பிரெஞ்சு அரசு எயர்பஸ் மற்றும் எயர் பிரான்சுக்கு 15 பில்லியன் யூரோக்கள் பிணையெடுப்பு அளிக்கிறது

By Kumaran Ira
18 June 2020

மொழிபெயர்ப்பின் மூலக் கட்டுரையை இங்கே காணலாம்

கடந்த வாரம், பிரெஞ்சு ஜனாதிபதி இமானுவல் மக்ரோன், வாகனத் தொழிலுக்கு 8 பில்லியன் யூரோக்கள் பிணை எடுப்பு வழங்கிய பின்னர், விண்வெளித் தொழிலுக்கு 15 பில்லியன் யூரோக்களை பிணை எடுப்பதாக அறிவித்தார். COVID-19 தொற்றுநோய் ஏற்கனவே நூறாயிரக்கணக்கான வேலைகளை அழித்ததோடு, பிரான்சில் மட்டும் பல்லாயிரக்கணக்கானோரை குறுகியகால வேலைகளுக்குள் தள்ளி, பெரிய நிறுவனங்கள் ஐரோப்பாவிலும் சர்வதேச அளவிலும் வேலை வெட்டுக்கள் மற்றும் மறுசீரமைப்புகளைச் செய்வதற்கு ஏராளமான பொது உதவிகளைப் பெற்று வருகின்றன.

ஆயிரக்கணக்கான வேலைகளை மிச்சப்படுத்துவதாகவும், விமான உற்பத்தியாளர் எயர்பஸ் மற்றும் எயர் பிரான்சின் சர்வதேச போட்டித்தன்மையை பேணுவதாகவும் கூறி விண்வெளி பிணை எடுப்பை அரசாங்கம் நியாயப்படுத்தியுள்ளது. இந்த திட்டத்தில் போக்குவரத்து அமைச்சர் புருனோ லு மேர் ஜூன் 9 ஆம் தேதி முதல் போக்குவரத்து, பாதுகாப்பு மற்றும் சுற்றுச்சூழல் அமைச்சர்களுடன் கையெழுத்திட்டார்.

இந்த 15 பில்லியன் யூரோக்கள் நிதி உதவித் திட்டத்தில் எயர் பிரான்சுக்கு 7 பில்லியனும், மீதமுள்ளவை தொழில்துறை உற்பத்தி துறைக்கும் அடங்கும். எயர்-ஜேர்னல் இணைய தளத்தின்படி, "இராணுவ ஒப்பந்தங்களை முன்னெடுப்பதில் இருந்து ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டுக்கான முதலீடு வரை, சிறு வணிகங்களுக்கு ஆதரவாக அரசு, Airbus, Dassault Aviation, Safran, Thalès ஆகியவற்றுக்கு முதலீட்டு நிதியை உருவாக்குவது உட்பட எயர் பிரான்ஸை தவிர்த்து 8 பில்லியன் யூரோக்கள் கடன்களைத் திருப்பிச் செலுத்துவதற்கான தற்காலிக தடை முதல், பகுதி வேலையின்மை திட்டத்தை பராமரிப்பது வரையிலான நடவடிக்கைகளை உள்ளடக்கும்”.

"எங்கள் இறையாண்மை, வேலைகள் மற்றும் பொருளாதாரத்திற்கு மிகவும் அவசியமான இந்த பிரெஞ்சு தொழிற்துறையை ஆதரிக்க நாங்கள் எல்லாவற்றையும் செய்வோம்" என்று லு மேர் கூறினார். "நாங்கள் உடனடியாக தலையிடாவிட்டால், இந்தத் துறையில் மூன்றில் ஒரு பங்கு வேலைகள் அடுத்த ஆறு மாதங்களில் மறைந்துவிடும், அதாவது 100,000 வேலைகள்."

இந்த பிணை எடுப்பின் நோக்கம் வேலைகளைப் பாதுகாப்பதோ அல்லது வேலைகளை உருவாக்குவதோ அல்ல. தொழில்களை மறுசீரமைப்பதற்கும், இலாபங்களை அதிகரிப்பதற்காக வேலைகள், ஊதியங்கள் மற்றும் சமூக நலன்களைத் தாக்குவதற்கும் ஒரு சாக்குப்போக்காக நிதிய பிரபுத்துவம் தொற்றுநோயைப் பயன்படுத்துகிறது.

