கோவிட்-19 க்கு எதிரான போராட்டம் ஆதாரவளங்களுக்காக வறண்டு கிடக்கையில், ஆயுதங்களுக்கான உலகளாவிய செலவுகள் 1.9 ட்ரில்லியன் டாலருக்கு உயர்கிறது

By Bill Van Auken
1 May 2020

மொழிபெயர்ப்பின் மூலக் கட்டுரையை இங்கே காணலாம்

உலகெங்கிலும் 3 மில்லியனுக்கும் அதிகமாக உறுதி செய்யப்பட்ட கொரொனா வைரஸ் நோயாளிகள் மற்றும் சுமார் 220,000 உயிரிழப்புகள் என இத்தகைய பயங்கர எண்ணிக்கைக்கு மத்தியில், விஞ்ஞானபூர்வமாக நிச்சயமாக இவ்விரு எண்ணிக்கையையும் விட இந்த உயிராபத்தான வைரஸின் நிஜமான எண்ணிக்கை மொத்தத்தில் குறைமதிப்பீடு செய்யப்படுகின்றன என்ற நிலையில், இவ்வாரம் வெளியான ஒரு செய்தி சர்ச்சைக்கிடமின்றி மற்றொரு புள்ளிவிபரங்களின் தொகுப்பை வழங்கியது.

சமாதானத்திற்கான ஸ்டாக்ஹோம் சர்வதேச சமாதான ஆராய்ச்சி அமைப்பு (SIPRI) வெளியிட்ட வருடாந்தர அறிக்கையின் தகவல்படி, உலகளாவிய இராணுவ செலவுகள் 2019 இல் 1.9 ட்ரில்லியன் டாலருக்கு அதிகரித்து, பனிப்போருக்குப் பிந்தைய ஒரு புதிய உச்சத்தை எட்டியுள்ளது. மனிதகுலம் ஓர் உலகளாவிய தொற்றுநோயின் அழிவுகளை எதிர்கொண்டிருக்கும் நிலைமைகளின் கீழ், புதிய உலக போர் தயாரிப்புகளுக்காக பாரியளவில் சமூக ஆதாரவளங்கள் பாய்ச்சப்பட்டுள்ளன.

“இது 2008 உலகளாவிய நிதியியல் நெருக்கடிக்குப் பிந்தைய மிக அதிகபட்ச செலவு மட்டம், அனேகமாக செலவின் உச்சத்தைப் பிரதிநிதித்துவம் செய்கிறது,” என்று AFP செய்தி நிறுவனத்திற்கு SIPRI இன் ஓர் ஆராய்ச்சியாளர் Nan Tian தெரிவித்தார்.

எப்போதையும் போல, அமெரிக்க ஏகாதிபத்தியம் உலகளாவிய ஆயுத செலவுகளில் 38 சதவீதத்தை அதன் கணக்கில் கொண்டு, இராணுவவாதத்திற்கான செலவு மட்டங்களின் இன்னும் அதிகமான அதிகரிப்பில் வெறுப்பூட்டுமளவுக்கு முன்னிலையில் உள்ளது. 2019 க்கான (நிதியாண்டு 2020 க்கான) வாஷிங்டனின் இராணுவ வரவு-செலவுத் திட்டக்கணக்கு 738 பில்லியன் டாலராகும், இது அதற்கு முந்தைய ஆண்டை விட 5.3 சதவீதம் அதிகம் என்பதோடு, அமெரிக்க மொத்த உள்நாட்டு உற்பத்தியில் இது 3.4 சதவீதத்திற்கு சமம். அமெரிக்க இராணுவ செலவுகள் பட்டியலில் அதற்கு பின்னால் இருக்கும் அதிக செலவு செய்யும் 10 நாடுகளின் ஒருமித்த செலவை விஞ்சியது.

