பிரிட்டன்: கோவிட்-19 அடைப்பின் போது ஏற்கனவே 600,000 தொழிலாளர்கள் சம்பளப்பட்டியலில் இருந்து வெளியேற்றப்பட்டு விட்டனர்

By Robert Stevens
20 June 2020

மொழிபெயர்ப்பின் மூலக் கட்டுரையை இங்கே காணலாம்

இங்கிலாந்தில் மில்லியன் கணக்கான தொழிலாளர்களும் அவர்களின் குடும்பங்களும் அவர்களது வேலைகள், கூலிகள் மற்றும் வேலையிட நிலைமைகளில் முன்னொருபோதும் இல்லாத தாக்குதலை முகங்கொடுத்து வருகின்றனர்.

இந்த திங்கட்கிழமையிலிருந்து அத்தியாவசியமல்லாத எல்லா கடைகளும் கூட திறப்பதற்கு அனுமதிக்கப்படும் நிலையில், அரசாங்கம் பொருளாதாரத்தை மீண்டும் திறந்துள்ள நிலையில், பத்தாயிரக் கணக்கானவர்கள் வேலைகளை இழந்து வருகிறார்கள்.

இந்த தொற்றுநோயால் உருவாக்கப்பட்டுள்ள பொருளாதார சீரழிவில், இங்கிலாந்தின் பொருளாதார பொறிவு ஏப்ரலில் —மார்ச் 23 இல் அடைப்பு விதிக்கப்பட்டதற்கு பிந்தைய முழுமையான முதல் மாதமாகும்— 20 சதவீதத்திற்கும் அதிகமாக இருந்தது.

நீண்டகாலமாக திட்டமிடப்பட்ட சீரமைப்பு நடவடிக்கைகளை திணிப்பதன் மூலமாக நிறுவனங்கள் விடையிறுத்து வருகின்றன. பாரிய வேலைநீக்கங்கள், புதிய நியமனங்களை நிறுத்துதல், சம்பள வெட்டுக்கள் ஆகியவை நாளாந்த நடவடிக்கைகளாக உள்ளன.

அடைப்பின் முதல் இரண்டு மாதங்களில், பிரிட்டனில் சம்பள பட்டியலில் பணியாற்றும் தொழிலாளர்களின் எண்ணிக்கை 612,000 (2 சதவீதம்) சரிந்ததாக தொழிலாளர் சந்தைக்கான தேசிய புள்ளிவிபரங்கள் அலுவலகத்தின் அறிக்கை இவ்வாரம் எடுத்துக்காட்டியது. பொருளாதாரம் முழுவதும், வேலை செய்த நேரங்கள் ஏப்ரலில் சாதனையளவுக்கு 94.2 மில்லியன் மணிநேரம் வீழ்ச்சி அடைந்தது — இந்த வீழ்ச்சி ஏறக்குறைய 9 சதவீதமாகும். மார்ச் மற்றும் மே மாதத்திற்கு இடையே வேலை காலியிடங்களின் எண்ணிக்கை சாதனையளவுக்கு 436,000 (60 சதவீதம்) சரிந்து 318,000 ஐ எட்டவுள்ளது. நிஜமான சராசரி சம்பளம் மார்ச் மற்றும் ஏப்ரலுக்கு இடையே ஏற்கனவே 2.8 சதவீத கூர்மையான வீழ்ச்சியைப் பின்தொடர்ந்து, ஏப்ரல் மற்றும் மே மாதத்திற்கு இடையே கூடுதலாக 0.8 சதவீதம் சரிந்தது.

