“செவிலியர்களை எங்களால் கைவிட முடியாது”

கோவிட்-19 தொற்றுநோய் அழுத்தத்திற்கு மத்தியில் ஐரோப்பாவில் செவிலியர் தற்கொலைகள் அதிகரிக்கின்றன

Allison Smith
2 April 2020

மொழிபெயர்ப்பின் மூலக் கட்டுரையை இங்கே காணலாம்

மிலான் நகருக்கு அருகேயான மோன்சா நகரிலுள்ள San Gerardo மருத்துவமனையின் கோவிட்-19 தொற்றுநோய்க்கான அவசர சிகிச்சைப் பிரிவில் பணிபுரிந்த 34 வயது செவிலியரான டானியெல்லா ட்ரெஸ்ஸி (Daniella Trezzi) கடந்த வாரம், தனக்கும் இந்த தொற்றுநோய் பாதிப்பு ஏற்பட்டுள்ளதை அறிந்தார். இந்த நோயால் பாதிக்கப்பட்டிருப்பதை தான் அறிவதற்கு முன்னர் கொரொனா வைரஸை மற்றவர்களுக்கும் தான் பரப்பியிருக்கக்கூடும் என்று கருதி கலக்கமடைந்த நிலையிலும், ஐரோப்பாவில் தொற்றுநோயின் மையப்பகுதியாக இருக்கும் ஒரு மருத்துவமனையில் சிறிதும் ஓய்வில்லாத வேலை நிலைமைகளை எதிர்கொண்ட நிலையிலும், துயரமடைந்த ட்ரெஸ்ஸி தற்கொலை செய்து கொண்டார்.

இத்தாலிய செவிலியர்களின் தேசிய கூட்டமைப்பு (National Federation of Italian Nurses-FNOPI) அவரது இறப்பு குறித்து வெளியிட்ட ஒரு சுருக்க அறிக்கையில், கோவிட்-19 நோய் அறிகுறிகள் காணப்படும் தனிமைப்படுத்தப்பட்ட நோயாளிகளுக்கு சிகிச்சையளிக்கும் திருமதி ட்ரெஸ்ஸி மற்றும் பல செவிலியர்களும் “மற்றவர்களுக்கும் இந்த நோய்தொற்று ஏற்படுமோ என்ற அச்சத்தில் கடும் மன அழுத்தத்தை” உணர்வதாக தெரிவித்தது. கூட்டமைப்பு “அவரது மரணச் செய்தியை” அதன் உறுப்பினர்கள் “வேதனையையுடனும் அதிர்ச்சியுடனும்” அறிந்துகொண்டதாக குறிப்பிட்டது.

ட்ரெஸ்ஸி Universita degli Studi di Milano-Bicocca இல் கல்விகற்று பின்னர் Brugherio நகரில் தனது நாயுடன் வசித்து வந்தார். அவர் தனது சகோதரனையும், பல நண்பர்களையும் மற்றும் சக ஊழியர்களையும் விட்டுச் சென்றுவிட்டார். நேற்று வரை அணுகக்கூடியதாக இருந்த அவரது முகநூல் பக்கம், இயற்கையையும் பயணத்தையும் அவர் எந்தளவிற்கு நேசித்தார் என்பதையும், அவர் தேர்ந்தெடுத்திருந்த தொழில் மீது அவர் கொண்டிருந்த அர்ப்பணிப்பையும் தெளிவுபடுத்தியது.

டானியெல்லா ட்ரெஸ்ஸி

ட்ரெஸ்ஸியின் தற்கொலையை அடுத்து FNOPI இவ்வாறு வேண்டுகோள் விடுத்தது: “நாங்கள் ஒவ்வொருவரும் இந்தத் தொழிலை நன்மைக்காக என்று மட்டுமல்லாமல், துரதிருஷ்டவசமாக, துன்பத்தையும் சேர்த்தே தேர்ந்தெடுத்துள்ளோம்: ஏனென்றால் நாங்கள் செவிலியர்கள். மேலும் செவிலியர்கள் அனைவரும், தங்களது சொந்த வாழ்விற்கே ஆபத்து என்றாலும் கூட ஒருபோதும் எவரையும் தனிமையில் விடாதீர்கள் என்பதை இது தெளிவுபடுத்துகின்றது. எனவே, இது மட்டும் போதாது, செவிலியர்களை நாம் கைவிடக் கூடாது, கைவிட முடியாது.”

