இலத்தீன் அமெரிக்கா கோவிட்-19 இன் புதிய குவிமையமாக உருவெடுக்கிறது

16 May 2020

மொழிபெயர்ப்பின் மூலக் கட்டுரையை இங்கே காணலாம்

உறுதி செய்யப்பட்ட கொரோனா வைரஸ் நோயாளிகளின் மொத்த எண்ணிக்கையில் முதல்முறையாக அமெரிக்கர்கள் ஐரோப்பாவை விஞ்சிவிட்டதாக உலக சுகாதார அமைப்பு (WHO) புதன்கிழமை அறிவித்தது. ஐரோப்பாவின் 1.73 மில்லியனுடன் ஒப்பிடுகையில், அந்த மேற்கு அரைக்கோளத்தில் உத்தியோகபூர்வமாக அறிவிக்கப்பட்ட நோய்தொற்றின் மொத்த எண்ணிக்கை 1.74 மில்லியனை எட்டியது.

இந்த திசைமாற்றம் சந்தேகத்திற்கிடமின்றி முக்கியத்துவமானது என்றாலும், இந்த புள்ளிவிபரங்களே கூட அமெரிக்காவிலும் மற்றும் பரந்து விரிந்து வரும் இலத்தீன் அமெரிக்கா எங்கிலும் என இரண்டு பகுதிகளிலும் உயிராபத்தான இந்த வைரஸின் நிஜமான பரவல் குறித்த ஓர் ஒட்டுமொத்த குறைமதிப்பீடாகவே உலகெங்கிலும் கருதப்படுகிறது.

உலகின் மக்கள்தொகையில் ஐந்து சதவீதத்தினருடன், அமெரிக்கா உலகெங்கிலும் உறுதிசெய்யப்பட்ட நோயாளிகளில் ஒரு கால்வாசி பேருக்கும் அதிகமானவர்களையும் (1.4 மில்லியனுக்கும் அதிகமாக) மற்றும் உலகெங்கிலுமான உயிரிழப்புகளில் அண்மித்து மூன்று பங்கினையும் (அண்மித்து 85,000) அதன் கணக்கில் கொண்டுள்ளது. அமெரிக்க முதலாளித்துவத்தின் மீதும், ட்ரம்ப் நிர்வாகம் மற்றும் ஒட்டுமொத்த அமெரிக்க ஆளும் செல்வந்த தட்டுக்களின் பாகத்தில் மனித உயிர்கள் மீது நிலவும் அலட்சியம் மற்றும் குற்றகரமான திராணியின்மை மீது இதை விட அதிகமாக மறுக்கமுடியாத குற்றப்பத்திரிகை வேறெதுவும் இருக்க முடியாது.

பிரேசில், மனாஸில் Nossa Senhora Aparecida கல்லறையில் மே 13, 2020 புதன்கிழமை ஐந்து சடலங்களைப் புதைத்த பின்னர், கல்லறைத் தோட்ட தொழிலாளர்கள் அந்த பொதுவான புதைகுழி மீது சிலுவையை வைக்கின்றனர். மரண அதிகரிப்புக்கு ஈடு கொடுக்கும் வகையில் கடந்த மாதம் தான் இந்த கல்லறையில் புதிய பகுதி திறக்கப்பட்டது. (படம்: AP/Felipe Dana)

ஆனால் பழைய உலகில் இருந்து இந்த தொற்றுநோயின் குவிமையம் புதிய உலகிற்கு மாறுவதானது, இலத்தீன் அமெரிக்காவில் இந்நோய் அதிகரித்தளவில் கட்டுப்பாடின்றி அதிகரித்து வருவதினாலும் ஏற்படுகிறது. இலத்தீன் அமெரிக்காவில் தொற்று எண்ணிக்கையின் அதிகரிப்பு விகிதம் பூமியிலேயே மிக அதிகபட்சங்களில் ஒன்றாக உள்ளது.

