லிபிய போரில் துருக்கிக்கு எதிராக தலையீடு செய்யும் எகிப்தின் அச்சுறுத்தலை பிரான்ஸ் ஆதரிக்கிறது

By Alex Lantier
25 June 2020

மொழிபெயர்ப்பின் மூலக் கட்டுரையை இங்கே காணலாம்

லிபியாவில் இத்தாலிய ஆதரவிலான துருக்கிய தலையீட்டுக்கு எதிராக இராணுவரீதியில் தலையீடு செய்வதற்கான எகிப்தின் அச்சுறுத்தலைப் பிரெஞ்சு ஜனாதிபதி இமானுவல் மக்ரோன் ஆதரிப்பதானது, 2011 நேட்டோ போரில் தொடங்கப்பட்ட ஒன்பதாண்டு கால லிபியா மீதான ஏகாதிபத்திய சுற்றிவளைப்பின் ஒரு மிகப்பெரிய தீவிரப்பாட்டைக் குறிக்கிறது.

ஆபிரிக்கா கோவிட்-19 தொற்றுநோயின் அதிகரிப்பை முகங்கொடுத்து வருகிறது: முதன்முதலில் நோய்தொற்று அறிவிக்கப்பட்டதில் இருந்து முதல் 100,000 நோயாளிகளை எட்டுவதற்கு 98 நாட்கள் ஆனது, ஆனால் இரண்டு மடங்காக, 200,000 ஆக வெறும் 18 நாட்கள் மட்டுமே ஆனது. அனைத்திற்கும் மேலாக, 57,000 நோயாளிகளுடன் உள்ள எகிப்து மற்றும் 12,000 நோயாளிகளுடன் உள்ள அல்ஜீரியா என ஆபிரிக்காவின் மிகவும் மோசமாக பாதிக்கப்பட்ட இரண்டு நாடுகளுக்கு இடையே லிபியா அமைந்துள்ளது. ஆனால் இந்த தொற்றுநோயால் விவசாயம் மற்றும் வர்த்தகம் தொந்தரவுக்கு உள்ளானதால் மில்லியன் கணக்கானவர்கள் பஞ்சத்தையும் முகங்கொடுக்கும் ஆபிரிக்காவுக்கு உணவும் மருத்துவ உதவிகளும் அனுப்ப செயலாற்றுவதற்குப் பதிலாக, பிரதான சக்திகளோ ஒன்பதாண்டு கால தலையீட்டை முற்றுமுதலான பிராந்திய போராக மற்றும் உலகளாவிய போராகவும் கூட தீவிரப்படுத்த அச்சுறுத்தி வருகின்றன.

ஜூன் 21 இல், எகிப்தின் இரத்தக்கறைப்படிந்த சர்வாதிகாரி ஜெனரல் அப்தெல் பதாஹ் அல்-சிசி, துருக்கி ஆதரவிலான தேசிய உடன்படிக்கை அரசாங்கத்திற்கு (Government of National Accord - GNA) எதிராக போர் படைத்தளபதி கலிஃபா ஹஃப்தரின் படைகளைப் பாதுகாப்பதற்காக தலையீடு செய்ய அச்சுறுத்தினார். லிபிய எல்லைக்கு அருகே ஓர் இராணுவத் தளத்தின் துருப்புகளை ஆய்வு செய்கையில் உரையாற்றிய அவர், லிபியாவின் எண்ணெய் தொழில்துறைக்கு நுழைவாயிலாகவும் ஒரு மூலோபாய நகரமுமான சிர்ட்டேயை GNA கைப்பற்றியது ஒரு "சிவப்பு கோடாக" இருக்குமென எச்சரித்தார்.