இந்த சோகம், கோவிட்-19 தொற்றுநோய்க்கு மனிதயினம் விலைகொடுக்கப்படுவதை மட்டும் குறிக்கவில்லை, மாறாக ஐரோப்பா முழுவதிலுமான மருத்துவமனைகளை குறைவான பணியாளர்கள், அதிக வேலைப்பளு மற்றும் மருத்துவ ஊழியர்களை தொற்றுநோயிலிருந்து பாதுகாக்க தேவையான முகக்கவசங்கள் போன்ற உயிர்காக்கும் பாதுகாப்பு உபகரணங்களின் பற்றாக்குறை ஆகிய மோசமான நிலைமைகளுக்குள் மூழ்கவிட்டுள்ள தசாப்தங்கள் நீடிக்கும் சமூக சிக்கன கொள்கைகளையும் எடுத்துக்காட்டுகின்றது.

1918-1919 ஸ்பானிய காய்ச்சலுக்குப் பின்னர் உருவெடுத்துள்ள மிகப்பெரிய உலகளாவிய தொற்றுநோய் நெருக்கடிக்கு மத்தியில், சர்வதேச அளவில் மில்லியன் கணக்கான செவிலியர்களும் மருத்துவ வல்லுநர்களும் இருபத்தி நான்கு மணிநேரமும் சிறிதளவு அல்லது எந்தவித பாதுகாப்பு வசதிகளும் இல்லாமலேயே பணிபுரிந்து வருகின்றனர். ஐரோப்பா முழுவதிலுமாக பல்லாயிரக்கணக்கான மருத்துவ ஊழியர்களுக்கு இந்த தொற்றுநோய் ஏற்பட்டுள்ளதுடன், ஸ்பெயினில் தற்போதுள்ள 85,195 கோவிட்-19 நோயாளிகளில் எட்டுக்கு ஒரு சுகாதாரப் பணியாளர் வீதம் பாதிக்கப்பட்டுள்ளனர். ஒவ்வொரு நாளும் ஆயிரக்கணக்கான கோவிட்-19 தீவிர சிகிச்சை நோயாளிகளுக்கு சிகிச்சையளித்து வரும் நெருக்கடிக்குள் மருத்துவமனைகள் சிக்கித் தவிக்கும் நிலையில், சுகாதாரப் பணியாளர்கள் தங்களுக்குள் களைத்துப்போயுள்ள சக ஊழியர்களின் புகைப் படங்களை பகிர்ந்து துக்கத்தை தணித்துக் கொள்கிறார்கள்.

கோவிட்-19 நோயாளிகள் தனியாக இறப்பதை வேறுவழியின்றி பார்த்துக் கொண்டிருக்க வேண்டிய நிலை மருத்துவ ஊழியர்களுக்கு ஏற்பட்டுள்ளதால், அவர்கள் தாங்க முடியாத மன அழுத்தத்திற்கு ஆளாகியுள்ளனர். Borromeo மருத்துவமனையின் அவசர சிகிச்சைப் பிரிவின் தலைவரான Dr. Francesca Cortellaro, Euronews ஊடகத்திற்கு இவ்வாறு தெரிவித்தார்: “நீங்கள் அவசர சிகிச்சைப் பிரிவை பார்க்கிறீர்கள் இல்லையா? கோவிட்-19 நோயாளிகள் தனியாகவே மருத்துவமனைக்குள் வந்து சேருகிறார்கள் என்பதுடன், எந்த உறவினர்களும் அவர்களை பார்க்க முடியாது என்ற நிலையில், அந்த நோயாளிகளை கவனிப்பதற்காக செவிலியர்கள் மட்டுமே விடப்படும் போது அவர்கள் இதை உணர்கிறார்கள். இந்த நோயாளிகள் தெளிவாக உணர்வுடன் இருப்பதுடன், மயக்க நிலைக்கு செல்வதில்லை.”

கோவிட்-19 தொற்றுநோயின் தீவிரத்தை குறைத்துக் காட்டுவதற்காக இதை பருவகால காய்ச்சலுடன் மீண்டும் மீண்டும் தவறான ஒப்பீடுகளைச் செய்து, தொற்றுநோய் நெருக்கடிக்கு மத்தியில் பெருநிறுவன இலாபங்களை ஊக்குவிப்பதற்காக வேலைக்குத் திரும்பும் படி தொழிலாளர்களை கட்டாயப்படுத்த முயற்சிக்கும், ஐரோப்பிய அரசாங்கங்களின் முரண்பாடான செய்திகள் மற்றும் கொள்கைகளால் அழுத்தம் மேலும் தீவிரமடைந்துள்ளது.