இந்த பூமியிலேயே இலத்தீன் அமெரிக்காவை சமூகரீதியில் மிகவும் சமநிலையற்ற பகுதியாக ஆக்கியுள்ள மற்றும் இதற்கு முன்பிருந்தே இருந்து வரும் சமூக மற்றும் பொருளாதார நலிவுகளே இந்த உயிராபத்தான வைரஸ் பரவலை எரியூட்டுகிறது. அமெரிக்க ஏகாதிபத்தியத்தின் ஒரு நூற்றாண்டு கால ஒடுக்குமுறை மற்றும் பொருளாதார சுரண்டலுடன் சேர்ந்து, அப்பிராந்திய நெருக்கடியின் முழுச் சுமையையும் அங்கே தொழிலாள வர்க்கத்தின் முதுகில் நிறுத்தியுள்ள பேராசை கொண்ட தேசிய முதலாளித்துவத்தின் ஆட்சியும், இலத்தீன் அமெரிக்காவின் பெருந்திரளான உழைக்கும் மக்களை இந்த தொற்றுநோயால் மிகவும் பாதிக்கபடக் கூடியவர்களாக விட்டு வைத்துள்ளது.

கொரொனா வைரஸ் பரவல் அப்பிராந்தியம் எங்கிலும் தாக்கங்களைக் கொண்டிருந்தது, அதிகரித்து வரும் வேலைவாய்ப்பின்மை மற்றும் வறுமை, நூற்றுக் கணக்கானவர்களின் உயிர்களைப் பலி கொண்ட கூட்ட நெரிசலான சிறைச்சாலைகளில் சிக்கியுள்ள அக்கண்டத்தின் 1.5 மில்லியன் சிறைக்கைதிகளிடையே ஏற்பட்ட இரத்தக்களரியான கலகங்கள், அரசியல் மற்றும் சமூக வாழ்வுக்குள் அதிகரித்து வரும் இராணுவத்தின் தலையீடு ஆகியவையும் அதில் உள்ளடங்கும்.

பயங்கரமான காட்சிகள் முதலில் ஈக்வடோரின் கடற்கரை நகரமான Guayaquil இல் நிகழ்ந்தது, அங்கே சடலங்கள் வீதிகளில் வீசப்பட்டிருந்த நிலையில் அது பிரேசிலின் மனாஸ் மற்றும் பெருவின் ஈக்டொஸ் ஆகிய அமசானிய நகரங்களிலும் மற்றும் ஏனைய இடங்களிலும் மீண்டும் நடந்தேறின. ஒரு நாடு மாற்றி ஒரு நாட்டில், அடுத்தடுத்து செய்யப்பட்ட கட்டமைப்புரீதியிலான சீரமைப்பு திட்டங்களைப் பூர்த்தி செய்வதற்காக ஈவிரக்கமின்றி வெட்டப்பட்டுள்ள மருத்துவக் கவனிப்பு துறைகள் மிதமிஞ்சி கூட்டம் நிரம்பி வழிகின்றது, பிணவறைகள் மற்றும் கல்லறைகளுடன் சேர்ந்து, பிரதான நகரங்களில் பாரிய புதைகுழிகள் தோட்டப்பட்டு வருகின்றன.

இந்த வைரஸின் கட்டுப்பாடற்ற பரவல் மற்றும் மனித உயிர்களை விலையாக கொடுப்பதை நோக்கி முதலாளித்துவ ஆளும் வர்க்கங்களின் அலட்சியம் மற்றும் குற்றகரமான புறக்கணிப்பு ஆகியவற்றுக்கு திட்டவட்டமான எடுத்துக்காட்டுகளை, மக்கள்தொகை அர்த்தத்திலும் சரி பொருளாதார அர்த்தத்திலும் சரி, அப்பிராந்தியத்தின் இரண்டு மிகப்பெரிய நாடுகளான மெக்சிகோ மற்றும் பிரேசிலில் காணலாம்.

இரண்டுமே செவ்வாயன்று அவற்றின் மிக அதிகபட்ச ஒரு நாள் உறுதிசெய்யப்பட்ட கோவிட்-19 மரணங்களைக் கண்டன, பிரேசிலில் 881 மற்றும் மெக்சிகோவில் 353 உயிரிழப்புகள் ஏற்பட்டன.

இவ்விரு நாடுகளிலுமே, உயிரிழப்புகளின் இந்த புதிய உச்சங்கள் பெரிதும் அடையாளரீதியானவை ஆகும். நிஜமான மரண எண்ணிக்கை இதை விட மிக மிக அதிகம் என்பது ஒவ்வொருவருக்கும் தெரியும்.

