வோல் ஸ்ட்ரீட் எழுச்சியின் முரண்பாடு

11 June 2020

மொழிபெயர்ப்பின் மூலக் கட்டுரையை இங்கே காணலாம்

சென்ற திங்கட்கிழமை ஒரு குறிப்பிடத்தக்க முரண்பாடாக தெரியும் ஒன்றின் எழுச்சியை காணக்கூடியதாக இருந்தது. அமெரிக்கா பொருளாதார பின்னிறக்கத்தில் இருப்பதாக பொருளாதார ஆய்வுக்கான தேசிய ஆணையம் அன்றைய தினம் அறிவித்தது அதாவது, பெருமந்தநிலைமைக்குப் பின்னர் மிகக் கூர்மையாக ஏற்படக்கூடிய ஒரு பொருளாதார சுருக்கத்தினை அடையக்கூடும் பொருளாதார ஆய்வுக்கான தேசிய ஆணையம் அன்றைய தினம் அறிவித்தது, ஆனால் அதேவேளையில் வோல் ஸ்ட்ரீட் குறியீடுகளோ இந்தாண்டு தொடக்கத்தில் அவை எட்டியிருந்த மட்டங்களுக்குத் திரும்பி இருந்தன.

அமெரிக்காவிலும் சர்வதேச அளவிலும் நிதியியல் சந்தைகள் எல்லா துறைகளிலும் உறைந்திருந்ததால் வோல் ஸ்ட்ரீட் வீழ்ச்சி கண்டிருந்த மார்ச்சின் நடுப்பகுதிக்கு பின்னர் இருந்து, அது ஓர் ஆரவாரமான உயர்வை அனுபவித்துள்ளது. மார்ச் 23 க்குப் பின்னர் டோவ் குறியீடு 48 சதவீதம் அதிகரித்துள்ளது, தொழில்நுட்ப நிறுவனங்கள் நிறைந்த நாஸ்டாக் குறியீடு 45 சதவீதம் உயர்ந்துள்ளது, அது இப்போது இந்தாண்டு தொடக்கத்தில் இருந்ததை விட 1000 புள்ளிகள் அதிகமாக உள்ளது. 45 சதவீதம் அதிகரித்துள்ள எஸ்&பி 5000 குறியீடும் கோவிட்-19 தொற்றுநோய் தாக்குவதற்கு முன்னர் இருந்த அதே இடத்திற்குத் திரும்பி உள்ளது.

அமெரிக்காவிலும் சர்வதேச அளவிலும் கொரோனா வைரஸ் நோய்தொற்று விகிதமும் மரண எண்ணிக்கையும் தொடர்ந்து அதிகரித்து வருகின்ற நிலையில், ஒரு நூற்றாண்டின் மிகப் பெரிய மருத்துவ நெருக்கடிக்கு மத்தியில் நிகழ்ந்து வரும் இந்த சந்தை உயர்வு, அதற்கு அடித்தளத்திலுள்ள உண்மையான பொருளாதாரத்துடன் கூர்மையாக முரண்படுகிறது.

செவ்வாய்கிழமை, மார்ச் 3, 2020, ஹாங்காங்கில் ஓர் உள்ளூர் வங்கிக்கு வெளியே ஹாங்காங் பங்கு குறியீட்டைக் காட்டும் ஒரு மின்னணு பலகையை மக்கள் கடந்து செல்கின்றனர். (படம்: அசோசியேடெட் பிரஸ்/ Kin Cheung)

பொருளாதாரம் "மீண்டும் சீறி" வரும் என்று அமெரிக்க ஜனாதிபதி ட்ரம்ப் மற்றும் ஏனையவர்களின் வாதங்களுக்கு முரண்பாடாக, கடந்த வாரம் அமெரிக்க நாடாளுமன்றத்தின் வரவு-செலவு திட்டக்கணக்கு அலுவலகம் எச்சரிக்கையில், இந்த தொற்றுநோயால் ஏற்பட்டு வரும் பாதிப்புகள் குறைந்தபட்சம் ஒரு தசாப்தத்திற்கு நீடிக்கும் என்று குறிப்பிட்டது.