மோன்சா நகரத்திற்கு அருகேயுள்ள கோமோ (Como) நகரத்தில் பணிபுரியும் செவிலியரான மோனிகா ட்ரோம்பெட்டா (Monica Trombetta) ஊடகத்திற்கு இவ்வாறு தெரிவித்தார்: “நாங்கள் மிகவும் சோர்ந்தும் பயத்துடனும் இருக்கிறோம். அரசாங்க ஆணைகள் ஒவ்வொரு நாளும் மாறுகின்றன. இந்த புதிய நுண்கிருமி விவகாரத்தை கையாள்வது குறித்து மருத்துவ பணியாளர்களுக்கு தெளிவான வழிகாட்டுதல்கள் இல்லை என்பதால், கொஞ்சம் கைவிடப்பட்டதாக அவர்கள் உணர்கிறார்கள், எங்கள் மருத்துவமனையில் மட்டுமல்ல, மாறாக அது ஒரு பொதுவான உணர்வாக உள்ளது. மேலும், செவிலியர்கள் தங்களது உறவினர்களையும் இத்தொற்று பாதித்துவிடக்கூடுமோ என்று கருதி வீட்டிற்குச் செல்லவும் அச்சப்படுகிறார்கள்.”

செவிலியர்கள், தங்களது வேலையின் மிக இயல்பான தன்மையினாலும், பெரும்பகுதி நேரத்தை நோயாளிகளுடன் செலவழிக்கும் நிலையிலும், குறிப்பாக தற்கொலை உணர்வுகளுக்கு இலகுவில் ஆளாகின்றனர். கோவிட்-19 தொற்றுநோய் பரவ ஆரம்பிப்பதற்கு முன்னரே, கடந்த ஆண்டில் அமெரிக்க பெண் மற்றும் ஆண் செவிலியர்கள் முறையே 100,000 பேருக்கு 11.97 மற்றும் 39.8 என்ற விகிதங்களில் தற்கொலை செய்துகொண்டனர் என்ற நிலையில், செவிலியர்கள் தற்கொலை என்பது ஏற்கனவே பூகோள அளவிலான தொற்றுநோயாக மாறியுள்ளது. அவர்களது தீவிர அழுத்தம் மிகுந்த சூழலில், உகந்த செயல்திறனுடன் அவர்களைச் செயல்பட அச்சுறுத்தும் நிர்ப்பந்தங்கள் துன்பம் மற்றும் மனச்சோர்வு மிக்க உணர்வுகளை தீவிரப்படுத்துவதற்கான ஒரு தீர்க்கமான காரணியாக உள்ளது.

பிரிட்டனில், இலண்டனில் உள்ள கிங்ஸ் கல்லூரி மருத்துவமனையில் 20 வயதான பணிபுரியும் இளம் செவிலியர்களில் ஒருவர் கடந்த வாரம் கோவிட்-19 நோயாளிகளுக்கு சிகிச்சையளிக்கையில் தனது உயிரை மாய்த்துக் கொண்டார். அவரது சக ஊழியர்கள் அவரது மருத்துவப் பிரிவில் நினைவின்றி அவர் கிடப்பதைக் கண்டனர், மருத்துவர்களால் அவரை மீண்டும் உயிர்ப்பிக்க முடியவில்லை. அவரது நெருங்கிய உறவினருக்கு மட்டும் இது குறித்து தெரிவிக்கப்பட்டது, என்றாலும் மருத்துவமனை அவரது அடையாளத்தை வெளியிடவில்லை.

பல பிரிட்டிஷ் அறக்கட்டளை மருத்துவமனைகள் தங்கள் மருத்துவ ஊழியர்களில் 50 சதவிகிதம் பேர் கோவிட்-19 தொற்றுநோயால் பாதிக்கப்பட்டு வீட்டில் இருக்கின்றனர் என்ற நிலையில், எஞ்சியுள்ள மருத்துவ ஊழியர்களையும் இந்த தொற்றுநோய் தாக்கினால், அவர்களையும், பாரியளவில் மருத்துவமனைக்கு தினமும் வந்து சேரும் கோவிட்-19 நோயாளிகளையும் யார் கவனிப்பார்கள் என்ற அதிர்ச்சிக்குள் அவர்களைத் தள்ளியுள்ளது.

பல இலட்சம் பேருக்கு இந்த தொற்று பரவியுள்ள நிலையில், கோவிட்-19 ஐரோப்பா முழுவதிலுமுள்ள அனைத்து மருத்துவமனைகளையும் அழித்து வருகிறது. பரந்தளவிலான உழைக்கும் மக்களின் தலைவிதிக்கு காரணமான ஐரோப்பிய அதிகாரிகளின் மோசமான புறக்கணிப்பையே இது அம்பலப்படுத்துகிறது. 70 முதல் 80 சதவிகித மக்கள் நோய்வாய்ப்படுவார்கள் என்பதை ஜேர்மனியர்கள் ஏற்றுக் கொள்ள வேண்டுமென சான்சிலர் அங்கேலா மேர்க்கெல் அழைப்பு விடுத்தார். அதேவேளை பிரிட்டிஷ் அதிகாரிகளோ, கொரொனா வைரஸால் கிட்டத்தட்ட ஒட்டுமொத்த மக்களும் தொற்றுக்குள்ளாக்கப்பட்டு, “கூட்டு நோய் எதிர்ப்புசக்தியை” மேம்படுத்திக் கொள்ள பிரிட்டன் மக்களுக்கு அழைப்பு விடுக்கின்றனர். இந்த கொள்கைகளின் அடிப்படையில் தான், பெரும் நிறுவனங்களுக்கான இலாபங்களை கறந்தெடுப்பதற்கு தொழிலாளர்கள் தொடர்ந்து வேலை செய்ய வேண்டுமென அவர்கள் அழுத்தம் கொடுத்தனர்.

