ரஷ்யா, சீனாவை அச்சுறுத்தும் போர்திற முக்கியத்துவம் வாய்ந்த குண்டுவீச்சு விமானங்களை வாஷிங்டன் அதிகரிக்கின்றது

By Alex Lantier
13 June 2020

மொழிபெயர்ப்பின் மூலக் கட்டுரையை இங்கே காணலாம்

COVID-19 தொற்றுநோயால் அமெரிக்கா பேரழிவிற்குள்ளான நிலையில், வாஷிங்டன் ட்ரோன்கள் மற்றும் அணுசக்தி திறன் கொண்ட போர்திற முக்கியத்துவம் வாய்ந்த குண்டுவீச்சு விமானங்களையும் அதிகரித்து ரஷ்யாவையும் சீனாவையும் அச்சுறுத்துகிறது.

அமெரிக்க விமானப்படை பசிபிக் தீவான குவாமில் இருந்து B-1 போர்திற முக்கியத்துவம் வாய்ந்த குண்டுவீச்சு விமானங்கள் மற்றும் ஜப்பானின் யோகோட்டா விமானத்தளத்திலிருந்து தென்சீனக் கடல் வரை Global Hawk உளவு ட்ரோன்களை பறக்கவிட்டதாக புதன்கிழமை தகவல்கள் வெளிவந்தன. அமெரிக்காவின் Dyess விமானப்படை தளத்திலிருந்து குவாமில் உள்ள ஆண்டர்சன் விமான தளத்திற்கு நான்கு B-1 குண்டுவீச்சு விமானங்கள் மற்றும் 200 விமானப்படையினர் அனுப்பப்பட்டுள்ளனர். உளவு ட்ரோன்களின் பயன்படுத்தல் சீனாவின் கடற்கரையோரம் முழுவதும் சீனக் கப்பல்களை தொடர்ச்சியாக கண்காணிக்க அனுமதிக்கிறது.

அதே நாளில், ரஷ்ய அதிகாரிகள் ஐரோப்பாவின் ரஷ்யாவின் எல்லைகளுக்கு அருகே ஆத்திரமூட்டும் அமெரிக்க குண்டுவீச்சு விமானங்களை பற்றி புகார் செய்ததை அடுத்து அலாஸ்கன் கடற்கரையில் ரஷ்ய TU-95 போர்திற முக்கியத்துவம் வாய்ந்த குண்டுவீச்சு விமானங்கள் இரண்டை அமெரிக்க F-22 போர் விமானங்கள் வழிமறித்தன. அதனுடன் மே 29 இல் கருங்கடல் மற்றும் பால்டிக் கடல்களில் B-1 குண்டுவீச்சு விமானங்களும், ஜூன் 3 ஆர்க்டிக் பெருங்கடலில் B-52 குண்டுவீச்சு விமானமும் பறந்ததும் இதில் அடங்கும்.

A 9th Expeditionary Bomb Squadron B-1B Lancer flies over the East China Sea May 6, 2020. (U.S. Air Force/ River Bruce)

இந்த நிகழ்வுகள் ஒரு எச்சரிக்கையாகும்: ஏகாதிபத்தியம் ஒருபோதும் தூங்குவதில்லை. ஜோர்ஜ் ஃபுளோய்ட் மே 25 அன்று பொலிஸால் கொலை செய்யப்பட்டதற்கு எதிரான வெகுஜன ஆர்ப்பாட்டங்களை நசுக்க அமெரிக்க மக்களுக்கு எதிராக அமெரிக்க இராணுவம் அனுப்ப வேண்டும் என்ற ட்ரம்ப்பின் கோரிக்கைகளில் உலகத்தின் கவனம் செலுத்தப்பட்டிருந்தாலும், வாஷிங்டன் மற்றும் அதன் ஐரோப்பிய நட்பு நாடுகள் போர் திட்டங்களை முடுக்கிவிட்டன. அவர்களின் முக்கிய இலக்குகள், பாரிய அணு ஆயுதங்களைக் கொண்ட பெரிய சக்திகளாக இருந்தாலும், அவை ஆக்ரோஷமாக முன்னேறி வருகின்றன.

