கோவிட்-19 வைரஸ் பரவலை தடுக்கவும், உயிர்களைக் காப்பாற்றவும் சாமானிய தொழிலாளர்களின் தொழிற்சாலை மற்றும் பணியிடக் குழுக்களை உருவாக்குங்கள்!

22 May 2020

மொழிபெயர்ப்பின் மூலக் கட்டுரையை இங்கே காணலாம்

கொரோனா வைரஸ் தொற்றுநோய் அமெரிக்காவில் ஒரு பயங்கரமான எண்ணிக்கையைத் தொடுகின்றது. அமெரிக்கா ஏற்கனவே உலகின் வேறு எந்த நாட்டையும் விட அதிகமான உயிர்களை இழந்துள்ளது. அமெரிக்காவில் 1.5 மில்லியனுக்கும் அதிகமான மக்கள் COVID-19 நோயால் பாதிக்கப்பட்டுள்ளனர். இறப்பு எண்ணிக்கை 100,000 ஐ நெருங்குகிறது. ஒவ்வொரு நாளும், 20,000 க்கும் மேற்பட்ட புதிய தொற்றுக்கள் மற்றும் சுமார் 1,500 இறப்புகள் உள்ளன.

உலகளவில், கொரோனா வைரஸ் கிட்டத்தட்ட 330,000 மக்களைக் கொன்றள்ளதுடன் மற்றும் ஐந்து மில்லியனுக்கும் அதிகமான தொற்றுக்கு உள்ளாக்கியுள்ளது. உண்மையான தாக்கத்தை பெரிதும் குறைத்துக்காட்டுகின்ற இந்த உத்தியோகபூர்வ புள்ளிவிவரங்களின்படி, கிழக்கு ஐரோப்பா, ஆசியா, தெற்காசியா மற்றும் இலத்தீன் அமெரிக்காவில், குறிப்பாக பிரேசிலில், தொற்றுநோய்களின் வீதம் வேகமாக அதிகரித்து வருகிறது. பிரேசில் ஸ்பெயினை முந்தி ஆகக்கூடிய தொற்றுக்களை கொண்ட நாட்டில் மூன்றாம் இடத்திலுள்ளது.

கொரோனா வைரஸுக்கு தேசிய எல்லைகள் எதுவும் கிடையாது. உலகின் பிற பகுதிகளில் தொற்றுநோய்களின் அதிகரிப்பு தவிர்க்க முடியாமல் அமெரிக்காவையும் பாதிக்கும். நோய் கட்டுப்பாட்டு மையங்களின் இயக்குனர் ரொபேர்ட் ரெட்ஃபீல்ட் தெற்கு அரைக்கோளத்தில் விரைவாக பரவுவதால், இந்த ஆண்டின் பிற்பகுதியில் அமெரிக்காவில் மீண்டும் ஒருதடவை விரிவடைவது சாத்தியமானது என்று பைனான்சியல் டைம்ஸிடம் கூறியுள்ளார்.

"இது தெற்கு அரைக்கோளத்திற்கு காய்ச்சல் போன்ற தெற்கே செல்லும் என்பதற்கான ஆதாரங்களை நாங்கள் கண்டிருக்கிறோம், அது உண்மையாகி வருகிறது" என்று ரெட்ஃபீல்ட் கூறினார், "இப்போது பிரேசிலில் என்ன நடக்கிறது என்பதை நீங்கள் காண்கிறீர்கள். பின்னர் தெற்கு அரைக்கோளத்தில் பரவி முடிந்ததும், அது வடக்கில் மீண்டும் எழும் என்று நான் சந்தேகிக்கிறேன்” என்றார்.

இந்த எச்சரிக்கைகள் தொற்றுநோயின் மோசமான நிலை முடிந்துவிட்டது என்று ட்ரம்ப் நிர்வாகத்தின் கூற்று பொய்யானது என அம்பலப்படுத்துகிறது. அமெரிக்காவிலேயே, தொற்றுநோய் கட்டுப்பாட்டில் இல்லை. நியூ யோர்க் மாநிலம் கிட்டத்தட்ட 30,000 பேரின் உயிரைப் பறிக்கும் தொற்றுநோய் அலைகளிலிருந்து மீண்டு வருவதால், COVID-19 தொற்றுநோய் இப்போது மத்திய மேற்கு மற்றும் தெற்கு மாநிலங்கள் வழியாக அதிகரித்து வருகிறது.

வாஷிங்டன் பல்கலைக்கழக ஆராய்ச்சியாளர்களால் Health Affairs என்ற மருத்துவ இதழில் வெளியிடப்பட்ட ஒரு புதிய ஆய்வு, இந்த ஆண்டின் இறுதியில் அமெரிக்காவில் மட்டும் இறப்பு எண்ணிக்கை 350,000 முதல் 1.2 மில்லியன் மக்கள் வரை உயரும் என்று மதிப்பிடுகிறது. இந்த கணிப்பீடு தற்போது மேற்கொள்ளப்பட்டு வரும் உடல்ரீதியான விலகியிருத்தல் நடவடிக்கைகளின் தளர்வை கணக்கில் எடுத்துக் கொள்ளவில்லை.

முன்கூட்டிய மற்றும் பொறுப்பற்ற "பொருளாதாரத்தை மீண்டும் திற" மற்றும் "வேலைக்குத் திரும்பு" பிரச்சாரத்தால் நோய்த்தொற்று வீதத்தில் விரைவான அதிகரிப்பு ஏற்படும் ஆபத்து அதிகரித்து வருகிறது. ட்ரம்ப் நிர்வாகமும் நாடு முழுவதும் ஜனநாயக மற்றும் குடியரசுக் கட்சி ஆளுநர்களும் வணிகங்களையும் தொழிற்சாலைகளையும் மீண்டும் திறக்கின்றனர். அனைத்து 50 மாநிலங்களும் கட்டுப்பாட்டு தளர்தலை தொடங்கியுள்ளன, சில சந்தர்ப்பங்களில் பொருளாதார மற்றும் பொழுதுபோக்கு நடவடிக்கைகளுக்கான கட்டுப்பாடுகள் முற்றிலுமாக முடிவடைந்துள்ளன. வெள்ளை மாளிகை, மாநில அதிகாரிகள், ஊடகங்களின் கணிசமான பிரிவுகள் மற்றும் தீவிர வலதுசாரி சக்திகள் அடிப்படை சமூக விலகியிருத்தல் நடவடிக்கைகள் புறக்கணிக்கப்படும் சூழலை உருவாக்குகின்றன.