பிரேசிலில், 881 உயிரிழப்புகள் என்பது கடந்த 24 மணி நேரத்தில் இறந்தவர்களின் எண்ணிக்கையை அல்ல, மாறாக உறுதி செய்யப்பட்ட மரண எண்ணிக்கையை பிரதிநிதித்துவம் செய்கிறது, அவர்களில் சிலர் சில நாட்களுக்கு முன்னரே இறந்து விட்டதாக உறுதி செய்யப்பட்டது. அதேநேரத்தில் கோவிட்-19 ஆல் ஏற்பட்டதாக கருதப்படும் ஆனால் இன்னும் உறுதி செய்யப்படாத 2,050 உயிரிழப்புகள் இருப்பதாகவும் அரசாங்கம் இப்போதும் ஒப்புக் கொள்கிறது. இதற்கு கூடுதலாக அங்கே எண்ணிக்கையின்றி ஆயிரக் கணக்கான வறுமைப்பட்ட பிரேசிலியர்கள் உள்ளனர், இவர்கள் நெரிசலான தொழிலாள வர்க்க வசிப்பு பகுதிகளிலும், சா பௌலோ, ரியோ டி ஜெனிரோ மற்றும் ஏனைய நகரங்களின் சேரிகளில் (favelas) எந்தவித மருத்துவக் கவனிப்புமின்றி அவர்களின் வீடுகளில் உயிரிழந்துள்ளனர்.

தொற்று ஏற்பட்டிருப்பவர்களின் எண்ணிக்கை உத்தியோகபூர்வ எண்ணிக்கையை விட 15 மடங்கு அதிகம்; வேறு வார்த்தைகளில் இது 3 மில்லியனுக்கு நெருக்கமாக உள்ளது என்றும், இன்னமுமே மொத்தத்தில் போதுமானளவுக்குப் பரிசோதனை இல்லாத அமெரிக்காவுடன் ஒப்பிடுகையில் பிரேசிலில் செய்யப்பட்ட பரிசோதனை எண்ணிக்கை வெறும் பத்தில் ஒரு பங்கு கூட இல்லை என்றும் சா பௌலோ மருத்துவக் கல்விக்கான பல்கலைக்கழகம் நடத்திய ஆய்வு ஒன்று மதிப்பிடுகிறது.

மெக்சிகோவில் 38,324 உறுதிசெய்யப்பட்ட தொற்றுக்களும் மற்றும் 3,926 உறுதி செய்யப்பட்ட மரணங்களும் இந்த தொற்றுநோயால் ஏற்பட்ட நிஜமான எண்ணிக்கையில் ஒரு பகுதி தான். மெக்சிகோ நகரில் மட்டுமே, அரசால் அறிவிக்கப்படாமல் விடப்பட்ட ஆயிரக் கணக்கான மரணங்கள் ஏற்பட்டிருப்பதை மருத்துவ அதிகாரிகள் ஒப்புக் கொண்டுள்ளனர். மருத்துவமனைகள் புதிய நோயாளிகளை ஏற்க முடியாமல், கோவிட்-19 ஆல் பாதிக்கப்பட்டவர்களுடன் நிரம்பி வழிகின்றன. அந்நகரின் சவ அடக்க மையங்களுக்கு வெளியே சவப் பெட்டிகள் அடுக்கி வைக்கப்பட்டுள்ளன. பொருளாதார ஒத்துழைப்பு மற்றும் அபிவிருத்தி அமைப்பு எனப்படும் OECD இல் உள்ள 36 அங்கத்துவ நாடுகளில் மெக்சிகோ தான் மிகவும் குறைவான பரிசோதனைகளைச் செய்துள்ளது.

இந்த யதார்த்தத்திற்கு மத்தியில், பிரேசில் மற்றும் மெக்சிகோ நகர அரசாங்கங்கள் கூடுதல் இலாப நலன்களுக்காக தொழிலாளர்களை நோய்க்கும் மரணத்திற்கும் ஆட்படுத்தும் விதத்தில், ஆலைகளுக்கும் வேலையிடங்களுக்கும் திரும்புமாறு அவர்களை நிர்பந்திப்பதில் முதலாளித்துவ முதலாளிமார்களுடன் சேர்ந்துள்ளன.

