இந்தியா-சீனா எல்லை மோதலில் டஜன் கணக்கானவர்கள் இறக்கின்றனர்

By Keith Jones
18 June 2020

மொழிபெயர்ப்பின் மூலக் கட்டுரையை இங்கே காணலாம்

1962 ல் இரு நாடுகளும் சிறிய எல்லைப் போரை நடத்தியதற்கு பின்னர் இந்திய மற்றும் சீன துருப்புக்களுக்கு இடையிலான மிகக் கடுமையான எல்லை மோதல் டஜன் கணக்கான உயிரிழப்புகளுக்கு வழிவகுத்ததாகக் கூறப்படுகிறது. சர்ச்சைக்குரிய சீன-இந்திய எல்லையில் குறைந்தது நான்கு இடங்களில் ஒன்றான கால்வான் பள்ளத்தாக்கில் திங்கள்கிழமை இரவு சண்டை வெடித்தது, அங்கு ஒரு மாதத்திற்கும் மேலாக துருப்புக்கள் ஒருவருக்கொருவர் நெருக்கமாக எதிரெதிராக அணிதிரட்டப்பட்டன.

இந்திய அரசாங்கத்தின் ஆரம்ப அறிக்கைகள், ஒரு இந்திய அதிகாரி உட்பட மூன்று இந்திய இராணுவ சிப்பாய்கள் சண்டையில் இறந்தனர் என்று அறிவித்தது. ஆனால் பின்னர் செவ்வாயன்று இறப்பு எண்ணிக்கை திடீரென திருத்தப்பட்டுள்ளது, மேலும் இந்திய இராணுவம் ஒரு அறிக்கையை வெளியிட்டது, “17 இந்திய துருப்புக்கள் எதிரெதிரே நிற்கும் இடத்தில் மற்றும் அதிக உயரமுள்ள நிலப்பரப்பில் பூஜ்ஜியத்திற்கும் குறைவான வெப்பநிலையில் காயமடைந்த துருப்புகள் பலியாகின”.

இப்போது வரை, சீன அரசாங்கம் எந்தவிதமான உயிரிழப்புகளையும் ஒப்புக்கொள்ளவில்லை. ஆனால் சீன அரசுடன் இணைந்த குளோபல் டைம்ஸின் ஆசிரியர் ஒரு ட்வீட்டில் குறைந்தபட்சம் சில சீன இராணுவத்தினர் மோதலில் கொல்லப்பட்டதாக சுட்டிக்காட்டினார், இது பல மணி நேரம் நீடித்ததாக கூறப்படுகிறது. சீன தகவல்தொடர்புகளை இந்தியா இடைமறித்து கேட்டதில் குறைந்தது 43 சீன உயிரிழப்புகள் ஏற்பட்டுள்ளதாக டைம்ஸ் ஆப் இந்தியா கூறியுள்ளது, இதில் குறிப்பிடப்படாத எண்ணிக்கையில் இறந்தவர்கள் மற்றும் படுகாயமடைந்தவர்கள் அடங்குவர். இதற்கிடையில், யு.எஸ். நியூஸ் அண்ட் வேர்ல்ட் ரிப்போர்ட், "ஒரு சீன அதிகாரி உட்பட 35 சீனத் துருப்புக்கள் இறந்துவிட்டதாக அமெரிக்க உளவுத்துறை நம்புகிறது" என்று தெரிவித்துள்ளது.

