பொலிஸ் வன்முறை குறித்த தேசியளவிலான ஆர்ப்பாட்டங்களின் மத்தியில், ஜோர்ஜ் ஃபுளோய்ட் அடக்கம் செய்யப்பட்டார்

By Niles Niemuth
12 June 2020

மொழிபெயர்ப்பின் மூலக் கட்டுரையை இங்கே காணலாம்

மின்னசோட்டா மாநில, மினியாபொலிஸ் நகரில் நான்கு பொலிஸ் அதிகாரிகளால் ஜோர்ஜ் ஃபுளோய்ட் படுகொலை செய்யப்பட்டு இரண்டு வாரங்களுக்குப் பின்னர், செவ்வாயன்று டெக்சாஸ் மாநில, ஹூஸ்டன் நகரில் அவரது உடல் அடக்கம் செய்யப்பட்டது. அவரது சொந்த ஊரில் அவரது தாயின் கல்லறைக்கு அடுத்து அவர் அடக்கம் செய்யப்பட்டார், பொலிஸ் அதிகாரியான Derek Chauvin ஃபுளோய்ட்டின் குரல்வளையில் முழங்காலை வைத்து 8 நிமிடங்கள் 46 விநாடிகள் நேரத்திற்கு அழுத்தி நெரிக்கையில் அவர் கதறி அழுதார்.

ஃபுளோய்ட் மிகவும் துன்புறுத்தப்பட்டு கொலை செய்யப்படுகையில் அங்கிருந்த பார்வையாளர்களின் கைபேசிகளில் பதிவு செய்யப்பட்ட காணொளி, பல தசாப்தங்களில் தேசியளவிலான மற்றும் சர்வதேச அளவிலான மிகப்பெரிய அரசியல் எதிர்ப்புகளைத் தூண்டியுள்ளது.

அமெரிக்காவின் அனைத்து ஐம்பது மாநிலங்களிலுள்ள நூற்றுக்கணக்கான நகரங்களிலும், மற்றும் உலகெங்கிலுமுள்ள பல டசின் நகரங்களிலும் பொலிஸ் வன்முறை மற்றும் சமூக சமத்துவமின்மைக்கு எதிராக நடைபெற்று வரும் பல்லின ஆர்ப்பாட்டங்களில் பல மில்லியன் மக்கள் கலந்து கொண்டனர். இந்த ஆர்ப்பாட்டங்கள் பொலிஸ் மிருகத்தனமிக்க தாக்குதல்களை ஒவ்வொரு நாளும் எதிர்கொண்டன. இத்தாக்குதல்களினால் நூற்றுக்கணக்கான எதிர்ப்பாளர்கள் காயமடைந்துள்ளனர் என்பதுடன், பல எதிர்ப்பாளர்கள் கொல்லப்பட்டுள்ளனர்.

2020 ஜூன் 9 செவ்வாய்க்கிழமை, ஹூஸ்டனில் உள்ளThe Fountain of Praise தேவாலயத்தில் தனது சகோதரர் ஜோர்ஜ் ஃபுளோய்ட்டின் இறுதிச் சடங்கின் போது லா ரோனியா ஃபுளோய்ட் பேசுகிறார். (AP Photo/David J. Phillip, Pool)

கடந்த வாரத்தில், ஃபுளோய்ட்டுக்கு மரியாதை செலுத்தவும் மற்றும் அவரது குடும்பத்தினருக்கு ஆதரவளிக்கவும் மினியாபொலிஸ், ஹூஸ்டன் மற்றும் வடக்கு கரோலினாவில் உள்ள பொது நினைவிடங்களில் பல்லாயிரக்கணக்கானவர்கள் பல மணி நேரங்கள் வரிசையில் காத்திருந்தனர். டெக்சாஸின் சன் அன்டோனியோ; மிச்சிகனின் ஆன் ஆர்பர்; மற்றும் பிட்ஸ்பேர்க்கின் புறநகர் பகுதிகளான பென்சில்வேனியாவின் மொன்ரோவில் ஆகிய பகுதிகளில் நடந்த ஆர்ப்பாட்டங்கள் உட்பட, நாடெங்கிலுமாக செவ்வாயன்றும் ஆர்ப்பாட்டங்கள் தொடர்ந்து நடைபெற்றன.

