ஐரோப்பாவில் கொரோனா வைரஸ் இறப்பு எண்ணிக்கை 100,000 இனை கடக்கிறது

Robert Stevens
24 April 2020

மொழிபெயர்ப்பின் மூலக் கட்டுரையை இங்கே காணலாம்

ஞாயிறன்று, ஒட்டுமொத்த ஐரோப்பாவின் கொரோனா வைரஸ் இறப்பு எண்ணிக்கை 100,000 ஐ கடந்தமை ஒரு கோரமான மைல்கல்லை எட்டியதைக் குறித்தது. மேலும் கூடுதலாக நேற்றைய இறப்பு எண்ணிக்கையான 3,287 ஐயும் சேர்த்து கண்டம் முழுவதிலுமான உத்தியோகபூர்வ இறப்பு எண்ணிக்கை 102,565 ஐ எட்டியது. அண்ணளவாக 1.1 மில்லியன் (1,088,651) கொரோனா வைரஸ் நோயாளிகள் இருப்பதாக அறிவிக்கப்பட்டுள்ளது- அதாவது, 102,000 அதிகரித்த இறப்பு எண்ணிக்கையையும் சேர்த்தால் இறப்பு விகிதம் அண்மித்து 10 சதவிகிதமாக இருப்பதைக் குறிக்கிறது.

பெருவணிக ஊடகங்கள் சில நாடுகளில் இறப்பு எண்ணிக்கை குறைந்து வருவதை சுட்டிக்காட்டியிருந்தாலும், இறப்பு எண்ணிக்கை கொடூரமாக அதிகரித்து வருகிறது என்பதே ஒட்டுமொத்த இலாப அமைப்பின் குற்றச்சாட்டாக உள்ளது. ஐரோப்பாவில் உள்ள ஜேர்மனி, பிரான்ஸ், ஸ்பெயின், இத்தாலி மற்றும் இங்கிலாந்து ஆகிய ஐந்து முக்கிய நாடுகளில் மட்டும் சுமார் 85,000 முதல் 100,000 க்கும் மேலான இறப்புக்கள் நிகழ்ந்துள்ளன.

ஸ்பெயினில், ஞாயிறன்று 565 இறப்புக்களும், மேலும் நேற்று 410 இறப்புக்களும் பதிவாகின. ஸ்பெயினின் இறப்பு எண்ணிக்கை 21,238 ஆக உள்ள நிலையில், இத்தாலி மற்றும் அமெரிக்காவையடுத்து 20,000 என்ற பயங்கரமான மைல்கல்லை எட்டிய மூன்றாவது நாடாக இது உள்ளது.

இத்தாலியில், சனிக்கிழமையன்று 482 பேரும் மற்றும் ஞாயிறன்று 433 பேரும் இறந்ததாக அறிவிக்கப்பட்டது. ஆக மொத்தம் இறப்பு எண்ணிக்கை அங்கு 23,660 ஆக உயர்ந்தது. இந்த வாரம், இத்தாலியின் முன்னணி தொழில்நுட்ப-விஞ்ஞான அமைப்பான Istituto Superiore di Sanita, குடியிருப்பு மருத்துவ மனைகளில் இறந்த 2,724 வயோதிக நோயாளிகளுக்கு கோவிட்-19 நோய்தொற்று ஏற்பட்டிருந்தது உறுதிசெய்யப்பட்டது என்பதாக ஒரு அறிக்கையை வெளியிட்டது. மேலும், வயோதிகர் பாதுகாப்பு இல்லங்களில் மருத்துவர்கள் பெரும்பாலும் வருகை தராத மற்றும் நிகழும் இறப்புக்கள் குறித்து நகராட்சி அதிகாரிகளுக்கு தெரிவிக்கப்படாத கோவிட்-19 இறப்புக்களின் துல்லியமான எண்ணிக்கை தெரியவில்லை.

பிரான்சில், சனிக்கிழமையன்று 642 இறப்புக்களும், ஞாயிறன்று 395 இறப்புக்களும் பதிவாகிய நிலையில், மொத்த இறப்பு எண்ணிக்கை அங்கு 19,718 ஐ எட்டியது.

