உலகளாவிய அரசாங்கங்கள் உயிர்களை அல்ல, இலாபங்களை பாதுகாப்பதன் மூலம் கோவிட்-19க்கு பதிலளிக்கின்றன

By Joseph Kishore—SEP candidate for US president
23 May 2020

மொழிபெயர்ப்பின் மூலக் கட்டுரையை இங்கே காணலாம்

மே 2 அன்று உலக சோசலிச வலைத் தளமும் நான்காம் அகிலத்தின் அனைத்துலகக் குழுவும் நடத்திய 2020 சர்வதேச மே தின இணையவழி பேரணியில் அமெரிக்க சோசலிச சமத்துவக் கட்சியின் தேசிய செயலாளர் ஜோசப் கிஷோர் பின்வரும் உரையை நிகழ்த்தினார்.

தோழர்களே, நண்பர்களே,

இன்று நான்காம் அகிலத்தின் அனைத்துலகக் குழுவைச் சேர்ந்த தலைவர்கள் மற்றும் ஆதரவாளர்களால் வழங்கப்பட்ட உரைகள் உலக அரசாங்கங்களின், ஆளும் வர்க்கத்தின், மற்றும் முதலாளித்துவ அமைப்புமுறையின் மீதான குற்றப்பத்திரிகையாக அமைந்திருக்கின்றன.

The speech by Joe Kishore begins at 2:06:24 in the video.

கொரோனா வைரஸ் பெருந்தொற்றும் அதற்குப் பதிலிறுப்பாக எடுக்கப்பட்டிருக்கும் அத்தனை நடவடிக்கைகளும், முதலாளித்துவமானது சமூகத்தின் தேவைகளுக்கு அடிப்படையில் இணக்கமற்றதாக இருக்கின்கிறது என்ற மறுக்கவியலாத ஒரு உண்மையை எடுத்துக்காட்டியிருக்கின்றன.

கொரோனா வைரஸ் ஒரு இயற்கை நிகழ்வுதான், என்றபோதும் அது ஒரு குறிப்பிட்ட சமூக மற்றும் பொருளாதாரக் கட்டமைப்புக்குள்ளாக தோன்றி, அபிவிருத்தியடைந்திருக்கிறது. பாரிய மற்றும் அதிகரித்து செல்கின்ற இறப்பு எண்ணிக்கை, கோடிக்கணக்கான மக்கள் வறுமைக்குள் தள்ளப்பட்டிருக்கும் நிலை, பாதுகாப்பற்ற நிலைமைகளின் கீழ் வேலைக்குத் திரும்புவதற்கான பிரச்சாரம் இவையெல்லாம் சமூகத்தின் விளைபொருட்களே அன்றி இயற்கையின் விளைபொருட்களன்று.

இன்றைய உரைகள் விளங்கப்படுத்தியவாறாக, இந்த பெருந்தொற்றின் ஒவ்வொரு புள்ளியிலுமே, உலக அரசாங்கங்கள் உயிர்களைக் பாதுகாக்கும் நோக்கத்துடனான நடவடிக்கைகளைக் கொண்டு அல்லாமல் மாறாக இலாபங்களைக் பாதுகாக்கும் நடவடிக்கைகளைக் கொண்டே பதிலிறுத்திருக்கின்றன. இதுவே Covid-19 க்கான ஒரு விஞ்ஞானபூர்வமான, உலகளாவிய ஒருங்கிணைப்புடனான, பகுத்தறிவான மற்றும் மனிதாபிமானமிக்க ஒரு பதிலிறுப்பைத் தடுத்து வந்திருப்பதாகும்.

பல தசாப்தங்களாக, பெருநிறுவன மற்றும் நிதிய உயரடுக்குகள் சமூக உள்கட்டமைப்பை நாசம் செய்து வந்திருக்கின்றன, செல்வக் குவிப்பிற்கும் தொழிலாள வர்க்கத்தை சுரண்டுவதற்கும் தடையாக இருந்த எதனையும் அகற்றி வந்திருக்கின்றன.

