கம் வழங்கியுள்ள நிலையில், அத்தியாவசியமில்லாத வணிகங்களை திறந்து வைத்திருக்க அது அனுமதிக்கிறது என்று அவர்கள் கூறினர். நாட்டின் வங்கி ஊழியர்கள் பாதுகாப்பற்ற நிலைமைகளின் காரணமாக தேசியளவிலான வெளிநடப்புக்கு அச்சுறுத்தல் விடுத்துள்ளனர்.

தொற்றுநோய்க்கு எதிரான இரண்டு எதிரெதிரான நடவடிக்கைகள் தற்போது வடிவம் எடுக்கின்றன. பாதுகாப்புமிக்க சாத்தியமான நிலைமைகளின் கீழ், அத்தியாவசிய சேவைகள் மற்றும் உற்பத்தியை பராமரிப்பதில் தொழிலாளர்களின் நலன்கள் உள்ளன. அதேவேளை, தற்போது ஏற்பட்டுள்ள பொது சுகாதார நெருக்கடியை சமாளிக்க, பெரும் செல்வந்தர்களிடமிருந்து பெருமளவிலான செல்வத்தை பறிமுதல் செய்து நோய்தொற்றால் பாதிக்கப்பட்டவர்களை பரிசோதனை செய்வதற்கும் அவர்களுக்கு சிகிச்சையளிப்பதற்குமான ஏற்பாடுகளைச் செய்ய வேண்டியதும் அவசியமாகிறது. இந்த காலகட்டத்தில், வீட்டிலேயே அடைந்திருக்க வேண்டிய தொழிலாளர்களுக்கு முழு வருமானமும் சமூக ஆதரவும் கிடைக்க வேண்டும். ஆனால் இச்சூழ்நிலையில், தொழிலாளர்களும் அவர்களது குடும்பங்களும் என்ன விலை கொடுக்க நேரிட்டாலும், இலாப அமைப்புமுறையின் தொடர்ச்சியான செயல்பாட்டை உறுதிப்படுத்தவே ஆளும் வர்க்கம் முயன்று வருகிறது. எனவே, இந்த குற்றவியல் கொள்கைக்கு எதிரான போராட்டத்திற்கான சோசலிச வேலைத்திட்டத்திற்கு தொழிலாள வர்க்கத்தின் சர்வதேச அளவிலான அணிதிரட்டல் தேவைப்படுகிறது.