இந்திய-சீன மோதல் ரஷ்ய வெளியுறவுக் கொள்கையை பலவீனப்படுத்தும் அச்சுறுத்தலை கொண்டுள்ளது

By Clara Weiss
24 June 2020

மொழிபெயர்ப்பின் மூலக் கட்டுரையை இங்கே காணலாம்

ஜூன் 15 ம் தேதி இந்தியாவிற்கும் சீனாவிற்கும் இடையிலான எல்லை மோதலில் டஜன் கணக்கான சீன மற்றும் இந்திய இராணுவ சிப்பாய்கள் கொல்லப்பட்டனர், இது சர்வதேச பதட்டங்களை கணிசமாக உயர்த்தியுள்ளது. இந்தியாவின் பக்கம் அமெரிக்கா தீவிரமாக தலையிட்டுள்ள நிலையில், ரஷ்யா இந்த மோதலை அதன் புவிசார் மூலோபாயத்திற்கு ஒரு பெரிய சவாலாகக் கருதுகிறது மற்றும் மோதலுக்கு பேச்சுவார்த்தை மூலம் ஒரு தீர்வைக் காண கடுமையான முயற்சியில் ஈடுபட்டுள்ளது.

மோதல் நிகழ்ந்த இரண்டு நாட்களுக்குப் பின்னர், ஜூன் 17 அன்று, ரஷ்யாவுக்கான இந்திய தூதர் டி.பாலா வெங்கடேஷ் வர்மா, ரஷ்யாவின் துணை வெளியுறவு மந்திரி இகோர் மோர்குலோவுடன் தொலைபேசியில் எல்லை தகராறு குறித்து பேசினார். கடந்த புதன்கிழமை, ரஷ்ய ஜனாதிபதி விளாடிமிர் புட்டினின் செய்தித் தொடர்பாளர் டிமிட்ரி பெஸ்கோவ், “சீன-இந்திய எல்லையில் என்ன நடக்கிறது என்பதை நாங்கள் மிகுந்த கவனத்துடன் கவனித்து வருகிறோம்” என்றும், அங்குள்ள நிலமைகளை “மிகவும் எச்சரிக்கை அளிப்பதாக உள்ளது” என்றும் கூறினார்.

2020 ஜூன் 17 புதன்கிழமை, இந்தியாவின் ஸ்ரீநகரின் வடகிழக்கில் ககங்கீரில் உள்ள ஸ்ரீநகர்-லடாக் நெடுஞ்சாலையில் இந்திய இராணுவக் குழு செல்லும்போது காஷ்மீர் பக்கர்வால் நாடோடிகள் நடக்கின்றனர். (AP Photo/Mukhtar Khan)

ரஷ்யா-இந்தியா-சீனா முத்தரப்பு குழுமத்தின் (RIC) ஒரு பகுதியாக மாஸ்கோவில் சீன மற்றும் இந்திய வெளியுறவு அமைச்சர்களுடன் ரஷ்யா இன்று ஒரு கூட்டத்தை நடத்துகிறது. ஊடக அறிக்கையின்படி, எல்லைப் பிரச்சினையை பற்றி விவாதிக்க வேண்டாம் என்று தரப்புகள் ஒப்புக் கொண்டுள்ளன, அதற்கு பதிலாக COVID-19 தொற்றுநோய்களில் மட்டுமே கவனம் செலுத்துகின்றன. புதன்கிழமை, சீன மற்றும் இந்திய வெளியுறவு அமைச்சர்கள் இரண்டாம் உலகப் போரின் முடிவைக் கொண்டாடுவதற்காக மாஸ்கோவில் நடைபெறும் வெற்றி நாள் அணிவகுப்பில் பங்கேற்க உள்ளனர். முதலில் மே 9 ஆம் தேதி திட்டமிடப்பட்ட அணிவகுப்பு, கொரோனா வைரஸ் தொற்றுநோயால் தாமதமானது. பாதிப்புகள் அதிகரித்த போதிலும் ரஷ்ய பொருளாதாரம் முழுமையாக மீண்டும் திறக்கப்பட்டுள்ள நிலைமைகளின் கீழ் இது இப்போது நடத்தப்படுகிறது.

