உலகளாவிய போராட்டங்களும் முதலாளித்துவத்திற்கு எதிரான போராட்டமும்

9 June 2020

மொழிபெயர்ப்பின் மூலக் கட்டுரையை இங்கே காணலாம்

ஜோர்ஜ் ஃப்ளோய்டை பொலிஸ் படுகொலை செய்ததன் மீதெழுந்த போராட்டங்கள் முன்பில்லாதவாறு நோக்கத்திலும் அளவிலும் ஓர் உலகளாவிய இயக்கமாக அபிவிருத்தி அடைந்துள்ளது.

ஞாயிற்றுக்கிழமை மாலை வரையில், அங்கே மே 25 இல் இருந்து உலகெங்கிலும் அண்மித்து 2,000 நகரங்கள் மற்றும் சிறுநகரங்களில் ஆர்ப்பாட்டங்கள் நடந்துள்ளன. இலண்டன், ரோம், பேர்லின், வியன்னா, மாட்ரிட், பாரீஸ், லெஸ்பன், வார்சோ மற்றும் ஏனைய ஐரோப்பிய நகரங்களிலும் இந்த வாரயிறுதியில் மிகப்பெரிய ஆர்ப்பாட்டங்கள் நடத்தப்பட்டன. வெள்ளிக்கிழமை ஒஸ்லோவில் நோர்வேஜிய நாடாளுமன்றத்தின் முன்னால் 12,000 க்கும் அதிகமானவர்கள் போராட்டத்தில் இருந்தனர். ஆஸ்திரேலியா, இந்தியா, பாகிஸ்தான், துனிசியா மற்றும் மெக்சிகோவிலும் போராட்டங்கள் ஒழுங்கமைக்கப்பட்டன. கடந்த வாரம் நியூசிலாந்து எங்கிலும் பத்தாயிரக் கணக்கானவர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டிருந்தனர்.

அமெரிக்கா இந்த உலக இயக்கத்தின் மையத்தில் உள்ளது. அந்நாடெங்கிலுமான போராட்டங்கள் அவற்றின் இரண்டாவது வாரத்தில் நுழைந்துள்ளன. ஒவ்வொரு பிராந்தியத்திலும் மாநிலத்திலும் அங்கே கணிசமானளவுக்கு மக்கள் ஒன்றுகூடல்கள் இருந்துள்ளன. பல-இனத்தவர் மற்றும் பல-வம்சாவழியைச் சேர்ந்தவர்களின் இத்தகைய ஆர்ப்பாட்டங்கள், ஒரு சமயம் இனப்பாகுபாடு, குண்டர் சட்டம் மற்றும் அரசியல் பிற்போக்குத்தனத்திற்கான கோட்டையாக விளங்கிய தெற்கின் உள்ளார்ந்த பாகங்களிலிலும் நடந்துள்ளன.

பொலிஸ் வன்முறை மீதான ஓர் ஆர்ப்பாட்டத்தின் போது, ஜூன் 7, 2020, ஞாயிற்றுக்கிழமை, ஸ்பெயின், பார்சிலோனாவில் மக்கள் ஒன்றுகூடினர். (படம்: AP Photo/Emilio Morenatti)

மே 25 இல் மினிசோடாவின் மினியாபொலிசில் ஃப்ளோய்ட் படுகொலையே இந்த சமூக மேலெழுச்சியை தூண்டிவிட்ட சம்பவமாக இருந்தது. இந்த குற்றத்தின் அதிர்ச்சியூட்டும் காட்டுமிராண்டித்தனம் மக்களைப் பயமுறுத்தியதுடன், மக்களிடையே பெருவாரியாக மனக்குமுறலான மனோநிலையை உருவாக்கியது. ஆனால் ஒவ்வொரு ஆண்டும் அமெரிக்க பொலிஸ் நடத்தி உள்ள 1,000 க்கும் அதிகமான சம்பவங்களில் ஒன்றான இந்த சமீபத்திய படுகொலை, இந்தளவுக்கு மக்கள் கோபத்தின் வெடிப்பை செய்தது, ஏனென்றால் அமெரிக்கா வெடிப்பைப் பற்ற வைக்கும் ஒரு சம்பவத்திற்காக மட்டுமே ஒரு சமூக வெடிஉலையாக ஏற்கனவே காத்துக் கொண்டிருந்தது. இதே நிலைமை தான் உலகெங்கிலும் எல்லா நாடுகளிலும் நிலவுகிறது.