A PSE&G utility worker watches military jets fly overhead. (Photo by Charles Sykes/Invision/AP)

தரையிலிருந்து கண்டம் விட்டு கண்டம் பாயும் புதிய தொலைதூர ஏவுகணை, புதிய தொலைதூர குண்டுவீசிகள், புதிய விமானந்தாங்கி போர்க்கப்பல்கள் மற்றும் புதிய அணுஆயுதமேந்திய நீர்மூழ்கிக் கப்பல்கள் உட்பட பென்டகனின் முப்படைகளுக்கான அணுஆயுத தளவாடங்களுக்காக பாரியளவில் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளதால் இந்த அதிகரிப்பு அதிகரித்துள்ளது. அங்கே புதிய சிறிய ரக, அதிக “பயன்படுத்தத்தக்க” அணுஆயுதங்கள் மீதான ஒருமுனைப்பும் உள்ளது, இது பேரழிவுகரமான போர் அச்சுறுத்தலை இன்னும் நெருக்கமாக கொண்டு வருகிறது.

“ஆயுத நடவடிக்கைகளுக்காக”, அதாவது அமெரிக்க ஏகாதிபத்தியத்தின் கையிருப்பில் உள்ள அணுசக்தி ஏவுகணை தளவாடங்கள் மற்றும் குண்டுகளின் உற்பத்தி, பராமரிப்பு மற்றும் நவீனமயப்படுத்துவதற்காக, எரிசக்தித்துறைக்குள் அரை-தன்னாட்சி அமைப்பாக விளங்கும் தேசிய அணுசக்தி பாதுகாப்பு நிர்வாகத்திற்கு (NNSA) உரிய 12.6 பில்லியன் டாலர், SIPRI குறிப்பிடும் இந்த மொத்த தொகையில் உள்ளடங்கவில்லை.

அமெரிக்க தளவாடங்களை நவீனப்படுத்தவும் அபிவிருத்தி செய்யவும் செலவிடப்பட்டு வருகின்ற இந்த மிகப்பெரிய தொகைகள், அமெரிக்க மூலோபாய ஆவணங்களில் “வல்லரசு மோதல்கள்” என்று குறிப்பிடப்படும், இலக்குகளிலேயே முதலாவதாக உள்ள சீனா மற்றும் ரஷ்யாவுடனான மோதல்களுக்கான தயாரிப்புக்காக உள்ளன. அமெரிக்க அணுஆயுத முப்படைகளின் எல்லா அம்சங்களையும் நவீனப்படுத்துவதில் பத்தாண்டுகளுக்கும் மேலாக 500 பில்லியன் டாலர் செலவிடப்படுமென பென்டகன் எதிர்பார்க்கிறது.

அமெரிக்க ஏகாதிபத்தியத்தின் ஆயுத செலவுகள் அதன் “வல்லரசு” போட்டியாளர்களினது செலவுகளை மிகப் பெரியளவில் விஞ்சிவிட்டது. 2019 இல், அது அதன் பிரதான பொருளாதார போட்டியாளரும், 261 பில்லியன் டாலர் இராணுவ வரவு-செலவுத்திட்டக் கணக்குடன் உலகின் இரண்டாவது இடத்தில் உள்ள சீனாவை விட இரண்டரை மடங்கு அதிகமாக செலவிட்டது, மேலும் அதிக இராணுவ செலவு செய்யும் நாடுகளின் பட்டியலில் நான்காவது இடத்தில் உள்ளதும், பரம எதிரியாக கருதப்படுவதுமான ரஷ்யாவை விட (61.4 பில்லியன் டாலர்) அது 10 மடங்கிற்கும் அதிகமாக செலவிட்டது.