அரசு உதவியால் பில்லியன் கணக்கான யூரோக்கள் பயனடைந்த பின்னர், முதலாளிகள் முதலாளிகள் தொடர்ந்து தொழிற்சாலைகளை மூடி வேலைகளை குறைக்கின்றனர். வாகன உற்பத்தியாளர் ரெனால்ட், பிரெஞ்சு அரசாங்கத்திடமிருந்து 5 பில்லியன் யூரோ பெற்றுள்ளது, இது வாகனத் தொழிலுக்கான 8 பில்லியன் யூரோ திட்டத்தையும் அறிமுகப்படுத்தியுள்ளது. பிரான்சில் 4,600 வேலைகள் உட்பட உலகளவில் 15,000 வேலை வெட்டுக்களை ரெனால்ட் அறிவித்துள்ளது.

இப்போது அரசாங்கம் தனது போட்டியாளர்களுக்கு எதிரான போட்டித்தன்மையைத் தக்கவைக்க விண்வெளித் தொழிலுக்கு பில்லியன்களை வழங்கி வருகிறது. இது வேலை வெட்டுக்கள் மற்றும் சர்வதேச அளவில் எயர்பஸ் ஊழியர்களுக்கான ஊதியங்களையும் சலுகைகளையும் அழித்தல் ஆகியவற்றுடன் இருக்கும்.

"நாங்கள் எங்கள் விண்வெளித் தொழிலை காப்பாற்ற வேண்டும்," என்று அவர் கூறினார். "அமெரிக்க நிறுவனமான போயிங் அல்லது சீன நிறுவனமான கோமாக் நிறுவனத்திற்கு எதிராக வரும் மாதங்களில் எந்தவொரு சரிவையும் நாம் தவிர்க்க வேண்டும். உலக விண்வெளி சந்தைகளை சீனாவும் அமெரிக்காவும் பிரிக்க நாம் அனுமதிக்க மாட்டோம். பிரான்சும் ஐரோப்பாவும் தங்கள் தரத்தை பாதுகாக்கும்”.

தொழிலாளர்களின் இழப்பில் அதிகபட்ச இலாபங்களை எடுக்க அனுமதிக்கும் வகையில் வடிவமைக்கப்பட்ட வர்த்தக யுத்தக் கொள்கைகளை ஆதரிப்பதற்கான ஐரோப்பிய ஏகாதிபத்திய சக்திகளின் அழைப்புகளை தொழிலாளர்கள் நிராகரிக்க வேண்டும். அமெரிக்கா, சீனா உட்பட அனைத்து நாடுகளிலும் உள்ள தொழிலாளர்கள் அதிகரித்து வரும் சமூக தாக்குதல்களை எதிர்கொள்கின்றனர். இதனால்தான் உலகெங்கிலும் உள்ள தொழிலாளர் போராட்டங்களை ஒரு சோசலிச வேலைத்திட்டத்தில் ஒன்றிணைப்பது மிகவும் முக்கியமானது, எனவே தொழிலாளர்கள் மனிதகுலத்தால் உருவாக்கப்பட்ட உற்பத்தி சக்திகளின் கட்டுப்பாட்டை தம் கையில் எடுப்பதன் மூலம் சமூக தேவைகளை பூர்த்தி செய்ய பகுத்தறிவுடன் பயன்படுத்த முடியும்.

எயர் பஸ்ஸை பொறுத்தவரை, விண்வெளி நிறுவனமான அது என்ன நடவடிக்கைகளை எடுக்க திட்டமிட்டுள்ளது என்பதை இதுவரை வெளியிடவில்லை. எயர் பஸ் தனது முடிவுகளை ஜூலை இறுதியில் அறிவிக்கும் என்று அதன் தலைமை நிர்வாக அதிகாரி Guillaume Faury சுட்டிக்காட்டினார். வேலை வெட்டுக்கள் இருக்காது என்று உத்தரவாதம் அளிக்க அவர் மறுத்துவிட்டார். France Bleu வானொலியுடன் பேசிய அவர், இந்த பிணை எடுப்பு திட்டம், "குறுகிய காலத்தில் நெருக்கடியின் அலைகளை எதிர்ப்பதற்கும் எதிர்காலத்தை தயாரிப்பதற்கும்" நிறுவனத்தை அனுமதிக்க வேண்டும் என்று கூறினார்.