இந்த பிரச்சாரத்தின் அடிப்படையில் “சமூக நோய் எதிர்ப்புச்சக்தி” (herd immunity) என்ற கருத்து உள்ளது. இதன் பொருள், நடைமுறையில், வைரஸ் பரவுவதைத் தடுப்பதற்கான அனைத்து முயற்சிகளையும் கைவிடுவதாகும். நோய் தடையின்றி பரவ அனுமதிப்பதன் மூலம், ஆளும் வர்க்கம் பல்லாயிரக்கணக்கான அல்லது நூறாயிரக்கணக்கான மக்கள் இறப்பதை உறுதி செய்கிறது.

பெருநிறுவனங்களின் இலாபங்களின் ஓட்டத்தை மீட்டெடுப்பதற்கான உந்துதல்தான் இந்த பிரச்சாரத்தின் தூண்டுதலாகும். விஞ்ஞானத்தின் அடிப்படையில் வேலைக்கு பாதுகாப்பாக திரும்புவதை செயல்படுத்த ஒரு கவனமான திட்டம் இல்லாமல் மற்றும் கடுமையாக அமுல்படுத்தப்பட்ட இதனால் நோய்த்தொற்றின் வீதத்தில் பாரிய அதிகரிப்பு ஏற்படுவதுடன், இதன் விளைவாக கடுமையான நோயும் இறப்பும் ஏற்படும்.

COVID-19 வைரஸ் தொழிற்சாலைகள், கிட்டங்கிகள், அலுவலக கட்டிடங்கள், வணிக வளாகங்கள் மற்றும் அதிக எண்ணிக்கையிலான மக்கள் கூடும் மற்ற எல்லா இடங்களிலும் வேகமாக பரவுகிறது. தொழிலாளர்கள் தம்மை அறியாமல் வேலையில் தொற்றுக்குள்ளாகி இன்னும் அறிகுறிகளைக் காட்டாததால், தங்கள் வீடுகளுக்கும், குடியிருப்புகளுக்கும் திரும்புகையில் அவர்களது குடும்பங்கள், அன்புக்குரியவர்கள் மற்றும் நண்பர்களுக்கு இந்த நோயைப் பரப்புவதால் பெரும் ஆபத்து உள்ளது.

சில்லறை கடைகள் திறக்கப்படுவதால் சேவை ஊழியர்கள் ஆபத்தான சூழலுக்குள் தள்ளப்படுகிறார்கள். அமசன் தொழிலாளர்கள் தொற்றுநோய் முழுவதும் போதிய பாதுகாப்பு உபகரணங்களுடன் பணியாற்றியுள்ளனர். இதில் குறைந்தது ஏழு பேர் இறந்துள்ளனர். ட்ரம்ப் நிர்வாகத்தின் உத்தரவின் பேரில் தொடர்ந்து பணியாற்ற வேண்டிய கட்டாயத்தில், இறைச்சி பொதியாக்கும் தொழிலாளர்கள் மத்தியில் இந்த தொற்று தொடர்ந்து விரிவடைகிறது. போக்குவரத்து அமைப்புகள் செயல்பாடுகளை விரிவுபடுத்துவதால், விமான மற்றும் போக்குவரத்து தொழிலாளர்கள் ஒரு ஆபத்தான சூழ்நிலையை எதிர்கொள்கின்றனர். நியூ யோர்க் நகரில் மட்டும் ஏற்கனவே 100 க்கும் மேற்பட்ட போக்குவரத்து தொழிலாளர்கள் இறந்துள்ளனர்.

எதிர்வரவிருக்கும் வாரங்களில் புதிய தொற்றுக்குள்ளாவோரில் கூர்மையான அதிகரிப்பை எதிர்கொள்ளும் சுகாதாரப் பணியாளர்கள், போதுமான தனிப்பட்ட பாதுகாப்பு உபகரணங்களைக் கொண்டிருக்கவில்லை. சமீபத்திய ஆய்வில், அமெரிக்க செவிலியர்களில் 87 சதவீதம் பேர் பயன்படுத்திய பாதுகாப்பு உபகரணங்களை மீண்டும் பயன்படுத்த வேண்டிய கட்டாயத்தில் உள்ளனர் என்றும், 72 சதவீதம் பேர் தோலினால் அல்லது ஆடைகளால் தொற்றுக்குட்படக்கூடிய நிலைமையில் வேலை செய்கிறார்கள் என்றும் கண்டறியப்பட்டுள்ளது.

எதிர்வரவிருக்கும் விஷயங்களின் அச்சுறுத்தும் அடையாளமாக, பல்லாயிரக்கணக்கான வாகனத் தொழிலாளர்களைத் திரும்ப வேலைக்கு கொண்டுவந்த சில நாட்களில், முக்கிய உற்பத்தி மற்றும் உதிரிப்பாக ஆலைகளில் தொழிலாளர்கள் மத்தியில் COVID-19 இன் பல தொற்றுக்கள் பதிவாகியுள்ளன.

சோசலிச சமத்துவக் கட்சி (SEP) இந்த பொறுப்பற்ற வேலைக்குத் திரும்பும் பிரச்சாரத்தையும், தொற்றுநோய் தொடர்ந்து பரவி வருவதால் அத்தியாவசியமற்ற பணியிடங்களை மீண்டும் திறப்பதையும் எதிர்க்கிறது. தொற்று, நோய் மற்றும் இறப்பு ஆகியவை தடுக்கப்பட வேண்டுமானால், பாதுகாப்பான பணி நிலைமைகளை மேற்பார்வையிடவும் மற்றும் செயல்படுத்தவும் ஒரு புதிய வடிவ பணியிட அமைப்பை உருவாக்குவது அவசியம்.

