மரணத்தின் வணிகர்கள்: அதிகரித்துவரும் COVID-19 எண்ணிக்கையின் மத்தியில் ஆயுதத்தொழிற்துறைக்கு பல பில்லியன் டாலர் பிணையைடுப்பு

24 April 2020

மொழிபெயர்ப்பின் மூலக் கட்டுரையை இங்கே காணலாம்

"எங்கள் கப்பல்களை கடலில் தொந்தரவு செய்தால் எந்தவொரு மற்றும் அனைத்து ஈரானிய துப்பாக்கிப் படகுகளையும் சுட்டு அழிக்குமாறு நான் அமெரிக்க கடற்படைக்கு அறிவுறுத்தியுள்ளேன்" என்று அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் புதன்கிழமை ட்வீட் செய்துள்ளார். இது மத்திய கிழக்கிலும் அதற்கு அப்பாலும் ஒரு அழிவுகரமான யுத்தத்தை தூண்டிவிடும் திடுக்கிடச்செய்யும் அபாயத்தை கொண்டுள்ளது.

கொரோனா வைரஸ் தொற்றுநோய்க்கு மத்தியில் அமெரிக்க கரையிலிருந்து 7,000 மைல் தொலைவில் ஒரு போரைத் தொடங்குவதற்கான அச்சுறுத்தல், அமெரிக்காவில் இறந்தவர்களின் எண்ணிக்கை விரைவாக 50,000 ஐ நெருங்குகையிலும், ட்ரம்ப்பின் திங்கள்கிழமை இரவு ட்வீடில் அமெரிக்காவில் வந்து அனைத்து குடியேற்றங்களையும் நிறுத்துவதாக அறிவித்துள்ளபோதும், தொற்றுநோய்களின் அழிவுகளுக்காகவும், பல்லாயிரக்கணக்கான தொழிலாளர்களின் பணிநீக்கங்களுக்காகவும் புலம்பெயர்ந்தோரை பலிகொடுப்பதற்கான வெளிப்படையான முயற்சி.

இந்த இரண்டு செயல்களிலும் அமெரிக்க ஆளும் வர்க்கத்திற்கு எந்தவொரு சாத்தியமான தீர்வும் இல்லாத ஒரு தேசிய மற்றும் உலகளாவிய நெருக்கடியை எதிர்கொள்வதில் உள்ள விரக்தியின் வெளிப்பாடு உள்ளது. இது மக்களின் பெரும்பான்மையானோரின் உயிர்வாழ்க்கையிலும் நலனிலும் அரசாங்கத்தினதும் மற்றும் ஆளும் தன்னலக்குழுவின் குற்றவியல் அலட்சியத்தின் மோசமான விளைவுகளுக்கான காரணத்தை மாற்றுவதற்கும், மக்களின் கவனத்தை திசை திருப்புவதற்குமான ஒரு முரட்டுத்தனமான முயற்சியாகும்.

B-52s lined up at Andersen Air Force Base

ட்ரம்பின் ட்வீட் குறித்து தங்களுக்கு எந்த முந்திய அறிவிப்பும் கிடைக்கவில்லை என்றும் பாரசீக வளைகுடாவில் ஈடுபடுவதற்கான விதிகளில் மாற்றத்திற்கான எந்தவொரு உத்தரவும் எதுவும் கிடைக்கவில்லை என பென்டகன் அதிகாரிகள் புதன்கிழமை தெரிவித்தனர்.

ஆயினும்கூட, ட்ரம்பின் மிருகத்தனமான மற்றும் பாசிச வார்த்தைப்பிரயோகம் அமெரிக்க ஏகாதிபத்தியத்தால் போருக்கான உந்துதலை பிரதிபலிக்கிறது. இது உலகளாவிய தொற்றுநோயால் மென்மையாக்கப்படவில்லை, மாறாக தீவிரப்படுத்தப்பட்டுள்ளது.

ட்ரம்ப் தனது ட்வீட்டை வெளியிட்டபோதும், அமெரிக்க போர்க்கப்பல்கள் தென் சீனக் கடலில் சீனாவுடன் மோதலை நோக்கி பயணித்தன. அதே நேரத்தில், பென்டகன் அதன் நீண்ட தூர, அணுசக்தி திறன் கொண்ட பி -52 குண்டுவீச்சு விமானங்களை பெய்ஜிங் உம் மற்றும் மாஸ்கோவும் முன்கூட்டி தங்கள் பிரசன்னத்தை தெரியாதிருப்பதற்காக நிலைகளை மாற்றியிருப்பதாக அறிவித்ததன் மூலம் பதட்டங்களைத் தூண்டியுள்ளது.

