உலகெங்கிலும் கொரொனா வைரஸ் பரவி வருகின்ற நிலையில், உலக சுகாதார மாநாட்டில் அமெரிக்க-சீன மோதல் மேலோங்கியது

21 May 2020

மொழிபெயர்ப்பின் மூலக் கட்டுரையை இங்கே காணலாம்

உலகின் தெற்கு பகுதியில் வறிய மற்றும் ஒடுக்கப்பட்ட நாடுகளில் பாரியளவிலான உயிரிழப்புகள் மற்றும் அவலங்களை ஏற்படுத்தும் அச்சுறுத்தலுடன், கோவிட்-19 தொற்றுநோய் தொடர்ந்து பரவும் என்ற பயங்கரமான முன்கணிப்புகளுக்கு மத்தியில், வாஷிங்டன் திங்கட்கிழமை நடந்த உலக சுகாதார அமைப்பின் (WHO) வருடாந்தர மாநாட்டை சீனாவைப் பலிக்கடா ஆக்குவதற்கான அதன் இடைவிடாத பிரச்சாரத்திற்கான அரங்கமாக மாற்ற முனைந்தது.

உலகெங்கிலும் கொரொனா வைரசால் உறுதி செய்யப்பட்ட நோயாளிகளின் எண்ணிக்கை சுமார் 4.8 மில்லியனாகவும் உயிரிழப்புகள் 317,000 ஆகவும் உள்ள நிலையில், உலகெங்கிலும் நூறு மில்லியன் கணக்கான உழைக்கும் மக்கள் அவர்களின் வேலைகள் மற்றும் வருவாய்களை இழந்துள்ள அதேவேளையில், உலக சுகாதார அமைப்பின் 194 உறுப்பு நாடுகளில் இருந்து பிரதிநிதிகளை ஒருங்கிணைத்திருந்த அதன் 73 ஆவது வருடாந்தர உலக சுகாதார பேரவை திங்கட்கிழமை நடத்தப்பட்டது.

பிரேசில், திங்கட்கிழமை, மே 18, 2020, மனாஸின் கில்பேர்ட்டோ நோவியாசின் நகராட்சி வெளிப்புற மருத்துவமனையில் 'Vanessa Capsule' என்று பெயரிடப்பட்ட உடலில் உள்செலுத்தப்படாத செயற்கை சுவாசம் செலுத்தும் அறையில் கோவிட்-19 நோயாளிகளுக்கு சிகிச்சை அளிக்கப்படுகிறது (படம்: AP/Felipe Dana)

இத்தகைய நிலைமைகளின் கீழ், ட்ரம்ப் நிர்வாகம் அதன் சுகாதார மற்றும் மனிதவள சேவைகள் துறை செயலர் அலெக்ஸ் அசாரின் பதிவு செய்யப்பட்ட ஓர் ஆக்ரோஷமான காணொளியை வெளியிட்டது, இது WHO மற்றும் சீனா இரண்டுக்கும் எதிராக வாஷிங்டனின் ஆதாரமற்ற குற்றச்சாட்டுக்களை இரட்டிப்பாக்கி இருந்தது.

“இந்த வெடிப்பு கட்டுப்பாட்டை மீறி பரவியதற்கான பிரதான காரணங்களில் ஒன்றை குறித்து நாம் வெளிப்படையாக இருக்க வேண்டும்,” என்று குறிப்பிட்ட அசார், “உலகிற்கு அவசியமான தகவலைப் பெறுவதில் அந்த அமைப்பு தோல்வி அடைந்து விட்டது, அந்த தோல்வி தான் பல உயிர்களை விலையாக எடுத்துள்ளது,” என்றார்.

உலக சுகாதார அமைப்பின் வருடாந்தர வரவு-செலவு திட்டக்கணக்கில் ஐந்தில் ஒரு பங்கான 400 மில்லியன் டாலரை WHO க்கு வழங்கும் அமெரிக்க நிதியுதவி மீது ட்ரம்ப் நிர்வாகம் திணித்த முடக்கத்தை அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் காலவரையின்றி நீடிக்க முடிவெடுத்துள்ளார் என்ற செய்திகளுக்கு மத்தியில் அசாரின் குற்றச்சாட்டு வந்தது.

