வேலை அழிப்புகளுக்கு எதிரான அவசர நடவடிக்கைக்காக! COVID-19 தொற்றுநோயால் பாதிக்கப்பட்ட அனைத்து உழைக்கும் மக்களுக்கும் முழுமையான நிதி ஆதரவு மற்றும் சமூக ஆதரவு!

4 April 2020

மொழிபெயர்ப்பின் மூலக் கட்டுரையை இங்கே காணலாம்

கொரொனா வைரஸ் தொற்றுநோயால் தோற்றுவிக்கப்பட்ட மருத்துவ அவசரகாலநிலை, 1930 களின் பெருமந்த நிலைமைக்குப் பின்னர் மிகப்பெரும் பொருளாதார மற்றும் சமூக நெருக்கடியை உருவாக்கி வருகிறது.

President Donald Trump speaks during a news conference about the coronavirus in the Rose Garden of the White House, March 13, 2020, in Washington [Credit: AP Photo/Evan Vucci]

புதிய வேலைவாய்ப்பின்மை எண்ணிக்கை கடந்த வாரம் 6.6 மில்லியனாக அதிகரித்ததாக வெள்ளிக்கிழமை அமெரிக்க தொழிலாளர்துறை அறிவித்தது. கடந்த இரண்டு வாரங்களில் 10 மில்லியன் அமெரிக்கர்களுக்கும் அதிகமானவர்கள் வேலைவாய்ப்பின்மை சலுகைகளுக்குப் பதிவு செய்துள்ளனர்.

இந்த கொரொனா வைரஸ் தொற்றுநோய் வெடிப்பதற்கு முன்னரே, முந்தைய வேலைவாய்ப்பின்மை புள்ளிவிபரங்கள் ஒரு வாரத்தில் 695,000 ஆக இருந்தது, அல்லது நேற்று குறிப்பிடப்பட்ட எண்ணிக்கையில் பத்தில் ஒரு பங்காக இருந்தது. தங்களின் வேலைகள் மற்றும் சம்பளங்களை இழந்து வரும் தொழிலாளர்களின் எண்ணிக்கை அதிகரித்து வருகையில், புதிதாக அறிவிக்கப்பட்ட நோய்தொற்றுகள் மற்றும் உயிரிழப்புகளின் எண்ணிக்கையும் வேகமாக தொடர்ந்து அதிகரித்து கொண்டிருக்கின்றன.

ஒரு மாதத்திற்கும் குறைந்த நாட்களுக்கு முன்னர், ட்ரம்ப் நிர்வாகம் அந்த தொற்றுநோய் அந்நாட்டில் மிகக் குறைவாகவே பாதிப்பை ஏற்படுத்துமென வாதிட்டு வந்தார். ஆனால் அமெரிக்காவில் நேற்று நோயாளிகளின் எண்ணிக்கை மொத்தமாக 30,000 அளவுக்கு அதிகரித்து, ஒரு மில்லியனில் ஒரு கால்வாசிக்கும் அதிகமானவர்களுக்கு நோய் ஏற்பட்டுள்ளது. அங்கே ஒரு நாளில் 25 சதவீத அதிகரிப்புடன் 1,200 இக்கும் அதிகமான புதிய உயிரிழப்புகள் ஏற்பட்டு, 6,000 இக்கும் அதிகமானவர்கள் உயிரிழந்துள்ளனர். அமெரிக்காவில் நோயாளிகளின் எண்ணிக்கையில் இப்போது இத்தாலி, ஸ்பெயின், ஜேர்மனி மற்றும் சீனாவைக் கடந்து எந்தவொரு நாட்டையும் விட இரண்டு மடங்கிற்கும் அதிகமாக ஆகியுள்ளளது. உலகளவில் இந்த தொற்றுநோய் நேற்று ஒரு மில்லியனைக் கடந்துவிட்டதாக பட்டியலிடப்பட்டதுடன் உலகளாவிய மொத்த உயிரிழப்புகள் 50,000 ஐ கடந்து அதிகரித்தது.

