மே 11 ம் தேதி வேலைக்குத் திரும்புவதற்கு மக்ரோன் அரசாங்கம் அதிக பொய்களைப் பயன்படுத்துகிறது

By Will Morrow
27 April 2020

மொழிபெயர்ப்பின் மூலக் கட்டுரையை இங்கே காணலாம்

பிரெஞ்சு ஜனாதிபதி இமானுவல் மக்ரோனின் நிர்வாகம் மே 11 அன்று பொருளாதாரத்தை முழுவதுமாக மீண்டும் திறப்பதை தீவிரமாக ஊக்குவித்து வருகிறது, இது ஆயிரக்கணக்கான கூடுதல் கொரோனா வைரஸ் மரணங்களுக்கு நேரடியாக வழிவகுக்கும். வீட்டிலேயே இருக்கும் உத்தரவுகள் (தனிமைப்படுத்தல்) முடிவுக்கு வரும்பொழுது, தொழிலாள வர்க்கத்தின் பரவலான எதிர்ப்பை அடக்குவதற்கும், தொழிலாளர்களை மீண்டும் தங்கள் வேலைகளுக்குத் தள்ளுவதற்கும் அரசாங்கம் தொழிற்சங்கங்களை நம்பியுள்ளது.

அடுத்த வாரம் ஆரம்பத்தில், பெரும்பாலும் செவ்வாயன்று தனிமைப்படுத்தலை முடிவுக்கு கொண்டுவருவதற்கான தனது திட்டம் குறித்த கூடுதல் விவரங்களை வழங்குவதாக அரசாங்கம் அறிவித்துள்ளது. கடந்த வியாழக்கிழமை, நாடு முழுவதும் உள்ள உள்ளூர் தேர்ந்தெடுக்கப்பட்ட அதிகாரிகளுடனான அழைப்பில், மே 11 அன்று பள்ளிகளை மீண்டும் திறப்பது அனைவருக்கும் கட்டாயமாக இருக்காது, ஆனால் "தாமாக முன்வந்து பாடசாலையில் விடலாம்" பெற்றோர்கள் தங்கள் குழந்தைகளை வீட்டிலே வைத்திருக்க விரும்பினால் வைத்திருக்கலாம். என்று மக்ரோன் தெளிவுபடுத்தினார்.

இது, தங்கள் குழந்தைகளை பள்ளிக்குத் திருப்பி அனுப்புபவர்களை, மே 11 முதல் வீட்டிலிருந்து வேலை செய்யவோ, அல்லது வீட்டுக்கல்வி நடத்தவோ அல்லது தங்கள் குழந்தைகளை பராமரிக்கவோ முடியாதவர்களான முக்கியமாக தொழிலாள வர்க்கத்திலிருந்தும், மக்கள்தொகையின் ஏழ்மையான பிரிவுகளிலிருந்தும் வருவதை உறுதிசெய்கிறது. ஆயிரக்கணக்கான குடும்பங்கள் தங்கள் குழந்தைகளுக்கு உணவளிக்க பள்ளிச் சிற்றுண்டிச்சாலைகள் வழங்கும் 1 யூரோ மானிய மதிய உணவு திட்டங்களை நம்பியுள்ளன என்ற உண்மையை அரசாங்கம் பயன்படுத்துகிறது. சாப்பிடுவதற்காக அவர்களை மீண்டும் பள்ளிக்கு அனுப்புவதைத் தவிர அவர்களுக்கு வேறு வழியில்லை.

கடந்த ஒரு வாரமாக, பள்ளிகள் மீண்டும் திறக்கப்பட வேண்டும் என்று அரசாங்கம் தனது பிரச்சாரத்தை முடுக்கிவிட்டுள்ளது. மக்ரோனின் சுகாதார மந்திரி ஒலிவியே வெரோன் நேற்று பிரான்ஸ்இன்டர் இன் காலை நிகழ்ச்சியில் ஒரு நேர்காணலை வழங்கினார், இது 10 நிமிட நிகழ்வுக்கு அவர் குவித்த பொய்களின் எண்ணிக்கையில் மட்டுமே குறிப்பிடத்தக்கது.

வைரஸ் தாக்கியும் தொற்று அறிகுறி வெளிப்படாது தொற்றுநோய் காவிகளாக இருக்கும் குழந்தைகளின் பங்கு விஞ்ஞானிகளால் தீர்மானிக்கப்படவில்லை என்றாலும், வகுப்புகளை மீண்டும் திறப்பதன் சாத்தியமான தாக்கத்தை வெரோன் குறைத்து மதிப்பிட்டார். "குழந்தைகள் நோய் தொற்றும் தன்மை கொண்டவர்களா அல்லது நோய்பரப்புபவர்களா இல்லையா என்ற கேள்வி உள்ளது," என்று அவர் கூறினார். “இந்த கேள்வி பல வாரங்களாக அடிக்கடி கேட்கப்படுகிறது.

