உயர்மட்ட பிரெஞ்சு தளபதி “அரசுக்கு எதிரான அரசு" போர்களுக்கான தயாரிப்புகளை அறிவிக்கிறார்

By Will Morrow
20 June 2020

மொழிபெயர்ப்பின் மூலக் கட்டுரையை இங்கே காணலாம்

பிரெஞ்சு ஏகாதிபத்தியம் மிகப்பெரியளவில் "அரசுக்கு எதிரான அரசு" போர்களுக்கான தயாரிப்புகளுக்கு திரும்புவதைச் சமிக்ஞை செய்யும் புதிய இராணுவ மூலோபாய ஆவணம் ஒன்றை பிரெஞ்சு ஆயுதப்படைகளின் தலைவர் தளபதி தியேரி புர்க்ஹார்ட் வெளியிட்டார்.

தேசிய நாடாளுமன்றத்தின் பாதுகாப்பு குழுவிற்கு அந்த ஆவணத்தை புர்க்ஹார்ட் அறிமுகப்படுத்துகையில், “செயல்முறை பாதுகாப்பு 2030” என்று தலைப்பிடப்பட்ட அந்த முன்நகல், கடந்த 15 ஆண்டுகளாக மத்தியக் கிழக்கு மற்றும் வட ஆபிரிக்காவில் பிரெஞ்சு நவ-காலனித்துவ தலையீடுகளுக்கான இலக்குகளுக்கு எதிராக மட்டுமல்ல, மேலாக பிரதான சக்திகளுக்கு எதிரான போர்களுக்கும் இராணுவத்தைத் தயார் செய்யும் என்பதைத் தெளிவுபடுத்தினார்.

இந்த கொரொனா வைரஸ் தொற்றுநோயுடன் ஓர் ஒப்பீட்டை வரைந்து புர்க்ஹார்ட் குறிப்பிடுகையில், ஒரு மிகப்பெரிய போர் வெடிப்பானது "போர் தொற்றுக்கான முதல் நோயாளிக்காக மட்டுமே காத்திருக்கிறது,” என்றார். வேறு வார்த்தைகளில் கூறுவதானால், பிரதான சக்திகளுக்கு இடையே ஒரு போருக்கான நிலைமைகள் ஏற்கனவே உள்ளன, அவை தொடங்கி விடுவதற்கு அவசியமான ஒரு தூண்டுதலுக்காக காத்திருக்கின்றன.

நிலத்திலும் நீரிலும் பயணிக்கும் தாக்கும் கப்பல் USS Nassau இன் நிர்வாக அதிகாரி கேப்டன் சாமுவெல் நோர்டன், வலதுபுறம், மற்றும் தளபதி தியேரி புர்க்ஹார்ட், இடதுபுறம் (படம்: விக்கிபீடியா காமென்ஸ்)

“இந்த உலகம் போதுமானளவுக்கு வேகமாகவும் போதுமானளவுக்கு மோசமாகவும் பரிணமித்து வருகிறது,” என்று கூறி, மோதல்களின் வேகத்தில் இருக்கும் அதிகரிப்பையும் மற்றும் "தடுக்க முடியாத மீள்இராணுவமயப்படுத்தலின்" அதிகரிப்பையும் சுட்டிக்காட்டினார். இராணுவம் "2035 இன் ஒரு சூழ்நிலையை அனுமானித்து" இருந்தது... “ஆனால் 2020 இல், சரிபார்ப்பு பட்டியலில் சில குறிப்பிட்ட புள்ளிகள் ஏற்கனவே சரிபார்க்கப்பட்டுள்ளன” என்றார். இலக்கு வைக்கப்பட்டவர்களுக்கு எதிராக பிரெஞ்சு படைகள் அதிகளவில் இராணுவ மேலாதிக்கத்தை அனுபவித்த சாஹெல் மற்றும் ஆப்கானிஸ்தான் தலையீடுகளால் குறிக்கப்பட்டிருந்த, "மோதல்கள் கட்டத்தின் முடிவை" பிரான்ஸ் இப்போது எதிர்கொண்டுள்ளது. புதிய "சமச்சீரான" மோதல்களை, “அரசுக்கு எதிரான அரசை" இராணுவம் எதிர்பார்ப்பதாக புர்க்ஹார்ட் தெரிவித்தார்.

Le Monde மேற்கோளிட்ட இராணுவத்திற்கான ஒரு உள்அலுவலக காணொளியில், “மிகச் சிறிய சம்பவம் கூட ஒரு கட்டுப்படுத்தவியலாத இராணுவத் தீவிரப்பாடாக அதிகரிக்கக்கூடும்,” என்பதையும் புர்க்ஹார்ட் சேர்த்துக் கொண்டார்.