பல துறைகளில் பிரிட்டனின் பிரதான நிறுவனங்கள் கடந்த வாரங்களில் 43,000 க்கும் அதிகமான வேலை இழப்புகளை அறிவித்துள்ளன. இவற்றில் பிரிட்டனிலேயே அண்மித்து 14,000 வேலை இழப்புகள் செய்யப்பட உள்ளன. விமானத்துறை, விண்வெளித்துறை, கட்டுமானத்துறை வியாபாரிகள் மற்றும் கார் உற்பத்திகள் ஆகியவை கடுமையாக பாதிக்கப்பட உள்ள துறைகளில் உள்ளடங்குகின்றன. இவ்வாரம் ஜாக்குவார் லாண்ட் ரோவர் நிறுவனம் "உருமாற்றும் திட்டத்தின்" பாகமாக முகமை பணியாளர்கள்/ ஒப்பந்ததாரர்களிடையே மற்றொரு 1,100 வேலையிழப்புகளை அறிவித்தது. இவை கடந்தாண்டு அறிவிக்கப்பட்ட 5,000 வேலை வெட்டுக்களுக்கு கூடுதலாக வருகின்றன. கட்டுமான வியாபாரத்துறையின் Travis Perkins நிறுவனம் இவ்வாரம் 2,500 வேலை வெட்டுக்களை அறிவித்த நிலையில், ஒப்பந்த சேவை வழங்கும் நிறுவனமான Capita 200 வேலைகளை நீக்குகிறது.

ஜோன்சன் அரசாங்கத்தின் ஊதியமின்றி கட்டாய விடுப்பளிக்கும் திட்டம் ஆகஸ்டில் இருந்து அக்டோபர் வரையில் படிப்படியாக செயல்படுத்தப்பட உள்ள நிலையில், வேலையிழப்புகள் மில்லியன்களில் செல்லக்கூடும். இவ்வாரம் அரசாங்கம் அறிவிக்கையில், அதன் கொரோனா வைரஸ் வேலை தக்கவைப்பு திட்டத்தின் கீழ், 9.1 மில்லியன் தொழிலாளர்களுக்கு அவர்களின் கூலிகளில் 80 சதவீதம், மாதத்திற்கு 2,500 பவுண்டு வரம்பு வரையில் மட்டுமே வழங்கப்பட்டு வருவதாக அறிவித்தது. இதற்கும் கூடுதலாக, 2.6 மில்லியன் சுயதொழில் தொழிலாளர்கள் சுய-தொழில் வருவாய் உதவி திட்டத்திலிருந்து உதவி கோரியுள்ளனர். இதன் அர்த்தம், ஒட்டுமொத்த தொழிலாளர் சக்தியில் மூன்றில் ஒரு பங்கிற்கும் அதிகமானோர் தற்போது கட்டாய வேலை விடுப்பு திட்டங்களில் இருந்தே பணம் வழங்கப்பட்டு வருகிறது என்றாகிறது.

இத்தகைய பாதிப்பைக் குறைக்கும் நடவடிக்கைகள் இல்லாவிட்டால், வேலைவாய்ப்பின்மை விகிதம் எப்போதோ முதல் மூன்று மாதங்கள் ஏப்ரல் வரையில் அண்மித்து 4 சதவீதமாக இருந்ததையும் கடந்து சென்றிருக்கும். உள்ளவாறே, இந்த நெருக்கடியானது அடைப்பு தொடங்கியதிலிருந்து வேலை சம்பந்தமான சலுகைகளைப் பெற 1.6 மில்லியன் தொழிலாளர்களை நிர்பந்தித்துள்ளது — இது 125.9 சதவீத அதிகரிப்பாகும்.

பெருநிறுவனங்களுக்கும் வங்கிகளுக்கும் வழங்கப்பட்ட நூறு பில்லியன் கணக்கான தொகைகள், இத்தகைய திட்டங்களுக்கான செலவான, சுமார் 29 பில்லியன் பவுண்டை விஞ்சி நிற்கின்றன. ஆனால் தொழிலாள வர்க்கத்திற்கு விட்டுக்கொடுப்புகளை வழங்க நிர்பந்திக்கப்படுவதை ஆளும் வர்க்கம் வெறுக்கிறது.