அமெரிக்க தொழிலாளர்துறை புள்ளிவிபரங்கள் கணிசமானளவுக்கு வேலை நெருக்கடியின் அளவைக் குறைத்து மதிப்பிடுகின்றன. அவை இவ்வாரம் வேலைவாய்ப்பின்மை உதவிகளுக்குப் பதிவு செய்துள்ளவர்களை உள்ளடக்கவில்லை. சலுகைகளுக்கு விண்ணப்பிக்க முயலும் நூறாயிரக் கணக்கான தொழிலாளர்கள் வேலைவாய்ப்பின்மை வலைத்தளங்கள் மற்றும் தொலைபேசி உதவி மையங்கள் நெரிசலை எதிர்கொண்டுள்ளன. வேலைவாய்ப்பு அலுவலகங்களுக்கு அழைத்தால் அழைப்புகள் காலவரையின்றி காத்திருக்க வைக்கப்படுகின்றன அல்லது சர்வசாதாரணமாக துண்டிக்கப்படுவதாக டெட்ராய்ட், நியூ யோர்க் மற்றும் பிற நகரங்களின் தொழிலாளர்கள் தெரிவிக்கின்றனர்.

மக்களில் சுமார் மூன்று சதவீதம் உள்ள 11 மில்லியனுக்கும் அதிகமான ஆவணமற்ற புலம்பெயர்ந்தோரும் உத்தியோகப்பூர்வ வேலைவாய்ப்பின்மை விபரங்களின் கணக்கில் எடுக்கப்படவில்லை. ஹோட்டல் துறை, சேவைத்துறை மற்றும் பிற தொழில்துறைகளில் உள்ள இந்த மில்லியன் கணக்கான தொழிலாளர்கள் அவர்களின் வேலைகளை இழந்துள்ளனர் என்றாலும் அவர்களால் சலுகைகளோ அல்லது வேறு வடிவிலான நிவாரணங்களோ பெற முடியாது. ஆகவே அவர்கள் வேலைவாய்ப்பின்மை குறித்து பதிவு செய்வதில்லை என்பதால் அவர்கள் உத்தியோகப்பூர்வ புள்ளிவிபரங்களின் கணக்கில் எடுக்கப்படவில்லை.

நிரந்தரமற்ற ஒப்பந்த தொழில் பொருளாதாரத்தின் தொழிலாளர்கள் வேலைவாய்ப்பின்மை உதவிகளைப் பெறுவதற்கு விண்ணப்பிக்க அனுமதிக்கும் சட்டமசோதா என்று கூறப்படும் ஒன்றை கடந்த மாதம் காங்கிரஸ் நிறைவேற்றியது, ஆனால் பெரும்பாலான மாநிலங்கள் அவர்கள் அதை செய்வதற்கான வசதியை இதுவரையில் உருவாக்கவில்லை.

இந்த பொருளாதார முறிவு, சமூக இடப்பெயர்வு மற்றும் அவலங்களில் ஏற்படுத்தவிருக்கும் நீண்ட கால பின்விளைவுகள் ஏறத்தாழ முழுமையாக கணக்கிட முடியாதவை. மூடப்பட்டு வருகின்ற சிறு வியாபாரங்களில் கணிசமான சதவீதம் ஒருபோதும் மீண்டும் திறக்கப்பட போவதில்லை. குடும்பங்கள் அனைத்து வருவாய் ஆதாரங்களையும் இழந்து வருகிறார்கள். இந்தளவிலான இடப்பெயர்வின் உளவியல்ரீதியான தாக்கங்கள் மிகப் பிரமாண்டமாக இருக்கும்.

மில்லியன் கணக்கான தொழிலாளர்கள் மருத்துவக் காப்பீட்டுக்காகவே வேலைவாய்ப்பைச் சார்ந்துள்ளனர். அவர்கள் இப்போது அவர்கள் காப்பீட்டிலிருந்து விலக்கப்படுவார்கள் அல்லது அவர்களைக் காப்பாற்றிக் கொள்ள குறிப்பிடத்தக்களவில் அதிக விலை கொடுக்க வேண்டியிருக்கும். இன்னும் மில்லியன் கணக்கானவர்களுக்கு காப்பீடே இல்லை அல்லது தங்கள் பையிலிருந்து மிகப் பெரும்பான்மை செலவுகளைச் செய்து, ஒபாமாகேர் திட்டத்தின் மூலமாக தரமற்ற தனியார் காப்பீட்டைப் பெற வேண்டியிருக்கும்.

