கொரோனா வைரஸ் தொற்றுநோய் மீது சமூகப் போராட்டங்கள் பெருகும்போது

பேர்னி சாண்டர்ஸ் பிரச்சாரத்தை முடித்து, பைடனை ஆதரிக்க ஆதரவாளர்களை அழைக்கிறார்

Joseph Kishore—Socialist Equality Party candidate for US president
11 April 2020

மொழிபெயர்ப்பின் மூலக் கட்டுரையை இங்கே காணலாம்

வேர்மொன்ட் செனட்டர் பேர்னி சாண்டர்ஸ் ஜனநாயகக் கட்சியின் ஜனாதிபதி வேட்பாளர் பதவித்தேர்விற்கான தனது பிரச்சாரத்தை புதன்கிழமை முடித்து, முன்னாள் துணை ஜனாதிபதி ஜோ பைடனுக்கு ஆதரவளிக்க தனது ஆதரவாளர்களுக்கு அழைப்புவிட்டார்.

ட்விட்டரில் வெளியிடப்பட்ட பதினைந்து நிமிட ஒளிப்பதிவில் "எங்கள் முற்போக்கான கருத்துக்களை முன்னோக்கி கொண்டுசெல்வதற்காக நான் அவருடன் சேர்ந்து பணியாற்றுவேன் மற்றும் மிகவும் ஒழுக்கமான மனிதரான ஜோ பைடனை இன்று நான் வாழ்த்துகிறேன்" என்று சாண்டர்ஸ் கூறினார். ஜனநாயகக் கட்சி மாநாட்டில் பைடென் வேட்பாளராக தேர்ந்தெடுக்கப்பட்டபோது, சாண்டர்ஸ் மேலும் "பின்னர் ஒன்றாக, ஒற்றுமையாக நின்று, டொனால்ட் ட்ரம்பை தோற்கடிக்க நாங்கள் முன்னோக்கி செல்வோம்" என்றார்.

தனது போட்டியை கைவிடுவதற்கான முடிவை விளக்கும்போது, சாண்டர்ஸ் முன்தேர்தலில் வெற்றிக்கான பாதையை காணவில்லை என்று கூறினார். எவ்வாறாயினும், சாண்டர்ஸின் உந்துதல், தேர்தல் அர்த்தத்தில் அவரது பிரச்சாரம் நம்பிக்கையற்றது அல்ல. மாறாக, அமெரிக்காவின் வெடிக்கும் சமூக மற்றும் அரசியல் நிலைமைக்கு அவர் தனது பிரதிபலிப்பை காட்டுகின்றார்”.

தென்கரோலினாமுன்தேர்தல்விவாதத்தின்போதுவெர்மொன்ட்செனட்டர்பேர்னிசான்டர்சும்ஜோபைடனும்(AP Photo/Patrick Semansky)

ஜனநாயகக் கட்சியும் மற்றும் முழு அரசியல் அமைப்பும் அரசியல் நெருக்கடி ஒரு முறிவடையும் நிலையை அடைந்துள்ள நிலைமைகளின் கீழ் சாண்டர்ஸ் தனது போட்டியை கைவிட்டு பைடெனின் பின்னால் "ஒற்றுமைக்கு" அழைப்பு விடுக்கிறார்.

கொரோனா வைரஸ் தொற்றுநோய் தொழிலாள வர்க்கத்தினதும் ஆளும் வர்க்கத்தினதும் நலன்களுக்கு இடையிலான சமரசப்படுத்தமுடியாத மோதலை அம்பலப்படுத்துகிறது. இறப்பு எண்ணிக்கை அதிகரிக்கும் போது, மருத்துவமனைகள் நிரம்பியுள்ள நிலைமையிலும் மற்றும் பல்லாயிரக்கணக்கானோர் வேலையிலிருந்து வெளியேற்றப்பட்டுபோது ஆளும்வர்க்கம் நெருக்கடி சூழ்நிலையைப் பயன்படுத்தி பெருநிறுவன மற்றும் நிதிய உயரடுக்கிற்கு பாரிய நிதியளிப்பை செயல்படுத்துகிறது. இதனை ஜனநாயகக் கட்சியினரும் குடியரசுக் கட்சியினரும் ஒருமனதாக ஆதரிக்கின்றனர். மேலும், அரசியல் ஸ்தாபனம் மற்றும் ஊடகங்களிலிருந்து விரைவாக பணிக்கு திரும்புவதற்காக அதிகரித்துவரும் அழைப்புக்களுக்கு மத்தியில் அது பாரிய எதிர்ப்பை சந்திக்கின்றது.