Tanks of Indian army in the Changtang area by the Chinese borders, Ladakh, Jammu and Kashmir, India, July 31, 2018. Photo/Karel Picha (CTK via AP Images)

செய்தி அறிக்கைகளை நம்புவதாக இருப்பின், மோதலின் போது இரு தரப்பினரும் துப்பாக்கிகளை பயன்படுத்தவில்லை, ஏனென்றால் எல்லை ரோந்துப் பணியில் ஈடுபடும் இந்திய மற்றும் சீன துருப்புக்கள் துப்பாக்கிகளை எடுத்துச் செல்வதைத் தவிர்க்க வேண்டும், அதன் மூலம் மோதல் விரிவடையாமல் பார்த்துக் கொள்ள முடியும் என்ற புரிதலைக் கடைப்பிடிக்கின்றன. அதற்கு பதிலாக, இரு தரப்பினரும் ஒருவருக்கொருவர் கற்கள், இரும்பு கம்பிகள் மற்றும் கொம்புகளால் தாக்கியதாகக் கூறப்படுகிறது, சிலர் நகங்கள் அல்லது கூர்மையான பொருட்களால் தாக்கப்பட்டிருப்பதற்கான சாத்தியமும் உள்ளது.

குளிர்ந்த வெப்பநிலை மற்றும் வரவேற்ப்பளிக்காத நிலப்பரப்பில் -சண்டை கடல் மட்டத்திலிருந்து 14,000 அடிக்கு மேல் அமைந்துள்ள ஒரு இமயமலைப் பள்ளத்தாக்கில் நடந்தது– மேலும் காயமடைந்தவர்களை அங்கிருந்து வேறிடத்திற்கு எடுத்துச் செல்வதில் உள்ள சிரமங்கள் அந்த நிலைமைகளுக்கு காரணிகளாக இருந்திருக்கலாம், அதிக எண்ணிக்கையிலான உயிரிழப்புகள் மோதலின் தீவிரத்தன்மையுடன் தொடர்புடையதாக இருக்கலாம்.

திங்கள்கிழமை இரவு மோதலுக்கு முந்தைய நாட்களில், புது தில்லி மற்றும் பெய்ஜிங் ஆகியவை எல்லை நெருக்கடி விரிவடையாமல் இருப்பதற்கான ஒரு செயல்முறையைத் தொடங்கியிருந்தன, இது மே மாத தொடக்கத்தில் இந்திய மற்றும் சீன துருப்புக்களுக்கு இடையில் இரண்டு சட்டவிரோத ஆபத்தற்ற மோதல்களுடன் தொடங்கியது, அது ஆயிரம் மைல்களுக்கு மேல் உள்ள புள்ளிகளில் நடந்தது. அதைத் தொடர்ந்து, இரு தரப்பினரும் அவரவர் எல்லைப் பகுதிகளில் மேலும் ஆயிரக்கணக்கான துருப்புக்கள், பீரங்கிகள் மற்றும் பிற ஆயுதங்களை குவித்தனர்.

புது தில்லி மற்றும் பெய்ஜிங் ஆகிய இரண்டும் நெருக்கடியைத் தணிக்க முடியும் மற்றும் தணிக்கப்படும் என்று தொடர்ந்து வலியுறுத்துகின்றன. சீனாவின் துணை வெளியுறவு மந்திரி லூவோ ஜாஹுய் செவ்வாயன்று பெய்ஜிங்கிற்கான இந்தியாவின் தூதரை சந்தித்தார்.

The disputed India-China border

ஆனால் ஒவ்வொரு சக்தியும் 45 ஆண்டுகளில் தங்களது சர்ச்சைக்குரிய எல்லையில் நடந்த முதல் இறப்புகளுக்கு மற்றவர் தான் பொறுப்பேற்க வேண்டும் என்றும் தளர்ந்து நிற்க வேண்டும் என்பதில் உறுதியாக உள்ளன.
பதட்டங்களைக் குறைப்பதற்கான எந்தவொரு முயற்சியிலும் மேலும் சிக்கலான காரணியாக நியூ யோர்க் டைம்ஸ் அறிக்கை இருக்க முடியும், டஜன் கணக்கான இந்திய துருப்புக்களைக் காணவில்லை என்றும் அவர்கள் கைப்பற்றப்பட்டதாக கருதலாம் என்றும் ஒரு இந்திய தளபதி கூறியதாக அது கூறியுள்ளது.

