ட்ரம்ப் உள்நாட்டு எதிர்ப்பைப் பயங்கரவாதமாக முத்திரைக் குத்தும் பிரச்சாரத்தைத் தீவிரப்படுத்துகிறார்

8 June 2020

மொழிபெயர்ப்பின் மூலக் கட்டுரையை இங்கே காணலாம்

மே 25 இல் 46 வயதான ஆபிரிக்க அமெரிக்கர் ஜோர்ஜ் ஃப்ளோய்டைப் பொலிஸ் படுகொலை செய்ததில் இருந்து, அமெரிக்காவை மூழ்கடித்துள்ள பொலிஸ் காட்டுமிராண்டித்தனத்திற்கு எதிரான பாரிய போராட்டங்களுக்கு எதிராக இராணுவத்தைத் தலையீடு செய்விப்பதற்கான அதன் பிரச்சாரத்தை ட்ரம்ப் நிர்வாகம் தொடர்ந்து நடத்தி வருகிறது. அட்டார்னி ஜெனரல் வில்லியம் பார் மற்றும் மத்திய புலனாய்வுத்துறை (FBI) இயக்குனர் கிறிஸ்தோபர் வேரே வியாழக்கிழமை மதியம், ஒடுக்குமுறைக்கு ஒரு சாக்குபோக்கை உருவாக்கும் முயற்சியில், வன்முறையைச் சார்ந்துள்ள இடதுசாரி குழுக்கள் போராட்டங்களை "கடத்திச் சென்றன" என பொய் வாதங்களை முன்வைக்க ஒரு பத்திரிகையாளர் சந்திப்பை நடத்தினர்.

“ஆத்திரமூட்டுபவர்களை" கைது செய்ய பயங்கரவாத-தடுப்பு படைப்பிரிவுகளைப் பயன்படுத்துவதற்கு ஆலோசனை வழங்கிய பார், ஆர்ப்பாட்டங்களை அவர்கள் "கடத்திச் செல்வதாக" குற்றஞ்சாட்டினார். உள்நாட்டு அரசியல் எதிர்ப்பை பயங்கரவாதமென முத்திரை குத்துவதானது, பொலிஸ் வன்முறை மற்றும் செல்வந்த தட்டுக்களது கொள்கைகளுக்கு எதிரான எல்லா எதிர்ப்பையும் சட்டவிரோதமாக்குவதையும் குற்றகரமாக்குவதையும் நோக்கமாக கொண்டுள்ளது.

பார் பத்திரிகையாளர் சந்திப்பில் சொன்ன பொய்யின் அளவு, ஹிட்லரின் "பெரும் பொய்" க்கான பிரச்சார தலைவராக விளங்கிய நாஜி செய்தி தொடர்பாளர் ஜோசப் கோயபெல்ஸைக் கூட ஆச்சரியப்படுத்தியிருக்கும். பார் ஒரு புதிய உலகைக் கண்முன் கொண்டு வந்தார், அதில் நூற்றுக் கணக்கான நகரங்களில் மில்லியன் கணக்கானவர்கள் நடத்தும், மிகப் பெரிய, நடுத்தர மற்றும் சிறிய ஆர்ப்பாட்டங்களில் அடையாளம் காணத்தக்க ஒரேயொரு உறுப்பினரைக் கூட கொண்டிருக்காத ஓர் அமைப்பான அன்டிஃபா ஆல் (antifa) சூழ்ச்சியாக கையாளப்படுகின்றன. இந்த போராட்டங்களில் "வெளிநாட்டு சக்திகள்" தலையிடுவதாக வாதிட்ட அவர், ரஷ்ய, சீன, ஈரானிய அல்லது அல் கொய்தா வகிக்கும் பாத்திரத்தின் பேராபத்தையும் சேர்த்துக் கொண்டார்.