ஐந்து மிகப் பெரிய ஐரோப்பிய பொருளாதாரங்கள் மீது இந்த தொற்றுநோயின் பாதிப்புகளைக் குறித்த மதிப்பீடுகள் பிரிட்டனில் 14 சதவீத சுருக்கத்தையும், ஸ்பெயின் 11.6 சதவீதம், பிரான்ஸ் 10.3 சதவீதம், இத்தாலி 9.2 சதவீதம் மற்றும் ஜேர்மனி 6.1 சதவீதத்திலும் நிறுத்துகின்றன. உலகளாவிய மொத்த உள்நாட்டு உற்பத்தி (GDP) இந்தாண்டு 5.2 சதவீதம் சுருங்குமென உலக வங்கி முன்கணிக்கிறது.

இத்தகைய நிலைமைகளின் கீழ், இழப்புகளைச் சந்தித்து வந்த நிறுவனங்கள் அல்லது இந்த தொற்றுநோயின் காரணமாக அவற்றின் வருவாய் மதிப்பீட்டில் உயர்வை எடுத்துக்காட்டக் கூட முடியாத நிறுவனங்களின் பங்குகள் தொடர்ந்து அதிகரித்து வருவதால், பங்கு விலைக்கும் வருவாய்க்குமான விகிதங்கள் போன்ற (price-to-earnings ratios) பங்கு விலைகளைத் தீர்மானிக்கும் மரபார்ந்த அளவீடுகள் பயனற்று போயுள்ளன.

உயிரிழப்புகள், மில்லியன் கணக்கிலான வேலை அழிப்பு மற்றும் பரந்த பெருந்திரளான உழைக்கும் மக்களிடையே முன்பினும் அதிகரித்து வரும் வறுமை ஆகியவற்றுக்கு இடையே இந்த ஊகவணிக வெறித்தனத்திற்கு காரணம் என்ன?

இதற்கான விடையை இந்த தொற்றுநோய்க்கு ஆளும் வர்க்கம் காட்டும் விடையிறுப்பில் காணலாம். ஆரம்பத்தில் இருந்தே அது கோவிட்-19 ஐ விஞ்ஞானபூர்வ அடித்தளத்திலான நடவடிக்கைகளை பயன்படுத்துவதன் மூலமாக கையாள வேண்டிய ஒரு மருத்துவ நெருக்கடியாக கையாளாமல், மாறாக இலாப திரட்சிக்கான ஒரு வாய்ப்பாக கையாண்டு அதற்கேற்ப செயல்பட்டது.

ஒட்டுமொத்த அரசியல் ஸ்தாபகத்தின் ஆதரவுடன் ட்ரம்ப் நிர்வாகம் CARES சட்டத்தின் கீழ் பெருநிறுவனங்களுக்கு 3 ட்ரில்லியனுக்கும் அதிகமான பிணையெடுப்பை ஒழுங்கமைத்தது, அதேவேளையில் ட்ரில்லியன் கணக்கிலான டாலர்களை நிதியியல் சந்தைகளுக்குள் இலவச பணமாக பாய்ச்சுவதற்காக பெடரல் உள்நுழைந்தது.

2008 உலகளாவிய நிதியியல் நெருக்கடியை அடுத்து பெடரல் அதன் நிதியியல் சொத்துக்களில் பங்குடைமைகளை ஏற்கனவே 800 பில்லியன் டாலரில் இருந்து 4 ட்ரில்லியன் டாலராக சுமையேற்றிக் கொண்டுள்ள நிலையில், இப்போது அது இன்னும் கூடுதலாக அதன் பங்குடைமைகளை 7 ட்ரில்லியன் டாலருக்கு அதிகரித்தது, இது 9 ட்ரில்லியன் டாலருக்கு உயரும் என்ற எதிர்பார்ப்புகளும் உள்ளன. மத்திய வங்கி நிதியியல் சந்தைகளின் அனைத்து பிரிவுக்கும் உத்தரவாதமளிப்பவராக செயல்படுவதால், அதன் நடவடிக்கைகளுக்கு "வரம்பில்லை" என்பதை பெடரல் தலைவர் ஜெரொம் பாவெல் தெளிவுபடுத்தி உள்ளார்.

அதன் நடவடிக்கைகளே உலகெங்கிலும் பின்தொடரப்படுகின்றன. சர்வதேச கொடுக்கல் வாங்கல்களை ஒழுங்கமைக்கும் வங்கி பிரசுரித்த ஓர் ஆவணத்தின்படி, உலகின் ஐந்து பிரதான மத்திய வங்கிகளது நடவடிக்கையின் ஒட்டுமொத்த பாதிப்பானது, 2008 நெருக்கடிக்குப் பின்னர் 10 சதவீதம் உயர்ந்த அவற்றின் இருப்புநிலைக் கணக்குடன் ஒப்பிடுகையில், அதுவே 2020 நிறைவடைவதற்கு முன்னதாக ஏறத்தாழ மொத்த உள்நாட்டு உற்பத்தியில் 23 சதவீதத்திற்கு உயரும் என்பதை அர்த்தப்படுத்துகிறது.