எனவே, ஒவ்வொரு தொழிற்சாலை, அலுவலகம் மற்றும் பணியிடங்களிலும் சாமானிய தொழிலாளர்களின் மற்றும் பாதுகாப்புக் குழுக்களை அமைக்குமாறு சோசலிச சமத்துவக் கட்சி. ஆலோசனை கூறுகின்றது. தொழிலாளர்களால் ஜனநாயக ரீதியாக கட்டுப்படுத்தப்படும் இந்த குழுக்கள், தொழிலாளர்கள், அவர்களது குடும்பங்கள் மற்றும் பரந்த சமூகத்தின் ஆரோக்கியத்தையும் வாழ்க்கையையும் பாதுகாக்க தேவையான நடவடிக்கைகளை வகுக்கவும், செயல்படுத்தவும் மற்றும் மேற்பார்வையிடவும் வேண்டும்.

"வழக்கம் போல் அனைத்தையும் செய்வது!" என்பது இனிமேலும் இருக்கமுடியாது. பொதுவாக உற்பத்தி, விநியோகம் மற்றும் பொருளாதார நடவடிக்கைகளின் செயல்முறைகளை முழுமையாக மறுசீரமைப்பதற்கான அவசர அவசியத்தை தொற்றுநோய் அம்பலப்படுத்துகிறது. பெருநிறுவன இலாபங்கள் மற்றும் பில்லியனர் தன்னலக்குழுக்களின் தனிப்பட்ட செல்வத்தின் நலன்களுக்காக உழைக்கும் மக்களினதும் அவர்களினது குடும்பங்களின் வாழ்க்கையை தியாகம் செய்யக்கூடாது.

பொருளாதாரத்தை மீண்டும் திறப்பதற்கான" ட்ரம்பின், பெரு வணிகக் கட்சிகள் மற்றும் ஊடகங்களின் அரசியல்வாதிகளின் கோரிக்கைக்கு பதிலளிக்கும் வகையில், "யாருடைய பொருளாதாரம்?" என்று கேட்க்கப்பட வேண்டும். ஜெஃப் பெசோஸ், எலோன் மஸ்க், வோல் ஸ்ட்ரீட் மோசடி செய்பவர்கள் மற்றும் மக்கள் தொகையில் மேல்மட்ட ஒன்று முதல் ஐந்து சதவீதம் வரை பணக்காரர்களினதா? அல்லது அவர்களுக்கு வேலை ஒன்று கிடைத்தால், மாதாந்த சம்பள காசோலையில் உயிர்வாழ்ந்து கொண்டு சமுதாயத்தின் அனைத்து செல்வங்களையும் உற்பத்தி செய்யும் தொழிலாள வர்க்கத்தின் பொருளாதாரமா?.

தொற்றுநோய்க்கு ட்ரம்ப் நிர்வாகத்தின் பிரதிபலிப்பு

தொழிலாளர்கள் எதிர்கொள்ளும் ஆபத்தான நிலைமை ஒரு உணர்வுபூர்வமான வர்க்கக் கொள்கையின் விளைவாகும். தொற்றுநோயியல் வல்லுநர்கள் பல தசாப்தங்களாக ஒரு தொற்றுநோய் சாத்தியமானது மட்டுமல்லாது, அது தவிர்க்கவும் முடியாதது என்று எச்சரித்துள்ளனர். இந்த எச்சரிக்கைகள் புறக்கணிக்கப்பட்டன. வைரஸ் மற்றும் பாக்டீரியா ஆராய்ச்சி மற்றும் மருத்துவமனைகளை உருவாக்குவதற்கு பதிலாக, வோல் ஸ்ட்ரீட் நிதியாளர்கள் சுகாதாரப் பாதுகாப்பு உள்கட்டமைப்பின் பெரிய பிரிவுகளை இல்லாதொழிக்கவும் தனியார்மயமாக்கவும் கோரினர்.

சமூகத் தேவைகளை கட்டுப்பாடில்லாமல் இலாபத்திற்காக அடிபணியச் செய்வதால் ஆண்டுதோறும் பல்லாயிரக்கணக்கான பணியிட காயங்கள் மற்றும் இறப்புகள் ஏற்படுகின்றன. தொற்றுநோய்க்கு முன்பே, தடுக்கக்கூடிய வேலை தொடர்பான காயங்கள் மற்றும் நோய்களால் ஒவ்வொரு நாளும் சராசரியாக 150 தொழிலாளர்கள் இறந்துள்ளனர். அமெரிக்க பணியிடங்கள் மோசமான பாதுகாப்பற்றவை மற்றும் சுகாதாரமற்றவை. தொழில்சார் பாதுகாப்பு மற்றும் சுகாதார நிர்வாகம் (OSHA) நிறுவனங்களின் ஒரு கையை விட சற்று அதிகமாகவே செயல்படுகிறது. தொற்றுநோயால் பாதிக்கப்பட்டதில் இருந்து, OSHA இற்கு COVID-19 தொடர்பான கிட்டத்தட்ட 14,000 புகார்கள் வந்துள்ளன. மேலும் அதைப்பற்றி ஒரு மேற்கோள் கூட கூறாததுடன் அல்லது அபராதம் கூட வழங்கவில்லை.

தொற்றுநோய் ஜனவரி மற்றும் பிப்ரவரி மாதங்களில் அதன் உலகளாவிய பரவலைத் தொடங்கியபோது, ட்ரம்ப் நிர்வாகம் மற்றும் அமெரிக்க ஆளும் வர்க்கத்தின் கவனம் உயிர்களைப் பாதுகாப்பதில் இல்லாது இலாபங்களைப் பாதுகாப்பதிலேயை இருந்தது. அதன் ஆரம்ப பதிலானது ஆபத்தை குறைத்துக்காட்டி, வழக்கம்போல வணிகங்களை இயங்க வைக்க முயற்சிப்பதாக இருந்தது. ட்ரம்ப் நிர்வாகம் வெகுஜன சோதனை, தொடர்பு தடமறிதல் மற்றும் தனிமைப்படுத்தும் முறையை நடைமுறைப்படுத்த தவறிவிட்டது. அதே நேரத்தில் வைரஸ் “கழுவினால் போய்விடும்” என்றும் கூறியது.