இந்த ஆர்ப்பாட்டங்களை முடிவுக்குக் கொண்டுவருவதற்காக இராணுவத்தை களமிறக்கப் போவதாக அச்சுறுத்தும் ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்பின் ஆதரவுடன், பெரியளவில் ஆயுதமேந்திய பொலிஸ் படையினர் கண்ணீர்ப்புகைக் குண்டுகள், புகைக் குண்டுகள், பீன்பேக் ஆயுதங்கள், இரப்பர் தோட்டாக்கள் ஆகியவற்றைக் கொண்டு சரமாரியாக தாக்குதலை நடத்தினர். டசின் கணக்கான மாநிலங்களை சேர்ந்த ஜனநாயகக் கட்சி மற்றும் குடியரசுக் கட்சி மேயர்களும் ஆளுநர்களும், ஆர்ப்பாட்டங்களை தணிப்பதற்காக ஆயிரக்கணக்கான தேசிய காவல்படை சிப்பாய்களை நிலைநிறுத்தினர். மேலும், நாடு முழுவதிலும் ஊடகவியலாளர்கள் மீது தாக்குதல் நடத்தி கைதுசெய்வதற்கென பொலிசாரால் வேண்டுமென்றே அவர்கள் குறிவைக்கப்பட்டனர்.

ஃபுளோய்ட்டின் இறுதிச் சடங்குகள் தொடங்குவதற்கு சற்று முன்னதாக, ட்ரம்ப் தனது மிருகத்தனமான ஒடுக்குமுறைக்கு தனது ஆதரவை வெளிப்படுத்தினார், Buffalo வில் பொலிசாரால் வன்முறையாக தள்ளிவிழுத்தப்பட்ட 75 வயதான மனிதர் "ஒரு ஆன்டிஃபா (ANTIFA) ஆத்திரமூட்டியாக இருக்கலாம்" என்று ட்வீட் செய்தார். “பெரும் பொய்,” என்ற நாஜி கொள்கையின் அடிப்படையில் செயல்படும் ட்ரம்ப், வயதான Martin Gugino “பொலிஸை ஊடுகதிர் நுட்ப (scan) சோதனை செய்ய” முயற்சித்ததாக அறிவித்தார்.

ட்ரம்ப் நிர்வாகம், ஆர்ப்பாட்டங்களை இரத்தத்தில் மூழ்கடிக்கப் போவதாக தொடர்ந்து அச்சுறுத்தி வரும் அதேவேளை, ஒருவர் குரல்வளை நெரிக்கப்பட்டு கொல்லப்பட்டதை எதிர்க்கும் பாரிய இயக்கத்திற்காக அனுதாபம் காட்டும் விதமாக ஜனநாயகக் கட்சியினர் வேறொரு தந்திரத்தை கையாண்டு வருகின்றனர்.

ஃபுளோய்ட்டின் இறுதிச் சடங்குகள் ஒருபுறம் ஃபுளோய்ட்டின் குடும்ப உறுப்பினர்கள் மற்றும் நண்பர்களின் இதயபூர்வமான பேச்சுகளுக்கும், மறுபுறம் ஜனநாயகக் கட்சி அரசியல்வாதிகளின் இழிந்த தோரணையிலான பேச்சுகளுக்கும் இடையிலான முரண்பாடுகளால் வகைப்படுத்தப்பட்டன.

ஜனநாயகக் கட்சியினரின் 2020 ஆம் ஆண்டு ஜனாதிபதி பதவிக்கான உத்தேச வேட்பாளரும், முன்னாள் துணை ஜனாதிபதியுமான ஜோ பைடென், வெற்று வார்த்தைகளால் நிரம்பிய ஒரு ஐந்து நிமிட உரையை வழங்கினார். அப்போது, “நாம் விலகிவிடக் கூடாது,” என்று பைடென் அறிவித்ததுடன், “நமது ஆத்மாவைத் தூண்டும் இனவெறியிலிருந்து விலகிச் செல்லலாம் என்று நினைத்து இந்த தருணத்தை விட்டு நம்மால் வெளியேறி விட முடியாது. அதாவது, அமெரிக்கர்களின் வாழ்க்கையை இன்னமும் பாதிக்கக்கூடிய முறையான துஷ்பிரயோகத்திலிருந்து நம்மால் வெளியேறி விட முடியாது” என்று அவர் கூறினார்.