சீனா மீதான அவர் கோபத்தின் பக்கம் திரும்பிய அசார், இந்த தொற்றுநோய் வெடிப்புக்கான பெய்ஜிங்கின் விடையிறுப்பை அமெரிக்கா மீது இந்த தொற்றுநோயைப் பரப்பி அதை பலவீனப்படுத்துவதற்கான ஒரு திட்டமிட்ட முயற்சியாக சித்தரித்ததுடன், ட்ரம்ப் வெள்ளை மாளிகையால் வளர்க்கப்பட்ட ஆர்ப்பரிப்பான சூழ்ச்சி தத்துவங்களையே அவரும் எதிரொலித்தார்.

“இந்த வெடிப்பை மூடிமறைக்கும் ஒரு வெளிப்படையான முயற்சியில் குறைந்தபட்சம் ஒரு உறுப்பு நாடாவது அவர்களின் வெளிப்படை கடமைப்பாடுகளைக் கேலிக்கூத்தாக ஆக்கியது, இதனால் ஒட்டுமொத்த உலகமும் மிகப் பெரிய விலை கொடுத்து வருகிறது,” என்று அசார் தெரிவித்தார். “உறுப்பு நாடுகள் நல்லெண்ணத்துடன் நடந்து கொள்ளாத போது, தகவல் பகிர்வு மற்றும் வெளிப்படைத்தன்மை மீதான அதன் முக்கிய நோக்கத்தில் WHO தோல்வி அடைந்து விட்டதை நாம் பார்த்தோம்,” என்றார்.

இதெல்லாமே முட்டாள்தனமானது. இந்த கூட்டத்தில் அவரின் சொந்த உரையை வழங்குகையில் WHO தலைவர் Tedros Adhanon Ghebreysus தெளிவுபடுத்தியதைப் போல, உலக சுகாதார அமைப்பு "ஆரம்பத்திலேயே எச்சரிக்கை ஒலி எழுப்பி இருந்தது, நாங்கள் அதை அடிக்கடி எழுப்பினோம்,” என்றார். ஜனவரி 30 இல், WHO, சீனா வினியோகித்த தகவல்களின் அடிப்படையில், அதன் அதிகபட்ச எச்சரிக்கை மட்டத்தில், ஓர் உலகளாவிய மருத்துவ அவசரநிலையை அறிவித்தது. அந்த நேரத்தில், உறுதிசெய்யப்பட்ட நோயாளிகளின் எண்ணிக்கை 100 க்கும் குறைவாகவே இருந்தததுடன், சீனாவுக்கு வெளியே ஒரேயொரு உயிரிழப்பும் கூட இருந்திருக்கவில்லை.

அமெரிக்க அரசாங்கம் அந்த எச்சரிக்கையைப் புறக்கணிக்க முடிவெடுத்ததுடன், அனைத்திற்கும் மேலாக வோல் ஸ்ட்ரீட்டில் பங்கு விலைகளை அதிகரித்து வைத்திருப்பதற்காக கொரொனா வைரஸ் அபாயங்களைக் குறைத்துக் காட்டுவதில் அக்கறை கொண்டிருந்தது. இந்த தொற்றுநோயின் பாதிப்பை மறுக்க முடியாது என்று ஆன உடனே, பெரும் பெரும்பான்மை ஆதாரவளங்களை நிதியியல் சந்தைகளுக்குப் பாரியளவில் பல ட்ரில்லியன் டாலர் பிணையெடுப்பு வழங்குவதற்காக திருப்பி விடுவதே அதன் விடையிறுப்பாக இருந்தது.

