COVID-19 நெருக்கடிக்கு குற்றகரமான விடையிறுப்பு மீது அதிகரித்து வரும் கோபத்திற்கு மத்தியில், வாஷிங்டன் போருக்கு அச்சுறுத்துகிறது

3 April 2020

மொழிபெயர்ப்பின் மூலக் கட்டுரையை இங்கே காணலாம்

அமெரிக்காவில் உயிரிழப்புகளின் எண்ணிக்கை இன்று 5,000 ஐ கடக்க உள்ளது, இதற்கிடையே தங்கள் சொந்த உயிரைக் கூட பொருட்படுத்தாமல், தங்கள் நோயாளிகளின் உயிர்களைக் காப்பாற்றுவதற்காக இந்த COVID-19 தொற்றுநோயை எதிர்த்து போராடி வரும் மருத்துவர்கள் மற்றும் செவிலியர்களுக்கு ட்ரம்ப் நிர்வாகம் வெட்கக்கேடாக இன்றியமையா மருத்துவ சாதனங்கள் வழங்க தவறியதன் மீது நாடெங்கிலும் சீற்றம் அதிகரித்து வருகிறது.

ஒவ்வொரு ஆண் மற்றும் பெண்ணின் உயிர்பிழைப்பையே பாதிக்கும் வகையில், முற்றிலும் அராஜகமாக செயல்படுத்தப்படும் ஒரு தனியார் அமைப்பின் கீழ், பாதுகாப்பற்ற நிலைமைகளில் அமெரிக்க மக்களுக்கு இன்றியமையா பொருட்களைப் வினியோகிக்க பணியாற்றி வரும் அமசன், இன்ஸ்டாகார்ட் மற்றும் வோல் ஃபுட்ஸ் நிறுவன தொழிலாளர்களிடையே தன்னியல்பான வேலைநிறுத்தங்கள் வெடித்துள்ளன. மில்லியன் கணக்கானவர்களின் உயிர் வாழ்வை அச்சுறுத்துகின்ற ஒரு நெருக்கடிக்கு அமெரிக்க அரசாங்கத்தின் அலட்சியம் மற்றும் திறமையின்மை மீது மக்கள் கோபம் படிப்படியாக தீவிரமடைந்து வரும் நிலையில், அந்நாட்டின் வெவ்வேறு பகுதிகளில் தொழில்துறை மற்றும் மருத்துவ தொழிலாளர்களாலும் பல போராட்டங்கள் நடத்தப்பட்டுள்ளன.

“உயிராபத்தான போதை மருந்துகளுக்கு எதிரான" போரைத் தீவிரப்படுத்துவதற்காக என்று கூறப்படும் ஒன்றில் அமெரிக்க ஜனாதிபதி தென் அமெரிக்க கடலுக்கு அமெரிக்க கடற்படை போர்க்கப்பல்களை அனுப்புகிறார் என்ற அறிவிப்புடன், அவர் கொரொனா வைரஸ் நெருக்கடி மீதான அவரின் நாளாந்த பத்திரிகையாளர் சந்திப்பை புதன்கிழமை தொடங்கிய நிலைமைகளின் கீழ் தான் இந்த போராட்டங்கள் நடந்து வருகின்றன. மருந்து பொருள் கூட்டமைப்புகள் இந்த உயிராபத்தான தொற்றுநோயைச் சாதகமாக்க முயன்று வருகின்றன என்றவர், ஒரு துளி ஆதாரமும் இல்லாமல், வாதிட்டார்.

“அந்த பிரதேசத்தில் எங்களின் தகைமைகளை இரட்டிப்பாக்கி, நாங்கள் கடற்படையின் நடுத்தர போர்க்கப்பல்கள், போர் எதிர்ப்பு கப்பல்கள், போர் விமானங்கள் மற்றும் ஹெலிகாப்டர்கள், கடலோர ரோந்துப்படை இயந்திர படகுகள் மற்றும் விமானப்படையின் உளவுபார்ப்பு விமானங்களைக் கூடுதலாக நிலைநிறுத்தி வருகிறோம்,” என்றார்.

தென் அரைகோளத்தில் இராணுவத் தீவிரப்பாடு முதலும் முக்கியமுமாக வெனிசுவேலாவுக்கு எதிராக நோக்கம் கொண்டது மற்றும் அப்பிராந்தியத்திற்குச் சிறப்பு படை பிரிவுகளை அனுப்புவதும் அதில் உள்ளடங்கும் என்பதைத் தெளிவுபடுத்துவதற்காக அமெரிக்க பாதுகாப்புத்துறை செயலர் மார்க் எஸ்பரும் முப்படை தலைமை தளபதிகளின் தலைவர் ஜெனரல் மார்க் மில்லெயும் வெள்ளை மாளிகை அரங்கிற்கு அழைத்து வரப்பட்டிருந்தனர்.

