நூறாயிரக்கணக்கான மக்களின் வாழ்க்கையுடன் ரஷ்ய சூது விளையாட்டு

ஜேர்மன் பெருவணிகம் முடக்கத்தை கைவிட கோருகிறது

By Peter Schwarz
8 May 2020

மொழிபெயர்ப்பின் மூலக் கட்டுரையை இங்கே காணலாம்

ஜேர்மனியில் கொரொனா வைரஸ் முடக்க கட்டுப்பாடுகளில் சில ஆரம்பகட்டமாக விலக்கப்பட்டு இரண்டு வாரங்களுக்குப் பின்னர், அதை ஒட்டுமொத்தமாக கைவிடுவதற்கான கோரிக்கைகள் கடும் உச்சத்தை எட்டியுள்ளன. குறிப்பாக இதற்கு வணிக சங்கங்கள் தீவிர அழுத்தம் கொடுத்து வருகின்றன. ஜேர்மனியின் கூட்டாட்சி மாநிலங்களில் உள்ள அரசாங்கங்கள், கட்டுப்பாடுகளை விரைந்து எவரால் முறியடிக்க முடியும் என்ற பந்தயத்தில் ஈடுபட்டுள்ளன. இந்நிலையில், செய்தி ஊடகங்களும் மற்றும் செய்தியிதழ்களும் தங்களது பிரச்சாரத்தை உச்சபட்சமாக முடுக்கிவிட்டுள்ளன.

அவர்கள் அனைவரும் இலட்சக்கணக்கான உயிர்களுடன் ரஷ்ய சூதாட்டம் ஆடுகின்றனர். சமூக இடைவெளி நடவடிக்கைகளால் கடந்த ஒரு மாதமாக ஜேர்மனியில் கொரொனா வைரஸ் நோயாளிகளின் எண்ணிக்கை குறைந்து வருகிறது என்றாலும், கட்டுப்பாடுகளின் நீக்கம் நோய்தொற்று தீவிரமாக வெடித்து பரவும் நிலையை உருவாக்க அச்சுறுத்துகிறது. வைரஸ் அதன் அச்சுறுத்தும் தன்மையை சிறிதும் இழக்கவில்லை என்பதுடன், அடுத்த வருட வாக்கில் தான் அதற்கான தடுப்பு மருந்தும் எதிர்பார்க்கப்படுகிறது.

அனைத்திற்கும் மேலாக, நோய்தொற்று தொடர்ந்து பரவிக் கொண்டே செல்வதானது, இதற்கு உலகளாவிய தீர்வு மட்டுமே சாத்தியம் என்பதைத் தெளிவுபடுத்துகிறது. அமெரிக்காவில், கொரொனா வைரஸ் நோய்தொற்றுக்கு ஆளாகும் நபர்களின் எண்ணிக்கை நாளொன்றுக்கு சுமார் 30,000 என்றளவிற்கு அதிகரித்து, தற்போது நோய்தொற்று பாதிப்பிலுள்ள 950,000 நோயாளிகள் உட்பட மொத்த நோயாளிகளின் எண்ணிக்கை அங்கு 1.2 மில்லியனை எட்டியுள்ளது. கண்டறியப்படாத தொற்றுநோய் பாதிப்பாளர்களின் எண்ணிக்கை இதில் உட்படுத்தப்படவில்லை. ரஷ்யாவில், நோய்தொற்று பாதிப்பு குறித்த வரைபட வளைவு விரைந்து மேல்நோக்கிச் சென்று கொண்டிருக்கிறது, இங்கு நாளொன்றுக்கு தோராயமாக 10,000 புதிய நோய்தொற்று பாதிப்புக்கள் பதிவாகின்றன. பிரிட்டனிலும், புதிய நோய்தொற்று பாதிப்புக்களில் குறிப்பிடத்தக்க வீழ்ச்சி காணப்படவில்லை என்ற நிலையில், இது இப்போது 29,000 க்கும் மேலான இறப்பு எண்ணிக்கையுடன் ஐரோப்பாவிலேயே மிகவும் பாதிக்கப்பட்டுள்ள நாடான இத்தாலியை விஞ்சிவிட்டது. ஜேர்மனியில், சுமார் 6,900 பேர் வைரஸ் தொற்றால் இறந்துவிட்டனர்.