இந்தியாவிற்கும் சீனாவிற்கும் இடையிலான மோதல், ஆசியாவில் ரஷ்யாவின் வெளியுறவுக் கொள்கைக்கு ஒரு அடிப்படை சவாலாக உள்ளது, அது மேலும் பரந்த அளவில் உலக அரங்கில் உள்ளது. ரஷ்யா வரலாற்று ரீதியாக இந்தியாவுடன் நெருக்கமான உறவுகளைப் பேணி வருகிறது. இருதரப்பு வர்த்தகம் ஒப்பீட்டளவில் குறைவாக இருந்தாலும், ரஷ்யா இந்தியாவுக்கு மிகப்பெரிய அளவில் ஆயுதங்களை விநியோகம் செய்கிறது.

எவ்வாறாயினும், அமெரிக்க ஏகாதிபத்தியம் மற்றும் ஐரோப்பிய ஏகாதிபத்திய சக்திகளால் சுற்றி வளைக்கப்பட்டுள்ள நிலையில் கடந்த தசாப்தத்தில் ரஷ்யாவும் சீனாவுடன் பெருகிய முறையில் நெருக்கமான கூட்டணிக்கு தள்ளப்பட்டுள்ளது, சீனா இந்தியாவுடன் நீண்டகால மோதல்களில் மூழ்கியுள்ளது. மாஸ்கோவும் பெய்ஜிங்கும் ஒரு நெருக்கமான இராணுவ ஒத்துழைப்பை உருவாக்கியுள்ளன, மேலும் ரஷ்யா பல பெரிய பொருளாதார திட்டங்களை முன்னெடுத்தது. குறிப்பாக சைபீரியா குழாய் வழியின் சக்தியாகும்.

எரிசக்தி ஒத்துழைப்பு, குறிப்பாக, ரஷ்யாவின் எதிர்பார்ப்புகளை விட மிகக் குறைவாக இருந்தது - இது மாஸ்கோவின் பொருளாதார மற்றும் புவிசார் அரசியல் மூலோபாயத்தின் ஒரு முக்கிய கூறாக மாறியுள்ளது. மற்றும் ரஷ்ய பொருளாதாரம், எண்ணெய் மற்றும் எரிவாயு ஏற்றுமதியில் பெரிதும் சார்ந்துள்ளது. மாஸ்கோ கேட்ட விலைகளை சீனா செலுத்த விரும்பவில்லை.

இதற்கு நேர்மாறாக, இந்தியா, குறிப்பாக பிரதமர் நரேந்திர மோடியின் கீழ், சீனாவுக்கு எதிரான அமெரிக்க ஏகாதிபத்தியத்தின் போர் உந்துதலில் முழுமையாக ஒருங்கிணைக்கப்பட்டுள்ளது.

உலக அரங்கில் ரஷ்யா தொடர்ச்சியாக தனிமைப்படுத்தப்பட்டு வரும் நிலைமைகளின் கீழ், இந்தியா மற்றும் சீனா ஆகிய நாடுகளுடன் நல்ல உறவைப் பேணுவதற்கு முயன்றுள்ளது. ஷாங்காய் ஒத்துழைப்பு அமைப்பு, பொருளாதார மற்றும் பாதுகாப்பு கூட்டணி மற்றும் RIC ஆர்.ஐ.சி உள்ளிட்ட மூன்று ஆட்சிகளையும் உள்ளடக்கிய பல அமைப்புகளை மாஸ்கோ முன்னெடுத்தது. மத்திய ஆசியாவில் சீனாவின் வளர்ந்து வரும் செல்வாக்கை சமநிலைப்படுத்த ரஷ்யா குறிப்பாக இந்தியாவைப் பயன்படுத்த முயற்சித்தது. அங்கே முன்னாள் சோவியத் யூனியனை சேர்ந்த நாடுகளில் ரஷ்யாவின் பொருளாதார நலன்கள் அடிக்கடி பெய்ஜிங்குடன் மோதிக் கொள்ளும். மிகவும் பொதுவாக, ரஷ்யா ஒரு அரசியல் மற்றும் பொருளாதார மட்டத்தில் சீனாவை அதிகம் சார்ந்து இருப்பது குறித்த விஷயத்தில் கவனமாக உள்ளது.