அடுத்த வாரங்களில் அபாயகரமான நிலைமைகளின் கீழ் மீண்டும் வேலைக்குத் திரும்ப நிர்பந்திக்கப்படாதவர்கள் வேலையிழப்புகளை முகங்கொடுக்கிறார்கள், ஏனென்றால் தொழிலாளர்களை கட்டாய விடுப்பில் வைத்திருப்பதற்காக நிறுவனங்கள் செலவுகளில் 20 சதவீதத்தை அல்லது அதற்கு அதிகமானதை வழங்கும் என்பதற்கு அங்கே எந்த அறிகுறியும் இல்லை. ஆகஸ்டில் இருந்து அக்டோபர் வரையில், கட்டாய விடுப்பில் உள்ள தொழிலாளர்கள் அவர்களின் சம்பளங்களில் 80 சதவீதத்தை தொடர்ந்து பெறுவார்கள், ஆனால் அரசு வழங்கும் இந்த தொகையில் குறைவை முதலாளிமார்கள் குறைநிரப்புவார்கள் என்று எதிர்பார்க்கப்படுவதால், ஒவ்வொரு மாதமும் அது குறைக்கப்படும்.

கடந்த மாதம் வரவு-செலவு திட்டக்கணக்கிற்குப் பொறுப்பான அலுவலகம் இந்த தொற்றுநோய்க்கான அரசின் செலவுகள் மீதான அதன் மதிப்பீட்டை, அதன் முந்தைய கணக்கீடான 103.7 பில்லியன் பவுண்டில் இருந்து 123.2 பில்லியன் பவுண்டாக உயர்த்த நிர்பந்திக்கப்பட்டது. வருடாந்தர கடன்பெறல் பிரிட்டனின் மொத்த உள்நாட்டு உற்பத்தியில் 15.2 சதவீதமாக உயர்ந்தது. இடைப்பட்ட வாரங்களில், இது மீண்டும் அதிகரிக்க உள்ளது.

இந்த மலைப்பூட்டும் தொகைகள் ஒரு தாக்குதல் மூலமாக தொழிலாள வர்க்கத்திடமிருந்து சுரண்டப்பட உள்ளன, அவை ஒப்பீட்டளவில் கடந்த 10 ஆண்டுகால சிக்கன நடவடிக்கைகளையே ஒன்றுமில்லாமல் செய்துவிடும்.

இந்த புதிய புள்ளிவிபரங்கள் மீது கருத்துரைக்கையில், இயக்குனர்களது அமைப்பின் தலைமை பொருளாதார நிபுணர் தேஜ் பரீஹ் (Tej Parikh) “கட்டாய விடுப்பு திட்டம் தொடர்ந்து மிகப்பெருமளவிலான வேலையிழப்புகளைத் தாங்கிப் பிடித்து கொண்டிருக்கிறது, ஆனால் வரவிருக்கும் மாதங்களில் வேலைவாய்ப்பின்மை அதிகரிக்கக்கூடும்,” என எச்சரித்தார்.

இது, ஏற்கனவே மே மாதம் தொழிலாளர் சந்தையில் 160,000 அளவில் பணியாளர்களின் எண்ணிக்கை சரிந்து வருவதைச் சுட்டிக்காட்டும் HMRC புள்ளிவிபரங்களில் உறுதி செய்யப்பட்டுள்ளது. செவ்வாய்கிழமை Resolution Foundation கருத்துரைக்கையில், “இந்த அடைப்பானது செயலூக்கத்துடன் வேலைதேடும் எண்ணிக்கையை மட்டுப்படுத்தி கொண்டிருக்கும் நிலையில், இது [மே மாதத்தின் இந்த 160,000 என்ற எண்ணிக்கை] வேலைவாய்ப்பின்மையை விட பொருளாதார செயலின்மையின் அதிகரிப்பையே (ஏப்ரலில் 425,000 ஆக அதிகரித்தது) இதுவரையில் எடுத்துக்காட்டியது...

"வேலைவாய்ப்பின்மை சலுகைகள் கோருவோர் மற்றும் சில குறைந்த வருவாய் தொழிலாளர்களை உள்ளடக்கிய ஓர் அளவீடான, மானியம் கோருவோர்கள் எண்ணிக்கை கடந்த நெருக்கடியின் உச்சபட்ச எண்ணிக்கையான 1.6 மில்லியனைக் கடந்து, ஏப்ரலில் 2.8 மில்லியனை எட்டியது, இதே மாதத்தில் 530,000 அதிகரித்திருந்தது.”