ஜேர்மன் தொழில்துறை தின விழா 2017 இல் பங்கேற்கும் BDI தலைவர் டைட்டர் கெஃம்ப், சான்சிலர் அங்கேலா மேர்க்கெல் மற்றும் BDI பொது மேலாளர் ஜோச்சிம் லாங் (Wikimedia Commons)

திங்களன்று, ஜேர்மனியில் கிட்டத்தட்ட அனைத்து பள்ளிகளும் தேர்ந்தெடுக்கப்பட்ட வகுப்புகளுக்காக மீண்டும் திறக்கப்பட்டன. வார இறுதியில் வெளியிடப்பட்ட ஒரு விஞ்ஞான ஆய்வு இது எவ்வளவு ஆபத்தானது என்பதைக் காட்டுகிறது. மற்ற வயதினரை காட்டிலும் குழந்தைகளிடையே நோய்தொற்று ஆபத்து குறைவாகவே உள்ளது என்ற கூற்றை இந்த ஆய்வு பொய்யாக்குகிறது.

நுண்ணுயிரியியல் நிபுணரான Christian Drosten தலைமையில் பேர்லின் Charite மருத்துவமனையில் ஒரு ஆராய்ச்சி குழு, 3,712 மாதிரிகளில் இருந்த வைரஸின் அளவை ஆராய்ந்து, பல்வேறு வயதினரிடையேயான வைரஸ் அளவில் குறிப்பிடத்தக்க வேறுபாடு எதுவுமில்லை என்பதையும் கண்டறிந்தது. எனவே குழந்தைகளும் பெரியவர்களைப் போலவே நோய்தொற்றால் பாதிக்கப்படலாம். இந்நிலையில், பள்ளிகள் மற்றும் மழலையர் பள்ளிகளை தடையின்றி மீண்டும் திறப்பதற்கு எதிராக ஆராய்ச்சியாளர்கள் எச்சரிக்கை விடுத்தனர்.

என்றாலும், ஜேர்மன் சான்சிலர் அங்கேலா மேர்க்கெல் மற்றும் கூட்டாட்சி மாநிலங்களின் அமைச்சர் தலைவர்களும் இன்று ஒரு கூட்டத்தின் போது பள்ளிகள் மற்றும் மழலையர் பள்ளிகள் மேலும் திறக்கப்படுவதற்கு உடன்படவுள்ளனர். வடக்கு ரைன்-வெஸ்ட்ஃபாலியாவில் உள்ள குடும்ப அமைச்சர் Joachim Stamp, கூட்டம் வரை காத்திருக்கக்கூட கவலைப்படவில்லை. ஸ்டாம்ப், முன்னாள் Handelsblatt ஆசிரியரான Gabor Steingart உடனான காலை நேர சுருக்க வலையொளி பதிவில், எந்தவொரு உடன்பாடும் எட்டப்படாவிட்டால் தனது மாநிலம் அதன் பள்ளிகளையும் மழலையர் பள்ளிகளையும் தனது சொந்த விதிமுறைகளின் அடிப்படையில் திறக்கும் என்று அறிவித்தார், அவரது மாநிலம் ஜேர்மனியின் மக்கள்தொகையில் 20 சதவிகிதத்தைக் கொண்டுள்ளது குறிப்பிடத்தக்கது. மேலும், “மற்றொரு வாரத்திற்கு தள்ளிப்போடுவதை நாங்கள் ஏற்க மாட்டோம்,” என்றும் அவர் தெரிவித்தார்.