“எகிப்திய அரசின் எந்தவொரு நேரடி தலையீடும் இப்போது சர்வதேச சட்டபூர்வத்தன்மையை பெற்றுள்ளது,” என்று சிசி கூறினார். அவர் எகிப்திய விமானப்படை விமானிகள் மற்றும் சிறப்புப்படை பிரிவுகளிடம் கூறுகையில், “இங்கே நமது எல்லைகளுக்கு உள்ளேயும் — அல்லது, அவசியமானால், நமது எல்லைகளுக்கு வெளியேயும், எந்தவொரு நடவடிக்கைக்கும் தயாராக இருங்கள்,” என்றார்.

இஸ்லாமியவாத ஜனாதிபதி மொஹமத் முர்சிக்கு எதிரான 2013 ஆட்சிக்கவிழ்ப்பு சதியையும் மற்றும் எகிப்தில் தொழிலாள வர்க்கத்தின் இரண்டாண்டு புரட்சிகர மேலெழுச்சிக்களை மூர்க்கமாக ஒடுக்கியதையும் நியாயப்படுத்துவதற்காக அவர் பயன்படுத்திய அதே வாய்சவடாலையே எதிரொலித்து, சிசி கூறுகையில் "பயங்கரவாத போராளிகள் குழுக்கள் மற்றும் கூலிப்படைகளின்" “நேரடி அச்சுறுத்தல்களுக்கு" எதிரான தற்காப்பிற்காக எகிப்து லிபியாவில் தலையீடு செய்யும் என்றார். அவர் தொடர்ந்து கூறினார்: “லிபிய மக்கள் … தலையீடு செய்ய எங்களைக் கேட்டுக் கொண்டால், எகிப்தும் லிபியாவும் ஒரே நாடாக, ஒரே நலனைக் கொண்டுள்ளன என்பதற்கு அது உலகிற்கு ஒரு சமிக்ஞையை வழங்கும்,” என்றார்.

ஹஃப்தரின் படைகளுக்கு எதிராக ஐ.நா. அங்கீகரிக்காத GNA ஐ ஆதரிப்பதற்காக லிபியாவில் ஜனவரியில் தொடங்கப்பட்ட துருக்கிய தலையீடு தான் இலக்கு என்பதை எகிப்திய அதிகாரிகள் தெளிவுபடுத்தினர். “தடுப்பது தான் நோக்கம்: ஒரேயொரு துருக்கியர் கூட கிழக்கு லிபியாவின் எல்லைக்கோட்டைத் தாண்டுவதை எகிப்து விரும்பவில்லை,” என்று அரசியல் மற்றும் மூலோபாய ஆய்வுகளுக்கான எகிப்தின் அல்-அஹ்ரம் மையத்தின் Ziad Akl இலண்டனின் பைனான்சியல் டைம்ஸிற்குத் தெரிவித்தார்.

ரஷ்யா, ஐக்கிய அரபு எமிரேட்ஸ் மற்றும் எகிப்துடன் சேர்ந்து பிரெஞ்சு அரசாங்கம் லிபியாவில் ஹஃப்தரை ஆதரித்துள்ளதுடன், இந்த போரில் கெய்ரோவுக்கான அதன் ஆதரவை அறிவிக்க உரிய நேரத்தில் தலையீடும் செய்திருந்தது. பாரீசில் எலிசே ஜனாதிபதி மாளிகையில் துனிசிய ஜனாதிபதி Kaïs Saïed பக்கவாட்டில் நிற்க உரையாற்றுகையில், மக்ரோன் துருக்கிய ஜனாதிபதி ரெசெப் தயிப் எர்டோகன் அரசாங்கம் "லிபியாவில் ஓர் அபாயகரமான விளையாட்டை விளையாடி வருவதாக" குற்றஞ்சாட்டினார். இந்த அறிக்கை மத்திய தரைக்கடலில் பிரெஞ்சு மற்றும் துருக்கிய போர்க்கப்பல்களுக்கு இடையிலான ஓர் அபாயகரமான மோதலைப் பின்தொடர்ந்து வருகிறது.