வாஷிங்டனின் அளப்பரிய இராணுவக் கட்டமைப்பு, ஜனநாயகக் கட்சி மற்றும் குடியரசுக் கட்சி இரண்டினது நிர்வாகங்களின் கீழ் நடத்தப்பட்ட நடவடிக்கைகளில், அமெரிக்க அரசியல் ஸ்தாபகத்தின் அனைத்து கன்னைகளின் ஆதரவையும் அனுபவிக்கிறது. ட்ரம்புக்கு எதிரான ஜனநாயகக் கட்சியின் எதிர்ப்பு ஒருபோதும் இராணுவவாதத்திற்கு எதிரான எதிர்ப்பை அடிப்படையாக கொண்டிருக்கவில்லை; மாறாக ட்ரம்ப் நிர்வாகம் ரஷ்யாவை நோக்கி போதுமானளவுக்கு ஆக்ரோஷமான நிலைப்பாட்டை ஏற்க தயக்கம் காட்டுகிறது என்று கூறப்படுவதன் மீது அவர் நிர்வாகத்தை இலக்கு வைக்கிறது.

இரண்டு கட்சிகளுமே 740.5 பில்லியன் டாலர் பென்டகனின் சமீபத்திய வரவு-செலவுத் திட்டக்கணக்கு கோரிக்கைக்குத் தயக்கமின்றி ஆதரவு வழங்குகின்றன.

சீனாவின் இராணுவச் செலவு அதிகரிப்பு நெருக்கமாக அந்நாட்டின் பொருளாதார வளர்ச்சியைப் பின்தொடர்கின்றன, இதன் அர்த்தம் 2018 இல் அது 5.1 சதவீதத்திற்கு அதிகமாக இருந்த நிலையில், அது 2010 ஐ விட 85 சதவீதம் அதிகமாகும். அமெரிக்காவின் 3.4 சதவீதத்துடன் ஒப்பிடுகையில், சீனாவின் மொத்த உள்நாட்டு உற்பத்தியில் அது 1.9 சதவீதமாகும்.

அமெரிக்கா மற்றும் சீனாவைத் தொடர்ந்து, மூன்றாவது அதிகபட்ச இராணுவ வரவு-செலவுத் திட்டக்கணக்கு இந்தியாவினுடையது, இது 2019 இல் 71.1 பில்லியன் டாலருக்கு உயர்ந்தது, அதற்கு முந்தைய ஆண்டை விட 6.8 சதவீதம் அதிகம், 2010 உடன் ஒப்பிடுகையில் 37 சதவீத அதிகரிப்பாகும். பிரதம மந்திரி நரேந்திர மோடியின் வலதுசாரி இந்து தேசியவாத அரசாங்கத்தின் கீழ் இந்த இராணுவ கட்டமைப்பு, அதன் பிராந்திய போட்டியாளர் பாகிஸ்தானின் இராணுவக் கட்டமைப்பை மிகவும் அற்பமானதாக ஆக்கிவிடுகிறது. பாகிஸ்தான் 10.3 பில்லியன் டாலர் செலவிட்டது, இது 2018 ஐ விட 1.8 சதவீதம் அதிகமாகும். இவ்விரு அணுஆயுத தெற்காசிய நாடுகளும் மீண்டும் மீண்டும் போரின் விளிம்புக்கு வந்துகொண்டுள்ளன.

இராணுவச் செலவினங்களின் அர்த்தத்தில் முதல் ஐந்து இடங்களுக்கு அடுத்து இருப்பது சவூதி அரேபியா (61.9 பில்லியன் டாலர்) ஆகும். இரத்தத்தில் தோய்ந்த இதன் ஆளும் மன்னராட்சி உலகில் எந்தவொரு நாட்டை விட மொத்த உள்நாட்டு உற்பத்தியில் மிகப்பெரும் பங்கை (8 சதவீதம்) அதன் ஆயுதங்களுக்காக செலவிடுகிறது. இந்த ஆயுதச் செலவுகளில் பெரும் பங்கு அமெரிக்காவின் அரசாட்சிக்குள் பாய்ச்சப்படுகின்றன, அது —ஒபாமா மற்றும் ட்ரம்ப் இருவரின் கீழும்—போர்விமானங்கள், ஏவுகணைகள் மற்றும் குண்டுகளை வினியோகித்துள்ளது, சவூதி அவற்றை யேமனுக்கு எதிரான சமீபத்திய மனிதப்படுகொலை போரைத் தொடுக்க பயன்படுத்தி, 100,000 க்கும் அதிகமானவர்களைக் கொன்றுள்ளதுடன் மில்லியன் கணக்கானவர்களை பட்டினியின் விளிம்பிற்குக் கொண்டு வந்துள்ளது.