அதே சமயம், உக்ரேன் மோதல் மற்றும் சிரியப் போர் தொடர்பாக சமீபத்திய ஆண்டுகளில் அதிகரித்த அமெரிக்க மற்றும் ஐரோப்பிய ஏகாதிபத்தியத்தின் ரஷ்ய எதிர்ப்பு பிரச்சாரத்தில் சேருவதை இந்திய அரசாங்கம் தவிர்த்துள்ளது.

மே மாதம், 2020 வால்டாய் கிளப் (Valdai Club) கூட்டத்தில், முன்னணி ரஷ்ய வெளியுறவுக் கொள்கை பண்டிதர்கள் மற்றும் அதிகாரிகளின் வருடாந்திர கூட்டத்தில், ரஷ்யாவின் முன்னணி வெளியுறவுக் கொள்கை ஆய்வாளர் ஃபியோடர் லுக்கியானோவ் வலியுறுத்தினார்: “நாங்கள் எல்லா வகையிலும் அமெரிக்க-சீன மோதலின் சக்கரத்தில் இருந்து விலகி இருக்க வேண்டும், அது வேகம் அடைந்து வருகிறது. எதிர்வரும் காலங்களில் ரஷ்யாவின் வெளியுறவுக் கொள்கையின் பணிகளில் ஒன்று, ஒருபுறம் நாம் இந்த மோதலில் ஈடுபடுவதைத் தடுக்கும் எதிர் சமநிலை முறையை துல்லியமாக உருவாக்குவது, மறுபுறம் அங்கே இதில் பங்கேற்க விருப்பம் இல்லாத வேறு சில நாடுகளும் உள்ளன என்ற உண்மையை பயன்படுத்துவதை சாத்தியமாக்குவது. ஒரு புதிய உலகில் தன்னை ஒரு புதிய வழியில் நிலைநிறுத்துவதற்கான பொதுவான பணி உள்ளது. இந்தியாவும் ரஷ்யாவும் முன்னணி பாத்திரத்தை வகிக்க முடியும் என்று நான் நினைக்கிறேன்."

தூர கிழக்கின் ரஷ்ய அகாடமி ஆஃப் சயின்சஸ் இன்ஸ்டிடியூட்டின் (Russian Academy of Sciences’ Institute of the Far East) மூத்த ஆராய்ச்சியாளரான வாசிலி காஷின் ஐ TASS மேற்கோள் காட்டியது: “ரஷ்யா மற்றும் இந்தியாவின் பங்கை மிகவும் சிறப்பானதாக்குவது என்னவென்றால், அமெரிக்க-சீன கெடுபிடிகளின் முடிவு அவற்றை சார்ந்திருக்கிறது." ரஷ்யாவின் நிலைப்பாடு "சில வாய்ப்புகளை குறிக்கிறது, ஆனால் அது அதே நேரத்தில் ஆபத்தானது" என்று அவர் கூறினார்.

ஒரு ரஷ்ய இராஜதந்திரி Hindu விடம் கூறினார்; இந்த மோதலில் ரஷ்யாவுக்கு உலக அளவில் "அதிக அபாயங்கள்" உள்ளது என்றும், "இந்தியாவுக்கும் சீனாவுக்கும் இடையிலான நல்ல உறவுகள் யூரேசியாவின் எழுச்சி மற்றும் ஒரு தனித் துருவத்தினால் ஆதிக்கம் செலுத்தப்படாத ஒரு பன்முனை உலக ஒழுங்கின் தோற்றத்திற்கு மையமாக உள்ளன" என்றும் கூறினார்.

