உலக உணவுத் திட்டம் எச்சரிக்கிறது: கோவிட்-19 நோய்தொற்று “விவிலியத்தில் குறிப்பிட்டுள்ள விகிதாசாரங்களின் பஞ்சத்தை” விளைவிக்கும்

By Jean Shaoul
27 April 2020

மொழிபெயர்ப்பின் மூலக் கட்டுரையை இங்கே காணலாம்

ஐக்கிய நாடுகளின் உலக உணவுத் திட்டம் (World Food Programme-WFP) செவ்வாயன்று, அவசர நடவடிக்கை மற்றும் நிதி ஒதுக்கீடு இல்லாமல், கோவிட்-19 நோய்தொற்றின் விளைவாக கோடிக்கணக்கானோர் பட்டினியை எதிர்கொள்ள நேரிடும் என்பதுடன், இலட்சக் கணக்கானோர் இறக்கக்கூடும் என்று எச்சரித்தது.

WFP இன் நிர்வாக இயக்குநரான David Beasley, வைரஸால் ஏற்பட்டுள்ள சுகாதார அச்சுறுத்தலுக்கு கூடுதலாக, உலகம் “ஒருசில மாதங்களுக்குள் விவிலியத்தில் குறிப்பிட்டுள்ள விகிதாச்சாரங்களின் பல்வேறு பஞ்சங்களை,” எதிர்கொள்ளும் என்றும், அது நாளொன்றுக்கு 300,000 இறப்புக்களை விளைவிக்கக்கூடிய “பட்டினி தொற்றுநோயாக” உருவெடுக்கும் என்றும் ஐ.நா. பாதுகாப்புக் குழுவிற்கு தெரிவித்தார்.

இந்த ஆண்டு நோய்தொற்று வெடிப்பிற்கு முன்னதாகவே பல காரணிகளால், உலகம் “இரண்டாம் உலகப் போருக்குப் பிந்தைய மிக மோசமான மனிதாபிமான நெருக்கடியை எதிர்கொண்டு” வந்தது என்று Beasley தெரிவித்தார். அவர், சிரியா மற்றும் யேமனில் நடந்த போர்களையும், தெற்கு சூடான் நெருக்கடியையும் மற்றும் கிழக்கு ஆபிரிக்கா முழுவதிலும் வெட்டுக்கிளி படையெடுப்புக்கள் ஏற்படுத்திய நெருக்கடியையும் மேற்கோள் காட்டினார். மேலும், கொரோனா வைரஸ் வெடிப்புடன் சேர்ந்து, மூன்று டசின் நாடுகளை பஞ்சமும் அச்சுறுத்துவதாக அவர் கூறினார்.

திங்களன்று வெளியிடப்பட்ட WFP இன் “உணவு நெருக்கடிகள் குறித்த 2020 உலக அறிக்கையின்” படி, உலகளவில் 135 மில்லியன் மக்கள் ஏற்கனவே பட்டினியின் அச்சுறுத்தலுக்கு ஆளாகியுள்ளனர். மேலும், வைரஸ் தொற்று பரவி வரும் நிலையில், “2020 இறுதிக்குள், மேலும் 130 மில்லியன் பேர் பட்டினியின் விளிம்பிற்கு தள்ளப்படலாம்” என்ற நிலையில், மொத்தம் 265 மில்லியன் பேர் பட்டினியை எதிர்கொள்வார்கள்” என்று Beasley கூறினார்.

Boxes of food are distributed by the Greater Pittsburgh Community Food Bank, at a drive thru distribution in downtown Pittsburgh, 10 April, 2020 [Credit: AP Photo/Gene J. Puskar]

2019 ஆம் ஆண்டில் ஆபிரிக்கா (“நெருக்கடி அல்லது மோசமான நிலைமையினால்” 73 மில்லியன் பேர்) மற்றும் மத்திய கிழக்கு மற்றும் ஆசியா (43 மில்லியன் பேர்) ஆகிய பகுதிகள் அதிகளவாக பாதிக்கப்பட்டிருந்தன. அதற்கு வறுமையின் கொடுமை மட்டும் காரணமல்ல, மாறாக, மோதல்கள், இயற்கை பேரழிவுகளின் தாக்கங்கள், பொருளாதார நெருக்கடிகள் மற்றும் காலநிலை மாற்றம், அத்துடன் கிழக்கு ஆபிரிக்காவில் பல தசாப்தங்களாக 70 மில்லியன் பேரை ஆபத்திற்குட்படுத்தியுள்ள மோசமான வெட்டுக்கிளி படையெடுப்புக்களால் ஏற்பட்டுள்ள நெருக்கடி போன்ற பல நெருக்கடிகளால் அப்பகுதிகள் பாதிக்கப்பட்டிருந்தன.