ஜேர்மனியில், சனியன்று 186 இறப்புக்களும் மற்றும் ஞாயிறன்று 104 இறப்புக்களும் நிகழ்ந்துள்ளதாக அறிவிக்கப்பட்டது. ஜேர்மனி வைரஸை எதிர்த்து எவ்வாறு போராடுவது என்பதற்கான ஒரு மாதிரியாக பெருநிறுவன ஊடகங்களில் வழமையாக விவரிக்கப்படுகிறது. ஆனால் அங்கு இறப்பு எண்ணிக்கை ஐந்தாயிரத்தை (4,642) நெருங்குவது குறிப்பிடத்தக்கது. மேலும், பேர்லினில், 145,184 கோவிட்-19 நோயாளிகள் இருப்பதாகவும் பதிவாகியுள்ளது.

இங்கிலாந்து ஒரு சமூக பேரழிவில் மூழ்கிபோயுள்ளது, அதற்கு ஆளும் வர்க்கம் தான் முழு பொறுப்பாகும். வைரஸ் நோய்தொற்று பரவலைப் பொறுத்தவரை இத்தாலிக்கும் ஸ்பெயினுக்கும் கிட்டத்தட்ட நான்கு வாரங்கள் பிரிட்டன் பின்தங்கியுள்ளது, என்றாலும் ஐரோப்பாவில் நோய்தொற்றின் மையப்பகுதியாக அது இப்போது மாறியுள்ளது.

சனிக்கிழமை 888 இறப்புக்களும் மற்றும் ஞாயிறன்று 596 இறப்புக்களும் அறிவிக்கப்பட்டது உட்பட மொத்த இறப்பு எண்ணிக்கை 16,060 ஆக உயர்ந்தது. இதில் சுமார் 5,589 இறப்புக்கள் கடந்த வாரத்தில் மட்டும் நிகழ்ந்துள்ளன. இங்கிலாந்தில் (Daily Mail), வைரஸ் பரவலின் “முதல் அலை” அதன் உச்சத்தை எட்டியதாக குறிப்பிட்ட “நல்ல செய்திகளின் ஒளிர்வு” பற்றிய கூற்றுக்கள், சனிக்கிழமை மட்டும் 5,525 புதிய நோயாளிகள் கண்டறியப்பட்டமை இங்கிலாந்தில் நோய்தொற்று வெடிப்புக்குப் பின்னர் நிகழ்ந்த மூன்றாவது மிகப்பெரிய அதிகரிப்பால் விஞ்சப்பட்டது. ஞாயிற்றுக்கிழமை இன்னும் 5,850 புதிய நோயாளிகள் இருப்பதாக பதிவாகியது.

போரிஸ் ஜோன்சனின் கன்சர்வேடிவ் கட்சி அரசாங்கம், தான் அறிவிக்கும் அன்றாட இறப்பு எண்ணிக்கையுடன் பராமரிப்பு இல்லங்கள் அல்லது சொந்த வீடுகளில் இறந்தவர்களின் எண்ணிக்கையை சேர்த்து வெளியிட மறுத்துவிட்டது. அதாவது, பிரிட்டனில் உண்மையான இறப்பு எண்ணிக்கை உத்தியோகபூர்வ எண்ணிக்கையை காட்டிலும் இரு மடங்காக இருக்கலாம் என்று மதிப்பிடப்பட்டுள்ளது.

மேலும், டோரிக்கள் மறைந்துபோன சுகாதாரப் பணியாளர்களின் எண்ணிக்கையையும் மறைக்கிறார்கள். ஞாயிறன்று காலை வரை 86 பேர் ஏற்கனவே இறந்துவிட்டதாக Nursing Notes வலைத் தளம் தெரிவித்தது, இது முக்கியமாக தனிப்பட்ட பாதுகாப்பு உபகரணங்களின் (PPE) நீண்டகால பற்றாக்குறையினால் நிகழ்ந்துள்ளது. இந்த வார இறுதியில், NHS மருத்துவமனைகள் பாதுகாப்பு மேலாடைகள் இல்லாமலும், பிராணவாயு பற்றாக்குறையுடனும் இயங்குவதாக பலரும் எச்சரித்தனர்.

