COVID-19 தொற்றுநோய் விடையிறுப்பு மீதான ஐரோப்பிய ஒன்றிய பேச்சுவார்த்தைகள் தோல்வி அடைகின்றன

Alex Lantier and Johannes Stern
11 April 2020

மொழிபெயர்ப்பின் மூலக் கட்டுரையை இங்கே காணலாம்

COVID-19 தொற்றுநோய் மீது ஐரோப்பிய மண்டல நிதியமைச்சர்களின் முதல் யூரோ குழும உச்சிமாநாடு தோல்வி அடைந்து இரண்டு வாரங்களுக்குப் பின்னர், முன்னணி ஐரோப்பிய அரசுகளுக்கு இடையே கடுமையான பரஸ்பர குற்றச்சாட்டுகளுக்கு மத்தியில் இரண்டாவது அவசர யூரோகுழு மாநாடும் நேற்று தோல்வியில் முடிந்தது. பெரும் செல்வந்தர்களின் செல்வவளத்தைக் காப்பாற்றுவதற்காக மேலோங்கி நிற்கும் ஐரோப்பிய ஒன்றியத்திடம், 1918 ஸ்பானிய சளி-காய்ச்சல் தொற்றுநோய்க்குப் பிந்தைய இந்த மரணகதியிலான தொற்றுநோயைக் குணப்படுத்த எந்த கொள்கையும் இல்லை.

ஐரோப்பாவிலும் மற்றும் சர்வதேச அளவிலும் தொழிலாளர்களைப் பொறுத்த வரையில், இந்த தொற்றுநோய் முன்கண்டிராத ஒரு சமூக மற்றும் பொருளாதார நெருக்கடியாகும். செவ்வாய்கிழமை, ஐரோப்பியகுழு மாநாடு தோல்வியடைந்த போது, 34,487 புதிய நோயாளிகள் கண்டறியப்பட்டிருந்தனர் மற்றும் ஐரோப்பா எங்கிலுமான மருத்துவமனைகளில் 4,599 மரணங்களுடன் மொத்த தொற்றுநோய் ஏற்பட்டவர்களின் எண்ணிக்கை 709,125 ஆகவும் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 57,245 க்கும் வந்தது. இந்த தீவிர நோய்தொற்றைக் குறைப்பதற்கான பெரும்பிரயத்தன முயற்சியில் கொண்டு வரப்பட்ட கட்டுப்பாடுகள் கடந்த வாரம் 11 மில்லியன் வேலைகளைப் பறித்தன, இது 1930 பெருமந்தநிலைமைக்குப் பின்னர் ஐரோப்பாவின் மிகவும் ஆழமான பொருளாதார நெருக்கடியைக் கட்டவிழ்த்து விட்டுள்ளது.

உலகின் உழைப்பு சக்தியின் 3.3 பில்லியன் உறுப்பினர்களில் 80 சதவீதத்தினர் இப்போது முழுமையான அல்லது பகுதியான வேலையிட நிறுத்தங்களால் பாதிக்கப்பட்டுள்ளதாக ஐ.நா. சபை மதிப்பிடுகின்ற நிலையில், இன்னும் மில்லியன் கணக்கான வேலைகளும் அழிந்துள்ளன. இதன் பின்னர் இருந்து, ஸ்பெயினில் ஒரு மில்லியனுக்கும் அதிகமான வேலைகளும், பிரான்சில் 1.8 மில்லியன் வேலைகள், ஐரோப்பா எங்கிலும் இன்னும் அதிக மில்லியன் கணக்கான வேலைகளும் போய் விட்டன.