ஆர்ப்பாட்டங்களின் உலகளாவிய இந்த அலை, சமூக மற்றும் அரசியல் கோபத்திற்கான அபரிமிதமான ஆதாரத்தை வெளிப்படுத்துகின்றன. இது, தசாப்தங்களாக முடிவில்லாத போர், அடிப்படை ஜனநாயக உரிமைகளின் அழிப்பு, ஒரு சிறிய ஆளும் உயரடுக்கின் கரங்களுக்குள் பாரியளவில் செல்வ வளம் குவிந்தது ஆகியவற்றுக்கு விடையிறுப்பாக உள்ளது.

அதன் "தலைமையற்ற" தன்மையே இந்த அபிவிருத்தியின் மிகவும் அதிர்வூட்டும் அம்சங்களில் ஒன்றாகும். எந்தவொரு குறிப்பிட்ட நாட்டிலும் தற்போது எந்த ஆளும் கட்சி செல்வாக்கு பெற்றிருந்தாலும், தொழிலாளர்கள் மற்றும் இளைஞர்களிடையே சமூக எதிர்ப்பு அதிகரிப்பதை நோக்கிய அவற்றின் மனோபாவம் அடிப்படையில் விரோதமாகவே உள்ளது.

அமெரிக்காவில், எந்த ஜனநாயகக் கட்சி அரசியல்வாதியோ அல்லது குடியரசுக் கட்சி அரசியல்வாதியோ போராட்டங்களில் வெளிப்படும் உணர்வுகளைக் குறித்து பேசவில்லை. இந்த கடைசி வார போராட்டங்களில் உரையாற்ற முயன்ற ஒரு சில விரல் விட்டு எண்ணக்கூடிய ஜனநாயகக் கட்சியினர் —சான்றாக மினியாபொலிஸ் மற்றும் நியூ யோர்க் நகர ஜனநாயகக் கட்சியின் நகரசபை தலைவர்கள்— வெறுப்பு மிகுந்த கூச்சலை, கோபமான கேள்விகளை எதிர்கொண்டதுடன், மேடையிலிருந்து விரட்டப்பட்டனர்.

தொழிலாளர்கள் மற்றும் இளைஞர்களின் ஜனநாயக உரிமைகளுக்கு அரசியல் ஸ்தாபகத்தின் மனோபாவம், எதிர்ப்பை ஒடுக்குவதற்காக நாடெங்கிலும் இராணுவத்தை நிலைநிறுத்துவதற்கும் மற்றும் ஓர் ஆட்சி சதியை நடத்துவதற்குமான ட்ரம்பின் முயற்சிக்கு ஜனநாயகக் கட்சியிலிருந்து எந்த உத்தியோகபூர்வ விடையிறுப்பும் இல்லை என்பதில் அதன் மிகவும் அப்பட்டமான வடிவத்தை எடுத்தது.