வாஷிங்டனின் குற்றகரமான அலட்சியமும் அசட்டைத்தனமும் அதன் தவிர்க்கவியலாத பாதிப்பைக் கொண்டிருந்தன, அது கொரொனா வைரஸ் பரவல் மற்றும் அதன் பாரிய உயிரிழப்பு எண்ணிக்கையில் மிக அதிகமாக அமெரிக்காவை முதல் நாடாக ஆக்கியது. உலக மக்கள்தொகையில் வெறும் நான்கு சதவீத மக்கள்தொகை கொண்ட அமெரிக்கா, உலகில் உறுதி செய்யப்பட்ட தொற்றுநோய்களில் மூன்று பங்கிற்கு நெருக்கமாகவும் மற்றும் உலகளவில் உயிரிழப்புகளில் முழுமையாக 29 சதவீதத்தையும் அதன் கணக்கில் கொண்டுள்ளது.

அமெரிக்க கொள்கை மீது இதைவிட மறுக்கமுடியாத ஒரு குற்றப்பத்திரிகை இருக்க முடியாது. உலக சுகாதார அமைப்பு மற்றும் சீனா மீதான இந்த போலியான தாக்குதல்கள் இந்த குற்றகரமான முன்வரலாறில் இருந்து கவனத்தைத் திசைதிருப்புவதை நோக்கமாக கொண்டுள்ளதுடன், அதேவேளையில் அமெரிக்க ஏகாதிபத்தியம் அதன் பிரதான உலகளாவிய போட்டியாளருக்கு எதிராக போர் முனைவைத் தீவிரப்படுத்துவதன் மூலமாக அது பின்தொடர்ந்து வரும் உலகளாவிய புவிசார் மூலோபாய நலன்களை முன்னெடுத்து வருகிறது.

இந்த தொற்றுநோயின் முதல் குவிமையங்களாக ஆன அமெரிக்காவிலும் ஐரோப்பாவிலும், முதலாளித்துவ ஆளும் வர்க்கங்கள் —உடல் ஆரோக்கியம் ஆகட்டும் உயிராகட்டும் என்ன விலை கொடுத்தாவது— தொழிலாள வர்க்கத்தைக் கட்டுப்பாடின்றி சுரண்டுவதை மீண்டும் தொடர்வதற்காக காலத்திற்கு முந்தியே "பொருளாதாரத்தை மீண்டும் திறந்துவிடுவதை" தொடங்க முயன்று வருகையில், இந்த தொற்றுநோயோ தொடர்ந்து உலகளவில் பரவி கொண்டிருக்கிறது.

“இந்த வைரஸ் உலகெங்கிலும் பரவி உள்ளது, இப்போது அது தெற்கு உலகை நோக்கி நகர்ந்து வருகிறது, அங்கே இதன் பாதிப்பு இன்னும் அதிகமாக நாசகரமாக இருக்கக்கூடும்,” என்று அந்த உலக சுகாதார அமைப்பு கூட்டத்தில் ஐ.நா. பொது செயலாளர் அன்டோனியோ குட்டெரெஸ் (Antonio Guterres) எச்சரித்தார்.

உலக சுகாதார அமைப்பின் பொது இயக்குனர் Tedros, “அபிவிருத்தி அடைந்து வரும் நாடுகள், வன்முறை மற்றும் மோதலால் பாதிக்கப்பட்டுள்ள நாடுகள் மிகவும் சவாலான சூழல்களில் இந்த அச்சுறுத்தலை எதிர்கொள்ள முயன்று வருகின்றன,” என்று குறிப்பிட்டு அதேபோன்றவொரு எச்சரிக்கையை வெளிப்படுத்தினார்.

“நெரிசலான நிலைமைகளில் வாழும் போது எவ்வாறு உடல்ரீதியில் இடைவெளியை நடைமுறைப்படுத்த முடியும்?” என்றவர் கேள்வி எழுப்பினார். “குடும்பத்திற்கு உணவளிக்க வேலை செய்ய வேண்டியிருக்கையில் வீட்டில் எவ்வாறு தங்கியிருக்க முடியும்? சுத்தமாக தண்ணீரே இல்லாதபோது எவ்வாறு கைகளைச் சுத்தப்படுத்துவதை நடைமுறைப்படுத்த முடியும்?” என்றார்.