ஐரோப்பாவில் தொற்றுநோயின் அளவு வெளிவந்தவுடன், வாகனத் தொழிற்துறையில் தன்னியல்பான வேலைநிறுத்தங்கள் வெடித்தது உட்பட வெகுஜன கோபத்தினால் வைரஸை கட்டுப்படுத்த அடிப்படை நடவடிக்கைகளைச் செயல்படுத்த மத்திய மற்றும் மாநில அரசாங்கங்களை கட்டாயப்படுத்தியது. எவ்வாறாயினும், உடனடியாக, ட்ரம்ப் நிர்வாகமும் ஊடகங்களும் "நோயை விட குணப்படுத்துவது மோசமாக இருக்க முடியாது" என்ற எச்சரிக்கையை எழுப்பத் தொடங்கின. இது நாட்டை "மீண்டும் வேலைக்கு" கொண்டுவருவதற்கு அவசியமாக இருந்தது.

ஆளும் வர்க்கத்தின் நிலைப்பாட்டில் இருந்து, மார்ச் மாத இறுதியில் மிக முக்கியமான நடவடிக்கை ஏற்கெனவே எடுக்கப்பட்டது: ஜனநாயகக் கட்சியினர் மற்றும் குடியரசுக் கட்சியினரின் ஏகமனதான ஆதரவுடன் CARES சட்டம் நிறைவேற்றப்பட்டது. இது வோல் ஸ்ட்ரீட்டின் பல ட்ரில்லியன் டாலர் பிணை எடுப்புக்கு அங்கீகாரம் அளித்தது. இது எந்த கட்டுப்பாடுகளும் இல்லாமல் ஒவ்வொரு நாளும், 80 பில்லியன் டாலருக்கும் அதிகமான தொகை அமெரிக்க பெடரல் ரிசர்வ் பெருநிறுவன உயரடுக்கிற்கும் வோல் ஸ்ட்ரீட்டிற்கும் செலுத்தப்படுவதை அனுமதித்தது. இது 2008-2009 நிதி நெருக்கடிக்குப் பின்னர் எடுக்கப்பட்ட நடவடிக்கைகளை விட அதிகமாக உள்ளது. இது இறப்பு மற்றும் சமூக பேரழிவுகளுக்கு மத்தியில் சந்தைகளின் தொடர்ச்சியான உயர்வினை தூண்டுகிறது.

பணக்காரர்களின் பிணை எடுப்பு மூலம் உருவாக்கப்பட்ட பரந்த கடன்களை தொழிலாள வர்க்கத்தினை சுரண்டுவதன் மூலம் திருப்பிச் செலுத்த வேண்டும். அதன் பொறுப்பற்ற மற்றும் குற்றவியல் கொள்கையை நியாயப்படுத்த, ட்ரம்ப் நிர்வாகம் தீவிர வலதுசாரி ஆர்ப்பாட்டங்களைத் தூண்ட முயன்றது. அவை ஊடகங்களில் விளம்பரப்படுத்தப்பட்டன. ஜனநாயகக் கட்சியினரும் மற்றும் குடியரசுக் கட்சியிரும், அமெரிக்க நிதிய தன்னலக்குழுவிலிருந்து பழியை திருப்பி சீனாவை இந்நோய்க்கு பலிகடாவாக்கவும் முயல்கின்றனர்.

ஒவ்வாமை மற்றும் தொற்று நோய்களுக்கான தேசிய அமைப்பின் நீண்டகால இயக்குநரான ஆண்டனி ஃபௌஸி உட்பட, வேலைக்குத் திரும்பும் கொள்கையின் ஆபத்து குறித்து எச்சரித்த விஞ்ஞானிகளை ட்ரம்ப் நிர்வாகம் ஓரங்கட்டுகிறது. நோய் கட்டுப்பாட்டு மையம் ஒதுக்கப்பட்டு, அதன் இயக்குனர் ரொபேர்ட் ரெட்ஃபீல்ட்டை பதவி நீக்குவதாக ட்ரம்ப் அச்சுறுத்துகிறார்.

அதே நேரத்தில், பட்டினியால் ஏற்படும் பாரிய சமூக துயரங்கள் தொழிலாளர்களை வேலைக்குத் திரும்புவதற்கு கட்டாயப்படுத்த பயன்படுத்தப்படுகின்றன. பணக்காரர்களுக்கு வரம்பற்ற தொகை ஒதுக்கப்பட்டுள்ள நிலையில், மில்லியன் கணக்கான தொழிலாளர்கள் எதுவும் பெறவில்லை. வணிகங்கள் மீண்டும் செயல்பாடுகளைத் தொடங்குகையில், தங்களையும் தங்கள் குடும்பத்தினரையும் ஆபத்துக்குள்ளாக்க மறுக்கும் தொழிலாளர்கள் அனைத்து உதவிகளிலிருந்தும் துண்டிக்கப்படுவார்கள்.

இந்த பிரச்சாரத்திற்கு ட்ரம்ப் நிர்வாகம் தலைமை தாங்குகையில், அதற்கு முழு அரசியல் ஸ்தாபகத்தின் ஆதரவும் உள்ளது. ஜனநாயகக் கட்சியினர் வேலைக்குத் திரும்பும் பிரச்சாரத்திற்கு ஆதரவளிக்கின்றனர். மேலும் உற்பத்தியை மீண்டும் செயல்படுத்தும் மிச்சிகன் உள்ளிட்ட பல மாநிலங்கள் ஜனநாயகக் கட்சியினரால் கட்டுப்படுத்தப்படுகின்றன. இது ஜனநாயக ஆளுநர் கிரெட்சன் விட்மரின் தலைமையில் வாகன உற்பத்தியை மறுதொடக்கம் செய்கிறது.

