பிரெஞ்சு அரசாங்கம் ஓய்வு இல்லங்களில் நிகழ்ந்த பெருமளவு கோவிட்-19 இறப்புக்களை மூடிமறைக்கின்றது

Jacques Valentin
8 April 2020

மொழிபெயர்ப்பின் மூலக் கட்டுரையை  இங்கே காணலாம்

பிரான்சில் அறிக்கை செய்யப்பட்ட கோவிட்-19 நோயாளிகளின் தினசரி இறப்பு எண்ணிக்கை கடந்த வாரம் தொடக்கத்தில் இருந்ததைக் காட்டிலும் வார இறுதியில் அண்மித்து அது மும்மடங்காக அதிகரித்துள்ளது. ஆரம்பகட்ட தரவுகளின் படி, கோவிட்-19 நோய்தொற்று நாடெங்கிலுமுள்ள ஓய்வு இல்லங்களில் தீவிரமாக பரவி வருகிறது என்பதை ஒப்புக் கொள்வது குறித்து பிரெஞ்சு அரசாங்கம் எடுத்த முடிவின் காரணமாகவே கிட்டத்தட்ட ஒட்டுமொத்த அதிகரிப்பு ஏற்பட்டுள்ளது என்பதாகத் தெரிகிறது, அதாவது, அரசாங்கம் அதை ஒப்புக் கொள்வதில் அக்கறை காட்டாத நிலையில், ஓய்வு இல்லங்களில் இறப்பு எண்ணிக்கை ஆயிரக்கணக்கில் அதிகரிப்பதற்கு இட்டுச்சென்றது.

ஏப்ரல் 1 அன்று கோவிட்-19 நோயாளிகளின் இறப்பு எண்ணிக்கை அதிகளவாக 509 என்று பதிவானதன் பின்னர், ஏப்ரல் 2 அன்று 1,355 இறப்புக்கள் நிகழ்ந்தன, அதைத் தொடர்ந்து ஏப்ரல் 3 அன்று 1,120 மற்றும் ஏப்ரல் 4 அன்று 1,053 இறப்புக்கள் நிகழ்ந்தன. இந்த மூன்றே நாட்களில் நிகழ்ந்த இறப்பு எண்ணிக்கை இந்த நோய்தொற்றால் பிரான்சில் இறந்தவர்களின் ஒட்டுமொத்த எண்ணிக்கையை தோராயமாக இரட்டிப்பாக்கியது. ஞாயிற்றுக்கிழமை புள்ளிவிபரப்படி, அன்று கண்டறியப்பட்ட 2,886 புதிய நோயாளிகள் மற்றும் நிகழ்ந்த 518 இறப்புக்களையும் சேர்த்தால், அன்று வரையிலான தேசியளவிலான உத்தியோகபூர்வ கோவிட்-19 நோயாளிகளின் எண்ணிக்கை 93,780 எனவும், இறப்பு எண்ணிக்கை 8,093 எனவும் அதிகரித்திருந்தது.

இந்த தசாப்தத்தில் ஏற்பட்டுள்ள மிக மோசமான உலகளாவிய நெருக்கடியாக இந்த நோய்தொற்று இருந்தாலும், பிரெஞ்சு அரசாங்கம் வெளியிட்டுள்ள அதிகாரபூர்வ தகவல்கள் கேலிக்கூத்தாக உள்ளன. அதாவது, கோவிட்-19 நோய்தொற்றால் பாதிக்கப்பட்ட எவரும் தம்மைத் தாமே கவனித்துக்கொள்ள வேண்டும் என்றும் மருத்துவமனைக்கு வரக் கூடாது என்றும் அரசு கொள்கை கோருவதால், மருத்துவமனைகளில் உறுதிப்படுத்தப்பட்ட நோயாளிகளின் எண்ணிக்கை மட்டுமே கணக்கில் எடுத்துக்கொள்ளப்படுகின்றன. அதே மாதிரி, பிரான்சில் தங்களது சொந்த வீடுகளில் அல்லது ஓய்வு இல்லங்களில் மருத்துவ சிகிச்சை பெற வழியின்றி ஓய்வெடுக்கும் அல்லது இறந்து கொண்டிருக்கும் கோவிட்-19 நோயாளிகளின் எண்ணிக்கை அரசின் உத்தியோகபூர்வ எண்ணிக்கையில் சேர்க்கப்படவில்லை.