அனைத்திற்கும் மேலாக, கட்டுப்பாட்டு நடவடிக்கைகளை நீக்குவதற்கான மற்றும் பள்ளிகள் மற்றும் மழலையர் பள்ளிகளை மீண்டும் திறப்பதற்கான அழுத்தம் பெரும் வணிகத்திடமிருந்து வருகிறது. இந்த முடிவு பெரும் எண்ணிக்கையிலான உயிர்களை விலைகொடுக்கச் செய்யும் என்றாலும் கூட, வணிக சங்கங்கள் ஒன்றையடுத்து மற்றொன்று என சமீபத்திய நாட்களில் வேலைக்கு விரைந்து திரும்புவதற்கு ஆதரவாக பேசி வருகின்றன. “மனித உயிர்களுக்கு இருக்கும் ஆபத்து அல்லது வேலைகள் மற்றும் வளர்ச்சி மீதான அச்சுறுத்தல் இவற்றில் எது மிக முக்கியம்,” என்று Süddeutsche Zeitung செய்தியிதழ் சுருக்கமாக அதன் விவாதத்தை முன்வைக்கிறது.

புதன்கிழமை கூட்டத்தைத் தொடர்ந்து, “எந்த கட்டத்தில் சமூக மற்றும் பொருளாதார வாழ்க்கை மீண்டும் நகரத் தொடங்கும்,” என்பது தெளிவுபடுத்தப்பட வேண்டும் என்று ஜேர்மன் தொழில்துறையின் கூட்டாட்சி சங்கத்தின் (Federal Association of German Industry-BDI) தலைவரான Dieter Kempf கோரினார். பொருளாதார முடக்கத்தின் ஒவ்வொரு வாரமும் “ஜேர்மன் பொருளாதாரம் பல பில்லியன்களின் மதிப்பில் உருவாக்கப்பட்டதற்கு” விலைகொடுத்தது.

சான்சிலர் மற்றும் அமைச்சர் தலைவர்களுக்கு மத்தியதர வணிகங்களின் கூட்டாட்சி சங்கம் எழுதிய ஒரு பகிரங்க கடிதத்தில், “முற்றிலும் நுண்ணுயிரி குறித்த அணுகுமுறையில் கடைப்பிடிக்கப்படும் ஒருதலைப்பட்ச சரிசெய்தலையும், அதனுடன் இந்த நாட்டின் எதிர்காலத்துடன் ஆபத்தான விளையாட்டு விளையாடப்படுவதையும் முடிவுக்கு கொண்டு வாருங்கள். மேலும், மிகவும் தாமதமாவதற்கு முன்பு ஊரடங்கை நீக்குங்கள்” என்று அது குறிப்பிட்டிருந்தது.

கிறிஸ்துவ ஜனநாயகவாதிகள் மற்றும் கிறிஸ்துவ சமூக ஒன்றியத்திற்கான மத்தியதர அளவிலான வணிகங்களின் செய்தித் தொடர்பாளரான, Karsten Linnemann, “ஒரு தெளிவான கண்ணோட்டத்துடன் கூடிய அனைத்து கிளைகளுக்குமான படிப்படியான வளர்ச்சித் திட்டத்தை” கோரினார். Ifo நிறுவனத் தலைவரான, Clemens Fuest, ஊரடங்கில் இருந்து வெளியேறுவதற்கான திருப்திகரமான திட்டத்தை வகுப்பதற்கு முறையிட்டார். தொழில் மற்றும் வர்த்தகத்திற்கான ஜேர்மன் சபையின் (German Chamber of Industry and Trade-DIHK) தலைவரான Eric Schweizer, “தெளிவான விதிமுறைகளையும் மற்றும் நடைமுறை முடிவுகளையும்” வகுக்கக் கோரினார்.