ஊடகங்களைப் பொறுத்தவரை, வைரஸின் அபாயத்தைக் குறைக்க முயற்சிக்க அது எதை வேண்டுமானாலும் செய்து வருகிறது. ஒவ்வொரு நாளும் ஒரு தடுப்பூசி அல்லது குணப்படுத்துவதற்கான “புதிய நம்பிக்கை” பற்றிய அறிக்கைகளைக் கொண்டுவருகிறது. எவ்வாறாயினும், அடுத்த ஆண்டில் எப்போதாவது தயாராக இருக்கும் என்று விஞ்ஞானிகள் கூறும் ஒரு சாத்தியமான தடுப்பூசி கிடைப்பது, வேலைக்கு திரும்புவதற்கான வாதம் அல்ல. ஒரு தடுப்பூசி உருவாக்கப்பட்டாலும், வேலைக்குச் செல்லும் பிரச்சாரத்தின் விளைவாக நூறாயிரக்கணக்கான உயிர்களை இழப்பது மிகவும் துயரமானது.

கொரோனா வைரஸின் இயல்பு

இரண்டு வர்க்கங்களின் நலன்கள் ஒன்றுக்கொன்று நேரெதிராக நிற்கின்றன. பெருநிறுவன நிர்வாகிகள் மற்றும் மேலாளர்களின் நோக்கம், வோல் ஸ்ட்ரீட் முதலீட்டாளர்களின் நலன்களுக்காக செயல்படுவது, இலாபத்தை அதிகரிப்பது மற்றும் மிகக் குறைந்த நேரத்தில் மிகப் பெரிய அளவிலான வேலைகளைப் பெறுவது ஆகும். தொழிலாளர்களைப் பொறுத்தவரை, இது அவர்களின் ஆரோக்கியத்தையும் பாதுகாப்பையும் உறுதி செய்யும் பாதுகாப்பான சூழலைப் பேணுவது தொடர்பான கேள்வியாகும்.

தொழிலாளர்களின் உயிரைப் பாதுகாப்பதற்கான நடவடிக்கைகளை கோருவதற்கும் நடைமுறைப்படுத்துவதற்கும் சாமானிய தொழிலாளர் மற்றும் பாதுகாப்புக் குழுக்கள் உருவாக்கப்பட வேண்டும். இந்த நடவடிக்கைகள் நோயின் தன்மை பற்றிய விஞ்ஞானரீதியான புரிதலின் அடிப்படையில் இருக்க வேண்டும்.

கொரோனா வைரஸ் மிகவும் தொற்றும்தன்மை கொண்டதும் மற்றும் மக்கள் பேசும்போது, சுவாசிக்கும்போது, இருமல் அல்லது தும்மும்போது திரவ துளிகளால் பரவுகிறது. வைரஸ் துகள்கள் வாய், மூக்கு அல்லது கண்களுக்கு நேரடி பரிமாற்றத்தின் மூலம் அல்லது துகள்கள் விழுந்த ஒரு மேற்பரப்பைத் தொட்ட பின்னர் மக்கள் பாதிக்கப்படுவார்கள்.

ஏரோசோல்கள் (aerosols) எனப்படும் சிறிய வான்வழி துகள்களிலும் நோய்க்கிருமி இருப்பதை விஞ்ஞானிகள் காட்டியுள்ளனர். அவை நீண்ட காலத்திற்கு காற்றில் நிலைத்திருக்கலாம் மற்றும் பரிந்துரைக்கப்பட்ட ஆறு அடி சமூக தூரத்தை (social distancing) விட அதிகமாக பயணிக்கலாம். ஒருவர் எவ்வளவு சத்தமாக பேசுகிறார் என்பதை வைத்தும் வைரஸ் பயணிக்கக்கூடிய தூரம் மாறுபடுகின்றது.

ஒரு பொருத்துமேடையில் (assembly line) வரிசையில் ஆயிரக்கணக்கான தொழிலாளர்கள் ஒருவருக்கொருவர் நெருக்கமாக வேலை செய்யும் பெரிய தொழிற்சாலைகள் நோய் வேகமாக பரவுவதற்கான காரணிகளாக இருப்பதற்கு குறிப்பான இலக்குகளாக உள்ளன. "இந்த ஆலை சத்தமாக இருக்கும் சூழலாகும். மக்கள் ஒருவருக்கொருவர் புரிந்துகொள்வதற்கு பலமாக உரையாட வேண்டும், நிறைய வைரஸ் காற்று வழியாக பரவக்கூடும்" என்று ஒரு தொற்றுநோயியல் நிபுணரும், துணை இணை பேராசிரியரும் UCLA Fielding பொது சுகாதாரத்திற்கான பள்ளியின் ஆராய்ச்சியாளருமான ஜூலியா ஹெக் உலக சோசலிச வலைத் தளத்திற்கு தெரிவித்தார்.

எந்தவொரு அறிகுறிகளையும் காண்பிப்பதற்கு இரண்டு அல்லது அதற்கு மேற்பட்ட நாட்களுக்கு முன்னர், பாதிக்கப்பட்ட நபர் தொற்றுநோயுள்ளவராக இருக்கலாம் என்று ஆய்வுகள் காட்டுகின்றன. எனவே, தினசரி வெப்பநிலை அளந்துகொள்வது மற்றும் தரமற்ற முகமூடிகளை (facemasks) கொடுப்பது போன்ற பல பணியிடங்களில் செயல்படுத்தப்படும் நடவடிக்கைகள் போதுமானதாக இல்லை. யாராவது ஒருவர் அதிக வெப்பநிலையைக் கொண்டிருக்கும் நேரத்தில், முன்னரே அவர் ஆலை முழுவதும் நோயைப் பரப்பியிருக்கலாம்.