அரசாங்கம் அதன் புள்ளிவிபரங்கள் மிகவும் குறைத்து மதிப்பிடப்பட்டவை என்பதை ஒப்புக் கொண்டுள்ளது. பிரான்சில் கோவிட்-19 நோயாளிகளின் உத்தியோகபூர்வ எண்ணிக்கை 16,018 ஆக இருந்த சமயத்தில், சுகாதார அமைச்சர் ஒலிவியே வாரன் (Olivier Veran) மொத்த கோவிட்-19 நோயாளிகளின் எண்ணிக்கை உண்மையில் 30,000 முதல் 90,000 வரையிலும் கூட இருக்கும் என்று நம்புவதாக தெரவித்தார். அதேவேளை, துல்லியமான தகவல்களின் பற்றாக்குறை, உழைக்கும் மக்களிடமிருந்து நெருக்கடியின் ஆழத்தை மறைப்பதற்கு உதவுவதோடு, நோய்தொற்று பற்றிய விஞ்ஞானபூர்வ பகுப்பாய்வு மேற்கொள்ளப்படுவதையும், தேவையான பாதுகாப்பு நடவடிக்கைகள் செயல்படுத்தப்படுவதையும் தடுக்கின்றது.

ஓய்வு இல்லங்களில் நிகழ்ந்துவரும் பேரழிவுகர தொற்று பரவல் பற்றிய தகவல்கள் வெளிவரமால் தடுக்கும் வகையில்தான் ஜனாதிபதி இமானுவல் மக்ரோனின் அரசாங்கம் முடிவுகளை கண்காணித்துள்ளது என்பது தற்போது வெளிப்படுகிறது, அதாவது சுமார் 700,000 ஓய்வூதியம் பெறும் வயோதிகர்கள் மற்றும் அவர்களது குடும்பங்கள் குறித்து வெறும் வேஷமிட்டு அவர்களை அவமதிக்கும் வகையில் செயல்படுகிறது. பெரும் செல்வந்தர்கள் மற்றும் இராணுவத்தின் பைகளில் நூற்றுக்கணக்கான பில்லியன் யூரோக்களை திணிக்கும் அதன் திட்டத்தின் மைய நோக்கமாக சுகாதார செலவினங்கள் உட்பட சமூக செலவினங்களை அரசாங்கம் குறைத்து கொண்டுள்ளது.

ஏப்ரல் 2 அன்று, ஒருசில ஓய்வு இல்லங்களில் கோவிட்-19 அதிரடியாக பரவுவது குறித்த செய்திகள் தேசியளவிலான செய்திகளாக மாறியதன் பின்னர், பிரான்சின் தலைமை மருத்துவ அதிகாரியான பேராசிரியர் ஜெரோம் சாலமோன் (Jerome Salomon), நோய்தொற்று பரவ ஆரம்பித்ததிலிருந்து நாட்டின் ஓய்வு இல்லங்களில் வசித்து வருபவர்களில் குறைந்தது 884 வயோதிகர்கள் இறந்துள்ளனர் என்று அறிவித்தார். மேலும், இந்த ஓய்வு இல்லங்களில் வசிப்பவர்களில் 14,638 நோய்தொற்று “உறுதிப்படுத்தப்பட்ட அல்லது அதற்கு சாத்தியமுள்ள” நோயாளிகள் பற்றி அறியப்பட்டுள்ளது என்றும் அவர் தெரிவித்தார். சாலமோன் இந்த தரவுகள் முழுமையற்றவை என்று கூறி, “பிராந்தியங்களுக்கு இடையில் அறிக்கை செய்யப்படுவதில் உள்ள பெரும் ஏற்றத்தாழ்வின் காரணமாக இது ஒரு ஆரம்பகட்ட பகுதியளவிலான மதிப்பீடாக மட்டுமே இருப்பதால், அனைத்து தரவுகளையும் ஒருங்கிணைக்க முக்கியமான பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன” என்பதாகத் தெரிவித்தார்.

சாலமோன், வயோதிகர்களுக்கான பிற சமூக நிறுவனங்களிலோ அல்லது வேலை செய்யும் வயதினர் தங்களது வீடுகளிலோ இறந்து விடுவது தொடர்பான சரியான மதிப்பீடு செய்யப்பட்ட தரவுகளை வழங்கவில்லை.

கோவிட்-19 நோய்தொற்று தொடர்பான தரவுகளை சேகரித்து பகுப்பாய்வு செய்வதற்கு ஒரு நிறுவனத்தை ஸ்தாபிக்க தீவிரமாக முயற்சித்து வருவதாக மக்ரோன் அரசாங்கம் தெரவித்துள்ளது. மார்ச் 25 அன்று LCI, “மருத்துவ-சமூக ஸ்தாபனங்களில் நிகழும் இறப்புக்களின் எண்ணிக்கையை அன்றாடம் அறிக்கை செய்வதற்கான ஒரு செயலி வரும் நாட்களில் செயல்படுத்தப்படும் என்று பொது சுகாதார இயக்கம் (General Health Directorate) எங்களுக்கு தெரிவித்தது” என்று அறிக்கை செய்தது.

