தமிழ்நாட்டு அரசாங்கத்தின் வேலைக்குத் திரும்பும் கொள்கையால் தினமும் ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் கொரோனா வைரஸ் பாதிப்புக்கு ஆளாகின்றனர்

By V. Jayasakthi
17 June 2020

தமிழ்நாட்டில் ஞாயிற்றுக் கிழமை 1,974 பேரும் திங்களன்று 1,843 பேரும் கோவிட்-19 வைரஸால் பாதிக்கப்பட்டுள்ளதோடு நேற்று மட்டும் 44 பேர் மரணித்துள்ளனர். கடந்த வாரம் பூராகவும் இந்த எண்ணிக்கை நாளாந்த விளைவாக உள்ளதோடு. இதுவரை தமிழ்நாட்டில் 46,504 பேர் தொற்றுக்கு உள்ளாகியுள்ளதுடன் 479 பேர் உயிரிழந்துள்ளனர். இந்தியாவிலேயே தமிழ் நாடு மோசமாக பாதிக்கப்பட்ட இரண்டாவது மாநிலமாகும்.

இந்த பாதிப்புக்கும் மரணங்களுக்கும், பெரும் வணிகத்தின் இலாபத்தை தக்கவைப்பதற்காக, வெகுஜனங்களின் உயிரை அலட்சியம் செய்து மீண்டும் வேலைக்குத் திரும்புதல் என்ற குற்றவியல் கொள்கையை அமுல்படுத்தியுள்ள முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமியின் அனைத்து இந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழக (அ.இ.அ.தி.மு.க.) அரசாங்கம் பொறுப்பாகும்.

இந்த மிகப்பெரும் அதிகரிப்பை அடுத்து, மருத்துவ நிபுணர்களின் ஆலோசனையின் பின்னர், சென்னை மற்றும் திருவள்ளூர், செங்கல்பட்டு, காஞ்சிபுரம் ஆகிய மாவட்டங்களையும் ஜூன் 19 முதல் 30 வரை மீண்டும் முழு ஊரடங்கை அமுல்படுத்த பழனிசாமி அரசாங்கம் முடிவெடுத்துள்ளது. முழு ஊரடங்கை ஜூன் 19 வரை ஒத்தி வைப்பது மேலும் வைரஸ் பரவுவதற்கே வழிவகுக்கும்.

முழு ஊரடங்கின் போது மக்களுக்கு அத்தியாவசியத் தேவைகளை விநியோகிப்பதில் அக்கறைகாட்டாத பழனிசாமியின் அரசாங்கம், இந்த இரண்டு வார காலத்துக்கு ரேசன் அட்டை வைத்துள்ள வறிய குடும்பங்களுக்கு 1,000 ரூபாய் என்ற அற்ப உதவித் தொகையை அறிவித்து உழைக்கும் மக்கள் மீதான தனது மோசமான அலட்சியத்தை வெளிப்படுத்தியுள்ளது.

அமெரிக்காவில் ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப்பின் நிர்வாகம் மற்றும் ஏனைய முதலாளித்துவ அரசாங்கங்களை பின்பற்றி, மத்தியில் பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான பாரதிய ஜனதா கட்சி (பா.ஜ.க.) அரசாங்கமும், மாநில அரசாங்கங்களும், “சமூக நோய் எதிர்ப்பு சக்தி” (Herd immunity) என்ற, அறிவியல் விரோதமான மற்றும் மில்லியன் கணக்கானவர்களை காவுகொள்ளும் நிலைப்பாட்டை ஊக்குவிக்கின்றன. இதன் மூலம், கொரோனா வைரஸ் பாதிப்பிலிருந்து மக்களை பாதுகாப்பதை கைவிட்டு, தொழிலாளர்களை மீண்டும் வேலைக்குச் செல்ல நிர்ப்பந்தித்துள்ளதன் விளைவாகவே, நாடு பூராகவும் கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டவர்களதும் மரணித்தவர்களதும் எண்ணிக்கை மோசமாக அதிகரித்து வருகின்றது.

இந்தியா முழுவதும் நாளாந்தம் பத்தாயிரத்திற்கும் மேற்பட்டவர்களை கொரோனா தாக்கி வருவதுடன் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை செவ்வாயன்று 343,091 ஆக அதிகரித்துள்ளது. இதுவரை 9,900 பேர் மரணித்துள்ளதுடன் 12 வயதுக்கு கீழ்பட்ட 2,270 சிறுவர்கள் பாதிக்கப்பட்டுள்ளார்கள். இவை உத்தியோகபூர்வமாக அறிவிக்கப்பட்ட எண்ணிக்கையாகும். உண்மையான எண்ணிக்கை இதைவிட அதிகமாக இருக்கலாம்.