மார்ச் மாத தொடக்கத்தில் வாஷிங்டன் மாநிலத்தில் ஒரு பாடகர்களுக்கான பயிற்சியில் கலந்து கொண்ட பின்னர், 61 பேரில் 52 பேருக்கு COVID-19 இருப்பது கண்டறியப்பட்டது. அவர்களில் குறைந்தது இருவர் இறந்தனர். ஒருவருக்கொருவர் நெருக்கமாக நிற்காததுடன் அவர்கள் கைகுலுக்கவும் இல்லை. இறைச்சி பொதியாக்கும் ஆலைகளில், 12,000 க்கும் மேற்பட்ட தொழிலாளர்களைப் பாதித்து 50 க்கும் மேற்பட்டவர்களைக் கொன்ற இந்த வைரஸ், உயர் அழுத்த குளிரூட்டிகள் மூலம் இவ்வாறான அடைக்கப்பட்ட இடத்தில் பரவுகிறது என்று சந்தேகிக்கப்படுகிறது.

தொழிலாளர்கள் பணியிடங்களுக்குள் நுழையவும் வெளியேறும் போது அல்லது உணவு மற்றும் குளியலறை இடைவேளையின் போது, ஒரு பொருத்துமேடையில் பணிபுரியும்போது, ஒரு கிட்டங்கியில் அல்லது ஒரு சில்லறை வணிகத்தில் உள்ள தொழிலாளர்கள் ஒரே கருவிகளைக் கையாளுகிறார்கள் மற்றும் பொருட்களை நகர்த்துகிறார்கள். இந்த வைரஸானது உலோகத்தில் (ஐந்து நாட்கள்), கண்ணாடியில் (ஐந்து நாட்கள் வரை), பிளாஸ்டிக்கில் (2-3 நாட்கள்), எஃகுவில் (2-3 நாட்கள்), கடுதாசிஅட்டையில் (24 மணி நேரம்) மற்றும் அலுமினியத்தில் (2-8 மணி நேரம்) வரை மேற்பரப்பில் உயிர்வாழக்கூடியது.

சாமானிய பாதுகாப்பு குழுக்களின் பணிகள்

சாமானிய மற்றும் பாதுகாப்புக் குழுக்களின் செயல்பாடு என்னவாக இருக்கும்?

நிர்வாகத்தின் கோரிக்கைகள் மற்றும் இலாபக் கொள்கைக்கு எதிராக அவர்கள் தொழிலாளர்களின் பாதுகாப்பினை பிரதிநிதித்துவப்படுத்தி போராடுவார்கள். அவை கண்காணிக்கப்பட்டு நடைமுறைப்படுத்தப்பட வேண்டிய விரிவான விதிமுறைகளையும் தரங்களையும் உருவாக்குவர். நிபந்தனைகள் மீறப்பட்டால், வேலை நிறுத்தப்பட வேண்டும்.

இந்த குழுக்களின் முக்கிய நோக்கங்கள் பின்வருவனவாக இருக்க வேண்டும்:

1. வேலை நேரம் மற்றும் வேலை வேகத்தை கட்டுப்படுத்துதல். ஒவ்வொரு தொழிற்சாலையிலும், வணிக, அலுவலகம் மற்றும் பணியிடங்கள், சாமானிய மற்றும் பாதுகாப்புக் குழுக்கள், நம்பகமான விஞ்ஞானிகள் மற்றும் சுகாதார நிபுணர்களின் குழுவுடன் இணைந்து செயல்பட்டு, பணி நிலைமைகள் மற்றும் உற்பத்தி விகிதங்கள் மற்றும் காலவரிசை அட்டவணைகளை தீர்மானிக்க வேண்டும். போதுமான ஓய்வு, சுகாதார கண்காணிப்பு மற்றும் வழக்கமான ஆழமான சுத்தம் ஆகியவற்றை அனுமதிக்க வேலை நேரம் மற்றும் வேலை வேகத்தை குறைக்க வேண்டும்.

2. தனிப்பட்ட பாதுகாப்பு உபகரணங்களுக்கு உத்தரவாதம் அளித்தல். ஒவ்வொரு தொழிலாளிக்கும் மிக உயர்ந்த தரமான முகமூடிகள் (நிபந்தனைகளுக்கு ஏற்ப N-95, N-100 அல்லது P-100 உட்பட) மற்றும் கையுறைகள், முக கவசங்கள் மற்றும் பிற தேவையான தனிப்பட்ட பாதுகாப்பு உபகரணங்கள் பொருத்தமாக கிடைக்க வேண்டும். இவை தொடர்ந்து அதிகபட்ச பாதுகாப்பை வழங்குவதை உறுதிசெய்ய, தொடர்ந்து மாற்றப்பட வேண்டும். தொழிலாளர்கள் தனிப்பட்ட பாதுகாப்பு உபகரணங்களை அணிவது மற்றும் அகற்றுவதற்கான பயிற்சியையும் பெற வேண்டும்.

3. பாதுகாப்பான மற்றும் வசதியான பணி நிலைமைகளை உறுதி செய்தல். கவனத்திற்கு எடுக்கவேண்டியது பாதுகாப்பு உபகரணங்களின் அளவு மட்டுமல்ல. பாதுகாப்பாக இருக்க, தொழிலாளர்கள் நீண்ட காலத்திற்கு பாதுகாப்பு உபகரணங்களை அணிய வேண்டும். அனைத்து தொழிலிடங்களுக்கும் போதுமான குளிரூட்டல் மற்றும் காற்றோட்டம் இருக்க வேண்டும். குறிப்பாக கோடையின் தொடக்கத்தில், இது வைரஸ் பரவுவதற்கு பங்களிக்காத வகையில் ஏற்பாடு செய்யப்பட வேண்டும்.

4. வழமையான அடிப்படையில் சோதனையை செயல்படுத்துதல். அனைத்து தொழிலாளர்களுக்கும் கொரோனா வைரஸிற்கான வழக்கமான சோதனைக்கான அணுகல் இருக்க வேண்டும். சோதனை மற்றும் தொடர்பு தடமறிதலுக்கு ஏற்ப உற்பத்தி அட்டவணைகள் ஒழுங்கமைக்கப்பட வேண்டும். ஒரு தொழிலாளி நோய்க்கு சாதகமாக (positive) சோதிக்கப்பட்டால், ஆழமான சுத்தம் செய்ய குறைந்தபட்சம் 48 மணி நேரம் தொழிலிடமானது மூடப்பட வேண்டும்.