இந்த தொற்றுநோயின் பேரழிவுகரமான தாக்கத்திற்கான பொறுப்பு முற்றிலுமாக இந்த முதலாளித்துவ அமைப்புமுறை, ஆளும் வர்க்கம், மற்றும் அதன் நலன்களுக்குச் சேவையாற்றும் அரசாங்கத்தின் மீது தங்கியுள்ளது. ஒரு தொற்றுநோய் ஊகிக்கத்தக்க எதிர்காலத்தில் ஏற்படலாமென தசாப்தங்களாக விஞ்ஞானிகள் எச்சரித்துள்ள உண்மைக்கு மத்தியில், அடுத்தடுத்து வந்த நிர்வாகங்கள் அந்த அபாயத்தைக் குறைத்துக் காட்டின அல்லது சொல்லப்போனால் ஒரு மருத்துவ அவசரகாலத்தைச் சமாளிக்க மருத்துவ மற்றும் சமூக உள்கட்டமைப்பு வசதிகளுக்கான செலவுகளைத் தொடர்ந்து வெட்டியதன் மூலமாக அந்த அபாயத்தைக் கீழறுத்தன.

அரசாங்கம் மற்றும் பெருநிறுவன-நிதியியல் உயரடுக்கு தசாப்தங்களாக அபிவிருத்தி செய்துள்ள கொள்கைகள், இலாபங்களை அதிகமயப்படுத்தவும், பெருநிறுவன செயலதிகாரிகள் மற்றும் பெரிய பங்குதாரர்களைச் செல்வ செழிப்பாக்குவதை நோக்கியே ஒருமுனைப்பட்டுள்ளன.

இந்த தொற்றுநோயால் அமெரிக்காவும் ஒட்டுமொத்த உலகமும் சீரழிக்கப்பட்டு வருகின்ற போதும் கூட, இத்தகைய முன்னுரிமைகள் மாறவில்லை. உண்மையில் அவை முன்பினும் அதிக பொறுப்பின்றி நடைமுறைப்படுத்தப்பட்டு வருகின்றன. இந்த நெருக்கடி ஆளும் செல்வந்த தட்டைச் செழிப்பாக்குவதற்கான ஒரு சந்தர்ப்பமாக பயன்படுத்தப்பட்டு வருகிறது.

இருகட்சிகளது ஒருமனதான ஆதரவுடன் காங்கிரஸ் ட்ரில்லியன் கணக்கான டாலர்களை வோல் ஸ்ட்ரீட்டுக்கும் மற்றும் நூறு பில்லியன் கணக்கான டாலர்களை பெருநிறுவன பிணையெடுப்புக்கும் வழங்கும் ஒரு சட்டமசோதாவை நிறைவேற்ற அவசரப்படும் அதேவேளையில், பெருந்திரளான உழைக்கும் அமெரிக்கர்களுக்கும் சிறு வியாபாரங்களுக்கும் வழங்கப்பட்டு வரும் ஆதரவு குழப்பமாக ஒழுங்கமைக்கப்படாத விதத்தில் முற்றிலும் போதுமானளவுக்கு இல்லை. வாக்குறுதி அளிக்கப்பட்ட ஒருமுறை தொகைகள் ஏப்ரல் மாத இறுதி வரையில் அனுப்பப்படாது; ஒதுக்கப்பட்டு வருகின்ற மில்லியன் கணக்கான ஏழைகள் உள்ளனர். இதைப் போலவே, துணை வேலைவாய்ப்பின்மை என்பது மில்லியன் கணக்கானவர்களை உள்ளடக்காத ஒரு தற்காலிக, இடைக்கால முறைமை தான், அது வாடகைத் தொகைகளையோ அல்லது மருத்துவச் சிகிச்சை செலவுகளின் அதிகரிப்பையோ உள்ளடக்க எதையும் செய்யப் போவதில்லை.