இங்கேயும் ஆதரவாகவும் எதிராகவும் வாதங்கள் உள்ளன (வலியுறுத்தல் சேர்க்கப்பட்டது). எனக்கு வந்த சமீபத்திய விஞ்ஞான வாதங்கள், 10 வயதிற்குட்பட்ட குழந்தைகள் பெரியவர்களை விட குறைந்த அளவில் வைரஸை பரப்புபவர்களாக இருக்கின்றனர் என்று கூறுகின்றன. ... அதனால்தான் நாங்கள் மிகவும் செயல்பாட்டுடன் கூடிய நடவடிக்கைகளுடன் செயல்பட்டு வருகிறோம், இது மாணவர்களுக்கு பாதுகாப்பான கற்பிப்பை வழங்க அனுமதிக்கும்".

அவர் குறிப்பிடும் நடவடிக்கைகளை தெளிவுபடுத்துமாறு பத்திரிகையாளர் அவரிடம் கேட்டபோது, வெரோன் மறுத்து, அதற்கு பதிலாக “குழந்தைகள் பள்ளிக்குத் திரும்ப வேண்டும். … ஒரு குறிப்பிட்ட கட்டத்தில், அவர்கள் படிப்படியாக பள்ளி அமைப்பிற்கு திரும்ப வேண்டும்”. நேர்காணலின் மற்றொரு கட்டத்தில், சமூக இடைவெளி நடவடிக்கைகளைக் கற்றுக்கொள்வதில் சிறு குழந்தைகள் சிறப்பாக செயல்படுகிறார்கள் என்று அவர் வாதிட்டார். எந்தவொரு சந்தர்ப்பத்திலும், பள்ளிகளை மீண்டும் திறப்பது "சமத்துவமின்மையை எதிர்த்துப் போராடுவதற்கு" அவசியமானது, "சிரமத்தில் உள்ள குழந்தைகள், வீட்டில் சிக்கலில் உள்ளவர்கள், வகுப்புகளுக்குத் திரும்புவதற்கான முதல் முன்னுரிமையுடன், நாங்கள் வழிவகைகளை வழங்க வேண்டும், மற்றும் ... குழந்தைகள் பள்ளிக்கு திரும்ப அனுமதிக்கும் நிலைமைகளை உருவாக்கவேண்டும்.”

ஒரு தடுப்பூசி உருவாக்காப்பட்டு நம்பகத்தன்மையுடன் வெகுஜனங்களின் பாவனைக்கு உற்பத்தி செய்யப்படுவதற்கு முன் பல மாதங்கள் எடுக்கலாம், "இதற்கிடையில், நாங்கள் வைரஸுடன் வாழ வேண்டியிருக்கும்" என்று வெரோன் கூறினார்.

வேறு வார்த்தைகளில் கூறுவதானால், வைரஸ் மற்றும் அதன் இறப்பு எண்ணிக்கை அன்றாட வாழ்க்கையின் ஒரு பகுதியாக கருதப்பட வேண்டும். தனிமைப்படுத்தலை (வீட்டிலேயே இருக்கும் உத்தரவுகளை) பராமரிப்பது “ஒரு சிக்கலான கேள்வி” என்று அவர் தொடர்ந்தார். "ஒரு தடுப்பூசி வரும் வரை, பாதி கிரகத்தை ஆறு மாதங்கள் அல்லது ஒரு வருடத்திற்கு நாங்கள் கட்டுப்படுத்த முடியாது; ஒரு தனிமைப்படுத்தல் வைரஸின் பரவலைத் தடுக்கக் கூடியது என்று எங்களுக்குத் உறுதியாக தெரியவில்லை என்பதால். … பிரான்சிற்கு ஒரு பெரிய நேர்மறையான சுகாதார தாக்கத்தை ஏற்படுத்துவதற்காக நாங்கள் என்ன செய்கிறோம் என்பதை ஒவ்வொரு அடியிலும் அளவிட நாங்கள் கடமைப்பட்டுள்ளோம், ஆனால் மற்றபக்கத்தில் அதிக தாக்கத்தை ஏற்படுத்தாமல்”.

இந்த வாரத்தில் பிரான்சில் ஒரு கணிதக் குழு வெளியிட்ட புதிய மாதிரியை ஏற்றுக்கொண்டதாகக் கூறிய அதே நேர்காணலில், நீண்டகால தனிமைப்படுத்தல் வைரஸின் பரவலை நிறுத்தவோ அல்லது கடுமையாகக் கட்டுப்படுத்தவோ இல்லை என்ற தனது சொந்த கூற்றுக்கு வெரோன் நேரடியாக முரண்பட்டார். தனிமைப்படுத்தல் (வீட்டிலேயே இருப்பது) காரணமாக நாட்டில் குறைந்தது 60,000 கூடுதல் உயிர்கள் காப்பாற்றப்பட்டுள்ளன என அது மதிப்பிடுகிறது.