அண்மைய நாட்களில், கொரோனா வைரஸ் தொற்றுநோய் அதன் மக்களை அழிக்க அச்சுறுத்துகையில் வறிய ஆபிரிக்க நாடான சோமாலியாவிற்கு எதிராக அமெரிக்கா தனது வான்வழித் தாக்குதல்களை கடுமையாக அதிகரித்துள்ளது. வெனிசுவேலாவுக்கு எதிராக அதிகரித்துவரும் போர் அச்சுறுத்தல்கள் தொடர்கின்றன. மேலும் யேமன் மக்களுக்கு எதிரான சவுதி தலைமையிலான இனப்படுகொலை போருக்கு பென்டகன் தொடர்ந்து ஆதரவளித்து வருகிறது.

அமெரிக்க ஆயுதத் தொழிலுக்காக ஏற்பாடு செய்யப்பட்டுள்ள பாரிய அரசாங்க பிணையெடுப்பு விட இந்த போர் உந்துதல் வேறு எங்கும் நிர்வாணமாக தனது வெளிப்பாட்டைக் காணவில்லை. பல்லாயிரக்கணக்கான தொழிலாளர்கள் வேலையில்லாமலும், பலர் பட்டினியை எதிர்கொள்கையிலும் மற்றும் ட்ரம்ப் நிர்வாகத்தினதும் மற்றும் மாநில ஆளுநர்களினதும் முன்கூட்டியே பணிக்குத் திரும்புவதற்கான ஒரு உந்துதலுடன், இராணுவ ஒப்பந்தக்காரர்கள் தங்கள் உத்தரவாதமளிக்கப்பட்ட இலாபங்களையும் முக்கிய பங்குதாரர்கள் என்றவகையில் இழிவான முறையில் உருவாக்கப்பட்ட செல்வத்தையும் தக்க வைத்துக் கொள்ள பில்லியன் கணக்கான டாலர்கள் வழங்கப்படுகின்றது.

பென்டகனின் உயர்மட்ட ஆயுதங்கள் கொள்முதல் செய்பவர், பாதுகாப்பு துணை செயலாளர் Ellen Lord திங்களன்று ஒரு செய்தியாளர் கூட்டத்தில், சுமார் 3 பில்லியன் டாலர் ஆயுததயாரிப்பாளர்களுக்கு ஏற்கனவே உள்ள ஒப்பந்தங்களுக்கான ஆரம்பகால கொடுப்பனவுகளின் வடிவத்தில் வழங்கப்பட்டுள்ளது. கூடுதலாக காங்கிரஸால் அங்கீகரிக்கப்பட்ட CARES சட்டம் மூலம் பில்லியன்கள் மேலும் அங்கீகரிக்கப்பட்டுள்ளது. இச்சட்டமானது ட்ரில்லியன் கணக்கான டாலர்களை நிதிச் சந்தைகளில் செலுத்தியது. காங்கிரஸ் இன்னொரு பிணையெடுப்பு தொகுப்பை நிறைவேற்றியவுடன் இன்னும் பலவற்றைச் செய்யவிருப்பதாக அவர் சுட்டிக்காட்டினார்.

கொரோனா வைரஸ் தொற்றுநோயால் ஏற்படும் எந்தவொரு இழப்பிலிருந்தும் வாஷிங்டனின் மரண வணிகர்களை காப்பீடு செய்ய எவ்வளவு தேவை என்று ஒரு நிருபரிடம் கேட்டதற்கு, அவர் "நாங்கள் அதற்கு கொடுப்பதற்கு பில்லியன் கணக்கானவற்றை பற்றி பேசுகிறோம்." என பதிலளித்தார். இந்த உதவித் திட்டத்தின் முதல் முன்னுரிமை "அணுவாயுத முக்கோணத்தின் நவீனமயமாக்கல் செயல்முறைக்கே" என்று Lord மேலும் கூறினார்.