தமிழ்நாட்டில் பாதிக்கப்பட்டவர்களில் 70 வீதமானவர்கள் வசிக்கும் மாநிலத் தலைநகர் சென்னையில் கொவிட்-19 பெரும் வீச்சில் பரவி வருகின்றது. திங்கட் கிழமை மாத்திரம் 1,257 கொரோனா நோயாளிகள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளதுடன் மொத்தமாக 33,244 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். இதில் நூற்றுக்கணக்கான மாநகராட்சி ஊழியர்களும் அடங்குவர். மருத்துவ பாதுகாப்பின்மை காரணமாக முதலமைச்சர் அமர்ந்திருக்கும் தலைமைச் செயலகத்திலேயே 138 பணியாளர்களுக்கு கொரோனா தொற்று பரவியுள்ள நிலையில், மிகவும் ஏழை மக்கள் அடர்த்தியாக வாழுகின்ற பகுதிகளின் நிலைமையை ஒருவரால் கணித்துக்கொள்ள முடியும்.

தமிழ்நாட்டில் இப்போது ஸ்தாபிக்கப்பட்டுள்ள 79 பரிசோதனை நிலையங்களில் 34 தனியாருடையதாகும். அவற்றில் நாளொன்றுக்கு சராசரியாக 10,000 முதல் 14,000 பரிசோதனைகள் மட்டுமே மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. இந்திய மருத்துவ ஆரய்ச்சி கவுன்சில் (ICMR) தேசிய தொற்றுநோயியல் நிறுவனத்தின் துணை இயக்குநர் டாக்டர் பிரப்தீப் கவுர், “தற்போதைய போக்குகளின் அடிப்படையில் நகரத்திலேயே 10,000 பேரை பரிசோதிக்க வேண்டும், மேலும் மாநிலத்தில் ஒவ்வொரு நாளும் குறைந்தது 18,000 பேர் பரிசோதிக்கப்பட வேண்டும்”, என்று கூறியிருக்கிறார். ஆய்வகங்கள் அதிகரித்த அளவுக்கு பரிசோதனைகள் அதிகரிக்கவில்லை என்றும் மருத்துவ வல்லுநர்கள் தெரிவித்துள்ளனர்.

தமிழ்நாட்டில் மருத்துவ துறையில் நிலவும் பாதுகாப்பின்மையை வெளிப்படுத்தும் வகையில் சென்னை ராஜிவ்காந்தி அரசு மருத்துவமனையில் 58 வயது தலைமை செவிலியர் ஜோன் மேரி பிரிசில்லா, கொவிட்-19 பணி நீட்டிப்பு வழங்கப்பட்டதை அடுத்து கொரோனாவுக்கு பலியாகியுள்ளார். இதே மருத்துவமனையில் கடந்த வாரம் முதுகலை மாணவர்கள் உட்பட 140 வைத்தியர்களுக்கு கொரோனா தொற்றியுள்ளது.

பூட்டுதலை தளர்த்திய அ.இ.அ.தி.மு.க. அரசாங்கம், வைரஸின் சமூகப் பரவலைத் தடுக்க எதையும் செய்யவில்லை. ஜூன் 1 அன்று கொரோனா வைரஸ் பாதிக்கப்பட்ட ஓட்டுநர் ஒருவர் பயணிகளை ஏற்றிக்கொண்டு திருவண்ணாமலையிலிருந்து கடலூருக்கு பேருந்தை ஓட்டிச் சென்றுள்ளார். அவர் பணியில் இருக்கும் நேரத்தில்தான் பரிசோதனை முடிவு வந்துள்ளது. இவ்வாறு, சோதனை முடிவு வரும்வரை நோய் சந்தேக நபர்களை தனிமைப்படுத்த அரசாங்கம் தேவையான நடவடிக்கைகளை எடுக்காமல் விடுவதாலும், வைரஸின் பாதிப்பைப்பற்றிய அதிகாரிகளின் அலட்சியத்தாலும் நூற்றுக்கணக்கானோர் வைரஸ் தொற்றுக்கு உள்ளாகின்றனர்.

கொரோனா தொற்றுக்களிலிருந்து பேருந்து தொழிலாளர்களையும் பயணிகளையும் காப்பதற்கு பாதுகாப்பு ஏற்பாடுகள் எதுவும் கிடையாது. பயணிகளுக்கும் பேருந்து ஊழியர்களுக்குமிடையில் தனிமனித இடைவெளிகளை பராமரிக்க வழியில்லாத போது பயணிகள் மத்தியில் இடைவெளியின்மையைப் பற்றி சொல்லத் தேவையில்லை.