எவ்வாறாயினும், ஒரு தனிமைப்படுத்தல் "மறுபக்கத்தில் அதிக தாக்கத்தை ஏற்படுத்தக்கூடும்" என்ற அவரது கருத்தின் அர்த்தமானது, எளிய மொழியில் குறிப்பிட்டால், பல்லாயிரக்கணக்கான உயிர்கள் காப்பாற்றப்பட்டாலும் கூட, பொருளாதாரத்தின் நீண்டகால பணிநிறுத்தம் காரணமாக பிரெஞ்சு பெரு நிறுவனங்களின் இலாபங்களுக்கு ஏற்படக்கூடிய சேதத்திற்கு எதிராக இவை எடைபோடப்பட வேண்டும்.

ஒரு தடுப்பூசி தயாரிக்கப்படும் வரை அத்தியாவசிய உற்பத்தியை நிறுத்த முடியாது என்ற வெரோனின் கூற்றைப் பொறுத்தவரை, இது வெறுமனே முதலாளித்துவ சொத்து மற்றும் நிதி உயரடுக்கின் சமூக வளங்களின் ஏகபோக உரிமை மீறப்படாமல் இருக்க வேண்டும் என்ற அடிப்படையில் அமைந்துள்ளது. ஃபோர்ப்ஸின் 2019 பணக்கார பட்டியலில் பிரான்சில் உள்ள 40 பணக்காரர்களின் செல்வம் மொத்தம் 288 பில்லியன் யூரோக்கள் ஆகும் - இது கடந்த மூன்று மாதங்களில் மக்ரோன் நிர்வாகத்தால் வரையறுக்கப்பட்ட வேலையின்மை கொடுப்பனவுகளுக்கு ஒதுக்கப்பட்ட தொகையை விட 10 மடங்கு அதிகமாகும்.

பிரான்சில் எத்தனைபேர் தொற்றுக்குள்ளாகியிருக்கின்றனர் என்பது குறித்து அரசாங்கத்திடம் தெளிவான கருத்தில்லை என்று வெரோன் ஒப்புக் கொண்டார், அதாவது தனிமைப்படுத்தலின் முடிவில் வைரஸ் எவ்வளவு விரைவாக பரவும் என்பது பற்றி தெளிவான கருத்தில்லை "எத்தனை பிரெஞ்சு மக்கள் பாதிக்கப்பட்டுள்ளனர் என்பது எனக்குத் தெரியாது," என்று அவர் கூறினார். "எங்களிடம் மாதிரிகள் உள்ளன, எங்களிடம் ஆய்வுகள் உள்ளன, ஆனால் கல்லில் பதிக்கப்படாத தரவுகளைப் பற்றி மிகவும் எச்சரிக்கையாக இருக்க இந்த வைரஸ் மூலம் நான் கற்றுக்கொண்டேன்."

மக்ரோன் நிர்வாகத்தின் குற்றவியல் கொள்கைகள் குறித்து தொழிலாள வர்க்கத்தில் கோபம் வளர்ந்து வருகிறது. பாரிஸுக்கு வடக்கு பகுதியான சென்-டெனிஸ் காவல்துறை தலைவரான Georges-François Leclerc, ஏப்ரல் 18 ஆம் தேதி எழுதிய கடிதத்தை வாராந்திர பத்திரிகையான Le Canard Enchaîné மேற்கோள் காட்டியது, தனிமைப்படுத்தல் அல்லது முடக்கம் செய்த காலம் முழுவதும் போதுமான ஆதரவினை வழங்க நிர்வாகம் மறுத்ததால் 15,000-20,000 தொழிலாளர்களால் சீரான முறையில் தங்களுக்கு உணவளிக்க முடியவில்லை, பள்ளித் திட்டங்களை நம்பியிருந்த குழந்தைகள் மற்றும் மாணவர்கள் மிகவும் ஆபத்தில் இருந்தனர் என சுட்டிக்காட்டியது. வெகுஜன கலவரங்கள் மற்றும் ஒரு சமூக வெடிப்பு பற்றி Leclerc எச்சரித்ததாகக் கூறப்படுகிறது: "ஒரு மாத தனிமைப்படுத்தலில் அடையக்கூடியதாக இருந்ததை, இருமாதத்திற்கு தாக்குப்பிடிக்க முடியாது."