ஜோன்சன் அரசாங்கத்தின் “சமூக நோய்எதிர்ப்பு சக்தி” (“herd immunity”) என்ற பேரழிவுகர கொள்கையின் தாக்கம் பெரும் உயிரிழப்பை விளைவித்துக் கொண்டிருக்கிறது. Sunday Times செய்தியிதழின் நுண்ணறிவு குழு, ஒரு கட்டுக்கடங்காத பேரழிவு ஏற்படவுள்ளது என்று ஜனவரி மத்தியில் விஞ்ஞானிகள் எச்சரித்த போதிலும், மார்ச் 12 அன்று அரசாங்க தலைமை அறிவியல் ஆலோசகர் Sir Patrick Vallance ஆல் அதிகாரபூர்வ கொள்கையாக அறிவிக்கப்பட்ட அதன் “சமூக நோய்எதிர்ப்பு சக்தி” என்ற மூலோபாயத்தை கொண்டு அரசாங்கம் சமாளித்து வந்தது என்று தெரிவித்தது.

ஜனவரி 24 முதல் மார்ச் 2 வரையிலான ஐந்து வார காலத்தில் வைரஸை எதிர்த்து போராடுவதற்கான எந்தவித நடவடிக்கையையும் ஜோன்சனும் அவரது அரசாங்கமும் மேற்கொள்ளவில்லை. ஜனவரி 24 அன்று, அரசாங்கம் அவசரகால COBRA கூட்டத்தை நடத்தியது, ஆனால் Times அறிக்கையின் படி இது “கொரோனா வைரஸ் அச்சுறுத்தலை ஒதுக்கித் தள்ளுவதற்காக மட்டுமே… பின்னர், சுகாதாரச் செயலர் Matt Hancock கூட்டத்திற்கு தலைமை தாங்கிய பின்னர் Whitehall இற்கு வெளியே வந்து, இங்கிலாந்து மக்களுக்கு ஆபத்து ‘குறைவு’ தான் என்று சாதாரணமாக செய்தியாளர்களுக்கு தெரிவித்தார்”.

ஜோன்சன், தனது வருங்கால மனைவி Carrie Symonds உடன் டிசம்பர் 26 முதல் ஜனவரி 5 வரை கரீபியனில் உல்லாசப்படகிலும், மாளிகையிலும் (இந்த அவரது உல்லாசத்திற்கு மொபைல் ஃபோன் கோடீஸ்வரர் David Ross 15,000 பவுண்டுகளை செலுத்தியுள்ளார்) விடுமுறை நாட்களை கழித்து திரும்பிய பின்னரும் பெருகிவரும் கொரோனா வைரஸ் நோய்தொற்று பற்றி கொஞ்சமும் கவலைப்படாமல், கோவிட்-19 தொடர்பான ஜனவரி 24 COBRA கூட்டத்திலோ அல்லது அடுத்தடுத்த நான்கு COBRA கூட்டங்களிலோ அவர் கலந்துகொள்ளவில்லை.

பெப்ரவரி 3 அன்று, ஐரோப்பிய ஒன்றியத்திலிருந்து இங்கிலாந்து வெளியேறி நான்கு நாட்களுக்குப் பின்னர், இலண்டனில் ஜோன்சன் ஆற்றிய உரையில், "நாங்கள் சில வினோதமான சர்வாதிகார வார்த்தையாடல்களைக் கேட்கத் தொடங்குகிறோம். தடைகள் அகற்றப்படும் போதும் மற்றும் மருத்துவ ரீதியாக பகுத்தறிவுக்கு அப்பாற்பட்ட உண்மையான மற்றும் தேவையற்ற பொருளாதார சேதங்களைச் செய்யும் கொரோனா வைரஸ் போன்ற புதிய நோய்கள் ஒரு பீதியைத் தூண்டும் மற்றும் சந்தைப் பிரிவினைக்கான விருப்பத்தைத் தூண்டும் அபாயம் இருக்கும்போது, அந்த நேரத்தில் மனிதகுலத்திற்கு எங்காவது சில அரசாங்கம் தேவைப்படுகிறது. அவை பரிமாற்ற சுதந்திரத்திற்காக இவ்விடயத்தை சக்திவாய்ந்ததாக மாற்ற தயாராக உள்ளன. சில நாடு அதன் Clark Kent கண்ணாடியைக் கழற்றி தொலைபேசி சாவடிக்குள் குதித்து, உலகத்திலுள்ள மக்களின் உரிமைக்காகவும் மற்றும் ஒருவருக்கொருவர் சுதந்திரமாக வாங்கவும் விற்கவும் உள்ள மக்கள் உரிமையை பாதுகாப்பதற்கும் சக்திவாய்ந்த வீரர்களின் ஆடைகளை அணிந்துகொண்டு வெளிப்படுகின்றன".