மற்ற எங்கிலும் விட, சிலவராட்சியின் பூமியாகவும் சமத்துவமின்மையின் தாயகமாகவும் இருக்கும் அமெரிக்காவில் தான் இது அதிக உண்மையாக இருக்கிறது. மிகச் செல்வம்படைத்த 400 தனிமனிதர்கள் மக்களின் கீழ்மட்டத்தில் இருக்கக் கூடிய 64 சதவீதம் பேர் கொண்டிருப்பதைக் காட்டிலும் அதிக செல்வம் கொண்டிருக்கின்ற ஒரு நாடாக, செல்வந்தர்கள் ஏழைகளை விடவும் சராசரியாக 20 ஆண்டுகள் அதிக ஆயுட்காலம் பெற்றிருக்கின்ற ஒரு நாடாக, கோடிக்கணக்கான மக்கள் மருத்துவக்காப்பீடு கொண்டிராத ஒரு நிலையையும் இன்னும் பல மில்லியன் கணக்கானோர் தங்கள் வேலைகளை இழப்பதோடு மருத்துவக் காப்பீட்டு வசதியையும் இழக்கின்ற நிலையையும் கொண்டிருக்கும் ஒரு நாடாக அது உள்ளது.

பெருந்தொற்று தாக்குவதற்கு முன்பாக, சோசலிச சமத்துவக் கட்சி அதன் தேர்தல் பிரச்சாரத்தை தொடக்கிய வேளையில், சோசலிசம் தான் 2020 தேர்தலின் மேலோங்கிய பிரச்சினை என்ற உண்மைக்கு நாங்கள் கவனம் ஈர்த்தோம். கம்யூனிச விரோதம் என்பது ஒரு அரசு மதம் போலப் பாவிக்கப்பட்டு வந்திருக்கிற ஒரு நாட்டில், “எல்லையற்ற வாய்ப்புகளை கொண்ட பூமி”யில், மில்லியன் கணக்கான மக்கள் முதலாளித்துவத்திற்கு எதிரானவர்களாய் ஆகியிருக்கும் நிலை தோன்றியிருக்கிறது.

ஏன் அவ்வாறான நிலை உண்டானது என்பதை இந்த பெருந்தொற்று தெளிவுபடுத்தியிருக்கிறது. பல தசாப்தங்களாய், ஜனநாயகக் கட்சி மற்றும் குடியரசுக் கட்சி இரண்டின் கீழும், அரசாங்கத்தின் கொள்கையைத் தீர்மானித்து வந்திருக்கின்ற சமூக நலன்கள், பெருந்தொற்றுக்கான பதிலிறுப்பை கட்டளையிட்டிருக்கும் அதே சமூக நலன்களே ஆகும்.

இத்தகையதொரு பெருந்தொற்று தவிர்க்கவியலாது தோன்றும் என்று தொற்றியல் நிபுணர்கள் மற்றும் விஞ்ஞானிகளின் தொடர்ந்து எச்சரித்து வந்திருந்தபோதும் கூட, சுகாதாரப் பராமரிப்பு பணியாளர்களுக்கான பாதுகாப்பு உபகரணங்களோ அல்லது உயிர்காக்கும் மருத்துவ சாதனங்களோ கையிருப்பு அதிகப்படுத்தப்படுவதற்கான எதுவும் செய்யப்படவில்லை.

பெருந்தொற்று முதன்முதலில் தோன்றி அதன் உலகளாவிய பரவல் தொடங்கிய போது, ஆளும் உயரடுக்கினர் அதன் முக்கியத்துவத்தை தணித்துக் கூறியதோடு மக்களைத் தயார் செய்வதற்கான எந்த நடவடிக்கைகளையும் மேற்கொள்ளவில்லை. வைரஸ் வெறுமனே “கழுவப்பட்டு விடும்” என்பதான ட்ரம்ப்பின் அறிவிப்புகள் மில்லியன் கணக்கான மக்களின் தலைவிதியை நோக்கிய அலட்சியத்தின் மிக அப்பட்டமான வெளிப்பாடுகள் மட்டுமேயாகும்.