“வெனிசுவேலாவில் சட்டப்படி செல்லுபடியாகாத மடூரோ ஆட்சி போன்ற ஊழல்பீடித்த நபர்கள், அதிகாரத்தில் அவர்களின் ஒடுக்குமுறையான பிடியைத் தக்க வைப்பதற்காக போதை மருந்துகளை விற்பதிலிருந்து கிடைக்கும் இலாபங்களைச் சார்ந்துள்ளனர்,” என்று எஸ்பெர் தெரிவித்தார்.

இது முற்றிலும் பைத்தியக்காரத்தனமானது. வெனிசுவேலா வழியாக நகர்ந்து வரும் போதை மருந்துகளின் அளவு, உலகின் மிகப் பெரிய கோகோயின் சந்தையான அமெரிக்காவுக்கு கொலம்பியா மற்றும் ஹோண்டுராஸ் போன்ற அமெரிக்க கூட்டாளிகளிடம் இருந்து வந்தடைவதுடன் ஒப்பிடுகையில் மிக மிக சிறியளவாகும்.

போதை மருந்து கடத்துவது மற்றும் பண மோசடி குற்றச்சாட்டுக்கள் மீது நிக்கோலா மடூரோ மற்றும் மற்ற உயர்மட்ட வெனிசுவேலா அதிகாரிகள் மீது அமெரிக்க நீதித்துறை எந்தவித ஆதாரமும் இல்லாமல் கடந்த வாரம் குற்றஞ்சாட்டியதைப் பின்தொடர்ந்து இந்த கடற்படை கட்டமைப்பு வருகிறது. இது வெனிசுவேலா ஜனாதிபதியின் தலைக்கு 15 மில்லியன் டாலர் பரிசு என்று காட்டுமிராண்டித்தனமான மேற்கு-பாணி "தேடப்படுவோர் விளம்பரம்" வைக்கப்பட்டதற்குக் கூடுதலாக வந்தது.

அமெரிக்க ஏகாதிபத்தியம் வெனிசுவேலாவுக்கு எதிராக பொருளாதார தடையாணைகளின் "அதிகபட்ச அழுத்த" முறைகளைப் பேணி வருகிறது, இது அந்நாட்டின் எண்ணெய் ஏற்றுமதிகளை முடக்குவதன் மூலமாக அதன் பொருளாதாரத்தைத் திணறடித்தும், அத்தியாவசியமாக தேவைப்படும் மருந்துகள் மற்றும் உணவு பொருட்களை அது இறக்குமதி செய்வதிலிருந்து தடுத்தும், ஒரு போர் நிலைக்கு நிகராக உள்ளது. இது COVID-19 தொற்றுநோய் வெடித்ததற்குப் பின்னர் இருந்து தீவிரப்படுத்தப்பட்டுள்ளது. வெனிசுவேலா மக்களை அதன் காலடியில் விழச் செய்வதற்கும் மற்றும் புவியில் மிகவும் எண்ணெய் வளம் மிக்க அந்நாட்டில் ஓர் அமெரிக்க கைப்பாவை ஆட்சியை நிறுவுவதற்குமான அதன் நடவடிக்கைகளில் வாஷிங்டன் இந்த தொற்றுநோயை ஒரு வரவேற்கத்தக்க கூட்டாளியாக பார்க்கிறது.

ட்ரம்ப் புதன்கிழமை அவரின் பத்திரிகையாளர் கூட்டத்தைத் தொடங்குவதற்குச் சில மணி நேரத்திற்கு முன்னர், அவர் குறிப்பிடுகையில், “கிடைத்துள்ள தகவல்கள் மற்றும் நம்பிக்கைகளின் அடிப்படையில், ஈரான் அல்லது அதன் பினாமிகள் ஈராக்கில் அமெரிக்க துருப்புகள் மீது அல்லது/மற்றும் அதன் சொத்திருப்புகள் மீது பதுங்கியிருந்து ஒரு தாக்குதல் நடத்த திட்டமிட்டு வருகின்றன. இது நடந்தால், நிச்சயமாக ஈரான் மிகவும் கடுமையான விலை கொடுக்கும்!” என்று குறிப்பிட்டு, மற்றொரு போர் அச்சுறுத்தலைத் தொடுக்க அவரின் ட்வீட்டர் கணக்கைப் பயன்படுத்தினார்.