ஏற்கனவே, ஆளும் வர்க்கத்தின் விரைவாக வேலைக்கு திரும்புமாறு விடுத்த கோரிக்கை, நாடு முழுவதும் வேலைநிறுத்த அலைகளை ஊக்குவித்துள்ளது. இதில் சுகாதாரப் பணியாளர்கள், கட்டுமானத் தொழிலாளர்கள் மற்றும் Whole Foods, Amazon மற்றும் Amazon ஊழியர்கள் ஈடுபட்டுள்ளனர்.

இந்த நிலைமைகளின் கீழ், சாண்டர்ஸின் போட்டியிலிருந்து விலகுவது என்ற முடிவு, அவரது பிரச்சாரத்தின் மைய நோக்கமாக எப்போதும் இருந்ததைக் கருத்தில் கொண்டுள்ளது: அதாவது சமூக மற்றும் அரசியல் கோபம் ஜனநாயகக் கட்சியின் கட்டுப்பாட்டிலிருந்து மீறிப்போகாதிருப்பதை உறுதிப்படுத்துவதாகும்.

குறிப்பிடத்தக்க வகையில், சாண்டர்ஸின் அறிவிப்பு வந்த அதேநாளில் விரைவாக பணிக்கு திரும்புவதற்கான வலுவான ஊடகக் குரல்களில் ஒன்றான நியூ யோர்க் டைம்ஸ் கட்டுரையாளர் தோமஸ் ஃப்ரீட்மன், பைடனின் நியமனத்திற்கும் மற்றும் "ஒரு தேசிய ஐக்கியத்திற்கான முற்றிலும் மாறுபட்ட அமைச்சரவை தேர்வு செய்ய வேண்டும்" என்று அழைப்பு விடுத்தார். அதில் ஜனநாயகக் கட்சியின் இடதான பேர்ணி சாண்டர்ஸில் இருந்து குடியரசுக் கட்சியினரின் வலதுசாரியான மிட் ரோம்னி வரை உள்ளடக்கவேண்டும்” என்றார். அத்தகைய ஒரு அரசாங்கமானது தொழிலாள வர்க்கத்தின் அதிகரிக்கும் சமூக எதிர்ப்பிற்கு எதிரான ஒரு தடுப்பரணாக அரசியல் ஸ்தாபனத்தின் மேலாதிக்கம் செலுத்தும் பிரிவுகளை ஒன்றிணைப்பதை நோக்கமாகக் கொண்டது.

கடந்த வாரம் முன்னாள் ஜனாதிபதி பராக் ஒபாமாவுடன் சாண்டர்ஸ் பல சந்தர்ப்பங்களில் பேசியதாகவும் தகவல்கள் உள்ளன. சாண்டர்ஸ் அதிகாரபூர்வமாக வெளியேறியதால், பாதி முதுமையான பைடனை ஆதரிக்கும் முயற்சியில் ஒபாமா தேர்தல்களில் நேரடியாக தலையிட முடியும்.

அதே நேரத்தில், பைடன் பிரச்சாரத்தின் சாத்தியக்கூறு குறித்து ஆளும் வர்க்கத்திற்குள் பெரும் சந்தேகங்கள் இருப்பதை சாண்டர்ஸ் அறிந்திருக்க வேண்டும். இப்போது சாண்டர்ஸ் விலகியதன் ஒரு விளைவு என்னவென்றால், ஜனநாயகக் கட்சி மற்றொரு வலதுசாரி வேட்பாளரை நோக்கி திரும்புவதற்கான வழியைத் தெளிவுபடுத்துகிறது, ஒருவேளை நியூ யோர்க் ஆளுநர் ஆண்ட்ரூ கியூமோ, ஊடகங்களில் பரவலாக விளம்பரப்படுத்தப்படுகிறார்.

ஏற்கனவே கடந்த பல வாரங்களிலும் மற்றும் மாதங்களிலும், சாண்டர்ஸ் அரசு அமைப்பின் ஆழ்ந்த நெருக்கடிக்கு வலதுபுறம் திரும்புவதன் மூலம் பதிலளித்துள்ளார். பிப்ரவரி மற்றும் மார்ச் மாதங்களில் சாண்டர்ஸ் நியமனத்தைத் தடுக்க ஜனநாயகக் கட்சி தீவிரமாக நகர்ந்தபோது, சாண்டர்ஸ் ஈரான், வட கொரியா, ரஷ்யா மற்றும் சீனாவுக்கு எதிராகப் போரிடுவதற்கான தனது தயார்நிலையை அறிவித்து பல அறிக்கைகளை வெளியிட்டார்.