ட்ரம்பின் பிரதான சக-சதிகாரர்களில் ஒருவரான அட்டார்னி ஜெனரல் வில்லியம் பார் ஞாயிற்றுக்கிழமை ஒரு பேட்டியில் குறிப்பிடுகையில், மாநில ஆளுநர்களும் ஏனைய அதிகாரிகளும் எதிர்த்தாலும் கூட, கிளர்ச்சி தடுப்பு சட்டத்தைக் கையிலெடுப்பதற்கும் மற்றும் பெடரல் துருப்புகளை அனுப்புவதற்கும் ஜனாதிபதிக்கு எல்லா உரிமையும் உள்ளது, இருந்தாலும் அவர் இப்போது வரையில் அவ்வாறு செய்யவில்லை என்று வலியுறுத்தினார். அனைத்திற்கும் மேலாக, வெள்ளை மாளிகைக்கு அருகிலுள்ள Lafayette சதுக்கத்தில் அமைதியாக போராடிய போராட்டக்காரர்களைச் சரமாரியாக கண்ணீர் புகைக்குண்டு, மிளகுப்பொடி பந்துகள் மற்றும் இதர கலகம் ஒடுக்கும் கட்டுப்பாட்டு ஆயுதங்களைப் பிரயோகித்து விரட்டியடித்த பெடரல் பொலிஸ் மற்றும் தேசிய பாதுகாப்புப் படை துருப்புகளின் நடவடிக்கைகளைக் கூட பார் உரத்தக் குரலில் பாதுகாத்தார்.

இராணுவத்தை நிலைநிறுத்துவதற்கான ட்ரம்ப் அச்சுறுத்தலுக்கு ஜனநாயகக் கட்சியின் விடையிறுப்பில் வெற்றுரைகளும் மழுப்பல்களுமே நிறைந்துள்ளன. அவர் உடனடியாக பதவியிலிருந்து வெளியேற்றப்பட வேண்டுமென அது அழைப்பு விடுக்கவில்லை என்பது ஒருபுறம் இருக்கட்டும், ட்ரம்பின் நடவடிக்கைகளை தெளிவாகவும் உறுதியாகவும் கண்டிப்பதைக் கூட தவிர்த்துள்ளது. உக்ரேனுக்கு இராணுவ உதவியை நிறுத்தி வைத்ததற்காக ட்ரம்பைப் பதவிநீக்க குற்றவிசாரணைக்கு உட்படுத்திய ஜனநாயகக் கட்சியின் காங்கிரஸ் சபை தலைமை, வாஷிங்டன் மீதான இராணுவ ஆக்கிரமிப்பை ட்ரம்ப் கோருகையில் ஒரு சுண்டு விரலைக் கூட உயர்த்தவில்லை.

ட்ரம்பின் ஆட்சி சதிக்கு எதிர் குரல் ஒலித்ததென்றால் அது இராணுவத்தின் சில பிரிவுகளில் இருந்து வந்தது. ஊடகங்கள், முன்னாள் தளபதி "போர் வெறியர்" ஜேம்ஸ் மாட்டீஸ் மற்றும் ஏனைய ஓய்வூபெற்ற அதிகாரிகளின் அறிக்கைகளைத் தம்பட்டமடித்து வருகின்றன. ஆனால் முன்னாள் தளபதிகளிடம் இருந்து வந்துள்ள ட்ரம்புக்கான பிரதான விடையிறுப்பானது, அரசின் படைத்துறைசாரா துறைகள் அல்ல இராணுவமே அமெரிக்க ஜனநாயகத்தின் தலைவிதியைத் தீர்மானிப்பவராக ஆகியுள்ளது என்பதை எடுத்துக்காட்டுவதற்கு சேவையாற்றுகிறது. ஆனால் இராணுவத்தின் சகிப்புத்தன்மையில் அதன் உயிர்பிழைப்பைச் சார்ந்திருக்கும் ஒரு ஜனநாயகம், அதன் கடைசி உயிர்மூச்சில் உள்ளது என்பதே உண்மையாகும்.

அபாயங்கள் மிகவும் நிஜமானவை. வெள்ளை மாளிகை சதிகாரர்கள் அவர்களின் சதித்திட்டங்களைக் கைவிட்டு விடவில்லை. இராணுவம் அதன் நேரத்திற்காக காத்திருக்கிறது மற்றும் அதற்கான வாய்ப்புகளை பரிசீலித்து வருகிறது. பொலிஸ் கோரமுகத்துடன் ஆயுதந்தாங்கி நிற்கிறது.