மனிதகுலத்தின் பெரும்பான்மையினர் இத்தகைய நிலைமைகள் தான் எதிர்கொண்டுள்ளனர், இது முன்னாள் காலனித்துவ நாடுகள் மற்றும் வரலாற்றுரீதியில் ஒடுக்கப்பட்ட நாடுகளில் இந்த தொற்றுநோய் மிகவும் வெடிப்பார்ந்து வளர்வதற்கு இட்டுச் செல்கிறது.

தென் அமெரிக்காவில், உறுதி செய்யப்பட்ட நோயாளிகளின் எண்ணிக்கை 443,000 ஆக அதிகரித்துள்ளதுடன், உயிரிழப்புகளின் எண்ணிக்கை 23,000 க்கும் அதிகமாக உள்ளது. அக்கண்டத்தின் மிகப் பெரிய நாடான பிரேசிலில் பாதிக்கும் மேற்பட்டவர்களுக்கு நோய் உறுதி செய்யப்பட்டு, 244,000 க்கும் அதிகமான நோயாளிகளைக் கணக்கில் கொண்டுள்ளது, அதேவேளையில் நிஜமான எண்ணிக்கை 15 மடங்கிற்கும் அதிகமாக இருக்கலாமென ஆய்வுகள் சுட்டிக்காட்டுகின்றன. உறுதி செய்யப்பட்ட உயிரிழப்புகளின் எண்ணிக்கை 16,000 இக்கும் அதிகமாக உள்ளது.

பிரேசிலின் மிகப் பெரிய நகரும் அந்நாட்டின் கோவிட்-19 வெடிப்பின் குவிமையமாகவும் உள்ள சாவோ பௌலோவில், அந்நகர பொது மருத்துவமனைகள் "பொறிவுக்கு அருகாமையில்" இருப்பதாக அந்நகரசபை தலைவர் ஒப்புக் கொள்கிறார். அவற்றின் கொள்திறனில் ஏற்கனவே 90 சதவீதம் நிரம்பிவிட்ட நிலையில், அவை இரண்டு வாரங்களுக்குள் புதிய நோயாளிகளை ஏற்காமல் திரும்ப அனுப்பத் தொடங்கிவிடும்.

நோயாளிகள் மற்றும் உயிரிழப்புகளின் எண்ணிக்கை அதிகரித்து வருகின்ற நிலையில், பிரேசிலின் பாசிசவாத ஜனாதிபதி ஜயர் போல்சொனாரோ முதலாளித்துவ உற்பத்தியைத் தங்குதடையின்றி மீண்டும் ஆரம்பிக்க கோரியுள்ளார், மாநில அரசாங்கங்கள் திணித்துள்ள மட்டுப்பட்ட சமூக-இடைவெளி நடவடிக்கைகளுக்கு எதிராகவும் கூட அந்நாட்டின் நிதியியல் மற்றும் பெருநிறுவன செல்வந்த தட்டுக்கள் "போருக்குள்" செல்லுமாறு அவர் வலியுறுத்துகிறார். இந்த தொற்றுநோயைக் கையாள்வதில் ஏற்படும் எந்தவொரு "தவறுகளுக்கும்" பொது ஆணையங்களிடம் இருந்து முழு விலக்கு வழங்கும் ஓர் உத்தரவிலும் அவர் கையெழுத்திட்டுள்ளார்.