வேட்பாளராக அவரது கடைசி அரசியல் நடவடிக்கை கொரோனா வைரஸ் உதவி, நிவாரணம் மற்றும் பொருளாதார பாதுகாப்பு (CARES) சட்டத்திற்கு வாக்களிப்பதாகும். இச்சட்டம் நிறுவனங்களுக்கு நூற்றுக்கணக்கான பில்லியன்களை வழங்குவதுடன் மற்றும் வங்கிகள் மற்றும் வணிகங்களிலிருந்து சொத்துக்களை வாங்க பெடரல் ரிசர்வ் பல டிரில்லியன் செலவிலான திட்டங்களை வழங்குகிறது.

கொரோனா வைரஸ் தொற்றுநோய்க்கான காங்கிரஸின் மேலதிக நடவடிக்கைகளுக்கான தனது முன்மொழிவுகளில், சாண்டர்ஸ் செல்வந்தர்கள் மீதான வரிகளை அதிகரிப்பது குறித்த எந்தவொரு குறிப்பையும் தெரிவிக்கவில்லை. இலாபத்தின் அடிப்படையிலான தனியார் உடமையை எந்த வகையிலும் சவால் செய்யாமல், நிறுவனங்களுக்கு மேலும் பல பில்லியன் பிணை எடுப்புகளை அவர் முன்மொழிந்தார்.

சாண்டர்ஸ் செய்த எதிலும் ஆச்சரியப்படுவதற்கு ஒன்றுமில்லை. ஒரு முதலாளித்துவ அரசியல்வாதியாக அவரது முழு பதவிக்காலமும் அவர் வகிக்கக்கூடியகும் பங்கை தெளிவுபடுத்தியது. மேலும், அவரது பிரச்சாரம் ஒரு சர்வதேச நிகழ்வின் ஒரு பகுதியாகும். இது பிரிட்டனில் ஜெரெமி கோர்பின், கிரேக்கத்தில் சிரிசா, ஜேர்மனியில் இடது கட்சி, அல்லது பிரேசிலில் உள்ள தொழிலாளர் கட்சி ஆகிய அனைத்துமே இவ் ஒரேமாதிரியான செயல்பாட்டையே செய்துள்ளன.

உண்மையான துரோகம் ஒரு சந்தர்ப்பவாத முதலாளித்துவ அரசியல்வாதியை சோசலிசத்தை அடைவதற்கான ஏதோ ஒருவித வாகனமாக முன்வைக்க இயங்கிய அமெரிக்க ஜனநாயக சோசலிஸ்டுகள், சோசலிச மாற்றீடு மற்றும் அவை போன்ற ஏனைய அமைப்புக்களிடமிருந்து வந்தது.

நேற்றிரவு ஜாக்கோபின் தொகுத்து வழங்கிய ஒரு முற்றிலும் சீரழிந்த நிகழ்வில், பத்திரிகையின் ஆசிரியர் பாஷ்கர் சங்காரா மற்றும் அமெரிக்க ஜனநாயக சோசலிஸ்டுகளின் பிற முன்னணி உறுப்பினர்கள் சாண்டர்ஸை அல்ல, "குறுங்குழுவாத இடதுகளை" என்று கண்டனம் செய்தனர். அவ்வாறு அவர்கள் குறிப்பிட்டது சோசலிச சமத்துவக் கட்சி (சோ.ச.க) மற்றும் உலகசோசலிசவலைத் தளத்தைஆகும். இந்த பிரிவினரைப் பொறுத்தவரை, “குறுங்குழுவாதம்” என்பது அதாவது ஜனநாயகக் கட்சிக்கு முன் சிரம்பணிந்து கொள்ளாத அதாவது கொள்கைப்பிடிப்பான எவரையும் விவரிக்கப் பயன்படும் ஒரு சொல்லாகும்.