5. உலகளாவிய சுகாதார பராமரிப்பு மற்றும் உத்தரவாதமான வருமானம் கோருதல். நோய் சாதகமாக சோதிக்கப்பட்ட எந்தவொரு தொழிலாளியும் தனிமைப்படுத்தப்பட்டு உடனடி மருத்துவ சிகிச்சை வழங்கப்பட வேண்டும். அதே நேரத்தில் அவரது முழு வருமானம் உத்தரவாதம் அளிக்கப்படவேண்டும். பாதிக்கப்பட்ட தொழிலாளர்களுடன் தொடர்பு கொண்ட அனைத்து தொழிலாளர்களும் தனிமைப்படுத்தப்பட்டு தொடர்ந்து பரிசோதனை செய்யப்பட வேண்டும். அதே நேரத்தில் அவர்களின் முழு வருமானத்தையும் பெறக்கூடியதாக இருக்கவேண்டும். மேலும், யாருடைய குடும்ப உறுப்பினர்களும் நோய் அறிகுறிகளைப் பற்றி புகாரளித்தால், மருத்துவ நிபுணரால் அழிக்கப்படும் வரை ஊதிய இழப்பு இல்லாமல் தொழிலாளி பரிசோதிக்கப்பட்டு தனிமைப்படுத்தப்பட வேண்டும்.

6. தகவல் விநியோகத்தை உறுதி செய்தல். அவர்களின் பாதுகாப்பை பாதுகாக்க, பாதிக்கப்பட்ட தொழிலாளர்கள் பற்றிய அனைத்து தகவல்களுக்கும் தொழிலாளர்களுக்கு கிடைக்க வேண்டும். இதனால் தேவைப்பட்டால் உற்பத்தியை நிறுத்துதல் உட்பட பொருத்தமான நடவடிக்கைகள் எடுக்கப்படலாம். அமசன் மற்றும் பிற நிறுவனங்களில் உள்ள நிர்வாகம், பாதுகாப்பற்ற நிலைமைகளை அம்பலப்படுத்தியதால் சக ஊழியர்கள் பணிநீக்கம் செய்யப்பட்ட மற்றும் சாதகமாய் நோய் தொற்குக்குள்ளான தொழிலாளர்களை பற்றிய தகவல்களை வேண்டுமென்றே மறைத்து வைத்துள்ளது.

7. வேலை பாதுகாப்பை உறுதி செய்தல். பாதுகாப்பற்ற வேலை நிலைமைகளுக்கு கவனம் செலுத்துவதற்காக அல்லது வேலை செய்ய மறுத்ததற்காக எந்தவொரு தொழிலாளியும் பாதிக்கப்படக்கூடாது. பாதுகாப்பற்ற நிபந்தனைகளுக்கு எதிராக பேசியதற்காக பணிநீக்கம் செய்யப்பட்ட எந்தவொரு தொழிலாளியும், முழு சம்பளத்துடன் திரும்ப வேலையில் இருத்தப்பட வேண்டும்.

இந்த திட்டத்தை செயல்படுத்துவதற்கான செலவு என்ன? அதற்கான செலவினை யார் பொறுப்பேற்பது?

தொழிலாள வர்க்கம் அதன் பாதுகாப்பை உறுதி செய்வதற்கு பணம் செலுத்த முடியாது. பாதுகாப்பான பணி நிலைமைகளை உறுதிப்படுத்த தேவையான செலவுகள், அத்துடன் அனைத்து தொழிலாளர்களுக்கும் சுகாதாரப் பாதுகாப்பு மற்றும் முழு வருமானத்தையும் வழங்குவதற்காக, நிறுவனங்கள் மற்றும் முதலாளித்துவ ஆளும் உயரடுக்கினரால் ஏற்கப்பட வேண்டும்.

பாதுகாப்பான பணிச்சூழலைப் பராமரிப்பது என்பது மிகவும் சிக்கலான பணியாகும். இது ஒவ்வொரு பணியிடத்திலும் சுகாதார நிபுணர்களுடன் தீவிரமாக கலந்தாலோசித்து ஒரு விஞ்ஞான மற்றும் பகுத்தறிவுத் திட்டத்தின் மூலம் மட்டுமே அடையப்பட முடியும்.

தொழிலாளர்களின் பாதுகாப்பைப் பெறுவதற்கு பெருநிறுவன நிர்வாகத்தில் எந்த நம்பிக்கையும் வைக்க முடியாது. தொழிலாளர்கள் தொழிற்சங்கங்களையும் நம்ப முடியாது. ஒரு சிறிய சிறுபான்மை தொழிலாளர்கள் மட்டுமே தொழிற்சங்கமயப்படுத்தப்பட்டிருக்கிறார்கள். மற்றும் இருக்கும் தொழிற்சங்கங்கள் பெருநிறுவன நிர்வாகத்தின் கையாட்களை விட வேறு எவ்விதமாகவும் செயல்படவில்லை. அவர்கள் வேலைக்கு திரும்புவதை ஆதரிப்பதுடன் மற்றும் அதைச் செயல்படுத்த நிறுவனங்களுடன் ஒத்துழைக்கிறார்கள்.

இதனால்தான் தொழிலாளர்களுக்கு அவர்களின் சொந்த அமைப்புக்கள் தேவைப்படுகின்றன. ஒவ்வொரு தொழிற்சாலை, பணியிடங்கள் மற்றும் அலுவலகங்களில், தொழிலாளர்கள் அவர்களை பிரதிநிதித்துவப்படுத்தும் நம்பகமான மற்றும் மரியாதைக்குரிய தொழிலாளர்களை ஒழுங்கமைத்து தேர்ந்தெடுக்க வேண்டும். சமூக ஊடகங்கள் உட்பட கிடைக்கக்கூடிய அனைத்து கருவிகளையும் அவர்கள் தங்கள் தொழிற்துறை முழுவதிலும் மற்றும் பிற துறைகளிலும் உள்ள தொழிலாளர்களை அணுகவும், அவர்களின் செயல்பாடுகளை ஒருங்கிணைக்கவும் தகவல்களைப் பகிரவும் பயன்படுத்த வேண்டும்.