போல்சொனாரோவும் இராணுவத்திற்குள் உள்ள அவரின் ஆதரவாளர்களும் தொழிலாளர்களைப் பாதுகாப்பற்ற ஆலைகள் மற்றும் வேலையிடங்களுக்குள் மந்தை மந்தையாக அனுப்ப முன்பினும் அதிக எதேச்சதிகார ஆட்சி வடிவங்களையும் கூட ஏற்படுத்த நகர்கின்ற நிலையில், இந்நோய் வெடித்ததற்குப் பின்னர் இருந்து 116 செவிலியர் மரணங்களுடன் உலகிலேயே அதிகபட்ச உயிரிழப்பு எண்ணிக்கையால் பாதிக்கப்பட்டுள்ள மருத்துவக் கவனிப்புத்துறை தொழிலாளர்களின் போராட்டங்கள் மற்றும் வேலைநிறுத்தங்களில் வெடிப்பார்ந்த அதிகரிப்பு உள்ளது.

தெற்காசியாவும் பூமியில் கொரொனா வைரஸ் தொற்றுக்களின் அதிகபட்ச அதிகரிப்பு விகிதங்களைக் கொண்ட பகுதிகளில் ஒன்றாக பாதிக்கப்பட்டு வருகிறது. இந்தியாவின் உறுதி செய்யப்பட்ட நோயாளிகளின் எண்ணிக்கை 100,000 க்கு அதிகமாகவும், உயிரிழப்புகள் 3,000 க்கு அதிகமாகவும் அதிகரித்துள்ளது. இந்த உயிர்பறிக்கும் வைரஸ் டெல்லி மற்றும் மும்பையின் சேரிகளில் அதன் அதிகபட்ச மரண எண்ணிக்கையை ஏற்படுத்தி வருகிறது. பிரதம மந்திரி நரேந்திர மோடியின் அதிவலது இந்து தேசியவாத அரசாங்கம் உலகிலேயே மிகவும் கடுமையான அடைப்புகளில் ஒன்றை திணித்துள்ள நிலையில், அந்நாட்டின் மிகவும் நொடிந்து போயுள்ள மருத்துவக் கவனிப்பு முறை இந்த வெடிப்பைக் கையாள தயார் நிலையில் இல்லை. அந்நாடு மருத்துவக் கவனிப்பு துறைக்காக அதன் மொத்த உள்நாட்டு உற்பத்தியில் வெறும் 1 சதவீதத்தை மட்டுமே செலவிடுகிறது. நோய், பட்டினி, பொலிஸ் வன்முறை, பெருந்திரளான தொழிலாளர்கள் மற்றும் ஒடுக்கப்பட்ட மக்கள் மீது காட்டுமிராண்டித்தனம் ஆகியவையே இதன் விளைவாக உள்ளது.

வறுமையும் பட்டினியும் தொழிலாளர்களை மீண்டும் தொழிற்சாலைகளுக்குள் தள்ள பயன்படுத்தப்பட்டு வருகின்றன, அதேவேளையில் அரசாங்கம் சீனாவிலிருந்து வெளியேறும் பெருநிறுவன மற்றும் நிதியியல் முதலீட்டை ஈர்க்கும் நோக்கில் பாரியளவில் தனியார்மயமாக்கல் மற்றும் பொருளாதார புனரமைப்பு திட்டங்களை முன்நகர்த்துவதற்கு இந்த நெருக்கடியைப் பயன்படுத்துகிறது.