இந்தத் தொழிற்துறைகள் ஏழைகளுக்கு தகுதியான படம் அல்ல. உயிர்களைக் காப்பாற்றவும், மில்லியன் கணக்கான தொழிலாளர்களை வறுமையிலிருந்து மீட்பதற்கும் தீவிரமாக தேவைப்படும் பாரிய நிதி ஆதாரங்கள் அதற்கு பதிலாக அவர்களின் பைகளில் ஊற்றப்படுகின்றன என்பது ஒரு குற்றமாகும்.

முதல் காலாண்டு வருவாயைப் பற்றி Lockheed Martin பங்குதாரர்களுக்கு தெரிவிக்க இந்த வாரம் ஒரு தொலைபேசி மாநாட்டு அழைப்பில், நிறுவனத்தின் தலைமை நிர்வாக அதிகாரி Marilyn Hewson, நிறுவனத்தின் “வளங்கள் பரந்து மற்றும் விரிவடைகிறது” என்றும் அதன் “பண உருவாக்கம்” வலுவானது என்றும் பெருமையாகக் கூறினார். நிறுவனம் "எங்கள் போர்வீரர்களின் தேவைகளை ஆதரிப்பதை" எதிர்நோக்கியுள்ளதாக அவர் கூறினார்.

உண்மையில், Lockheed Martin ஒற்றை காலாண்டில் 2.3 பில்லியன் டாலர் பணத்தை ஈட்டியதுடன், கொரோனா வைரஸ் விளைவுகள் இருந்தபோதிலும் ஆண்டு முழுவதும் 7.6 பில்லியன் டாலரை எதிர்பார்க்கிறது. இது 144 பில்லியன் டாலர் நிலுவையிலுள்ள கேள்விப்பத்திரங்களைக் கொண்டுள்ளது, இது முன்னெப்போதையும் விட உயர்ந்தது.

நெருக்கடியின் மத்தியில் 1 பில்லியன் டாலர் பங்கு திரும்ப வாங்குவதை நிறைவு செய்வதில் அரசியல் வீழ்ச்சி குறித்து ஏதேனும் விருப்பம் உள்ளதா என்று கேட்டதற்கு, அவர் பதிலளித்தார், "அவர்களின் கோரிக்கைகளுக்கு மிகவும் குறிப்பிடத்தக்க தாக்கத்தை அனுபவித்தவர்களை விட நாங்கள் மிகவும் வித்தியாசமாக இருக்கிறோம் என நான் நினைக்கிறேன்." COVID-19 தொடர்பான நிவாரணம் மற்றும் உதவிக்காக மொத்தம் 10 மில்லியனை நிறுவனம் ஒதுக்கியுள்ளதாக Hewson அறிவித்தார்.

இந்த நிறுவனங்களின் "மிகவும் மாறுபட்ட" தன்மை New York Times இல் வெளியிடப்பட்ட ஒரு நிதி பத்தியில் அதன் ஆதரவான வாசகர்களின் நலனுக்காக "இராணுவ-தொழில்துறை வளாகத்தில் வாய்ப்பு" என்ற தலைப்பில் குறிப்பிடப்பட்டுள்ளது.

எதிர்வரவிருக்கும் ஆண்டிற்கான திட்டமிடப்பட்ட $741பில்லியன் பென்டகன் வரவு-செலவுத் திட்டத்தை சுட்டிக்காட்டி, Times ஆலோசனை கூறுகிறது: “மத்திய அரசின் டாலர்கள் மற்றும் நிறுவனங்களின் இலாபங்கள் ஆகியவற்றின் கலவையானது போரில் இருந்து இலாபம் பெறுவதை பற்றி அக்கறைகொள்ளாத முதலீட்டாளர்களுக்கு ஒரு வாய்ப்பைக் குறிக்கலாம். இராணுவ ஒப்பந்தக்காரர்கள் மற்றும் விண்வெளி நிறுவனங்களை வாங்கும் பரஸ்பர நிதி அல்லது பரிமாற்ற-வர்த்தக நிதி பற்றிய ஒரு நியாயமான பந்தயமானது கொரோனா வைரஸால் ஏற்பட்ட ஆழ்ந்த மந்தநிலையைத் தடுக்க உதவும்”.

