கோவிட்-19 தொற்றுநோய் நெருக்கடிக்கு மத்தியில் ஐரோப்பாவில் அதிரடியாக வேலையின்மை அதிகரிக்கிறது

Alex Lantier
6 April 2020

மொழிபெயர்ப்பின் மூலக் கட்டுரையை இங்கே காணலாம்

நேற்று, உலகளவில் கோவிட்-19 தொற்றுநோயாளிகளின் எண்ணிக்கை ஒரு மில்லியனுக்கும் மேலாக அதிகரித்த நிலையில், ஐரோப்பா எங்கிலும் நேற்று மட்டும் கண்டறியப்பட்ட 35,520 புதிய நோயாளிகள் மற்றும் நிகழ்ந்த 3,964 இறப்புக்கள் உட்பட, ஒட்டுமொத்த ஐரோப்பாவில் கொரொனா வைரஸ் நோயாளிகளின் எண்ணிக்கை 558,873 ஆகவும், பலியானவர்கள் எண்ணிக்கை 42,070 ஆகவும் அதிகரித்துள்ளது. ஒரு காலத்தில் தனது “சமூக சந்தை பொருளாதாரம்” பற்றியும், உலக முன்னணி சுகாதார அமைப்புக்கள் பற்றியும் பெருமை பீற்றி வந்த ஐரோப்பா, தற்போது உலகளவிலான கோவிட்-19 நோயாளிகளின் இறப்பு எண்ணிக்கை 58,149 இல் 70 சதவிகிதத்தை கொண்டுள்ளது என்பதுடன், ஆபிரிக்கா மற்றும் இலத்தீன் அமெரிக்காவில் உள்ள பல நாடுகளுக்கும் மற்றும் அல்ஜீரியா முதல் பிரேசில் வரையிலும் இந்த நோயை பரப்பியுள்ளது.

மனிதகுலத்தின் பாதியளவு தற்போது முடக்கப்பட்டுள்ள நிலையில், அமெரிக்காவில் இரண்டு வாரங்களில் 10 மில்லியனுக்கும் மேற்பட்ட வேலைகள் இழக்கப்பட்டுள்ளன, 1918-1919 ஸ்பானிய காய்ச்சல் தொற்று பரவலுக்குப் பின்னர் ஐரோப்பா அதன் மிகப்பெரிய சுகாதார நெருக்கடியை மட்டும் எதிர்கொள்ளவில்லை, மாறாக 1930 களில் நிகழ்ந்த பெரும் பொருளாதார மந்தநிலைக்குப் பின்னர் மிகப்பெரிய சமூக மற்றும் பொருளாதார நெருக்கடியையும் எதிர்கொள்கிறது.

கிடைக்கக்கூடிய முழுமையற்ற புள்ளிவிபரங்களின் அடிப்படையில் கூட, கடந்த இரண்டே வாரங்களில் 11 மில்லியனுக்கும் மேற்பட்ட ஐரோப்பிய தொழிலாளர்கள் வேலை இழந்துள்ளனர். ஜேர்மனியில், 2 மில்லியனுக்கும் மேலாக பணிநீக்கம் செய்யப்பட்ட தொழிலாளர்களுக்காக 470,000 நிறுவனங்கள் அரசு மானியம் கோரி விண்ணப்பித்துள்ளன, இது 2008 வீழ்ச்சிக்குப் பின்னர் 50 சதவிகிதத்திற்கும் அதிகமானது. பிரான்ஸில், பணிநீக்கம் செய்யப்பட்ட நான்கு மில்லியன் தொழிலாளர்கள் அரசு மானியங்களைப் பெறவுள்ளனர். ஸ்பெயினில், 900,000 தொழிலாளர்கள் பணிநீக்கம் செய்யப்பட்டுள்ளனர், பணிநீக்கத்திற்குப் பின்னர் 1.84 மில்லியன் பேர் மானியங்களைப் பெறுகின்றனர், அதாவது, 2008 வீழ்ச்சிக்குப் பிந்தைய 20 வாரங்களில் நிகழ்ந்த வேலையிழப்பைக் காட்டிலும் இந்த இரண்டே வாரங்களில் நிகழ்ந்தது அதிகம்.