புர்க்ஹார்ட் கருத்துக்களை வெளியிட்ட Le Monde, அணுஆயுத ரஷ்யா உடனான போரைச் சுட்டிக்காட்டிய பாரிஸில் உள்ள பெயர்வெளியிடாத நேட்டோ அதிகாரி ஒருவரின் கருத்துக்களை மேற்கோளிட்டது. “ரஷ்யா உடனான எதிர்கால மோதல் ஒரு படையெடுப்பால் முன்நிகழாது, மாறாக அனேகமாக பிழையான தந்திரோபாய கணக்கீடுகள் நம்மை அதற்குள் இழுத்துச் செல்லும்.” “பிரெஞ்சு இராணுவம் அதன் தடுப்புமுறை திறன்கள் மீது ஒருங்குவிய வேண்டும்" —அணுஆயுதங்கள் மீது— அதேவேளையில் "தன்னை எப்போதும் பரிசோதித்துக் கொண்டும், அழுத்தத்தின் கீழ் புதுப்பித்துக் கொண்டும், அதன் ஆயுதங்களை, அதன் ஒன்றிணைந்து இயங்கும் தன்மையை, அதன் ஏவுகணை தடுப்பு பாதுகாப்புகளை அபிவிருத்தி செய்து கொண்டும்" இருக்க வேண்டும் என்று அந்த அதிகாரி தொகுத்தளித்தார்.

பிரான்ஸ் அதன் இராணுவப் படைகளின் ஒவ்வொரு பிரிவிலும் பாரியளவில் கட்டமைப்பை மேற்கொள்ள வேண்டும் என்பதே புர்க்ஹார்ட் முன்வைக்கும் உலக புவிசார் அரசியல் நிலையிலிருந்து அவர் கொண்டு வரும் தீர்மானமாக இருந்தது. இப்போதிருந்து 2030 க்குள் அது "அதிக சிக்கலான போர் ஈடுபாடுகளுக்கும்" மற்றும் "அதிர்வுகளுக்கும் அது தயாராக இருக்கும் விதத்தில் இராணுவத்தைக் கடுமையாக" ஆக்க வேண்டும் என்றார். இது, இரண்டாம் உலக போரில் பிரெஞ்சு இராணுவப் படைகள் தோல்வியடைந்த "மே 1940 மீண்டும் ஏற்படுவதற்கு நாம் தயாராக வேண்டும் என்பதை அர்த்தப்படுத்தாது", ஏனென்றால் "நாம் இணையவழி தகவல் தொழில்நுட்பத்தின் தாக்கங்களையும் நன்கு ஒருங்கிணைத்துக் கொள்ள வேண்டும்,” என்றார்.

அந்த தளபதியும் அங்கே பாதுகாப்புக் குழுவில் ஒன்றுகூடியிருந்த உறுப்பினர்களும் ஒரு புதிய உலக போரைத் துணைக்கு இழுப்பதன் மீதிருக்கும் உள்நோக்கங்களைக் குறித்து எதுவும் வாய்திறக்கவில்லை, இன்றைய நிலையில் இது இரண்டாம் உலகப் போரின் போக்கில் கொல்லப்பட்ட 85 மில்லியனுக்கும் அதிகமானவர்களின் மரண எண்ணிக்கையையே விஞ்சி விடக்கூடிய ஒரு அணுஆயுத மோதலாக விரைவிலேயே அபிவிருத்தி அடைந்து விடக்கூடும்.

பெயர் வெளியிடாத தளபதிகளின் அறிக்கையை மேற்கோளிட்ட Le Monde குறிப்பிடுகையில், “பெருந்திரளான மக்கள்" என்ற வார்த்தை இராணுவத்தின் சொல்லகராதிக்கு திரும்பி இருப்பதைச் சுட்டிக்காட்டியது. “ஈராக்கில் 155 மிமீ சீசர் சிறுபிரங்கி மூன்றாண்டுகளில் 20,000 க்கும் அதிகமான சுற்றுக்களை சுட்டுத் தள்ளியதை, அல்லது மொசூலில் இருந்து 15,000 ஜிஹாதிஸ்டுகளை வெளியேற்ற 90,000 சிப்பாய்களின் ஒரு சர்வதேச படை அவசியப்பட்டது என்பதை அவர்கள் குறிப்பிட்டுள்ளனர். பிரெஞ்சு இராணுவம் அதன் அளவில் அதிகரிக்காது … ஆனால் அது பின்புலத்தில் குறிப்பிடத்தக்களவுக்கு நிறைய படைகளைக் கொண்டிருக்கவேண்டும்”.