மே 18 இல், இலங்கையின் உறுதி செய்யப்பட்ட கொரொனா வைரஸ் நோயாளிகளின் எண்ணிக்கை 986 ஆகவும் ஒன்பது உயிரிழப்புகளாகவும் இருந்தது. இந்த வைரஸ் பரவி வரும் அபாயத்திற்கு இடையிலும், ஜனாதிபதி கோத்தபாய இராஜபக்ஷவின் அரசாங்கம் மே 11 இல் இருந்து அதன் அடைப்பை நீக்கி விட்டு அந்நாட்டின் பொருளாதாரத்தை மீண்டும் திறந்துள்ளது. கொழும்பு மற்றும் அதை ஒட்டியுள்ள கம்பஹா மாவட்டம் ஊரடங்கில் வைக்கப்பட்டு போதினும், அனைத்து பொதுத்துறை மற்றும் தனியார் துறை நிறுவனங்களும் அவற்றின் வழமையான பணியாளர் சக்தியில் மூன்றில் ஒரு பங்குடன் அத்தீவு எங்கிலும் செயல்பட அனுமதிக்கப்பட்டுள்ளன. அதே நேரத்தில், அதன் இராணுவமயப்பட்ட திட்டங்களைத் தீவிரப்படுத்துவதற்காக இந்த தொற்றுநோயைப் பயன்படுத்துக் கொள்ளும் அதன் கொள்கைக்கு இசைந்த விதத்தில், இராஜபக்ஷ அரசாங்கம் கொழும்பிலும், இரயில்கள், இரயில் நிலையங்கள் மற்றும் பேருந்து நிலையங்களுக்கு உள்ளேயும் சிப்பாய்களை நிலைநிறுத்தி, மக்கள் நகர்வுகளை மேற்பார்வையிட்டு வருகிறது.

பிலிப்பைன்ஸ் 12,718 உறுதி செய்யப்பட்ட நோயாளிகளையும் 831 உயிரிழப்புகளையும் பதிவு செய்துள்ளது. ஜனாதிபதி ரொட்ரிகோ டுரேற்ற (Rodrigo Duterte) ஜூன் வரையில் அடைப்பை நீடித்துள்ளார். டுரேற்ற இந்த தொற்றுநோய் நெருக்கடியின் மூடிமறைப்பின் கீழ் ஜனநாயக உரிமைகள் மீதான அவரின் ஒடுக்குமுறையை தீவிரப்படுத்தி உள்ளார். அவர் அரசாங்கம், அந்நாட்டின் மிகப்பெரிய தொலைக்காட்சி வலையமைப்பான ABS-CBN இன் தனியுரிமைகள் காலாவதி ஆகிவிட்டது என்ற அற்ப சட்ட பாசாங்குத்தனத்தின் கீழ் அதை மூடிவிட்டுள்ளது. ஆனால் டுரேற்றயின் எதேச்சதிகார நகர்வுகளை நோக்கிய அந்த வலையமைப்பின் விமர்சனபூர்வ போக்கே நிஜமான காரணமாகும்.

தெற்காசிய நாடுகளில் கடுமையாக பாதிக்கப்பட்ட நாடுகளில் ஒன்றாக ஆப்கானிஸ்தான் உருவெடுத்துள்ளது. அண்மித்து இரண்டு தசாப்த காலம் நீண்ட அமெரிக்க ஏகாதிபத்திய போரால் சீரழிக்கப்பட்ட அந்நாட்டில் கோவிட்-19 அதன் மக்களினது துயரங்களை இன்னும் தீவிரப்படுத்தி உள்ளது. தற்போது ஆப்கானிஸ்தானில் 7,072 உறுதி செய்யப்பட்ட கோவிட்-19 நோயாளிகளும் இந்த வைரஸால் சுமார் 173 உயிரிழப்புகளும் ஏற்பட்டுள்ளன. குறைந்த பரிசோதனை வசதிகளுடன், இந்த எண்ணிக்கையானது அந்த வைரஸின் நிஜமான எண்ணிக்கையில் கேள்விக்கிடமின்றி ஒரு சிறிய பகுதியாக உள்ளது.

ஆபிரிக்கா அதன் உறுதி செய்யப்பட்ட நோயாளிகளின் எண்ணிக்கையை திங்கட்கிழமை அண்மித்து 87,000 ஆகவும் 2,800 க்கு நெருக்கமான உயிரிழப்புகளையும் கண்டது. லெசோதொ அதன் முதல் தொற்றை அறிவித்ததுடன், அக்கண்டத்தில் உள்ள 54 நாடுகளில் ஒவ்வொன்றும் உலகளாவிய இந்த தொற்றுநோயின் பாகமாக ஆகியுள்ளன. அதன் வறிய மருத்துவக் கவனிப்பு முறைகள் குறைந்தளவே இந்த உயிர்பறிக்கும் வைரஸை எதிர்கொள்ள முடியும் என்கின்ற நிலையில், ஒரு பில்லியன் ஆபிரிக்கர்களில் ஒரு கால்வாசி பேர் இந்த தொற்றுக்கு ஆளாவார்கள் என்றும், இந்த தொற்றுநோயின் முதலாண்டிலேயே ஏறக்குறைய 190,000 பேர் உயிரிழப்பார்கள் என்றும் உலக சுகாதார அமைப்பு முன்கணித்துள்ளது.