நிதியாண்டு ஆய்வுகளுக்கான அமைப்பின் இயக்குனர் போல் ஜோன்சன் Sky News க்கு பேசுகையில், “இது வரலாற்றில் இதற்கு முன்னர் ஒருபோதும் பார்த்திராத நேரடி அர்த்தத்தில் பொருளாதாரரீதியில் பேரழிவாகும். அடுத்த என்ன நடக்கும் என்பதே நிஜமான கேள்வியாக உள்ளது.”

அடுத்த சில மாதங்களில் இந்த வைரஸ் காணாமல் போய், பொருளாதாரம் வழமைக்குத் திரும்பிவிடும் என்பது நடக்கப் போவதில்லை என்று ஜோன்சன் தெரிவித்தார். “கட்டாய விடுப்பு திட்டம் படிப்படியாக திரும்பப் பெறப்படுகிறது, நிறைய வேலையிழப்புகள் ஏற்படும் என்பதே நிஜமான அபாயமாக உள்ளது, இதற்கே அதிக வாய்ப்புள்ளது, என்று கூறிய அவர், “கடந்த மாதம் வேலைவாய்ப்பின்மை ஒரு மில்லியன் அளவுக்கு அதிகரித்ததை நினைவுபடுத்தி பாருங்கள், அது தொடர்ந்து அதிகரிக்கும்” என்பதையும் சேர்த்துக் கொண்டார்.

“நிறைய வணிகங்கள் அவற்றின் வியாபாரத்தை விட்டு வெளியேறும், பின்னர் அடுத்தாண்டு ஒரு சில வணிகங்களே செயல்படும் மற்றும் ஒரு சிலரே வேலையில் இருக்கும் நிலைமையில் நாம் இருப்போம் என்பதே பிரச்சினை,” என்றார்.

கொரொனா வைரஸ் பாதிப்பின் "தனித்துவமான மும்மடங்கு அச்சுறுத்தல்", பொருளாதார நெருக்கடி சூழ்ந்து வருதல், அடுத்தாண்டு நடக்கும் பிரெக்ஸிட் ஆகியவற்றுடன் — பிரிட்டன் ஐரோப்பிய ஒன்றியத்துடன் ஒரு வர்த்தக உடன்படிக்கையை இறுதி செய்ய முடியாமல், “கடுமையான பிரெக்ஸிட்" பொறிவு ஏற்படக்கூடிய சாத்தியகூறுடன், குறிப்பாக பிரிட்டிஷ் பொருளாதாரம் பலவீனமாக உள்ளது என்றார்.

முதலாளித்துவ அரசாங்கங்களின் கொள்கைகளுக்கும் உழைக்கும் மக்களின் கவலைகளுக்கும் இடையே இருக்கும் எந்தவொரு இடைத்தொடர்பும் இந்த தொற்றுநோயின் போது சின்னாபின்னமாக நொருங்கிப் போயுள்ளது குறித்து எந்த குறிப்பும் இல்லை. வேலைகள் மற்றும் வாழ்வாதாரங்கள் மீதான கவலைகளின் வெளிப்பாடுகளாகவே பொருளாதாரம் மீண்டும் திறக்கப்படுகிறது என்று இப்போது தொழிலாளர்களுக்குக் காட்டப்படுவது முழுக்க முழுக்க ஏமாற்றுத்தனமாகும். பெருவணிகங்கள் மற்றும் அதன் கட்சிகளுக்கு மொத்தத்தில் இலாபமே கவனத்தில் உள்ளது.