பெருந்தொற்று தாக்கியபோது, நெருக்கடியான சூழலானது, வரலாற்றில் முன்கண்டிராத, 2008 நிதிப் பொறிவுக்குப் பின்னால் நடத்தப்பட்டதையெல்லாம் மிஞ்சுகின்ற அளவுக்கான கொள்ளை மற்றும் சூறையாடல் நடவடிக்கை ஒன்றினை நடத்துவதற்காய் பயன்படுத்திக் கொள்ளப்பட்டது.

வோல் ஸ்ட்ரீட்டிற்கு கையளிக்கப்பட்டிருக்கும் தொகைகள், சாதாரண மனிதருக்கு, புரிந்து கொள்ளவும் கடினமானதாகும். டிரில்லியன் கணக்கான டாலர்களில் தான் அவை அளவிடப்பட்டாக வேண்டும். பெடரல் ரிசர்வ் நாள்தோறும் 80 பில்லியன் டாலர்களை செல்வந்தர்களுக்குக் கையளித்துக் கொண்டிருக்கிறது. வருடத்திற்கு 31,000 டாலர்கள் சம்பாதிக்கும் ஒரு சராசரி தொழிலாளி இந்தப் பணத்தை சம்பாதிக்க 2,580,000 ஆண்டுகள் எடுக்கும்.

இதையெல்லாம் செய்து விட்டு, அவற்றை உள்ளிழுத்து விட்டு, நிதிச் சிலவராட்சியும் அதன் ஊடக கைப்பாவைகளும், “வேலைக்குத் திரும்புவோம்” கொள்கையானது நூறாயிரக்கணக்கில் இல்லையென்றால் பத்தாயிரக்கணக்கிலேனும் இன்னும் அதிகமான பேரின் உயிரிழப்புக்கு இட்டுச்செல்லும் என்பதை நன்கு அறிந்திருந்தும், அந்தக் கொள்கையை கோரிக் கொண்டிருக்கின்றன.

மரணத்தை “சாதாரணமானதாக” காட்டுவது, பெருந்தொற்றை “சாதாரணமானதாக காட்டுவதும்”, அதாவது, ஏராளமானோர் இறப்பார்கள், இத்தகைய மரணம் வாழ்வின் ஒரு உண்மை மட்டுமே என்ற விடயத்திற்கு மக்களை பழக்கப்படுத்துவது தான் அவர்களது நோக்கமாய் இருக்கிறது.

தொழிலாளர்கள் பலிகொடுக்கத்தக்கவர்களைப் போல நடத்தப்பட கேட்கிறார்கள். அவர்கள் இறந்தால், அது வணிகம் செய்வதிலான ஒரு செலவு தான், நோயால் இறப்பவர்களை மற்றவர்களைக் கொண்டு பிரதியிட வேண்டியது தான். பாதுகாப்பற்ற நிலைமைகளின் கீழ் வேலைசெய்ய மறுப்பவர்கள் பணிப்பலன்கள் மறுக்கப்படுவார்கள், அத்தனை அரசாங்க உதவிகளில் இருந்தும் துண்டிக்கப்படுவார்கள்.

வேலை செய் அல்லது பட்டினி கிட.

அதேநேரத்தில், ட்ரம்ப் நிர்வாகமும் நாடாளுமன்றமும் கொரோனா வைரஸ் மரணங்களுக்கு சட்டபூர்வ பொறுப்பேற்பதில் இருந்து பெருநிறுவனங்கள் பாதுகாக்கப்படுகின்ற நிலை உறுதியளிக்கப்படுவதற்கு நெருக்கிக் கொண்டிருக்கின்றன. அதாவது, உங்கள் பணியாளர்களை கொல்லலாம், எந்த பின்விளைவுகளையும் எதிர்கொள்ள மாட்டீர்கள் என்று அரசு பெருநிறுவன அமெரிக்காவுக்கு சொல்லிக் கொண்டிருக்கிறது.

இதுவே முதலாளித்துவத்தின், வர்க்க ஆட்சியின், நிதிச் சிலவராட்சி சர்வாதிகாரத்தின் யதார்த்தமாய் இருக்கிறது.

தொழிலாளர்கள் எதிர்த்துப் போராடிக் கொண்டிருக்கின்றனர்.