உலகில் COVID-19 இன் அதிகபட்ச இறப்பு விகிதங்களை முகங்கொடுத்துள்ள நாடுகளில் ஒன்றான ஈரானுக்கு எதிராக, வாஷிங்டன், வெனிசுவேலாவைப் போலவே, பொருளாதாரத்தை முடமாக்கும் தடையாணைகளைத் தொடர்ந்து இறுக்கி வந்துள்ளது. ஈரானின் மத்திய வங்கி மீது கரும்புள்ளி குத்தியதன் மூலம் தெஹ்ரான் உலக சந்தையில் எதையும் கொள்முதல் செய்வதில் இருந்து அதை தடுத்துள்ள போதினும் கூட, மருந்துகளுக்கும் மருந்து பொருட்களுக்கும் தடையில்லை என்று ட்ரம்ப் நிர்வாகம் எரிச்சலூட்டும் விதமாக வாதிடுகிறது.

இதற்கிடையே ஈராக்கில் உள்ள ஆக்கிரமிப்பு படைகள் உட்பட ஆயிரக் கணக்கான அமெரிக்க துருப்புகளை உடனடியாகவும் முழுமையாகவும் திரும்ப பெற வேண்டுமென ஈராக்கிய நாடாளுமன்றம் கோரியுள்ள நிலையில், அந்த அரசாங்கம் நிராகரிக்கின்ற போதும் பென்டகன் ஈராக்கில் பேட்ரியாட் ஏவுகணை கலங்களை நிலைநிறுத்தி உள்ளது. இந்த ஏவுகணைகள் ஈரானுக்கு எதிரான ஓர் அமெரிக்க போருக்குத் தயாரிப்பு செய்ய பயன்படுத்தப்படும் என்றும், ஈரான் ஏற்கனவே அதிகரித்து வரும் கொரொனா வைரஸ் நோயாளிகளையும் எதிர்கொண்டிருக்கையில், போரால் சீரழிக்கப்படும் ஈரான் இதில் ஒரு போர்க்களமாக மாறிவிடும் என்றும் பாக்தாத் அஞ்சுகிறது.

கொரொனா வைரஸிற்கு எதிரான போர் என்று கூறப்படுவதால் ட்ரம்ப் சமீபத்திய வாரங்களில் மீண்டும் மீண்டும் தன்னை ஒரு "போர்கால ஜனாதிபதியாக" விவரித்துக் கொள்கிறார். அது ஒரு போராகவும், ட்ரம்ப் ஒரு தளபதியாகவும் இருந்தால், அவர் இந்நேரத்திற்கு இராணுவ நீதிமன்ற விசாரணைக்கு உட்படுத்தப்பட்டு ஒரு தேசதுரோகியாக தண்டிக்கப்பட்டிருப்பார். வெனிசுவேலாவுக்கு எதிராக போர்க்கப்பல்களும் ஈரானுக்கு எதிராக ஏவுகணைகளும் அனுப்ப தகைமை கொண்ட அவரால் அதேவேளையில் முன்னணியில் இருந்து பாடுபட்டு வரும் மருத்துவத்துறை தொழிலாளர்களைப் பாதுகாக்க முகக்கவசங்களும், அங்கிகளும், கையுறைகளும் ஒழுங்குப்படுத்த முடியவில்லை, COVID-19 பாதிக்கப்பட்டவர்களின் உயிரிழப்புகளைத் தடுக்கும் சுவாசக் கருவிகளைக் குறித்தோ கூற வேண்டியதே இல்லை.

வெனிசுவேலா மற்றும் ஈரானுக்கு எதிரான இராணுவ அச்சுறுத்தல்களின் தீவிரப்பாட்டுடன், விடயத்தை மாற்றுவதற்கான அமெரிக்க நிர்வாகத்தின் ஆணவமான முயற்சியைச் சுற்றி அங்கே விரக்தி மற்றும் உணர்ச்சிப் பெருக்கின் சூழல் உணரக் கூடியதாக உள்ளது. அமெரிக்க மக்களை தேசபற்று போர் காய்ச்சலுக்குப் பின்னால் கட்டிப்போடுவதற்கான சில பிரமாண்ட திட்டங்களைக் கடந்து பார்த்தால், இந்த பொறுப்பற்ற நடவடிக்கைகள் அதீத நெருக்கடி மற்றும் ஸ்திரமின்மையால் சூழப்பட்ட ஓர் ஆளும் ஆட்சியின் அறிகுறிகளாக உள்ளன.