வியாழக்கிழமை, ஜூன் 4, 2020 இல் வாஷிங்டனின் வெள்ளை மாளிகைக்கு அருகே ஜோர்ஜ் ஃப்ளோய்ட் படுகொலைக்கு எதிராக போராடுவதற்காக ஆர்ப்பாட்டக்காரர்கள் ஒன்றுகூடிய போது, Utah தேசிய பாதுகாப்புப்படை சிப்பாய்கள் பொலிஸ் வரிசையில் நிற்கின்றனர். (படம்: AP Photo/Alex Brandon)

அன்டிஃபா என்பது அதிதீவிர வலது மற்றும் வெள்ளை மேலாதிக்க ஆத்திரமூட்டல்களுக்கு எதிராக போராடும் இளைஞர்கள் ஏற்றுள்ள ஓர் அடையாளம் என்பதை தவிர அதற்கு கூடுதலாக ஒன்றுமில்லை. பிரதானமாக FBI உளவாளிகள் மற்றும் முகவர்களின் கொந்தளிக்கும் கற்பனைகளில் தான் அதுவொரு ஒழுங்கமைக்கப்பட்ட குழுவாக தெரிகிறது — இவர்களே கூட பெரும்பாலும் அதன் "உறுப்பினர்களில்" உள்ளடங்கி இருக்கக்கூடும். அன்டிஃபா இல்லையென்றால் (ஒருவேளை இல்லாமல் இருந்தால்) ட்ரம்ப், பார் & கூட்டணி அமெரிக்க தொழிலாள வர்க்கத்திற்கு எதிராக அவர்கள் நடத்தி வரும் பாரிய ஒடுக்குமுறைக்கு ஒரு சாக்குபோக்காக அதை உருவாக்குவதற்கே கூட நிர்பந்திக்கப்படலாம்.

அன்டிஃபா அச்சுறுத்தல் என்று கூறப்படுவதற்கு எதிராக, கைவசமிருக்கும் கூட்டு பயங்கரவாத எதிர்ப்பு செயற்படைகளை (Joint Terrorist Task Forces - JTTF) பிரயோகிக்குமாறு பார் ஆலோசனை வழங்கினார். ஆரம்பத்தில் நியூ யோர்க் மற்றும் வாஷிங்டனில் செப்டம்பர் 11, 2001 தாக்குதல்கள் நடத்திய இஸ்லாமிய அடிப்படைவாதிகளுக்கு எதிராக திருப்பி விடப்பட்டிருந்த, ஆனால் இப்போது ட்ரம்ப் நிர்வாகம் மற்றும் மாநில அளவில் அதன் ஒத்துழைப்பாளர்களின் கொள்கைகளுக்கு எதிரான அனைத்து இடதுசாரி எதிர்ப்பையும் நோக்கி திருப்பி விடப்பட உள்ள JTTF, ஒரு பொதுவான நடவடிக்கையில் மத்திய மற்றும் மாநில பொலிஸ் முகவர்களை ஒன்றிணைக்கிறது.

JTTF வழியாக செயல்பட்டு வரும் FBI முகவர்கள், முதல் அரசியலமைப்பு திருத்தத்தை முற்றிலும் மீறும் வகையில், மக்களின் அரசியல் கண்ணோட்டங்கள் குறித்து விசாரிப்பார்கள், போராட்டங்களில் பங்கெடுப்பவர்களைக் குற்றவாளியாக்கவும் முற்படுவார்கள். அரசியல் வட்டாரத்திலிருந்து பெறப்பட்ட உள்நாட்டு பாதுகாப்புத்துறையின் ஒரு புரிந்துணர்வு ஆவணம், உளவுத்துறை முகவர்கள் "உள்நாட்டுக்கு எந்த விதமான அச்சுறுத்தல் எழுவதைக் குறித்தும் கவனமாக" இருக்க வேண்டுமென மேற்கோளிட்ட அதேவேளையில், “கண்டறியப்பட்ட சில சந்தேகத்திற்குரிய நடவடிக்கைகளில் அரசியலமைப்புரீதியில் பாதுகாக்கப்பட்ட நடவடிக்கைகளும் உள்ளடங்கும்...” என்று மேற்கோளிட்டது.