உலகில் அதிக எண்ணிக்கையாக ஏற்கனவே 821 மில்லியன் உணவு-பாதுகாப்பற்ற மக்கள் உள்ளனர் என்று Beasley சுட்டிக்காட்டினார். இந்நிலையில், “நாம் நம்மை தயார்படுத்திக் கொள்ளாமலும், அணுகுமுறை பாதுகாப்புக்கான நடவடிக்கையை இப்போது எடுக்காமலும், நிதி பற்றாக்குறைகளையும் மற்றும் வணிகத்திற்கான இடையூறுகளையும் நிராகரித்து வருவோமானால்,” அது “மனிதாபிமான பேரழிவை” விளைவிக்கக்கூடும் என்று அவர் எச்சரித்தார்.

யேமன் (“நெருக்கடி மற்றும் மோசமான நிலைமையினால்” 15.9 மில்லியன் பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்), காங்கோ ஜனநாயக குடியரசு (15.6 மில்லியன் பேர்), ஆப்கானிஸ்தான் (11.3 மில்லியன் பேர்), வெனிசுவேலா (9.3 மில்லியன் பேர்), எத்தியோப்பியா (8 மில்லியன் பேர்), தெற்கு சூடான் (7 மில்லியன் பேர்), சிரியா (6.6 மில்லியன் பேர்), சூடான் (5.9 மில்லியன் பேர்) வடகிழக்கு நைஜீரியா (5 மில்லியன் பேர்) மற்றும் ஹைட்டி (3.7 மில்லியன் பேர்) ஆகிய 10 நாடுகள் மிக மோசமாக பாதிக்கப்பட்டுள்ளன. இந்த நாடுகள் அனைத்தும் ஒரு நூற்றாண்டுக்கும் மேலாகவும், மேலும் தற்போது வரையிலும் தொடர்வதான ஏகாதிபத்திய ஒடுக்குமுறை மற்றும் சுரண்டலுக்கு பலியாகின்றன. மேலும், இவை அனைத்தும் இல்லாவிடினும், பெரும்பாலான நாடுகள், அமெரிக்கத் தலைமையிலான இராணுவத் தலையீடுகள், பொருளாதாரத் தடைகள் அல்லது பேரழிவுகர சமூக விளைவுகளை ஏற்படுத்திய அரசியல் கபடத்தனத்தால் தொடர்ந்து பாதிக்கப்படுகின்றன.

அறிக்கையின் மையமாக இருக்கும் உணவு-நெருக்கடி உள்ள 55 நாடுகளில், தள்ளாடும் நிலையில் இருக்கும் 75 மில்லியன் குழந்தைகள் வளர்ச்சி குன்றியவர்களாக இருக்கின்றனர் என்பதுடன், 17 மில்லியன் பேர் சோர்வடைந்தும் பலவீனத்தால் பாதிக்கப்பட்டுள்ளனர். மேலும், “பல பெண்கள் மற்றும் குழந்தைகள் உட்பட, மோதல்களால் பாதிக்கப்பட்ட நாடுகளில் வாழும் மில்லியன் கணக்கான பொதுமக்கள், பஞ்சத்தின் அச்சுறுத்தலை எதிர்கொள்ளக்கூடிய மிக உண்மையான மற்றும் ஆபத்தான சாத்தியத்துடன், பட்டினியின் விளிம்பிற்குத் தள்ளப்பட்டு வருகின்றனர்” என்று Beasley கூறினார்.

மத்திய ஆபிரிக்க குடியரசு, சாட், நைஜீரியா, மற்றும் தெற்கு சூடான், அத்துடன் லெபனான் மற்றும் உகாண்டா போன்ற ஏராளமான அகதிகள் உருவாகும் நாடுகளும் உட்பட, மோதல்களால் பாதிக்கப்பட்டுள்ள ஆபிரிக்க நாடுகள் குறிப்பாக அபாயத்தில் உள்ளன.