தென் ஆபிரிக்காவில் திங்கட்கிழமை 15,515 உறுதி செய்யப்பட்ட நோயாளிகள் இருந்தனர், 262 உயிரிழப்புகள் இருந்தன. அந்நாட்டின் மேற்கத்திய கேப் பகுதி இந்த வைரஸின் அதிகபட்ச சமூக பரவில் விகிதத்தைக் கண்டுள்ளது, கேப் டவுனின் மிகப்பெரிய உத்தியோகபூர்வமின்றி மக்கள் வாழும் பகுதியான Khayelitsha போன்ற அதன் வறிய மற்றும் மக்கள் நெரிசலான நகரங்களில் அந்த வைரஸ் ஒருகுவிந்திருந்தது.

ஆபிரிக்காவில் உறுதி செய்யப்பட்ட அதிகபட்ச உயிரிழப்பு எண்ணிக்கையான 630 எகிப்தில் பதிவாகி உள்ளது, அது 12,229 உறுதி செய்யப்பட்ட நோயாளிகளைப் பதிவு செய்துள்ளது. அமெரிக்க ஆதரவிலான சர்வாதிகாரி ஜெனரல் அப்தெல் பதாஹ் எல்-சிசி இதன் பொலிஸ் அரசு இந்த ஆட்சியின் புள்ளிவிபரங்கள் மீதும் இந்த நெருக்கடியை அது கையாளும் முறை மீதும் கேள்வி எழுப்பி கட்டுரைகள் எழுதும் பத்திரிகையாளர்களைச் சுற்றி வளைத்து, ஒடுக்குமுறையைத் தீவிரப்படுத்துவதற்காக இந்த தொற்றுநோயைச் சாதகமாக்கி கொண்டுள்ளது.

அக்கண்டத்தின் மிகவும் மக்கள்தொகை நிறைந்த நாடான நைஜீரியாவிலும், அண்மித்து 6,000 உறுதி செய்யப்பட்ட நோயாளிகள் மற்றும் 182 உயிரிழப்புகளுடன், நோயாளிகளினது எண்ணிக்கையில் கூர்மையான அதிகரிப்புகள் அறிவிக்கப்பட்டுள்ளன. வெறும் 28,000 பரிசோதனைகளே செய்யப்பட்டுள்ள நிலையில், அதில் 21 சதவீத முடிவுகள் நோயை உறுதி செய்துள்ள நிலையில், நிஜமான எண்ணிக்கைகள் கேள்விக்கிடமின்றி இன்னும் அதிகமாகவே இருக்கும்.

கானாவும் அதன் நோயாளிகளில் ஒரு கூர்மையான அதிகரிப்பைக் கண்டுள்ளது, அங்கே ஒரு மீன் பதனிடும் ஆலையில் 500 இக்கும் அதிகமான தொழிலாளர்கள் கொரொனா வைரஸால் பாதிக்கப்பட்டிருப்பதாக பரிசோதிக்கப்பட்டுள்ளனர்.

மே 1 ஆம் தேதிக்குப் பின்னர் இருந்து, தென் ஆப்ரிக்கா, நைஜீரியா மற்றும் கானா அனைத்துமே கொரொனா வைரஸ் நோயாளிகள் இரட்டிப்பாவதைக் கண்டுள்ளன, இவ்வாறிருக்கையிலும் கூட அம்மூன்று நாடுகளின் அரசாங்கங்களும் வியாபாரங்களையும் உற்பத்தையையும் படிப்படியாக மீண்டும் திறந்து விட்டுள்ளன.