இந்தியாவின் வெளியுறவு அமைச்சகம் "வன்முறையாக எதிர்த்து நிற்பதற்கு” சீனத்தரப்பை குற்றம் சாட்டியுள்ளது, அதாவது “சீனத் தரப்பு ஒருதலைப்பட்சமாக உண்மையான கட்டுப்பாட்டுக் கோட்டில் நிலைமையை மாற்றுவதற்கான ஒரு முயற்சி" என்றது, இறுதித் தீர்மானம் எடுப்பது நிலுவையில் உள்ள நிலையில் இரு நாடுகளும் வரையறுக்கப்படாத அவர்களின் போட்டி பிராந்திய உரிமைகோரல்கள் செய்யக்கூடாது என்பதாகும். சீன வெளியுறவு அமைச்சகம் ஒரு அறிக்கையுடன் எதிர்கொண்டது, அதாவது இந்திய துருப்புக்கள் "சட்டவிரோத நடவடிக்கைகளை மேற்கொள்வதற்காக இரண்டு முறை எல்லையைத் தாண்டி சீன அதிகாரிகளுக்கு எதிராக ஆத்திரமூட்டும் தாக்குதல்களை நடத்தின, இது இரு தரப்பிலிருந்தும் துருப்புக்களுக்கு இடையே கடுமையான சரீர மோதலுக்கு வழிவகுத்தது." என்று கூறியது.

நிகழ்வுகள் எளிதில் கட்டுப்பாட்டை இழக்கக்கூடும். உண்மையில், அவை ஏற்கனவே கட்டுப்பாட்டை மீறத் தொடங்கியுள்ளன என்று தெரிகிறது.
உலகின் அதிக மக்கள் தொகை கொண்ட நாடுகள், அணு ஆயுத இந்தியா மற்றும் சீனா ஆகியவை தெற்காசியா, தென்கிழக்கு ஆசியா, மத்திய ஆசியா, மத்திய கிழக்கு மற்றும் ஆபிரிக்காவில் சந்தைகள், வளங்கள் மற்றும் புவிசார் மூலோபாய செல்வாக்கிற்கு போட்டியாளர்களாக உள்ளன.

ஆனால் சீனாவிற்கும் அமெரிக்க ஏகாதிபத்தியத்திற்கும் இடையிலான மூலோபாய மோதலுடன் சீன-இந்திய போட்டி ஒன்றாக கலப்பதே எல்லைப் பிரச்சினையை மேலும் பற்றி எரிய செய்வதுடன் மோசமானதாகவும் ஆக்குகிறது.

21 ஆம் நூற்றாண்டின் தொடக்கத்திலிருந்து, குடியரசுக் கட்சி மற்றும் ஜனநாயக கட்சி நிர்வாகங்களின் கீழ் வாஷிங்டன், இந்தியாவை அதன் கொள்ளையடிக்கும் மூலோபாய நிகழ்ச்சி நிரலுக்குப் பயன்படுத்துவதற்கு உறுதியுடன் பணியாற்றியுள்ளது. இந்திய முதலாளித்துவம், அதன் சொந்த பிற்போக்குத்தனமான பெரும் வல்லரசாகும் அபிலாஷைகளைப் பின்தொடர்வதற்காக வோல் ஸ்ட்ரீட்டின் ஆதரவை பெற துடித்தது, மற்றும் வாஷிங்டனும் அதற்கு சாதகமாக நடந்து கொண்டது.