பிரேசிலின் பாசிசவாத ஜனாதிபதி ஜயர் போல்சொனாரோ, அனைத்து தொழில்துறை நடவடிக்கைகளும் மற்றும் கட்டுமான நடவடிக்கைகளும் "இன்றியமையாத சேவைகளே" என்று அறிவித்து, பிரேசிலிய முதலாளித்துவ வர்க்கத்தின் மற்றும் உலக நிதி மூலதனத்தின் நலன்களை மிகவும் மூர்க்கமான விதத்தில் வெளிப்படுத்தி உள்ளார். மாநிலங்கள் திணிக்கும் மட்டுப்படுத்தப்பட்ட தனிமைப்படுத்தும் நடவடிக்கைகளை பிரேசிலின் உச்சநீதிமன்றம் இரத்து செய்ய வேண்டுமென கோருவதற்காக அதை நோக்கி "அணிவகுத்த" முன்னணி முதலாளித்துவ வணிகர்களுடன் அவர் இணைந்திருந்தார்.

இந்த கொரொனா வைரஸை "ஒரு சிறிய தொற்றுநோய்" என்று கிறுக்குத்தனமாக அலட்சியப்படுத்தி முன்னர் ஏளனப்படுத்திய போல்சொனாரோ இப்போது முதலாளித்துவ நலன்களுக்காக மிகவும் ஒத்திசைவாக பேசும் பேச்சாளராக உருவெடுத்துள்ளார். புதன்கிழமை அவரது வலதுசாரி ஆதரவாளர்களுக்கு வழங்கிய உரையில் பிரேசிலிய தொழிலாள வர்க்கத்திற்கு ஓர் இறுதி எச்சரிக்கையைக் குரூரமாக அவர் தொகுத்தளித்தார்: “மக்கள் வேலைக்குத் திரும்பி ஆக வேண்டும். யாரெல்லாம் வேலை செய்ய விரும்பவில்லையோ, பின்னர் அவர்கள் வீட்டிலேயே தங்கியிருக்க துரத்தி அடிக்கப்படுவார்கள். இது தான் கதையின் முடிவு,” என்றார்.

இதற்கிடையே வடக்கில் 4,000 மைல்களுக்கு அப்பால் மெக்சிகோவில், ஜனாதிபதி Andrés Manuel López Obrador புதன்கிழமை ஒரு பத்திரிகையாளர் சந்திப்பை நடத்தினார், அதில் அவர், “சுரங்கத்தின் முடிவில் ஓர் ஒளி" தெரிகிறது, மெக்சிகோவில் ஒரு "புதிய வழமை" உதயமாகிறது என்று பிரகடனப்படுத்தினார். நூற்றுக் கணக்கான தொழிலாளர்கள் ஏற்கனவே கோவிட்-19 க்கு தங்கள் உயிரை இழந்துள்ள நிலையில், மெக்சிகோ தொழிலாளர்கள் மக்கில்லாடோரா மலிவுழைப்பு கூடங்களுக்கும் எல்லையிலுள்ள வாகனத்துறை ஆலைகள், அத்துடன் சுரங்கங்களுக்கும், கட்டுமானம் மற்றும் ஏனைய தொழில்துறைகளுக்கும் மேய்க்கப்பட இருப்பதை அவர் அர்த்தப்படுத்தினார்.

லொப்பேஸ் ஓப்ராடோர் (López Obrador) வெறுமனே மெக்சிகன் முதலாளித்துவவாதிகளின் நலன்களுக்காக மட்டும் செயல்படவில்லை, மாறாக ட்ரம்ப் நிர்வாகம் மற்றும் அமெரிக்க வாகன உற்பத்தியாளர்கள், ஆயுத உற்பத்தியாளர்கள் மற்றும் ஏனைய அமெரிக்க தொழில்துறைகளின் கட்டளைகளுக்கு இணங்க செயல்படுகிறார். இவற்றின் வினியோகச் சங்கிலி மெக்சிகோ உற்பத்தியைச் சார்ந்துள்ளது.

மெக்சிகோவிலும் சரி பிரேசிலிலும் சரி, Ciudad Juarez, Tijuana, Mexicali மற்றும் Reynosa இன் மக்கில்லாடோரா தொழிலாளர்களில் இருந்து பிரேசில் எங்கிலுமான கால் சென்டர் மற்றும் பண்டங்கள் வினியோக தொழிலாளர்கள் வரையில், அவர்களின் சக தொழிலாளர்கள் நோயில் வீழ்ந்து வேலையில் உயிரிழந்துள்ள போதினும் கூட, தொடர்ந்து அவர்கள் வேலை செய்ய நிர்பந்திக்கப்படுவதற்கான முயற்சிகளுக்கு எதிராக ஏற்கனவே போராட்டம் நடத்தி போராடி உள்ளனர். இவ்விரு நாடுகளிலும் வேலைக்குத் திரும்புவதற்கான இருமடங்கு அதிகரிக்கப்பட்ட பிரச்சாரம் ஒரு வெடிப்பார்ந்த வர்க்க போராட்டத்திற்கு மட்டுமே இட்டுச் செல்ல முடியும்.