ஊரடங்கு ஆரம்பிக்கப்பட்டதிலிருந்து, வங்கிகளும் மற்றும் மிகப்பெரிய நிறுவனங்களும் நூற்றுக்கணக்கான பில்லியன் யூரோக்களை அரசு நிதிக்குள் செலுத்தியுள்ளன. பிணையெடுப்புத் திட்டங்களுக்கும் மற்றும் ஊதிய இழப்பீட்டிற்கும் மத்திய மற்றும் மாநில அரசாங்கங்கள் வழங்கிய தொகை 1.2 டிரில்லியன் யூரோ மட்டுமேயாகும். கூடுதலாக, ஐரோப்பிய ஒன்றிய ஆணையத்திலிருந்து 500 பில்லியன் யூரோவும், மற்றும் ஐரோப்பிய மத்திய வங்கியிலிருந்து 1 டிரில்லியன் யூரோவுக்கு மேற்பட்ட தொகையும் கிடைக்க வகை செய்யப்பட்டுள்ளது. பங்குச் சந்தைகளை ஊக்குவிப்பதற்காக அரசு மற்றும் தனியார் கடன்களை ECB வாங்கும்.

இந்த பெரும் தொகைகளில் சிறு பகுதி மட்டுமே, தொற்றுநோயையும் மற்றும் அதன் விளைவுகளையும் எதிர்த்துப் போராடுவதற்கான, அல்லது பெரும் எண்ணிக்கையிலான திவாலாகவுள்ள சிறு வணிகங்களுக்கு ஆதரவளிப்பதற்கான நோக்கத்திற்கு ஒதுக்கப்பட்டுள்ளது. இந்த பெரும் பெரும்பான்மையானவை வங்கிகள் மற்றும் பெரிய நிறுவனங்களின் வங்கிக் கணக்குகளில் சென்று முடிவடையும். ஜேர்மன் பங்குச் சந்தையில் பங்கேற்கும் மிகப்பெரிய நிறுவனமான Volkswagen, சென்ற ஆண்டில் 17 பில்லியன் யூரோ இலாபம் ஈட்டியிருந்தாலும், அனைத்திற்கும் மேலாக பணக்கார Porsche மற்றும் Piech குடும்பங்கள் மற்றும் உயர் மேலாளர்கள் உள்ளிட்ட பங்குதாரர்களுக்கு பில்லியன்களை வாரி வழங்கியிருந்தாலும், பில்லியன் கணக்கான யூரோ மதிப்புள்ள வாடிக்கையாளர்களுக்கான பிணையெடுப்பு மற்றும் காப்பீடுகள் தொடர்பாக தற்போது மத்திய அரசாங்கத்துடன் பேச்சுவார்த்தை நடத்தி வருகிறது.

பெருவணிகத்தின் பிரதிநிதிகள் இப்போது இந்த பெரும் தொகையை தொழிலாள வர்க்கத்திலிருந்து பிழிந்தெடுக்க வேண்டும் என்று கோருகின்றனர். ஊரடங்கை நீக்கும்படி அவர்கள் வலியுறுத்துவதற்கு இதுவே உண்மையான காரணமாகும்.

ஜேர்மன் பாராளுமன்றத்தின் 77 வயதான ஜனாதிபதி வொல்ஃப்காங் சொய்பிள, 10 நாட்களுக்கு முன்னர் Tagesspiegel செய்தியிதழுக்கு பேட்டியளிக்கையில், வணிக நலன்களுக்காக மனித உயிர்களை தியாகம் செய்தாக வேண்டும் என்று இந்த பிரச்சாரத்திற்கான சுலோகத்தை வழங்கினார். அப்போதிருந்து, சொய்பிளகுறித்த தங்களது கருத்துக்களை அடிப்படையாகக் கொண்டு, முடக்கத்தை விரைவாக முடிவுக்குக் கொண்டுவரும்படி கிட்டத்தட்ட அனைவரும் பரிந்துரைக்கின்றனர்.