ஒரு மில்லியன் பிரிட்டனியர்கள் சமூகநல உதவிகளுக்காக விண்ணப்பித்துள்ளனர். பின்லாந்து மற்றும் நோர்வேயில் 800,000 தொழிலாளர்கள் வேலை இழந்துள்ளனர். ஆஸ்திரியாவின் வேலையின்மை விகிதம் 52.5 சதவிகிதமாக உயர்ந்து 545,000 தொழிலாளர்கள் வேலையிழந்துள்ளனர். இது இரண்டாம் உலகப் போருக்குப் பிந்தைய மிகப்பெரிய எண்ணிக்கையாகும்.

கோவிட்-19 தொற்றுநோயின் உண்மையான மையப்பகுதியும், மற்றும் தொற்றுநோயின் காரணமாக மிகநீண்ட ஊரடங்கை எதிர்கொண்ட நாடான இத்தாலி குறித்த இந்த புள்ளிவிபரங்கள் குறிப்பிடப்படவில்லை. ஏனென்றால், பணிநீக்கம் செய்யப்பட்டுள்ள தொழிலாளர்கள் அல்லது ஆட்குறைப்பு செய்யப்பட்டவர்கள், மற்றும் அரசு வேலையின்மை மானியங்களைப் பெறுவதற்கு விண்ணப்பித்தவர்கள் குறித்த புள்ளிவிபரங்களை ரோம் பதிவிடவில்லை. என்றாலும், வேலையின்மை மானியங்களுக்கான இணையவழி விண்ணப்பங்களை செயல்முறைப்படுத்துவதற்கான இத்தாலிய அரசாங்கத்தின் சேவையகம் இந்த வாரம் நேரடி செயற்பாட்டிற்கு வந்தபோது, இலட்சக்கணக்கான விண்ணப்பங்களின் பதிவேற்றத்தால் ஏற்பட்ட மிதமிஞ்சிய சுமையால் இரண்டு மணிநேரங்களிலேயே அது செயலிழந்து போனது.

இவ்வாறாக, கோவிட்-19 நோய்தொற்று மிகப்பெரிய சுகாதார நெருக்கடி ஏற்படுவதற்கு மட்டுமல்லாமல், 1930 களின் பெரும் பொருளாதார மந்தநிலைக்குப் பின்னர் ஐரோப்பிய முதலாளித்துவம் எதிர்கொள்ளும் மிகப்பெரிய சமூக மற்றும் பொருளாதார நெருக்கடிக்கும் காரணமாக உள்ளது.

இந்த பேரழிவுக்கான பொறுப்பு கொரொனா வைரஸ் தீவிரத்தை மட்டும் சார்ந்தது அல்ல, மாறாக அனைத்திற்கும் மேலாக சிக்கல் நிறைந்த வர்க்க மற்றும் அரசியல் மோதல்களால் சிதைந்துபோயுள்ள ஐரோப்பிய முதலாளித்துவத்தின் திவால் தன்மையையும் சார்ந்துள்ளது. பல தசாப்தங்களின் நிதி வெட்டுக்களால் பேரழிவுக்குள்ளான ஐரோப்பாவின் சுகாதார அமைப்புக்கள் ஒரு வரலாற்று வீழ்ச்சியை சந்தித்துள்ளன. நோயின் பரவலைத் தடுக்கும் தீவிர முயற்சியில் மேற்கொள்ளப்பட்ட முழு முடக்கத்தினால் பெரும்பாலான அதன் மிகப்பெரிய பொருளாதாரங்களும் முடங்கிப்போனதால், ஐரோப்பிய பொருளாதாரம் சீர்குலைவது ஒருபுறமிருக்க, இத்தாலியில் முதல் ஊரடங்கு தொடங்கிய சில வாரங்களில் இருந்து இன்றுவரை ஆயிரக்கணக்கான புதிய நோயாளிகள் கண்டறியப்படும் வகையில் இந்த நோய் இதுவரை பரவி வந்துள்ளது.