அனைத்திற்கும் மேலாக, மாநிலங்களிலும் நகரங்களிலும் உள்ள ஜனநாயகக் கட்சி ஆளுநர்களும் நகரசபை தலைவர்களும் தேசிய பாதுகாப்புப் படையை பயன்படுத்தியதன் மூலமும் மற்றும் பாரியளவில் ஆயுந்தாங்கிய பொலிஸ் போராட்டக்காரர்களை தாக்கும் அருவருப்பான பணியைப் செய்ய விட்டதன் மூலமும் ஆயுதப்படைகள் தலையீடு செய்ய விட்டு விட்டனர். ஏற்கனவே, அண்மித்து டஜன் கணக்கானவர்கள் போராட்டத்தின் போது கொல்லப்பட்டுள்ளனர், மற்றும் 10,000 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

ஒரு புரட்சிகர நெருக்கடியின் அபிவிருத்தியின் ஆரம்ப கட்டத்தில், போராடி வரும் பெருந்திரளான மக்கள் அவர்கள் எதற்கு எதிராக போராடி வருகிறார்கள், எதற்காக போராடி வருகிறார்கள் என்ற ஒரு தெளிவான கருத்து இல்லாமல் தான் போராட்டத்திற்குள் நுழைகிறார்கள் என்றாலும், தற்போதைய ஆட்சியை இனியும் தாங்கிக் கொள்ள முடியாது என்பதை மட்டும் அவர்கள் புரிந்து வைத்திருப்பார்கள். ஆனால் கட்டவிழ்ந்து வரும் இந்த பாரிய இயக்கத்தில் தொழிலாள வர்க்கம் முன்னணிப் படையாக மற்றும் தீர்க்கமான படையாக முன்வரும்போது மட்டுந்தான் ஜனநாயக அபிலாஷைகளை யதார்த்தமாக்க முடியும். எதிரி சரியாக அடையாளம் காணப்பட வேண்டும். அது வெறுமனே அடாவடித்தனமான பொலிஸ் படையோ அல்லது பலாத்கார சிப்பாய்களோ கிடையாது. ஜனநாயக உரிமைகள் மீதான தாக்குதலுக்கு ஆதாரமாக இருப்பது நிதியியல் செல்வந்த தட்டும், அதன் செல்வவளமும் அதிகாரமும் அடித்தளத்தில் கொண்டுள்ள இந்த சமூக மற்றும் பொருளாதார அமைப்பான முதலாளித்துவமாகும்.

ஆகவே ஜனநாயக உரிமைகளின் பாதுகாப்பு என்பது, அரசியல் அதிகாரத்தைத் தொழிலாள வர்க்கத்திற்கு கைமாற்றுவதையும் மற்றும் சமூகத்தின் விரிவார்ந்த பொருளாதார மறுசீரமைப்பையும் நோக்கமாக கொண்ட ஒரு சோசலிச வேலைத்திட்டத்தை அடிப்படையாக கொண்டிருக்க வேண்டும்.

பொலிஸ் வன்முறையை எதிர்க்கும் தொழிலாளர்களும் இளைஞர்களும் அவர்களின் முந்தைய அனுபவங்களில் இருந்து அவசியமான முடிவுகளை எடுத்து, தொழிலாள வர்க்கத்தில் ஒரு சோசலிச தலைமையைக் கட்டமைக்க போராடுமாறு சோசலிச சமத்துவக் கட்சி (SEP) அழைப்பு விடுக்கிறது. பொலிஸ் வன்முறைக்கு எதிரான போராட்டமானது, சமத்துவமின்மை, சுரண்டல், போர், எதேச்சதிகாரவாதம் மற்றும் முதலாளித்துவ இலாபகர அமைப்புமுறைக்கு எதிராக, அமெரிக்காவிலும் உலகெங்கிலும், அதிகரித்தளவில் அபிவிருத்தி அடைந்து வரும் தொழிலாளர்களின் போராட்டங்களுடன் இணைக்கப்பட வேண்டும்.

Statement of the Socialist Equality Party