அமெரிக்க ஆளும் வர்க்கம் வேலைகள் மற்றும் கூலிகள் மீதான தாக்குதலைத் தீவிரப்படுத்த இந்த தொற்றுநோயை சாதகமாக்கிக் கொள்கிறது

1 June 2020

மொழிபெயர்ப்பின் மூலக் கட்டுரையை இங்கே காணலாம்

அமெரிக்காவில் கடந்த வாரம் இன்னும் கூடுதலாக 2.1 மில்லியன் தொழிலாளர்கள் வேலைவாய்ப்பின்மை சலுகைகளுக்காக பதிவு செய்திருப்பதாக அமெரிக்க தொழிலாளர் நலத்துறை தெரிவித்துள்ளது. இது, இந்த தொற்றுநோய் மார்ச் மத்தியில் அந்நாட்டின் பொருளாதார நடவடிக்கைகளில் பெரும்பான்மையை மூடுவதற்கு இட்டுச் சென்றதற்குப் பிந்தைய பத்து வாரங்களில் வேலையற்றோர் சலுகைகளுக்காக பதிவு செய்துள்ள தொழிலாளர்களின் மொத்த எண்ணிக்கையை 40.8 மில்லியனுக்குக் கொண்டு வந்துள்ளது.

நிஜமான வேலையின்மை அளவைக் கணிசமானளவுக்குக் குறைத்துக் காட்டும் இந்த எண்கள், இப்போதும் அதிர்ச்சிகரமாக அந்நாட்டின் 164.5 மில்லியன் தொழிலாளர் சக்தியில் 24.7 சதவீதமாகும். அடுத்த வெள்ளிக்கிழமை வெளியிடப்படும் மே மாத உத்தியோகபூர்வ வேலைவாய்ப்பின்மை விகிதம் ஏப்ரலின் 14.7 சதவீதத்திலிருந்து 20 சதவீதத்தை எட்டுமென பொருளாதார நிபுணர்கள் எதிர்பார்க்கின்றனர்.

1933 இல் பெருமந்த நிலைமையின் ஆழங்களின் போது இருந்த 24.9 சதவீத வரலாற்று சாதனை எண்களையே இந்த நிஜமான வேலையின்மை விகித மதிப்பீடுகள் விஞ்சிவிட்டன. மில்லியன் கணக்கான வேலையற்ற தொழிலாளர்கள் உத்தியோகபூர்வ எண்ணிக்கையில் எடுத்துக் கொள்ளப்படவில்லை ஏனென்றால் அவர்கள் ஆவணமற்ற புலம்பெயர்ந்தோர்கள், சுய-தொழிலில் இருந்தவர்கள் அல்லது நிரந்தரமற்ற தொழிலாளர்களை கொண்ட பொருளாதாரம் (gig economy) என்றழைக்கப்படுவதில் இருப்பவர்கள். இதற்கு கூடுதலாகவும், மில்லியன் கணக்கானவர்கள் வேலைவாய்ப்பற்றவர்களாக கணக்கில் எடுத்துக் கொள்ளப்படவில்லை ஏனென்றால் மிதமிஞ்சி நிரம்பி வழியும் அரசு அமைப்புகள் அவர்களின் விண்ணப்பங்களைப் பரிசீலிக்கவே இல்லை, அவர்களுக்கு எந்தவித வேலையற்றோர் சலுகைகளும் கிடைக்காது.