ஒரு மாதத்திற்கு முன்பு, தென் கொரியா, ஈரான் மற்றும் இத்தாலி ஆகிய நாடுகள் சீனாவின் உண்மையான மையப்பகுதியில் இருந்து நோய் பரவுவதை எதிர்கொண்ட முக்கிய நாடுகளாக இருந்தன. அந்நாடுகளில் முறையே 5,621, 2,922 மற்றும் 3,809 கொரொனா வைரஸ் நோயாளிகள் உள்ளனர். மற்ற ஐரோப்பிய நாடுகளில் சில நூறு நோயாளிகள் உள்ளனர். தற்போது, தென் கொரியாவில், மக்களை வீட்டிலேயே அடைந்திருக்கச் செய்தல், பாரியளவில் பரிசோதனைகளைச் செய்தல், மற்றும் நோயாளிகளுக்கு சிகிச்சையளித்தல் மற்றும் தனிமைப்படுத்துதல் போன்ற நடவடிக்கைகள் செயல்படுத்தப்பட்டதன் பின்னர், அந்நாட்டின் 10,062 நோயாளிகளில் பெரும்பாலானவர்கள் நோயில் இருந்து மீட்கப்பட்டுள்ளனர். என்றாலும், அதன் மொத்த எண்ணிக்கை, இத்தாலியின் 119,827, ஸ்பெயினின் 117,710, ஜேர்மனியின் 90,964, பிரான்சின் 64,338 மற்றும் பிரிட்டனின் 38,168 போன்ற எண்ணிக்கைகளால் மட்டும் முந்திச்செல்லப்படவில்லை, மாறாக தென் கொரியாவைக் காட்டிலும் மிகக்குறைந்த மக்கள் தொகை கொண்ட பல நாடுகளால் முந்திச்செல்லப்பட்டுள்ளது.

இருப்பினும், 19,606 கோவிட்-19 நோயாளிகள் மற்றும் 591 இறப்புக்களை கொண்ட சுவிட்சர்லாந்து, 16,770 நோயாளிகள் மற்றும் 1,143 இறப்புக்களை கொண்ட பெல்ஜியம், 15,723 நோயாளிகள் மற்றும் 1,487 இறப்புக்களை கொண்ட நெதர்லாந்து போன்றவை தென் கொரியாவின் கோவிட்-19 இறப்பு எண்ணிக்கையான 174 ஐ விஞ்சிவிட்டன.

இத்தாலியில் ஆரம்பத்தில் கோவிட்-19 நோய்தொற்று பரவலுக்கான முக்கிய பகுதியாக இருந்த Vò என்ற நகராட்சி மன்றப் பகுதியில், பெரியளவில் மக்களை வீட்டிலேயே அடைந்திருக்கச் செய்வது, பரிசோதனை நடவடிக்கைகளை மேற்கொள்வது, மற்றும் நோயுற்றவர்களை தனிமைப்படுத்தி வைப்பது ஆகிய நடவடிக்கைகளை மேற்கொண்டு தொற்றுநோயை தனிமைப்படுத்துவதில் சுகாதாரப் பணியாளர்கள் வெற்றியடைந்தனர். பிராந்திய ஆளுநரான Luca Zaia, “இங்கே முதலில் இரண்டு நோயாளிகள் இருந்தனர். ‘நிபுணர்கள்’ 3,000 பரிசோதனைகள் செய்யப்பட்டுள்ளதாக எங்களிடம் தெரிவித்தாலும் கூட, நாங்கள் அனைவரையுமே பரிசோதித்தோம். அதன்படி 66 பேருக்கு தொற்று இருப்பதை நாங்கள் கண்டறிந்தோம், பின்னர் அவர்களை 14 நாட்களுக்கு தனிமைப்படுத்தினோம், அதன் பின்னர் அவர்களில் 6 பேருக்கு இன்னமும் நோய்தொற்று உள்ளது. இவ்வாறு தான் நாங்கள் நடவடிக்கை எடுத்து முடித்துள்ளோம்” என்று கூறினார்.