தற்போதைய நிலைமைகளின் கீழ் ஈரான் அல்லது வெனிசுவேலாவுக்கு எதிரான அமெரிக்க போர் எதை கொண்டிருக்கும்? மருத்துவமனைகளுக்கு வெளியே வரிசைகளில் நின்றிருக்கும் COVID-19 பாதிக்கப்பட்ட நோயாளிகள் மற்றும் சுமையேற்றும் குளிரூட்டப்பட்ட தானியங்கி ட்ரக்குகளுக்குள் நிரப்பிய சடலங்கள் என இந்த காட்சியால் உலக மக்கள் ஒளிவுமறைவின்றி பீதியுற்று இருக்கையில், அதிகரித்தளவில் ஒரு வெட்கக்கேடான தோல்வியாக அனுமானிக்கப்படும் மதிப்பிழந்த அமெரிக்க முதலாளித்துவத்தை மேலும் அது மதிப்பிழக்கச் செய்ய மட்டுமே சேவையாற்றும். அவ்விரு நாடுகளில் எதற்கு எதிராகவும் கட்டவிழ்த்து விடப்படும் இராணுவ வன்முறை பாரியளவில் மனித துயரங்களை உருவாக்கவும், புதிதாக போர் அகதிகள் பெருக்கெடுப்பதற்கும் மற்றும் இந்த தொற்றுநோய் இன்னும் கூடுதலாக பரவுவதற்கும் மட்டுமே சேவையாற்றும்.

அமெரிக்க இராணுவத்திற்கு உள்ளேயே கூட, ஐயத்திற்கிடமின்றி அங்கே போர் அச்சுறுத்தல்கள் மீது கணிசமான கருத்து வேற்றுமைகள் உள்ளன. தென் அமெரிக்காவுக்குப் போர்க்கப்பல்கள் அனுப்பப்பட்டு வருகின்ற நிலையில், அமெரிக்க முழு இராணுவ பலத்தின் அடையாளமாக கருதப்படும் அணுஆயுத ஏந்திய போர்விமானந்தாங்கிய போர்க்கப்பல் USS தியோடர் ரூஸ்வெல்ட் கொரொனா வைரஸால் முடங்கி போயுள்ளது, 100 மாலுமிகளுக்கு நோய் தொற்று ஏற்பட்டிருப்பதுடன், அக்கப்பல் குழுவினர் 4,000 இக்கும் அதிகமானவர்கள் இந்நோயால் அச்சுறுத்தப்பட்டுள்ளனர், அவர்களைக் கரையிறுக்குமாறு அதன் தலைமை மாலுமி மன்றாடி கொண்டிருக்கிறார், “நாம் போரில் இல்லை. மாலுமிகள் உயிரிழக்க வேண்டியதில்லை,” என்றவர் குறிப்பிட்டார். ட்ரம்ப் நிர்வாகம் ஆக்ரோஷத்துடன் இலக்கு வைத்துள்ள வெனிசுவேலா மற்றும் ஈரானில் உள்ளவர்களின் உயிர்களை அலட்சியப்படுத்துவதைப் போலவே அதேயளவுக்கு அவர்கள் உயிர்கள் மீதும் அது அலட்சியமாக உள்ளது.

COVID-19 நெருக்கடி, 70 மில்லியன் உயிர்களைப் பறித்த இரண்டாம் உலக போருக்குப் பின்னர் மனிதகுலத்தின் மிகப்பெரும் சவாலாகும் என்று குறிப்பிட்டு ஐக்கிய நாடுகள் சபை அறிக்கை வெளியிட்டதைப் பின்தொடர்ந்து புதன்கிழமை வெள்ளை மாளிகையின் இந்த மூர்க்கமான தாக்குதல் வந்தது. “மில்லியன் கணக்கான உயிரிழப்புகளுடன் மற்றும் அது முன்னர் எங்கே ஒடுக்கப்பட்டதோ அங்கே அந்நோய் மீண்டும் எழுவதற்கான சாத்தியக்கூறுடன் உலகின் தெற்கில் காட்டுத்தீ போல பரவி வரும் இந்நோயின் கொடூரத்திற்கு" எதிராக அந்த அறிக்கை எச்சரித்தது.

உலகளாவிய "நல்லிணக்கம்" மற்றும் சர்வதேச ஒத்துழைப்புக்கான சம்பிரதாயமான அழைப்புகளுக்கு மத்தியில்—உலகெங்கிலுமான முதலாளித்துவ அரசாங்கங்களால் பாதுகாப்புவாதம், வர்த்தகப் போர் மற்றும் வெளிநாட்டவர் விரோத உணர்வு தீவிரப்படுத்தப்படுத்தப்படுவதற்கு மத்தியில்—அந்த அறிக்கை தடையாணைகளை முடிவுக்குக் கொண்டு வருவதற்கு அழைப்பு விடுத்ததுடன், ஓர் உலகளாவிய "போர்நிறுத்தத்திற்கும்", “மனிதகுலத்தை இப்போது முழுமையாக அச்சுறுத்தி வருகின்ற பொதுவான எதிரியான COVID-19 இக்கு எதிரான மிகப்பெரும் போராட்டத்திற்கு ஆதரவாக அனைத்து நாடுகளும் தங்களின் ஆயுதங்களைக் கீழே போடவும்" அழைப்பு விடுத்தது.