லாஸ் வேகாஸில் One-Stop வேலை வாய்ப்பு மையத்தில் வேலைவாய்ப்பின்மை சலுகைகளில் இருந்து உதவி பெறுவதற்காக மக்கள் வரிசையில் காத்திருக்கிறார்கள். (படம்: அசோசியேடெட் பிரஸ்/ John Locher)

வோல் ஸ்ட்ரீட் நிதி நிறுவனங்கள் மற்றும் ஊகவணிகர்களின் நிலைப்பாட்டில் இருந்து, இந்த தொற்றுநோயானது எப்படி பார்த்தாலும் வெற்றியாக உள்ளது. அவை வேலைக்குத் திரும்ப செய்வதற்கான ஆட்கொலை நடவடிக்கையால் துணிவு பெற்றுள்ளதுடன், தொழிலாளர்களின் உயிர்களை விட பெருநிறுவன வருவாய்கள் மற்றும் இலாபங்களுக்கான முன்னுரிமையைப் பகிரங்கமாக முன்னெடுக்கும் அரசியல் ஸ்தாபகத்தின் முழு ஆதரவும் அவற்றுக்கு இருப்பதை அவை புரிந்து வைத்துள்ளன.

பங்குச் சந்தையில் ஏதேனும் குறிப்பிடத்தக்க சரிவு இருந்தால், இன்னும் அதிகமாக இலவச பணம் கிடைக்கச் செய்ய பெடரல் தலையீடு செய்யும் என்பதும் அவற்றுக்குத் தெரியும்.

இதற்கு மேலாக இந்த பொருளாதார சீரழிவில் இருந்து மிகப் பெரியளவில் ஆதாயங்களை ஈட்ட முடியும் என்று அவை கருதுகின்றன. அது வீழ்ச்சியுறும் நிறுவனங்களைப் பெரிய பெருநிறுவனங்கள் விழுங்கிவிடும் நிலைமைகளை வழங்குகிறது, அவ்விதத்தில் உயிர்பிழைக்கும் நிறுவனங்களது அளவும் இலாபங்களும் அதிகரிக்கும்.

அதே நேரத்தில், அவை புதிய தொழில்நுட்பங்களைப் பயன்படுத்தி பெரிதும் குறைந்த சம்பள விகிதத்தில் வெகு சில தொழிலாளர்களையே பயன்படுத்துவதற்காக அவற்றின் செயல்பாடுகளைப் புனரமைப்பு செய்வதால், தொழிலாளர்களின் கூலிகள் மற்றும் நிலைமைகளைக் கீழிறக்க, அவை போருக்குப் பிந்தைய சாதனை மட்டத்திலான வேலைவாய்ப்பின்மை அதிகரிப்பை இதற்கான ஒரு வழிவகையாக பயன்படுத்தி கொள்ள முடியும்.

சுருக்கமாக கூறுவதானால், ஆளும் பெருநிறுவன மற்றும் நிதியியல் செல்வந்த தட்டுக்கள் கொரோனா வைரஸுடன் அவற்றால் வாழ முடியும் என்பதை மட்டுமல்ல, மாறாக அதிலிருந்து அவற்றால் இலாபமீட்டி தழைத்தோங்க முடியும் என்பதையும் கற்று வருகின்றன.

ஆனால் இந்த ஊகவணிக கொண்டாட்டங்களுக்குப் புறநிலையான வரம்புகள் உள்ளன. ஒரு கணினி பொத்தானை அழுத்தி பணம் பாய்ச்சப்பட்டதால் உருவாக்கப்பட்ட கற்பனையான மூலதன குவியல், உண்மையான மதிப்பை உருவாக்குவதில்லை மட்டுமல்லாது நிஜமான மதிப்பைக் கொண்டிருப்பதுமில்லை. அது நிஜமான மதிப்பே இல்லை. ஊதிப் பெரிதாக்கப்பட்ட பங்கு மதிப்புகள் உட்பட நிதியியல் சொத்திருப்புகள், எதிர்காலத்தில் மதிப்பானது தொழிலாள வர்க்கத்தின் உழைப்பிலிருந்து கறந்தெடுக்கப்பட வேண்டும் என்ற கோரிக்கையை பிரதிநிதித்துவப்படுத்துகின்றன.