இது மக்களை தவறாக வழிநடத்துவதற்கான முயற்சியே. உண்மையில், வயோதிகர்களின் மத்தியில் உட்பட, கடுமையான சுவாச நோய்தொற்றுக்கள் பரவுவது மற்றும் இறப்புக்கள் நிகழ்வது குறித்த நிகழ்நேர தரவுகளை கண்காணிக்கவும் வழங்கவும், “Weekly Flu Bulletin” என்ற ஏற்கனவேயுள்ள தரவு சேகரிப்பு திட்டம் சேகரித்திருந்த தகவல்களையே DGS உம் மற்றும் சுகதார அமைச்சகமும் ஏற்கனவே நம்பியிருக்க முடியும். இது, பொதுமக்கள், மருத்துவமனைகள், மற்றும் ஓய்வு இல்லங்களிலிருந்து தான் தரவுகளை தொகுக்கின்றன என்பது குறிப்பிடத்தக்கது.

கோவிட்-19 குறித்த தரவுகளை இந்நிறுவனம் தான் தொகுக்க வேண்டும் என்று அதன் சொந்த விதிமுறைகளே குறிப்பிடுவதான ஏற்கனவே உள்ள இந்த நிறுவனத்தை புறக்கணிப்பதற்கான மக்ரோன் அரசாங்கத்தின் முடிவிற்கு எந்தவித பொருத்தமான விளக்கமும் இல்லை.

2012 இல், பொது சுகாதாரத்திற்கான உயர்மட்ட குழு (High Council on Public Health), “வயதான குடியிருப்பாளர்களின் கூட்டுத்தொகைகளில் கடுமையான சுவாச நோய்தொற்றுக்களுக்கான (IRA) நடத்தை விதிமுறையை” வகுத்தது. மனிதர்களுக்கு இடையில் பரவும் IRA, நான்கு நாட்களுக்குள் குடியிருப்பாளர்கள் மத்தியில் குறைந்தது ஐந்து IRA நோயாளிகளை உருவாக்கும் சூழ்நிலைக்கு வழிவகுக்குமானால், நிறுவன ஊழியர்களை அதில் உட்படுத்தாமல், தரவுகளை சேகரிக்கும் பணி தொடங்கப்பட்டு தேசியளவிலான அறிக்கைகள் அனுப்பப்பட வேண்டும் என்று இது குறிப்பிடுகிறது. காய்ச்சலைப் போலவே, கோவிட்-19 உம் கடுமையான சுவாச நோய்தொற்றாகும் என்பதால் இதுபற்றி அறிக்கை செய்ய வேண்டியதும் அவசியமாகிறது.

உண்மையில், இணையத்தில் கடைசியாக கிடைக்கக்கூடிய மார்ச் 18 அன்று வெளியிடப்பட்ட 11வது “Weekly Flu Bulletin”, “தொகுக்கப்பட்ட IRA க்களின் 655 அத்தியாயங்கள் பதிவு செய்யப்பட்டுள்ளன,” என்றும், இவற்றில் குறைந்தது மூன்று அத்தியாயங்கள் கோவிட்-19 IRA நோய்தொற்று வெடிப்பை உறுதிப்படுத்தியுள்ளன என்றும் குறிப்பிட்டு, வயோதிகர் பராமரிப்பு நிறுவனங்களின் நிலைமை குறித்து வாராந்திர அறிக்கையை உருவாக்க முன்மொழிந்தது.

இந்த நோயாளி நிலை அறிவிப்பு (Bulletin), இந்த ஆண்டின் வழமையான காய்ச்சல் காலமானதால் ஒப்பீட்டளவில் நோய் லேசான தன்மையை கொண்டிருந்தாலும், புதிதாக எவருக்கு காய்ச்சல் ஏற்பட்டாலும் அது குறித்து “பிரான்சில் கோவிட்-19 நோய்தொற்றுடன் தொடர்புபடுத்திப் பார்க்கப்பட்டது.” என்றாலும், கோவிட்-19 நோய்தொற்றுக்கு அஞ்சி, அடிக்கடி கவனிக்கப்பட வேண்டிய காய்ச்சல் அறிகுறிகளைக் கொண்ட நபர்கள் எவ்வளவு பேர் இருக்கிறார்கள் என்பதையும், மேலும் அவர்கள் எந்த அளவிற்கு உண்மையான கோவிட்-19 நோயாளிகள் என்பதையும் அறிவது கடினம்” என்றும் இது குறிப்பிட்டது. இந்த நிச்சயமற்ற தன்மை, ஓய்வு இல்லங்களில் கோவிட்-19 பரிசோதனை பொதிகளை அரசாங்கம் இடம்பெறச் செய்யவில்லை என்ற உண்மையில் இருந்து உருவாகிறது.