சிறு வியாபாரங்களுக்கு உதவி வழங்கும் அதன் வாக்குறுதியின் முக்கிய அம்சங்கள் மீது அரசாங்கம் ஏற்கனவே கைவிரித்து வருகிறது. வாக்குறுதி அளிக்கப்பட்ட கடன்கள் மிகப் பெரும் வங்கிகளால் நிர்வகிக்கப்படும் என்ற உண்மையை ஆதாயமாக பயன்படுத்தி, ஜேபி மோர்கன் போன்ற அமைப்புகள் தங்களைச் செழிப்பாக்கிக் கொள்வதற்கு இந்த வாய்ப்பைப் பயன்படுத்தி வருகின்றன. பைனான்சியல் டைம்ஸ் குறிப்பிடுகிறது: “இந்த கொரொனா வைரஸ் தொற்றுநோய்க்கு பெடரல் விடையிறுப்பின் பாகமாக அமெரிக்க சிறு வியாபாரங்களுக்கு வழங்கப்பட்டுள்ள 350 பில்லியன் டாலர் கடன்கள் மீது வங்கிகள் பில்லியன் கணக்கான டாலர்களை அபராதங்களைச் சேகரிக்க நிற்கின்றன. இந்த அபராதங்கள் கடன் அளவைப் பொறுத்து மாறுபடும்: 350,000 டாலருக்குக் குறைவான கடன்களுக்கு 5 சதவீதம், 2 மில்லியனுக்குக் கீழே உள்ள கடன்களுக்கு 3 சதவீதம், 2 மில்லியனுக்கு அதிகமான கடன்களுக்கு 1 சதவீதம் இருக்கும்.”

அரசாங்கம் மற்றும் பெருநிறுவன-நிதியியல் உயரடுக்கை பெருந்திரளான பெரும்பான்மை மக்களின் கவலைகளில் இருந்து பிரிக்கும் பொருளாதார மற்றும் சமூக இடைவெளி வெள்ளிக்கிழமை விளக்கமான வெளிப்பாட்டைக் கண்டது.

அமெரிக்க வரலாற்றிலேயே மிகப்பெரும் வேலைவாய்ப்பின்மை அதிகரிப்பு என்று தொழிலாளர்துறை அறிவித்த அதே நாளில், டோவ் ஜோன்ஸ் தொழில்துறை சராசரி 2.24 சதவீதம், அல்லது 469 புள்ளிகள் அதிகரித்தது, எஸ்&பி 500 2.28 சதவீத அளவுக்கு உயர்ந்தது.

ஆனால் ஒரு கட்டத்தில், நிஜமான உற்பத்தி மதிப்பு இருக்க வேண்டும், அது தொழிலாள வர்க்கத்தைச் சுரண்டுவதிலிருந்து வருகிறது. அமெரிக்கா “வேலைக்குத் திரும்பவும்” என்ற இம்மாத மத்தியில் வெளியிட்ட அவர் கோரிக்கையில் இருந்து ட்ரம்ப் பின்வாங்கி உள்ளார் என்றாலும், ஆரோக்கியம் என்ன ஆனாலும் வேலைக்குத் திரும்புவதற்கான முனைவு முற்றிலுமாக முடிந்து போய்விடவில்லை.

பிரிட்டிஷ் எக்னொமிஸ்ட் பத்திரிகை "ஓர் இரக்கமற்ற கணக்கீடு" என்ற அதன் ஏப்ரல் 12 தலைப்பில் எழுதுகையில், “அது ஈவிரக்கமற்றதாக இருந்தாலும் உயிருக்கான மதிப்பு உள்ளது, அல்லது வரவிருக்கும் உருக்கமான மாதங்களினூடாக தலைவர்கள் தங்கள் வழியைக் காண வேண்டியிருந்தால் துல்லியமாக அவர்களுக்கு அவசியப்படுவதையாவது குறைந்தபட்சம் திட்டமிட்டு சிந்திப்பதற்குரிய ஏதேனுமொரு வழியாக உள்ளது,” என்று குறிப்பிட்டது.

அனைத்திற்கும் மேலாக பெருநிறுவனங்கள் இந்த பொருளாதார பேரழிவை இன்னும் கூடுதலாக வர்க்க உறவுகளை மறுகட்டமைப்பு செய்வதற்கான ஒரு சந்தர்ப்பமாக பயன்படுத்த முயலும். நீக்கப்பட்ட பல வேலைகள் மீண்டும் வரப் போவதில்லை, அல்லது தொழிலாளர்கள் குறைந்த ஊதியங்கள் மற்றும் சலுகைகளை ஏற்க நிர்பந்திக்கப்படுவார்கள்.

