கொடுங்கோன்மை ஆட்சியாளரான ட்ரம்ப் சதித்திட்டத்தை முடுக்கிவிடுவார்

15 June 2020

மொழிபெயர்ப்பின் மூலக் கட்டுரையை இங்கே காணலாம்

ட்ரம்ப், இராணுவ சட்டத்தை அறிவிப்பதற்கான ஒரு சாக்குப்போக்கை உருவாக்கவும் மற்றும் அமெரிக்க வீதிகளில் இராணுவத்தை நிலைநிறுத்தவும் தனது முயற்சிகளை முடுக்கிவிட்டுக் கொண்டிருக்கிறார். கடந்த வார தொடக்கத்தில் இராணுவ இரத்தக்களரியை தூண்டுவதற்கு ட்ரம்ப் எவ்வளவு நெருக்கமாக வந்தார் என்பது பற்றி பல தகவல்கள் வெளிச்சத்திற்கு வந்து கொண்டிருந்தாலும் கூட, தொடர்ச்சியான பல ஆத்திரமூட்டும் நடவடிக்கைகளை ஜனாதிபதி மேற்கொண்டுள்ளார்.

வாஷிங்டன் DC இல் இருந்து கடைசி தேசிய பாதுகாப்புப் படையினர் வரை திரும்பப் பெறப்பட்டு சில மணித்தியாலங்களுக்குப் பின்னர், ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப், இந்த முறை பெரிய அமெரிக்க நகரமான சியாட்டிலுக்கு எதிராக புதிய இராணுவ வன்முறை அச்சுறுத்தலை விடுத்தார். புதன்கிழமை இரவில் ட்ரம்ப் தனது ட்விட்டர் பதிவில், வாஷிங்டன் ஆளுநரான ஜே இன்ஸ்லீ மற்றும் சியாட்டில் மேயரான ஜென்னி துர்கன் ஆகிய ஜனநாயகக் கட்சியினர் இருவரையும், பொலிஸ் படையினர் தற்காலிகமாக வாபஸ் பெறப்பட்டுள்ள சிறிய சுற்றுப்புற பகுதிகளில் எதிர்ப்பாளர்களை அடக்குவதற்கு நடவடிக்கை எடுக்கக் கோரினார். மேலும், “நீங்கள் அதைச் செய்யாவிட்டால், நான் செய்வேன்,” “இது விளையாட்டல்ல” என்றும் அவர் பதிவிட்டிருந்தார்.

ட்ரம்ப் நகரில் நடந்த சிறியளவிலான தொடர்ச்சியான பல ஆர்ப்பாட்டங்களை கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்திருந்தார், இந்த ஆர்ப்பாட்டங்களின் போது பொலிஸ் வன்முறைக்கு எதிரான ஆர்ப்பாட்டக்காரர்கள், 2011 ஆம் ஆண்டில் நடந்த வோல் ஸ்ட்ரீட் ஆக்கிரமிப்பு ஆர்ப்பாட்டங்களை நினைவூட்டும் வகையில் தெளிப்பு வர்ணம் தீட்டப்பட்ட அடையாளங்கள், முகாம்கள் அமைத்தல் மற்றும் பிற சாதனங்களுடன் அனைத்து ஆறு நகரத் தொகுதிகளையும் சூழ்ந்ததான “கேபிட்டோல் ஹில் தன்னாட்சி மண்டலம்” என்று அறிவித்துள்ளனர். இந்த யதார்த்தம், நிகழ்வுகளை மிகவும் கொழுந்துவிட்டு எரியச் செய்யும் வகையில் ட்ரம்ப் வார்த்தைகளால் சித்தரிப்பதை நிறுத்தவில்லை. எடுத்துக்காட்டாக, “நிச்சயமாக, தீவிரவாத இடது ஜனநாயகவாதிகளால் நிர்வகிக்கப்படும் சியாட்டிலை உள்நாட்டு பயங்கரவாதிகள் கைப்பற்றியுள்ளனர்,” என்பதால் அங்கு “சட்டம் மற்றும் ஒழுங்கை” கடைபிடியுங்கள் என்று மேலும் ட்வீட் செய்திருந்தார்.