மத்திய கிழக்கில், கோவிட்-19 நோயாளிகளின் எண்ணிக்கை திங்கட்கிழமை 465,000 க்கும் அதிகமாக அதிகரித்தது. அதிகபட்ச நோயாளிகளின் எண்ணிக்கை —150,000— துருக்கியில் பதிவாகி உள்ளது. ஈரானில் 122,000 நோயாளிகள் உள்ளனர், அப்பிராந்தியத்தில் உறுதி செய்யப்பட்ட உயிரிழப்புகளின் அதிகபட்ச எண்ணிக்கை 7,057 ஆக உள்ளது. அது திங்களன்று 2,294 க்கும் அதிகமான நோயாளிகள் கண்டறியப்பட்டதுடன் சேர்ந்து, அதன் மிக அதிகபட்ச ஒருநாள் நோயாளிகள் அதிகரிப்பை அறிவித்தது. ஆனால் அந்த அரசாங்கம் தனிமைப்படுத்தப்படும் கட்டுப்பாடுகளைத் தளர்த்தி கடந்த மாத இறுதியில் இருந்து அந்நாட்டின் பொருளாதாரத்தை மீண்டும் திறந்துவிட்டது.

சிரியா, லிபியா மற்றும் யெமன் எங்கிலும் கூட இந்த உயிராபத்தான வைரஸ் பரவி வருகின்ற அதேவேளையில், அமெரிக்க ஆதரிவிலான ஏகாதிபத்திய தலையீடுகளால் சமூக உள்கட்டமைப்பு சீரழிக்கப்பட்டுள்ள இம்மூன்று நாடுகளிலும் உள்ளாட்சி ஆணையங்கள் அல்லது சர்வதேச அமைப்புகளது பரிசோதனை இல்லாமை இந்நெருக்கடியின் அளவை அறிந்து கொள்ள முடியாமல் விட்டு வைத்துள்ளது.

உலகெங்கிலும், அமெரிக்கா மற்றும் மேற்கு ஐரோப்பாவில் இருந்து, இலத்தீன் அமெரிக்கா, ஆசியா, ஆபிரிக்கா மற்றும் மத்தியக் கிழக்கு வரையில், கோவிட்-19 தொற்றுநோயானது முன்னரே இருந்து வரும் பரவலான சமூக சமத்துவமின்மை நிலைமைகளையும், பாரிய பெருந்திரளான உழைக்கும் மக்களிடம் இருந்து செல்வ வளத்தை ஆளும் நிதியியல் செல்வந்த தட்டுக்களுக்கு கைமாற்றுவதையும், ஜனநாயக ஆட்சி வடிவங்களை ஒன்றுமில்லாமல் செய்வதையும், எதேச்சதிகாரத்தை நோக்கிய அதிகரித்த திருப்பத்தையும், ஏகாதிபத்திய போரை நோக்கிய கட்டமைப்பையும் அம்பலப்படுத்தியும் தீவிரப்படுத்தியும் உள்ளது.

உலகெங்கிலும் மில்லியன் கணக்கான மக்களின் உயிர்கள் அந்தரத்தில் தொங்கிக் கொண்டிருக்கையில், இந்த தொற்றுநோய்க்கு எதிரான போராட்டம் முன்பினும் பகிரங்கமாக ஓர் அரசியல் போராட்டமாக உருவெடுத்து வருகிறது, சோசலிசத்திற்கான போராட்டத்தில் தொழிலாள வர்க்கத்தை சுயாதீனமாக அரசியல்ரீதியில் அணிதிரட்டுவது மற்றும் சர்வதேச அளவில் ஐக்கியப்படுத்தும் வழிவகைகள் மூலமாக மட்டுமே இந்த போராட்டத்தை வெற்றிகரமாக தொடுக்க முடியும்.

Bill Van Auken