இவ்வாறாக, சுகாதார அமைச்சகத்தின் கூற்றுக்களுக்கு மாறாக, கோவிட்-19 நோய்தொற்று பரவலைக் கண்காணிப்பதற்கு ஒரு நிறுவப்பட்ட பொறிமுறையை மாநில நிர்வாகம் கொண்டிருக்கவில்லை, என்றாலும் இந்த பொறிமுறை உண்மையில் நோய் பரவுவது குறித்த புள்ளிவிபரங்களையே உருவாக்கி வந்தது. எவ்வாறாயினும், இந்த அறிக்கைகளை புறக்கணித்து அவற்றை அதிகரித்துக் காட்டுவதற்கே அரசு உயர்மட்டங்கள் நடவடிக்கைகளை மேற்கொண்டன.

இதன் விளைவாக, கிட்டத்தட்ட பொது விவாதம் எதுவுமில்லாமலும், பெரும்பாலும் அதிகாரிகளிடமிருந்து சிறிதளவே பதில் கிடைத்த நிலையிலும் ஓய்வு இல்லங்களில் பல வாரங்களாக ஆயிரக்கணக்கானவர்கள் இறந்து கொண்டிருக்கிறார்கள்.

ஒரு சந்தர்ப்பத்தில், Besançon நகருக்கு அருகிலுள்ள Thise ஓய்வு இல்லத்தில், பிரான்சில் இந்த நோய்தொற்றின் மையப்பகுதியாக இருந்த Mulhouse நகரிலிருந்து திரும்பிய ஒரு செவிலியரின் மூலமாக 10 குடியிருப்பாளர்கள் கோவிட்-19 நோய்தொற்று பாதிப்புக்கு உள்ளானார்கள். மார்ச் 7 அன்று, Ma Commune என்ற உள்ளூர் செய்தியிதழ் இந்த நோய்தொற்றின் அதிரடியான பரவல் குறித்து செய்தி வெளியிட்டு இவ்வாறு தெரிவித்தது: “பிராந்திய சுகாதார ஆணையம் (Regional Health Authority-ARS) அவர்களது நிலைமை கவலைக்கிடமாக இல்லை என்றும், அவ்வாறு இருந்திருந்தால் அவர்கள் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டிருப்பார்கள் என்றும் சுட்டிக்காட்டியது குறித்து கருத்து தெரிவிக்கக் கேட்டது. மேலும், நோய்தொற்றுக்கு ஆளானவர்கள் ஓய்வு இல்லத்திலுள்ள மற்றவர்களுக்கும் பரவவிடாமல் தடுக்க அவரவர் அறைகளிலேயே அடைத்து வைக்கப்பட்டுள்ளனர்.”

ஒரு மாதத்திற்குப் பின்னர், Thise இல் தற்போது நிலவும் பேரழிவுகர சூழ்நிலை குறித்து France3 தொலைக்காட்சி செய்திகளை வெளியிட்டன: “மார்ச் 5 அன்று இல்லத்தில் முதல் கோவிட்-19 நோயாளிகள் கண்டறியப்பட்டதில் இருந்து, இதுவரை 25 பேர் இறந்துள்ளனர், அதாவது, இந்த இல்லத்தின் 80 குடியிருப்பாளர்களில் கால்பகுதிக்கும் மேற்பட்டவர்கள் இறந்துள்ளனர், இவர்களது சராசரி வயது 88 ஆகும்.”

நோய்தொற்று பரவலின் ஆரம்பகட்டத்தின் போது, இந்த நோய்தொற்று கட்டுப்படுத்த முடியாதது என்ற நிலையில், நோய் பரவுவதை தடுப்பதற்கான நடவடிக்கைகளால் பொருளாதாரத்திற்கு தீங்கு ஏற்படுவதை அனுமதிக்க முடியாது என்று மக்ரோனும் அரசாங்கமும் மீண்டும் மீண்டும் தெரிவித்தனர். மேலும், நோய்தொற்றை பரவ அனுமதிப்பதன் மூலம் மக்கள் நோய் எதிர்ப்பு சக்தியைப் பெறுவதற்கு நிர்பந்திக்கப்பட வேண்டும், அதாவது மட்டுப்படுத்தப்பட்ட தணிப்பு நடவடிக்கைகளால் மட்டுமே நோயை கட்டுப்படுத்த முடியும் என்பதான பிரிட்டிஷ் பிரதமர் போரிஸ் ஜோன்சனின் பாசிசவாத முடிவை சிலர் எதிரொலிக்கிறார்கள்.