பாரிய வேலைவாய்ப்பின்மை மற்றும் 200,000 மக்களாவது உயிரிழப்பார்கள் என்று அரசாங்கம் அறிவிக்கின்ற இந்த தொற்றுநோய் விரிவடைந்து வருகின்ற போதினும் கூட சந்தைகள் அதிகரித்தன என்ற உண்மை—குறைந்தபட்சமாவது—அமெரிக்க சமூகத்தின் வர்க்க பிளவுகளை அம்பலப்படுத்துகிறது.

இந்த பிளவுகளை இனியும் மூடிமறைக்க முடியாது. ஏற்கனவே, அமசன், இன்ஸ்டாகார்ட் மற்றும் வோல் ஃபுட்ஸ் தொழிலாளர்கள், வாகனத்துறை தொழிலாளர்கள், போக்குவரத்துத்துறை தொழிலாளர்கள் மற்றும் தொழிலாள வர்க்கத்தின் ஏனைய பிரிவுகளிடையே வேலைநிறுத்தங்களும் வெளிநடப்புகளும் வெடித்துள்ளன. இது வெறும் ஆரம்பம் தான். பொருளாதார விளைவுகள் தீவிரமடைகையில், சமூக கோபம் இன்னும் அதிக வெடிப்பார்ந்த வடிவகங்களை ஏற்கும்.

தொழிலாள வர்க்க போராட்டங்களின் அதிகரிப்பு ஒரு தெளிவான முதலாளித்துவ-எதிர்ப்பு மற்றும் சோசலிச வேலைத்திட்டத்தால் வழிநடத்தப்பட வேண்டும். சொத்திருப்புகள் பெருநிறுவன மற்றும் வோல் ஸ்ட்ரீட் பிணையெடுப்புகளில் விரயம் செய்யப்படுவதை சோசலிச சமத்துவக் கட்சி கண்டிக்கிறது. நாங்கள் பின்வருவதைக் கோருகிறோம்:

• பெருநிறுவன-வோல் ஸ்ட்ரீட் பிணையெடுப்பைக் கைவிட்டு, நிதிய மற்றும் தொழில்துறை ஆதாரவளங்களை உடனடியாக இந்த தொற்றுநோயை எதிர்த்து போராடுவதை நோக்கியும் மற்றும் மருத்துவத்துறை தொழிலாளிர்கள், சேவைத்துறை மற்றும் தொழில்துறை தொழிலாளர்கள் ஒரு பாதுகாப்பான சூழலில் இந்த வைரஸில் சிக்கியவர்களுக்கும் மற்றும் ஒட்டுமொத்த சமூகத்திற்கும் சேவையாற்றுவதற்கு அவசியமான அனைத்து சாதனங்கள் வழங்குவதை நோக்கியும் திருப்பி விட வேண்டும்.

• வேலையிலிருந்து நீக்கப்பட்ட அல்லது வேலை நேரம் குறைக்கப்பட்ட தொழிலாளர்களுக்கு, இந்த தொற்றுநோய் காலம் வரையில், சம்பளத்தைக் குறைக்கவோ அல்லது சம்பள இழப்பு செய்யவோ கூடாது. இந்த தொற்றுநோய் காலம் வரையில் எல்லா வாடகைகளும் பயன்பாட்டு கட்டணங்களும் இரத்து செய்யப்பட வேண்டும்.

• அனைத்து புலம்பெயர்ந்த தொழிலாளர்களுக்கும் முழு சம்பளத்துடன் குடியுரிமை வழங்கப்பட வேண்டும்.

• வேலைவாய்ப்பற்ற அனைவருக்கும் உள்ளடங்கலாக ஒவ்வொருவருக்கும் இலவசமாக அனைவருக்குமான மருத்துவக் காப்பீடு வழங்கப்பட வேண்டும்.