அ.இ.அ.தி.மு.க. அரசாங்கம் பொதுமுடக்க தளர்வுகளில் பேருந்து, இரயில், கால் டாக்ஸி, ஆட்டோ போன்றவற்றின் பயன்பாட்டைத் தொடங்கியிருந்ததுடன், ஏற்கனவே மதுவிற்பனைக் கடைகள் திறக்கப்பட்டுவிட்டன. தொற்றுநோய் பாதிக்கப்பட்ட பகுதியில் 50 சதவீதமும் பாதிப்பில்லாத பிற இடங்களில் 100 சதவீதமும் தொழிலாளர்களை வேலைக்கு அமர்த்திக்கொள்ள வணிக நிறுவனங்களுக்கு அனுமதி வழங்கியுள்ளது. இது உழைக்கும் மக்களின் கடினமான வாழ்நிலையை பெருவணிக இலாபச் சுரண்டலுக்கு சாதகமாக்கும் கொடூரமான நடவடிக்கையாகும்.

பரந்தளவிலான வறுமை, பட்டினி, வேலைவாய்ப்பின்மை, வாடகை வீட்டைவிட்டு வெளியேற்றுதல், அன்றாட வருமானம் பெறுவோரின் அவலநிலை, உயிர்பலிகள், புலம்பெயர்ந்த தொழிலாளர்களின் கொடுமையான நீண்ட நடை பயணங்கள் என வார்த்தைகளில் சொல்லமுடியாத எண்ணிலடங்கா வேதனைகள் மற்றும் துன்பங்களுக்குள் உழைக்கும் மக்கள், பெண்கள், முதியவர்கள், குழந்தைகள் என அனைவரும் பாதிக்கப்பட்டிருக்கின்றனர். அரசாங்க ஊழியர்களுக்கு போக்குவரத்து வசதி ஏற்பாடு இன்றி 50 சதவீதம் பேர் பணியில் கட்டாயம் ஈடுபடவேண்டும் என்ற அறிவிப்பினால், கர்ப்பிணிப் பெண்கள் உட்பட பலர், கொரோனா தொற்றும் அபாயத்துக்கு மத்தியில், இக்கட்டான சூழ்நிலையில் வேலைக்குச் செல்கின்றனர்.

சென்னையில் ஸ்ரீபெரும்புதூர் தொழிற்பேட்டையில் இருக்கும் நோக்கியா நிறுவனத்தில் 42 தொழிலாளர்கள் கொரோனாவால் பாதிக்கப்பட்டதை அடுத்து, நிறுவனம் தற்காலிகமாக மூடப்பட்டுள்ளது. அதே சமயம், சென்னையில் இருக்கும் ஹுண்டாய் தொழிற்சாலையில் மூன்று தொழிலாளர்களுக்கு பாதிப்பு கண்டுபிடிக்கப்பட்டுள்ள போதிலும், தொழிற்சாலை தொடர்ந்து இயங்கிகொண்டிருக்கிறது.

திருவொற்றியூர் எம்ஆர்எப் டயர் தொழிற்சாலையிலும் தொழிலாளர்களுக்கு நோய் தொற்று ஏற்பட்டுள்ளது. ஆலையில் தனிமனித இடைவெளி பின்பற்றப்படவில்லை எனவும், 25 சதவீத தொழிலாளர்களுடன் பணியினை மேற்கொள்ள அரசாங்கம் அளித்த விதியை மீறி 33 சதவீத தொழிலாளர்களை பணியலமர்த்தி நிர்வாகம் செயல்பட்டதாக தொழிலாளர் ஒருவர் ஊடகங்களுக்கு கூறியுள்ளார். அங்கிருக்கும் தொழிற்சங்க நிர்வாக உறுப்பினர்கள் ஆலையின் நிர்வாகத்திடம் பாதுகாப்பு பற்றி கேட்டதற்கு, முறையான பதில் கிடைக்கவில்லை. எனினும் மூன்று வேலைநேர முறையையும் செயற்படுத்துவதில் நிர்வாகிகள் கவனமாக இருந்தார்கள், என்று அந்த தொழிலாளி மேலும் கூறியுள்ளார். ஆயினும் தொழிற்சங்கம் அதற்கு உடந்தையாக செயல்படுகிறது.