இந்த திங்கள்கிழமை, 2020, ஜூன் 1 அன்று, வாஷிங்டனில் உள்ள லஃபாயெட் பூங்கா மற்றும் வெள்ளை மாளிகையை சுற்றியுள்ள பகுதியில், ஜோர்ஜ் ஃபுளோய்ட்டின் கொலையை எதிர்த்து ஆர்ப்பாட்டம் செய்ய ஆர்ப்பாட்டக்காரர்கள் ஒன்றுதிரண்ட போது அவர்களை பொலிஸ்காரர்கள் கலைக்கும் கோப்புக் காட்சி (AP Photo / Alex Brandon, File)

கோவிட்-19 நோய்தொற்று தீவிரமாக பரவ ஆரம்பித்ததன் பின்னர், தனது முதல் பொது பிரச்சார பேரணியை ஒக்லஹோமாவின் துல்சாவில் ஜூன் 19 அன்று நடத்தவிருப்பதாக ட்ரம்ப் வியாழக்கிழமை அறிவித்தார். ஜோர்ஜ் ஃபுளோய்ட்டின் கொலைக்கு எதிராக நடந்து வரும் பாரிய ஆர்ப்பாட்டங்களுக்கு மத்தியில் இது அசாதாரணமான ஆத்திரமூட்டலாகும். ஏனென்றால் 1865 இல் ஜூன் 19 அன்று தான் டெக்சாஸில் ஆபிரிக்க அமெரிக்கர்களுக்கான விடுதலைப் பிரகடனம் இறுதியாக நடைமுறைக்கு கொண்டுவரப்பட்டது என்பதால், இந்த நாள் பாரம்பரியமாக ஆபிரிக்க அமெரிக்கர்களால் “Juneteenth” என்று கொண்டாடப்பட்டு வருகிறது, மேலும் துல்சா வரலாற்றில் ஆபிரிக்க அமெரிக்கர்களுக்கு எதிராக நிகழ்த்தப்பட்ட 1921 கிரீன்வுட் படுகொலையில் 300 க்கும் மேற்பட்டவர்கள் கொல்லப்பட்டனர் என்ற நிலையில், அந்த சமயத்தில் மிக மோசமான இனவெறி வன்முறைக்கான முக்கிய பகுதியாக துல்சா இருந்ததும் குறிப்பிடத்தக்கது.

பிரச்சார பேரணிக்காக தேர்வு செய்யப்பட்டுள்ள திகதியும் இடமும், ட்ரம்ப் சார்பு மற்றும் ட்ரம்ப் எதிர்ப்பு பிரிவினருக்கிடையில் ஒரு மோதலை உருவாக்குவதற்கான ஒரு திட்டமிட்ட முயற்சியாக பார்க்கப்பட வேண்டும், ஏனென்றால் இது இராணுவத்தின் பயன்பாட்டை “நியாயப்படுத்தும்.”

புதன்கிழமை இரவில், ட்ரெவர் நோவா தொகுத்து வழங்கிய நகைச்சுவையை மையப்படுத்தும் (Comedy Central) நிகழ்ச்சியில், ஜனாதிபதி தேர்தலில் ட்ரம்பை எதிர்த்து நிற்கும் ஜனநாயகக் கட்சி வேட்பாளரான ஜோ பைடென் தெரிவித்த கருத்துக்கள் அமெரிக்காவில் இதற்கு முன்நிகழ்ந்திராத அரசியல் நெருக்கடியை அடிக்கோடிட்டுக் காட்டியது. “இந்த ஜனாதிபதி இந்தத் தேர்தலை திருட முயற்சிக்கப் போகிறார்” என்று பைடென் அறிவித்தார். நவம்பர் 3 அன்று ட்ரம்ப் தோற்கடிக்கப்பட்டால் கூட பதவியிலிருந்து விலக அவர் மறுப்பார் என்று அவர் எதிர்பார்த்தாரா என்று நோவா கேட்டதற்கு, அதுதான் “தனக்கு மிகப்பெரிய பயமே” என்று முன்னாள் துணை ஜனாதிபதி பதிலளித்தார்.

ஜோர்ஜ் ஃபுளோய்ட்டின் பொலிஸ் கொலையை எதிர்த்து ஆர்ப்பாட்டம் செய்பவர்களுக்கு எதிராக இராணுவத்தை அழைக்கவிருப்பதாக ட்ரம்ப் அச்சுறுத்தல் விடுத்ததன் பின்னர், கடந்த வாரம் ட்ரம்ப் மீது இராணுவத் தலைவர்கள் தொடுத்த தொடர்ச்சியான பொதுத் தாக்குதல்கள் குறித்து பைடென் பாராட்டினார். “உங்களில் நான்கு தலைமை இராணுவ அதிகாரிகள் வெளிவந்து ட்ரம்பின் தோலை உரித்துக் கொண்டிருக்கிறீர்கள். அதைக் கண்டு நான் மிகவும் பெருமிதம் அடைந்தேன்,” என்று அவர் கூறியதுடன், ட்ரம்ப் தேர்தல் முடிவுகளை மதிப்பதற்கு தயங்குவாரானால் அவரை நீக்குவதற்கு இராணுவத்தை அவர் நம்புவதாகவும் சேர்த்துக் கூறினார். மேலும், “நான் உங்களுக்கு உறுதியளிக்கிறேன், அவர்கள் அவரை வெள்ளை மாளிகையில் இருந்து பெரியளவில் பிரியாவிடையளித்து உடன் அழைத்துச் செல்வார்கள் என்று முற்றிலும் நான் நம்புகிறேன்” என்று பைடென் நிறைவு செய்தார்.