கோவிட்-19 வெடிப்பால் பாதிக்கப்பட்ட நூற்றுக் கணக்கானவர்கள் மாசசூசெட்ஸ், செல்சியாவில் நிவாரண இராணுவ மையத்தில் வரிசையில் நின்று கொண்டிருக்கின்றனர், ஒரு பெண்மணி உணவு பொட்டலம் வாங்கிச் செல்கிறார். (படம்: AP Photo/Charles Krupa)

எவ்வாறிருந்த போதினும், வாஷிங்டன் (31.2 சதவீதம்), நெவாடா (26.7), புளோரிடா (25.0) சதவீதம், ஹவாய் (23.4), மிச்சிகன் (23.1), கலிபோர்னியா (20.6) மற்றும் நியூ யோர்க் (19.9) உட்பட பல மாநிலங்களும் மலைப்பூட்டும் அளவில் உத்தியோகப்பூர்வ வேலையின்மை மட்டங்களைக் கொண்டுள்ளன.

சிகாகோ பல்கலைக்கழக அறிக்கையின்படி, இழக்கப்பட்டுள்ள வேலைகளில் 42 சதவீதம் ஒருபோதும் திரும்ப போவதில்லை. பிரதான பெருநிறுவனங்கள் தற்போதைய இந்த நெருக்கடிக்கு நீண்ட காலத்திற்கு முன்னரே வரைந்து வைத்துள்ள மறுகட்டமைப்பு திட்டங்களைத் தீவிரப்படுத்த இந்த தொற்றுநோயைப் பயன்படுத்தி வருகின்றன.

இந்த வாரம், போயிங் நிறுவனம் பெரும்பாலும் அமெரிக்காவிலும் ஆனால் கனடா, ஆஸ்திரேலியா மற்றும் நியூசிலாந்திலும் 13,000 வேலைகளை வெட்ட இருப்பதாக அறிவித்தது. விமானச் சேவைகளுக்கான 50 பில்லியன் டாலர் அரசு பிணையெடுப்பில் பலமான பங்கை பெற்ற அமெரிக்க விமானச் சேவை நிறுவனம் பணியாளர்களைத் தக்க வைத்துக் கொள்வதாக கூறினாலும், 5,000 வேலைகளை, அல்லது அதன் தொழிலாளர் சக்தியில் 30 சதவீதத்தை வெட்ட உள்ளது.

இது உலகளாவிய போக்கின் பாகமாக உள்ளது. பிரெஞ்சு அரசாங்கத்திடமிருந்து பல பில்லியன் டாலர் பிணையெடுப்பு பெற்ற பின்னர் ரெனால்ட்-நிசான் வாகன கூட்டு நிறுவனம் பிரான்ஸ், ஸ்பெயின் மற்றும் ஏனைய நாடுகளில் ஆலைகளை மூடி, 20,000 க்கும் அதிகமான வேலைகளை வெட்டுவதற்கான திட்டங்களை வெளியிட்டுள்ளது. ஜேர்மன் வாகனத்துறை வினியோக நிறுவனம் ZF Friedrichshafen, 2025 க்குள், 15,000 வேலைகளை, அல்லது அதன் தொழிலாளர் சக்தியில் 10 சதவீதத்தை, இதில் பாதி ஜேர்மனியில், வெட்டுக்களைச் செய்ய திட்டமிட்டுள்ளது.

ஒரு தசாப்தமாக தொழிலாளர்களின் நிஜமான வருமானம் வீழ்ச்சி அடைந்துள்ளதற்குப் பின்னர், வேலைக்குத் திரும்புபவர்களும் இப்போது கூலி மற்றும் சலுகை வெட்டுக்களின் ஒரு புதிய சுற்றின் சாத்தியக்கூறை முகங்கொடுத்து வருகின்றனர். புளூம்பேர்க் நியூஸ் கிளீவ்லாந்து பெடரல் ரிசர்வ் வங்கியின் பொருளாதார நிபுணர் புரூஸ் ஃபாலிக்கின் கருத்துக்களை மேற்கோளிட்டது, பொது-சுகாதார நெருக்கடி சூழ்நிலைகள் அனேகமாக வழமையான சம்பள வெட்டுக்களை விட தொழிலாளர்களுக்கு —குறைந்தபட்சம் ஆரம்ப கட்டத்திலாவது— அதிகமான சம்பள வெட்டுக்களை செய்யக் கோரும் என்றவர் தெரிவித்திருந்தார்.