ஜனாதிபதி சர்வாதிகாரத்திற்குத் தயாரிப்பு செய்வதில், பார், ட்ரம்பின் பிரதான முகவர்களில் ஒருவாக உருவெடுத்துள்ளார். “தலைமை சட்ட அமலாக்க அதிகாரி", அந்த அட்டார்னி ஜெனரல் இவ்வாறு தான் அழைக்கப்படுகிறார், உண்மையில் அமெரிக்க அரசிலமைப்பு மற்றும் ஜனநாயக உரிமைகள் மீதான தாக்குதலில் முழுமூச்சில் இறங்கி உள்ள சக-சதிகாரராக உள்ளார்.

கிளர்ச்சி-தடுப்பு சட்டத்தைக் கையிலெடுக்க ட்ரம்ப் அச்சுறுத்தி உள்ளார், ஆனால் கலிபோர்னியாவில் 1992 போலில்லாமல், எந்த மாநில ஆளுநரும் பெடரலிடம் இராணுவ உதவியைக் கோரியிருக்கவில்லை. ஆகவே போராட்டங்களை நசுக்கவும் மற்றும் பெரிதும் ஆபிரிக்க அமெரிக்க மக்களைப் பயமுறுத்தவும் பெருவாரியாக இராணுவப் படைகளின் பிரயோகத்தை எடுத்துக்காட்டுவதற்கு, வெள்ளை மாளிகை கொலம்பியா மாவட்டத்தைப் பயன்படுத்த நோக்கம் கொண்டுள்ளது, பெடரல் பிரதேசமாக விளங்கும் அது, எந்தவொரு மாநிலத்தின் பாகமாகவும் இல்லை.

பத்திரிகை செய்திகள் எடுத்துக்காட்டியுள்ளவாறு, திங்களன்று இரவு வெள்ளை மாளிகை வீதியின் அருகில் உள்ள Lafayette பூங்காவில் அமைதியான போராட்டக்காரர்கள் மீது பொலிஸ்-இராணுவத் தாக்குதலை நடத்தியதில் பார் தான் முக்கிய பாத்திரம் வகித்தார். பாரியளவில் விளம்பரப்படுத்தப்பட்ட ஒரு நிகழ்வாக அந்த பூங்கா வழியாக ட்ரம்ப் நடந்து சென்று, செயின்ட் ஜோன் எபிஸ்கோபல் தேவாலயத்தின் வாசலில் (இது இவ்வாரயிறுதியில் தீயால் சிறிய சேதத்திற்கு உள்ளானது) பைபிளுடன் காட்சி கொடுப்பதற்காக, மத்திய சிறைகூடங்களின் அலுவலகத்தினது கலகம் ஒடுக்கும் படை, இது நீதித்துறையின் பாகமாக இருப்பதால் பார்ரின் நேரடி அதிகாரத்தின் கீழ் உள்ளது, கண்ணீர் புகைகுண்டுகள், மிளகு பந்துகள், இன்னும் ஏனைய கலகம் ஒடுக்கும் கருவிகளைப் பயன்படுத்தி, அப்பூங்காவிலிருந்து போராட்டக்காரர்களை அகற்றும் முயற்சியில் முன்னிலையில் இருந்தது.

பத்திரிகையாளர் சந்திப்பில், டி.சி. மீதான ஒடுக்குமுறையில் எண்ணற்ற பெடரல் முகமைகளின் பாத்திரத்தை பார் பாராட்டினார், “FBI, ATF, DEA, சிறைக்கூடங்களின் அலுவலகம், அமெரிக்க மார்ஷல் சேவை உட்பட இந்த நடவடிக்கையில் இத்துறையின் பிரதான சட்ட-அமலாக்க கூறுபாடுகள் அனைத்தையும் நாம் பயன்படுத்தி உள்ளோம்,” என்றவர் அறிவித்தார்.