தனது தேர்தல் மாவட்டத்தில் வெளியாகும் Mittelbadische Presse ஊடகத்திற்கு அளித்த பேட்டியில், Schauble தனது கருத்தை மீண்டும் வலியுறுத்தினார். “நீண்ட காலம் நீடிக்கும் இந்த நடவடிக்கைகளால், பொருளாதார மற்றும் சமூக விளைவுகள் மிகப்பெரியளவில் இருக்கும்,” “எனவே, அனைத்தையும் காட்டிலும் வாழ்க்கை மற்றும் சுகாதார பாதுகாப்பிற்கு நிபந்தனையற்ற முன்னுரிமை உள்ளது என்று கூறுவது சரியல்ல” என்று அவர் கூறினார்.

அதே நேர்காணலில், பெரும் செல்வந்தர்களின் பைகளில் பில்லியன்களை பாய்ச்சும் நிலை இப்போது “உருவாக்கப்பட வேண்டும்”, என்று Schauble கோரினார், அதாவது தொழிலாள வர்க்கத்தை சுரண்டுவதன் மூலமாகவும் சமூக செலவின வெட்டுக்களை திணிப்பதன் மூலமாகவும் உருவாக்கப்படும் தொகையை அதற்கு பயன்படுத்தக் கோரினார். “ஆனால் இந்த நேரத்தில், அனைத்திற்கும் அரசே பணம் செலுத்த முடியும் என்ற எண்ணத்தில் மக்கள் இருப்பது குறித்தே நான் கவலைப்படுகிறேன்,” என்று அவர் கூறினார். “எவ்வாறாயினும், இறுதியில், நாம் உருவாக்கும் நிதியில், பெரும்பகுதியை நலனுதவிகளுக்கும் மற்றும் சமூக நலன்களுக்கும் மட்டுமே செலவிட முடியும்.”

ஜேர்மனிய நிதி அமைச்சர் என்ற வகையில், கிரேக்கத்தின் சமூக சேவைகளை அழித்து, உழைக்கும் மக்களை கசப்பான வறுமையில் தள்ளிய இரக்கமற்ற சிக்கன திட்டங்களுக்கு Schauble தான் பொறுப்பாளியாக இருந்தார். அவரது வார்த்தைகளை எச்சரிக்கையாக எடுத்துக்கொள்ள வேண்டும்.

பெருவணிகங்களும், ஊடகங்களும், அரசியல்வாதிகளும் ஊரடங்கை முடிவுக்குக் கொண்டுவர அழுத்தம் கொடுக்கும் அதேவேளை, தங்களது உயிர் வாழ்வு குறித்து அஞ்சும் நடுத்தர வர்க்க அடுக்குகளின் கவலைகளை சுரண்டுவதற்கும் வேண்டுமென்றே அவர்கள் முயன்று வருகின்றனர். கொரொனா வைரஸ் நடவடிக்கைகளின் பேரில் “அடிப்படை உரிமைகள் கட்டுப்படுத்தப்படுவதற்கு” எதிரான ஒருசில டசின் மக்களின் ஆர்ப்பாட்டங்கள் குறித்து ஊடகங்கள் முறையாக விளையாடின.

சனியன்று, Stuttgart நகரத்தின் தடையை மத்திய அரசியலமைப்பு நீதிமன்றம் இரத்து செய்ததன் பின்னர், முதல்முறையாக 5,000 பேர் இதுபோன்றதொரு ஆர்ப்பாட்டத்தில் கலந்துகொண்டனர். அமைப்பாளரும், தகவல் தொழில்நுட்ப தொழிலதிபருமான Michael Ballweg, தான் இடதுசாரியுமல்ல வலதுசாரியுமல்ல என்று கூறினாலும், இந்த ஆர்ப்பாட்டம் வலதுசாரி தீவிரவாதிகளால் “நுண்ணுயிரியியல் நிபுணர்களின் சர்வாதிகாரத்திற்கு” எதிராக எடுத்துவைக்கப்பட்ட ஒரு அடியாக கருதப்பட்டு உற்சாகமாக வரவேற்கப்பட்டது.