ஜோன்சன் பின்னர் பெப்ரவரி மத்தியில் இருந்து “வேலையுடன்” கூடிய விடுப்பிற்காக மற்றொரு 12 நாட்கள் காணாமற்போனார். இந்த முறை அரசாங்கத்தின் விருப்பத்திற்குரிய 115 அறைகள் கொண்ட Chevening பிராந்திய ஓய்வுமனைக்கு Carrie Symonds உடன் சென்றார். மார்ச் 2 அன்று, COBRA கூட்டத்தில் ஜோன்சன் கடைசியாக கலந்து கொண்டமை, 10 நாட்களுக்குப் பின்னர் அறிவிக்கப்படவிருந்த சமூக நோய் எதிர்ப்பு சக்தி மூலோபாயம் தொடர்பாக வெறுமனே சமிக்ஞை செய்வதாகவே இருந்தது. அவரது “போர் திட்டம்”, அரசாங்கம் “வைரஸ் பரவுவதை கட்டுப்படுத்தும், மேலும் மெதுவாக்கி நோயின் தாக்கத்தை தணித்துவிடும்” என்று மக்களுக்கு அறிவிப்பதை உள்ளடக்கியிருந்தது.

மார்ச் 7 அன்று ஜோன்சனும் அவரது எதிர்கால மனைவியும் ஒருபக்கம் 81,520 பிற மக்கள் பங்கேற்புடன் Twickenham இல் இங்கிலாந்து மற்றும் வேல்ஸ் நாடுகளுக்கு இடையே நடந்த ரக்பி விளையாட்டில் கலந்து கொண்டனர். மேலும் மூன்று நாட்களுக்குப் பின்னர், நான்கு நாட்கள் நடந்த 250,000 பேர் கலந்து கொண்ட Cheltenham குதிரை பந்தைய விழா தொடர்ந்து நடப்பதற்கு அரசாங்கம் அனுமதியளித்தது. இதில் கலந்து கொண்டதன் பின்னர் நோய்தொற்றுக்கு ஆளான ஏராளமானோர் உடனடியாக பதிவு செய்தனர்.

இறப்பு விகிதம் இவ்வளவு இருக்கும் என்று கருதப்பட்டது குறித்து Sunday Telegraph செய்தியிதழ் செய்தி வெளியிட்டது, அது “அதிகாரிகளுக்கு அனுமதியளிக்கப்பட்டுள்ள நோய் வெடிப்பை எதிர்கொள்வதற்கான தயார்நிலையை சோதிக்க 2016 இல் நடந்த அரசாங்கம் உள்ளடங்கலான இரகசிய பயிற்சியின் போது, கொடிய வைரஸ் “கட்டாயமாக” தேசிய சுகாதார சேவையை (NHS) முடக்கி, 750,000 பேர் வரை பலிகொண்டுவிடும் என்று பிரிட்டன் கருதியது” எனத் தெரிவித்தது.

2016 இல், அரசாங்கம், புதிய சுவாச பிரச்சினையுடன் கூடிய குளிர் காய்ச்சல் நோய்தொற்று பிரிட்டனில் ஏற்படுத்திய தாக்கம் குறித்து அதன் Exercise Cygnus நடத்தியது. இந்த பயிற்சி, தேசிய சுகாதார சேவை விரைந்து சீர்குலையும் என்பது இலட்சக்கணக்கான உயிரிழப்புக்கு இட்டுச்செல்லும் எனத் தெரிவித்தது.