”இந்திய-அமெரிக்க பூகோள மூலோபாய கூட்டாண்மை" யை, காங்கிரஸ் கட்சி தலைமையிலான அதன் முன்னோடி கட்டி எழுப்பியதன் அடிப்படையில் இருந்து இந்தியாவின் தீவிர வலதுசாரி பாரதீய ஜனதா கட்சி (பிஜேபி) அரசாங்கம் பெய்ஜிங்கிற்கு எதிரான வாஷிங்டனின் இராணுவ-மூலோபாய தாக்குதலில் இந்தியாவை ஒரு உண்மையான முன்னணி அரசாக மாற்றியுள்ளது. இது அமெரிக்கப் படைகளுக்கு இந்திய கடற்படை மற்றும் விமானத் தளங்களை திறந்து விடுவதுடன், அமெரிக்காவுடனும், அதன் பிரதான ஆசிய-பசிபிக் நட்பு நாடுகளான ஜப்பான் மற்றும் ஆஸ்திரேலியாவுடனும் இருதரப்பு, முத்தரப்பு மற்றும் நான்கு தரப்பு இராணுவ-மூலோபாய உறவுகளை ஏற்படுத்தி எப்போதும் விரிவடையும் ஒரு வலையை உருவாக்குவதும் இதில் அடங்கும்.

சீனாவும் இந்தியாவின் வரலாற்று பரம எதிரியான பாகிஸ்தானும் வளர்ந்து வரும் இந்திய-அமெரிக்க கூட்டணியில் தாங்கள் உணரும் பொதுவான அச்சுறுத்தலுக்கு அவற்றின் நெருக்கமான இராணுவ-மூலோபாய கூட்டாட்சியை வலுப்படுத்துவதன் மூலம் பதிலளித்துள்ளன. இந்திய-சீன மற்றும் இந்திய-பாகிஸ்தான் எல்லைகள் பூகோள ரீதியான மோதல்களை தூண்டுவதற்கு சாத்தியமான வெடிப்பு புள்ளிகளாக மாற்றப்பட்டுள்ளன.

நேற்று, இந்திய மற்றும் பாகிஸ்தானின் கட்டுப்பாட்டில் உள்ள காஷ்மீரைப் பிரிக்கும் கட்டுப்பாட்டுக் கோடு வழியாக இந்தியாவுடன் தொடர்ந்து பீரங்கித் தாக்குதல்களை பரிமாறி வரும் பாகிஸ்தான், சீனாவுடனான எல்லை மோதலுக்கு இந்தியா மீது குற்றம் சாட்டியது. "இந்தியா ஒருபோதும் சர்ச்சைக்குரிய பகுதியில் சாலைகள் மற்றும் வான்வழிப் பாதைகளை கட்டியிருக்கக்கூடாது" என்று வெளியுறவு மந்திரி ஷா மஹ்மூத் குரேஷி கூறினார்.

வியாழக்கிழமை மாலை, பெயரிடப்படாத அமெரிக்க வெளியுறவுத்துறை அதிகாரி ஒருவர் இந்தியா-சீனா மோதல் குறித்து வலி நீக்கும் கருத்துக்களை வெளியிட்டார், வாஷிங்டன் நிகழ்வுகளை "உன்னிப்பாக கண்காணித்து வருகிறது" என்றும் "தற்போதைய சூழ்நிலைக்கு ஒரு அமைதியான தீர்மானத்தை ஆதரிக்கிறது" என்றும் கூறினார்.

ட்ரம்ப் நிர்வாகம் சமீபத்திய வாரங்களில் சீனாவுடனான பதட்டங்களை தீவிரமான முறையில் அதிகரித்துள்ளது. அதன் சொந்த அலட்சியம் மற்றும் திறமையின்மையால் ஏற்பட்ட பெரும் எண்ணிக்கையிலான COVID-19 தொற்றுநோய் உயிர் இழப்புக்கு பெய்ஜிங்கைக் குற்றம் சாட்டுவதும், சீனாவிற்கு எதிரான தொடர்ச்சியான ஆத்திரமூட்டும் இராணுவ கட்டமைப்பின் ஒரு பகுதியாக மூன்று விமானம் தாங்கி கப்பல் குழுக்களை பசிபிக் பகுதிக்கு அனுப்புவதும் இதில் அடங்கும்.

