ஜேர்மன் மற்றும் பிரெஞ்சு தொழிற்சங்கங்கள் மேர்க்கெல் மற்றும் மக்ரோனின் மீட்பு திட்டங்களை ஆதரிக்கின்றன

By Peter Schwarz
3 June 2020

மொழிபெயர்ப்பின் மூலக் கட்டுரையை இங்கே காணலாம்

பிரதான ஜேர்மன் மற்றும் பிரெஞ்சு தொழிற்சங்கங்கள் ஜேர்மன் சான்சிலர் அங்கேலா மேர்க்கெல் மற்றும் பிரெஞ்சு ஜனாதிபதி இமானுவல் மக்ரோன் முன்மொழிந்த ஐரோப்பிய மீட்பு திட்டத்திற்கு அவற்றின் ஆதரவை வெளியிட்டுள்ளன. மே 20 இன் ஒரு கூட்டு அறிவிக்கையில், ஜேர்மன் தொழிற்சங்க கூட்டமைப்பான DGB மற்றும் பிரெஞ்சு தொழிற்சங்க கூட்டமைப்புகளான CFDT, CGT, FO, CFTC மற்றும் UNSA ஆகியவை "மே 18, 2020 இல் பிரெஞ்சு ஜனாதிபதியும் ஜேர்மன் சான்சிலரும் முன்வைத்த இந்த கொரோனா வைரஸ் நெருக்கடிக்கு பின்னரான ஐரோப்பாவில் பொருளாதார மீட்சிக்கான பிரான்கோ-ஜேர்மன் முனைவை முற்றிலுமாக வரவேற்கின்றன.”

"ஐரோப்பிய ஒன்றியத்தின் அங்கத்துவ நாடுகளுக்கு இடையே அதிக நல்லிணக்கத்தை நோக்கிய திசை மாற்றம்" என்பதாக இந்த முனைவை விவரிக்கும் தொழிற்சங்கங்கள், பின்வருமாறு பிரகடனப்படுத்துகின்றன: “ஐரோப்பிய ஒன்றியம் பலமாகவும், சமூகரீதியில் இன்னும் ஆற்றலுடனும், அதிக ஜனநாயகமும், அதிக பொறுப்புடனும், சுற்றுச்சூழலை கூடுதலாக பாதுகாத்து, அதிக நட்புறவுடனும் உருவெடுப்பதை உறுதிப்படுத்துவதற்காக நம் இரு நாடுகளும் அவற்றின் சிறப்பு பொறுப்புறுதியை இப்போது ஏற்க வேண்டும் என்பதில் நாங்கள் உடன்படுகிறோம்.” “இந்த நெருக்கடிக்குப் பின்னர் அதிக ஐக்கியம் கொண்ட இன்னும் நிலைத்திருக்குக்கூடிய ஓர் ஐரோப்பாவை நாம் கட்டமைக்கும் விதமாக பிரான்கோ-ஜேர்மன் முன்மொழிவுகளுக்கு ஐரோப்பிய ஒன்றியத்தின் அனைத்து அங்கத்துவ நாடுகளையும் நம்பிக்கைவைக்க செய்வதே" இப்போதைய பணியாகும் என்று அவை குறிப்பிட்டன.

மேர்க்கெல் மற்றும் மக்ரோனின் முன்மொழிவுக்கும் சமூக நீதி, ஜனநாயகம் மற்றும் சுற்றுச்சூழலை ஸ்திரமாக வைத்திருப்பதற்கும் எந்த சம்பந்தமும் இல்லை என்பது அதிக சம்பளம் பெறும் இந்த தொழிற்சங்க நிர்வாகிகளுக்கு நன்றாகவே தெரியும். மில்லியன் கணக்கான தொழிலாளர்கள், எழுதுவிஞைஞர்கள் மற்றும் கொரோனா வைரஸ் நெருக்கடியினால் வருவாயும் வாழ்வாதாரத்தையும் இழந்து வரும் சுயதொழில் புரிவோர் ஆகியோருடனான ஒற்றுமை ஒருபுறம் இருக்கட்டும், ஐரோப்பிய ஒற்றுமைக்கு கூட அது எந்தவிதத்திலும் சேவையாற்றவில்லை. அதற்கு பதிலாக பல்வேறு தேசிய நிவாரண திட்டங்கள் மற்றும் ஐரோப்பிய மத்திய வங்கியின் பத்திர கொள்முதல்கள் போலவே இந்த நிதியும் தொடர்ந்து பங்குகளிலிருந்து கிடைக்கும் இலாபத்தையும் மற்றும் செல்வந்தர்களின் வங்கி கணக்குகளையும் ஊதிப் பெரிதாக்கும்.