வங்கிகளுக்கு இலாபங்களை ஏற்படுத்துவதற்காக தொழிலாளர்களை வேலையில் வைத்திருக்குமாறு பெருநிறுவனங்களின் அழைப்புகளுக்கு விடையிறுப்பாக, அதன் மருத்துவ விடையிறுப்பை அடிபணிய செய்துள்ளதும் மற்றும் மருத்துவ அதிகாரிகளின் ஒருங்கிணைப்பைத் தடுத்துள்ளதுமான ஐரோப்பிய ஒன்றியத்தை நோக்கி தொழிலாளர்கள் மற்றும் தொழில்துறை வல்லுனர்களிடையே கோபம் அதிகரித்து வருகிறது. இந்த தொற்றுநோயை பரப்பிய அந்த கொள்கை பேரிடருக்கு இட்டுச் சென்றது. இத்தாலி மற்றும் ஐரோப்பா எங்கிலும் தொழிலாளர்களின் பாரிய வேலைநிறுத்தங்கள் மற்றும் வெளிநடப்புகளுக்குப் பின்னர் தான் அடைப்பதற்கான கொள்கைகள் ஏற்கப்பட்டன என்ற நிலையில், ஐரோப்பிய ஒன்றிய அரசாங்கங்கள், கடுமையாக பாதிக்கப்பட்ட இத்தாலிக்கு முக்கிய மருந்து பொருட்கள் மீதான ஏற்றுமதிகளைத் தடுப்பதற்கான பேர்லின் மற்றும் பாரீசின் முடிவால் எடுத்துக்காட்டப்பட்டதைப் போல அண்டை நாட்டை யாசிக்க விட்டு தன்னைக் காப்பாற்றிக் கொள்ளும் கொள்கைகளைப் பின்பற்றின.

ஐரோப்பாவின் முன்னணி விஞ்ஞான அமைப்பின் தலைவரும் ஐரோப்பிய ஆய்வு கவுன்சிலின் (ERC) தலைவருமான Mauro Ferrari, ஐரோப்பிய ஒன்றியம் இந்த தொற்றுநோயைக் கையாளும் விதத்தை எதிர்த்து செவ்வாய்கிழமை இராஜினாமா செய்தார்.

“COVID-19 க்கு ஐரோப்பிய விடையிறுப்பு மீது நான் முற்றிலும் ஏமாற்றமடைந்துள்ளேன்,” என்று Ferrari இலண்டன் பைனான்சியல் டைம்ஸிற்கு தெரிவித்தார். “நான் ஐரோப்பிய ஒன்றியத்திற்கு ஓர் ஆர்வமிகு ஆதாரவாளராக தான் ERC க்கு வந்தேன், ஆனால் இந்த COVID-19 நெருக்கடி முற்றிலுமாக என் கண்ணோட்டங்களை மாற்றிவிட்டது, இருந்தாலும் சர்வதேச ஒத்துழைப்புக்கான கருத்தியல்களை நான் தொடர்ந்து உற்சாகமாக ஆதரிப்பேன்,” என்றார். ஐரோப்பிய ஒன்றியத்தின் "உறுப்பு நாடுகளிடையே மருத்துவக் கவனிப்பு கொள்கைகளினது ஒருங்கிணைப்பு சிறிதும் இல்லாமல் இருப்பதையும், நிதியியல் ஒத்துழைப்பு நடவடிக்கைகளை இணக்கப்படுத்துவதைத் தொடர்ந்து எதிர்ப்பதையும், ஒருதலைபட்சமாக பரந்தளவில் எல்லைகளை மூடுவதையும்" Ferrari கண்டித்தார்.

இந்த மதிப்பீட்டை ஐரோப்பிய ஒன்றியத்தின் நெருக்கடிகால நிர்வாக ஆணையர் Janez Lenarčič உம் எதிரொலித்தார், இவர் இத்தாலியில் முதலில் அந்த நோய் வெடித்ததற்கு ஐரோப்பிய ஒன்றியம் காட்டிய உணர்ச்சியற்ற வெடிப்பை விமர்சித்தார்: “ஏனைய ஐரோப்பிய ஒன்றிய உறுப்பு நாடுகளிடம் இருந்து உதவி கோரிய இத்தாலிய கோரிக்கைக்கு அங்கே போதுமான விடையிறுப்பு இருக்கவில்லை,” என்றார்.