பெருநிறுவன ஊடகங்கள் "மாவீரர்கள்" என்று புகழ்ந்துரைத்த செவிலியர்களில் இருந்து, மளிகைக் கடை தொழிலாளர்கள், வினியோக மற்றும் ஏனைய இன்றியமையா தொழில்துறை தொழிலாளர்கள் வரையில், கூகுள், பேஸ்புக், ட்வீட்டர், ஜேபி மோர்கன் சாஸ், வால்மார்ட் மற்றும் வீட்டிலிருந்தே வேலை செய்விக்கும் கொள்கைகளை நீடித்து வரும் ஏனைய நிறுவனங்கள் வரையில் அனைத்து துறை தொழிலாளர்களையும் சம்பள-வெட்டு பாதிக்கும்.

“மொன்டானாவில் வீட்டில் அமர்ந்து வேலை செய்யும் ஒருவருக்கும் சிகாகோவில் யாரோ ஒருவருக்கும் ஒரே மாதிரியான திறமையே உள்ளது, ஆனால் அவர் இன்னும் குறைவான சம்பளத்தைப் பெறுகிறார்,” என்று நிறுவனங்கள் முடிவெடுத்ததும், “வீட்டிலிருந்து வேலை செய்ய தொடங்கியதும், அங்கே வேலைவாய்ப்பு விலை மாறுபாடுகள் ஏற்படும்,” என்று Forbes சமீபத்தில் குறிப்பிட்டது. “அமெரிக்காவிலோ அல்லது வெளிநாடுகளிலோ ஏதேனும் இடத்தில் நிறுவனங்களால் எளிதாக பிரதியீடுகளைக் காண முடியுமென நிர்வாகம் நம்புவதால், பணியாளர்கள் சம்பள உயர்வைப் பேரம்பேசுவது கடினமாக இருக்கும்.”

இதற்கிடையே பெடரல் அரசாங்கத்தால் பில்லியன் கணக்கிலான டாலர்கள் கையளிக்கப்பட்ட பெருநிறுவனங்கள், அந்த பிணையெடுப்பு பணத்தை அவற்றின் செயலதிகாரிகள் மற்றும் முதலீட்டாளர்களுக்குத் திருப்பி விட நகர்ந்து வருகின்றன.

“சமமான தியாகம்" என்ற பெயரில் பிரதான பெருநிறுவனங்கள் அவற்றின் தலைமை செயலதிகாரிகளின் அடிப்படை சம்பளங்களில் வெட்டுக்களை அறிவித்துள்ளன. ஆனால் இது கண்துடைப்புக்கு அல்லாமல் வேறொன்றுக்கும் இல்லை. மிகப் பெரிய 500 அமெரிக்க நிறுவனங்களினது தலைமை செயலதிகாரிகளுக்கான நடுத்தர சம்பளம் மொத்தமாக பங்கு வெகுமதிகளில் இருந்து வருகின்ற நிலையில், அதில் பத்தில் ஒரு பங்கு மட்டுமே அடிப்படை சம்பளத்தில் கணக்கில் சேர்கிறது.

ஊபர், டெல்டா ஏர் லைன்ஸ் மற்றும் ஹில்டன் ஹோட்டல்ஸ் உட்பட பல நிறுவனங்கள் ஆயிரக் கணக்கான வேலைகளை வெட்டி இலாபங்களைக் குவித்துக் கொண்டுள்ள போதினும் கூட, இந்த தொற்றுநோயின் பொருளாதார வீழ்ச்சியிலிருந்து உயர்மட்ட செயலதிகாரிகளைக் காப்பாற்றுவதற்காக ஏற்கனவே சம்பளத் திட்டங்களில் மாற்றங்களைச் செய்திருப்பதாகவும் அல்லது மாற்றங்களைப் பரிசீலித்து வருவதாகவும், நெறிமுறை ஆய்வின் ஒரு கண்டுபிடிப்பின் அடிப்படையில், ராய்டர்ஸ் கண்டறிந்தது.