வன்முறை குற்றக் கட்டுப்பாடு மற்றும் சட்ட அமலாக்கச் சட்டம் 1994 (Violent Crime Control and Law Enforcement Act of 1994) ஐ பைடென் எழுதினார், இது கட்டாய குறைந்தபட்ச தண்டனையை விரிவுபடுத்தியதுடன், அளவுக்கதிகமாக ஆபிரிக்க அமெரிக்கர்களை சிறையிலிட வழி செய்தது, மேலும் அவர்களுக்கான மரண தண்டனைக்கான வாய்ப்புகளை பெரிதும் விரிவுபடுத்தியது.

இறுதிச் சடங்கில் பேசிய மற்றவர்களில், டெக்சாஸ் பிரதிநிதிகளான அல் கிரீன் மற்றும் ஷீலா ஜாக்சன் லீ ஆகியோர் காங்கிரஸ் ஜனநாயகக் கட்சியினரின் சார்பில் பேசினர். குடியரசுக் கட்சியின் கட்டுப்பாட்டிலுள்ள செனட் சபை மூலமாக காவல்துறை சட்டத்தில் நீதி என்பது நிறைவேற்றப்பட மாட்டாது என்பதை நன்கு அறிந்தே, இச்சட்டத்தை சபை நிறைவேற்றும் என்று அவர் உறுதியளித்தார், இவ்வாறு அவர் அறிவித்தது ஒரு காவல்துறை அதிகாரி ஒருவரது கழுத்தில் கால் வைப்பது சட்டவிரோதமானது என்று விவரித்தது, மேலும் முன்னெச்சரிக்கை விடுக்கப்படாத கைதுகளை முடிவுக்குக் கொண்டுவர வேண்டும் என்றும், அனைத்து பொலிஸ்காரர்களின் உடலிலும் கேமராக்கள் இருப்பது அவசியம் என்றும் இது தெரிவித்தது.

ஹூஸ்டனின் ஜனநாயகக் கட்சி மேயரான சில்வெஸ்டர் டர்னரும், அவரது காவல்துறை கொள்கைகள் ஏற்கனவே இத்தகைய மிருகத்தனமான தந்திரோபாயங்களை கையாள்வதற்கு அதிகாரபூர்வமாக தடை விதித்திருந்தாலும் கூட, தனது நகரில் பொலிஸ் அதிகாரிகள் ஒருவரது கழுத்தை நெரிக்கும் முறையை பயன்படுத்துவதை தடைசெய்யும் நிர்வாக உத்தரவில் தான் கையெழுத்திடவிருப்பதாக வாய்ச்சவுடாலாக அறிவிப்பதற்காக மேடையேறி பேசினார்.

“பொலிஸ் சீர்திருத்தம்” குறித்து ஜனநாயகக் கட்சியினரின் வாக்குறுதி என்பது நடைமுறையில் எட்டு ஆண்டு கால ஒபாமா நிர்வாகத்தால் எடுத்துக்காட்டப்பட்டது, அப்போது பைடென் துணை ஜனாதிபதியாக இருந்தார், அதிலும் அந்த குறிப்பிட்ட காலகட்டத்தில் பொலிசார் தோராயமாக 8,000 பேரைக் கொன்றனர் என்பது குறிப்பிடத்தக்கது. உச்ச நீதிமன்றத்திற்கு முன் கொண்டுவரப்பட்ட ஒவ்வொரு பொலிஸ் வன்முறை வழக்கிலும், ஒபாமா பொலிசாருக்கு ஆதரவாக இருந்தார். ஒபாமா/பைடென் நிர்வாகம், காவல்துறையின் இராணுவமயமாக்கலையும், மற்றும் மேரிலாந்தின் ஃபேர்குசன், மிசூரி மற்றும் பால்டிமோர் ஆகிய பகுதிகளில் நடந்த பொலிஸ் வன்முறைக்கு எதிரான ஆர்ப்பாட்டங்களை நசுக்கும் நடவடிக்கைகளையும் மேற்பார்வையிட்டது.