சென்ற ஆண்டில், பெருந்தொற்று தாக்குவதற்கு முன்பாக, மெக்சிகோவில், போர்டோ ரிகாவில், ஈக்வடாரில், கொலம்பியாவில், சிலியில், பிரான்சில், ஸ்பெயினில், அல்ஜீரியாவில், தென் ஆபிரிக்காவில், இந்தியாவில் மற்றும் பல பிற நாடுகளில் என உலகமெங்கிலும் சமூக அமைதியின்மை மற்றும் கிளர்ச்சிகளது ஒரு அலை பிரவாகமெடுத்தது. ஆளும் வர்க்கத்தின் மூலோபாய நிபுணர்கள் “தலைவர்களில்லாத” புரட்சி குறித்து எச்சரித்தனர். இங்கே அமெரிக்காவில், தொழிலாளர்கள் கிட்டத்தட்ட இரண்டு தசாப்தங்களில் வேறெப்போதினும் அதிக வேலை நிறுத்தங்களில் ஈடுபட்டனர், தொழிற்சங்கங்கள் என்று அறியப்படும் நிர்வாகத்தின் பெருநிறுவனவாத சாதனங்களை மீறி அவர்கள் போராடினர்.

அபிவிருத்தியடைந்து வரும் இந்த வர்க்கப் போராட்டத்தின் நீண்டகால முக்கியத்துவத்தைக் குறித்து, உலக சோசலிச வலைத் தளம், நான்கு மாதங்களுக்கு முன்பாக, ”சோசலிசப் புரட்சியின் தசாப்தம் தொடங்குகிறது” என்ற தலைப்பின் கீழ் இந்த ஆண்டின் தொடக்கத்தில் வெளியிடப்பட்ட ஒரு அறிக்கையில் சுட்டிக்காட்டியது. ”வர்க்கப் போராட்டத்தின் மேலோங்கிய மற்றும் புரட்சிகர அம்சமாக இருப்பது, நவீன-கால முதலாளித்துவத்தின் உலகளாவிய தன்மையில் வேர் கொண்டிருக்கின்ற அதன் சர்வதேசத் தன்மையாகும்” என்று நாங்கள் எழுதினோம்.

அதன்பின் வந்த பெருந்தொற்று, வர்க்க மோதல் மற்றும் அரசியல் தீவிரப்படல் நிகழ்முறையை பரந்தளவில் துரிதப்படுத்திக் கொண்டிருக்கிறது. பபுவா நியூகினியாவில் செவிலியர்கள்; சிம்பாப்வேயில் மருத்துவர்கள்; ஐக்கிய இராச்சியத்தில் சுகாதார மற்றும் துணிசுற்றல் பணியாளர்கள்; ஆஸ்திரேலியாவில் விநியோக மற்றும் பொருள் போக்குவரத்துத் தொழிலாளர்கள்; பங்களாதேஷில் ஆடை உற்பத்தித் தொழிலாளர்கள்; பிரேசிலில் அழைப்பு மையத் தொழிலாளர்கள்; அமெரிக்க-மெக்சிகோ எல்லையின் தெற்கிலுள்ள maquiladora தொழிற்சாலைத் தொழிலாளர்கள் ஆகியோரின் வேலைநிறுத்தங்கள் மற்றும் வேலைப்புறக்கணிப்புப் போராட்டங்கள் கடந்த மாதத்தில் நிகழ்ந்துள்ளன.

அமெரிக்காவில், வாகன உற்பத்தித் தொழிலாளர்கள், போக்குவரத்துத் தொழிலாளர்கள், அஞ்சல்துறைத் தொழிலாளர்கள், துப்புரவுத் தொழிலாளர்கள், கட்டுமானத் தொழிலாளர்கள், இறைச்சிபொட்டலமிடும் தொழிலாளர்கள் மற்றும் பல தொழிலாளர் பிரிவினரது வேலைநிறுத்தங்களும் வேலைப் புறக்கணிப்புப் போராட்டங்களும் நடந்திருக்கின்றன.