பல ஆண்டுகளாக போர்களை எதிர்கொண்டு வரும் யேமன் மற்றும் தெற்கு சூடான் நாடுகளின் பாதிக்கும் மேற்பட்ட மக்கள்தொகையினர், தங்கள் பகுதிகளில் வைரஸ் தொற்று பரவுவதற்கு முன்பாகவே கடும் உணவு பற்றாக்குறையை ஏற்கனவே எதிர்கொண்டனர். குறைந்தது 14 மில்லியன் யேமனியர்கள் பஞ்சத்தின் விளிம்பில் உள்ளனர், அதேவேளை நாட்டின் 24 மில்லியன் பேரில் 80 சதவிகிதத்தினர் உணவு உதவியை நம்பியுள்ளனர்.

சவூதி தலைமையிலான மற்றும் அமெரிக்க ஆதரவிலான போர் ஆரம்பித்ததிலிருந்து ஐந்து வயதிற்குட்பட்ட குறைந்தது 75,000 யேமன் குழந்தைகள் பட்டினியால் இறந்தனர் என்று Save the Children அமைப்பு மதிப்பிட்டுள்ளது. மேலும் மோதலால் அண்ணளவாக 3.6 மில்லியன் பேர் இடம்பெயர்ந்துள்ளனர்.

தெற்கு சூடானில், ஐந்து மில்லியனுக்கும் மேலானோர் பட்டினிக்கு முகம் கொடுப்பதுடன், உயிர்வாழ்வதற்கு உணவு உதவியை நம்பி இருக்கின்றனர், மேலும் 1.7 மில்லியன் பெண்கள் மற்றும் குழந்தைகள் மிகுந்த ஊட்டச்சத்து குறைபாடுள்ளவர்களாக உள்ளனர்.

உலகின் ஏழ்மையான நாடுகளில் 30 க்கும் மேற்பட்ட நாடுகள் பரவலான பஞ்சத்தை அனுபவிக்கக்கூடும் என்பதுடன், இவற்றில் 10 நாடுகளில், ஏற்கனவே ஒரு மில்லியனுக்கும் மேற்பட்ட மக்கள் பட்டினியின் விளிம்பில் உள்ளனர்.

எளிதில் சீர்குலைந்து போகக்கூடிய சுகாதாரப் பாதுகாப்பு அமைப்புக்கள் மற்றும் நெரிசலான மற்றும் சுகாதாரமற்ற வாழ்க்கை நிலைமைகளைக் கொண்ட ஏழ்மையான நாடுகளில் ஊரடங்கு நடவடிக்கைகள் என்பது, ஏற்கனவே அற்பமான வாழ்வாதாரத்தைக் கொண்டுள்ள மில்லியன் கணக்கான தொழிலாளர்களை இழந்து கொண்டிருப்பது பொருளாதார மற்றும் மனிதாபிமான பேரழிவுக்கு இட்டுச்செல்கின்ற நிலையில், கொரோனா வைரஸ் பரவுவதை தடுப்பதற்கு அது போதுமானதாக இருக்காது. அத்தியாவசிய வேலை மற்றும் பயணம் தவிர கிட்டத்தட்ட அனைத்திற்கும் விதிக்கப்பட்டுள்ள பூகோள அளவிலான தடைகள், பண்ணைத் தொழிலாளர்களை பாதிப்புக்குட்படுத்துவதுடன், விநியோகச் சங்கிலிகளையும் சீர்குலைக்கின்றன.

ஏற்கனவே மிகுந்த உணவு பாதுகாப்பின்மையை எதிர்கொண்டுள்ள ஆப்பிரிக்கா மற்றும் பிற குறைந்த வருமானம் கொண்ட நாடுகளிலுள்ள மில்லியன் கணக்கான விவசாயிகள், தங்களது நிலத்தில் வேலை செய்து உணவு உற்பத்தி செய்ய முடியாத ஆபத்து உள்ளது. ஆபிரிக்காவில் பசியால் வாடும் 257 மில்லியன் பேரில் பெரும்பாலானவர்கள் கிராமப்புறங்களில் வசிக்கின்றனர்.

மேற்கு ஆபிரிக்காவில் பரவிய Ebola தொற்றுநோய் இப்போதுள்ள ஆபத்தின் கொடூரத்திற்கு தெளிவான எடுத்துக்காட்டை வழங்குகிறது. சிறு விவசாயிகளால் தங்கள் நிலத்தில் வேலை செய்யவோ, தங்களது உற்பத்திப் பொருட்களை விற்கவோ அல்லது விதைகள் மற்றும் பிற அத்தியாவசிய பொருட்களை வாங்கவோ முடியவில்லை என்ற நிலையில், விவசாய நிலத்தில் 40 சதவிகிதத்திற்கும் மேலான பகுதி சாகுபடி செய்யப்படாமல் விடப்பட்டுள்ளது.