இந்த மூலோபாயம் இப்போது இந்தியாவிற்கும் சீனாவிற்கும் இடையில் வளர்ந்து வரும் பதட்டங்களால் அச்சுறுத்தப்பட்டுள்ளது, அவை எல்லாவற்றிற்கும் மேலாக, சீனாவிற்கு எதிரான அமெரிக்க போர் உந்துதலால் தூண்டப்படுகின்றன. அதே நேரத்தில், வெளியுறவுக் கொள்கை தொடர்பாக அமெரிக்க ஆளும் வர்க்கத்திற்குள் ஏற்பட்ட மோதல்கள் மற்றும் அமெரிக்க ஏகாதிபத்தியத்துடன் பேச்சுவார்த்தை மூலம் தீர்வு காண கிரெம்ளின் பலமுறை முயற்சித்த போதிலும், வாஷிங்டன் ரஷ்யாவை சுற்றி வளைப்பதை மேலும் மேலும் அதிகரித்தது, மிக சமீபத்தில் உக்ரேனின் நேட்டோ ஸ்தானத்தை உயர்த்துவதன் மூலம் அவ்வாறு செய்தது.

சீனாவுக்கு எதிரான பிரச்சாரம் இன்னும் அதிக வேகத்துடனும் தீவிரத்துடனும் அதிகரித்துள்ளது. சீனாவுக்கு எதிரான போர் தயாரிப்புகள் குறித்து வாஷிங்டனில் நடந்த தீவிரமான விவாதங்களை பிரதிபலிக்கும் கட்டுரை ஒன்று சமீபத்தில் Foreign Affairs (வெளியுறவு விவகாரம்) இல் வெளியானது, கொள்கைக்கான முன்னாள் பாதுகாப்பு துணை செயலாளர் மைக்கேல் ஏ. புளோர்னோய் (Michele A. Flournoy) அமெரிக்காவிற்கும் சீனாவிற்கும் இடையிலான போரின் அபாயத்தை பற்றி குறிப்பிட்டார், அது தவிர்க்க முடியாமல் இந்தியாவை இழுக்கும் மற்றும் முழு ஆசிய கண்டத்தையும் பற்றி எரியச் செய்யும்" என்றும் அது “பல தசாப்தங்களாக இருந்ததை விட அதிகமானதாக இருப்பதுடன் வளர்ந்து வருகிறது" என்றும் குறிப்பிட்டார்.

"ஆசியாவில் போரை" தவிர்ப்பதற்கு மிக முக்கியமான தடையாக இருப்பது சீனாவுக்கு எதிரான அமெரிக்காவின் குறைந்த "தடுப்பு" என்று புளோர்னோய் வாதிட்டார், மேலும் ஒபாமாவினால் தொடங்கப்பட்ட "ஆசியாவை ’முன்னிலைப்படுத்தல்’ வாக்குறுதியை வாஷிங்டன் நிறைவேற்றவில்லை” என்று புகார் கூறினார்.

அமெரிக்க இராணுவ கட்டமைப்பை வியத்தகு முறையில் உயர்த்துவதற்கும், "காற்று, கடல், கடலுக்கடியில், விண்வெளி, சைபர்ஸ்பேஸ்" என அனைத்து களங்களிலும் போருக்குத் தயாராவதற்கான தொடர்ச்சியான நடவடிக்கைகளை புளோர்னோய் முன்மொழிந்தார். “சீனாவுக்கு எதிரான நம்பத்தகுந்த தடுப்பை மீண்டும் நிலைநிறுத்துவதற்கு, பெய்ஜிங்கின் எந்தவொரு இராணுவ ஆக்கிரமிப்பின் வெற்றியையும் அமெரிக்கா தடுக்கக்கூடியதாக இருக்க வேண்டும், அதனை, PLA [மக்கள் விடுதலை இராணுவம்] அதன் நோக்கங்களை அடைவதற்கான திறனை மறுப்பதன் மூலமாகவோ அல்லது சீனத் தலைவர்கள் இறுதியில் இந்தச் செயல் தங்கள் நலனுக்காக இல்லை என்று முடிவு செய்யும்படியாக மிகப்பெரும் அழிவை சுமத்த வேண்டும்” என்று எழுதினார். [சீன ஜனாதிபதி] ஷியும் அவரது ஆலோசகர்களும் அமெரிக்காவின் திறனை மட்டுமல்ல, அது ஏற்படுத்தும் எந்தவொரு அச்சுறுத்தலையும் முன்னெடுப்பதற்கான உறுதியையும் அது கொண்டிருக்கிறது என்று நம்ப வேண்டும்”.