பல கோடி பேர் கோவிட்-19 தொற்றால் பாதிக்கப்பட காரணமான இத்தகைய திட்டங்கள், வடக்கு இத்தாலி மற்றும் பிற கடும் பாதிப்புக்குள்ளான பிராந்தியங்களைச் சேர்ந்த மக்கள் மற்றும் சுகாதார ஊழியர்கள் மத்தியில் ஏற்கனவே கண்டுணரப்பட்ட கொடூரங்களை காட்டிலும் நூற்றுக்கணக்கான அல்லது ஆயிரக்கணக்கான மடங்கு கடுமையான நெருக்கடியைத் தூண்டும். முன்னணி ஐரோப்பிய அரசாங்கங்களால் முன்வைக்கப்பட்டுள்ள இத்தகைய திட்டங்கள், தற்போதுள்ள சமூக அமைப்பின் அரசியல் மற்றும் தார்மீக சீரழிவையும், மேலும் கட்டவிழ்ந்து வரும் மனித துயரங்கள் குறித்து ஆளும் வர்க்கம் காட்டும் கடுமையான அலட்சியத்தையும் தெளிவுபடுத்தியுள்ளது.

மேலும் கடந்த வாரம் இத்தாலியில், ஜெசோலோ (Jesolo) மருத்துவமனையின் கோவிட்-19 பிரிவில் பணிபுரிந்த 49 வயது செவிலியர் தற்கொலை செய்து கொண்டார். வெனிஸ் பிராந்தியத்திலுள்ள கோர்டெல்லாஸ்ஸோ (Cortellazzo) சுற்றுலா ஸ்தலத்திலுள்ள Piave ஆற்றில் விழுந்து அவர் தன்னை மாய்த்துக் கொண்டார்.

S.L. என்ற முதல் எழுத்துக்கள் கொண்ட இந்த செவிலியர் கொரொனா வைரஸ் நோயாளிகளுடன் பணிபுரிவதற்கு தைரியமாக முன்வந்தமை, Jesolo மருத்துவமனையை கோவிட்-19 நோயாளிகளுக்காக தனிப்பட்ட வகையில் இயங்கும் ஒரு பிரிவாக மாற்றுவதற்கு கூட உதவியது. S.L. தனியாகவே வாழ்ந்து வந்தார், கோவிட்-19 பரிசோதனை முடிவுகளுக்காக காய்ச்சலுடன் இரண்டு நாட்கள் வீட்டில் காத்திருந்த நேரத்தில் தனது உயிரை அவர் மாய்த்துக் கொண்டார்.

S.L. க்கு தனது மரியாதையை செலுத்தும் விதத்தில், அவரது மருத்துவமனை இயக்குநர் இவ்வாறு தெரிவித்தார்: “அவர் தன்னை பணிக்கு முழுமையாக அர்ப்பணித்துக் கொண்ட நபராகவும், மேலும் தனது சக ஊழியர்களுக்கும் மற்றும் இந்த சுகாதார அமைப்புக்கும் ஈடு செய்ய முடியாத ஆதாரமாகவும் இருந்தார். தற்செயலாக என்றல்லாமல், அவர் இறந்துபோன செய்தியை நாங்கள் கேட்டவுடன், கொரொனா வைரஸ் தாக்கத்தை எதிர்த்துப் போராடுவதில் தற்போது ஓய்வின்றி பாடுபட்டுக் கொண்டிருக்கும் Jesolo மருத்துவமனையின் அவரது சக ஊழியர்கள் இந்த நிகழ்வால் ஆழ்ந்த பாதிப்புக்குள்ளாகி, அதிர்ச்சியடைந்த நிலையில் உள்ளனர். ‘எங்களது செவிலியர்’ S.L. மற்றும் அவரது குடும்பத்தினருக்கு எனது ஆழ்ந்த இரங்கலையும் நெருக்கத்தையும் தெரிவித்துக் கொள்கிறேன்.”