ஆயினும், தென் கொரியா மற்றும் Vò பகுதியில் மேற்கொள்ளப்பட்ட, பாரிய தனிமைப்படுத்தல், பொருளாதார உற்பத்தியை நிறுத்திவைத்தல், பாரிய பரிசோதனை நடவடிக்கைகளை செயல்படுத்துதல் மற்றும் நோயாளிகளை தனிமைப்படுத்துதல் ஆகிய மூலோபாய நடவடிக்கைகளை ஐரோப்பிய அரசாங்கங்கள் அனைத்தும் நிராகரித்தன. அதாவது, பரிசோதனை உபகரணங்கள், முகக்கவசங்கள், சுவாசக் கருவிகள் மற்றும் பாதுகாப்பு உபகரணங்கள் போன்ற பெரியளவில் முதலீடு செய்ய வேண்டியிருந்த அத்தகைய மூலோபாயங்களை அவர்கள் நிராகரித்தனர். கோவிட்-19 தொற்றுநோய் நெருக்கடிக்கு மத்தியில், நிதிச் சந்தைகளை பிணையெடுப்பதற்காக ஐரோப்பிய மத்திய வங்கி 750 பில்லியன் யூரோக்களை புதிதாக அச்சடித்திருந்தாலும், 2008 வீழ்ச்சிக்குப் பின்னர் திணிக்கப்பட்ட பல கோடி செலவின வெட்டுக்களால் பேரழிவுக்குள்ளான உள்கட்டமைப்பு வசதிகளைக் கொண்டே இந்த தொற்றுநோய் நெருக்கடியை சமாளிக்கும் நிலைக்கு சுகாதார அமைப்புக்கள் விடப்பட்டுள்ளன.

ஐரோப்பிய அதிகாரிகள் இந்த தொற்றுநோய் வெடிப்பின் முக்கியத்துவத்தை குற்றவியல் மனப்பான்மையுடன் நிராகரித்தனர். இத்தாலிய வெளியுறவு அமைச்சர் லூய்கி டி மாயோ (Luigi di Maio), தவறான செய்திகளை பரப்பி இத்தாலியின் பொருளாதாரத்தை சீர்குலைக்க வடிவமைக்கப்பட்ட “சர்ச்சைக்குரிய செய்தி” என்று கோவிட்-19 நோய்தொற்று குறித்த எச்சரிக்கைகளை நிராகரித்தார். பிரான்சின் ஆளும் கட்சியின் முன்னணி உறுப்பினரான, முன்னாள் பிரெஞ்சு சுகாதார அமைச்சர் Agnes Buzyn, பிரான்சிற்கு கோவிட்-19 நோய்தொற்று பரவுவதற்கான அபாயம் “அடிப்படையில் பூஜ்ஜியமே” என்று விவரித்தார்.

இத்தாலியில், கோவிட்-19 தொற்று நோயாளிகளின் எண்ணிக்கை கட்டுக்கடங்காமல் வெடித்ததன் பின்னர், அத்தியாவசியமல்லாத பணிகளைச் செய்யும் தொழிலாளர்கள் வீட்டில் தங்குவதற்கான உரிமையை கோரியதால், அந்நாடெங்கிலும் திடீர் வேலைநிறுத்தங்கள் தூண்டப்பட்டதைத் தொடர்ந்து பிற ஐரோப்பிய அரசாங்கங்களை பின்பற்றி முழு ஊரடங்கை செயல்படுத்துவதற்கு ரோமும் ஒப்புக் கொண்டது. ஐரோப்பா மற்றும் அமெரிக்கா எங்கிலும் உள்ள தொழிலாளர்கள் வேலையை புறக்கணித்தனர் அல்லது இந்த தொற்றுநோயை எதிர்த்து போராடுவதில் பகுத்தறிவுமிக்க அணுகுமுறையை கடைப்பிடிக்க கட்டாயப்படுத்தும் முயற்சியில் எதிர்ப்பு தெரிவித்தனர் என்ற நிலையில் ஒரு பரந்த இயக்கம் உருவெடுத்தது.

எவ்வாறாயினும், இது ஒட்டுமொத்த ஐரோப்பிய முதலாளித்துவத்திற்கு எதிரான ஒரு போராட்டத்தில் தொழிற்சங்க அதிகாரத்துவத்தில் இருந்து சுயாதீனமாக ஒழுங்கமைக்கப்பட்ட தொழிலாள வர்க்கத்தின் ஐக்கியத்தைக் கோரும் ஒரு சர்வதேச மற்றும் அரசியல் போராட்டமாக உள்ளது.