இப்போதிருக்கும் முதலாளித்துவ ஒழுங்கின் கீழ் இதுவொரு வெற்றுக் கனவு என்பதை புதன்கிழமை வெள்ளை மாளிகை பத்திரிகையாளர் சந்திப்பு முற்றிலுமாக தெளிவுபடுத்துகிறது. இந்த "பொதுவான எதிரி", புவிசார் மூலோபாய நலன்களுக்காகவும், சந்தைகள் மற்றும் ஆதாரவளங்கள் மீது கட்டுப்பாட்டை எடுப்பதற்குமான போர்களை நடத்துவதற்கு மற்றொரு ஆயுதமாக மட்டுமே பார்க்கப்படுகிறது.

ஐ.நா. சபை அறிக்கை குறிப்பிடுகிறது, “COVID-19 தொற்றுநோய் நவீன சமூகத்தின் தீர்மானகரமான ஒரு தருணமாகும், தனியாக அரசாங்க கதாபாத்திரங்கள் எடுக்கும் எதேனும் ஒரு வகையான நடவடிக்கைகளால் அல்ல, மாறாக மனித குடும்பங்கள் பயன் பெறுதவற்கு அனைத்து துறைகள் எங்கிலும் உலகளவில் ஒருங்கிணைந்த விடையிறுப்பு எந்தளவுக்கு இருக்கிறது என்பதன் மூலமாக மட்டுமே வரலாறு நமது விடையிறுப்பின் பலாபலன்களைத் தீர்மானிக்கும்,” என்றது.

உண்மையில் இதுவொரு தீர்மானகரமான தருணம் தான், என்றாலும் இதன் தீர்ப்பை வரலாற்றிடம் ஒப்படைக்க விட்டுவிட முடியாது. இந்த உலகளாவிய தொற்றுநோயின் முன்னால் மற்றும் மனித வாழ்வு பாரியளவில் தியாகம் செய்யப்பட்டு வருவதன் முன்னால் இந்த முதலாளித்துவ உலக ஒழுங்கின் குற்றகரத்தன்மைக்கு இந்த புவியெங்கிலுமான உழைக்கும் மக்களும் ஒடுக்கப்படும் மக்களும் தான் சாட்சியாக இருந்து தாக்கத்தைச் சுமக்கிறார்கள். நூறு மில்லியன் கணக்கானவர்களின் நனவு ஓர் ஆழ்ந்த மாற்றத்தை நோக்கி சென்று கொண்டிருக்கிறது. முதலாளித்துவம் பொருளாதாரரீதியிலும், சமூகரீதியிலும், தார்மீகரீதியிலும் ஒரு திவாலான அமைப்புமுறை என்பதில் அம்பலப்பட்டு நிற்கிறது. பிரேசிலில் கால் சென்டர் தொழிலாளர்களில் இருந்து இந்தியாவில் ஆம்புலன்ஸ் ஓட்டுனர்கள் வரையில் இப்புவி எங்கிலும் பாரிய எதிர்ப்பு நடவடிக்கைகள் பரவி வருகின்றன.

அச்சுறுத்தப்பட்டுள்ள இந்த மனிதகுல அழிவுக்கு, சர்வதேச அளவில் உலக சோசலிசத்திற்கான ஒருங்கிணைந்த போராட்டத்தின் மூலமாக, தொழிலாள வர்க்கம் மட்டுமே ஒரு மாற்றீட்டை வழங்க முடியும்.

கட்டுரையாளர்கள் பரிந்துரைக்கும் ஏனைய கட்டுரைகள்:

அமெரிக்க ஏகாதிபத்தியம் கொரொனாவைரஸை போருக்கான ஆயுதமாக்குகின்றது

[20 March 2020]

முதலாளித்துவ வெளிநாட்டவர் விரோத போக்கை நிராகரிப்போம்! கொரொனா வைரஸ் தொற்றுநோய்க்கு எதிரான போராட்டத்தில் சர்வதேச சோசலிச ஐக்கியத்திற்காக!
[19 March 2020]

Bill Van Auken