Telegraph பத்திரிகை, “Cygnus ஐ வரையறுப்பதில் ஈடுப்பட்ட மூத்த Whitehall அதிகாரி ஒருவர்,” “ஒரு நோய் ஏராளமானோரை கொன்று குவிக்கும் என்ற கருத்தின் அடிப்படையில் ஒவ்வொன்றையும் நாங்கள் திட்டமிட்டோம்…. என்றாலும் முதலில் அதை எப்படி நாம் தடுக்க முடியும் என்பது பற்றி ஆராய நாம் நிறைய காலத்தை செலவழிக்காமல் விட்டுவிட்டோம். மாறாக, ஏற்கனவே நோய் பரவியிருந்த நிலையில், சவக்கிடங்கையும் மற்றும் தீவிர சிகிச்சைப் பிரிவு படுக்கைகளையும் எவ்வாறு நாம் கட்டமைக்க முடியும் என்றே நாம் ஆராய்ந்தோம்” என்று கூறியதை மேற்கோளிட்டது.

Telegraph, Mail and Sun பத்திரிகைகளில் உள்ள டோரிக்களின் முக்கிய ஆதரவும் உட்பட, பிரிட்டிஷ் ஊடகங்களின் முக்கிய கருத்து, “பொருளாதாரத்தைப் பாதுகாக்க” வேலைக்கு திரும்ப முயற்சிக்குமாறு கோவிட்-19 இல் இருந்து கிட்டத்தட்ட உயிர்தப்பிப் பிழைத்து திரும்பிய ஜோன்சனை வலியுறுத்தியது. Sunday Mail “பிரிட்டனே எழு, மீண்டும் செயல்படு” என்று அதன் முதல் பக்கத்தில் தலைப்புச் செய்தி வெளியிட்டது. இது, மூத்த அரசியல் மற்றும் பெருவணிக பிரமுகர்களின் “மாபெரும் கூட்டணி” வணிகத்தின் “கதவுகளைத் திறக்கவும்” மற்றும் முழு ஊரடங்கை முடிவுக்குக் கொண்டுவர திட்டமிடவும் அரசாங்கத்திடம் கோரிக்கை விடுப்பதாகத் தெரிவித்தது. இவர்களுக்குள், “முன்னாள் அமைச்சரவை அமைச்சர்களான David Davis மற்றும் Iain Duncan Smith” ஆகியோர், நோய்தொற்று பிரச்சினையில் இருந்து வெளியேறுவதற்கான ஒரு தெளிவான மூலோபாய பற்றாக்குறை இங்கிலாந்து பொருளாதாரத்தை நீண்டகாலம் சேதப்படுத்தி அழிக்கும் என்று எச்சரிக்க தொழிற்கட்சித் தலைவர் Sir Keir Starmer மற்றும் நகர முதலாளிகளுடன் கூடிய கூட்டு சக்தியில் இணைந்தனர்.

இது தான் கண்ட அளவிலான அரசாங்கங்களின் திட்டநிரலாக உள்ளது.

இத்தாலியில், நோய்தொற்றின் முடிவிற்கு முன்பாக, அரசாங்கத்தின் “வேலைக்கு திரும்பும்” திட்டத்தை விரைவுபடுத்தும் முயற்சிகளின் ஒரு பாகமாக கொரோனா வைரஸ் தொற்று இருக்கும் மக்களைக் கண்டறிய மிலான் நகரத்திலுள்ள புதிய தொழில்நுட்ப நிறுவனத்தால் அபிவிருத்தி செய்யப்பட்ட Bending Spoons என்ற திறன்தொலைபேசி (Smartphone) செயலி ஒன்றை பயன்படுத்த அரசாங்கம் திட்டமிடுகிறது.

இந்த வார இறுதியில், ஸ்பானிய சோசலிசக் கட்சி பிரதமர் பெட்ரோ சான்செஸ், கடந்த வாரம் மில்லியன் கணக்கானவர்களை வேலைக்குத் திரும்பச் செய்த பின்னர், “மே மாதம் புதிய இயல்புநிலையை நோக்கிய முதல்படி நடவடிக்கைகளை நாம் மேற்கொள்ள ஆரம்பிப்போம்” என்று கூறினார்.

ஆசிரியர் பின்வரும் கட்டுரைகளையும் பரிந்துரைக்கிறார்:

British prime minister: A victim of his “herd immunity” policy
[8 April 2020]

Boris Johnson’s praise for the National Health Service: Hypocrisy without limit
[14 April 2020]

European states demand return to work as COVID-19 cases top 1 million
[17 April 2020]