அமெரிக்க காவல்துறைகளுக்கு நிதி ஒதுக்கீடு வழங்கப்படாமல் இருப்பதற்கான அல்லது அகற்றுவதற்கான மக்கள் கோரிக்கைகளுக்கு பைடென் அவரது எதிர்ப்பை தெரிவிப்பது உட்பட, ஜனநாயகக் கட்சித் தலைவர்கள், அமெரிக்க காவல்துறை நடவடிக்கைகள் தொடர்பாக கொண்டுவரப்படும் குறிப்பிடத்தக்க மாற்றங்கள் எதையும் அவர்கள் எதிர்க்கவிருப்பதாக ஏற்கனவே தெளிவுபடுத்தியுள்ளனர். பைடெனின் ஜனாதிபதி நியமனத்திற்கு ஒப்புதலளித்தவரும் மற்றும் முன்னாள் ஜனாதிபதி வேட்பாளருமான பேர்னி சாண்டர்ஸ், செவ்வாயன்று New Yorker இதழில் பிரசுரமான ஒரு நேர்காணலில், “நன்கு படித்த, நன்கு பயிற்சி பெற்ற, நல்ல ஊதியம் பெறும் நிபுணர்களைக் கொண்ட காவல் துறைகளை” காண்பேன் என்று நான் நம்புகிறேன் என்று தெரிவித்தார்.

ஃபுளோய்ட்டின் இறுதிச் சடங்கில் முக்கிய பேச்சாளராக இருந்த ஜனநாயகக் கட்சி அரசியல்வாதியும் மற்றும் FBI இன் முன்னாள் தகவல் வழங்குநருமான அல் ஷார்ப்டன், மிசூரி, ஃபேர்குசனில் மிக்கேல் பிரவுண் கொல்லப்பட்டதன் பின்னர், பல ஆபிரிக்க-அமெரிக்க இளைஞர்கள் “அதிகார பதவிகளைப் பெறுவதற்கு” பதிலாக “கெட்டோ பகுதியின் பரிதாபகர கட்சிகளைச் சுற்றி உட்கார்ந்திருக்கின்றனர்” என்று இழிந்த முறையில் தெரிவித்தார்.

ஃபுளோய்ட்டின் கொலை பற்றிய கருத்தை முற்றிலும் இனவாத அடிப்படையில் முன்வைப்பதற்கு ஷார்ப்டன் முனைந்தார். “ஜோர்ஜூக்கு நடந்தது போல, நான்கு கறுப்பினத்தவர்களால் ஒரு வெள்ளையினத்தவருக்கு இது நடந்திருக்குமானால், நான்கு கறுப்பின பொலிசாரால் ஒரு வெள்ளைக்காரருக்கு இது நடந்திருக்குமானால், அவர்கள் புதிய பாடங்களைக் கற்பிக்க வேண்டியிருக்காது,” என்று ஷார்ப்டன் கூறினார். மேலும், “பணத்தை சேகரிக்க பெரு நிறுவனங்களை அவர்கள் நாட வேண்டியிருக்காது. அவர்கள் அவர்களை சிறைக்கு அனுப்புவார்கள்” என்றும் கூறினார்.

பொலிசாரிடையே இனவெறி வேண்டுமென்றே ஊக்குவிக்கப்பட்டாலும், ஃபுளோய்ட் கொலை “வெள்ளையரால்” செய்யப்படவில்லை, மாறாக வர்க்க ஆட்சியின் ஒரு கருவியாக செயல்படும் பொலிசாரால் நடந்துள்ளது. மேலும், வெள்ளையர்களைக் கொல்லும் பொலிசார் விரைவாக நீதிக்கு முன்னர் கொண்டு வரப்படுகிறார்கள் என்று கூறுவதும் பொய்.