Lenarčič இன் விமர்சனத்திற்கு மத்தியில், இந்த தொற்றுநோயின் போது தொழிலாளர்கள் மற்றும் சிறுவணிகங்களுக்கு உதவுவதற்கும் மற்றும் இன்றியமையா மருத்துவக் கவனிப்புக்கும் நிதி வழங்க ஐரோப்பிய ஒன்றிய நிதியமைச்சர்களால் ஓர் ஒருங்கிணைந்த கொள்கையை உருவாக்க முடியவில்லை. வங்கி பிணையெடுப்புகளால் யாருக்கு ஆதாயம் என்பதன் மீதும், என்னென்ன சிக்கன நடவடிக்கைகளைத் திணிப்பதென யார் முடிவெடுப்பது என்பதன் மீதும் முன்னணி ஐரோப்பிய ஒன்றிய அதிகாரங்களுக்கு இடையே கடுமையான மோதல்களையே அந்த மாநாடு பகிர்ந்து கொண்டது.

அந்த மாநாட்டு திட்டநிரல் மீதான கருத்து வேறுபாடுகளுக்கு மத்தியில் அக்கூட்டம் 90 நிமிடங்கள் தாமதமாக மாலை 4:30 க்குத் தொடங்கியது. திட்டமிடப்பட்டிருந்த மாலை 8 மணி பத்திரிகையாளர் கூட்டத்தை இரத்து செய்த அமைச்சர்கள், அந்த இரவு முழுவதும் தொடர்ந்து வாதிட்டு கொண்டிருந்தனர். உடன்பாடு எட்டப்படாததால் மீண்டும் காலை 10 மணிக்குத் திட்டமிடப்பட்டிருந்த பத்திரிகையாளர் சந்திப்பும் இரத்து செய்யப்பட்டது. இறுதியில் ஐரோப்பிய குழுவின் தலைவரும் போர்ச்சுக்கல் நிதியமைச்சருமான மரியோன் சென்டினோ (Mario Centeno) அந்த கருத்தரங்கம் தோல்வி அடைந்ததாகவும், பேச்சுவார்த்தைகள் இன்று மீண்டும் தொடங்குமென்றும் அறிவித்தார்.

யதார்த்தத்தில், ஐரோப்பிய ஒன்றிய அதிகாரங்கள் முன்மொழிந்த தொகுப்பில் மருத்துவ நடவடிக்கைகளுக்கோ அல்லது (முகக்கவசங்கள், சுவாச கருவிகள் அல்லது முக்கிய மருந்துகள் ஆகிய) முக்கிய மருத்துவப் பொருட்களின் உற்பத்திக்கோ எந்த அவசர நிதி ஒதுக்கீடு இருக்கவில்லை. இத்தொற்றுநோய் காலத்தின் போது வேலையிழந்த தொழிலாளர்களுக்குச் சம்பளங்களைக் குறைத்து கொடுப்பதற்கான நிதிக்காக ஒதுக்கப்பட்டதாக கூறப்படும் தொகை வெறும் 100 பில்லியன் யூரோ மட்டுமே இந்த 540 பில்லியன் யூரோ தொகுப்பில் உள்ளடங்கும்; மீதி தொகை வங்கிகளுக்கும் பெருவணிகங்களுக்கும் மானியங்கள் வழங்குவதை உள்ளடக்கி உள்ளது.