இந்த ஆக்ரோஷமான நிலைப்பாட்டைக் கருத்தில் கொண்டு, வாஷிங்டன் சீன-இந்தியா தகராறில் வெளிப்படையாக ஊடுருவியுள்ளது, சீனாவுக்கு எதிராக கடுமையான பாதையை எடுப்பதில் இந்தியாவைப் ஊக்குவிக்கிறது. மே 20 அன்று, தென் மற்றும் மத்திய ஆசியாவிற்கான அமெரிக்க உதவி இராஜாங்க செயலாளர் ஆலிஸ் ஜி. வெல்ஸ், சீனா இந்தியாவுக்கு எதிராக "ஆக்ரோஷம்" காட்டுவதாக குற்றஞ்சாட்டி, அதை தென் சீனக் கடல் தகராறுடன் இணைத்தார், பெய்ஜிங்கின் "கவலையளிக்கும் நடத்தை" என்பதற்கு இது ஒரு சான்றாகும் என்றார்.

இதைத் தொடர்ந்து ட்ரம்ப் மீண்டும் மீண்டும் ஆத்திரமூட்டும் தலையீடுகளை மேற்கொண்டார், இதில் அமெரிக்கா மத்தியஸ்தராக செயல்படுவது அல்லது இந்தியா-சீனா எல்லை மோதலுக்கு ஒரு தீர்மானத்தை முன்வைப்பது ஆகியவையும் உள்ளடங்கும்.

இவை அனைத்தும், 2017 ஆம் ஆண்டில் வாஷிங்டன் நடுநிலை வகிப்பதாக பகிரங்கமாக பாசாங்கு செய்த்தில் இருந்து முற்றிலும் மாறுபட்டவையாக உள்ளன, அப்போது டோக்லாம் பீடபூமியில் 73 நாட்கள் இந்திய மற்றும் சீன துருப்புக்கள் ஒருவரையொருவர் எதிர்கொண்டனர், இது ஒரு இமயமலை திட்டு அதன் மீது சீனாவும் ஒரு சிறிய இராஜ்யமான பூட்டானும் உரிமை கோரின. பூட்டானை புது தில்லி ஏறக்குறைய அதற்கு கீழ்ப்படிந்த ஒரு சிற்றரசாக நடத்தியது.

சீன-இந்திய பதட்டங்கள் திங்கள்கிழமை இரவு வியத்தகு முறையில் அதிகரித்ததற்கு ட்ரம்ப் நிர்வாகத்தின் பொறுத்திருந்து பார்க்கும் பதில், அது இன்னும் அவற்றின் முக்கியத்துவத்தை மதிப்பீடு செய்து, அவற்றை எவ்வாறு சுரண்டுவது என்பதைக் கணக்கிடுகிறது என்பதைக் குறிக்கிறது.

ஆனால் அதன் உடனடி நடவடிக்கைகள் எதுவாக இருந்தாலும், சீனாவின் தெற்கு எல்லையில் மூலோபாய அழுத்தத்தை செலுத்துவதற்கும், இந்தியப் பெருங்கடலில் அமெரிக்க ஆதிக்கத்தை நிலைநிறுத்துவதற்கும் இந்தியாவைப் பயன்படுத்துவது அமெரிக்க ஏகாதிபத்திய மூலோபாயத்திற்கு முக்கியமானது, சீனாவின் எண்ணெய் இறக்குமதியின் வழித்தடங்கள் மற்றும் உலகின் பெரும்பகுதியுடனான அதன் வர்த்தகம் ஆகியற்றுக்கான வழியாக இந்தியப் பெருங்கடல் பயன்படுத்தப்படுகிறது. உண்மையில், அமெரிக்காவின் நோக்கங்களுக்காக இந்தியாவை மேலும் பயன்படுத்திக்கொள்ள, ட்ரம்ப் நிர்வாகம், பாஜக அரசாங்கம் மகிழ்ச்சி அடையும் வகையில் அமெரிக்க நிறுவனங்களை சீனாவிலிருந்து வெளியேறி இந்தியாவை அவர்களின் புதிய உற்பத்தி சங்கிலி மையமாக மாற்ற பகிரங்கமாக அழுத்தம் கொடுக்கிறது.