எயர்பஸில் வேலைகளைச் சேமிப்பதில், Faury மேலும் கூறினார், “இந்த கேள்விக்கு உறுதியுடன் பதிலளிப்பது மிகவும் கடினம். நாங்கள் மக்களுக்கு வேலை செய்ய நேரம் கொடுக்க வேண்டும், நடவடிக்கைகளின் இந்தக் கட்டத்தில் எந்த பதிலும் இருக்க முடியாது. எயர்பஸ் முற்றிலும் புதுமை மற்றும் முதலீடு செய்யும் திறனுடன் இந்த நெருக்கடியிலிருந்து வெளிவர வேண்டும். எனவே குறுகிய கால மற்றும் நீண்ட கால வர்த்தக பரிமாற்றங்கள் இருக்கும், எங்கள் வேலை மிகவும் முக்கியமானது".

எயர்பஸ் உலகளவில் சுமார் 135,000 தொழிலாளர்களைப் பயன்படுத்துகிறது, இதில் பிரிட்டனில் 13,500, ஜேர்மனியில் 46,000 மற்றும் பிரான்சில் 48,000 தொழிலாளர்கள் உள்ளனர்.

மே மாதத்தில், பிரிட்டனின் டெலிகிராப் செய்தித்தாள் எயர்பஸ் 10,000 வேலை வெட்டுக்களைத் தயாரித்து வருவதாகவும் எழுதியது. தினசரி மேற்கோள் காட்டிய அநாமதேய ஆதாரங்களின்படி, 10 சதவீத ஊழியர்களை பணிநீக்கம் செய்யலாம் என்றும் கூறியது.

உலகெங்கிலும் உள்ள முதலாளித்துவ அரசாங்கங்களின் குற்றவியல் கொள்கைகளை இந்த தொற்றுநோய் மீண்டும் அம்பலப்படுத்தியுள்ளது. ஆழ்ந்த சமூக சிக்கன நடவடிக்கைகளை பின்பற்றிய பின்னர், தொழிற்சங்கங்களின் உடந்தையோடு தொழிலாள வர்க்க எதிர்ப்பை தனிமைப்படுத்தவும், கழுத்தை நெரிக்கவும் பணியாற்றிய பின்னர் COVID-19 க்கு எதிரான போராட்டத்தை மக்ரோன் அரசாங்கம் ஆரம்பத்தில் இருந்தே புறக்கணித்தது. பிரான்சிற்குள் தொற்றுநோய் மிக உயர்ந்த கட்டத்தில் இருக்கையில், 300 பில்லியன் டாலர்களை வங்கிகளுக்கும் பெருவணிகத்திற்கும் பெரும் இலாபம் ஈட்டும் திட்டத்தை வெளியிடுவதன் மூலம் அது எதிர்வினையாற்றியது.

எயர்பஸ் ஏற்கனவே சமீபத்திய ஆண்டுகளில் ஆயிரக்கணக்கான வேலைகளை குறைத்துள்ளது. அதன் கடைசி மறுசீரமைப்பு திட்டமான Power8, 2007-2010 காலகட்டத்தில் எயர்பஸ் மற்றும் அதன் துணை ஒப்பந்தக்காரர்களில் 5,000 வேலை வெட்டுக்களுக்கு வழிவகுத்தது. துலூஸில் 3,000 க்கும் மேற்பட்ட வேலை வெட்டுக்கள் இருந்தன.

இந்த திட்டத்தை ஆதரிப்பதற்கு தொழிற்சங்கங்கள் முக்கிய பங்கு வகிக்கின்றன, சிக்கன நடவடிக்கைகளை சுமத்துவதற்கும் இந்த திட்டங்களுக்கு எதிரான போராட்டங்களையும் வேலைநிறுத்தங்களையும் தனிமைப்படுத்தவும் அரசாங்கத்துடனும் பெருநிறுவன நிர்வாகத்துடனும் நெருக்கமாக ஒருங்கிணைகின்றன. 2007 ஆம் ஆண்டில் செய்ததைப் போலவே, எத்தனை வேலைகள் அழிக்கப்பட வேண்டும் என்று நிர்வாகத்துடன் மூடிய கதவுகளுக்குப் பின்னால் பேச்சுவார்த்தை நடத்திக்கொண்டு, எயர்பஸ் வேலைகளை வைத்திருக்குமாறு கேட்டு தொழிற்சங்கங்கள் பிணை எடுப்புக்கு ஆதரவளிக்கின்றன.