அண்மித்து 100 கார் முகவர்களைக் கொண்டுள்ள சோனிக் ஆட்டோமோடிவ் நிறுவனம், "செயல்திறன் அடிப்படையில் பங்கு வழங்குவதற்குப் பதிலாக, 2021 இல் இருந்து, இந்தாண்டு ஏப்ரல் 9 இல் விலை குறைந்த அந்த பங்குகளின் அடிமட்ட விலைகளில் அடிப்படையில், நிறுவன பங்குகளைச் செயலதிகாரிகளே வாங்குவதற்கு அனுமதிக்கும் விதத்தில், அதன் செயலதிகாரிகளது நஷ்டஈட்டு திட்டத்தை மாற்றி" இருப்பதாக ராய்டர்ஸ் அறிவித்தது. பெடரல் ரிசர்வின் தலையீடு மற்றும் பாரியளவில் அரசாங்க ஊக்கப்பொதி செலவுகளால் தோற்றுவிக்கப்பட்ட பங்குச் சந்தை குமிழியின் விளைவாக, அவற்றின் விலை ஏப்ரல் 10 க்குப் பின்னர் இருந்து 67 சதவீதம் உயர்ந்துள்ளன. இந்த தொற்றுநோய் தொடங்கியதற்குப் பின்னர் இருந்து ஆண்டுக்கு ஆண்டு அடிப்படையில் விற்பனை சுமார் 40 சதவீதம் வீழ்ச்சி அடைந்த போதினும், அந்நிறுவனம் 3,000 தொழிலாளர்களைக் கட்டாய விடுப்பில் அல்லது வேலைநீக்கத்தில் அனுப்பி விட்ட போதினும் கூட இது நடந்துள்ளது.

வங்கிகள் மற்றும் பெருநிறுவனங்களின் வராக் கடன்களை ஏற்றுக் கொள்வதற்காக அமெரிக்க நிதித்துறை ட்ரில்லியன் கணக்கிலான டாலர்களைச் செலவிடுவதற்கு அங்கீகரித்த CARES சட்டம் கடந்த மார்ச் மாதம் ஜனநாயக கட்சியினர் மற்றும் குடியரசு கட்சியினரால் ஏகமனதாக நிறைவேற்றப்பட்டதற்குப் பின்னர் இருந்து, பங்குகளின் மதிப்பு 35 சதவீதத்திற்கும் அதிகமாக உயர்ந்துள்ளன. இப்போது அவை இந்த தொற்றுநோய்க்கு முந்தைய சாதனை உயரங்களை விட வெறும் 10 சதவீதத்திற்கு கீழே தான் உள்ளன.

மார்ச் 27 இல் ட்ரம்ப் CARES சட்டத்தில் கையெழுத்திட்டதற்குப் பின்னர் இரண்டு மாதங்களில், கோவிட்-19 ஆல் ஏற்பட்ட அமெரிக்க மரண எண்ணிக்கை 1,700 இல் இருந்து 103,000 க்கும் அதிகமாக அதிகரித்துள்ளது. பத்து மில்லியன் கணக்கானவர்கள் அவர்களின் வேலைகள் இழந்துள்ளனர் மற்றும் உணவு நிவாரண உதவிக்காக வரிசையில் நிற்கின்றனர் மற்றும் தற்காலிக கடன் தவணை ஒத்தி வைப்பு நீக்கப்பட்டு விட்டதால் வெளியேற்றப்படுவதை முகங்கொடுத்து நிற்கின்றனர். இதே காலக்கட்டத்தில், அமெரிக்க பில்லியனர்கள் அவர்களின் நிகர செல்வ வள மதிப்பு 434 பில்லியன் டாலர் அளவுக்கு அதிகரித்திருப்பதைக் காண்கின்றனர்.