இமயமலை முழுவதும் நீட்டித்திருக்கும் சீன-இந்திய எல்லை மிகக்குறைந்த மக்கள்தொகை கொண்டதும் பெரும்பாலும் தரிசு நிலப்பரப்பாகவும் உள்ளது. ஆனால் உலக முதலாளித்துவத்தின் உச்ச கட்ட முறிவு மற்றும் அதன் விளைவாக ஏகாதிபத்தியங்களுக்கு இடையிலான மற்றும் பெரும்-வல்லரசுகளுக்கு இடையிலான மோதலின் எழுச்சி ஆகியவற்றின் நிலைமைகளின் கீழ் அது திடீரென பெரும் மூலோபாய முக்கியத்துவத்தை பெற்றுள்ளது.

சீனாவை பலவீனப்படுத்துவதற்கான அமெரிக்க உத்திகளில் ஒன்று, அதன் சிறு இனக்குழுக்களின் மத்தியில் இருக்கும் குறைகளை சுரண்டுவதாகும். சீனாவின் திபெத்திய தன்னாட்சி பகுதி மற்றும் சிஞ்சியாங் உய்குர் தன்னாட்சி பிராந்தியத்தின் எல்லையாக இந்தியா உள்ளது.

முக்கியமாக, சீன பாகிஸ்தான் பொருளாதார வழித்தடம் (China Pakistan Economic Corridor - CPEC), சீனாவின் அக்சய் சின் பகுதி வழியாக செல்கிறது. பாகிஸ்தான் அரேபிய துறைமுகமான குவாடருக்கும் சீனாவிற்கும் இடையிலான குழாய், இரயில் மற்றும் சாலை இணைப்புகளால் தொகுக்கப்படவுள்ள 60 பில்லியன் டாலர் CPEC, இந்தியப் பெருங்கடல் மற்றும் தென் சீனக் கடலைக் கைப்பற்றுவதன் மூலம் சீனாவை பொருளாதார ரீதியாக நெரிக்கும் அமெரிக்க திட்டங்களை எதிர்ப்பதற்கான பெய்ஜிங்கின் முயற்சிகளில் ஒரு முக்கிய அங்கமாகும்.
திங்கள் இரவு சண்டை மற்றும் சமீபத்திய வாரங்களில் இந்திய மற்றும் சீனா துருப்புக்கள் ஒருவருக்கொருவர் சண்டையிட்டுள்ள நான்கு பகுதிகளில் மூன்று இந்திய கட்டுப்பாட்டில் உள்ள லடாக் மற்றும் அக்சய் சின் இடையேயான உண்மையான கட்டுப்பாட்டு வரிசையில் உள்ளன.

சீனாவுடனான தனது எல்லை மோதலைத் தொடர்வதில், இந்தியா பொறுப்பற்ற முறையில் கையாளுவதில் ஈடுபட்டுள்ளது. ஆனால் நரேந்திர மோடி தலைமையிலான பாஜக அரசாங்கம் இந்தியாவை ஒரு பிராந்திய மேலாதிக்கமாகக் காட்டுவதற்காக மிகப்பெரும் அரசியல் முதலீடு செய்துள்ளது, மேலும் பல வாரங்களாக யுத்த நெருக்கடிகளைத் தூண்டிய மோடியின் சட்டவிரோத 2016 மற்றும் 2019 “மின்னல்” இராணுவத் தாக்குதல்களை பாகிஸ்தானின் மீது ஊக்குவிப்பதை ஒரு தைரியமான புதிய இந்தியாவுக்கான சான்றாக காட்டியது. ஞாயிற்றுக்கிழமை, பாதுகாப்பு மந்திரி ராஜ்நாத் சிங் இந்தியா "எந்த சூழ்நிலையிலும் தேசிய பெருமையை சமரசம் செய்யாது" என்று சபதம் செய்தார். இந்தியா இனிமேல் ஒரு பலவீனமான இந்தியா அல்ல”.