எகிப்தும், ஐக்கிய அரபு எமிரேட்ஸூம் மற்றும் ரஷ்யாவும் ஹஃப்தருக்கு ஆயுத உதவிகள் செய்ததை மேற்பார்வையிட்டுள்ள மக்ரோன், ஆணவமான பாசாங்குத்தனத்துடன், அந்நாட்டில் தலையீடு செய்வதற்காக துருக்கியைக் கண்டித்தார். “போர்வெறியர்களைப் போர் நிறுத்தத்திற்கு" அழைப்பு விடுத்து அவர் குறிப்பிடுகையில், “லிபிய அமைப்புகளை மறுஐக்கியம் செய்யவும் மற்றும் அனைத்து லிபியர்களின் நலன்களை மறுகட்டமைப்பு செய்யவும் தொடங்குமாறு" முறையிட்டார். அவர் தொடர்ந்து குறிப்பிட்டார், “நம் அனைவரின் பொறுப்புறுதியைக் காட்டவும், வெளிநாட்டு தலையீட்டை முடிவுக்குக் கொண்டு வரவும், போரின் மூலமாக புதிய இடத்தை ஜெயிக்க நினைப்பவர்களின் ஒருதலைபட்சமான நடவடிக்கைகளை முடிவுக்குக் கொண்டு வரவும் அவசியமான ஒரு கடுமையான பாதை இது,” என்றார்.

பின்னர் உரிய நேரம் பார்த்து மக்ரோன் லிபியாவில் இராணுவரீதியில் தலையீடு செய்வதற்கான சிசி இன் அச்சுறுத்தலை ஆமோதித்தார், “துருப்புகள் அவரின் எல்லையை நெருங்கி வருவதை ஜனாதிபதி சிசி பார்க்கிறார் ஆகவே அவரின் நியாயமான கவலையை" புரிந்து கொள்வதாக மக்ரோன் தெரிவித்தார். ஆனால் இது மற்றொரு பொய்யாகும். GNA துருப்புகள் எகிப்திய எல்லையில் இல்லை, மாறாக 2011 போருக்குப் பின்னர் பிரெஞ்சு எண்ணெய் நிறுவனம் Total கைப்பற்றிய முக்கிய எண்ணெய் வயல்கள் மற்றும் சுத்திகரிப்பு ஆலைகளையும் மற்றும் சிர்ட்டேயையும் கைப்பற்றுவதற்கு அச்சுறுத்தும் விதத்தில் அவை மத்திய லிபியாவில் உள்ளன.

இறுதியாக, நேட்டோ கூட்டணி "மூளைச்சாவு" அடைந்துவிட்டதாகவும் மற்றும் அதன் உறுப்பினர்களுக்கு இடையே பொதுவான நடவடிக்கையை ஒருங்கிணைக்க முடியாமல் இருப்பதாகவும் பழிசுமத்தி, மக்ரோன் அவரின் கடந்த இலையுதிர்கால கருத்துக்களையே மீண்டும் வலியுறுத்தினார். துருக்கி தான் அவர் கோபத்தின் பாசாங்குத்தனமான இலக்காக உள்ளது, அது ட்ரோன்களை வழங்கி GNA ஐ ஆயுதமயமாக்கி உள்ளதுடன், லிபியாவின் தலைநகர் திரிப்போலி மீதான ஹஃப்தரின் தாக்குதலை முறியடிக்க உதவியது. ஆனால் மக்ரோனின் கருத்து இத்தாலி மற்றும் நேட்டோ கூட்டணியின் ஏனைய உறுப்பினர்கள் மீதான வெறும் சாக்குபோக்கான தாக்குதலாகவும் இருந்தது. நேட்டோ கூட்டணி மத்திய கிழக்கில் இதுவரையில் பிரான்ஸ் மற்றும் இத்தாலிக்கு இடையே அதிகரித்து வரும் ஏகாதிபத்தியங்களுக்கு இடையிலான மோதலில் பகிரங்கமாக தரப்பெடுக்க பெரிதும் மறுத்து வந்துள்ளது.