தொழிலாளர்களின் அடிப்படைத் தேவைகளை தொழிற்சங்கங்களுக்கும் முதலாளித்துவ அரசாங்கங்களுக்கும் இடையிலான அரசியல் ஒப்பந்தங்களுக்கு அடிபணியச் செய்ய முடியாது. வீட்டில் தங்கியுள்ள தொழிலாளர்களுக்கு தொடர்ந்து முழு ஊதியம் வழங்கப்பட வேண்டும், மற்றும் உணவு மற்றும் மருத்துவம் சார்ந்த முக்கிய தொழில்களில் பணிபுரிபவர்களுக்கு தேவையான பாதுகாப்பான வேலை நிலைமைகள் செய்து தரப்பட வேண்டும். அனைத்து நோயுற்றவர்களுக்கும் முழுமையான மற்றும் நவீனமான மருத்துவ கவனிப்பை வழங்குவதற்கு, சுகாதார சேவையில் பாரிய அவசர முதலீடு, கண்டம் முழுவதிலும் உள்ள தொழிற்சாலைகளை சர்வதேச அளவில் ஒருங்கிணைந்த பொது பயன்பாடுகளாக மாற்றுவது, தொற்றுநோயை எதிர்த்துப் போராடும் வகையில் முக்கியமான மருத்துவ உபகரணங்களை உற்பத்தி செய்வது ஆகியவை தேவைப்படுகின்றன. ஜனநாயக உரிமைகளுக்கு தெளிவான ஆபத்தை முன்வைப்பதான இராணுவ பிரிவுகள் மற்றும் மிருகத்தனமான கலகப் பிரிவு பொலிஸின் பயன்பாடு இல்லாமல் தனிமைப்படுத்தல் நடவடிக்கைகள் அமல்படுத்தப்பட வேண்டும்.

அனைத்திற்கும் மேலாக, தொழிலாளர்கள் எப்போது வேலைக்கு திரும்ப வேண்டும் என்பது தொடர்பான முடிவை நிதியப் பிரபுத்துவத்தின் வெறும் வேஷம்போடும் சர்வாதிகாரங்களாகச் செயல்படும் முதலாளித்துவ அரசாங்கங்களின் கைகளில் விட்டுவிட முடியாது. ஐரோப்பா முழுவதிலுமாக தொற்றுநோய் கட்டுக்கடங்காமல் தொடர்ந்து பரவி வரும் நிலையில், முன்னணி ஐரோப்பிய அரசாங்கங்கள், முக்கிய வங்கிகள் மற்றும் பெருநிறுவனங்களுக்கு இலாபம் ஈட்டுவதற்காக தொழிலாளர்களை பணிக்குத் திரும்பும்படி கட்டாயப்படுத்த மோசடியான அல்லது விஞ்ஞானமற்ற முறைகளைக் கண்டறிய தொடர்ந்து முயன்று வருகின்றன.

ஜேர்மனியில், பிரவுன்ஸ்வைக் நகரில் உள்ள நோய்தொற்று ஆராய்ச்சிக்கான ஹெல்ம்ஹோல்ட்ஸ் மையத்தில் (Helmholtz Center for Infection Research) மேற்கொள்ளப்பட்ட கொரொனா வைரஸ் குறித்த நோய் எதிர்ப்பு மருந்துகள் தொடர்பான சோதனைகளின் ஆரம்பகட்ட ஆய்வுகளின் விபரங்களை இலண்டனும் பாரிஸூம் கைப்பற்றுகின்றன. இந்த செயல்முறை பரிசோதனைகள், நுண்கிருமியை எதிர்த்துப் போராட ஒரு தனிநபர் நோய் எதிர்ப்பு சக்தியை உருவாக்கியிருக்கிறாரா என்பதை சோதிப்பதற்கென வடிவமைக்கப்பட்டுள்ளன. இது அவர்கள் நுண்கிருமித் தொற்றுக்கு ஆளாகியுள்ளனர் என்பதையும், ஒருவேளை அவருக்கு நோய் எதிர்ப்பு சக்தி இருப்பதையும் குறித்துக்காட்டும். ஒரு நோயாளிக்கு எவ்வளவு காலம் இந்த தடுப்புசக்தி இருக்கும் என்பது இன்னும் அறியமுடியாததாகவுள்ளது.