பொலிஸ் மிருகத்தனம் மற்றும் COVID-19 தொற்றுநோய்க்கான நிதிய பிரபுத்துவத்தின் குற்றவியல் அலட்சியம் ஆகியவற்றின் மீது அதிகரித்து வரும் சமூக கோபத்தின் மத்தியில், ஆளும் உயரடுக்கு வெளிநாடுகளில் போர்களைத் தொடங்குவதன் மூலம் வர்க்க மோதலை அடக்க முயற்சிக்கும் ஆபத்து அதிகரித்து வருகிறது.

கடந்த மாதம், வாஷிங்டன் தென் சீனக் கடலுக்கு பலB-1 விமானங்களை அனுப்புவதாக அறிவித்தது. "இந்தோ-பசிபிக் பகுதியில் நான்கு B-1B விமானங்களை பயன்படுத்த விரும்புவதாக தளபதி கூறும்போது, ஒரு தொற்றுநோய்க்கு மத்தியிலும் ‘அவர்கள் அங்கே இருப்பார்கள் ’என்று நாங்கள் கூறுகிறோம்,” என்று அமெரிக்க விமானப்படை கேர்னல் ஜோஸ் சுமங்கில் கூறினார். “அதையே நாங்கள் மிகக் குறுகிய அறிவிப்பில் செய்தோம். கோவிட்-19 தொற்றின் அபாயத்தைக் குறைக்க Dyess குழுவானது ஒட்டுமொத்தமாக முயற்சித்ததன் காரணமாக எங்கள் பணித்தகமைகளை தக்க வைத்துக் கொள்ள முடிந்தது” என்றார்.

B-1B என்பது ஒரு சூப்பர்சோனிக் போர்திற முக்கியத்துவம் வாய்ந்த கனரக குண்டுவீச்சு விமானம் ஆகும். இது வழிகாட்டப்பட்ட ஏவுகணைகள் மற்றும் குண்டுகள், அத்துடன் B61 மற்றும் B83 வெப்ப அணுக்குண்டுகள் உள்ளிட்ட பல்வேறு வகையான ஆயுதங்களை தாங்கிச் செல்லக்கூடியது. ஆகஸ்ட் 6, 1945 இல் ஹிரோஷிமா மீது வாஷிங்டன் வீசிய வெடிகுண்டை விட B83 குண்டு 80 மடங்கு அதிக சக்தி கொண்ட1.2 மெகா தொன் TNT இனை கொண்டுள்ளது.

மே 29 அன்று, ஜோர்ஜ் ஃபுளோய்டின் கொலைக்கு எதிரான எதிர்ப்புக்கள் அமெரிக்கா முழுவதும் வெடித்துக்கொண்டிருந்த வேளையில், ரஷ்ய பாதுகாப்பு அமைச்சகம் பின்வருமாறு அறிவித்தது: “மேற்கு மற்றும் தெற்கு இராணுவ மாவட்டங்களின் வான் பாதுகாப்புப் படைகள் கருங்கடல் மற்றும் பால்டிக் கடல்களின் நடுநிலை நீர்ப்பரப்பின் மீது அமெரிக்க விமானப்படை B-1B போர்திற முக்கியத்துவம் வாய்ந்த குண்டுவீச்சு விமானங்களைக் கண்டறிந்தன. ரஷ்ய விமானங்கள் அவர்களை அங்கிருந்து வெளியே அழைத்துச் செல்ல பயன்படுத்தப்பட்டன. ரஷ்ய போர் விமானிகள் பாதுகாப்பான தூரங்களில் இருந்து வான்வழி இலக்குகளை அணுகி அவற்றை B-1B குண்டுவீச்சு விமானங்கள் என அடையாளம் கண்ட பின்னர், அமெரிக்க விமானங்கள் தமது போக்கை மாற்றி, ரஷ்ய எல்லைகளை விட்டு நகர்ந்தனர்.”