பட்டியலில் பிரான்ஸை அடுத்து ஏழாவது இடத்தில் உள்ள ஜேர்மனி எந்தவொரு பிரதான சக்திகளின் இராணுவச் செலவை விடவும் மிக அதிக அதிகரிப்பு விகிதத்தை (10 சதவீதம்) எட்டியதில் தனித்துவம் பெற்றிருந்தது. பேர்லின் கூட்டணி அரசாங்கம் ஆபிரிக்கா, மத்திய கிழக்கு, மத்திய தரைக்கடல் பகுதி மற்றும் ஆப்கானிஸ்தானில் பல்வேறு இராணுவ தலையீடுகளில் துருப்புகளை நிலைநிறுத்தி உள்ளது. மூன்றாம் குடியரசு தோல்வி மற்றும் இரண்டாம் உலகப் போருக்கு எழுபத்தி ஐந்து ஆண்டுகளுக்குப் பின்னர், ஜேர்மன் ஆளும் வர்க்கம் மீண்டும் “வல்லரசு மோதல்களுக்காக” தன்னை தயார் செய்து வருகிறது.

உலகளாவிய போர் தொடுக்கவும் மற்றும் தயாரிப்பு செய்யவும் மிகப்பெரியளவில் செல்வவளம் செலவிடப்படுவதைக் குறித்து அந்த அறிக்கை ஆவணப்படுத்துவதைப் போல, இந்த கூடுதலாக தீவிரமடைந்து வரும் இந்த உலகளாவிய கொரோனா வைரஸ் தொற்றுநோய் எந்தவொரு பிரதான சக்தியையும், அனைத்தினும் குறைந்தபட்சம் அமெரிக்காவை, இத்தகையை இராணுவ கட்டமைப்பைச் செய்வதில் இருந்து அதைரியப்படுத்தவில்லை என்பதை முற்றிலுமாக தெளிவுபடுத்துகிறது.

இதற்கு எதிர்முரணாக, சீனா மீது பழிசுமத்தவும் மற்றும் தென் சீனக் கடலில் ஓர் இராணுவத் தீவிரப்பாட்டை நியாயப்படுத்தவும் வாஷிங்டன் இந்த வைரஸை ஒரு கருவியாக பயன்படுத்தி, இதை திட்டமிட்டு ஆயுதமாக்குகிறது. அதேநேரத்தில், அது ஈரான் மற்றும் வெனிசுவேலாவில் ஆட்சி மாற்றங்களுக்கான அதன் திட்டநிரலை முன்னெடுக்கும் நோக்கில், உலகிலேயே மிகவும் மோசமாக கொரொனா வைரஸ் வெடிப்புகளை முகங்கொடுத்துள்ள ஈரானுக்கு எதிரான தடையாணைகளையும் இறுக்கி உள்ளது, மேலும் சுகாதார முறையே பொறிந்து போகும் அச்சுறுத்தலில் உள்ள வெனிசுவேலாவுக்கு எதிராக போர்க்கப்பல்களை அனுப்பி உள்ளது.

தற்போதைய தொற்றுநோய் மனிதகுலத்திற்கு எதிரான குற்றத்தைப் பிரதிநிதித்துவம் செய்கின்ற நிலையில், தொடர்ந்து ஆயுதங்கள் மற்றும் போருக்காக ட்ரில்லியன் கணக்கிலான டாலர்கள் செலவிடப்பட்டு வருகின்றன.