இந்த உயிராபத்தான கொரொனா வைரஸ் தொற்றுநோயின் முன்னால், சமூக வெறுப்பு கொண்ட பாசிசவாத முன்னாள் இராணுவ தளபதி போல்சொனாரோவும், சர்வதேச போலி-இடதால் ஒரு "முற்போக்கு,” “இடதுசாரி" மற்றும் மெக்சிகன் மக்களின் "சோசலிச" பிரதிநிதி என்றும் கூட பெருமைப்படுத்தப்பட்டு வரும் லோபஸ் ஓப்ராடோரும் தொழிலாளர்களின் உயிர்களை விலையாக கொடுத்து உள்நாட்டு செல்வந்தர்கள் மற்றும் சர்வதேச நிதிய மூலதனத்தின் நலன்களைப் பாதுகாக்கும் ஒரே கொள்கையை எட்டியுள்ளனர்.

முதலாளித்துவ ஆளும் வர்க்கங்கள் மற்றும் ஏகாதிபத்தியத்தின் நலன்களைப் பிரதிநிதித்துவப்படுத்தும் இப்போதிருக்கும் அரசியல் கட்சிகள் மற்றும் அமைப்புரீதியிலான கட்டமைப்புகள் அனைத்திற்கும் எதிராக இலத்தீன் அமெரிக்கா எங்கிலும் தொழிலாள வர்க்கத்தைச் சுயாதீனமாக அரசியல்ரீதியில் அணிதிரட்டுவதற்கான தவிர்க்க முடியாத அவசியத்தை இந்தளவுக்கு கூர்மையாக வேறெதும் எடுத்துக்காட்ட முடியாது. போல்சொனாரோ, சிலியில் பினெரா மற்றும் கொலம்பியாவில் டுகே என அதிவலது அரசாங்கங்கள் மட்டும் இதில் உள்ளடங்கி இல்லை, மாறாக லோபஸ் ஓப்ராடோர் போன்ற "இடது" முதலாளித்துவ தேசியவாதிகளாக கருதப்படுபவர்கள் மற்றும் வெனிசுவேலாவின் "பொலிவிய சோசலிசவாதிகள்" மற்றும் பிரேசிலில் தொழிலாளர்கள் கட்சியின் (PT) ஊழல்பீடித்த முதலாளித்துவ எந்திரமும் இதில் உள்ளடங்கும்.

முதலாளித்துவத்தை முடிவு கட்டுவதற்கான ஒரு பொதுவான போராட்டத்தில் அமெரிக்காவிலும் மற்றும் சர்வதேச அளவிலும் தொழிலாளர்களுடன் ஒருங்கிணைந்து, இலத்தீன் அமெரிக்கா எங்கிலும் தொழிலாளர்களை ஐக்கியப்படுத்துவதற்கான போராட்டத்தை அடிப்படையாக கொண்ட ஒரு புதிய புரட்சிகரமான தொழிலாள வர்க்க தலைமையைக் கட்டமைப்பதே இந்த கொரொனா வைரஸ் தொற்றுநோயும் மற்றும் அது கூர்மைப்படுத்தி வரும் இந்த வர்க்க போராட்டமும் முன்நிறுத்தும் தீர்க்கமான பணியாகும். இதன் அர்த்தம், பிரேசில், மெக்சிகோ மற்றும் இந்த அரைகோளம் எங்கிலும் நான்காம் அகிலத்தின் அனைத்துலகக் குழுவின் பிரிவுகளைக் கட்டமைப்பதாகும்.

கட்டுரையாளர் பரிந்துரைக்கும் ஏனைய கட்டுரைகள்:

COVID-19 க்கும் பட்டினிக்கும் இடையில் தேர்வு செய்வதற்கான கோரிக்கைகளை பிரேசில் தொழிலாளர்கள் நிராகரிக்கின்றனர்
[9 May 2020]

மெக்சிகோவின் தொழிலாளர்களும் வேலைக்கு திரும்புங்கள் பிரச்சாரத்திற்கு எதிரான போராட்டமும்
[11 May 2020]

Bill Van Auken