இது ஒரு தொடக்கம் மட்டுமே. பலவந்தமாக வேலைக்குத் திரும்பச் செய்வதற்கும், செல்வந்தர்களைப் பிணையெடுப்பதற்கு விலைசெலுத்தும் விதத்தில் வர்க்க உறவுகளில் ஒரு பாரிய மறுகட்டமைப்பை பொறியமைவு செய்வதற்கும் ஆளும் உயரடுக்கினர் மேற்கொள்ளக் கூடிய முயற்சிகள் தொழிலாள வர்க்கத்திடம் இருந்து பிரம்மாண்டமான எதிர்ப்பை எதிர்கொள்ளவிருக்கின்றன.

அமெரிக்காவில் இவை அனைத்தும் கால்வரை இற்றுப் போயிருக்கும் ஒரு அரசியல் ஸ்தாபகத்தால் மேற்பார்வை செய்யப்படுகின்றன. பிற்போக்குத்தனம் மற்றும் பின்தங்கியநிலையின் உருவடிவாய் இருக்கின்ற ட்ரம்ப் நிர்வாகம் அதன் தலைமாட்டில் அமர்ந்திருக்கிறது. ஒரு நெருக்கடியில் இருந்து அடுத்த நெருக்கடிக்காய் தடுமாறித் தடுமாறி முன்னேறி வருகின்ற நிர்வாகமானது, வேலைக்குத் திரும்ப பலவந்தம் செய்வதற்கான ஒரு முயற்சியில், தொழிலாள வர்க்கத்திற்கு எதிராய் பயன்படுத்தப்படுவதற்கென அதி-வலது மற்றும் பாசிச அடுக்குகளைக் தூண்டிவிடுவதற்கு முனைந்து கொண்டிருக்கிறது.

ஜனநாயகக் கட்சியினரைப் பொறுத்தமட்டில், அவர்கள் குடியரசுக் கட்சியினருக்கு சளைக்காத அளவுக்கு, நிதி உயரடுக்கின் ஒரு சாதனமாகவே இருக்கின்றனர்.

2020 இன் மிகப்பெரும் வோல் ஸ்ட்ரீட் சூறையாடலானது அமெரிக்க நாடாளுமன்றத்தின் ஏகமனதான வாக்களிப்பின் மூலமாக ஒப்புதலளிக்கப்பட்டதாகும் என்ற உண்மையை எத்தனைமுறை திரும்பக் கூறினாலும் தகும். “ஜனநாயக சோசலிஸ்ட்” என்று சொல்லப்படும் பேர்னி சாண்டர்ஸ் உட்பட, செனட்டில் இருந்த ஒவ்வொரு குடியரசுக் கட்சிக்காரர் மற்றும் ஜனநாயகக் கட்சிக்காரரும் அதற்கு ஆதரவாய் வாக்களித்தனர். விடுமுறைகால வாசகங்கள் அல்லது வெற்று வாக்குறுதிகளுக்கு ரொம்பவே அதிகமான “CARES Act" நிறைவேற்றப்பட்டமை, அரசாங்கக் கொள்கையைத் தீர்மானிக்கின்ற உண்மையான வர்க்க நலன்களை வெளிப்படுத்துகிறது.

கடந்த மூன்றரை ஆண்டுகளின் போது, அமெரிக்க மக்களுக்கு மிகப்பெரும் அச்சுறுத்தல், விளாடிமிர் புடினும் ரஷ்யாவும் தான் என்பதாக ஜனநாயகக் கட்சியினர் அறிவித்து வந்தனர். ட்ரம்ப் ஆட்சிக்கான அத்தனை எதிர்ப்பும் இராணுவ மற்றும் உளவு முகமைகளின் பிற்போக்கான திட்டநிரலுக்கு கீழ்ப்படியச் செய்யப்பட்டது.