லிபியாவில் முன்னாள் காலனித்துவ சக்தியான இத்தாலி, இதன் எண்ணெய் நிறுவனம் ENI மேற்கு லிபியாவில் GNA வசமிருக்கும் எண்ணெய் வயல்களைக் கைப்பற்றியுள்ள நிலையில், துருக்கியுடன் நெருக்கமாக செயல்பட்டு வருகிறது. ஜூன் 19 அன்று இத்தாலிய வெளியுறவுத்துறை அமைச்சர் Luigi di Maio அவரின் துருக்கிய சமதரப்பு Mevlüt Çavuşoğlu ஐ சந்திக்க அங்காராவுக்குச் சென்று, லிபிய போர் குறித்து விவாதித்தார். பின்னர் Di Maio மற்றும் Çavuşoğlu நடத்திய ஒரு பத்திரிகையாளர் சந்திப்பில் di Maio, அப்பிராந்தியத்தில் நேட்டோ உறுப்பு நாடுகளுக்கு இடையே "மோதல் அல்ல, கூட்டுறவுக்கு" அழைப்பு விடுத்தார்.

“வேறு பல நாடுகளைப் போலில்லாமல், லிபியாவில் ஆட்சிக்கவிழ்ப்பாளர் ஜெனரல் கலிஃபா ஹஃப்தருடன் இத்தாலி அணி சேராததற்காக இத்தாலிக்கு நாங்கள் நன்றி கூறிக்கொள்கிறோம்,” என்று Çavuşoğlu தெரிவித்தார். இத்தாலியும் துருக்கியும் லிபியாவின் எரிசக்தி தேவைகளைப் பூர்த்தி செய்வதில் மட்டுமல்ல, மாறாக கிழக்கு மத்திய தரைக்கடல் பகுதியில் இயற்கை எரிவாயு படிமங்கள் சம்பந்தமாக அதிகரித்து வரும் துருக்கி-கிரேக்க மோதல்களிலும் ஒத்துழைக்கும் என்பதையும் அவர் சேர்த்துக் கொண்டார். லிபியா சம்பந்தமான அதன் கொள்கைக்காக அங்காரா வாஷிங்டனிடம் இருந்து ஆதரவைப் பெறுவதற்கான அதன் முயற்சிகளையும் அதிகரித்துள்ளது. ஜூன் 8 அன்று, லிபியா சம்பந்தமாக பேசுவதற்காக எர்டோகன் அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்பை அழைத்து பேசினார், பின்னர் Çavuşoğlu அறிவிக்கையில், தங்களின் அமெரிக்க சமதரப்பினருடன் "இணைந்து செயலாற்ற [எர்டோகனிடம் இருந்து] எங்களுக்கு அறிவுறுத்தல்கள் கிடைத்துள்ளது,” என்றார்.

லிபியாவில் என்ன கட்டவிழ்ந்து வருகிறதோ அது, எண்ணெய் வளம் மிக்க லிபியாவுக்கு எதிராக 2011 இல் நேட்டோ அதிகாரங்கள் தொடுத்த இரத்தந்தோய்ந்த ஏகாதிபத்திய போர்களின் நேரடி விளைவாகும். அண்டைப்பகுதிகளான எகிப்து மற்றும் துனிசியாவில் தொழிலாள வர்க்கத்தின் புரட்சிகர மேலெழுச்சிகளால் பீதியுற்று, பிரான்ஸ், பிரிட்டன் மற்றும் அமெரிக்கா தலைமையிலான நேட்டோ அதிகாரங்கள் கர்னல் மௌம்மர் கடாபியின் ஆட்சியிலிருந்து லிபிய போராட்டக்காரர்களைப் பாதுகாப்பதற்காக தலையீடு செய்கிறோம் என்ற எரிச்சலூட்டும் சாக்குபோக்கின் கீழ் லிபியா மீது போர் தொடுத்தன. அவை இஸ்லாமிய மற்றும் பழங்குடியின போராளிகள் குழுக்களைப் பினாமிகளாக ஆயுதமயப்படுத்தி, லிபிய நகரங்கள் மீது குண்டுவீசியதுடன், ஆறு மாதங்களில் லிபிய அரசாங்கத்தைக் கவிழ்த்து அழித்தன.