முந்தைய ஒரு கட்டுரையில் நாம் எடுத்துக்காட்டியதைப் போலவே, பிரான்கோ-ஜேர்மன் முனைவின் முக்கிய நோக்கமே அவற்றின் போட்டியாளர்களுடன், குறிப்பாக அமெரிக்கா மற்றும் சீனா உடனான வர்த்தகப் போரில் ஐரோப்பிய நிறுவனங்களைப் பலப்படுத்துவதாகும். அதற்கேற்ப, “மூலோபாய திட்டங்கள்" ஊக்குவிக்கப்பட உள்ளதுடன், “உலகளாவிய வெற்றியாளர்கள்" கட்டமைக்கப்பட உள்ளார்கள். சந்தைகள் மற்றும் இலாபங்களுக்கான உலகளாவிய மோதலில் ஐரோப்பிய பொருளாதாரத்தை மறுஒழுங்கமைப்பு செய்வதற்காக இந்த கொரோனா வைரஸ் நெருக்கடி பயன்படுத்திக் கொள்ளப்படுகிறது.

குறிப்பாக பலவீனமாக ஐரோப்பிய ஒன்றிய நாடுகளது பொருளாதாரங்கள், பிரதானமாக இந்த நிதி அவற்றுக்காகவே உத்தேசிக்கப்பட்டுள்ள நிலையில், புனரமைப்பு செய்யப்பட உள்ளன. இதில் பாரிய வேலைநீக்கங்களும், கூலிகள் மற்றும் சமூக சலுகைகளில் வெட்டுக்களும் இருக்கும் என்பதை பற்றி இது தெரிவிக்காமலேயே நகர்கிறது. வாகனத்துறை, விமானத்துறை மற்றும் எஃகு-உருக்கு தொழில்துறைகளின் பிரதான பெருநிறுவனங்களும் அத்துடன் ஏனைய எண்ணற்ற தொழில்துறைகளும் ஏற்கனவே பத்தாயிரக் கணக்கான வேலைநீக்கங்களை அறிவித்துள்ளன.

மே 27 இல் மிகவும் விரிவாக ஐரோப்பிய ஒன்றிய ஆணைய தலைவர் ஊர்சுலா வொன் டெர் லெயென் முன்வைத்த மறுகட்டமைப்பு திட்டம் மொத்தம் 750 பில்லியன் யூரோவாக இருக்குமென எதிர்பார்க்கப்படுகிறது, இதில் 500 பில்லியன் யூரோ நிதியுதவிகளின் வடிவத்திலும் 250 பில்லியன் யூரோ கடன்களின் வடிவத்திலும் ஒதுக்கப்படக்கூடும். இந்த பொதிக்கு நிதி வழங்குவதற்காக, ஐரோப்பிய ஒன்றிய ஆணையம் முந்தைய நடைமுறையுடன் முறித்துக் கொண்டு கடன்களைப் பெறும், பின்னர் அது 2028 மற்றும் 2058 இக்கு இடையிலான ஐரோப்பிய ஒன்றிய வரவு செலவு திட்டக்கணக்கில் இருந்து திரும்பச் செலுத்தபடும்.