அமெரிக்க தளபதி "போர் வெறியர்" ஜேம்ஸ் மாட்டிஸ் "நிர்மூலமாக்கும் போர்" என குறிப்பிட்ட அமெரிக்க தலைமையிலான கூட்டுப்படையின் 2017 தாக்குதலில், 40,000 பேரைக் கொன்று அழிக்கப்பட்ட ஒரு நகரமான மொசூலைக் குறித்த குறிப்பு, பிரெஞ்சு இராணுவம் தயாரிப்பு செய்து வரும் குற்றங்களின் அளவை வெளிப்படுத்துகிறது.

அந்த முன்நகல், இராணுவத்தில் ஒருவர் கட்டாய சேவையாற்றுவதற்கான வாய்ப்பை உள்ளடக்கி உள்ள ஜனாதிபதி மக்ரோன் மறுஅறிமுகம் செய்த அனைவருக்குமான தேசிய சேவையை (Service national universel - SNU) சுட்டிக்காட்டி, இளைஞர்களை நியமிப்பதன் மூலமாக சிப்பாய்களின் எண்ணிக்கையை அதிகரிக்க வேண்டிய அவசியத்தைக் குறிப்பிடும் குறிப்புகளை பலமுறை கொண்டுள்ளது. “இளைஞர்களுக்கான தரைப்படை அபிலாஷை" என்ற தலைப்பின் கீழ் அது, “இராணுவ இருப்புப் பட்டியலில் வைக்கப்பட்டுள்ளவர்களின் ஆதரவில்லை என்றால்,” இராணுவம் "அதிலிருந்து சாத்தியமான அனைத்து வாய்ப்புக்களையும் பெறுவதற்காக, அனைவருக்குமான தேசிய சேவையில் (SNU) இறங்கும்" என்று குறிப்பிடுகிறது. அதன் மறுஅறிமுகம், ஜோன் லூக் மெலோன்சோனின் அடிபணியா பிரான்ஸ் உட்பட ஒட்டுமொத்த அரசியல் ஸ்தாபகத்தாலும் ஆதரிக்கப்பட்டது.

சமீபத்திய அறிவிப்புக்கு முன்னரே, பிரெஞ்சு இராணுவம் சாஹெலில் 5,000 பிரெஞ்சு துருப்புகளை நிலைநிறுத்தி உள்ள அதன் நவ-காலனித்துவ தலையீட்டுக்கு பக்கவாட்டில் ஏற்கனவே ஓர் இராணுவக் கட்டமைப்பை மேற்கொண்டு வருகிறது. செப்டம்பர் 2019 இல், ஆயுதப் படைகளின் வரவு-செலவுத் திட்டக்கணக்கு 1.7 பில்லியன் யூரோவில் இருந்து ஆண்டுக்கு 37.5 பில்லியன் யூரோவாக அதிகரிக்கப்பட்டது, இது 4.5 சதவீத அதிகரிப்பாகும். இருப்பினும் இதுவும் கூட போதுமானதில்லை என்று குறிப்பிட்ட புர்க்ஹார்ட், இராணுவம் "பெருநிறுவன மனோநிலையால்" வழிநடத்தப்படுவதாக குறைகூறியதுடன், "செயல்திறன் என்பது பின்னடைவின்மை" என்றும் அறிவித்தார்.

எதிர்விரோத சக்திகளின் செயற்கைகோள்களைக் கண்டறியவும் இறுதியில் அவற்றை அழிக்கவும் காட்சிசார் கேமராக்கள் பொருத்திய புதிய தலைமுறை செயற்கைகோள்களை நிலைநிறுத்துவது உட்பட, ஒரு புதிய விண்வெளி கட்டளையகத்தை உருவாக்குவது குறித்து கடந்தாண்டு ஜூலையில் மக்ரோன் நிர்வாகம் அறிவித்தது. அந்த அறிவிப்பு, தங்களின் செயல்பாடுகளுக்காக பலமாக செயற்கைகோள் தொழில்நுட்பங்களை நம்பியுள்ள, பிரதான சக்திகளுக்கு எதிராக போர் தொடுப்பதற்கான பிரெஞ்சு தயாரிப்புகளின் பாகமாக உள்ளது.

இந்த இராணுவக் கட்டமைப்பு திட்டத்தின் செலவுக்கு, பிரான்சிலும் சர்வதேச அளவிலும் இராணுவத்திற்கு ஆதார வள நிதிகளைக் கைமாற்றுவதற்காக, சமூகநல திட்டங்களைக் குறைப்பதன் வடிவிலும், சீரழிவு மற்றும் மரணத்தின் வடிவிலும் தொழிலாள வர்க்கம் விலைகொடுக்கச் செய்யப்படும். ஆனால் பிரெஞ்சு ஏகாதிபத்திய மேலாதிக்கம் மற்றும் ஆதிக்க மண்டல போர்களுக்கான ஆளும் வர்க்கத்தின் வெறிப்பிடித்த திட்டங்களுக்கு தொழிலாள வர்க்கத்திற்குள் எந்த ஆதரவும் இல்லை.