இது முன்னொருபோதும் இல்லாத மட்டங்களுக்கு தொழிலாள வர்க்கம் மீதான சுரண்டலைத் தீவிரப்படுத்த கோருகிறது. அமெரிக்காவிலும் உலகெங்கிலும் ஆளும் வர்க்கங்கள் இதில் உள்ளடக்கி உள்ள பாரிய வர்க்க மோதலுக்கான அவற்றின் தயாரிப்புகளைச் செய்து வருகின்றன.

இதுதான் ஓர் இராணுவ-பொலிஸ் சர்வாதிகாரத்தை ஸ்தாபிப்பதற்கும் மற்றும் அரசியலமைப்பு விதிகளை இல்லாதொழிப்பதற்குமான ட்ரம்ப் நிர்வாகத்தினது முனைவின் அடித்தளத்திலிருப்பதும் மற்றும் உந்துசக்தியாக இருப்பதுமாகும். ட்ரம்பின் பாதுகாப்புத்துறை செயலர் மார்க் எஸ்பெரின் வார்த்தைகளைப் பயன்படுத்தினால், இலாபத் திரட்சிக்கான நிகழ்முறையானது முதலாளித்துவ அரசுகளின் பலம் "ஆதிக்கம்" செய்ய வேண்டிய "போர்க்களம்" ஆகும்.

ஜோர்ஜ் ஃபுளோய்டின் பொலிஸ் படுகொலைக்கு எதிராக போராட்டங்கள் வெடிப்பது வரவிருக்கும் மிகப் பெரிய வர்க்க மோதல்களுக்கான ஒரு முற்காட்சியாகும். அவர் உச்சரித்த கடைசி வார்த்தையான, “என்னால் சுவாசிக்க முடியவில்லை,” என்பது அமெரிக்கா எங்கிலும் மற்றும் சர்வதேச அளவில் அதிர்வு ஏற்படுத்தி உள்ளன ஏனென்றால் அவை ஒவ்வொரு இடத்திலும் தொழிலாளர்கள் முகங்கொடுக்கும் நிலைமையை ஒன்றிணைத்துக்காட்டுகின்றது.

"சுவாசிப்பது" அதிகரித்தளவில் சாத்தியமில்லாததாகிக் கொண்டிருக்கிறது. அதாவது, ஆளும் வர்க்கம் அவசியமான அனைத்து வழிவகைகள் மூலமாகவும், என்ன விலை கொடுத்தாவது, அவற்றின் இலாப நோக்கு அமைப்புமுறையைப் பாதுகாக்க முயலுவதால் இந்த முதலாளித்துவ அமைப்புமுறையின் கீழ் வாழ முடியாமல் ஆகி வருகிறது.

தொழிலாள வர்க்கம் முகங்கொடுத்து வரும் எரிந்து கொண்டிருக்கும் பிரச்சினை, அது இப்போது முகங்கொடுக்கும் நிலைமையின் புறநிலை தர்க்கத்தையும் மற்றும் ஒரு கொலைகார சர்வாதிகார ஆளும் வர்க்கத்திற்கு எதிரான ஏற்கனவே அது ஈடுபட்டுள்ள போராட்டத்தின் இயல்பையும் நனவுபூர்வமாக உள்ளீர்த்துக் கொள்வதாகும்.

அமெரிக்க சுதந்திர பிரகடனம் அதன் முதலிடத்தில் உயிர் வாழ்வதற்கான மாற்றமுடியாத உரிமைக்கு அழைப்புவிடுகின்றது. இன்று அந்த உரிமையைப் பெறுவது என்பது அரசியல் அதிகாரத்திற்கான ஒரு நனவுபூர்வமான போராட்டத்தின் மூலமாக, அதாவது இந்த இலாப நோக்கு அமைப்புமுறையைத் தூக்கியெறிந்து சோசலிச அடித்தளத்தில் பொருளாதாரத்தை மறுக்கட்டமைப்பதில் முதலும் முக்கியமான படியாக தொழிலாளர்களின் அரசை ஸ்தாபிப்பதற்கான போராட்டத்தின் மூலமாக மட்டுமே முன்னெடுக்க முடியும்.

Nick Beams