ஜேர்மனியில் உள்ள முன்னணி நுண்ணுயிரியியல் நிபுணரான Christian Drosten, கார்டியன் பத்திரிகையின் படி, தற்போது மரண அச்சுறுத்தல்களுக்கு ஆளாகியுள்ளார். அவருக்கு எதிரான பிரச்சாரத்தில் வடக்கு ரைன்-வெஸ்ட்ஃபாலியா அமைச்சர் ஜனாதிபதி Armin Laschet உம் இணைந்து கொண்டார், இவர் மேர்க்கெலுக்கு அடுத்த வேட்பாளர் ஆவார் என்பதுடன், ஊரடங்கை விரைந்து முடிவுக்குக் கொண்டுவர அழுத்தம் கொடுத்து வருகிறார். நுண்ணுயிரியியல் நிபுணர்கள் “சில நாட்களுக்கு ஒருமுறை தங்களது கருத்துக்களை” மாற்றிக் கொள்கிறார்கள் என்று Anne Will தொலைக்காட்சி விவாத நிகழ்ச்சியில் Laschet குற்றம்சாட்டினார். மேலும் அவர், முன்நிகழ்ந்திராத வகையில் தொற்றுநோய்கள் விரைந்து பரவி வருவது குறித்து அவர்கள் எச்சரித்தனர் என்றும் குறைகூறினார்.

பிரபல வணிக ஊடகவியலாளரான Ranga Yogeshwar இதை “முட்டாள்தனம்” என்று விவரித்தார். நுண்ணுயிரியியல் நிபுணர்களின் ஆலோசனைகள் பின்பற்றப்பட்டதால் இந்த நோய்தொற்றின் இரண்டாவது அலை இன்னும் எழவில்லை என்பதே யதார்த்தம். “மேற்கொள்ளப்பட்ட நடவடிக்கைகளின் வெற்றியைக் கொண்டாடுவதற்கும், இதுவரை நடந்த நிகழ்வுகளின் நேர்மறையான போக்கு குறித்து திருப்தியடைவதற்கும் மாறாக, நிபுணர்களின் விமர்சனங்கள் தான் அதிகரித்து வருகின்றன.”

பெருநிறுவனங்கள் மற்றும் பெரும் பணக்காரர்களின் பைகளில் தற்போது பாய்ச்சப்பட்டு வரும் டிரில்லியன் கணக்கான யூரோக்களில் ஆகக் குறைந்த தொகையாவது, தனிப்பட்ட பாதுகாப்பு உபகரணங்களை வாங்குவது, உலகளாவிய பரிசோதனை நடவடிக்கைகளை மேற்கொள்வது, வேலைக்குச் செல்லும் பெற்றோர்களுக்காக குழந்தைகளை பராமரிப்பதற்கான ஏற்பாடுகளைச் செய்வது, மற்றும் வேலையற்றவர்களுக்கும் சிறுதொழில் செய்பவர்களுக்கும் ஆதரவளிப்பது போன்ற வைரஸ் தொற்றை எதிர்த்துப் போராடும் நடவடிக்கைகளுக்காக முதலீடு செய்யப்படுமானால், இந்த நோய்தொற்று பரவலை கட்டுப்படுத்த முடியும்.

ஆனால் இத்தகைய தீர்வு, பெரும்பான்மையினரின் இழப்பில் சிறுபான்மையினரை வளப்படுத்துவதில் தங்கியுள்ள முதலாளித்துவ இலாப நோக்கு அமைப்புமுறைக்கு பொருந்தாது. இதற்கு, சோசலிச வேலைத்திட்டத்திற்காக தொழிலாள வர்க்கத்தை அணிதிரட்ட வேண்டும்.