1992 இல், அப்போது அவர் ஜோர்ஜ் எச். டபிள்யூ. புஷ் நிர்வாகத்தில் அட்டார்னி ஜெனரலாக அவரின் முந்தைய பதவி காலத்தில், கடைசியாக ஒரு ஜனாதிபதி கிளர்ச்சி சட்டத்தைப் பயன்படுத்திய போது அவர் வகித்த பாத்திரத்தையும் நினைவுகூர்ந்தார், அப்போதைய லாஸ் ஏஞ்சல்ஸ் கிளர்ச்சி ரோட்னி கிங்கை (Rodney King) அடித்த பொலிஸ் குண்டர்கள் விடுதலை செய்யப்பட்டதைத் தொடர்ந்து நடந்தது—ஜோர்ஜ் ஃப்ளோய்ட் படுகொலை போலவே பொலிஸின் முந்தைய அந்த இனவாத அட்டூழியம் தேசியளவில் கண்டனத்திற்குரியமாக ஆகியிருந்தது ஏனென்றால் அது அருகில் இருந்தவர்களால் படமெடுக்கப்பட்டு, ஒட்டுமொத்த நாடும் அமெரிக்க "சட்டம் ஒழுங்கின்" உண்மையான இயல்பைக் கண்டிருந்தது.

revolution_counter-revolution_graphics

Lafayette சதுக்க ஆத்திரமூட்டலின் போது காணாமல் போயிருந்த துணை ஜனாதிபதி பென்ஸ், இந்த கிளர்ச்சி தடுப்பு சட்டத்திற்கும் மற்றும் பெடரல் துருப்புகளைப் பயன்படுத்துவதற்கும் உணர்வுப்பூர்வமாக வக்காலத்து வாங்குபவராக மேலெழுந்துள்ளார். பிட்ஸ்பேர்க் தொலைக்காட்சி நிலையத்தில் ஒரு பேட்டியில், பென்ஸ், வெறும் 500-600 தேசிய பாதுகாப்புப்படை துருப்புகளை அழைத்ததற்காக பென்சில்வேனியாவின் ஜனநாயகக் கட்சி ஆளுநரைக் கண்டித்தார், அதற்குப் பதிலாக அமெரிக்க ஆயுதப் படைகளை அனுப்பவும் அச்சறுத்தினார்.

“தேசிய பாதுகாப்புப் படையை அழைத்து, அவற்றை வீதிகளில் நிலைநிறுத்தி, சட்ட ஒழுங்கை பலமாகவும் தீர்க்கமான விதத்திலும் மீட்டமைக்குமாறு ஜனாதிபதியும் நானும் ஆளுநர் வொல்ஃப் போன்ற ஆளுநர்களைத் தொடர்ந்து வலியுறுத்துவோம். இதற்கு குறைந்த எதையும் அமெரிக்க மக்கள் எதிர்பார்க்கவில்லை,” என்று பென்ஸ் குறிப்பிட்டார்.

பார் முன்வைத்த பொய்களின் அளவு கிறுக்குத்தனமாகவும் நம்பமுடியாத விதத்தில் தெரிந்தாலும், அங்கே ஓர் உறுதியான தர்க்கம் செயல்பட்டு வருகிறது. அது, ஜனாதிபதியின் கரங்களில் சவாலுக்கிடமற்ற அதிகாரத்தை நிறுத்தும் ஓர் இராணுவ ஆட்சி சதியை நியாயப்படுத்துவதற்கான திட்டத்தின் பாகமாக உள்ளது. ட்ரம்பின் குற்றங்களுக்கு உடந்தையாய் இருக்கும் ஸ்டீபன் மில்லர் போன்ற உதவியாளர்கள் மற்றும் ஸ்டீவன் பானன் போன்ற ஆலோசகர்கள் உட்பட இவர்களினதும் மற்றும் ட்ரம்பினதும் அடாவடித்தனமான பேச்சுக்கள், அவர்கள் எந்த விதமான அரசியலமைப்பு-ஜனநாயக சட்டப் புத்தகத்தையும் பின்பற்றவில்லை என்பதையே எடுத்துக்காட்டுகிறது. இராணுவம் மற்றும் பொலிஸின் அடிப்படையில் ஓர் எதேச்சதிகார ஆட்சியை ஸ்தாபிப்பதற்கான அவர்களின் திட்டங்களை நடத்த அவர்கள் என்ன வேண்டுமானாலும் செய்வார்கள், சொல்வார்கள்.