உலகின் ஏனைய அரசாங்கங்களைப் போலவே, இந்திய ஆளும் வர்க்கமும் பொருளாதார நெருக்கடியின் சுமைகளை மக்கள் மீது திணிப்பதற்காக சிக்கன நடவடிக்கைகளையும் தனியார்மயப்படுத்தலையும் செயல்படுத்த கொரோனா தொற்றுப் பரவலை பற்றிக்கொண்ண்டுள்ளது. தமிழ்நாட்டின் நிதி நெருக்கடியை சுரண்டிக்கொண்டுள்ள மோடியின் அரசாங்கம், தமிழ்நாட்டில் மின்சாரத்துறையை தனியார் மயப்படுத்தும் நீண்டகால குறிக்கோளின் ஒரு பகுதியாக, விவசாயிகளுக்கான இலவச மின்சாரத்தினை நிறுத்தினால், கடன் வாங்குவதற்கான அனுமதியினை வழங்குவதாக கூறியிருக்கிறது. இது தமிழ்நாட்டின் விவசாயிகள் மத்தியில் ஒரு போராட்ட அலையை ஏற்படுத்தியிருக்கிறது.

வேலைத் தளங்களில் முதலாளிகள் மற்றும் மேலாளர்களின் தொழிலாள-விரோத அடாவடிதனங்கள் அதிகரித்துக்கொண்டிருக்கின்றன. தொழிலாளர்கள் பணிக்கு திரும்புமாறு நெருக்கப்படுகின்றார்கள். பேருந்துகள் ஓடாத நிலையில் வேலைக்கு வரமுடியாத தொழிலாளர்களின் சம்பளத்தைப் பிடித்தம் செய்துள்ளனர், பெரும்பாலான ஊழியர்கள் மே மாத சம்பளத்தை இழந்து தவிக்கின்றனர். மேலும், தொழிலாளர்களின் விடுமுறை நாட்களைக் கழித்தும், பணிக்கு வந்தால்தான் சம்பளம் என்றும், பணிக்கான நேரத்தை அதிகரித்தும், வேலையைவிட்டு நீக்குதல் போன்ற மனிதாபிமானமற்ற நடவடிக்கைகளில் நிர்வாகங்கள் ஈடுபடுகின்றன.

ஜூன் 1 முதல் பேருந்துகளை ஓட்டுவதற்கான அனுமதி வழங்கப்பட்ட நிலையில், அரசாங்கம் மே மாத சம்பளத்தினை, 11 மாத வருகைப் பதிவின் சராசரியை கணக்கிட்டு சம்பளத்தை வெட்டியுள்ளது. குறைந்த ஊதியம் வழங்கியிருப்பதை கண்டித்து பேருந்து ஊழியர்கள் போராட்டமும் நடத்தியுள்ளனர். போக்குவரத்து துறையை தனியார்மயப்படுத்தும் அரசாங்கத்தின் திட்டத்தை நிறைவேற்றுவதன் ஒரு பகுதியாக தொழிலாளர்களை பல்வேறுவழிகளில் தண்டிக்கும் ஒரு செயலாக இது இருக்கிறது. குறைந்த சம்பளமே பெறும் இத் தொழிலாளர்கள் அரசினாலும், தொழிற்சங்கங்களின் காட்டிக்கொடுப்புகளாலும் எந்த போராட்டத்திலும் முழுமையான வெற்றியை பெறமுடியாமல் இருக்கிறார்கள்.

வட இந்தியாவின் பல்வேறு பகுதிகளிலிருந்து தமிழ்நாட்டுக்கு வந்துள்ள புலம்பெயர்ந்த தொழிலாளர்கள் குறைந்த ஊதியத்திற்கு மோசமாக சுரண்டப்படுகின்றனர். மதுரையிலுள்ள கப்பலூர் தொழிற்பேட்டையின் தொழில் முனைவோர்கள், சிறிய அளவிலான தொழில்களில் ஈடுபடுபவர்கள் தங்கள் தொழில்களைத் தொடங்க முடியாத நிலை ஏற்படுவதால், புலம்பெயர்ந்த தொழிலாளர்களை சொந்த ஊர் திரும்புவதற்கு அனுமதிக்கக் கூடாது, எனக் கோருகின்றனர்.