மேலும், போக்குவரத்து மற்றும் சுற்றுலாத் துறைகளின் சீர்குலைவால், எடுத்துக்காட்டாக, உயிர்வாழ்வதற்கு சுற்றுலா பயணிகளையும் மலையேறுபவர்களையும் கிட்டத்தட்ட முற்றிலும் சார்ந்திருக்கும் மொரோக்காவில் உள்ள அட்லஸ் மலைகளில் உள்ள கிராமங்கள் உட்பட, பல ஏழ்மையான நாடுகள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளன என்று WFP குறிப்பிட்டுள்ளது. மற்ற நாடுகள் பணத்தை பெறுவதில் பேரழிவுகர வீழ்ச்சியை (உலக வங்கியின் கூற்றுப்படி, 20 சதவிகிதம் வரை) காணும் என்ற நிலையில், புலம்பெயர்ந்த தொழிலாளர்கள் விடுப்பில் அனுப்பப்படுகிறார்கள் அல்லது பணிநீக்கம் செய்யப்படுகிறார்கள்.

சில சமயங்களில் வெளியிலிருந்து வரும் பணம் மொத்த உள்நாட்டு உற்பத்தியில் 30 சதவிகிதத்திற்கும் மேலாக இருக்கும் என்று கணக்கிடப்படுகையில், மோதல்களால் சின்னாபின்னமாகிப் போன சோமாலியா, ஹைட்டி மற்றும் தெற்கு சூடான், மற்றும் டோன்கா போன்ற சிறிய தீவு நாடுகளை பாதிக்கும் என்பதுடன், இந்தியா, பாகிஸ்தான், எகிப்து, நைஜீரியா மற்றும் பிலிப்பைன்ஸ் போன்ற பெரிய நாடுகளில் வெளியிலிருந்து வரும் பணம் என்பது வெளிநாட்டு நிதியுதவியைப் பெறுவதற்கான முக்கிய ஆதாரமாக மாறிபோயுள்ள நிலையில், அவற்றையும் இது பாதிக்கும். மேலும், துணை-சஹாரா ஆப்பிரிக்காவுக்கான நிதி உட்பாய்ச்சல்கள் 23 சதவிகிதம் குறையும் என்றும் கணிக்கப்பட்டுள்ளது.

நகரங்களின் முகாம்களிலும் குடியேற்றப் பகுதிகளிலும் வசிக்கும் அகதிகள் மற்றும் இடம்பெயர்ந்த மக்கள், அத்துடன் முதியவர்கள், இளம் குழந்தைகள், கர்ப்பிணி மற்றும் பாலூட்டும் பெண்கள், மற்றும் ஊனமுற்றவர்கள் ஆகியோர் குறிப்பாக ஆபத்தில் உள்ளனர்.

ஏற்கனவே தமது வாழ்க்கை நூலிழையில் தொங்கிக்கொண்டிருக்கும் நிலையிலுள்ளவர்களுக்கு, நோய்தொற்று ஏற்படுத்தும் பொருளாதார தாக்கம் அவர்களை வாழ்வின் விளிம்பிற்குத் தள்ளும். பல துணை-சஹாரா ஆப்பிரிக்க நாடுகளில் ஏற்கனவே உணவு பதுக்கல் மற்றும் விலை உயர்வு பற்றிய அறிக்கைகள் வெளியாகியுள்ள நிலையில், உணவு உற்பத்தி பற்றாக்குறையாகவும் மற்றும் அதிக தேவையுள்ளவர்களுக்கு கட்டுப்படியாகாததாகவும் உள்ளது. உணவு பற்றாக்குறையினால் ஏற்பட்ட கோபம் கடந்த இரண்டு வாரங்களில் தென்னாபிரிக்கா முழுவதிலும் வன்முறைமிக்க போராட்டங்களைத் தூண்டியுள்ளது. அதே நேரத்தில் லெபனானிலும் போராட்டங்கள் ஆரம்பித்துள்ளன.