பெருநிறுவன ஊடகங்களும் ஜனநாயகக் கட்சியும் அறிவுறுத்துவதைப் போல, அரசியல் மற்றும் தேசிய-பாதுகாப்பு ஸ்தாபகத்தினுள் நிலவும் எதிர்ப்பால் ட்ரம்ப் அவரின் இராணுவ ஆட்சி திட்டங்களைக் கைவிட்டு விடுவார் என்று நம்புவதும் மற்றும் அதன் அபாயங்களைக் குறைத்து மதிப்பிடுவதும், உழைக்கும் மக்கள் மற்றும் இளைஞர்களுக்கு மிகப் பெரிய அபாயமாக இருக்கும். இந்த நச்சார்ந்த மனநிறைவைப் பரப்புவதுதான் மினியாபொலிஸில் வியாழக்கிழமை நடந்த ஜோர்ஜ் ஃப்ளோய்டுக்கான நினைவஞ்சலியில் ஜனநாயகக் கட்சி செயல்பாட்டாளர் அல் ஷார்ப்டன் வழங்கிய பேருரையின் பிரதான செயல்பாடாக இருந்தது.

அமெரிக்க அரசியல் மற்றும் சமூக வாழ்வில் ஏதோவொரு புதியதைக் குறிக்கும் விதமாக, ஜோர்ஜ் ஃப்ளோய்ட் படுகொலை மீது கோபமும் சீற்றமும் கொண்ட பெரும்பான்மையினரில் தெளிவாக வெள்ளையின இளைஞர்கள் பெரும் எண்ணிக்கையில் இருந்த நிலையில், நாடுதழுவிய போராட்டங்களில் கலந்து கொண்டவர்களின் எண்ணிக்கை பாரியளவில் இருந்தது என்பதை ஷார்ப்டன் ஒப்புக்கொள்ள நிர்பந்திக்கப்பட்டார். ஆனால் விரைவிலேயே அவர் அவரின் நிஜமான நோக்கத்திற்குத் திரும்பினார்: ஃப்ளோய்ட் மீதான தாக்குதலை முற்றிலும் இனவாதம் என்பதாக சித்தரித்து, அவ்விதத்தில் தொழிலாள வர்க்கத்தின் மீதான ஒரு தாக்குதல் என்ற அதன் வர்க்க தன்மையையும், பொலிஸ் அவர் கறுப்பினத்தவரோ அல்லது வெள்ளையினத்தவரோ, முதலாளித்துவ அரசின் ஒடுக்குமுறை ஆயுதம் என்பதையும் மூடிமறைத்தார்.