இந்த தொற்றுநோய் தொடர்ந்து பரவி வருகின்ற நிலையில், அமெரிக்காவின் புதிய பகுதிகளிலும் நிரம்பி வருகின்ற நிலையில், மெக்சிகோ, பிரேசில், இந்தியா மற்றும் ஏனைய நாடுகளில் புதிய பேராபத்துக்களை உருவாக்கி வருகின்ற நிலையில், ஒவ்வொரு நாட்டிலும் ஆளும் வர்க்கங்கள் தொழிலாளர்களைப் பலவந்தமாக பாதுகாப்பற்ற வேலையிடங்களுக்குத் திரும்பச் செய்வதற்கான ஆட்கொலை கொள்கையைப் பின்தொடர்ந்து வருகின்றன. ஒவ்வொரு நாட்டிலும் முதலாளித்துவ அரசாங்கங்கள் தொழிலாளர்களைப் பலவந்தமாக வேலைக்குத் திரும்ப செய்வதற்காக பொருளாதார அழுத்தத்தைப் பயன்படுத்த முனைந்து வருகின்றன, "வேலைக்குத் திரும்புவதற்கான" கொடுப்பனவாக வாரத்திற்கு தற்காலிகமான 450 டாலரைக் கொண்டு வேலைவாய்ப்பு சலுகைகளுக்கான வாராந்தர 600 டாலர் உதவித்தொகையைப் பிரதியீடு செய்ய ட்ரம்ப் தயாரிப்பு செய்து வருகிறார்.

ட்ரம்பின் மூத்த பொருளாதார ஆலோசகர் கெவின் ஹாஸ்செட் கூறியதைப் போல, ஆளும் வர்க்கத்தைப் பொறுத்த வரையில், பணக்காரர்களுக்கான பிணையெடுப்பு தொகைக்கு அவசியப்படும் இலாபங்களை உருவாக்குவதற்காக மந்தை மந்தையாக வேலை அனுப்ப செய்வதற்கான, தொழிலாளர்கள் “நமது மனித மூலதன கையிருப்பு,” என்பதைத் தவிர வேறொன்றுமில்லை என்றாகிறது.

ஆனால் தொழிலாளர்கள் கால்நடைகள் இல்லை. இந்த தொற்றுநோய்க்கு முன்னரே, அங்கே ஒவ்வொரு நாட்டிலும் சமூக போராட்டம் மற்றும் அரசியல் தீவிரமயப்படலின் மிகப்பெரும் வளர்ச்சி இருந்தது. அமெரிக்காவில், பிரதான வேலைநிறுத்தங்களில் ஈடுபட்ட தொழிலாளர்களின் எண்ணிக்கை தசாப்தங்களிலேயே அதிகபட்ச மட்டங்களை எட்டியது. இந்த தொற்றுநோய்க்கு விடையிறுப்பாக ஆளும் வர்க்கத்தின் ஒட்டுமொத்த கொள்கையும் பாரியளவில் விரிந்த ஒரு வர்க்க மோதலை உருவாக்கும்.

தொழிலாளர்கள் அவர்களின் உயிருக்கும் அவர்களின் உயிர் வாழ்வாதாரத்திற்கும் இடையிலான மோசடியான தேர்ந்தெடுப்பை நிராகரிக்க வேண்டும். தொழிலாள வர்க்கம் முகங்கொடுக்கும் இந்த தொற்றுநோயும் மற்றும் சமூக சீரழிவும் இரண்டுக்கும் எதிரான போராட்டம் என்பது நிதியியல் செல்வந்த தட்டு மற்றும் முதலாளித்துவ அமைப்புமுறைக்கு எதிரான ஒரு போராட்டமாகும். இது சோசலிசத்திற்கான போராட்டமாகும்.

Jerry White