மோசமான முறையில் தயாரிக்கப்பட்ட COVID-19 முடக்கம் ஒரு சமூக பேரழிவை ஏற்படுத்தியுள்ளது -120 மில்லியன் வேலையற்றோர் மற்றும் நாடு முழுவதும் கொரோனா வைரஸ் பாதிப்புகள் வியத்தகு முறையில் அதிகரித்துள்ளன- மோடியும் பாஜகவும் சீனாவுடனான மோதலை போர் வெறி கொண்ட, வகுப்புவாதத்துடன் கலந்த தேசியவாதத்தை தூண்டுவதற்கு பயன்படுத்த முயற்சிக்கும் என்பதில் சந்தேகமில்லை, அது பெருகிவரும் சமூக கோபத்தை எதிர்வினையின் பின்னால் திசை திருப்பி, தொழிலாள வர்க்கத்தை அச்சுறுத்துவதை நோக்கமாகக் கொண்டுள்ளது.

எதிர்பார்த்தபடி, காங்கிரசும் பிற எதிர்க்கட்சிகளும் பாஜக அரசுக்கு தங்கள் ஆதரவை வழங்க விரைந்துள்ளன. "இந்த ஊடுருவல்களுக்கு எதிராக நாடு எழுந்து நிற்க வேண்டிய நேரம் வந்துவிட்டது" என்று காங்கிரஸ் தலைவரும் பஞ்சாப் முதல்வருமான அமரீந்தர் சிங் நேற்று முன்தினம் கூறினார்.

சீன கம்யூனிஸ்ட் கட்சி மூன்று தசாப்தங்களுக்கு முன்னர் முதலாளித்துவ மீட்சியை ஏற்படுத்தியது, இப்போது ஒரு புதிய முதலாளித்துவ தன்னலக்குழுவின் அரசியல் கருவியாக சேவை செய்கிறது, அமெரிக்காவும் பிற ஏகாதிபத்திய சக்திகளும் இந்திய சிற்றரசின் ஆதரவுடன் சீனா மீது சுமத்தும் இராணுவ-மூலோபாய அழுத்தத்திற்கு முற்போக்கான பதில் சீனாவிடம் இல்லை. சர்வதேச தொழிலாள வர்க்கத்திற்கு அறைகூவல் விடுக்க திராணியற்ற பெய்ஜிங் ஆட்சி, தனது இராணுவத்தை கட்டியெழுப்புவதற்கும் தேசியவாதத்தை தூண்டிவிடுவதற்கும் அதன் சொந்த மிரட்டல் அச்சுறுத்தல்களை விடுப்பதற்கும் அமெரிக்கா மற்றும் பிற ஏகாதிபத்திய சக்திகளுடன் ஒரு சமரசத்தை நாடுவதற்கும் இடையில் ஊசலாடுகிறது.

உலகளாவிய முதலாளித்துவ நெருக்கடி அமெரிக்கா தலைமையிலான ஏகாதிபத்திய மற்றும் பெரும் சக்திகளை யுத்தத்திற்கும் ஒரு பேரழிவுகரமான உலகளாவிய மோதலுக்கும் தூண்டுகிறது. ஆனால் இது தொழிலாள வர்க்கத்தின் உலகளாவிய எழுச்சியையும் தூண்டுகிறது. போருக்கு எதிரான போராட்டம் என்பது இந்த ஆரம்ப இயக்கத்தை ஒரு சோசலிச சர்வதேசவாத வேலைத்திட்டத்துடன் அரசியல் ரீதியாக ஆயுதபாணியாக்குவதற்கான போராட்டமாகும்.