கப்பலூர் தொழில்துறை சங்கத்தின் தலைவர் பி.என். ரகுநாதராஜா, தொழிற்பேட்டையில் புலம்பெயர்ந்த தொழிலாளர்கள் மொத்த தொழிலாளர்களில் 20 வீதம் முதல் 40 வீதம் வரை பங்களித்துள்ளதாக தி இந்து பத்திரிகைக்குத் தெரிவித்துள்ளார். வட இந்திய தொழிலாளர்கள் தங்கள் தொழில்முனைவோர்களால் நன்கு பயிற்றுவிக்கப்பட்டுள்ளனர் எனத் தெரிவித்த அவர், "எங்கள் வரி மற்றும் மின்சார கட்டணங்களை செலுத்துவதைப் பற்றி கவலைப்படுவதற்கு மேலாக, குறைந்த சம்பளத்திற்கு புதிய பணியாளர்களை எவ்வாறு உருவாக்குவது என்று நாம் சிந்திக்க வேண்டும்." என்று மேலும் கூறியுள்ளார்.

தேயிலை, ஏலக்காய் போன்ற பணப்பயிர் தோட்டங்களில் பணிபுரிந்த புலம்பெயர்ந்த தொழிலாளர்கள், அவர்களின் சொந்த ஊருக்கு சென்றுவிட்டதால் வேலை செய்வதற்கு ஆளில்லாமல் இருப்பதாக தோட்ட நிர்வாகங்கள் தெரிவித்திருக்கின்றன. தொழிற்சங்கங்களின் ஒத்துழைப்புடன், வறுமையிலிருக்கும் தோட்டத் தொழிலாளர்கள் பணிக்கு வந்தால்தான் சம்பளம் என்கிற தோட்ட நிர்வாகங்களின் கட்டாயப்படுத்தலால் அவர்கள் பாதுகாப்பற்ற நிலைமைகளின் கீழ் வேலை செய்யத் தள்ளப்பட்டுள்ளனர்..

பல்வேறு ஊடகத் துறையில் பணிபுரியும் தொழிலாளர்களும் வேலையிழப்பு, ஊதிய நிறுத்தம் போன்றவற்றை எதிர்கொள்கின்றனர். முதலீட்டாளர்களுக்கு சாதகமாக தொழிலாளர் சட்டங்களை மாற்றுவதற்கு முண்டு கொடுத்து வரும் இந்திய ஸ்ராலினிச கம்யூனிஸ்ட் கட்சி-மார்க்சிஸ்ட் (சிபிஎம்) இன் சிஐடியூ தொழிற்சங்கம், ஊடகத்துறையில் பணிநீக்கம் சம்பளம் பிடித்தல் போன்றவற்றை செய்ய அனுமதிக்ககூடாது என வேண்டுகோள் விடுக்கும் கடிதம் ஒன்றை பிரதமர் மோடிக்கு அனுப்பியிருக்கின்றது. பல தசாப்தங்களாக தொழிலார்களை முதலாளித்துவ கட்சிகளுக்குப் பின்னால் கட்டிவைக்க செயல்பட்டுவரும் சி.பி.எம். இன் தொழிற்சங்கத்தின் நடவடிக்கையை, அண்மைய ஏமாற்று வித்தையாகவே தொழிலாளர்கள் சரியாக காண்கின்றனர்.

கொரோனா வைரஸ் உருவாக்கியுள்ள நெருக்கடியின் மத்தியில், உலகம் பூராவும் அரசியல் கட்சிகளின் பாத்திரம் மேலும் மேலும் அம்பலத்துக்கு வருவதைப் போலவே, இந்திய ஸ்ராலினிச கட்சிகளும் தொழிற்சங்கங்களும் நிதியாளும் தட்டுக்களின் இலாபங்களை பாதுகாக்கவே தம்மை அர்ப்பணித்துக்கொண்டுள்ளன என்பதும் என்றுமில்லாத வகையில் தெளிவாக உள்ளது.

கொரோனா தொற்று நோய், மாநில மற்றும் தேசிய எல்லைகளைக் கடந்து தொழிலாள வர்க்கம் ஐக்கியப்பட வேண்டிய அவசியத்தை வலியுறுத்தியுள்ளது. உயிர்கொல்லி நோயை உடலில் தாங்கிக்கொண்டு பெருவணிகத்தின் இலாபத்துக்காக உழைக்குமாறு நிர்ப்பந்திக்கப்படுகின்றனர். தொழிலாளர்கள் தங்களைப் பாதுகாத்துக்கொள்ள, இத்தகைய கட்சிகள், அவற்றின் கைக்கூலி அமைப்புகள் மற்றும் தொழிற்சங்கங்களில் இருந்து உடைத்துக்கொண்டு, தங்களுக்கான சொந்த சுயாதீனமான நடவடிக்கைக் குழுக்களை கட்டியெழுப்புவதன் ஊடாக மட்டுமே தமது உயிர்களையும் நலன்களையும் பாதுகாக்க முடியும்.