ஐரோப்பிய ஸ்திரப்பாட்டு இயங்குமுறை (ESM) என்றழைக்கப்படுவதன் மூலமாக ஐரோப்பிய ஒன்றியத்தால் வெளியிலிருந்து கட்டளையிடப்படும் வரவு-செலவு திட்டக்கணக்கு வெட்டுக்களுக்கும் மற்றும் சிக்கன நடவடிக்கைகளுக்கும் ஐரோப்பிய ஒன்றிய உதவி பெறும் இத்தாலி போன்ற நாடுகள் உடன்பட வேண்டுமென்ற டச் அரசாங்கத்தின் கோரிக்கைகள் மீது, இதை ஓரளவுக்கு பேர்லின் ஆதரித்த நிலையில், அதன் மீதே இந்த பேச்சுவார்த்தைகள் தோல்வியடைந்ததாக தெரிகிறது. 2008 வோல் ஸ்ட்ரீட் பொறிவைத் தொடர்ந்து வந்த யூரோ நெருக்கடியின் போது கிரீஸை ஐரோப்பிய ஒன்றியம் கொள்ளையடித்த அதே மாதிரியிலான ஓர் உடன்படிக்கைக்கு உடன்பட இத்தாலிய அதிகாரிகள் மறுத்துவிட்டனர்.

இந்த பேச்சுவார்த்தைகள் மீது ஓர் உத்தியோகபூர்வ அறிக்கையை அளிக்க, பிரெஞ்சு நிதியமைச்சர் புரூனோ லு மேர் உடன் நெருக்கமாக செயல்பட்டு கொண்டிருந்த ஜேர்மன் நிதியமைச்சர் ஓலஃப் ஸ்கோல்ஜ் வசம் ஒப்படைக்கப்பட்டது. நேற்று காலை ஒரு பத்திரிகை அறிக்கையில், ஸ்கோல்ஜ் வாதிடுகையில், ESM ஐ பயன்படுத்துவது "பத்தாண்டுகளுக்கு முன்னர் இருந்ததைப் போல, எதிர்கால திட்டங்களை அபிவிருத்தி செய்வதிலும் நாடுகளின் விடயத்திலும் நுழையும் முக்கூட்டுடன் தொடர்புபட்டதல்ல" என்றார்.

இதுவொரு அப்பட்டமான பொய். ஏற்கனவே ஸ்கோல்ஜ் அவரின் மேற்படி கருத்துக்களில், அதிக மூர்க்கமான சிக்கன நடவடிக்கைகள் மூலமாக ஐரோப்பிய தொழிலாள வர்க்கத்திடம் இருந்து பில்லியன்களை பிழிந்தெடுக்க வேண்டும் என்பதில் எந்த சந்தேகத்திற்கும் இடம் வைக்கவில்லை.

“எதிர்காலத்திற்கான மிகவும் தெளிவான வேலைத்திட்டங்களை உருவாக்குவது சாத்தியமானதே என்பதை ஏற்கனவே நாம் ஜேர்மனியில் எடுத்த முடிவுகளில் நீங்கள் பார்க்கலாம்,” என்று விவரித்த ஸ்கோல்ஜ் தொடர்ந்து கூறுகையில், “சான்றாக, 2023 இல் இருந்து 2043 வரைக்குமான எங்கள் சொந்த அரசியலமைப்பில் நாங்கள் நிலைநிறுத்திய விதிமுறைகளின்படி, நாங்கள் பெற்றுள்ள கூடுதல் கடனைத் திரும்ப செலுத்துவதற்கு நாங்கள் முடிவெடுத்தோம். அதை எங்களால் செய்ய முடியும், அவ்விதத்தில் தான் ஏனைய விடயங்களிலும் அது செயல்படும்,” என்றார்.