சுருக்கமாக கூறினால், ஒருவர் வெகுஜன மரணத்தின் மத்தியில் இருந்து கணிசமான செல்வத்தை அறுவடை செய்யலாம். பாதுகாப்புத்துறையின் துணைச்செயலாளர் வெளிப்படுத்திய முக்கிய கவலைகளில் ஒன்று, ஆயுதத் தொழிலுக்கு பல பில்லியன் டாலர் பிணையெடுப்புக்கான திட்டங்களை அவர் விவரித்தபோது, குறிப்பாக மெக்சிக்கோ அமெரிக்க எல்லையில் உள்ள maquiladora குறைவூதிய தொழிற்சாலைகளில் தோன்றிய விநியோகச் சங்கிலிகளை சீர்குலைப்பதை பற்றியதாகும். இந்தியாவில் உள்ள பிரச்சினைகளையும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

வேலைக்குத் திரும்ப பிறப்பிக்கப்பட்ட உத்தரவால் கண்டம் முழுவதும் உள்ள தொழிலாளர்களுக்குத் தயாரிக்கப்பட்டுள்ள நிபந்தனைளுக்கு இந்த ஆலைகளுக்குள் இருக்கும் கொடிய நிலைமைகளுக்கு எதிராக ஆயிரக்கணக்கான மெக்சிகன் தொழிலாளர்கள் வேலைநிறுத்தம் செய்துள்ளதுடன், எதிர்ப்புத் தெரிவித்துள்ளனர். மிச்சிகனை தளமாகக் கொண்ட Lear கார்ப்பரேஷனுக்குச் சொந்தமான Ciudad Juárez உள்ள ஒரு ஆலையில், 16 தொழிலாளர்கள் COIVD-19 இனால் இறந்துள்ளனர். அதே நேரத்தில் அப்பகுதி மருத்துவமனைகள் வைரஸால் பாதிக்கப்பட்டவர்களால் நிரம்பி வழிகின்றன.

பென்டகனும் மற்றும் மெக்சிக்கோவுக்கான அமெரிக்க தூதர் Christopher Landau ஆகியோர் மெக்சிக்கன் அரசாங்கத்துடன் தலையிட்டு, அமெரிக்காவின் ஏகாதிபத்தியத்தின் போர் இயந்திரத்திற்கு "அத்தியாவசியமானவை" என்று maquiladora தொழிலாளர்கள் மீண்டும் ஆலைகளுக்குள் தள்ளப்பட வேண்டும் என்று கோரினர். அமெரிக்க இராணுவத்தின் Black Hawk மற்றும் S-92 ஹெலிகாப்டர்கள் மற்றும் F-16 போர் விமானங்களுக்கு மின்சார கம்பிகள் தயாரிக்க மெக்சிக்கோவின் Chihuahua இல் உள்ள குறைந்த ஊதியம் பெறும் மெக்சிக்கன் தொழிலாளர்களை Lockheed நம்பியுள்ளது. அதே நேரத்தில் Monterrey இலுள்ள PCC Aerostructures இனால் நடத்தப்படும் ஆலையில் இருந்து Boeing உதிரிப்பாகங்களைப் பெறுகிறது. General Electric, Honeywell மற்றும் ஏனைய இராணுவ குத்தகையாளர்கள் எல்லை கடந்த மெக்சிக்கோ தொழிலாளர்களிடமிருந்து இலாபமடைகின்றன.

ட்ரம்ப் நிர்வாகம் மற்றும் அமெரிக்க ஆளும் வர்க்கத்தின் அனைத்து கொள்கைகளையும் குணாதிசயப்படுத்தும் மனித வாழ்க்கையை அவமதிக்கும் மொழியில் பென்டகனின் கட்டளைகளை கொண்டுசெல்ல தூதர் Landau ஒரு ட்விட்டர் பிரச்சாரத்தைத் தொடங்கினார். மெக்சிகன் தொழிலாளர்கள் அமெரிக்க ஏகாதிபத்தியத்தின் நலன்களுக்காக maquiladoras இற்கு திரும்பிச் செல்ல வேண்டும் என்று கோரினார். மெக்சிக்கோவின் ஜனாதிபதி ஆண்ட்ரேஸ் மானுவல் லோபஸ் ஒப்ராடரின் முழு ஒத்துழைப்பையும் அவர் அனுபவித்து வருகிறார். வேலை நிறுத்தம் செய்பவர்களுக்கு எதிராக தேசிய பாதுகாவல்படையை ஈடுபடுத்திய இவரை போலி-இடதுகள் ஒரு "முற்போக்கானவர்" மற்றும் "சோசலிஸ்ட்" என்று ஊக்குவித்தனர்.