இந்த அறிக்கை குறிப்பிடத்தக்கதாகும், ஏனென்றால் தேர்தல் முடிவுகளை ஏற்றுக்கொள்ளும் எண்ணம் ட்ரம்பிற்கு இல்லை என்பதை முதலில் பைடென் ஒப்புக்கொள்கிறார், மேலும் இரண்டாவதாக, ட்ரம்பை பதிவியில் இருந்து இறுதியாக நீக்குவதில் இராணுவத்தின் தீர்க்கமான பங்கு இருக்கும் என்றும் அவர் ஒப்புக்கொள்கிறார். இராணுவம் ட்ரம்பை பதவியிலிருந்து அகற்றவில்லையானால் அது குறித்து பைடென் என்ன செய்வார், அவரை பதவியில் நீடிக்க அனுமதிப்பாரா என்பது பற்றி நோவா வும் கேட்கவில்லை, பைடெனும் எதுவும் தெரிவிக்கவில்லை.

ட்ரம்ப் ஒரு இராணுவ சதித்திட்டத்தை தொடங்குவதற்கு முனைகிறார் என்று உலக சோசலிச வலைத் தளமும் சோசலிச சமத்துவக் கட்சியும் விடுத்த எச்சரிக்கைகளை முழுமையாக உறுதிப்படுத்தும் வகையில், ஜூன் 1 மற்றும் அடுத்தடுத்த நாட்களில் தொடரும் நிகழ்வுகள் குறித்து பத்திரிகை அறிக்கைகள் கூடுதலாக வெளிச்சத்திற்கு கொண்டு வந்துள்ளன. அவர் தன்னை “சட்டம் மற்றும் ஒழுங்கின் தலைவர்” என்று பிரகடனப்படுத்திக் கொண்டு, 1807 இன் கிளர்ச்சி சட்டத்தை செயல்படுத்தப் போவதாக அச்சுறுத்தினார், அதாவது, உள்ளூர் மற்றும் மாநில அரசாங்கங்கள் ஒழுங்கை கடைப்பிடிக்க முடியாத நிலையில், இச்சட்டத்தின் கீழ் ஜனாதிபதி துருப்புக்களை அங்கு நிலைநிறுத்தலாம்.

வெள்ளை மாளிகைக்கு வெளியே நடந்த ஆர்ப்பாட்டங்களால் ட்ரம்ப் மிகவும் பயந்துவிட்ட காரணத்தால், ஜூன் 1, திங்களன்று நடந்த ஒரு கூட்டத்தில், வாஷிங்டனுக்குள் மத்திய கூட்டாட்சி துருப்புக்களை பெரியளவில் களமிறக்க வேண்டுமென்று ட்ரம்ப் கோரினார். வியாழக்கிழமை நியூ யோர்க் டைம்ஸ் பத்திரிகையில் வெளியான ஒரு கணக்கீட்டின் படி, “பணியாளர்களுக்கான கூட்டுத் தலைவர்களின் தலைவரான ஜெனரல் மார்க் ஏ. மில்லி, போரில் வெளிநாட்டு எதிரிகளை எதிர்த்துப் போராடுவதற்கு பயிற்றுவிப்பதற்காக போர் துருப்புக்களை அமெரிக்கர்களுடன் மோதச் செய்வது ஒரு பயங்கரமான யோசனையாக இருந்தது என்று கூறி எதிர்த்தார். மேலும் மற்றொரு தெரிவைப் பயன்படுத்தவும் ஒரு காட்டு போராட்டம் தொடர்ந்தது: அது, ஏற்கனவே அழைக்கப்பட்டிருந்த 1,200 டி.சி. காவலர் துருப்புக்களை வலுப்படுத்தும் வகையில் பிற மாநிலங்களிலிருந்து தேசிய பாதுகாப்புப் படையினரை அங்கு அழைப்பதாகும்.”