இதுபோன்ற அறிக்கைகள் ஜேர்மனி மற்றும் ஐரோப்பா எங்கிலுமான தொழிலாளர்களுக்கு ஓர் எச்சரிக்கையாக எடுத்துக் கொள்ளப்பட வேண்டும். ஐரோப்பிய முதலாளித்துவ வர்க்கம் ஐரோப்பா எங்கிலுமான ஒரு சமூக பேரழிவை உண்டாக்கிய சிக்கன நடவடிக்கைகளைத் தொடர்ந்து பேணுவதை மட்டும் வலியுறுத்தவில்லை, மாறாக ஒரு வரலாற்று பொருளாதார பொறிவுக்கு மத்தியில் அதை தீவிரப்படுத்தவும் வலியுறுத்துகிறது. 2009 இல் ஜேர்மனியின் அரசியலமைப்பில் எழுதப்பட்ட கடன் நிறுத்தம் மீதான ஸ்கோல்ஜின் குறிப்பு அதை தெளிவுபடுத்துகிறது. கடந்த தசாப்தத்தில் முன்னாள் நிதியமைச்சர் வொல்ஃப் சொய்பிள வரைந்த “கருப்பு பூஜ்ஜிய” சமநிலைப்பட்ட வரவு-செலவு திட்டக்கணக்கு கொள்கை என்றழைக்கப்படும் ஒன்று, தொழிலாள வர்க்கத்தின் மீது பாரியளவில் தாக்குதல்களை நடத்த சேவையாற்றியது.

ஏற்கனவே ஏறத்தாழ எல்லா ஐரோப்பிய அரசாங்கங்களின் ஆதரவை அவர் பெற்றுவிட்டதாக ஸ்கோல்ஜ் பெருமைப்பீற்றும் ஐரோப்பிய ஒன்றியத்தின் வர்க்க தன்மையைக் குறித்து அது பக்கம் பக்கமாக பேசுகிறது. “ஜேர்மன் அரசாங்கத்தைப் போலவே, நாங்கள் எமது பிரெஞ்சு நண்பர்களுடன் மட்டுமல்ல, மாறாக, சான்றாக, போர்ச்சுக்கல் மற்றும் ஸ்பெயின் மற்றும் இது குறித்து பேசியுள்ள ஏனையவர்களுடனும் நல்லிணக்கத்துடன் உள்ளோம் என்பது எங்களுக்குத் தெரியும்,” என்று ஸ்கோல்ஸ் வாதிட்டார்.

உண்மையில் மிகவும் ஆழமான மருத்துவ மற்றும் பொருளாதார நெருக்கடியின் ஒரு நூற்றாண்டு ஐரோப்பிய ஒன்றியத்தின் அடித்தளத்தையே அசைத்துக் கொண்டிருக்கிறது, அது வரலாற்றுரீதியில் வேரூன்றிய கையாள முடியாத ஐரோப்பிய முதலாளித்துவ முரண்பாடுகளை அம்பலப்படுத்தி கொண்டிருக்கிறது. இத்தாலிய நகரசபை தலைவர்களின் ஒரு குழு, இத்தாலிய கடன்களுக்கு உதவியைக் கோரியும் இரண்டாம் உலக போருக்குப் பின்னர் 1953 இலண்டன் மாநாட்டில் ஜேர்மனியின் நாஜி போர் கடன்களை மேற்கு ஐரோப்பா விட்டுக்கொடுத்ததைக் கையிலெடுத்தும், ஜேர்மனியின் வலதுசாரி பத்திரிகை Frankfurter Allgemeine Zeitung இல் முழுபக்க விளம்பரம் ஒன்றை வெளியிட்டனர்.

அதேநேரத்தில் நிதியியல் உயரடுக்கின் மூலோபாயவாதிகள், ஒரு தசாப்த காலமாக பெரும் செல்வந்தர்களுக்கு வங்கி பிணையெடுப்புகள் வழங்கி பெரியளவில் கடன்பட்டுள்ள ஐரோப்பிய ஒன்றிய நாடுகளில், நிதியியல் பிரபுத்துவம் பீதியுற்றுள்ள வேலைநிறுத்தங்கள் மற்றும் போராட்டங்களின் மேலெழுச்சிக்கு மத்தியில் அரசு திவால்நிலையைக் குறித்து விவாதிக்கத் தொடங்கி உள்ளன. இத்தாலியில் அரசு கடன்சுமை மொத்த உள்நாட்டு உற்பத்தியில் 150 சதவீதத்திற்கு அதிகமாக உள்ளது, பிரான்சில் இது மொத்த உள்நாட்டு உற்பத்தியில் 100 சதவீதத்தில் உள்ளது.