• மிகப்பெரும் பங்குதாரர்கள் மற்றும் செயலதிகாரிகளுக்கு எந்தவித இழப்பீடும் இல்லாமல் ஒட்டுமொத்த மருத்துவத்துறை மற்றும் மருந்து உற்பத்தி தொழில்துறையைத் தொழிலாளர்கள், விஞ்ஞானிகள் மற்றும் ஆராய்ச்சியாளர்களின் ஜனநாயக கட்டுப்பாட்டின் கீழ் தேசியமயப்படுத்த வேண்டும். அமசன் மற்றும் ஏனைய அத்தியாவசிய சேவை தொழில்துறைகளும் தேசியமயமாக்கப்பட வேண்டும்.

• அரசாங்கத்தால் பிணெயெடுக்கப்பட்டு வருகின்ற அனைத்து தொழில்துறைகளும் அதற்கு பதிலாக முக்கிய அத்தியாவசியங்களை உற்பத்தியை நோக்கி மீளதிருப்பி விடப்பட்டு, தொழிலாள வர்க்கத்தின் ஜனநாயக கட்டுப்பாட்டின் கீழ் பொதுத்துறை நிறுவனங்களாக மாற்றப்பட வேண்டும்.

• பெரும் செல்வந்தர்கள் மீதான வரிகளைப் பாரியளவில் அதிகரித்து, பெருநிறுவன மற்றும் நிதியியல் செல்வந்த தட்டுக்களால் குவித்து வைக்கப்பட்டுள்ள ட்ரில்லியன் கணக்கான டாலர்கள் பறிமுதல் செய்ய வேண்டும்.

• உலகெங்கிலும் இந்த தொற்றுநோயை எதிர்த்து போராடுவதில் விஞ்ஞானிகள் மற்றும் ஆராய்ச்சியாளர்களின் உலகளாவிய ஒத்துழைப்பு.

செல்வந்தர்களின் செல்வ வளம் மற்றும் இலாபங்களைக் காட்டிலும் தொழிலாள வர்க்கத்தின் தேவைகளே முழுமையான முன்னுரிமையில் இருக்க வேண்டும் என்பதே இந்த மருத்துவத்துறை நெருக்கடி மற்றும் பொருளாதார நெருக்கடிக்கான விடையிறுப்பை வழிநடத்தும் இன்றியமையா கோட்பாக இருக்க வேண்டும்.

சமூகத்தை சோசலிச அடித்தளத்தில் முழுமையாக மறுகட்டமைப்பு செய்வதற்கான அவசியத்தைச் சம்பவங்கள் ஊர்ஜிதப்படுத்தி வருகின்றன. பரந்த தொழில்நுட்ப மற்றும் விஞ்ஞான முன்னேற்றங்களும் மனிதகுலத்தின் பிரமாண்டமான உற்பத்தி சக்திகளும் இந்த இலாபகர முனைவாலும் தேசிய-அரசு அமைப்புமுறையாலும் அவற்றின் மீது நிறுத்தப்பட்டிருக்கும் தளைகளில் இருந்து விடுவிக்கப்பட வேண்டும்.

இந்த கோரிக்கைகளை அரசாங்கத்திற்கும், செல்வந்த தட்டுக்களின் இரட்டை கட்சிகளுக்கும் முறையீடுகள் செய்வதன் மூலமாக வென்றெடுக்க முடியாது. முதலாளித்துவ வர்க்கத்திடம் இருந்து உழைக்கும் மக்களுக்கு அரசியல் அதிகாரத்தை கைமாற்றுவதை நோக்கமாக கொண்ட ஒரு சோசலிச வேலைத்திட்டத்தின் அடிப்படையில் தொழிலாள வர்க்கத்தின் அமைப்புரீதியிலான முழு சமூக பலத்தை அணித்திரட்டுவதன் மூலமாக மட்டுமே அவற்றைக் கைவரப்பெற முடியும்.

இந்த வேலைத்திட்டத்திற்காகவே சோசலிச சமத்துவக் கட்சியின் ஜனாதிபதி பிரச்சாரம் போராடி வருகிறது. இந்த போராட்டத்தில் இணையுமாறும், ஆதரிக்குமாறும், எங்கள் பிரச்சாரத்தில் செயலூக்கத்துடன் ஈடுபடுமாறும் நாங்கள் உழைக்கும் மக்களுக்கும் இளைஞர்களுக்கும் அழைப்பு விடுக்கிறோம்.

Joseph Kishore