தேசிய புள்ளிவிபரங்களுக்கான அலுவலத்தின் தரவுகளின் முன்மாதிரியில் அமைந்து புள்ளிவிபரங்களின்படி, ஜோன்சன் அரசாங்கத்தின் "சமூகத்தில் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும்" கொள்கை சுமார் 70,000 உயிரிழப்புகளுக்கு இட்டுச் சென்றுள்ளது. கொரோனா வைரஸ் போன்ற அதேமாதிரியான ஒரு தொற்றுநோயின் தாக்கம் குறித்து ஆராய தேசிய சுகாதாரச் சேவை 2016 இல் நடத்திய Exercise Cygnus இன் பொது சுகாதார தாக்கங்கள், நூறாயிரக் கணக்கான உயிரிழப்புகளைக் குறித்த கணிப்புகளுக்கு மத்தியில் முற்றிலும் புறக்கணிக்கப்பட்டன. இப்போதோ, அதிகரித்து வரும் சமூக மற்றும் பொருளாதார பேரழிவை நிவர்த்தி செய்ய ஒன்றும் செய்யப்படவில்லை, இதில் மில்லியன் கணக்கான குடும்பங்கள் வேலைவாய்ப்பின்மை மற்றும் வறுமையின் எதிர்காலத்தை முகங்கொடுக்கின்றன.

தொழிலாள வர்க்கம் விடயங்களை அதன் சொந்த கரங்களில் எடுக்க வேண்டும். என்ன அவசியப்படுகிறது என்றால், முற்றிலும் ஆளும் வர்க்கம் மட்டுமே பொறுப்பான ஒரு நெருக்கடிக்கு, தொழிலாளர்களை விலை கொடுக்க செய்ய தீர்மானகரமாக உள்ள பிரதான பெருநிறுவனங்களைப் பறிமுதல் செய்ய வேண்டியுள்ளது.

வேலையிட நிலைமைகளின் பாதுகாப்பை உறுதிப்படுத்தவும் மற்றும் "தேசிய நலன்களுக்காக" ஆலைமூடல்கள் மற்றும் வெட்டுக்கள் என்ற எல்லா கோரிக்கைகளையும் எதிர்க்கவும் ஒவ்வொரு வேலையிடத்திலும், சமூகத்திலும் நடவடிக்கை குழுக்கள் உருவாக்கப்பட வேண்டும். ஆளும் வர்க்கம் அதன் நலன்களை மட்டுமே பாதுகாக்கிறது. அரசாங்கம் மற்றும் தொழில் வழங்குனர்களுக்கு எதிராக மட்டுமல்ல, மாறாக தொழிற் கட்சியிலுள்ள டோரிக்களின் கூட்டணிகள் மற்றும் பெருவணிகங்கள் மற்றும் அரசுக்காக வேலையிட பொலிஸ் படையாக செயலாற்றும் தொழிற்சங்கங்களுக்கு எதிராகவும் தொழிலாள வர்க்கத்தின் சுயாதீனமான நடவடிக்கை மூலமாக மட்டுமே சமூகத்தின் பரந்த பெருந்திரளான மக்களின் நலன்களைப் பாதுகாக்க முடியும்.

பொருளாதார மற்றும் அரசியல் வாழ்வு மீது பெருநிறுவன மற்றும் நிதியியல் செல்வந்த தட்டுக்களின் பலமான பிடியை முடிவுக்குக் கொண்டு வந்தாக வேண்டும். இதற்கு பிரதான பெருநிறுவனங்களைப் பறிமுதல் செய்வதும், அவர்களின் சொத்துக்களைக் கையகப்படுத்துவதும், அந்த ஆதாரவளங்களை அனைவருக்கும் கண்ணியமான வேலைகள், வீட்டு வசதிகள், கல்வி மற்றும் மருத்துவக் கவனிப்பு வழங்குவதற்காக கிடைக்க செய்வதும் அவசியமாகும். அதுபோன்றவொரு வேலைத்திட்டமானது, முதலாளித்துவத்திற்கு எதிராகவும் மற்றும் சர்வதேச அளவில் சோசலிசத்திற்கான ஒரு போராட்டத்திற்கும் பொறுப்பேற்ற தொழிலாளர்களின் அரசாங்கத்தால் ஒரு பகுத்தறிவார்ந்த பொருளாதார திட்டத்தை நடைமுறைப்படுத்தக் கோருகிறது.