அரசாங்கத்தின் அறிவிப்புக்குப் பின்னர், எயர் பஸ்ஸில் பெரும்பான்மை தொழிற்சங்கமான FO (தொழிலாளர் சக்தி - FO), எயர் பஸ் மற்றும் அதன் பிரெஞ்சு சட்டசபை மற்றும் அரசாங்கத்தின் அதே வரிகளை ஏற்றுக்கொண்டன. பிணை எடுப்பு, வேலைகளை காப்பாற்ற வேண்டும் என்று அவர்கள் வலியுறுத்தினர். "இவ்வளவு அரசு உதவியுடன், பெரிய தொழிலதிபர்கள் அவற்றின் மறுசீரமைப்பு திட்டங்களில் இப்போது தங்கள் தொனியைக் கொஞ்சம் குறைக்க வேண்டும். பெருநிறுவனத்தின் அளவை மாற்றுவதற்கு, நிர்வாகம் நெருக்கடியைப் பயன்படுத்த விரும்புகிறது, ஆனால் தொழிலாளர்கள் மீது சுமத்தப்பட்ட எந்த வேலை வெட்டுக்களையும் நாங்கள் ஏற்க மாட்டோம்” என்று எயர் பஸ்ஸின் FO பிரதிநிதி Jean-François Knepper கூறினார்.

இருப்பினும், 2008 பொருளாதார நெருக்கடிக்குப் பின்னர், தொழிற்சங்கங்கள் வாகனத் தொழில் உட்பட பல நிறுவனங்களுடன் நெருக்கமாக பணியாற்றி, மறுசீரமைப்பு திட்டங்களை செயல்படுத்த ஆலைகளை மூடி, பல்லாயிரக்கணக்கான வேலைகளை குறைத்தன. பிணை எடுப்பு மற்றும் பொது மானியங்களில் பில்லியன் கணக்கான யூரோக்களைப் பெறும்போதும் அவர்கள் இதைச் செய்தனர், அதே நேரத்தில் வேலைநிறுத்தங்களும் ஆர்ப்பாட்டங்களும் தொழிற்சங்கங்களால் தனிமைப்படுத்தப்பட்டன.

எயர் பஸ் துணை ஒப்பந்தக்காரர், வேலைகளை பராமரிக்க இது அவசியம் என்ற போலிக்காரணத்தோடு, டெரிச்செபர்க்கில் சமூக நலன்களை உடைப்பதை FO ஏற்றுக்கொண்டது, இந்த ஒப்பந்தம் போக்குவரத்து மற்றும் உணவு கொடுப்பனவுகளை முடிவுக்குக் கொண்டுவருவதற்கும், அத்துடன் குறைந்தபட்ச ஊதியத்தை விட 2.5 மடங்கு (மாதத்திற்கு 3047 யூரோ) மேல் சம்பாதிக்கும் தொழிலாளர்களுக்கு கிறிஸ்துமஸ் போனஸாக கூடுதல் மாத ஊதியத்தை நீக்குகிறது. "நாங்கள் வேலைகளைச் சேமிக்கத் தேர்ந்தெடுத்தோம்" என்று FO-Derichebourg அதிகாரி Éric Fabre கூறினார்.

போட்டித்தன்மையை அதிகரிக்கும் பேரில், தொழிற்சங்கங்கள் பல்வேறு நிறுவனங்களில் உள்ள தொழிலாளர்களை தாக்கத் தயாராகி வருகின்றன. தொழிலாளர்கள் தொழிற்சங்கங்களின் கைகளில் இருந்து போராட்டத்தை எடுக்க வேண்டும், தொழிற்சங்கங்களிலிருந்து சுயாதீனமாக நடவடிக்கைக் குழுக்களை அமைத்து, அவர்களின் போராட்டங்களை சர்வதேச அளவில் இணைக்க வேண்டும். சோசலிச சமத்துவக் கட்சி, இந்த நாடுகடந்த நிறுவனங்களை, அவர்கள் செயல்படும் ஒவ்வொரு நாட்டிலும் தொழிலாளர்களின் கட்டுப்பாட்டின் கீழ் தேசியமயமாக்கும் முன்னோக்கை முன்மொழிகிறது. அது அவற்றை, மனிதகுலத்தின் சமூகத் தேவைகளை பூர்த்தி செய்யும் சர்வதேச பொது பயன்பாடுகளாக மாற்றும்.