அருகேயுள்ள மேரிலாந்து மற்றும் நியூ ஜேர்சி மாநிலங்கள் மட்டுமல்லாமல், தெற்கு கரோலினா, புளோரிடா, மிசிசிப்பி, டென்னிசி, ஒஹியோ, இந்தியானா, மிசூரி, மற்றும் உடாஹ் மற்றும் உடாஹோ போன்ற தொலைதூர மாநிலங்களும் உட்பட பதினோரு மாநிலங்கள் 3,900 தேசிய காவல்படை துருப்புக்களை வழங்கின. இந்த பதினொரு மாநிலங்களில், பத்து மாநிலங்கள் குடியரசுக் கட்சி ஆளுநர்களைக் கொண்டுள்ளன. மேலும், 50 ஆண்டுகளுக்கு முன்னர் போர் எதிர்ப்பு மாணவ எதிர்ப்பாளர்கள் மீது தேசிய காவல்படை துருப்புக்கள் நடத்திய நடத்திய தூப்பாக்கிச் சூட்டில் நான்கு பேர் கொல்லப்பட்டதான கெனட் மாநில படுகொலை சம்பவம் மீண்டும் நிகழாமல் இருக்க வேண்டும் என்பதற்காக, பென்டகனின் வற்புறுத்தலின் பேரில், தேசிய காவல்படை துருப்புக்கள் தங்களது ஆயுதங்களையும், வெடிமருந்துகளையும் உள்ளூர் ஆயுதக் கிடங்கு ஒன்றில் அடுக்கி வைத்துவிட்டு, நிராயுதபாணியாக ரோந்து சென்றனர்.

எவ்வாறாயினும், ட்ரம்ப் அன்று இரவு அத்தைகையதொரு வன்முறையை எதிர்கொள்ள விரும்பினார் என்பதுடன், ஒரு மோதலைத் தூண்டவும் முயன்றார், இது மேலும் மேலதிக பல இராணுவ நடவடிக்கைகளை அவர் மேற்கொள்வதற்கான சாக்குப்போக்கை அவருக்கு வழங்கும். தேசிய பாதுகாப்புப் படையினர் ஆயுதங்களின்றி செயல்பட தயாராக இருக்க வேண்டும் என்று பாதுகாப்புச் செயலாளர் மார்க் எஸ்பர் பிறப்பித்திருந்த உத்தரவு வெள்ளை மாளிகையுடன் முடிக்கப்படவில்லை என்று செய்தி அறிக்கைகள் குறிப்பிடுகின்றன.

அதே நேரத்தில், Times பத்திரிகையின் படி, ஜெனரல் மில்லியும் மற்றும் இராணுவ செயலரான மெக்கார்த்தியும், “பாதுகாப்பு படையால் ஆர்ப்பாட்டங்களை கட்டுப்படுத்த முடியாவிட்டால், திரு ட்ரம்ப் 82வது வான்வழி காலாட்படையை அழைப்பார் என்று அந்த நாள் முழுவதும் எச்சரித்தார்.” இந்நிலையில், இந்த துருப்புக்களும், நியூயோர்க்கின் அப்ஸ்டேட்டில் நிறுத்தப்பட்டுள்ள 10 வது Mountain Division ஐ சேர்ந்த இராணுவ பொலிசாரும், வாஷிங்டன் DC பகுதிக்கு கொண்டு வரப்பட்டனர், ஆனால் நகரத்திற்கு வெளியே உள்ள இராணுவத் தளங்களில் அவர்கள் தங்கியிருந்தனர்.

ஜூன் 4, வியாழக்கிழமை வரையிலும் அமெரிக்க தலைநகரில் குறிப்பிடத்தக்க வன்முறை சம்பவம் எதுவும் நிகழவில்லை என்பதால், வழமையான துருப்புக்களை வீட்டிற்கு அனுப்ப வேண்டும் என்பதை ட்ரம்ப் ஒப்புக் கொண்டார். ஜூன் 7, ஞாயிற்றுக்கிழமை அன்று, DC க்கு வெளியிலிருந்து தேசிய காவல்படை துருப்புக்களை தங்கள் மாநிலங்களுக்குத் திரும்ப அனுமதித்தார். புதன்கிழமை அன்று தான் முடிவுக்கு வந்ததான இந்த பின்வாங்கல் நடவடிக்கை, இராணுவ தலையீட்டிற்கான அச்சுறுத்தலை முடிவுக்குக் கொண்டுவரவில்லை.