அந்த நடவடிக்கை, கடாபிக்கு எதிராக பிரெஞ்சு உளவுத்துறை லிபியர்களுக்கு ஆயுதம் வழங்க வேண்டுமென கோரிய பிரான்சின் புதிய முதலாளித்துவ-எதிர்ப்பு கட்சியின் (NPA) ஒலிவியே பெசன்ஸெநோ போன்ற குட்டி-முதலாளித்துவ போலி-இடது செயல்பாட்டாளர்களால் ஐரோப்பிய மற்றும் அமெரிக்க மக்களிடம் ஜனநாயகத்திற்கான ஒரு போராக சந்தைப்படுத்தப்பட்டது. அதற்குப் பின்னர் என்ன நடந்ததோ அவற்றால் பெசன்ஸெநோ ஏகாதிபத்தியத்தின் ஒரு தலையாட்டியாகவும் பிரெஞ்சு எண்ணெய் நலன்களுக்கான ஒரு பிரச்சாரகராகவும் முற்றிலும் அம்பலமாக்கப்பட்டுள்ளார்.

அந்த நேட்டோ போர், எதிர்விரோத இஸ்லாமியவாத மற்றும் பழங்குடி போராளிகள் குழுக்களுக்கு இடையே உள்நாட்டு போராக சென்று விரைவிலேயே லிபியாவின் உருக்குலைவுக்கு இட்டுச் சென்றது, இது ஐ.நா. ஆதரவிலான அரசாங்கங்களின் வழிவந்தவர்களால் அல்லது ஹஃப்தர் போன்ற படைத்தளபதிகளால் மேலோட்டமாக மேற்பார்வையிடப்பட்டது. லிபியாவின் எண்ணெய் தொழில்துறையை அவர்கள் அழியாமல் காப்பாற்றுவதிலும் மற்றும் புலம்பெயர்ந்தோருக்குச் சித்தரவதை முகாம்களை அமைப்பதிலும் நேட்டோ அதிகாரங்கள் பிளவுபட்டன, அந்த சித்திரவதை முகாம்களில் அவர்கள் படுகொலைகளையும், பாலியல் தாக்குதல் மற்றும் அடிமையாக விற்கப்படுவதையும் முகங்கொடுக்கின்றனர். அனைத்திற்கும் மேலாக, கடந்த ஆண்டுகளில் லிபியாவைச் சீரழிப்பதிலிருந்து யார் இலாபமடைவது என்பதன் மீது ஏகாதிபத்திய சக்திகளுக்கு இடையிலான மோதல்கள் இரத்தக்களரியாகவும் அதிக அபாயகரமாகவும் மட்டுமே அதிகரித்துள்ளது.

இஸ்லாமியவாதத்தின் அனைத்து வெளிப்பாடுகளுக்கும் சோவியத்திற்குப் பிந்தைய ரஷ்ய ஆட்சி விரோதமாக உள்ளது என்றும், சிரியாவில் நேட்டோ பினாமி போருக்கு எதிராக அது இராணுவத் தலையீடு செய்தது என்றும் இந்த உள்ளடக்கத்தில், ஐரோப்பிய ஊடகங்கள் மீண்டும் மீண்டும் வெளிப்பார்வைக்கு மதச்சார்பற்ற படைத்தளபதி ஹஃப்தரை ஆதரிப்பதற்கான ரஷ்ய தலையீட்டை விமர்சித்தது. அப்பிராந்தியம் எங்கிலும் அதிகரித்தளவில் ரஷ்யாவும் துருக்கியும் வகித்து வரும் பாத்திரம் குறித்து ஐரோப்பாவின் ஏகாதிபத்திய தலைநகரங்களில் தெளிவாக ஆழ்ந்த மனவிரக்தி உள்ளது. ஆனால் கொள்ளைப் பொருட்களைப் பங்கிட்டுக் கொள்வதில் நேட்டோ ஏகாதிபத்திய சக்திகளுக்கும் பன்னாட்டு பெருநிறுவனங்களுக்கும் இடையே அடியிலுள்ள விரோதத்தைப் பொதுவாக ஒரு மவுன மேலங்கி மூடிமறைத்து நிற்கிறது.