போராட்டக்காரர்களுக்கு எதிராக இராணுவப் பலத்தைப் பிரயோகிப்பதற்கான ட்ரம்பின் அச்சுறுத்தலை சாதாரணமாக எடுத்துக்கொண்ட ஷார்ப்டன், ஜனாதிபதி "நிறைய குரைக்கிறார் ஆனால் கடிக்க மாட்டார்" என்றார். இந்த போராட்டங்கள் தொடங்கியதில் இருந்தே ஏற்கனவே பொலிஸ் மற்றும் தேசிய பாதுகாப்புப் படைகளால் குறைந்தபட்சம் டஜன் கணக்கானவர்கள் கொல்லப்பட்டுள்ள நிலைமைகளின் கீழ், ஒரு பயங்கரமான இரத்த ஆறு என்பதை அர்த்தப்படுத்தும் விதமாக ட்ரம்ப் மற்றும் அவரின் சக-சதிகாரர்கள் அமெரிக்காவின் வீதிகளில் இராணுவ தலையீட்டுக்குச் செயலூக்கத்துடன் தயாரிப்பு செய்து வருகின்ற நிலையில் இது கூறப்படுகிறது.

இராணுவ கையகப்படுத்தல் அச்சுறுத்தல் குறித்து ஒரேயொரு பிரதான ஜனநாயகக் கட்சியாளரும் ட்ரம்பைக் கண்டிக்கவில்லை அல்லது அவர் பதவியிலிருந்து நீக்கப்பட வேண்டுமென கோரவில்லை. இன்றைய நிலையில் ஜனநாயகக் கட்சி வேட்பாளராக உள்ள ஜோ பைடென் நடைமுறையளவில் காணாமல் போயுள்ளார். வாஷிங்டனில் முன்னணி ஜனநாயகக் கட்சியாளரும் பிரதிநிதிகள் சபையின் சபாநாயகருமான நான்சி பெலோசி, அமெரிக்காவின் அரசியலமைப்பு கட்டமைப்பைத் தூக்கியெறிவதற்காக எந்த முயற்சியும் நடக்கவில்லை என்பதைப் போல, Lafayette பூங்காவின் சம்பந்தப்பட்ட இராணுவ மற்றும் பொலிஸ் முகமைகளின் பட்டியலை வெள்ளை மாளிகை காங்கிரஸிற்கு அனுப்பக் கோரி, வியாழக்கிழமை வெறுமனே வெள்ளை மாளிகைக்கு ஒரு கடிதம் மட்டும் அனுப்பினார்.

ஜனநாயக உரிமைகளை நசுக்குவதற்கும் ஒரு பொலிஸ்-இராணுவ ஆட்சியைத் திணிப்பதற்குமான வெள்ளை மாளிகை திட்டங்களை எதிர்க்குமாறு சோசலிச சமத்துவக் கட்சி தொழிலாளர்களுக்கும் இளைஞர்களுக்கும் ஓர் அழைப்பு விடுத்துள்ளது. நாம் கூறினோம்:

தொழிலாள வர்க்கம் முன்நிகழ்ந்திராத இந்த நெருக்கடியில் ஒரு சுயாதீனமான சமூக மற்றும் அரசியல் சக்தியாக தலையீடு செய்ய வேண்டும். அது வர்க்க போராட்ட உத்திகள் மற்றும் சோசலிச புரட்சியின் அணுகுமுறைகளைக் கொண்டு வெள்ளை மாளிகை சதியை எதிர்க்க வேண்டும்.

பொலிஸ் வன்முறைக்கு எதிரான பாரிய போராட்டங்களில் பங்கெடுத்து வரும் மில்லியன் கணக்கான தொழிலாளர்களும் இளைஞர்களும், ட்ரம்ப், பென்ஸ் மற்றும் பதவியிலுள்ள ஏனைய சதிகாரர்களைப் பதவியிலிருந்து நீக்குவதற்கு அழைப்பு விடுத்து, ட்ரம்ப் நிர்வாகத்தின் அடாவடித்தனமான நடவடிக்கைகளுக்கு எதிராக அரசியல் கோரிக்கைகளை உயர்த்தத் தொடங்க வேண்டும்.

கட்டுரையாளர் பரிந்துரைக்கும் ஏனைய கட்டுரைகள்:

தொழிலாள வர்க்கத்திற்கு ஓர் அழைப்பு! ட்ரம்பின் ஆட்சி சதியை தடுப்போம்!

[4 June 2020]

Patrick Martin