இருப்பினும், பெரியளவிலான நோய்எதிர்ப்பு சோதனைகளுக்கான நிர்வாகத்திற்கு இங்கிலாந்து மற்றும் பிரெஞ்சு அதிகாரிகள் அழைப்பு விடுக்கின்றனர். அதன் பின்னர் நுண்கிருமி இருப்பதாக கண்டறியப்பட்ட எவரையும் வேலைக்குத் திரும்பும்படி நிர்ப்பந்திக்க முடியும்.

“நோய் எதிர்ப்பு சான்றிதழை நாங்கள் எதிர்பார்க்கிறோம்,” என்று இங்கிலாந்து சுகாதார அமைச்சர் மாட் ஹான்காக் (Matt Hancock) வியாழக்கிழமை தெரிவித்தார். “நோயால் பாதிக்கப்பட்டவர்களுக்கு நோய் எதிர்ப்பு மருந்து கிடைத்துள்ள நிலையில், நோய்எதிர்ப்பு சக்தி அவர்களுக்கு இருப்பதை காணமுடியும் என்பதால், சாத்தியமுள்ள சாதாரண வாழ்க்கைக்கு முடிந்தவரை அவர்கள் திரும்பலாம்” என்றும் தெரிவித்தார்.

கோவிட்-19 தொற்றுநோயை ஏற்படுத்தும் கொரொனா வைரஸ் இருப்பது வெளியே தெரியாமலேயே ஒருவருக்கு அந்நோய் இருப்பதாக கூறப்பட்ட பரிசோதனை முடிவுகள், பல பரிசோதனைகள் குறைபாடு உள்ளவை என்பதை நிரூபித்துள்ளன, ஆனால் பிற பல பொதுவான கொரொனா வைரஸ்களில் பெரும்பாலானவை பொதுவான ஜலதோஷத்தை மட்டுமே விளைவிக்கின்றது. ஆயினும், பிரிட்டிஷ் அரசாங்கம் இத்தகைய மில்லியன் கணக்கான பரிசோதனைகளை வாங்கியுள்ளது.

பரிசோதனைகள் பயனற்றவை என்பதை வெளிப்படையாக ஒப்புக் கொண்டாலும், பிரிட்டிஷ் அரசாங்கம் இந்த கொள்கை குறித்து தொடர்ந்து அழுத்தம் கொடுக்கும் என்று ஹான்ஹாக் வலியுறுத்தியது. “அவற்றில் சிலவற்றின் ஆரம்ப முடிவுகள் சரியாக மேற்கொள்ளப்படவில்லை. ஆனால் பின்னர் எங்களுக்கு கிடைத்த பரிசோதனைகளை மக்கள் நம்பிக்கையுடன் பயன்படுத்தும் வகையில் போதுமான நம்பகத்தன்மையை அவை கொண்டிருந்தன என்று நாங்கள் நம்புகின்றோம்” என்று அவர் கூறினார். மேலும், “நாம் எதையாவது செய்து கொண்டிருப்போம் மற்றும் முயற்சி செய்து பார்ப்போம், ஆனால் விஞ்ஞானத்தைப் பொறுத்தவரை அது மிக ஆரம்பத்தில் உள்ளது….. அதைப் பற்றி தெளிவுபடுத்த முடியும்” என்றும் அவர் கூறினார்.

இருந்தாலும், பிரெஞ்சு பிரதமர் எட்வார்ட் பிலிப்பும் நோய்எதிர்ப்பு சோதனைகள் “வீட்டிலிருந்து பணி செய்யும் கொள்கையிலிருந்து வெளியேறுவதற்கு ஏற்பாடு செய்வதற்கு தயாராக இருக்கும்,” என்று அறிவித்துள்ளார், அதற்கு குறைந்தபட்சம் இரண்டு வாரங்களுக்குள் ஏற்பாடு செய்யப்படும் என்று பிலிப் அரசாங்கம் கூறியுள்ளது.