ஜனநாயகக் கட்சியினரும் குடியரசுக் கட்சியினரும் பெருவாரியாக பென்டகனுக்கான 738 பில்லியன் டாலருக்கு ஒப்புதல் வழங்கிய அதேவேளையில், தொற்றுநோய்களை எதிர்த்து போராடும் பிரதான அமெரிக்க முகமையான நோய் கட்டுப்பாடு மற்றும் தடுப்பு மையத்தின் (Centers for Disease Control and Prevention - CDC) வரவு-செலவு திட்டக்கணக்கு கடந்த தசாப்தத்தில் 10 சதவீத வெட்டுக்களுடன் பாதிக்கப்பட்டிருக்கும் நிலையில், நிதி பெறுவதற்காக அந்த அமைப்பை அவர்கள் திட்டமிட்டு ஏங்கிக் கிடக்க விட்டுள்ளனர். இந்த நிதி வெட்டுக்கள், இந்நோய் வெடிப்பு தொடங்கிய போது அதற்கான குழப்பமான விடையிறுப்பிலும் மற்றும் இந்த தொற்றுநோய்க்கான தயாரிப்பைச் செய்வதிலும் அரசாங்கம் தோல்வி அடைந்ததில் ஒரு முக்கிய பங்கு வகித்ததுடன், கொரொனா வைரஸ் பரிசோதனையை அம்முகமை மேற்கொள்வதை நாசப்படுத்தியதுடன், தடுத்திருக்கக்கூடிய மற்றும் அநாவசியமற்ற உயிரிழப்புகளுக்கு வழிவகுத்தது.

பென்டகனுக்கு வாரியிறைக்கப்படும் நிதி ஒதுக்கீட்டில் வெறும் 1.5 சதவீதம் மட்டுமே CDC பெறுகிறது. இதற்கிடையே வேலையிலிருந்து அனுப்பப்பட்ட பத்து மில்லியன் கணக்கான தொழிலாளர்கள் வேலைவாய்ப்பின்மை இழப்பீடுகளைப் பெற முடியாமல், பசி மற்றும் வீடற்றநிலைமையின் அச்சுறுத்தலை முகங்கொடுத்திருக்கையில் கூட, ட்ரம்ப் நிர்வாகம் பிரதான ஆயுத உற்பத்தி நிறுவனங்களுக்குப் பில்லியன் கணக்கான தொகை பிணையெடுப்பு வழங்கவும் தயாரிப்பு செய்து வருகிறது, அதேவேளையில் சிறு வியாபாரங்கள் வாக்குறுதியளிக்கப்பட்ட உதவிகளும் மறுக்கப்பட்டு திவால்நிலைமையை எதிர்கொண்டுள்ளன.

ஆயுதங்களுக்குச் செலவிடப்படும் இந்த பரந்த ஆதாரவளங்கள், தொற்றுநோயை எதிர்த்து போராடுவதற்கும் மற்றும் உழைக்கும் மக்கள் வறுமைக்குள் தள்ளப்படுவதைத் தடுப்பதற்கும் வழிவகைகளாக ஆக முடியும்.

Global Campaign on Military Spending அமைப்பு தயாரித்த ஒரு சமீபத்திய அறிக்கை சுட்டிக்காட்டியவாறு, ஒரேயொரு F-35 ரக போர்விமானம் வாங்க செலவிடப்படும் 89 மில்லியன் டாலர் —பென்டகன் இது போல ஏறக்குறைய 3,000 போர்விமானங்களைக் கொள்முதல் செய்ய திட்டமிட்டுள்ளது— இது ஆண்டுக்கு 3,244 தீவிர சிகிச்சை பிரிவு (ICU) படுக்கை வசதிகளுக்கு நிதி வழங்க போதுமானது, அதேவேளையில் இந்த விமானங்களை இயக்க ஒரு மணி நேரத்திற்குச் செலவிடப்படும் 44,000 டாலர் என்பது OECD நாடுகளில் ஒரு செவிலியருக்கு தோராயமாக ஒரு ஆண்டுகால சம்பளத்திற்குச் சமமாகும். இதேபோல, அணுஆயுத தகைமை கொண்ட Trident II ஏவுகணைக்கான 31 மில்லியன் டாலர் விலை மதிப்பை, 17 மில்லியன் N95 சுவாச முகக்கவசங்களுக்காக செலவிடமுடியும்.