ஐரோப்பிய ஒன்றிய வரவு-செலவுத் திட்டக்கணக்கு அதன் அங்கத்துவ நாடுகளால் நிதி வழங்கப்படுகின்ற நிலையில், பின்னர் அவை அவற்றின் பொருளாதார சுமைக்கு ஏற்ப அத்திட்டத்திற்குத் தொகையைத் திரும்ப செலுத்த வேண்டியிருக்கும். ஐரோப்பிய ஒன்றிய வரவுசெலவு திட்டக்கணக்கை நேரடியாக ஊக்குவிக்க புதிய இறக்குமதி வரிகளும் பரிசீலிக்கப்படுகின்றன. இத்திட்டத்தின் மூலம் பிரதானமாக இத்தாலிக்கு மானியமாக 82 பில்லியன் யூரோவும் கடன்களாக 91 பில்லியன் யூரோவும், ஸ்பெயினுக்கு முறையே 77 பில்லியன் மானியமாகவும் மற்றும் 63 பில்லியன் கடனாகவும், போலாந்துக்கு முறையே 38 பில்லியன் மானியமாகவும்/ 26 பில்லியன் கடனாகவும் வழங்கப்படும். பிரான்சும் ஜேர்மனியும் முறையே 39 பில்லியன் யூரோ மற்றும் 29 பில்லியன் யூரோ மானியங்களைப் பெற திட்டமிட்டுள்ளன.

ஜூன் 18-19 ஐரோப்பிய ஒன்றிய மாநாட்டில் இந்த முன்மொழிவு விவாதிக்கப்பட உள்ளது. ஆனால் ஓர் உடன்படிக்கை எட்டப்படும் வரையில் குறைந்தபட்சம் இன்னுமொரு மாநாடும் தேவைப்படக்கூடும்.

இந்த நிதிகள் ஐரோப்பிய ஒன்றிய வரவு-செலவு திட்டக்கணக்கின் கட்டமைப்பிற்குள் ஒதுக்கப்படுகின்ற நிலையில், எல்லா ஐரோப்பிய ஒன்றிய திட்டங்களும் போலவே, இவையும் கடுமையான நவ-தாராளவாத தேவைகளுக்கு உள்ளாக்கப்படுகின்றன. அங்கத்துவ நாடுகளின் பொருளாதார மற்றும் நிதியியல் கொள்கைகளுக்காக வொன் டெர் லெயென் ஐரோப்பிய ஒன்றிய ஆணையத்திடமிருந்து வருடாந்தர பரிந்துரைகளை உறுதிப்படுத்த விரும்புகிறார், இது வரையில் பெரிதும் அலட்சியப்படுத்தப்பட்டு வந்த இது, நிதி பெறும் நாடுகள் நிபந்தனைகளுக்கு கட்டுப்பட்டிருக்கும். பின்னர் கிரீஸின் 2008 நிதி நெருக்கடிக்குப் பின்னர் செய்ததைப் போலவே, புரூசெல்ஸ் சமூக, கல்விசார் மற்றும் கலாச்சார செலவுகளில் வெட்டுக்களைக் கட்டளையிடக் கூடும்.

இந்த நிதிகளின் துல்லியமான பயன்பாடு இன்னமும் விவாதத்தின் கீழ் உள்ளது. மரபார்ந்த பிராந்திய மற்றும் கட்டமைப்பு உதவிகளுக்குக் கூடுதலாக, காலநிலை பாதுகாப்புக்கான மானியங்கள், புதுப்பிக்கத்தக்க எரிசக்திகள், டிஜிட்டல்மயப்படுத்தல் மற்றும், அனைத்திற்கும் மேலாக, ஆயுத தளவாடங்கள் உற்பத்தி ஆகியவையும் விவாதத்தில் உள்ளன.

உலகளாவிய வர்த்தகப் போரில் அவர்களின் போட்டியாளர்களை எதிர்கொள்வதிலும் மற்றும் அதன் விளைவாக தொழிலாள வர்க்கத்தின் மீதான தாக்குதல்களை நடத்துவதிலும் பாரீஸ் மற்றும் பேர்லின் ஆட்சியாளர்களும் மற்றும் புரூசெல்ஸின் ஐரோப்பிய ஒன்றிய ஆணையமும் தொழிற்சங்கங்களினது தயக்கமற்ற ஆதரவைச் சார்ந்திருக்கலாம் என்பதற்கு வெறும் ஒன்றரை பக்க நீளமுள்ள தொழிற்சங்கங்களின் அந்த ஆதரவு பிரகடனம் ஒரு சமிக்ஞையாகும்.