பொலிஸ் வன்முறை மற்றும் சமூக சமத்துவமின்மைக்கு எதிராக கடந்த வாரம் பாரிஸ் மற்றும் பிற முக்கிய நகரங்களைச் சுற்றியுள்ள வறிய புறநகர் பகுதிகளில் ஏற்கனவே எதிர்ப்பும் அமைதியின்மையும் வெடித்திருந்தது.

தொழிலாள வர்க்கத்தின் எதிர்ப்பை அடக்குவதற்கும் தொழிலாளர்களை மீண்டும் வேலைக்குத் தள்ளுவதற்கும் தொழிற்சங்கங்களுடனான அதன் நெருக்கமான ஒத்துழைப்பையை மக்ரோன் நிர்வாகம் சார்ந்துள்ளது.

வேலைக்குத் திரும்புவது குறித்து வெற்று விமர்சனங்களை முன்வைக்கையில், CGT அதை நடைமுறையில் ஆதரிக்கிறது மற்றும் மக்ரோனுடன் நெருக்கமாக ஒத்துழைக்கிறது. நேற்று, CGT தலைவர் பிலிப் மார்டினேஸ் Sud தொழிற்சங்கரேடியோவுக்கு ஒரு நேர்காணலை வழங்கினார், அதில் வைரஸ் தொடர்ந்து பரவுவதால் ஆசிரியர்களுக்கு இது பாதுகாப்பற்றதாக இருக்கும் என்பதால் செப்டம்பர் வரை பள்ளிகள் திறக்கப்படமாட்டாது என்று தான் நம்புவதாக அறிவித்தார்.

எனவே பள்ளிகளைத் திறக்க மறுக்குமாறு ஆசிரியர்களை அழைப்பீர்களா என்று வானொலி தொகுப்பாளரான பேட்ரிக் ரோஜர் கேட்டதற்கு, மார்டினேஸ் கேலி செய்து பதிலளித்தார், “இல்லை, இல்லை, நான் இதை ஏற்கனவே தெளிவாக விளக்கியுள்ளேன் என்று நினைக்கிறேன்: வேலைசெய்யும் இடத்தில் பாதுகாப்பான நிலமைகள் இருக்குமானால் மக்களை வேலை செய்ய அழைக்கிறோம்”. Toyota வியாழக்கிழமை Onnaing இல் உள்ள தனது கார்களை பொருத்தும் பட்டறை ஒன்றை மீண்டும் திறந்து வைத்துள்ள நிலையில், CGT ஏற்கனவே கார் உற்பத்தி தொழிலாளர்கள் பணிக்கு திரும்புவதை மேற்பார்வையிடுகிறது.

மக்ரோனுடன் மேலும் ஒத்துழைக்க அழைப்பு விடுத்த மார்டினேஸ், “இந்த காலகட்டத்தில் நாங்கள் அரசாங்கத்துடன் இன்னும் கொஞ்சம் தொடர்பு கொண்டிருந்ததாலும், இந்த நெருக்கடிக்குப் பின்னர் அரசாங்கமும் ஜனாதிபதியும் எந்தவொரு சந்தர்ப்பத்திலும் தொழிற்சங்கங்கள் பயனுள்ளதாக இருக்கும் என்று கருதுவார்கள் என்று நம்புகிறேன்.. ”

வேலைக்கு திரும்புவதற்கு எதிரான போராட்டத்தை தொழிற்சங்கங்கள் மூலம் நடத்த முடியாது, அவை தொழிலாள வர்க்கத்திற்கு எதிராக அரசாங்கத்தினதும் முதலாளிகளினதும் கூட்டாளிகளாக இருக்கின்றன. வைரஸுக்கு எதிரான போராட்டத்தில் அவசியமில்லாத தொழில் துறைகளில் வேலைக்கு திரும்புவதற்கு எதிராக தொழில்துறை மற்றும் அரசியல் தாக்குதலை ஏற்பாடு செய்ய தொழிலாளர்களுக்கு அவர்களின் சொந்த அமைப்புகள், சுயாதீன நடவடிக்கைக் குழுக்கள் அவசியமானவையாகும். முதலாளித்துவ வர்க்கத்தின் சொத்துக்களை பறிமுதல் செய்தல் மற்றும் தொற்றுநோய்க்கு எதிரான போராட்டத்தில் சமூகத்தின் வளங்களை பகிர்ந்தளித்து, அனைத்து தொழிலாளர்களுக்கும் தரமான வாழ்க்கை நிலைமைகள் மற்றும் அத்தியாவசிய தொழில் துறைகளில் பாதுகாப்பான வேலை நிலைமைகளை உத்தரவாதம் செய்யவும், இது ஒரு தொழிலாளர் அரசாங்கத்திற்கான ஒரு சோசலிச வேலைத்திட்டத்துடன் இணைக்கப்பட வேண்டும்.