இந்த விமானங்கள் தெற்கு டகோட்டாவில் உள்ள எல்ஸ்வோர்த் விமானப்படை தளத்திலிருந்து ஐரோப்பாவுக்கு இடைநிறுத்தாது பறந்து சென்றன. போலந்து, ருமேனிய மற்றும் உக்ரேனிய போர் விமானங்களால் பாதுகாக்கப்பட்டு, துருக்கிய டேங்கர் மூலம் எரிபொருள் நிரப்பப்பட்ட B-1கள் உக்ரேனிய வான்வெளியில் நுழைந்து கருங்கடலுக்கு பறந்தன. கிரிமியாவில் உள்ள செவஸ்டோபோல் உள்ளிட்ட முக்கிய ரஷ்ய கடற்படை தளங்கள் கருங்கடலில் உள்ளன. முன்னர் உக்ரேனில் ரஷ்ய மொழி பேசுவோரை பெரும்பான்மையாக கொண்ட கிரிமியா பகுதியை, உக்கிரேனில் 2014 நேட்டோ ஆதரவு சதிக்குப் பின்னர் ரஷ்யா தன்னுடன் இணைத்துக்கொண்டது.

விமானப்படை லெப்டினன்ட் கர்னல் திமோதி ஆல்பிரெக்ட், இவ்வாறு பறந்ததானது ரஷ்ய கருங்கடல் கடற்படையை நீண்டதூர கப்பல் எதிர்ப்பு ஏவுகணைகள் (LRASM) மூலம் அழிக்கும் திட்டங்களுக்கான ஒரு பயிற்சி என்று சுட்டிக்காட்டினார். "நீண்ட தூரத்திலிருந்து இலக்குகளுக்கு இடையில் வேறுபடுத்தி காண்பதற்கான மேம்பட்ட திறனின் காரணமாக, திறந்த-கடல் மற்றும் கடலோர சூழல்களில் அமெரிக்க கடற்படையின் அணுகலை உறுதி செய்வதில் LRASM ஒரு முக்கிய பங்கைக் கொண்டுள்ளது" என்று அவர் கூறினார்.

ஜூன் 3 ம் தேதி, ட்ரம்ப் அமெரிக்க தலைநகருக்கு துருப்புக்களை அனுப்பிய இரண்டு நாட்களுக்குப் பின்னர், ரஷ்ய எல்லைக்கு அருகிலுள்ள ஸ்காண்டிநேவியாவில் நோர்வே போர் விமானங்களால் தனி B-52 விமானம் பாதுகாப்பாக அழைத்துச் செல்லப்பட்டது. "இந்த பறத்தலானது ஆர்க்டிக் பெருங்கடல் மற்றும் லாப்டேவ் கடல் ஆகியவற்றின் மீதான பணிகளுடன் தொடர்புபட்டவை மற்றும் விமானம் நோர்வே விமானப்படையான Luftforsvaret இனது F-16 மற்றும் F-35விமானங்களுடன் பயிற்சியளித்தது" என்று நேட்டோ நட்புநாடுகளின் விமான கட்டுப்பாடு நிலையம் தனது பேஸ்புக்கில் அறிவித்தது.

ரஷ்யாவிற்கும் சீனாவிற்கும் எதிரான அச்சுறுத்தல்களில் வாஷிங்டனின் ஐரோப்பிய நேட்டோ நட்பு நாடுகளின் உடந்தையை இது அடிக்கோடிட்டுக் காட்டுகிறது. நேட்டோ பொதுச்செயலாளரும் முன்னாள் நோர்வே பிரதமருமான ஜென்ஸ் ஸ்டோல்டென்பெர்க் பிபிசியிடம் இந்த பயன்படுத்தல்கள் “நேட்டோவின் உலகளாவிய பயன்படுத்தலைப் பற்றியது. ஏனெனில் சீனா நமக்கு நெருக்கமாக வருகிறது. ஆர்க்டிக்கில், அவர்கள் ஐரோப்பாவில் முக்கியமான உள்கட்டமைப்பில் அதிக முதலீடு செய்வதை நாங்கள் காண்கிறோம். நிச்சயமாக இணையத்திலும் சீனா செயல்படுவதை நாங்கள் காண்கிறோம்” என்றார்

நேற்று, தைவான் மீது ஒரு அமெரிக்க C-40A இராணுவ போக்குவரத்து விமானம் பறந்ததை "ஆத்திரமூட்டல்" என்று பெய்ஜிங் கண்டனம் செய்தது. சீனாவின் ஒற்றுமைக்கான வாஷிங்டனின் உறுதிப்பாட்டை இது கேள்விக்குள்ளாக்கியதாக விமர்சித்தது. பெய்ஜிங்கின் தைவான் விவகார அலுவலகத்தின் செய்தித் தொடர்பாளர் ஒருவர் கூறுகையில், இந்த விமானம் “எங்கள் இறையாண்மை, பாதுகாப்பு மற்றும் மேம்பாட்டு நலன்களுக்கு தீங்கு விளைவிக்கிறது மற்றும் சர்வதேச சட்டம், சர்வதேச உறவுகளின் அடிப்படைக் கொள்கைகளை மீறுகிறது” என்றார்.