தொடர்ந்து இருந்து வரும் தொற்றுநோய் அபாயத்தின் காரணமாக தொழிலாளர்கள் தங்களின் ஆரோக்கியம் மற்றும் உயிர்களை அபாயத்திற்கு உட்படுத்தும் ஆலைகளுக்கு அவர்களை மீண்டும் திரும்ப செய்வதில் தொழிற்சங்கங்கள் ஏற்கனவே முன்னிலையில் உள்ளன. ஒரு எடுத்துக்காட்டை வழங்குவதானால், ஜேர்மனியின் வொல்ஃப்ஸ்பேர்கில் IG Metall மற்றும் தொயிற்சாலை தொழிலாளர் குழுவில் ஐரோப்பாவின் மிகப் பெரிய கார் ஆலைக்குத் தொழிலாளர்கள் திரும்புவதை ஊக்குவிப்பதற்காக அந்நகரின் வோல்ஸ்வாகன் ஆலை சுவற்றில் மூன்று நாட்கள் மின்னொலி நிகழ்ச்சி ஒன்றை ஏற்பாடு செய்தன. பல ஆண்டுகளாக, ஜேர்மனியில் ஒவ்வொரு ஆலை மூடலும் மற்றும் வேலைநீக்க திட்டமும் தொழிற்சங்க அதிகாரிகளின் கையெழுத்தைத் தாங்கி உள்ளன.

எவ்வாறிருப்பினும் இந்த கொரோனா வைரஸ் நெருக்கடி கூட்டுழைப்புவாதத்தை (corporatism) நோக்கிய போக்கை —அதாவது தொழில்முனைவோர்கள், தொழிற்சங்கங்கள் மற்றும் அரசுடன் சேர்ந்திருப்பதை— மிகப் பெரியளவில் ஆழப்படுத்தி உள்ளது. 1930 களுக்குப் பிந்தைய மிகப் பெரிய பொருளாதார கீழ்நோக்கிய திருப்பம் அடிக்கடி சுதந்திர-சந்தை பொருளாதாரம் என்று பாராட்டப்படுவதற்கு அடித்தளமாக இருந்ததை இல்லாதொழித்துள்ளது. வாகனத் தொழில்துறையிலும், விமானத்துறை மற்றும் ஏனைய பெருநிறுவனங்களுக்கு உள்ளே அரசாங்கங்கள் பில்லியன் கணக்கிலான யூரோக்கள் மற்றும் டாலர்களைப் பாய்ச்சி வருகின்றன என்பதோடு, போட்டியாளர்களுக்கு எதிராக உயிர் பிழைப்பதற்கான போராட்டத்தில் அவற்றின் சொந்த நிறுவனங்களைப் பலப்படுத்துவதற்காக அரசாங்கங்கள் பங்குதாரர்களாகவும் கூட மாறி வருகின்றன.

தேசியமயமாக்கலின் இந்த வடிவத்திற்கும் சோசலிசத்திற்கும் எந்த சம்பந்தமும் இல்லை. அதற்கு பதிலாக அது சர்வதேச போட்டியாளர்களுக்கு எதிராகவும் தொழிலாளர்கள் கோரும் கோரிக்கைகளுக்கு எதிராகவும் பெருநிறுவன இலாபங்களைப் பாதுகாப்பதற்கு மட்டுமே சேவையாற்றுகிறது என்பதுடன், அது தவிர்க்கவியலாமல் தேசியவாதத்தை முடுக்கி விடுவதுடனும் பிணைந்துள்ளது. தேசியவாதத்தை தமது அச்சாக கொண்டுள்ள தொழிற்சங்கங்கள் ஓரத்தில் ஒதுங்கி இருக்க முடியாது. நெருக்கடி மற்றும் போர் காலகட்டங்களில் எப்போதும் போல அவை, அவற்றின் உறுப்பினர்களைப் பிரதிநிதித்துவம் செய்வதாக காட்டிக்கொள்ளும் வெறும் தோற்றத்தைக் கூட கைவிடுகின்றன.