“உயர்ரக கொரொனா பத்திரங்களை" (SCB) வெளியிடுவதன் மூலமாக இறையாண்மை கடன்கள் மீது ஐரோப்பிய நாடுகள் திவாலாவதற்குத் தயாரிப்பு செய்து கொள்ளுமாறு முன்மொழிந்து Le Monde ஒரு கட்டுரை வெளியிட்டது. அரசாங்கம் "திவாலானால், அது முதலில் SCB வைத்திருப்பவர்களுக்குத் தொகைகளை வழங்கும்" என்பதை அறிந்து முதலீட்டாளர்கள் SCB பத்திரங்களை வாங்கக்கூடும் என்று Le Monde எழுதியது. அதன் பின்னர் இந்த திவாலான அரசுகள், கூலிகள் மீதும், சமூக செலவினங்கள், மருத்துவ முறைகள் மற்றும் பொதுக் கல்வி மீதும் கடுமையான தாக்குதல்களை ஒழுங்கமைக்க வேண்டுமென கடன் வழங்கியவர்கள் கோர முயல்வார்கள்.

ஐரோப்பிய ஒன்றிய உறுப்பு நாடுகள் தனித்தனியாக நடைமுறைப்படுத்திய தேசிய பிணையெடுப்புகளை போலவே ஐரோப்பிய ஒன்றிய பிணையெடுப்புகளும் பிற்போக்குத்தனமானவையே, அவையும் நிராகரிக்கப்பட வேண்டும். இந்த தொற்றுநோயை நிறுத்துவதற்கு அவசியமான ஆனால் ஐரோப்பிய முதலாளித்துவ வர்க்கத்தால் எதிர்க்கப்படும் பரந்த நடவடிக்கைகளுக்கு, அதாவது உழைப்பு சக்திக்குச் சம்பளங்கள், வேலைகள் மற்றும் ஓய்வூதியங்கள் வழங்கவும் மற்றும் சிறுவணிகர்களின் வாழ்வாதாரத்திற்கு உதவுவதற்கும்; இந்நோய்க்குச் சிகிச்சை வழங்க அவசியமான மருத்துவமனைகள், சுவாசக் கருவிகள், மருந்துகள் மற்றும் பாதுகாப்பு சாதனங்களை உருவாக்கவும்; ஒரு தடுப்பூசியைக் கண்டறிந்து வினியோகிப்பதற்கான நிதி ஒதுக்கீட்டிற்கும் ட்ரில்லியன் கணக்கான யூரோக்கள் செலவாகும். உயிர்களைக் காப்பாற்ற அவசியமான பணத்தைப் பெறுவது என்பது ஐரோப்பாவின் நிதியியல் பிரபுத்துவம் கொள்ளையடித்து வைத்துள்ள பல பில்லியன் யூரோ சொத்துவளங்களைத் திரும்ப பறிமுதல் செய்வது என்பதை அர்த்தப்படுத்துகிறது.

பெரும் செல்வந்தர்களிடம் இருந்து செல்வவளத்தைப் பறிமுதல் செய்யக்கூடிய சமூக சக்தி ஐரோப்பிய தொழிலாள வர்க்கமாகும், இது முதலாளித்து ஐரோப்பிய ஒன்றியத்தைக் கீழிறக்கி அதை ஐக்கிய ஐரோப்பிய சோசலிச அரசுகளைக் கொண்டு பிரதியீடு செய்ய சோசலிசத்திற்கான ஒரு பொதுவான சர்வதேச போராட்டத்தில் அணித்திரட்டப்பட வேண்டும்.