ஜோர்ஜ் ஃபுளோய்ட்டின் மரணம் குறித்த பாரிய ஆர்ப்பாட்டங்களுக்கு எதிராக இராணுவத்தைப் பயன்படுத்த திட்டமிடப்பட்டது பற்றி சாட்சியமளிக்க செயலாளர் எஸ்பரும் ஜெனரல் மில்லியும் தனக்கு முன்பு ஆஜராக வேண்டும் என்று கோரி உள்ளூர் ஆயுத சேவைகள் குழு எழுதிய கடிதத்திற்கு அவர்கள் புதனன்று பதிலளித்தனர். ஜனநாயகக் கட்சியின் கட்டுப்பாட்டிலுள்ள பிரதிநிதிகள் சபையுடனான ஒத்துழைப்பை முற்றிலும் தவிர்த்து வெள்ளை மாளிகையின் அரசியலமைப்பற்ற அறிவுறுத்தல்களை பின்பற்றி, இருவரும் இதுவரை சாட்சியமளிக்க மறுத்துவிட்டனர்.

எஸ்பரும் மில்லியும் தங்களது கடிதத்தில், பணியில் இருக்கும் இராணுவப் படையினர் “குடிமக்கள் சட்ட அமலாக்க நோக்கங்களுக்காக மாவட்டத்திற்குள் ஒருபோதும் நிலைநிறுத்தப்படவில்லை” என்று கூறினர். என்றாலும், 1807 ஆம் ஆண்டின் கிளர்ச்சிச் சட்டத்தை செயல்படுத்துவதற்கான, மற்றும் இடையூறுகளை நசுக்குவதற்காக அமெரிக்காவில் எங்கு வேண்டுமானாலும் கூட்டாட்சி துருப்புக்களை அனுப்புவதற்கான அதிகாரத்தை ட்ரம்ப் தக்கவைத்துக் கொண்டார் என அவர்கள் அறிவித்தனர். மேலும், “ஒரு ஜனாதிபதி அத்தகைய முடிவை எடுத்தால், படைகளை பயன்படுத்த வேண்டிய மாநில அரசாங்கத்தின் ஒப்புதல் இல்லாமலேயே அவர் அவ்வாறு செய்யலாம்” என்றும் அவர்கள் கூறினர். எனவே, ட்ரம்பின் தற்போதைய அச்சுறுத்தல்களின் இலக்காக இருக்கும் வாஷிங்டன் மாநிலத்திற்கு இது நேரடியாக பொருந்தும்.

சோசலிச சமத்துவக் கட்சியின் அறிக்கை எச்சரித்த படி, “வெள்ளை மாளிகையிலுள்ள சதிகாரர்கள் தங்களது சதித்திட்டத்தை இன்னமும் நிறுத்தவில்லை. இராணுவம் தனது நேரமெடுத்து இது குறித்து தனது விருப்பங்களை பரிசீலித்து வருகிறது. பொலிஸ் தொடர்ந்து முழுமையாக ஆயுதபாணியாக்கப்பட்டு” வருகிறது என்பது தெரிய வருகிறது.

பைடெனின் கருத்துக்கள் தெளிவுபடுத்தியது போல, ஜனநாயகக் கட்சியினர் இராணுவத்தை அமெரிக்க அரசியலுக்கான இறுதிகட்ட மத்தியஸ்தராக கருதுகின்றனர்.

சர்வாதிகார ஆட்சியின் இந்த ஜனாதிபதி அறிவிப்புக்கு எதிராக காங்கிரஸோ ஜனநாயகக் கட்சியோ ஒரு விரலைக் கூட உயர்த்தவில்லை. அத்தகைய இராணுவ நடவடிக்கை மிக மோசமாக தயார்படுத்தப்பட்டிருந்தது என்பதுடன், மேலும் அதற்கு அவசியமில்லை என்பதால் பென்டகனில் இருந்து எதிர்ப்பு எழுந்ததால் மட்டுமே இதிலிருந்து ட்ரம்ப் பின்வாங்கினார்.

சர்வாதிகாரத்திற்கான ட்ரம்பின் தயாரிப்புக்களை எதிர்க்கும் பொறுப்பு என்பது, பொலிஸ் கொலைகளுக்கு எதிராக தற்போது நடைபெற்று வரும் பாரிய ஆர்ப்பாட்டங்கள் நிரூபிப்பது போல, ஜனநாயக உரிமைகளைப் பாதுகாப்பதில் மிகவும் பிணைந்திருக்கும் ஒரே சமூக சக்தியான தொழிலாள வர்க்கத்தின் கையில் உள்ளது. இது, ஒரு சோசலிச வேலைத்திட்டத்தின் அடிப்படையில் தொழிலாள வர்க்கத்தின் சுயாதீனமான அரசியல் இயக்கத்தை கட்டியெழுப்புவதன் ஊடாக முன்னெடுத்துச் செல்லப்பட வேண்டும்.

Patrick Martin