ஆகஸ்ட் 1914 இல், முதலாம் உலக போர் வெடித்த போது, ஜேர்மனியின் தொழிற்சங்கங்கள் முதலாளிமார்களுடனும் அரசாங்கத்துடன் "சமரசத்தை" அறிவித்து, பிரெஞ்சு மற்றும் ரஷ்ய தொழிலாளர்களைப் படுகொலை செய்ய அவற்றின் உறுப்பினர்களை போர்முனைக்கு அனுப்பின. மே 1, 1933 இல், ஹிட்லர் அதிகாரத்திற்கு வந்து மூன்று மாதங்களுக்குப் பின்னர், அவை புதிய ஆட்சிக்கு தங்களின் சேவைகளை வழங்க நாஜிகளின் ஸ்வஸ்திகா சின்னத்தின் கீழ் கூட அணிவகுத்தன. ஹிட்லர் இதை தொழிற்சங்கங்களின் பலவீனமாக கருதிக்கொண்டு, அதற்கடுத்த நாள் அவற்றை கலைத்து விட்டார்.

பிரான்ஸ் மற்றும் ஏனைய நாடுகளின் தொழிற்சங்கங்களும் இதுபோன்ற சூழ்நிலைகளில் வேறு விதமாக செயல்பட்டுவிடாது. ஜேர்மன் மற்றும் பிரெஞ்சு தொழிற்சங்கங்கள் இந்த சமீபத்திய முனைவுக்கு இப்போது அவற்றின் ஆதரவை வழங்குகின்றன என்றால், அது ஏனென்றால் ஜேர்மனியும் பிரான்சும் ஐரோப்பிய ஒன்றியம் இல்லாமல் உலக சந்தையில் அவற்றின் நலன்களை முன்னெடுக்க முடியாது என்று அவை நம்புகின்றன. அதே நேரத்தில், வேலை வெட்டுக்கள் என்று வருகையில் —சான்றாக ஏயர்பஸ் அல்லது வாகனத் தொழில்துறையில்— தொழிற்சங்கங்கள் ஒரு நாட்டு தொழிலாளர்களை மற்ற நாட்டு தொழிலாளர்களுக்கு எதிராகவும் ஒரு தொழிற்சாலை தொழிலாளர்களுக்கு எதிராக மற்ற தொழிற்சாலை தொழிலாளர்களைப் பிளவுபடுத்தி விளையாடுகின்றன.

கூட்டுழைப்புவாதத்தை நோக்கிய தொழிற்சங்கங்களின் நகர்வு அவற்றின் முதலாளித்துவ-சார்பு முன்னோக்கிலிருந்து எழுகிறது. பிரெஞ்சு தொழிற்சங்கங்களிலேயே மிகவும் தீவிரமானதாக காட்டிக் கொள்ளும் CGT உம் இந்த கூட்டு பிரகடனத்தில் கையெழுத்திட்டுள்ளது குறிப்பிடத்தக்கதாகும்.

கொரோனா வைரஸால் ஏற்படும் உடல்நல மற்றும் சமூக விளைவுகளுக்கு எதிரான போராட்டத்தில், ஐரோப்பாவின் தொழிலாளர்கள் பெருநிறுவனங்களையும் அரசாங்கங்களையும் மட்டுமல்ல, மாறாக தொழிற்சங்கங்களையும் எதிர்கொண்டுள்ளனர். அவர்கள் இத்தகைய அமைப்புகளுடன் முறித்துக் கொண்டு, தங்களின் சொந்த சுயாதீனமான நடவடிக்கை குழுக்களை அமைக்க வேண்டும்.

இந்த தொற்றுநோயின் விளைவுகளுக்கு எதிரான போராட்டம் இறுதியில் முதலாளித்துவத்திற்கு எதிரான ஓர் அரசியல் போராட்டமாகும். இதற்கு முதலாளித்துவ நலன்களுக்கான மிகவும் சக்தி வாய்ந்த கருவியாக விளங்கும் ஐரோப்பிய ஒன்றியத்தை ஐக்கிய ஐரோப்பிய சோசலிச அரசுகளைக் கொண்டு பிரதியீடு செய்யும் ஒரு சோசலிச வேலைத்திட்டத்தின் அடிப்படையில் ஐரோப்பிய மற்றும் சர்வதேச தொழிலாள வர்க்கத்தின் ஐக்கியம் அவசியமாகும்.