பேர்னி சாண்டர்ஸைப் பொறுத்தவரை, யதார்த்தநிலை முதலாளித்துவத்தின் திவால்நிலையை எடுத்துக்காட்டிக் கொண்டிருந்த அந்த சரியான நேரம் பார்த்து, அவரது “அரசியல் புரட்சி” முடிந்து விட்டதாக அறிவித்த அவர் வோல் ஸ்ட்ரீட் மற்றும் இராணுவத்தின் கட்சியாக ஜனநாயகக் கட்சியின் உருவடிவாய் இருக்கும் பைடனுக்கு அவரது முற்றுமுதலான மற்றும் விமர்சனமற்ற ஆதரவையும் பிரகடனம் செய்தார். சமூக மற்றும் அரசியல் கோபமானது ஜனநாயகக் கட்சியின் எல்லைகளைத் தாண்டிச் சென்றுவிடாமல் பார்த்துக் கொள்வதற்கு தன்னால் இயன்ற அனைத்தையும் செய்வது என்ற, அவரது பிரச்சாரத்தின் நோக்கமாக எப்போதும் இருந்து வந்திருக்கின்ற ஒன்றை அவர் செய்து கொண்டிருக்கிறார்.

அவ்வாறு செய்யவது சுலபமானதில்லை. அமெரிக்கா, சோசலிசத்திற்கும் புரட்சிக்கும் கனிந்து விட்டது, சொல்லப் போனால் அதிகமாகவே கனிந்து விட்டது.

அமெரிக்கத் தொழிலாள வர்க்கம் வர்க்கப் போராட்டத்தின் ஒரு நெடிய பாரம்பரியத்தைக் கொண்டதாகும். மே தினத்தின் மூலங்கள் அமெரிக்கத் தொழிலாள வர்க்கத்தின் கிளர்ச்சிப் போராட்டங்களில் அமைந்திருக்கின்றன என்பது 2020 மே தினத்தில் மீண்டும் நினைவுகூரத் தகுந்ததாகும். நூற்றி முப்பத்தி நான்கு ஆண்டுகளுக்கு முன்பாக, இல்லினாய்ஸ் மாகாணத்தின் சிக்காகோ நகரத் தொழிலாளர்கள், எட்டு மணி நேர வேலை எனும் கோரிக்கையைச் சூழ்ந்த ஒரு போராட்டத்தைத் தொடக்கினர். அப்போராட்டத்தின் உச்சத்தில் 1886 மே 4 அன்று இரத்தம்பாய்ந்த ஹேமார்க்கெட் படுகொலை நடந்தது.

ஹேமார்க்கெட் தியாகிகளுக்கு மரியாதை செலுத்தும்விதமாக, 1889 இல் பாரிஸில் நடைபெற்ற சர்வதேச சோசலிசத் தொழிலாளர்கள் காங்கிரஸ் சர்வதேச தொழிலாள வர்க்க ஐக்கியத்திற்கான தினமாக மே 1 ஐத் தெரிவு செய்தது.

அமெரிக்காவிலும், மற்றும் உலகெங்கிலும் மாபெரும் புரட்சிகரப் போராட்டங்கள் மீண்டும் எழுந்து கொண்டிருக்கின்றன. இந்தப் போராட்டங்களுக்கு வழிநடத்தப் போகும் முன்னோக்கு எது? என்பதே முன்நிற்கும் கேள்வியாகும்.

மனிதகுலம் முகம்கொடுக்கிற நெருக்கடிக்கு எந்த தேசிய அரசின் எல்லைகளுக்குள்ளாகவும் எந்தத் தீர்வும் இல்லை என்பதை சோசலிச சமத்துவக் கட்சியும் நான்காம் அகிலத்தின் அனைத்துலகக் குழுவும் வலியுறுத்துகின்றன. கொரோனா வைரஸ் பெருந்தொற்று, உலகப் போரின் அபாயம், காலநிலை மாற்ற அச்சுறுத்தல், சமூக ஏற்றத்தாழ்வு மற்றும் சுரண்டல் என மனிதகுலம் எதிர்கொள்ளும் அத்தனை பெரும் பிரச்சினைகளும் உலகளாவிய பிரச்சினைகளாகும். அவை ஒரு உலகளாவிய தீர்வை அவசியமாகக் கோருகின்றன.