ஏற்கனவே ஜூன் 5 ம் தேதி, அமெரிக்க திசைதிரும்பக்கூடிய ஏவுகணை அழிப்பு கப்பலான யுஎஸ்எஸ் ரஸ்ஸல் தைவான் நீரிணையை கடந்தது. முன்னணி சீன வெளியுறவு அமைச்சக செய்தித் தொடர்பாளர் ஜெங் ஷுவாங் "சீனா-அமெரிக்க உறவுகள் மற்றும் தைவான் நீரிணை முழுவதும் அமைதி மற்றும் ஸ்திரத்தன்மைக்கு சேதம் விளைவிப்பதைத் தவிர்க்குமாறு" வாஷிங்டனை கேட்டுக் கொண்டார்.

உள்நாட்டில் தொழிலாளர்களுக்கு எதிரான இராணுவ-பொலிஸ் அடக்குமுறையை வாஷிங்டன் அதிகரித்து வருவது, வெளிநாடுகளில் அதன் ஆக்கிரமிப்புக்கான அனைத்து கட்டுப்பாடுகளையும் அகற்றுவதற்கான நீண்டகால கொள்கையுடன் கைகோர்த்துச் செல்கிறது.

ஒபாமா நிர்வாகம் 2014-2024 ஆம் ஆண்டில் 1 ட்ரில்லியன் டாலர்களை ஒதுக்கிய அதன் அணு ஆயுதக் களஞ்சியத்தை இல்லாதொழிப்பதற்காக கடைசியாக மீதமுள்ள ஒப்பந்தத்தில் வரையறுக்கப்பட்ட வரம்பைக் குறைப்பதை இது நோக்கமாகக் கொண்டுள்ளது. எதிரி ஏவுகணைகளை குறிவைத்து “Star Wars” அமைப்புகளை உருவாக்க 2001ல் வாஷிங்டன் பாலிஸ்டிக் எதிர்ப்பு ஏவுகணை (ABM) ஒப்பந்தத்தை நிராகரித்த பின்னர், ட்ரம்ப் 2018ஆம் ஆண்டின் 1987 இடைத்தூர-அணுசக்தி (INF) ஒப்பந்தத்தை இரத்து செய்தார். இப்போது வாஷிங்டன் முதலில் 1991 இல் கையெழுத்தான புதிய போர்திற முக்கியத்துவம் வாய்ந்தஆயுதக் குறைப்பு ஒப்பந்தத்தை (New START) நிராகரிப்பதை நோக்கமாகக் கொண்டுள்ளது.

இந்த ஒப்பந்தத்தை இன்னும் ஐந்து ஆண்டுகளுக்கு நீட்டிக்க ரஷ்யா முன்வந்த நிலையில், சீனா பேச்சுவார்த்தையில் சேரவில்லை என்பதாலும் மற்றும் அதன் அணு ஆயுதக் களஞ்சியத்திற்கான வரம்புகளை ஏற்றுக் கொள்ளும்வரை பேச்சுவார்த்தை நடத்த ட்ரம்ப் மறுத்துவிட்டார். எவ்வாறாயினும், பெய்ஜிங் உம் மறுத்துவிட்டது.