மார்ச் 2014 இல் நியூ மெக்சிக்கோவின், அல்புகெர்க்கியில் வீடற்ற மனிதரான ஜேம்ஸ் பாய்ட்டை சுட்டுக் கொன்ற கெய்த் சாண்டி மற்றும் டொமினிக் பேர்ஸ் ஆகிய பொலிஸ் அதிகாரிகள் மீதான அனைத்து குற்றச்சாட்டுக்களும் கைவிடப்பட்டன. அதேபோல, கைகளினாலும் முழங்கால்களினாலும் ஊர்ந்து சென்றார் என்பதற்காக டேனியல் ஷேவர் என்பவரை பிலிப் பிரெயில்ஸ்போர்ட் சுட்டுக் கொன்றது குற்றமாக கருதப்படவில்லை. உண்மையில், அமெரிக்காவில் பொலிசாரால் கொல்லப்பட்டவர்களில் பலர் வெள்ளையர்களே என்பதுடன், பெரும்பாலான வழக்குகள் தொடர்பாக ஒருபோதும் பொலிசார் மீது வழக்குத் தொடரப்படுவதில்லை.

காங்கிரஸின் ஜனநாயகக் கட்சியினரை ஷார்ப்டன் பாராட்டினார், என்றாலும், பொலிஸ் வன்முறைக்கு தீர்வு காணாத மற்றும் ஒருபோதும் நிறைவேற்றப்படமாட்டாது என்றறியப்பட்ட பொலிஸ் சீர்திருத்தங்கள் பற்றிய தொகுப்பை வெளியிடுவதற்கு முன்னர், எட்டு நிமிடங்கள் 46 விநாடிகளுக்கு ஃபுளோய்ட்டின் குரல்வளை மீது முழங்காலை வைத்து நெரித்தது குறித்து திங்களன்று இவர் தான் முழங்கினார்.

ஷார்ப்டன், பைடென் மற்றும் கிரீன் ஆகியோர், ஒவ்வொரு இனத்தைச் சேர்ந்த நூறாயிரக்கணக்கான மக்களை வீதிகளில் இறங்கி போராட வைத்ததான பரந்த சமூக பொருளாதார நிலைமைகளை முற்றிலுமாக புறக்கணித்தனர்: கோவிட்-19 நோய்தொற்றால் ஏற்பட்ட சமூக மற்றும் பொருளாதார நெருக்கடி, அமெரிக்காவில் 114,000 க்கும் மேற்பட்ட மக்களின் உயிரை பலி கொண்டுவிட்டது என்பதுடன், பல்லாயிரக்கணக்கான மக்களை வேலையின்மை மற்றும் வறுமை நிலைக்குள் தள்ளியது.

ஜனநாயகக் கட்சியினர் மற்றும் குடியரசுக் கட்சியினரின் ஏகமனதான ஒப்புதலைப் பெற்று ஆளும் உயரடுக்கு தமக்காக 6 ட்ரில்லியன் பிணெயெடுப்பை வழங்கியதன் பின்னர், அமெரிக்க நிறுவனங்கள் தொழிலாளர்களை மீண்டும் வேலைக்குத் திரும்பச் செய்வதற்கு வலியுறுத்துவதற்கான உந்துதலை மேற்கொண்டுள்ளதுடன், நோய்தொற்று பரவுவதற்கான அனுகூலமான சூழலாக மாறியுள்ள உற்பத்தி ஆலைகள் மற்றும் சேவைத் துறை பணியிடங்களில் அவர்களது உயிரை பணயம் வைக்கவும் துணிந்துள்ளன.

உழைக்கும் மக்களுக்கு எதிரான தனது உள்ளார்ந்த தினசரி வன்முறைகளுடன் கூடிய இந்த சமூக ஒழுங்குதான், சமூக சமத்துவமின்மைக்கு உத்தரவாதம் அளிப்பவர்களும் மற்றும் அதன் பாதுகாவலர்களுமான பொலிசாரின் கொலை மற்றும் மிருகத்தனம் எனும் நோய்தொற்றை அதிகரிக்கச் செய்கிறது.