சோசலிசத்திற்கான போராட்டமானது, நிறங்கள், இனங்கள், பாலினங்கள் மற்றும் தேசியங்கள் அனைத்தையும் தாண்டி ஐக்கியப்பட்ட நலன்களைக் கொண்டிருக்கும் தொழிலாள வர்க்கத்தில் வேரூன்றியதாக இருக்க வேண்டும் என்று நாங்கள் வலியுறுத்துகிறோம். ஜனநாயகக் கட்சி அல்லது குடியரசுக் கட்சியைச் சேர்ந்த, சமூக ஜனநாயகக் கட்சி அல்லது பழமைவாதக் கட்சியைச் சேர்ந்த, தொழிற்கட்சி அல்லது டோரி கட்சியைச் சேர்ந்த பல்வேறு அரசியல்வாதிகளின் மூலமாக சமூக மாற்றம் நிகழப் போவதில்லை, மாறாக எவரது நலன்கள் உத்தியோகபூர்வ அரசியல் வாழ்வில் இருந்து முழுக்க விலக்கப்பட்டதாக இருக்கிறதோ, மக்களின் பரந்த பெரும்பான்மை எண்ணிக்கையினராக இருக்கும் அந்த தொழிலாள வர்க்கத்தின் பலவந்தமான தலையீட்டின் மூலமாகத் தான் அது நிகழப்போகிறது.

எமது இயக்கமான ட்ரொட்ஸ்கிச இயக்கம், பெரும்பாலும் சாதகமற்ற நிலைமைகளின் கீழ், மார்க்சிசத்தின் உண்மையான பாரம்பரியங்களையும் முன்னோக்கினையும் தாங்கிப்பிடிப்பதற்காகவும், ஸ்ராலினிஸ்டுகள், சமூக ஜனநாயகவாதிகள், சீர்திருத்தவாதிகள் மற்றும் தொழிற்சங்க நிர்வாகிகள் என அனைத்து வடிவிலான மற்றும் அளவிலான சந்தர்ப்பவாதிகளது பொய்கள் மற்றும் துரோகத்தை எதிர்த்துப் போராடுவதற்காகவும் ஒரு விட்டுக்கொடுக்காத போராட்டத்தை நடத்தி வந்திருக்கிறது.

இந்த மகத்தான பாரம்பரியங்களையே நாங்கள் இன்றைய போராட்டங்களூடாக முன்னணிக்கு கொண்டுவருகின்றோம்.

தொழிலாள வர்க்கத்தை நோக்கியும், தொழிலாள வர்க்கத்து எதிர்ப்பின் ஒவ்வொரு வெளிப்பாட்டிலும் செயலூக்கமான தலையீடு செய்வதை நோக்கியும் இப்போது திரும்பியாக வேண்டும். அவர்களின் அரசியல் மட்டத்தை உயர்த்துவதற்கும், தொழிற்சாலைகள் மற்றும் பள்ளிகளில் காரியாளர்களை உருவாக்குவதற்கும், வரலாற்றின் படிப்பினைகளையும் முதலாளித்துவத்தின் இயல்பையும் விளக்குவதற்கும் தளர்ச்சியற்று உழைத்தாக வேண்டும்.

சோசலித்திற்காகப் போராடும் தீர்மானகரமான உறுதி கொண்ட மக்களுக்கு குறைவிருக்கப் போவதில்லை. ஆயினும் இந்த தீர்மானகரமான உறுதியானது தொழிலாள வர்க்கத்தின் போராட்டங்களை சோசலிசத்திற்கான ஒரு உலகளாவிய இயக்கத்துடன் ஐக்கியப்படுத்துகின்ற ஒரு மூலோபாயத்தைக் கொண்டு ஆயுதபாணியாக்கப்பட வேண்டும்.

அந்த மூலோபாயமே இந்த சந்திப்பின் உள்ளடக்கமாக இருந்து வருகிறது.

இந்த உரைகள் அனைத்திலிருந்தும் வரும் அத்தியாவசியமான முடிவு என்னவென்றால், நான்காம் அகிலத்தின் அனைத்துலகக் குழு மற்றும் சோசலிச சமத்துவக் கட்சியில் இணையவும் கட்டமைக்கவும் நீங்கள் முடிவெடுக்க வேண்டும் என்பதாகும்.