இந்த குழுக்களின் முக்கியமான பணி சர்வதேச அளவில் தொழிலாளர்களை ஒழுங்கமைப்பதாகும். ஒவ்வொரு நாட்டிலும், பாதுகாப்பான நிலைமைகளைக் கோரும் செவிலியர்கள், இறைச்சி பொதியிடல், போக்குவரத்து, வாகனத்துறை மற்றும் பிற தொழிலாளர்களின் வேலைநிறுத்தங்கள் மற்றும் வேலை நடவடிக்கைகள் அதிகரித்து வருகின்றன.

சோசலிசத்திற்கான போராட்டம்

தொற்றுநோய்க்கு எதிராக சமூகத்தின் வளங்களை அணிதிரட்டுவதற்கு விஞ்ஞான திட்டமிடல் தேவைப்படுகிறது. இது ஒவ்வொரு கட்டத்திலும் தனியார் இலாபம் மற்றும் தனிப்பட்டவர்கள் செல்வத்தைப் பெற முனைவதுடன் முரண்படுகிறது.

தொற்றுநோய்க்கு எதிரான போராட்டம், ஆளும் வர்க்கத்திற்கு எதிரான தொழிலாளர்களின் போராட்டத்துடன், அதாவது பெருநிறுவன மற்றும் நிதி தன்னலக்குழுவிற்கும் பொருளாதார மற்றும் அரசியல் வாழ்வின் மீதான அதன் சர்வாதிகாரத்திற்கும் பிரிக்கமுடியாத வகையில் இணைக்கப்பட்டுள்ளது என்று சோசலிச சமத்துவக் கட்சி வலியுறுத்துகிறது. எனவே, இது முதலாளித்துவத்திற்கு எதிரான சோசலிசத்திற்கான போராட்டமாகும். இது சமூகத்தை இலாபத்தின் அடிப்படையில் அல்லாமல் சமூக தேவையின் அடிப்படையில் மறுசீரமைப்பதாகும்.

தொற்றுநோய் அதன் இயல்பிலேயே ஒரு உலகளாவிய போராட்டமாகும். தொற்றுநோய் ஒரு உலகப் பிரச்சினையாகும். இது தொழிலாளர்கள் மற்றும் மனித உயிரைப் பாதுகாக்க உறுதிபூண்டுள்ள அனைவரின் சர்வதேச ஒத்துழைப்பு மூலம் மட்டுமே எதிர்த்துப்போராட முடியும். தொற்றுநோய்க்கு எதிரான போராட்டத்தில், தொழிலாளர்களைள இன, வகுப்புவாத மற்றும் தேசிய அடிப்படையில் அவர்களைப் பிரிப்பதற்கான அனைத்து முயற்சிகளையும் நிராகரிக்க வேண்டும். குறிப்பாக, அமெரிக்க ஆளும் வர்க்கம் நெருக்கடிக்கு சீனாவை குற்றம் சாட்டுவதற்கும் அதன் சொந்த குற்றப் பாத்திரத்திலிருந்து கவனத்தை திசை திருப்புவதற்கும் மேற்கொள்ளப்படும் பிரச்சாரத்தை எதிர்க்க வேண்டும்.

மனித முன்னேற்றத்திற்கும் மனித இனத்தின் உயிர்வாழ்விற்கும் ஒரு தடையாக இருக்கும் முதலாளித்துவ அமைப்பின் யதார்த்தத்தையும் திவால்நிலையையும் இந்த தொற்றுநோய் அம்பலப்படுத்தியுள்ளது. இந்த தொற்றுநோய்க்கான ஆளும் வர்க்கத்தின் பிரதிபலிப்பு மகத்தான சமூக எதிர்ப்பை உருவாக்கும்.

தொழிலாள வர்க்கத்தில் ஒரு சோசலிச அரசியல் தலைமை கட்டமைக்கப்பட வேண்டும்! இந்த தலைமை சோசலிச சமத்துவக் கட்சியாகும். அமெரிக்காவில் சோசலிச சமத்துவக் கட்சி நான்காம் அகிலத்தின் அனைத்துலக் குழு என்ற சர்வதேச இயக்கத்தின் ஒரு பகுதியாகும். இது உலக சோசலிச வலைத் தளத்தை வெளியிடுகிறது. உலகெங்கிலும் ஆயிரக்கணக்கான வாசகர்களைக் கொண்ட வாகனத்துறை செய்திமடல், சர்வதேச அமசன் தொழிலாளர் குரல் மற்றும் ஆசிரியர்கள் செய்திமடல் உள்ளிட்ட தொழிலாளர்களின் செய்திமடல்களையும் நாங்கள் வெளியிடுகிறோம்.

சோசலிச சமத்துவக் கட்சியும் உலக சோசலிச வலைத் தளமும் சாமானிய மற்றும் பாதுகாப்புக் குழுக்களை நிறுவ விரும்பும் தொழிலாளர்களுக்கு எம்மால் இயன்ற அனைத்து உதவிகளையும் வழங்கும். அனைத்து தொழிலாளர்களும் எங்கள் திட்டத்தைப் படித்து, சோசலிச சமத்துவக் கட்சியில் இணைய முடிவெடுக்குமாறு கேட்டுக்கொள்கிறோம். சோசலிச சமத்துவக் கட்சியின் பிரதிநிதியால் தொடர்பு கொள்ளக்கூடியவாறு, தொற்றுநோய் மற்றும் தொழிலாள வர்க்கத்தின் போராட்டங்கள் குறித்த பதிப்புகளைப் பெறவும் கீழே உள்ள படிவத்தை நிரப்பவும். உங்கள் பணியிடங்களின் நிலைமைகள் குறித்த அறிக்கைகளை அனுப்புமாறு தொழிலாளர்களை நாங்கள் கேட்டுக்கொள்கிறோம். பெயர் குறிப்பிட விரும்பாதவர்களின் அதுபற்றிய அனைத்து கோரிக்கைகளும் மதிப்பளிக்கப்படும்.

Statement of the Socialist Equality Party (US)