சோவியத் ஒன்றியம் கலைக்கப்பட்டும் பனிப்போர் முடிவுற்றும் சுமார் மூன்று தசாப்தங்களுக்குப் பின்னர் அமெரிக்க ஏகாதிபத்தியம் அணுஆயுத சக்திகளுக்கு இடையே ஒரு பேரழிவுகரமான உலக போரில் மனிதகுலத்தை அழிக்க அச்சுறுத்தும் ஒரு புதிய ஆயுத போட்டியைத் தூண்டிவிட்டு வருகிறது என்ற உண்மையையே SIPRI அறிக்கை அம்பலப்படுத்துகிறது.

ஆதாரவளங்கள், சந்தைகள் மற்றும் மலிவு உழைப்பு ஆதாரங்களைக் கட்டுப்படுத்துவதற்கான போராட்டதில், முதலாளித்துவ இராணுவவாதம் தொடர்ந்து பிரமாண்டமான அளவில் ஆதாரவளங்களை உள்ளெடுத்து, பெருந்திரளான உழைக்கும் மக்களின் வாழ்வதற்குரிய வருமானம், கல்வி, மருத்துவக் கவனிப்பு, ஒரு கண்ணியமான வாழ்க்கைக்கான இன்றியமையா உரிமைகளை அவர்கள் பெறுவதிலிருந்து அவற்றை திசைதிருப்புகிறது.

முதலாளித்துவ ஆளும் வர்க்கம் உலகெங்கிலுமான தொழிலாளர்களின் உயிர்களை அவமதிப்பதானது, அவர்களின் புவிசார் மூலோபாயத்தை எட்டுவதற்கும் வங்கிகள் மற்றும் பெருநிறுவனங்களின் இலாப நலன்களை எட்டுவதற்கும் இராணுவவாதத்தில் அவர்கள் தஞ்சமடைவதைப் போலவே, கோவிட்-19 முன்பினும் அதிக எண்ணிக்கையில் உயிர்களைப் பலி கொண்டு வரும் வேளையில் வெளியிடப்பட்ட வேலைக்குத் திரும்புவதற்கான அதன் உத்தரவுகளிலும் எடுத்துக்காட்டப்படுகிறது.

முதலாளித்துவத்திற்கு எதிராக சர்வதேச தொழிலாள வர்க்கத்தை அணித்திரட்டுவதே மனிதகுலம் மொத்தத்தையும் அச்சுறுத்தும் குற்றகரமான இந்த போர் முனைவுக்கு ஒரே பதிலாகும். இழப்பீடு எதுவுமின்றி பரந்த ஆயுத தொழில்துறையின் சொத்துக்களைப் பறிமுதல் செய்யவும், அதன் பிரதான பங்குதாரர்கள் கொள்ளையடித்த இலாபங்களைப் பறிமுதல் செய்யவும் தொழிலாளர்கள் போராட வேண்டும், அவ்விதத்தில் தான் இந்த உலகளாவிய தொற்றுநோயை எதிர்த்துப் போராடவும் மற்றும் மக்களின் பரந்த பெரும்பான்மையினரின் சமூக தேவைகளை உறுதிப்படுத்தவும் இத்தகைய ஆதாரவளங்களை அணிதிரட்ட முடியும். இத்தகைய இன்றியமையா கோரிக்கைகள் அதிகாரத்தை தொழிலாள வர்க்கத்திற்கு கைமாற்றுவதற்கும் மற்றும் சோசலிசத்தை ஸ்தாபிப்பதற்குமான போராட்டத்திலிருந்து பிரிக்கவியலாததாகும்.