சாண்டர்ஸின் பின்வாங்கலானது "எமது பிரச்சாரம் முழு சோசலிசத்திற்காக இல்லாவிட்டாலும் ஆனால் அரை சமூக ஜனநாயகத்திற்கான வகைப்பட்டது என்பது இன்று முடிவிற்கு வந்துவிட்டது" என்பதையே அர்த்தப்படுத்துகின்றது என்று சங்காரா அறிவித்தார். ஜனநாயகக் கட்சியின் கட்டமைப்பிற்குள் எதையும் சாதிக்க முடியும் என்று கூறும் அமெரிக்க ஜனநாயக சோசலிஸ்டுகளின் போலி-சோசலிசத்தின் முத்திரைதான் உண்மையில் "முடிவிற்கு வந்தது".

உயர் நடுத்தர வர்க்கத்தின் இந்த அமைப்புகளுக்கு மாறாக, WSWS மற்றும் சோசலிச சமத்துவக் கட்சி சாண்டர்ஸ் பிரச்சாரத்தின் பாதையை முன்னரே எதிர்கூறியிருந்தன. பிப்ரவரி 2016 இல், தனது முதல் ஜனாதிபதி தேர்தலின் பிரசாரத்தின் ஆரம்பத்தில் WSWS பின்வருமாறு விளக்கியது: “சாண்டர்ஸ் ஒரு தொழிலாள வர்க்க இயக்கத்தின் பிரதிநிதி அல்ல. சமூக மற்றும் வர்க்க வேறுபாடு அடைதலின் ஆரம்ப கட்டங்களை மட்டுமே கடந்து செல்லும் பரந்த மக்கள் எதிர்ப்பின் எழுச்சியின் தற்காலிக பயனாளியாக அவர் இருக்கிறார்”.

கடந்த ஆண்டு பிப்ரவரியில் அவர் தனது 2020 ஜனாதிபதித் தேர்தல் பிரச்சாரத்தை அறிவித்தபோது, WSWS பின்வருமாறு எழுதியது, “அலெக்ஸாண்ட்ரியா ஒக்காசியோ-கோர்ட்டெஸ் போன்ற நபர்களுடன் சேர்ந்து சாண்டர்ஸ் ஊக்குவித்த அடிப்படை மோசடி என்னவென்றால், ஜனநாயகக் கட்சியை இடது பக்கம் தள்ளி முற்போக்கான மாற்றத்திற்காக ஒரு சக்தியை உருவாக்க முடியும் என்பதாகும்".

மீண்டுமொருமுறை, நடைமுறை நம்பிக்கைகள் மற்றும் சூழ்ச்சிகள் அல்ல மாறாக ட்ரொட்ஸ்கிச இயக்கத்தின் வரலாற்று அனுபவங்களின் அடிப்படையில் மார்க்சிசத்தை அடிப்படையாகக் கொண்ட ஒரு அரசியல் பகுப்பாய்வுதான் சரியானது என்பது நிரூபிக்கப்பட்டுள்ளது.

சாண்டர்ஸ் செய்த காரியத்தால் வெறுப்படைந்த பல நேர்மையான தொழிலாளர்கள் மற்றும் இளைஞர்கள் வெறுப்படைந்திருப்பார்கள் என்பதில் சந்தேகமில்லை. அவர்கள் அவசியமான முடிவுகளை எடுக்க வேண்டும்.

ஒரு உண்மையான சோசலிச இயக்கத்தை வளர்க்க முற்படும் ஒரே பிரச்சாரம் சோசலிச சமத்துவக் கட்சியின் பிரச்சாரம் மட்டுமே. சோ.ச.க. தனது தேர்தல் பிரச்சாரத்தை உண்மையான சோசலிசத்திற்காக போராடுவதற்கும், தொழிலாள வர்க்கத்திற்குள்ளும் இளைஞர்களிடையேயும் ஒரு சோசலிச தலைமையை வளர்ப்பதற்கும், போர், சமத்துவமின்மை மற்றும் சர்வாதிகாரத்திற்கு எதிராகவும், ஆளும் வர்க்கத்தின் கட்சிகளான ஜனநாயக மற்றும் குடியரசுக் கட்சிகளுக்கு எதிராக தொடங்கியுள்ளது.

இந்த பிரச்சாரத்தில் சேரவும், இந்த போராட்டத்தை ஆதரிக்கவும் அனைத்து தொழிலாளர்கள் மற்றும் இளைஞர்களை நாங்கள் அழைக்கிறோம்.

சோசலிச சமத்துவக் கட்சியின் தேர்தல் பிரச்சாரத்தை ஆதரிக்கவும் ஈடுபடவும், socialism2020.org ஐ பார்வையிடவும்.