தொழிலாளர்களின் வேலைகள் அமெரிக்க ஆயுத உற்பத்தியாளர்களுடன் விநியோகச் சங்கிலிகளூடாக பிணைக்கப்பட்டுள்ளன என்று எச்சரித்த தூதர் Landau, “நாங்கள் எங்கள் பொறுப்பை ஒருங்கிணைக்கவில்லை என்றால், இந்த சங்கிலிகள் ஆவியாகிவிடும்” என்றார்.

அவர் மேலும் கூறுகையில், “எல்லா இடங்களிலும் அபாயங்கள் உள்ளன. ஆனால் நாங்கள் ஒரு கார் விபத்தில் சிக்கிவிடுவோம் என்ற பயத்தில் நாங்கள் அனைவரும் வீட்டில் தங்குவதில்லை. பொருளாதாரத்தின் அழிவும் ஒரு சுகாதாரத்திற்கான அச்சுறுத்தலாகும்” என்றார்.

பலர் நோய்வாய்ப்பட்டு இறப்பார்கள் என்ற உறுதியுடன் தொழிலாளர்களை தொழிற்சாலைகள் மற்றும் பணியிடங்களுக்குத் திரும்பிச் செல்லுமாறு கட்டாயப்படுத்தும் முயற்சியில் அமெரிக்காவிலும் சர்வதேச அளவிலும் முன்வைக்கப்பட்டுள்ள அதே பிற்போக்குத்தனமான, விஞ்ஞானபூர்வமற்ற மற்றும் தவறான வாதங்கள் இவைதான்.

அமெரிக்காவின் ஆயுதத் தொழிலில் உள்ள தொழிலாளர்களும், மெக்சிக்கோவில் உள்ள தங்கள் சகாக்களைப் போலவே, அமெரிக்க ஏகாதிபத்தியத்தின் "முக்கியமான உள்கட்டமைப்பின்" ஒரு பகுதியாக வேலை செய்ய நிர்பந்திக்கப்படுவதையும் எதிர்த்தனர். General Dynamics இனால் நடாத்தப்படும் Maine இல் உள்ள Bath Iron Works மற்றும் வேர்ஜீனியாவின் Norfolk இல் உள்ள BAE Systems கப்பல் கட்டுமிடத்தில் உள்ள தொழிலாளர்கள், முதலாளிகள் தொற்று மற்றும் இறப்புக்கு எதிராக அவர்களுக்கு பாதுகாப்பு வழங்கத் தவறியதைக் கண்டித்துள்ளனர். இதேபோல், அமெரிக்க மரைன்களுக்கு வானூர்தி இயந்திரங்களை உற்பத்தி செய்யும் மாசசூசெட்ஸின் Lynn இல் உள்ள GE Aviation ஆலையில் தொழிலாளர்கள் பாதுகாப்பு நடவடிக்கைகள் இல்லாததால் அல்லது COVID-19 க்கு பலியான தொழிலாளர்களுக்கு எந்த உத்தரவாதமும் இல்லை என்ற காரணத்தினால் ஆலை மறியலில் ஈடுபட்டனர்.

தேசிய எல்லைகளைத் தாண்டி தொழிலாள வர்க்கத்தின் இந்த எதிர்ப்பானது, அமெரிக்காவில் மட்டுமல்ல, ஐரோப்பாவிலும் சர்வதேச அளவிலும் கொரோனா வைரஸால் தூண்டப்பட்ட முதலாளித்துவ நெருக்கடியின் தீவிரத்திற்கு ஆளும் வர்க்கங்களின் பதிலை காட்டும் வெறித்தனமான தேசியவாதம் மற்றும் எதிர்வினையை நேரடியாக எதிர்க்கிறது. தங்கள் இலாப நலன்களைப் பாதுகாக்க, அவர்கள் உலகப் போர் மற்றும் பாசிச சர்வாதிகாரத்திற்குத் தயாராகும்போதும், மில்லியன் கணக்கானவர்களை நோய் மற்றும் மரணத்திற்கு உள்ளாக்குவார்கள். இதற்கு எதிராக சர்வதேச தொழிலாள வர்க்கத்திற்கு உள்ள ஒரேயொரு மாற்று இந்த இலாப நோக்கு அமைப்பு முறையை முடிவிற்கு கொண்டுவருவதும், சமுதாயத்தை சோசலிச அடித்தளத்தில் மீள்கட்டியமைப்பதுமாகும்.

Bill Van Auken