இந்த எதிர்விரோதம், கடந்தாண்டு பிரான்ஸ் ரோமை எதிர்த்து அதன் தூதரைத் திரும்ப அழைத்துக் கொண்டு, இரண்டாம் உலக போரின் போது 1940 இல் பிரான்ஸ் மீதான பாசிசவாத இத்தாலியின் படையெடுப்புக்குப் பின்னர் பிராங்கோ-இத்தாலிய உறவுகள் அவற்றின் மிகக்குறைந்த புள்ளியில் இருந்ததாக எச்சரித்தபோது, தற்காலிகமாக பார்வைக்கு மேலெழுந்தது. இத்தகைய கருத்துவேறுபாடுகள் மூடிமறைக்கப்பட்டன என்றாலும், நேட்டோவுக்குள் இந்த மோதல்கள் தொடர்ந்து அதிகரித்து மட்டுமே வருகின்றன. இவை, பேர்லினில் இந்த குளர்காலத்தில் நடந்த லிபிய மாநாட்டிலும், மற்றும் பிரான்ஸ் மிகப்பெரிய "அரசுக்கு எதிரான அரசு" மோதல்களுக்குத் தயாராக வேண்டும் என்று உயர்மட்ட பிரெஞ்சு தளபதியின் சமீபத்திய அறிவிப்பு ஆகிய இரண்டினாலும் எடுத்துக்காட்டப்படுகிறது.

ஒரு சர்வதேச போர்-எதிர்ப்பு இயக்கத்தில் தொழிலாள வர்க்கத்தைச் சுயாதீனமாக அரசியல்ரீதியில் அணித்திரட்டுவதே முன்னோக்கிய பாதையாகும். ஐரோப்பிய சக்திகள் மற்றும் அவை யாருடன் இணைந்து செயலாற்றுகின்றனவோ அந்த எகிப்து, துருக்கி அல்லது லிபியாவுக்குள் உள்ள பல்வேறு மத்திய கிழக்கு முதலாளித்துவ பினாமிகளின் நவ-காலனித்துவ வேட்கைகள் அனைத்தும் சமரசத்திற்கிடமின்றி பிற்போக்குத்தனமானவையாகும்.

கோவிட்-19 தொற்றுநோயும் அது பரவுவதைத் தடுப்பதற்கான கொள்கைகளை உலகெங்கிலுமான ஆளும் வர்க்கங்கள் கொடூரமாக ஏற்க மறுப்பதும், ஒரு தசாப்தத்திற்கு முன்னர் துனிசிய மற்றும் எகிப்திய தொழிலாளர்கள் திறந்து விட்ட புரட்சிகர பாதைக்குத் திரும்புவதற்குச் சர்வதேச அளவில் தொழிலாளர்களுக்கு அவசியமான நிராகரிக்க முடியாத கூடுதல் நிரூபணமாகும்.

கட்டுரையாளர் பரிந்துரைக்கும் ஏனைய கட்டுரைகள்:

Libyan civil war intensifies amid growing international negotiations
[12 June 2020]

The Libya conference and the new scramble for Africa
[18 January 2020]

Wider war over Libya looms as France, Egypt denounce Turkish intervention
[3 January 2020]

France recalls its ambassador to Italy
[8 February 2019]

A tool of imperialism: France’s New Anti-Capitalist Party backs war on Libya
[25 March 2011]