வடகிழக்கு நைஜீரியாவில், கிட்டத்தட்ட மூன்று மில்லியன் மக்கள் ஏற்கனவே பட்டினியை எதிர்கொள்கின்றனர், மேலும் போகோ ஹராம் (Boko Haram) கிளர்ச்சியின் காரணமாக ஐந்து வயதிற்குட்பட்ட 440,000 குழந்தைகள் கடுமையான ஊட்டச்சத்து குறைபாட்டால் பாதிக்கப்பட்டுள்ளனர். இந்தியா, பங்களாதேஷ் மற்றும் மியான்மரில் ஏற்கனவே பசியின் ஆபத்து உள்ளது. அதேவேளை பிலிப்பைன்ஸில் பொலிசார் துப்பாக்கி முனையில் ஊரடங்குகளைச் செயல்படுத்தி வரும் நிலையில், அமைதியின்மை அதிகரிப்பதால் அங்கு இராணுவத்தை கொண்டு ஊரடங்கை செயல்படுத்த அரசாங்கம் தயாராகிக் கொண்டிருக்கின்றது.

இந்த உலகளாவிய பேரழிவை எதிர்கொள்கையில், ஏற்கனவே உறுதியளிக்கப்பட்ட ஆனால் வழங்கப்படாத 2 பில்லியன் டாலர் நிதியுதவியை வழங்குவதற்கு முன்வருமாறு ஐ.நா. பாதுகாப்புக் குழுவை Beasley வலியுறுத்தினார். மேலும், உணவு மற்றும் தனிப்பட்ட பாதுகாப்பு உபகரணம் உட்பட, மருத்துவப் பொருட்களை தேவைப்படும் பகுதிகளுக்கு விநியோகிப்பதற்கு வெறும் விநியோக கட்டமைப்பை உருவாக்குவதற்கு மட்டும் மற்றொரு 350 மில்லியன் டாலர் தேவைப்படுவதாகவும் அவர் எச்சரித்தார்.

இந்த பரிதாபகரமான வேண்டுகோள் செவிடன் காதில் ஊதப்பபட்ட சங்கு போன்றதாகவே இருக்கும். அமெரிக்கா, ஐரோப்பா மற்றும் பிற ஏகாதிபத்திய சக்திகளின் டிரில்லியன்களின் ஒரு சிறு பகுதியாக உள்ள இந்த தொகைகள், வரிசெலுத்தும் பெருநிறுவனங்களும் நிதி நிறுவனங்களும் செல்வத்தில் மிதப்பதற்கு பாய்ச்சப்படுகின்றன. மேலும், ஒடுக்கப்பட்ட நாடுகளுக்காக பிரதான சக்திகள் ஒதுக்கக்கூடிய தமது நிதியை, அத்தகைய நாடுகளின் இயற்கை வளங்களை கொள்ளையடிக்கும் வகையில் காலனித்துவ வகையிலான தலையீடுகளை மேற்கொள்ள தங்களது இராணுவப் படைகளை வலுப்படுத்துவதற்கும், தொழிலாளர்கள் மற்றும் ஏழை விவசாயிகளிடையே அதிகரித்து வரும் சமூக அதிருப்தியை கண்காணித்து ஒடுக்குவதற்கும் மட்டும் செலவழிப்பார்கள்.

உலகின் ஏழ்மையான நாடுகளில் மில்லியன் கணக்கான உயிர்களை பாதுகாக்க வேண்டியிருப்பதால், உலகின் அனைத்து பகுதிகளிலும் உள்ள தொழிலாளர்கள் முதலாளித்துவத்தை முடிவுக்குக் கொண்டு வருவதற்கான போராட்டத்தை மேற்கொள்ள வேண்டும் என்பதோடு, தேவைக்கேற்ப திட்டமிடப்பட்ட உற்பத்தியின் அடிப்படையில் பூகோளரீதியான சோசலிச அமைப்பை ஸ்தாபிக்கவும் முன்வர வேண்டும். ஏகாதிபத்திய மையங்களிலுள்ள ஆளும் வர்க்கங்களுக்கும் மற்றும் ஒடுக்கப்பட்ட நாடுகளிலுள்ள அவர்களின் உள்ளூர் முகவர்களுக்கும் எதிராக இயங்கும் தொழிலாள வர்க்கத்தின் ஒரு சோசலிச அரசியல் இயக்கம் அபிவிருத்தி காண்பது மட்டுமே உலகின் மிகவும் பாதிக்கப்படக்கூடிய மக்களை நோய்தொற்றின் கொடூரமான தாக்கத்திலிருந்து பாதுகாக்கக்கூடிய ஒரே வழியாகும்.