சீன வெளியுறவு அமைச்சக செய்தித் தொடர்பாளர் ஹுவா சுனிங் கூறுகையில், “அனைவருக்கும் தெரிந்தபடி, சீனாவின் அணுசக்தி அமெரிக்கா மற்றும் ரஷ்யாவின் அதே அளவினதாக இல்லை… முத்தரப்பு பேச்சுவார்த்தைகளில் பங்கேற்காதது என்பது அணு ஆயுதக் குறைப்புக்கான முயற்சிகளில் சீனா கலந்துகொள்ளாது என்று அர்த்தமல்ல. அமெரிக்காதான் இந்த முயற்சிகளைத் தடுத்து, ஒரு விலகியவராக இருந்து தவறான பாதையில் மேலும் நடந்து வருகிறது.” ஆயுத கட்டுப்பாட்டு உடன்படிக்கைகளை வாஷிங்டன் அகற்றும்போது அதற்கான "பொறுப்பை மற்றவர்கள் மீது சுமத்த" முயற்சிப்பதாக ஹுவா கூறினார்.

உண்மையில், ரஷ்யா மற்றும் சீனாவுடனான பல்வேறு அமெரிக்க மோதல்கள் வாஷிங்டனால் அணுவாயுதங்கள் உள்ளடங்கலாக தாக்குதலுக்கு உள்ளாவதைத் தடுக்க மாஸ்கோ மற்றும் பெய்ஜிங் ஆட்சிகள் எடுக்கும் நடவடிக்கைகளுடன் தொடர்புபட்டவையாகும். ஆகவே, தென் சீனக் கடல் மீதான மோதலின் அணுவாயுத பரிமாணத்தை பிரெஞ்சு வெளிநாட்டு உறவுகள் நிறுவனம் (IFRI) சுட்டிக்காட்டுகிறது. அங்கு சீனாவில் ஹைனன் தீவில் ஒரு முக்கிய அணு ஏவுகணை நீர்மூழ்கிக் கப்பல் தளம் உள்ளது. இது சீனாவின் கொள்கையை சோவியத் யூனியனின் உள்நாட்டு கடலான ஓகோட்ஸ்கில் நீர்மூழ்கிகளை மறைக்கும் பனிப்போர் கொள்கையுடன் ஒப்பிடுகிறது. வாஷிங்டன் சோவியத் ஒன்றியத்தை அணு ஆயுதங்களால் தாக்கினால், அமெரிக்கா மீது எதிர் தாக்குதலை நடத்த அங்கிருந்து அச்சுறுத்தகூடியதாக இருந்தது.

IFRI பின்வருமாறு எழுதுகிறது, "பாதுகாக்கப்பட்ட நீர்ப்பரப்பிற்கு வெளியே தடுப்பு ரோந்துகளை நடத்துவதற்கு நட்புநாடுகளின் நீர்மூழ்கி எதிர்ப்பு போர் தளவாடங்கள் மிகவும் தாக்கப்படக்கூடிய நிலையில் உள்ளன. சோவியத் அணு ஏவுகணை நீர்மூழ்கிக் கப்பல்கள் பெரிதும் பாதுகாக்கப்பட்ட ஓகோட்ஸ்க் கடலில் மட்டுப்படுத்தப்பட்டிருந்ததுடன், ஒரு அணுத்தடுப்பு தாக்குதலை நடாத்த அவை நீண்ட கால பாலிஸ்டிக் ஏவுகணைகளை நம்பியிருந்தன. இதேபோல், தென்சீனக் கடலின் பல்வேறு சர்ச்சைக்குரிய தீவுகளில் இராணுவ புறக்காவல் நிலையங்கள் மற்றும் விமான நிலையங்களை நிர்மாணிப்பது சீனர்களுக்கு பாதுகாப்பு வளையத்தை உருவாக்குவதற்கான ஒரு பெரிய முயற்சியின் ஒரு பகுதியாக இருக்கலாம்.”

இந்த பெருகிவரும் மோதல்கள் மற்றும் அணுசக்தி யுத்த அச்சுறுத்தல்கள் அமெரிக்காவிலும் சர்வதேச அளவிலும் உள்ள தொழிலாளர்களுக்கு ஒரு எச்சரிக்கையாக அமைகின்றன. சமூக சமத்துவமின்மை மற்றும் பொலிஸ் அடக்குமுறைக்கு எதிராக தொழிலாள வர்க்கத்தில் அதிக எதிர்ப்பு பெருகும்போது, இது மனிதகுலத்திற்கு மிகவும் பேரழிவு விளைவுகளை ஏற்படுத்தினாலும் கூட ஏகாதிபத்திய ஆளும் வர்க்கங்கள் போரை நோக்கித் திரும்புகின்றன.